ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday 27 November 2013

போட்டிச்சிறுகதை-3


சிறுகதை-குப்பை



செங்கல்பட்டிற்கு வடக்கே இருபது கிலோமீட்டர் தூரத்தில் ஒளிந்திருக்கும்  சிறிய கிராமம் மத்தலபுரம். மத்தலபுரத்தில் விவசாயம் பெரிதாக இல்லை என்றாலும் வைணவ கோவில்கள் தாராளம். உள்ளூர் மக்கள் வருகை குறைவாக இருப்பினும் அக்கோவில்களுக்கு வெளியூர் மக்களின் வருகை அதிகம். ஊரில் சிறு தொழில் செய்பவர்களுக்கு வருமானமே அக்கோவில்களிற்கு வரும் ஜனத்தினால் தான். ஊரின் தென் கோடியில் இரண்டு ரயில் நீளத்திற்கு ஒரு அக்ரஹாரம் உள்ளது. அக்ரஹார மக்கள் சிலர் கோவில்களை நம்பியும் சிலர் சுய தொழிலை நம்பியும் வாழ்ந்து வருகின்றனர். அக்ரஹார வீடுகளில் கஷ்டம் விரட்டி விரட்டி அடித்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டாக்டரோ இன்ஜிநீயரோ  உருவாகி கொண்டு வந்தனர். அக்ரஹாரத்து மாமிகளுக்கு அரட்டை ஒரு தினசரி வாடிக்கை. அவர்களுக்கு நடுவே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள் ரமணி மாமி.

கஷ்டங்களை அரட்டைகளாக மாற்றும் மாமிகள் நடுவில் கஷ்டங்களை தனக்கு தானே பேசி கரைகின்ற ஜாதி இவள். கஷ்டமோ களிப்போ தன்னுடனே போகட்டும் என்று நினைப்பவள் ரமணி. மாமிக்கு மார்கழி வந்தால் நாப்பத்தி எட்டு வயது. வீட்டில் மாமா தவறி போய் பன்னிரண்டு வருடங்கள் ஆனாலும் அவர்  பெயரில் பென்ஷன் மாதம் ஒரு முறை மாமியை தேடி வீட்டிற்கு வந்து விடும். பென்ஷன் வரும் நாளெல்லாம் மாமா வின் நினைவும் கண்ணீருடன் கலந்து வரும் அவளுக்கு. மாமா மாமிக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. பையன் ராகவன் இங்கிலாந்தில் ஜப்பான்காரன் கம்பெனிக்கு வேலை பார்த்து கொண்டிருக்கான். ஜப்பான்காரன் உழைக்கிறானோ இல்லையோ பையன் அவங்களுக்கு பொதி மாடாக உழைக்கிறான். சிலவு போக மீதி வருமானத்தை மத்தலபுரதிற்கு மணி ஆர்டர் அனுப்பி விடுவான்.ஆண்டாளை செங்கல்பட்டு சப் ஜட்ஜ் மகன் சீனிவாசனுக்கு கொடுத்திருக்கிறாள். சீனிவாசன் சென்னையில் ஒரு பிரைவேட் சர்க்கரை ஆலையில் அக்கௌன்ட் மேனேஜராக வேலை செய்து வருகின்றான். கோதை மேல் கொண்ட பிரியத்தினால் தன் மகளுக்கு ஆண்டாள் எனப் பெயர் வைத்தாள். ஆண்டாள் இரு மாதங்களுக்கு ஒரு முறை அவள் ஹஸ்பண்ட் உடன் சென்னையிலிருந்து மத்தலபுரதிற்கு அம்மாவை பார்க்க வந்து விடுவாள்.

