ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday 22 December 2013

போட்டிச் சிறுகதை-35

சிறுகதை-“சௌமி ஆர்ட்ஸ்


எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா இவர்களின் முகங்களை அந்த சுற்று வட்டாரத்தில் பூபாலனைப் போல வேறு யாராலும் வரைந்து விட முடியாது. அதே பகுதியில் பூபாலனுக்கு போட்டி என்றால் அது இருதயராஜ். அதுவும் போட்டி என்று சொல்வதை விட பூபாலனைப் போல அதே ஏரியாவில் ஆர்டிஸ்ட் வேலையை செய்து கொண்டிருப்பவன் இதயா என்றழைப்படுகிற இருதயராஜ் மட்டுந்தான். இருவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் தி.மு., .தி.மு., காங்கிரஸ் என்று மூன்று கட்சிகளுக்காகவும் சுவற்றில் எழுதுவார்கள் வரைவார்கள். இதயாவுக்கு வரைவதை விட எழுதுவது தான் நன்றாக வரும். ,, இதெல்லாம் அவன் கை வண்ணத்தில் எழுத்துக்கள் போல இருக்காது ஊர், பேர் தெரியாத விதவிதமான பறவைகள் மரக்கிளையில் வரிசையாக அமர்ந்து லட்சியமாக வைத்த கண் திருப்பாமல் எதையோ பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கும். அவ்வளவு அழகாய், நேர்த்தியாய் சுவற்றில் எழுதத் தெரிந்த இதயாவுக்கு ஏனோ அதன் பாதியளவுக்குக் கூட உருவங்கள், முகங்கள் வரையத் தெரியாது. தலைவர்களின் முகங்களை சில நேரங்களில் அஷ்ட கோணலாக்கி விடுவான். ஒருமுறை "பொன்னுக்கு வீங்கி" வந்ததைப் போன்று எம்.ஜி.ஆர் முகத்தை வரைந்து விட ஏரியா கவுன்சிலர் தேடி வந்து அவனை அடிக்காத குறை. இதனாலயே இதயாவுக்கு தெரிந்தவர்கள் உட்பட பெரும்பாலனோர் பூபாலனிடமே சென்றார்கள்.

பூபாலன், படித்தது நான்காம் வகுப்பு வரை மட்டுமே. பள்ளியில் படித்த நான்கு வருடங்களிலும் ஓவியப் போட்டியில் முதல் பரிசு அவனுக்கு மட்டுமே சொந்தம். அவன் வரைந்த கிருஷ்ணன் படத்தைப் போன்று இன்று வரைக்கும் எந்த மாணவரும் அந்த பள்ளியில் வரையவில்லை, எச்.எம் ரூமில் கூட அந்தப் படம் தான் ஃப்ரேம் போட்டு இப்போது வரை மாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் அம்மா மச்சகாந்தி தொடையில் சூடு போட்ட பிறகும் கூட படிப்பு மட்டும் கொஞ்சமும் மூளையில் ஏறவில்லை. அப்பா துரைசாமி ஆர்பரில் சூப்பர்வைசர் என்பதால் வீட்டில் வசதிக்கு ஒன்றும் குறைவில்லை தவிர துரைசாமிக்கு பூபாலன் என்றால் உயிர். ஒரே மகன் அதுவும் 7 ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் எல்லாம் அவன் பிரயாசைக்கு உட்பட்டுத்தான். படிப்பை விட்டுவிட்டு பூபாலன் வீட்டிலேயே இருந்து விட்டான். தெருவில் அவன் ஈடு பிள்ளைகள் எல்லாம் ஏழாங்கல், ஐஸ்பாய், கல்லா மண்ணா என்று விளையாடிக் கொண்டிருக்க அவன் மட்டும் வீட்டிலேயே முடங்கிக் கொண்டு எப்போதும் கையில் சிலேட்டும் சாக்பீஸுமாக யாரிடமும் அவ்வளவாக பேசாமல் பார்ப்பதையெல்லாம் வரைந்து கொண்டே இருப்பான் . கோவமாக அவனிடம் எரிந்தும் விழும் அம்மாவை அவளின் வியர்வைத் துளி வழிந்து கொண்டிருப்பது உட்பட தத்ரூபமாக வரைந்து அம்மாவிடம் காண்பித்து இதழ் விரியாமல் புன்னகை மட்டும் செய்வான் அவள் அதைப் பார்த்து அசந்து போய் வாயடைத்து போவாள். பூபாலனின் அசாத்திய ஓவியத் திறமையைப் பார்த்து துரைசாமி தனக்குத் தெரிந்த நண்பர் மூலமாக ஆர்டிஸ்ட் ஒருவரிடம் சேர்த்தார் நான்கு நாட்கள் சென்றவன் அதெல்லாம் பிடிக்கவில்லை அவர் டீ கடைக்கு அனுப்புறார், கடையை பெருக்க சொல்லுறார் நான் போக மாட்டேன் என்று தீர்க்கமாக சொல்லி விட்டான். அதெல்லாம் அப்படித்தான் இருக்கும் ஸ்கூலுக்கும் போக மாட்டனுட்ட ஒழுங்கா போயி இதையாவது கத்துக்கோ என்று கோவத்தில் பளார் என்று ஒரு அரை விட்டு சட்டையை மாட்டிக் கொண்டு வெடுக்கென்று வெளியேறி விட்டார் துரைசாமி. அப்பாவிடம் அடி வாங்குவது அது தான் முதன்முறை. பூபாலன் கதிகலங்கிப் போனான் இருந்தாலும் தன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. இரவு அவனுக்குப் பிடித்த அத்தோ உணவை வாங்கி வந்து பூபாலனை சமாதனப்படுத்தி அவனிடம் கோவிச்சுக்காதடா என்று நெப்போலியன் வாசனையோடு துரைசாமி கொஞ்சிக் கொஞ்சிக் பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கதவு மறைவில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த மச்சகாந்திக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

