ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday 11 December 2013

போட்டிச் சிறுகதை-15

சிறுகதை-திவ்யாவும் சில ஆண்களும் 

திருச்சியைக் கடந்து அதிவிரைவாக விரைந்து கொண்டிருந்தது எனது கார்.

நான் காதலிக்கலாம் என்று நினைத்த பெண் திவ்யா. பலவித காட்சி, கால மாறுதல்களுக்குப்பின் கடந்த மாதம் அவளை சந்திக்க நேர்ந்த போது பெருமாள் கோவிலில் பூக்கட்டி விற்றுக்கொண்டிருந்தாள். அருகே அவளுடைய கைக்குழந்தை தான் பெய்த மூத்திரத்தால் ஈரமாக்கியிருந்த மணலை நோண்டிக்கொண்டிருந்தது. இன்று அதிகாலையிலேயே என்னை அழைத்து தன் கணவனைக் காப்பாற்றும்படி கேட்டவளும் அதே திவ்யாதான்.   

"அவருக்கு பெரிய ஆக்சிடென்ட், ஏதோ ஆப்ரேஷன் பண்ணணும் அது இதுன்னு ஆஸ்பத்ரில பயமுறுத்துறாங்க. கையில சுத்தமா காசு இல்ல அருண், சொந்தக்காரங்கன்னு யாரும் எட்டி கூட பாக்கல. நீயாவது கொஞ்சம் உதவி பண்ணே ப்ளீஸ். அவரு எனக்கு வேணும், உயிரோட வேணும். அவரு போய்ட்டா நானும் என் குழந்தையும் சாக வேண்டியது தான்டா." கதறி அழுதாள் திவ்யா. 

திவ்யாவுக்கு கல்யாணம் ஆகும், குழந்தை பிறக்கும், என்பதையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை, காரணம் அவள் ஆண்களை நம்பினாள், தான் சந்தித்த அத்தனை ஆண்களையும் முழுமையாக நம்பினாள். தன்னைக் காதலிப்பதாய் சொன்ன ஒருவனால் புணரப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தாள். அதேநேரம் அவளுக்கு வாழ்க்கை கொடுத்ததும் ஒரு ஆண் என்பதையெண்ணி சந்தோசப்பட்டேன். அவனை காப்பாற்ற வேண்டியது என் கடமை. 

2002. 'தூணுக்கெல்லாம் சேலைகட்டி தொட்டு பார்க்கும் வயசு', ரஜினி இடைவிடாது பாடிக்கொண்டிருந்த காலகட்டம். எனக்கோ மீசை அரும்பியிருந்தது, காதல் அரும்பவில்லை. 

எங்கள் ஊரில் ஆண்கள் பள்ளியும், பெண்கள் பள்ளியும் அருகருகில் என்பதால் எங்களைப் பொறுத்தவரை காதல் என்பது சர்வ சாதாரணமான விஷயம். பஸ் ஸ்டாப்பில் காதலிப்பார்கள். பஸ் ஸ்டாண்டில் காதலிப்பார்கள், பள்ளிகூட வாசலில் காதலிப்பார்கள், லீவு விட்டால் ஊரின் ஒதுக்குபுறமாக எங்காவது ஒதுங்கிக் காதலிப்பார்கள், தேவைப்பட்டால் இழுத்துக்கொண்டு ஓடியும் காதலிப்பார்கள். ஆனால் கட்டாயம் காதலிப்பார்கள். 

என்னைத் தவிர என் கூட்டத்தில் எல்லாருக்குமே ஆள் இருந்தது, பிரச்சனையும் அது தான், சுரேஷின் காதலி பெண்கள் பள்ளியில் +1 படித்ததால், அவளை பகடையாக்கி அவள் மூலம் அவளது தோழிகளை வளைத்துவிட்டார்கள் என் சகாக்கள். எப்போது வளைத்தார்கள் எப்படி வளைத்தார்களென்று எதுவுமே தெரியாத அப்பாவியாய் அவர்களோடு சுற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். இவ்விஷயம் தெரிந்தபோது அதிர்ச்சியாய் இருந்தது என்பதை விட "நானும் உங்க கூட தாணடா சுத்துறேன் என்னைய மட்டும் ஏன்டா கழட்டி விட்டீங்க" என அவர்கள் ஒவ்வொருவரின் சட்டைக்காலரைப் பிடித்தும் கேட்க வேண்டும் போல் இருந்தது.

