ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday, 31 December 2013

போட்டிச் சிறுகதை-55

சிறுகதை-அர்த்த ராத்ரி பிசாசு

ஊரின் வெளிப்புறத்தில் பிரும்மாண்டமாக அமைந்திருந்து வெற்றி வித்யாலயா. அன்று நேர்காணலாதலால் அதிகாலையிலேயே பரபரப்பாய் இருந்தார்கள் பள்ளி ஊழியர்கள். பகலவனையும் சேர்த்து ஐவர் வந்திருந்தனர். அவனைத்தவிர மற்ற நால்வரும் பெண்கள். மூன்று பெண்கள் நம் கதைக்குத் தேவையற்றவர்கள். ஏனெனில் அவர்கள் நேர்காணலில் தேர்வாகவில்லை. இனி தேன்மொழி பற்றிக் காண்போம். பெயர் மட்டுமல்ல, குரலும் தேன் தான். கர்நாடக இசை கற்று கச்சேரி செய்தவள். பெயர்தான் தேன்மொழி. வீட்டில் சுந்தரத் தெலுங்கு. கலாக்ஷேத்ராவில் குச்சுப்புடி கற்றவள். கராத்தேவில் கறுப்புப் பட்டை பெற்றவள். இலேசான மாறுகண். படிப்பில் படுசுட்டி. மற்ற விஷயங்களில் கெட்டி.

“You could have gone to industry” அவளாகவே மௌனத்தை உடைத்தாள்.

“Pardon me”, இது பகலவன். அவளது அழகில் மயங்கியிருந்ததால் மீண்டும் கேட்டான்.

மீண்டும் சொன்னாள் தேன்மொழி.

“போகணும்.” தலையாட்டி மழுப்பலாய்ச் சிரித்தான் பகலவன்.

“நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ். பெங்களூர்ல வேல கெடச்சது. ஆர்த்தடாக்ஸ் பேமிலி. ஆத்துல விடல.” தன்னிலை விளக்கமளித்தாள் தேன்மொழி.

“நான் எம்.எஸ்.சி.கம்ப்யூட்டர் சயின்ஸ்.”, அவள் தலையாட்டும் அழகை ரசித்துக் கொண்டே பகன்றான் பகலவன்.

பதினைந்து நாட்களுக்கெல்லாம் பள்ளி மறுதிறப்பு அடைந்து பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். ஜீனியர் சினியர் அறிமுகங்கள் நடந்தன.

"எம்.எஸ்.சி முடிச்சுட்டு ஏம்பா இந்த வேலைக்கு வந்த?" எல்லாரும் பகலவனைத் திட்டினார்கள்.

"வேற வேலைக்குப் போகணும்." இந்த முறை பகலவன் பேச்சில் உறுதி தெரிந்தது.

வீடு, இன்னபிற சமாச்சாரங்களை வினவிய பிறகு தேன்மொழி, பகல்வனுக்கு ஒரே ஓய்வறை (staff room) அளிக்கப்பட்டது.  எல்லாம் முறையாகக் கற்றவள் தேன்மொழி. எல்லாவற்றையும் கேள்வி ஞானம் மூலம் கற்றவன் பகலவன். இருவர் உலகமும் சுற்றிவந்தது. பேசினார்கள். பாடினார்கள். அளவளாவினார்கள்.

"நீங்க எஸ்.பி.பி மாதிரி வருவீங்க." பகலவன் பாட்டுக் கேட்டுச் சொன்னாள் தேன்மொழி.

"அவரும் மொறையா இசை கத்துக்கல தெரியுமா?" யாருமறியாத செய்தியைச் சொல்வது போல் சொன்னாள்.

"தேங்க்யூ" அனிச்சையாய்ச் சொன்னான் பகலவன்.

"பாரத ஸமுதாயம் வாழ்கவே."

இருவரும் சேர்ந்து ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பாரதியார் பாட்டு குடியரசு நாள் விழாவிற்காகச் சொல்லிக் கொடுத்தார்கள்.

பகலவன் தேன்மொழியிடம் காதல் கொண்டான். காதலை அவளிடம் சொல்லவில்லை. வேலையில் சேர்ந்து மூன்றாவது வாரம் வெற்றி வித்யாலயாவிலிருந்து வேறு பொறியியல் கல்லூரிக்கு வேலைக்குச் சென்றான். செல்லும் போது தேன்மொழியின் கண்களைச் சந்திக்க மனமில்லாமல் அவளிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டான்.

அடுத்தது பொறியியல் கல்லூரி. சூழல் வேறு. காணும் உலகம் வேறு. அவனது படிப்புக்கேற்ற வேலை அது இல்லையென்றாலும், முன்பு பார்த்த வேலையை விட ஒசத்தி. ஆனா ஊதியம் குறைவு. ஏசி அறையில ப்ரோக்ராமர் வேலை.

அவனைக் காணாமல் பள்ளியில் தேடினாள் தேன்மொழி. அவன் ஊர்க்காராளிடம் விசாரித்தாள். பொறியியல் கல்லூரி தேடி ஓடினாள். நெடுநேரம் தேடியலைந்து அவனைக் கண்டாள்.

கல்லூரி விரிவுரையாளர் அறையில் முக்கால் மணி நேரம் பேசினார்கள். கேண்டினில் குளிர்பானம் அருந்தினார்கள். பேச்சுப் பேச்சாயிருந்தாலும் பகலவன் அவள் மனதை நோகடித்தான். அவன் பார்க்கும் வேலை ஒசத்தி என்ற நினைப்பு, மமதை. பொது இடத்தில் அவளது அழகை வெட்கமில்லாமல் மேய்ந்தான்.