பூபாலனுக்கு 20 வயது இருக்கும். அப்போது ஆர்பரிலிருந்து வீட்டுக்கு ஆள் வந்தது. கிரேன் கொக்கி பின்னந்தலையில அடிச்சி துரைசாமி சார்என்றதும் மச்சகாந்தி அழும் சத்தத்தை கேட்டு தெரு முனையில் இருக்கும் நாய் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் இப்படியும் அப்படியும் தாவி எகிறி தெறித்து ஓடியது. துரைசாமி நல்ல சோக்காளி என்பதால் சேமிப்பு என்று வீட்டில் ஏதுமில்லை. மச்சகாந்திக்கு கிடைக்க வேண்டிய துரைசாமியின் ஆர்பர் வேலையை பணம் குடுத்து அவர் வைத்திருந்த கூத்தியாள் தனக்கு வாங்கி விட்டாள். மச்சகாந்தி கட்டுப்பெட்டியான பெண் என்பதால் எல்லாவற்றிற்கும் சேர்த்து அழுதழுது தன் முந்தானையை மட்டும் ஈரமாக்கிக் கொண்டாள். குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. வெளியுலகம் தெரியாத அம்மாவை வைத்துக் கொண்டு இனியும் தான் வீட்டில் முடங்கிக் கிடப்பது நியாயமில்லை என்று எண்ணி பூபாலன் கட்சி, சினிமாவுக்காக பேனர்களில் வரைவது, சுவரில் எழுதுவதென்று தனக்குப் பிடித்த, தனக்குத் தெரிந்த ஆர்டிஸ்ட் வேலையை (ப்ரஷோடு) கையில் எடுத்துக் கொண்டான்.

