ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 17 December 2013

போட்டிச் சிறுகதை-23

சிறுகதை-காப்பி அடிச்ச கதை

என் பெயர் குமரன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எங்க தமிழ் அய்யா பெயர் MRT. என்ன ஒரு முரண்? ஆனா அவர் ஒரு பெரிய அம்மாஞ்சி. அவர் பாடம் நடத்தும் போது முதல் பென்ச்ல இருக்கிறவங்க எல்லாம் நனைஞ்சிடுவாங்க. அவ்வளவு எச்சில் தெறிக்கும். சில சமயம் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க சொல்லுவார். பெரிய பத்தியா இருக்கும். எங்க க்ளாஸ் பசங்க ஒரு நாலு வரி தான் படிப்பாய்ங்க. ஒப்பிக்கிறேன்னு போயிடுவாங்க. அவர் நோட்ஸை திறந்து வச்சுகிட்டு, சரி பாத்து கிட்டு இருப்பார். முதல் நாலு வரியையே திக்கி திக்கி தான் சொல்லுவாய்ங்க

அவரே கொஞ்சம் கொஞ்சம் எடுத்தும் குடுப்பார். நாலு வரிக்கு அப்புறம், கொஞ்சம் சைடுல நகர்ந்து, அவர் திறந்து வைத்திருக்கும் நோட்ஸை பாத்து, நேரடியா வாசிக்க ஆரம்பிச்சிடுவாய்ங்க. அவரும் பய புள்ள மனப்பாடம் பண்ணி தான் சொல்றான்னு நெனச்சுகிட்டு "ம்" கொட்டி கிட்டு இருப்பாரு. கொஞ்ச நாள் கழிச்சு பசங்களோட இந்த டெக்னிக் அவருக்கு தெரிஞ்சுருச்சு. அதனால எங்க பசங்க பாக்க முடியாத அளவு கொஞ்சம் திரும்பிக்குவார்.  அப்புறமும் ஒப்பிக்க சொன்னா, எங்க பசங்க நாலு வரி மட்டும் தான் படிப்பாய்ங்க. மிச்சத்த பின்னாடி இருக்குறவன் புக்க பார்த்து சொல்லுவாய்ங்க. அத கூட கண்டுபிடிக்க முடியாத அளவு மங்குனி அவரு. 

அவரு சூப்ரவைசரா வந்துட்டா எங்க பசங்களுக்கு ஒரே கொண்டாட்டம். பிட்டு அடிக்குறதும், பேப்பர மாத்தி எழுதுறதும், ஒரு மார்க் பதில சரி பாக்குறதுமா ஒரே ரகளை பண்ணிடுவாங்க. எனக்கு எப்டி தெரியும்-னு கேக்குறீங்களா? எங்க பசங்களே சொல்லுவாய்ங்க. இந்த சமயத்தில, என்ன பத்தி கொஞ்சம். நானும் ஒரு அம்மாஞ்சி தான். ஒரு தடவை கூட பிட்டோ காப்பியோ அடிச்சதில்லை. 

அன்னைக்கு தமிழ் முதல் தாள் பரிட்சை. என் நண்பன் பாலாஜி பக்கத்துல தான் படிச்சிகிட்டு இருந்தான்.
"என்னடா... எல்லா பாடத்தையும் படிச்சிட்டியா?"
"இல்லடா... ஏதோ பாதி பாடம் படிச்சிருக்கேன். நீ?"
"நானும் அதே தான்டா...கடேசி பாதி பாடம் படிச்சிருக்கேன்.."
"டேய்... நான் படிச்சது மொத பாதிடா.... நண்பா...! முடிஞ்சா காப்பி அடிக்கலாமா?"
நான் கொஞ்சம் யோசித்தேன்... "சரி... பாக்கலாம்...".

தேர்வு ஆரம்பிக்கும் சமயம். அன்னைக்கு சூப்ரவைசர் MRT. நாங்கள் இருவரும் சந்தோஷமாக சிரித்தோம். எங்களோட ரோல் நம்பர் பார்த்து உக்கார்ந்தோம். என்னோட பென்ச்-க்கு முந்திய பென்ச்ல பாலாஜி.  நாங்கள் இருவரும் மறுபடியும் சிரித்தோம்.  நான் எனக்கு தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதினேன். பாலாஜியும் விறுவிறுன்னு எழுதிக்கிட்டு இருந்தான். ஒரு அரை மணி நேரம் போயிருக்கும். டீ வந்தது. MRT வாங்கி கொண்டு வெளியே போனார். உடனே இது தான் சமயம்-ன்னு பாலாஜி சட்டென திரும்பி பேப்பர குடுத்தான். நானும் வாங்கி அடியில வச்சுக்கிட்டேன். எனக்கு ஒரே படபடப்பு. இருக்காதா பின்ன? முதல் முறையாச்சே? MRT கட கட-ன்னு உள்ளே வந்தார். நேரா எங்கிட்ட தான் வந்தார். நான் நடுங்கிட்டேன். டீயை வாங்கிட்டு வெளியே போனாலும் கதவு இடுக்கு வழியா பாத்த்திருப்பார் போல. என் பேப்பர தான் செக் பண்ணுனார். பாலாஜியோட முதல் பக்கம் (மெயின் ஷீட்) எங்கிட்ட இருந்தது. அப்டியே அழுக ஆரம்பிச்சுட்டேன். பாலாஜி கெஞ்சுனான். "சார்... சார்... தெரியாம பண்ணிட்டேன் சார்...விட்ருங்க சார்... இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சு விட்ருங்க சார்... இனிமே வாழ்க்கையில பிட்டே அடிக்க மாட்டேன் சார்..."-ன்னு கெஞ்சுனான். 