என்னை தனித்து தவிர்த்து, அவர்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக காதலித்தார்கள். வாரநாட்களில் தங்கள் காதலிகளின் பள்ளிவரை துணைக்குச் செல்வார்கள். விடுமுறையென்றால் ஊரின் ஒதுக்குப்புறமாக சந்திப்பார்கள், கூட்டமில்லாத தெருக்களில் சைக்கிளின் பார் கம்பியில் உட்கார வைத்துக்கொண்டு ஊர்சுற்றுவார்கள். அவளுகளைப் பார்த்தாலே கடுப்பாய் வரும். அந்த பெண்களின் பார்வையில் ஒருவித நக்கல் இருக்கும், கேலிச்சிரிப்பு இருக்கும். சமயங்களில் நீ ஆண்மையற்றவன் என்று என்னைப் பார்த்து கெக்கரிப்பது போல தோன்றும். அதற்காகவே அவளுகளைச் சந்திப்பதைத் தவிர்த்துவிடுவேன். 

எந்த மண்ணாங்கட்டி ஒழுக்கத்தையும் எதிர்பார்க்க முடியாத அரசாங்கபள்ளியில் வழக்கமாய் கூடும் ஆலமரத்தின் அடியில் தங்கள் காதல் கதைகளை ரகசியமாய்ப் பேசுவார்கள் என் நண்பர்கள் . அங்கே முத்தம் கொடுத்தாள், இங்கே முத்தம் கொடுத்தாள். அப்படிச் செய்தாள், இப்படிச் செய்தாள் என்று நன்றாக போதையேத்துவார்கள். எனக்கு கடுப்பைக் கிளப்பினாலும் கேட்பதற்கு கிளுகிளுப்பாய் இருக்குமென்பதால் அவர்களை விட்டு விலகமாட்டேன். மொபைல், இன்டர்நெட் இப்படிப்பட்ட சமாச்சாரங்கள் பிரபல்யமடைந்திருக்காத காலமென்பதால் காதல் கடிதங்கள் சர்வ சாதரணமாக நடமாடும். சில சமயங்களில் அந்தக் கடிதங்களின் வார்த்தை விளையாட்டுக்கள் மஞ்சள் பத்திரிக்கையைக் கூட தோற்கடித்துவிடும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும்.

"பர்ஸ்ட் நைட்ல உங்க பொண்டாட்டிகிட்ட என்ன கேள்விடா கேப்பீங்க", அன்றொருநாள் எங்களுக்குள் நடந்த வழக்கமான உரையாடலில் எங்களைப் பார்த்து கேட்டான் பிரவீன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள்      
  
ஆச்சரியமென்னவென்றால் ஒருவன் கூறிய பதிலின் ஆபாசம் அடுத்தவன் கூறிய பதிலின் ஆபாசத்தை மிஞ்சி இருந்தது என்பதுதான். இப்போது என் முறை. பதில் சொல்ல மாட்டேன் என்பது போல் மையமாக முழித்தேன், "அப்ப சொன்னவன் என்ன கேனையா, ஒழுங்கா மரியாதையா சொல்லிரு" என்பது போல் முறைத்தான் ப்ரவீன். வேறு வழியில்லாமல் "அவகிட்ட வயசுக்கு வாரதுனா என்னன்னு கேப்பேன்" என்றேன் அப்பாவியாய்.

அதன்பின் என்னை அழவைத்து, எங்களுக்குள் அடிதடி சண்டை வரும் வரையிலும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தார்கள் என் நண்பர்கள். அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் வெட்கம் பிடுங்கித்தின்னும். சில சமயங்களில் நான் கூறிய பதிலை நினைத்து எனக்கு நானே சிரித்துக் கொள்வேன். 