ராகவன் அனுப்பும் மணி ஆர்டர் மாதம் தவறாமல் வந்தாலும் அவனைப் பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பு அவளுக்கு எப்பவும் உண்டு. தவிப்பு இருந்தாலும் அதை வெளியே வழிய விடாமல் மனதிலேயே நிரப்பிக் கொள்வாள். இரண்டு வருடங்களில் வந்து விடுவேன் என்று சொன்னவன் நான்கு வருடம் ஆகியும் வரவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தன் மகனை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டோம் என்ற பெருமிதம் அவளுக்கு உண்டு. ராமேஸ்வரம் மெய்லைப் பிடித்தால் தாம்பரத்தில் இருந்து மத்தலபுரம் இரண்டு மணி நேரம் தான் என்றாலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து போகும் ஆண்டாளின் குறிஞ்சி விஜயத்தினால் வருந்துவதும் உண்டு. தனிமையால்  தான் படும் துயரங்கள் எல்லாம் தன் கணவன் வேங்கடாத்ரி இருந்திருந்தால் இல்லாமல் போயிருக்குமோ என்று அவள் எண்ணாத நாளும் இல்லை. தனிமையும் தவிப்பும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கித் தின்றது. துயரங்களை எங்கு உதிர்ப்பது என்று தெரியாமல் வாரம் நான்கு முறை ஊர் நடுவே உள்ள நரசிம்ஹர் கோவிலின் ப்ரஹாரத்தை சுற்றி வந்து உதிர்ப்பாள்.

ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ததில் ராமேஸ்வரம் மெயில் சூப்பர்பாஸ்டாக மாறியது. அதனாலோ என்னவோ இரு மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் ஆண்டாளின் தரிசனம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அன்று ரமணிக்கு கிடைத்தது. மாப்பிள்ளை மகளின் திடீர் வருகையினால் அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவசர அவசரமாக கல் உரலில் தோசை மாவை அரைக்க ஆரம்பித்தாள். "அம்மா அவருக்கு டைம் ஆயிடுத்தாம், அஞ்சு மணி ரயில புடிச்சா தான் இருட்ரதுக்குள்ள ஆத்துக்கு போமுடியும். அதனால கொஞ்சம் சீக்ரம் செஞ்சு கொடுமா" என்று மகள் ஹாலில் இருந்து சொல்ல "சரிமா சீக்ரமா அரைக்கிறேன்.." என்று இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என்ன என்று ஏக்கக் குரலில் கூறுகிறாள் ரமணி. ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்டை போல வந்த வேகத்தில் திரும்புகிறாளே என்று தனக்குள் புலம்புகிறாள் மாமி.

மாவை அரைத்து அதை ஒரு முக்கால் அடி தூக்கில் எடுத்துக்கொண்டு சமையற்கட்டிற்கு நடையைக் கட்டுகிறாள் ரமணி. ஹால் நாற்காலியில் சுகமாக உட்கார்ந்து கொண்டு இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச் பார்த்து கொண்டிருக்கிறார் மாப்பிள்ளை. ரமணி தூக்கை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வருவதை பார்த்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே "மாமி நா வேணா ஹெல்ப் பண்ணட்டா.. கஷ்ட பட்டு எடுத்துண்டு வரேளே" என்கிறான் சீனிவாசன். "இல்லப்பா பரவால்லை.. நீ கிரிக்கெட் பாருப்பா.." என்று பெரு மூச்சுடன் கூறுகிறாள் ரமணி. "என்னத்த இவங்க விளையாடறத பாக்றது.. சச்சினே அவுட் அய்டான்" என்று அசதி புலம்பலுடன் மேட்ச்சை தொடர்ந்து பார்க்கிறான். கூட்ஸ் வண்டி போல் சாய்ந்து சாய்ந்து நடந்து சமையற்கட்டிற்குள் செல்கிறாள் ரமணி. "கொடு கொடு கொடு.." என்று ஆண்டாள் தூக்கை வாங்கி சமையல் மேடையில் வைக்கிறாள். "பாத்திரம் எல்லாம் தேச்சு வெச்சுட்டேன்.. கரண்டி மட்டும் அலம்பிக்கோ மா.." என்று ஆண்டாள் கொஞ்சலாக கூற "சரி மா நீ மாப்பிள்ளையோட போய் உக்காரு.. நா இதோ வந்துடறேன் தோசையோட" என்று கன்னத்தை செல்லமாக கிள்ளுகிறாள் ரமணி.