வெளியில் வந்து வரைவது அதுவும் ரோட்டில் நின்று மெனக்கெடுவது, வேலை கற்றுக் கொடுப்பவர் அடிக்கடி மூஞ்சி காட்டிக்கொண்டே இருந்தது இதெல்லாம் பூபாலனுக்கு ரொம்பவும் கலக்கமாக இருந்தது. சேடு வீட்டில் வீட்டு வேலைக்கு செய்ய போகிறேன் என்று துணிந்த அம்மாவிடம் நான் மட்டும் வேலைக்கு போறேன் நீயெல்லாம் எங்கயும் போக வேணாம் என்று இவனே உறுதியோடு சொன்னது அடிக்கடி நினைவு தட்டுவதால் தான் எடுத்துக் கொண்ட வேலையை அர்ப்பணிப்போடு செய்ய ஆரம்பித்தான். லெட்டர் பெய்ண்டிங், டிராயிங் என இரண்டிலும் முன்பே சொன்னது போல அந்த ஏரியாவில் பூபாலனுக்கு நிகர் பூபாலனே தான். ஜெயலலிதா சி.எம். ஆக முதன்முறை அரியணை ஏறியதை வரவேற்கும் வகையில் கட்சிப்புடவையில் சிரித்த முகத்தோடு அவர் குத்து விளக்கு ஏற்றுவது போல கட் அவுட் பேனரில் பூபாலன் வரைந்த ஓவியம் எழும்பூர் பகுதியில் மற்றவர்களுக்கு பூபாலன் மீது பெரிய கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஒரே நாளில் வெளி வரப்போகும் குணா, தளபதி இரண்டு படத்திற்கும் அவர்களின் ரசிகர்கள் முந்திக்கொண்டு பூபாலனிடம் அட்வான்சை திணித்தார்கள். தேவி தியேட்டரில் குணாவுக்கும், ஆல்பர்ட் தியேட்டரில் தளபதிக்கும் ஜோராக பாலாபிஷேகம் நடந்தது பூபாலன் வரைந்த பேனர் மீது தான். இதன் மூலம் அவன் பெயர் இன்னும் பரவத் தொடங்கியது. 

சினிமாவுக்காக வரைந்தால் காசு உடனடியாக கிடைத்து விடும் ஆனால் கட்சிக்காக வரையச் சொல்லும் அரசியல்வாதிகள் ஆர்டிஸ்ட்டிடம் நன்றாக வேலை வாங்கி கடைசியில் கூலி தரும் போது மட்டும் நம்ம கட்சிக்கு தானப்பா செஞ்சே இந்த இவ்ளோ வாங்கிக்கோ என்று பண விஷயத்தில் டிமிக்கி குடுத்து விடுவார்கள் இதயா கூட சில முறை இப்படி ஏமாந்திருக்கிறான். பூபாலனிடம் அதெல்லாம் நடக்காது அவன் ரொம்ப கறார் பேர்வழி, முன்கோபி அதே சமயம் தொழிலில் சுத்தம் என்றால் அது பரிசுத்தம், செய்யும் வேலையும் தரமாக இருக்கும்படி ஐந்தடி பேனர் ஒர்க் என்றாலும் கூட அதற்க்கான காடா துணியை ஏரியாவிலுள்ள லோக்கல் கடைகளில் வாங்காமல் பாரிமுனையில் இருக்கும் குடோன் ஸ்ட்டீடுக்குச் சென்று வாங்குவான் வாடிக்கையாளன் என்பதால் அங்கு கடை வைத்திருக்கும் கலீல் பாய் மீட்டருக்கு 30 பைசா என இவனுக்கு குறைத்து குடுப்பார். அதை வாங்கிக் கொண்டிருக்கும் போதே தன்னிடம் எந்தெந்த டப்பாவில் பெயின்ட் குறைவாக இருக்கிறதென்று மனக் கணக்குப் போட்டு அதற்கேற்றார் போல் தேவையானதை மட்டும் போகும் வழியிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையில் தனக்குத் தெரிந்த ஒரு கடையில் குறைந்த விலையில் வாங்கி விடுவான். பூபாலன் வரைவது பெரும்பாலும் சுவர்களில் இல்லாமல் கட் அவுட் பேனர்களில் என்பதால் ப்ரைமர் அடிக்க வஞ்சிரமும், சாக் பவுடரும் கிலோ கணக்கில் எப்போதும் கைவசம் இருக்கும். மொத்தமாக தீர்ந்து விட்டால் மட்டும் அவைகளை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வான். தான் செய்யும் வேலையை அதிகமாய் பூபாலன் காதலிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் கல்யாண வயது வந்து விட்டததேன்று அம்மா மச்சகாந்தி ஒரு பெண்ணைப் பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள்.