கொஞ்சம் குழந்தைத்தனமாய் இருப்பதாய் நினைக்காதீர்கள், பெண்களின் அந்தரங்கம் பற்றிய தேடலில் ஒவ்வொரு ஆணின் முதல் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கும், என்ன நான் கொஞ்சம் வெளிபடையாக் கூறிவிட்டேன். அதேநேரம் அந்தக் கேள்வியை எப்போதோ தங்கள் காதலிகளிடம் கேட்டுவிட்டதாகக் கூறினார்கள் என் நண்பர்கள். அன்று பிரவீன் என்னிடம் அந்தக் கேள்வியை கேட்டிராவிட்டால், நான் திவ்யாவைத் தேடி போயிருக்கவும் மாட்டேன். உங்களிடம் இந்தக் கதையை கூற வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது.       .

எனக்கும் என் நண்பர்களுக்கும் சண்டை நடந்த அன்றைய தினமே என்னுள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன், இன்னும் ஒரு மாதத்தில் எவளையாவது காதலித்தே தீருவதென்று. அதன்பின் வந்த நாட்களில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் என் காதலியைப் பார்ப்பது போலவே தோன்றியது எனக்கு. 

பஸ்ஸ்டாப்பின் மரநிழலில் ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தாள் திவ்யா. எங்கள் தெரு, ஒரே ஜாதி, சிறுவயதில் ஒன்றாய் ட்யுஷன் படித்துள்ளோம், கண்ணாம்பொத்தி, தட்டாங்கல், தாயமெல்லாம்கூட விளையாடியுள்ளோம். வயசுக்கு வந்தபின் தலை நிமிர்ந்தும் பார்க்கமாட்டாள், பார்த்தாலும் சிரிக்கமாட்டாள். தினமும் ஒரே பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்தாலும், ஒருநாளும் அவளைக் காதலியாய்ப் பார்த்ததில்லை. இன்று இவள் என் முதல் சாய்ஸ். 

பேருந்தில் மெல்ல அவளருகில் சென்றேன். சிறுவயது முதல் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தை முகம் என்றாலும் சமீபகால பருவ மாறுதல்கள் அவளுடைய குழந்தை முகத்தில் கொஞ்சம் பெரியவள் தோரணையை ஏற்படுத்தியிருந்தது. புதிதாய் அணியப்பழகியிருந்த மூக்குக் கண்ணாடி அழகை இன்னும் அதிகமாய்க்காட்டியது. ஏதோவொரு தைரியத்தில் அவளருகில் சென்றுவிட்டாலும் நேருக்குநேர் நிமிர்ந்து பார்க்க தயக்கமாயிருந்தது. பெண்களிடம் பேச, நெருங்கிப் பழக அசாத்தியமான மனதைரியம் வேண்டும். 

மனதினுள் ஒரு குறுகுறுப்பு எங்கே அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை நோக்கிச்சிரித்தேன். பேருந்தில் இருந்து இறங்கும்பொழுது பதிலுக்கு அவளும் என்னைப் பார்த்து சிரித்தாள், அந்நொடி, அந்த ஒரு நொடி அவள் என்னிடம் தன் காதலைக் கூறியது போல இருந்தது எனக்கு, அன்றைய தினம் முழுவதும் திவ்யா நினைவாகவே இருந்தேன். அதற்கடுத்து வந்த நாட்களில் திவ்யாவும் நானும் நட்பானோம். சந்திக்கும் சமயமெல்லாம் ஒரு நொடி கூட வீணாக்காமல் பேச ஆரம்பித்தோம். எப்படியும் என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன், காதலை வெளிபடுத்தப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது.  