தோசைக் கல்லை சுட வைத்துவிட்டு ஜன்னல் வெளியே உதிர்ந்து கிடக்கும் காய்ந்த சருகுகளை வைத்த கண் விடாமல் பார்க்கிறாள் மாமி. "அடேடே இவ்ளோ இலை குப்பை மாதிரி சேந்து போச்சே.. இருட்ரதுகுள்ள எடுத்திடனும்" என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தோசை வாற்கிறாள். "அம்மா! புறபட்ரதுக்குள்ள சூடா காபி போட்டு தரியா.." என்கிறாள் ஆண்டாள். "சரி மா.. முதல்ல தோசை சாப்டுங்கோ ரெண்டு பேரும்" என்று சொல்லி கொண்டே காபி பொடி டப்பாவை எடுக்கிறாள் ரமணி. காபி பொடி தீர்ந்து போனதை கண்டு "நானூறு கிராம் வாங்கிண்டு வந்தோமே போன வாரம்.. அதுக்குள்ள தீந்து போச்சே" என்று வார்த்த தோசைகளை எவசில்வர் தட்டில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு செல்கிறாள். "மிளகா பொடி போட்ருக்கேன்.. இன்னும் வேணும் நா அந்த அஞ்சறை பொட்டில இருக்குடி.. எடுத்து போடு மாப்பிள்ளைக்கு.. நா இதோ வந்துடறேன்" என்று காபி பொடி வாங்க புறப்படுகிறாள்.

பக்கத்து வீடு சுப்ரமணியணின் மகன் ராமஸ்வாமி செங்கல்பட்டில் நெடுங்காலமாக பயின்று வரும் டாக்டர். மாமி தள்ளாடி நடப்பதை பார்த்து ராமஸ்வாமி  தனது கிளினிக்கில் சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள் என்று பல முறை கூறியும் கேட்காமல் யுகிளிப்டஸ் தைலதையே தடவி சிகிச்சையை புறக்கணித்து வருகிறாள். தேய்ந்து போன அந்த கால்களை வைத்துக்கொண்டு காபி பொடி கடைக்கு நடக்க தொடங்குகிறாள் ரமணி. வாசலுக்கு வந்த உடன் தான் அவளுக்கு கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த இலை சருகுகள் ஞாபகத்திற்கு வருகிறது. "மணி இப்போவே மூன்றை ஆய்டுத்தே.. பொண்ணு புறபட்ரதுக்குல இருட்டிடும் அதுக்குள்ள பூச்சி பொட்டு சேந்துடும்.. இப்போவே அள்ளி வாளில போட்டுடுவோம்" என்று அவசர அவசரமாக இலைகளை வாளியில் அள்ள தொடங்குகிறாள். "என்ன மாமி குப்பை ரொம்ப சேந்து போச்சா.. அள்ள ஆரம்ச்டேலே.." என்று பக்கத்து வீட்டு ஹேமா கேட்க, "ஆமாம்மா..! இல்லேன்னா ஆத்துக்குள்ள நைட்டு பூச்சி வந்துட்றது.." என்கிறாள் ரமணி. "எப்படி தான் இந்த குப்பைகளை டெய்லி ஒரு நாள் தவறாம உங்க நாலா அள்ள முடியர்தோ தெரியல.. எங்க ஆத்துல பாருங்கோ புயல் அடிச்சா மாதிரி குப்ப சேந்து போயிர்கு.. ஆள வெச்சு தான் அள்ளனும் போலற்கு.." என்று ஹேமா புலம்புகிறாள். அதற்கு ரமணி நமுட்டுச் சிரிப்புடன் "சரி சரி.. பொண்ணுக்கு டைம் ஆய்டுத்து.. நா காபி பொடி வாங்க புறபட்றேன்" என்று சொல்லிகொண்டே குப்பையை வாளி ஒன்றில் போட்டு வைத்துவிட்டு கடைக்கு நடக்க தொடங்குகிறாள்.