மனைவி சாரதாவும் அவனை ஒரளவு புரிந்து நடந்து கொண்டாள். பூபாலன் முன்பை விட தொழிலில் தீவிரமாக இருந்தான். வீட்டிற்கு வந்ததும் தன் அப்பா துரைசாமி வாங்கிக் குடுத்த பரீட்சை அட்டையை பீரோவுக்கு அடியிலிருந்து எடுத்து அதன் க்ளிப்பில் வெள்ளைத்தாள்களை சொருகி அடுத்த நாள் தான் வரையப்போகும் உருவங்களை வரைந்து வரைந்துப் பார்ப்பான். சாரதாவுக்கு இதையெல்லாம் பார்த்தால் சற்று விசித்திரமாக இருக்கும். சின்ன வயசுல இருந்து வரையங்கிற எதுக்கு பயந்து பயந்து இத்தனை வாட்டி வரைஞ்சி பாக்குற என்று ஒருமுறை அவன் முகத்தை நேராய் பார்த்தே கேட்டு விட்டாள்.. "பாவி மகளே இது பயமெல்லாம் ஒண்ணுமில்லை, நான் அவுட்டர்ல நின்னு வரையும் போது பத்து பேரு சுத்தி நின்னு பாப்பாங்க அந்த இடத்துல அவங்க முன்னாடி ஜெர்க் ஆனாலோ, ஏறுக்கு மாறா வரைஞ்சிட்டு அப்புறம் அதை அழிச்சுட்டு டபுள் வேலை செஞ்சாலோ எவ்ளோ அசிங்கம்" என்று சாரதாவிடம் விலாவரியாக சொல்லத் தோன்றும் ஆனால் அதற்க்கெல்லாம் பூபாலனிடம் நேரம் இருக்காது. அவள் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் குனிந்த தலை நிமிராது படம் சரியாக வரும் வரை வரைந்து முடித்து விட்டு பெய்ண்ட் மிக்சிங் செய்ய பெட்டியை தூக்கிக் கொண்டு தன் நண்பன் பழனி ஆண்டவன் சைக்கிள் ஸ்டாண்டிற்கு சென்று விடுவான். அவன் ஆளே அப்படித்தாம்மா எதுக்கும் மடக்குன்னு வாயை தொறந்து பேச மாட்டான் கோவம் மட்டும் சில நேரத்துல சுருக்கு சுருக்குனு வரும். தெரிஞ்சதெல்லாம் படம் போடறது மட்டும் தான். பெயிண்ட் வாசனையை ஒரு நாள் மோர்லனா கூட தூங்க மாட்டான் அவனுக்கு படம் போடறது தான் மொத, அப்புறம் தான் மத்ததெல்லாம் என்று பூபாலன் போய் விட்டபிறகு தன் மருமகளிடம் பொறுமையாக மச்சகாந்தி எடுத்துச் சொல்வாள். 

நாட்கள் சென்றது..பூபாலன்-சாரதா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நேரம் பூபாலனுக்கு பி.பி.எல், கண்ணன் தேவன் டீ போன்ற பெரியப் பெரிய நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் கிடைத்தது. வரைய ஆரம்பித்த காலந்தொட்டே படம் வரைந்து முடித்த பின் கடைசியாக அதன் அடி ஓரத்தில் இரண்டு வெத்தலை அளவில் Art By Boopalan என போட்டு வந்தவன் குழந்தை பிறந்து அதற்கு பெயர் வைத்த பிறகு Art By Sowmi என தன் குழந்தை பெயரை போட ஆரம்பித்தான். பூபாலனிடம் உதவிக்கு இப்போது பத்து ஆட்கள் இருந்தார்கள் (அதில் இதயாவும் ஒருவன்) சென்னையை தவிர்த்து வெளியூர்களுக்கு சென்றெல்லாம் வரைய ஆரம்பித்திருந்தார்கள். காட்பாடி மெயின் ரோட்டிற்கு ஒரு மீட்டிங்கிற்காக தலைவர் வர இருப்பதால் ஐம்பது அடி பேனரில் தலைவரை வரைய வேண்டுமென்று தெரிந்தவர் மூலமாக துரைமுருகனிடம் இருந்து ஒரு ஆர்டர் வந்தது. பெரிய இடம் என்பதால் இதயா, பூபாலன் இன்னும் கூட இரண்டுபேர் என மொத்தம் நான்கு பேர் சென்று கலைஞரின் நெற்றிச் சுருக்கம் உட்பட தத்ரூபமாக வரைந்து குடுத்தார்கள். விழாவிற்கு வந்து அதைப் பார்த்து கலைஞரே வியந்து இனி தமிழகத்தில் என் படம் எந்த மீட்டிங்கில் வரையப்பட இருந்தாலும் சௌமியாவையே கூப்பிடுங்கள் என்று தன் பி.. சண்முகராஜனிடம் வாஞ்சையோடு தெரியப்படுத்திக் கொண்டார்.