பேருந்து நிறுத்தத்தில் என்னை நோக்கி வந்த என் தேவதையைப் பார்த்த அடுத்தநொடி என் மனம்  என்னிடம் இல்லை. லேசாய் வீசிய தென்றலும் பலமாய் நடுங்கச் செய்தது என்னை. மிகவும் பலவீனமாய் உணர்ந்தேன். பேச்சே வரவில்லை, மனதிடம் முழுவதையும் இழந்திருந்தேன், அவளருகில் சென்று அவள் கரம்பற்றி "திவ்யா நான் உன்ன லவ் பண்றேன், உன்ன கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்,  தயவு செஞ்சு என் காதலை ஏத்துக்கோ" என்று கூற நினைத்தாலும் வாயிலிருந்து காற்றுகூட வரவில்லை. அவள் கண்களைப் பார்க்கக்கூட சக்தியற்று நின்றுகொண்டிருந்தேன். சப்பிப்போன பலூன்போல் ஒட்டிப்போயிருந்தது என்வயிறு.    

"அருண்", திவ்யா மெல்ல பேசத் தொடங்கினாள், அவளுடைய குரல் எப்போதுமே சன்னமாய்த்தான் ஒலிக்கும். அதிர்ந்து பேசத்தெரியாது. ஆனால் அதிகம் பேசுவாள்.

"அருண்" இரண்டாம்முறையாக மிரட்டும் தொணியில் அழைத்தாள் திவ்யா. சுயநினைவு வந்தவனாய் நிமிர்ந்தேன். "அருண் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ரொம்ப ரகசியம். இந்த சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு வர முடியுமா...?"

என்னுள் அவள் செலுத்திய மின்சார வார்த்தைகளைக் கேட்டு என்னுடல் மொத்தமாய் அதிர்ந்தது. என்ன கூறுவதென்றே தெரியாமல் அவள் கண்களைப் பார்த்தேன். தீர்க்கமான கண்கள். இப்போதே கட்டயணைக்கச் சொல்லி வற்புறுத்தின அந்தக் கண்கள். ஆர்வத்தை அடக்கிக்கொண்டு வரப்போகும் சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்திருந்தேன். இடைப்பட்ட நாட்களில் தனித்து லயித்து மிதந்தேன். கண்களை மூடி கண்களை திறந்து மறுபடி கண்களை மூடும் அத்தனை இடைவெளியையும் நிரப்பினாள் திவ்யா.

சைக்கிளின் முன்பக்க கம்பியில் அவளை உட்காரவைத்துக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச்சென்றேன். ஊரில் உள்ள அத்தனைத் தெருக்களிலும் அவள் கரம் பிடித்து நடந்தேன். தினமும் ஒரு காதல் கடிதம் எழுதினேன். சுரேஷ் கூறிய ஊரின் ஒதுக்குப்புற இடத்தில் நானும் அவளும் முத்தம் கொடுத்துக்கொண்டோம். இப்படி தினசரி கனவுகளில் இன்னும் என்னென்னவோ செய்துவிட்டேன், ஆனால் இந்த சனிகிழமை மட்டும் பெரியகோவில் தேர்போல ஆடிஅசைந்து நிதானமாகவே வந்து சேர்ந்தது.  

இருப்பதிலேயே புதியதுணி ஒன்றை உடுத்திக்கொண்டு பெருமாள் கோவிலினுள் நுழைந்தேன். மனம் அல்லாடிக்கொண்டிருந்தது. ஒருவித குழப்பமான மனநிலை. திவ்யாவிடம் காதலை சொல்லப்போகிறேன் என்ற இளமை தரும் குதூகலம் ஒருபுறமிருக்க, அவசியம் அவளைக் காதலிக்க வேண்டுமா? என்றொரு எண்ணம் என்னை குழப்பமடையச் செய்திருந்தது. காதல் திருமணத்தை குடும்பம் ஏற்றுக்கொள்ளுமா? என்னால் அவர்களை எதிர்த்துப் போராடி ஜெயிக்க முடியுமா? இதை இத்தோடு விட்டுவிடலாமா? என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். பெருமாளைப் பார்த்தேன், எப்போதும்போல் சிரித்துக் கொண்டிருந்தான். ஆட்டுவிப்பவன் அல்லவா அவன், அப்படித்தான் சிரிப்பான். என்னுடைய எதிர்கால சிந்தனைகளின் முன் திவ்யா தோற்றுப்போனாள். 