சரி... போனா போகுது மன்னிச்சு விட்டுடலாம்-ங்கிற நிலமைக்கு வந்துட்டாரு. "இனிமே இந்த மாதிரி தப்பு பண்ணினா தொலைச்சு போடுவேன் தொலைச்சு..."-ன்னு சொல்லிகிட்டு இருந்தார். அப்ப பார்த்து, சத்தம் கேட்டு பக்கத்துல சூப்ரவைஸ்  பண்ணிகிட்டு இருந்த கருணாநிதி வந்துட்டார். அவரும் தமிழ் அய்யா தான். ஆனா, நேர்மை நீதி நியாயம்-னு பேசுறவரு. அவர் வந்ததுமே என்னோட அழுகை இன்னும் அதிகமாச்சு. "என்ன பிரச்னை"-ன்னு முழுசா கேட்டவரு, "சார்... தப்புக்கு தண்டனை கிடைச்சா தான் அதே தப்ப மறுபடியும் பண்ண மாட்டாங்க... இப்போ மன்னிச்சு விட்டுட்டீங்கன்னா... எப்டின்னாலும் மன்னிச்சு விட்ருவாங்கன்னு மறுபடியும் தப்பு பண்ணுவாய்ங்க... இவங்க ரெண்டு பேரையும் தலைமை ஆசிரியர் கிட்ட அனுப்பிச்சு வைப்போம். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை செய்வோம். என்ன சார் சொல்லுறீங்க?".

MRT சாரும் தலையை ஆட்டினார். "அவரே விட்டிருப்பாரு... ஏன்யா இப்பிடி உயிரை வாங்குறீங்க?" என்று நான் நினைத்துகொண்டிருக்கும் போதே "பேப்பர வாங்கி எழுதுறத விட, பேப்பர் குடுக்குறது தான் பெரிய தப்பு." என்று சேம் சைடு கோல் அடித்தார். அந்த பக்கம் போய்கிட்டுருந்த ஒரு பையனை கூப்பிட்டு "இவங்க ரெண்டு பேரையும் HM கிட்ட கூட்டிட்டு போயி நான் சொல்றத அப்படியே சொல்லணும். இவன் இவனுக்கு பேப்பர் குடுத்தான் அப்படீன்னு சொல்லு." 
"சரி சார்".

எனக்கு அப்பாடா என்ன விட பாலாஜி தான் அதிகமான தப்பு பண்ணிருக்கான். அவனுக்கு தான் அதிகமா தண்டனை தருவாங்க-ன்னு கொஞ்சம் சந்தோசப் பட்டேன்.

அந்த பையனை நாங்க பின்தொடர்ந்தோம். நான் அவமானத்தில் தலையை குனிந்து கொண்டேன். அவன் HMமிடம் கூட்டி போய் சொன்னான் "இவன் இவன்கிட்ட பேப்பர வாங்கி எழுதினான்". நான் அந்த பையனை "துரோகி" என்று திட்டி கொண்டிருக்கும் போதே HM ஆரம்பித்தார். ஒரு அரை மணி நேரம் சும்மா வளைச்சு வளைச்சி திட்டினார். சும்மா சொல்ல கூடாது. இந்த அளவுக்கு அவருக்கு திட்ட தெரியும்-ன்னு எனக்கு அன்னிக்கு தான் தெரியும். அப்புறம் அவருக்கே போர் அடிச்சு "சரி போயி மீதி தேர்வை எழுதுங்கடா"-ன்னு விட்டுட்டார். நாங்களும் போயி மீதி தேர்வை எழுத ஆரம்பிச்சோம். இன்னும் ஒரு மணி நேரம் தான் இருந்தது. கட கட ன்னு பாசாகிற அளவுக்கு நான் தேத்தினேன். 

திருத்திய விடை தாள் கொடுக்கும் நாள். என்ன தான் தலைமை ஆசிரியர் அறைக்கு போயிட்டு வந்ததுல நேரம் வெஸ்ட் ஆகி இருந்தாலும் 35 மார்க்கு மேலயே நான் எழுதி இருந்தேன். பாஸாகிடுவோம்-ன்னு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.

"பாலாஜி - 18 - பெயில்"
"குமரன் - 34 - பெயில்"

என்னோட பேப்பர வாங்கி பார்த்தேன். சரியான விடை எழுதி இருந்தாலும் குறைவான மார்க் தான் எல்லா பதில்களுக்கும் போட்டிருந்தாரு. எப்பவுமே ஒரு மார்க் ரெண்டு மார்க்குக்கு அதிகமா வாங்குறதுக்கு மறு திருத்தலுக்காக விடை தாளை கொண்டு போகிற நான், அன்று அப்படி செய்யவே இல்லை ஒரே மார்க்கில் பெயில் ஆகியிருந்தாலும்.