"என்னமா பொண்ணு வந்திருக்கு நீங்க வெளில போய்ட்டிருக்கிங்களே?" என்று எதிரே ரீவைண்டிங் கடை வைத்திருக்கும் சண்முகம் கேட்க "ஒன்னுமில்லப்பா காபி பொடி வாங்க போறேன் தெரு முனைல" என்று கூறி வீட்டு பர பரவென நடந்து செல்கிறாள். "நானூறு கிராம் காபி பொடி கொடுப்பா சீக்ரம்.." என்று கடைக்காரனிடம் கேட்கிறாள் ரமணி. "அம்மா போன வாரம் பாக்கி இருவது ரூபா இருக்கு மா.." என்று காபி பொடியை அள்ளிகொண்டே கூறுகிறான் கடைக்காரன். "பொண்ணு வந்த்ருகா அவள ரயில்ல ஏத்தி விட்டு வந்து மொத்தமா நாப்பது ரூபாவா கொடுத்திடறேன்பா" என்று சொல்லி கொண்டே காபி பொடியை எடுத்துக்கொண்டு வெடு வெடுவென வீட்டிற்கு நடக்கிறாள் ரமணி. "மாமி நில்லுங்கோ.. எதுக்கு இப்பிடி ஓட்றேள்" என்று பின் இருந்து ஒரு குரல் கேட்க ரமணி திரும்பி பார்க்கிறாள். "எப்படிமா இருக்க.. ரொம்ப நாளா ஆளே காணுமே" என்று ரமணி பாட்டு டீச்சர் உஷாவை பார்த்து கேட்கிறாள். உஷா ஆண்டாள் ஸ்கூல் படிக்கும் காலத்தில் அவளுக்கு பத்து வருடம் பாட்டு கற்றுக்கொடுத்தாள். "நா நன்னா இருக்கேன் மாமி.. பொண்ணு ஊர்ல இருந்து வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன்.. என்னோட பையனும் ஆஸ்திரேலியால இருந்து வந்த்ருகான் இன்னிக்கு. சென்ட் பாட்டில் வாங்கிண்டு வந்த்ருகான்.. அப்றமா வந்து வாங்கிகொங்கோ.." என்று கூற, "சரி மா... கண்டிப்பா வரேன்.. பொண்ண அனுப்பி வைக்கணும் அவளுக்கு ரயிலுக்கு டைம் ஆய்டுத்து.. நா அப்றம் பேசறேன் உஷா" என்று கூறி விட்டு ரமணி வீடு திரும்புகிறாள்.

உஷா அவள் பையன் வெளியூரிலிருந்து வந்ததை சொன்னதும் ரமணிக்கு ராகவனின் ஞாபகம் வந்துவிட்டது. வரும் வழி எல்லாம் அவனை நினைத்துக்கொண்டே சலனத்துடன் நடந்து வருகிறாள். அக்ரஹாரத்தின் சொத்தாக ஐம்பது ஐம்பத்தி ஐந்து வயதில் ஒரு ஊமைக் கிழவன் பல காலமாக சுற்றி வருகிறான். வீடு என்று எதுவும் இல்லை என்றாலும் அக்ரஹாரதில் உள்ள அனைத்து வீட்டு திண்ணைகளும் அவனுக்கு சொந்தம். அவனை சேர்ப்பாரும் இல்லை வெறுப்பாரும் எவரும் இல்லை. மௌனத்தையே பேசி பழகிய அவனுக்கு ரமணியின் இடிந்து போன கண்களும் செயலிழந்த நடையும் பல கதைகள் கூறியது.

அம்மா வீட்டிற்க்குள் வருவதைக் கண்டு ஆண்டாள் "அம்மா சீக்கிரம் காபி போட்டு கொடுமா.. ரயிலுக்கு நேரம் ஆய்டுத்து" என்று கூடத்தில் இருந்து கத்துகிறாள். "அஞ்சு நிமிஷத்ல போட்டுட்டு சரவணனுக்கு கால் பண்றேன் ஆட்டோல போங்கோ" என்று கூறுகிறாள் ரமணி. மாபிள்ளைக்கும் பொண்ணுக்கும் காபி போட்டு கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏத்தி விடுகிறாள் ரமணி. "அம்மா போயிட்டு வரேன்.. ஒடம்ப பாத்துக்கோ.. போன விட்டு கால் பண்றேன்.." என்று ஆண்டாள் கூறுகிறாள். "வரேன் மாமி.. பாத்துகொங்கோ ஒடம்ப" என்று சீனிவாசன் ஆண்டாளுக்கு பின்னால் இருந்து எட்டி பார்த்து கூற "பாத்து போங்கோ ரெண்டு பெரும்" என்று ரமணி இருவரையும் வழி அனுப்பி வைக்கிறாள். வழி அனுப்பி வைத்துவிட்டு ஆட்டோ செல்வதையே ஏக்கத்துடன் பார்க்கிறாள் ரமணி. காலையில் வந்துவிட்டு ஒரு நாள் கூட தங்காமல் திரும்புகிறார்களே என்று மன வருத்தத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு உள் கதவை தாழ் போட்டு கொள்கிறாள்.