முடிவாக பெருமாளிடம் "எனக்கு திவ்யா காதல் எதுவுமே வேண்டாம், அவளிடம் இருந்து நீ தான் என்னைக் காப்பாற்றனும்" என்பதை மீண்டும் மீண்டும் அவனிடம் கூறிவிட்டு, கோவிலின் வெளியே வந்தமர்ந்தேன். இருளடைந்து கிடந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கட்டிடவேலை நடைபெற்றுக் கொண்டிருத்தால் அடைத்து வைக்கபட்டிருந்தது. சில்வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. கொஞ்சம் பாழடைந்த பாண்டியன் காலத்துக் கோவில்.  

சரியாக ஏழுமணி இருக்கும். கோவிலினுள் நுழைந்த திவ்யா நேராக பெருமாளை தரிசித்துவிட்டு, வெளிபிரகாரம் நோக்கி நடந்தவள் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அந்தக் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்த இருளுக்குள் நுழைந்து மறைந்தாள். அவளைப் பின்தொடர்ந்து போகலாமா? வேண்டாமா? என்று என்னுள் மீண்டுமொரு மனப்போராட்டம். இருமுறை அந்த இருளில் இருந்து வெளிப்பட்டு என்னை நோக்கி சைகை செய்தாள். நானோ ஆணிவைத்து அறைந்தது போல அசையாமல் அங்கிருந்தே பேயறைந்தது போல அவள் நின்ற திசையை நோக்கி வெறித்துக் கொண்டிருந்தேன். மார்கழிக் குளிரில் மனம் நடுங்கிக் கொண்டிருந்தது. 

ஒரு பெண்பிள்ளை இவ்வளவு தைரியமாய் கூப்பிடுகிறாள். உனக்கென்னடா கேடு, போ. போய்ப்பார், உன்னை மீறி எதுவும் நடந்துவிடாது' என்று என்னுள் இருந்தவன் என் ஆண்மையை சோதிக்கத்தொடங்கினான். 

மூன்றாம்முறையாக அவள் வெளிப்படும்முன், மனதில் இருந்த கொஞ்சநஞ்ச தைரியத்தையும் வெளிக்கொணர்ந்து அந்த இருளினுள் நுழைந்தேன். என்னை எதிர்பார்த்து காத்திருந்தவள், என்னைக் கண்டதும் வேகமாய் என்னை நெருங்கினாள். நெருங்கிய வேகத்தில் கையைப் பிடித்து இழுத்தாள், என்னிலையில் நான் இல்லை, தன்னிலையில் அவள் இருக்கிறாளா என்பதை அறிந்துகொள்ள என்மனம் தயாராயில்லை. என்னை இழுத்துக்கொண்டு வேகமாய் நடந்தாள், முன்னிரவின் முன்பனியில் குளிர்ந்திருந்த அவள் கரங்களின் தொடுகை என்னை சூடாக்கியது, மனதினுள் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன. சிந்திக்கக்கூட அவகாசம் கிடைக்காத நிகழ்வு. நான் நடக்கவில்லை, நடத்தப்பட்டேன். அங்கிருந்த மண்மேட்டில் என்னைத் தள்ளினாள். இருள் கண்களுக்குப் பழகியிருந்தது. 

அதுவரை அந்தஇடத்தில் நாங்கள் இரண்டுபேர் மட்டும் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு பேரதிர்ச்சி. மூன்றாவதாகவும் ஒருவன் இருந்தான். ஒருவேளை இக்கதையின் நாயகன் நான் என்றால் அவன்தான் வில்லன், நல்ல வேளையாக நான் நாயகன் இல்லை ஆனாலும் அவன் தான் வில்லன். இருள் பழகியிருந்தது. நிதானித்திது கூர்ந்து கவனித்தேன், கருப்பு வெள்ளையாகத் தெரிந்தான். நல்ல ஆஜானுபாகுவான உடல், ஆறடி உயரம் எனக் கணித்தேன். திவ்யா அவனருகில் அமர்ந்தாள், அப்படித்தான் நினைத்தான், ஆனால் அதுதவறு, அவள் அமர்ந்திருந்தது அவனுடைய மடியில்.  