இதன் மூலம் சினிமா விளம்பரம், அரசியல், மற்றும் கன்சூமர் ப்ராடக்ட் போன்றவற்றிற்கு வரைவதற்காக ஆர்டர்கள் நிறைய கிடைத்ததால் பூபாலன் பெரிய தனவந்தன் ஆனதோடு ஆர்டர்களை சமாளிக்க தற்போது இருப்பவர்களோடு, வேலைக்கு கூட பத்து ஆட்களை சேர்த்துக் கொண்டான். இந்த தொழிலில் ஏற்கனவே பிரபலமாய் இருந்த மோகன் ஆர்ட்ஸ், பாலு பிரதர்ஸ், பாபா ஆர்ட்ஸ் போன்றவர்களுக்கு இணையாக சவால் விடும் அளவுக்கு எல்லிஸ் ரோட்டில் "சௌமி ஆர்ட்ஸ்" என்கிற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்து பிரபல சினிமா விளம்பர போஸ்டர் டிசைனர் திரு. உபால்ட் அவர்களை திறப்பு விழாவிற்கு அழைத்து வந்து கடையைத் திறந்து தொழிலை தொடர்ந்தான். 

அந்த வருடம் "சௌமி ஆர்ட்ஸில்" வேலை செய்யும் அனைவருக்கும் தீபாவளிக்கு மறுநாள் பூபாலன் வீட்டிலேயே கறிவிருந்து குடுப்பதாய் நான்கு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு இருந்தது. அதே போல் தீபாவளி மறுநாள் மதியம் பூபாலன் வீட்டு மொட்டை மாடியில் சாமியானா பந்தல் போட்டு விருந்து வெகு ஜோராய் நடந்து கொண்டிருந்தது. வீட்டினுள் உள்ள ஹாலில் பூபாலனும் அவனுடைய பழைய நண்பனான சைக்கிள் ஸ்டாண்ட் பழனியும் பேசிக் கொண்டிருந்தார்கள் அதே ஹாலின் உள்ளே மச்சகாந்தி பரபரப்பாக எதையோ முனுமுனுத்தபடி வாழை இலைகளை தேடிக் கொண்டிருந்தாள். நிறைமாத கர்ப்பிணியான சாரதா அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டபடியே தயிர் பச்சடி தீர்ந்து விட்டதால் அடுத்த பந்திக்காக தயிரை கடைந்து கொண்டிருந்தாள். பேச்சினூடே பழனி பூபாலனிடம் சொன்னான் "என்ன பூபாலா புதுசா ஏதோ மிஷின் வந்திருக்காமே டிராயிங், பெய்ண்டிங், பேனர் எல்லாம் அதே பிரிண்ட் போட்டு குடுத்திருதாமே அது என்னனு கேள்விபட்டியா என்றான். பூபாலன் முழித்தபடி பதில் சொல்ல வாயை திறப்பதற்குள் பக்கத்தில் தயிர் கடைந்து கொண்டிருந்த சாரதா திடீரென்று தன் இடுப்பை பிடித்தவாக்கில்அய்ய்ய்யோ வ்வ்வலிக்க்குதேஎன்று முக்க ஆரம்பித்தாள்.