இரு நாட்கள் கடந்தன, வீட்டை சுற்றி குப்பை சேர்ந்தது. புயல் அடித்தார்போல் குப்பை வெள்ளம் வீட்டின் வெளிப்புறம் அரண் எழுப்பியது. மதியம் சாப்பாட்டிற்காக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ஊமைக் கிழவன் அங்கு குவிந்திருக்கும் குப்பை மேட்டை பேய் அறைந்தாற்போல் பார்க்கிறான். வீட்டின் வாசப்படியில் கூடியிருக்கும் எறும்புக் கூட்டமும் கோலமிடாத வாசலும் அவன் மனத்தைக் கிளறியது. "ரெண்டு நாள் முன்ன கூட மாமியோட பேசின்றுந்தேன்.. ஆத்துக்கு வாங்கோ மாமின்னு வேற கூப்டேன்.. மாமி வரவே இல்ல.. சுப்ரமணியன் மாமா சொன்ன விட்டு தான் எனக்கு விஷயமே தெரிய வந்தது" என்று உஷா ரீவைண்டிங் கடைக்காரரிடம் கூறுகிறாள். வீட்டின் முன் ஜனக்கூட்டம் சுள் எறும்பு படை போல் சேர்ந்தது. ஆண்டாள் வீட்டு வாசல் திண்ணையில் காய்ந்தகண்கள் தோய்ந்து கன்னம் சிவந்து வீட்டின் முன் சேர்ந்திருக்கும் குப்பையை வைத்த கண் விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். "அம்மாவை ஒரு தடவ பாத்துக்கோமா.. ராகவன் வர வரைக்கும் வெயிட் பண்ணறது கஷ்டம்.. வேற வழி இல்ல.. சீனிவாசனும் நானும் சேர்ந்து தான் இந்த முடிவ எடுத்த்ருகோம்" என்கிறார் சுப்ரமணியன்.

பெருகி வரும் வெள்ளத்தை அணை போட்டு தடுத்தார் போல் ஆண்டாளின் கண்கள் வீக்கத்துடன் ரமணியை பார்த்தது. அதிர்ச்சியில் அழுவதை மறந்ததாலோ என்னவோ ரமணியின் கைகளைத் தொட்டு கொண்டே கண்களை மூடிக்கொண்டாள். ரமணியின் உடலை ஊரின் வெளியே வேங்கடாத்ரி மாமாவை தகனம் செய்த மயானத்திற்கு எடுத்து செல்கின்றனர். வீட்டின் வெளியே எடுத்து செல்லும் வரை ஆண்டாள் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. "ஏம்மா.. காலைல இருந்து ஒண்ணுமே சாப்டாம இருக்கியே.. எதாவது சாப்பிடு.. நா இப்போ தான் ஆத்துல தோச மாவு அரைச்சு தோச வாத்ருகேன்.. வந்து சாப்பிடுறியா?" என்று பக்கத்து வீட்டு ஹேமா கூற ஆண்டாளின் கண்களில் இருந்து கண்ணீர் மளமள வென கொட்டியது.

ரமணியின் உடலை எடுத்து செல்லும் திசையில் லேசாக வாடை காற்று வீசியது. வீட்டின் முன் நிரம்பியிருக்கும் குப்பை காற்றின் திசையில் மெதுவாக நகர்ந்து சென்றது. குப்பையைப் போல் இருந்தவள் குப்பையோடு குப்பையாக அடித்து சென்றது போல் ரமணி மாமியின் உடலை எடுத்து சென்றனர்.