"அருண் இதுதான் ராஜேஷ், ராஜேஷ் இவன்தான் அருண்", இன்னொருவன் மடியில் உட்கார்ந்துள்ளோம் என்ற குறைந்தபட்ச சுய உணர்வோ பதட்டமோ இல்லாமல் சிரித்துக்கொண்டே அறிமுகம் செய்துவைத்தாள் திவ்யா, ராஜேஷ் தடித்த தன் கரத்தை நீட்டினான், தயங்கியபடி நானும் நீட்டினேன், அவனுடைய இறுக்கமான கைகுலுக்கல், 'என்றும் நீ என் அடிமை என்றது'. 

நான் காதலிக்கலாம் என்று நினைத்த பெண் எவனோ ஒருவன் மடியில் உட்கார்திருப்பது கண்ட பொறாமையில், எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில், இயலாமையில், நெளிந்தேன். இப்படியொரு தருணத்தில் நான் என்ன செய்யவேண்டும். தெரியவில்லை. 

"அருண், உன்கிட்ட ரொம்பநாளா நான் சொல்லணும்னு நினைத்த விசயம் இது தான், நானும் ராஜேஷும் லவ் பண்றோம், மூணு மாசமா சின்சியர் லவ், என்றபடி அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்தாள், நெருப்பின் மத்தியில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன், அவனும் பதிலுக்கு முத்தம் குடுத்தான். நெருப்பின் மேல் உட்காரமுடியவில்லை. எழுந்துவிட்டேன்.

"நீங்க பேசிட்டு இருங்க, நான் கிளம்புறேன். வீட்ல அப்பா தேடுவாரு"

அவர்களும் அதைதான் எதிர்பார்த்திருப்பார்கள். அவளைவிட அவன் அதிகமாய் சிரித்தான். அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. பார்த்துப்பார்த்து ரசித்தபெண் என்பதால் இவளைச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. என் உள்ளுணர்வு திவ்யாவுடன் பேசியது "அவன் உன்ன ஏமாத்திருவாண்டி, எப்படியாது விலகிரு' என்றது. அவன் நடத்தை, திமிர், பணக்காரத்தனம் அனைத்தையும் அந்த இருளிலும் என்னால் உணரமுடிந்தது. 

திவ்யா 'உன் அழகை உன் இளமையை உன் ஏழ்மையை உன் அறியாமையை அவன் பணக்காரத்தனத்தில் தொலைத்துவிடாதே' என்று நேரடியாக கூறநினைத்தேன். சொல்லமுடியவில்லை, அவள் அவனுக்கு கொடுத்த முத்தம் எத்தனை நிஜமானதோ அத்தனை நிஜம் என்று நம்புகிறாள் தன் காதலை. அப்படிப்பட்டவளிடம் அவனை நம்பாதே என்றால் கேட்கவாப்போகிறாள்.  

குனிந்த தலை நிமிராமல் நடந்தேன்.

"அருண்" என்றாள், திரும்பினேன். "நாளைக்கு பஸ்ல எல்லாத்தையும் விவரமா சொல்றேன் என்றாள், மீண்டும் திரும்பவில்லை. இனி அவளைப் பார்க்கவே கூடாதென்று முடிவுசெய்தேன். கோவிலை விட்டுவெளியே வரும்போது பாண்டியன் காலத்து அந்தப்பெரிய கண்டாங்கி மணியின் சப்தம் கேட்டது. எனக்குத் தெரியும் பெருமாள் நிச்சயம் உள்ளே சிரித்துக் கொண்டிருப்பான் என்று. 

அவளை சந்திக்ககூடாது என்பதற்காக பள்ளிக்கு சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். அதுவும் ஒரு வாரத்திற்குத்தான். அவள் கதையை அறிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. மீண்டும் பேருந்துப் பயணதிற்கு திரும்பிவிட்டேன். அந்த வாரத்தில் நாங்கள் சந்தித்த ஐந்து நாட்களிலும் தன் காதலனைப் பற்றியே பேசினாள், மாலை பள்ளி முடிந்து திரும்பும் போது என்னிடம் ஒரு காதல் கடிதத்தை திணித்து பழைய பஸ்ஸ்டாண்டில் இறங்கச்செய்துவிடுவாள், 'பப்ளிக் பிளேஸ்ல நான் எப்படிப்பா லவ்லெட்டர் கொடுக்க முடியும், எப்படியாது அவன்கிட்ட கொடேன்." என்பாள். நானும் பேடி போல் சிரித்துக் கொண்டு ராஜேஷிடம் அந்தக் கடிதத்தைக் கொடுப்பேன். என் மனசாட்சி என்னை உயிருடன் வதைக்கும். அதற்கடுத்த வாரங்களிலிருந்து நிரந்தரமாக சைக்கிள் பயணம்தான். அதன்பின் அவளை சந்திக்கவே இல்லை. 

தற்செயலாய் ஒருமுறை ராஜேஷை சந்தித்தேன். அப்போது கூட "திவ்யா எப்டி இருக்கா" என்று தான் கேட்கத்தோன்றியது. "நல்லா இருக்கா தம்பி, நீங்க நல்லா இருக்கீங்களா" என்றான், அவனுடைய ஸ்ப்ளெண்டர் பல்சராக மாறியிருந்தது. மாதங்கள் பல ஓடின. மேற்படிப்பிற்காக சென்னை சென்றுவிட்டேன். 

ஊருக்கு வந்திருந்த சமயம் திவ்யாவை முதலியார் தெருவில் எதிர்பட்டாள். கொஞ்சம் கருத்து மெலிந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் தலையை குனிந்து கொண்டு அழத்தொடங்கிவிட்டாள் "திவ்யா எப்படி இருக்க", என்றேன். இன்னும் கொஞ்சம் சத்தமாக அழுதாள். 

"உன் போன் நம்பர் குடு, உன்கிட்ட நிறைய பேசணும்" என்றாள். "என்கிட்டே போன் கிடையாது" என்றேன். சத்தியமாகவே அப்போது என்னிடம் மொபைல் கிடையாது. நான் பொய் சொல்கிறேன் என்ற எண்ணத்தில் அங்கிருந்து வேகமாக விலகினாள். அவளைத் துரத்திச் செல்ல மனமில்லை.ஆனால் என் கணிப்பு பொய்க்கவில்லை, அவன் அவளை கழற்டிவிட்டுவிட்டான். 

முத்துவிடம் திவ்யா குறித்த விபரங்களைக் கேட்டேன். திவ்யா முத்துவிற்கு தூரத்துச்சொந்தம். முழுக்கதையையும் கூறினான். 

திவ்யாவும் ராஜேஷும் ஊரைவிட்டு ஓடிச்சென்றதாகவும், ராஜேஷ் ஒருவாரம் அவளை கொடைக்கானலில் வைத்து மேற்படி விஷயங்கள் செய்ததாகவும், கடைசி நாளில் இன்னொருவனும் அனுபவித்ததான், அதன்பின் அவளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்றும் கூறினான் முத்து. ராஜேஷின் பணக்கார அப்பா திவ்யா குடும்பத்தை அடித்து மிரட்டி, பணம் கொடுத்து விஷயம் போலீஸ்வரை போகாமல் பார்த்துக் கொண்டதாகவும் கூறியபோது கண்ணில் நீர் கசிந்தது.   

ஏழு வருடங்களுக்குப்பின், கடந்த மாதம் திவ்யாவை மீண்டும் அதே பெருமாள் கோவிலில் சந்தித்தேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொண்டாள் திவ்யா. அதே முகம். அதே புன்னகை. கூடுதலாக கழுத்தில் தாலியும் அருகே கைக்குழந்தையும் . சீக்கிரம் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னாள், தனக்கு நடந்ததை ஒரு தற்செயலான விபத்து என்றும் அதிலிருந்து வெளிவர வெகுநாட்கள் ஆகியது என்றாள். 

'இங்கே நடப்பது எதுவுமே தற்செயலான விபத்துக்கள் அல்ல, பெரும்பாலானவை திட்டமிடப்பட்ட விபத்துக்கள்தான். அப்படியொரு விபத்தில் நீ மாட்டிக்கொண்டாய்' என்றேன். அதற்கும் சிரித்தாள். மேலும் தன்னுடைய திருமணம் காதல் திருமணம் என்றும், தன்னுடைய முழுக்கதையையும் அவனிடம் கூறிய பிறகே அவர்கள் திருமணம் நடைபெற்றதாகவும், தன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறான் என்றும் சந்தோசமாகக் கூறினாள். 

அப்போது மற்றொரு அதிர்ச்சி வெள்ளைநிற ஸ்கார்பியோவில் வந்து இறங்கியது. அந்தக் காரிலிருந்து இறங்கியது ராஜேஷ் என்பதல்ல அதிர்ச்சி. அவனைத் தொடர்ந்து அந்தக் காரிலிருந்து கார் டிரைவராக இறங்கியவன் திவ்யாவின் கணவன் என்பதே என்னை உறையவைத்த மிகபெரிய அதிர்ச்சி.  

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து யோக்கியன் போல கோவிலுக்கு வந்திருந்தான் ராஜேஷ். கையில் துப்பாகியிருந்தால் நிச்சயம் அவனை சுட்டிருப்பேன். உள்ளே இருந்த பெருமாளை திட்டினேன். என்னைப் பார்த்தும் பார்க்காதது போலக் கடந்த ராஜேஷ், மெல்ல திவ்யாவின் அருகில் சென்று அவளையே குறுகுறுவெனப் பார்த்தான், அந்தப்பார்வை எனக்கே கூச்சமாய் இருந்தது. "என்னடா முருகா, பையனுக்கு அப்பன் பேரு என்னன்னு சொல்லிட்டியா இல்லையா" என்றான் நக்கலாய், நானாய் இருந்தால் வெட்டிப்பொலி போட்டிருப்பேன், அதைகேட்டும் அமைதியாய் நின்றிருந்தான் முருகன். அதாவது திவ்யாவின் கணவன். 

"அப்பன் பேரு முருகன்னு சொல்லுடா என் செல்லக்குட்டி" என்றபடி தன் குழந்தையை வாரியணைத்துக் கொண்டு முறைத்தாள் திவ்யா. 

"ச்சீ தேவடியா முண்ட" என்றபடி முணங்கிக்கொண்டே கோவிலினுள் நுழைந்தான், அவன் கூறிய அந்தசொல் பெருமாள் கோவிலின் கண்டாங்கி மணியைவிட தெளிவாகக்கேட்டது. கூச்சத்தில் நெளிந்தாள் திவ்யா. அங்கிருக்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன்.

முருகன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையினுள் நுழையும் என்னைப் பார்த்து பதறியடித்து ஓடிவந்தாள் திவ்யா. அழுது அழுது கன்னம் வீங்கிப் போயிருந்தது. சேலையை சரிசெய்ய மறந்திருந்தாள். சுற்றியிருந்த ஆண்வர்க்கம் அநாயசமாய் அவளைத் தின்று கொண்டிருந்தது. அவளோ அதைப்பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. இதைவிடப் பெரியபெரிய விசயங்கலையெல்லாம் சந்தித்து மறத்துப்போயிருந்தாள்.   

"என்னாச்சு என்றேன்", என்னையே பார்த்தாள், கண்ணத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு   

"ஆலமரத்துல கார் மோதி இவருக்கு பயங்கர அடி, அவன் செத்துட்டான்"

"யாரு"

"அந்தத் தேவடியாப்பய தான்"           

இங்கே எதுவுமே தற்செயலான விபத்துக்கள் அல்ல, பெரும்பாலானவை திட்டமிடப்பட்ட விபத்துக்கள்தான்.