"ஆத்துக்கு கண்டிப்பா வரணும்." அவளுக்கு பிடிக்கவில்லையெனினும் சம்பிரதாயத்திற்கு கூறிவைத்தாள்.

காலம் மாறியது.பகல்வன் வேறு வேலையில் பரிமளித்தான். தேன்மொழி தலைநகரில் மென்பொருள் துறையில் வேலைக்குச் சேர்ந்தாள். பகலவன் மின்னஞ்சல் செய்தான். மறுமொழியில்லை.

பகல்வன் தந்தை மாரடைப்பால் இறந்தார். மீண்டும் மின்னஞ்சல் தந்தான் சோகச் செய்தியோடு. இந்த முறை இரண்டு கணினித்திரைகளுக்கு மறுமொழி. ஆறுதல் சொல்லியிருந்தாள். இணையத்தில் அவள் நிறுவன முகவரி அறிந்து வாழ்த்து மடல் அனுப்பினான் மனம் பறிகொடுத்தவன். தொடர்ந்து கைபேசி எண்கள், குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டன.

எனக்கு மழய்ல நனையப் பிடிக்கும். மழலைச் சத்தம் பிடிக்கும். எலுமிச்சைச் சோறு பிடிக்காது. Friendsங்க கூட ஃபோன்ல கடல போடப் பிடிக்கும்.

“நா. சாதாரணமாக தூங்கறதத்துக்கு நைட் மூனு மணி ஆகும். அதுனால வீட்ல ‘அர்த்த ராத்ரி பிசாசு’ ன்னு கூப்பிடுவா.” அலை பேசி அரட்டையில் அடுக்கினாள் அந்த நகர நாயகி.

"ம்..." தவிர எதுவும் சொல்லவில்லை அவன்.

"எனக்குப் புடிச்சதெல்லாம் சொன்னா ஒங்களுக்குப் புடிச்சதெல்லாம் மறந்துடுமா?" ஏமாற்றத்தில் சற்று உரக்கவே பேசினாள்.

"இங்க நா. ஒரு கேரளா பொண்ணக் காதலிக்கிறேன். சிவப்பு நாசி. கரிய விழிகள்." என்று பொய்கள் பெய்தான் பகலவன்.

அது "வாலி" வந்திருந்த நேரம்.    வேற பொண்ணக் காதலிக்கறேன்னு சொன்னா அவ தன் காதலைச் சொல்வாள் என்ற எண்ணம். ஆனால் விளைவு வேறு மாதிரி. அவள் "ம்" கொட்டிக் கதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள்.

நாளாக நாளாக பொய்கள் பழுத்தன. இவனுக்குக் கதை சொல்லி மாளவில்லை. அவளோ கதை கேட்பதோடு சரி.காதலைச் சொல்லவில்லை.

அவளையே முதலில் சொல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணம் இவனுக்கு. மனதுள் பயம் வேறு. இப்போது நல்ல வேலையிலிருக்கிறாள். ஏற்பாளா, இல்லையா தெரியாது. தருணம் பார்த்துக் காத்திருந்தான் பகலவன்.

காதலர் நாள் வந்தது. வாழ்த்து அனுப்பினான். இரவு பதினொன்னறை மணிக்குக் கைபேசி அழைத்தது.

"நா.தேன்மொழி லவ்வர் பேசறேன். யாருங்க ஒங்களுக்கு இந்த அட்ரஸ குடுத்தது?" மென்குரலில் மிரட்டினான் பெயர் தெரியாதவன்.

"நீங்க யாரு"

"அதெல்லாம் ஒங்களுக்குச் சொல்ல வேண்டியதில்ல. நானும் தேன்மொழியும் லவ்வர்ஸ். அவளப் பத்தி ஏ டூ இஸட் எனக்குத் தெரியும். நாங்க என்ன பண்றோம்? என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? என்ன பண்ணப்போறோம்? அதெல்லாம் சொல்ல முடியாது."

“அவங்களே அத சொல்லியிருக்கலாம்ல. நீங்க ஏ சொல்றீங்க?”

"அவ ஒங்க மேல கோவமா இருக்கா. நீங்க அவ friend ங்கறதாலத்தான் மரியாதையாப் பேசறேன். இல்லைன்னா கெட்ட வார்த்தையிலயே திட்டியிருப்பேன்.” மீண்டும் பெயர் தெரியாதவன் பேசினான்.

"அவளக் கூப்டுங்க. நா. பேசறேன்."

தேன்மொழி வந்தாள் கான்பரேன்ஸ் காலில்.

“ஸீ பகல். நா.. ஒன்ன வெறுக்கறேன். இவன் தான் என்னோட லவ்வர்.”

"வாட் ராபிஷ் ஆர் யூ டாக்கிங் தேன்?"

"வாட் ராபிஷ் இன் திஸ்? யு சீட். சன் ஆஃப் எ பிட்ச்... ..." காதுகளால் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாள் தேன்மொழி.

"நீங்க என்ன வேண்ணா பண்ணிக்கங்க." பெயர் தெரியாதவன் மீண்டும் பேசினான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பிறகு பகலவன் ஓலைச்சுவடி ஜோதிடரை அணுகினான். அவர் சொன்ன பரிகாரங்களைச் செய்தான் தன்னைத் திட்டியவள் கிடைப்பதற்காக. மேலும் யாகம் செய்தான் பெயர் தெரியாதவன் பிரிந்து போக.

"ஒரு வர்ஷத்துக்கு முருகன் கோவில் போனா அந்த்ப் பொண்ணு ஒங்களத் தேடி வருவா சார்." உறுதியளித்தது ஓலைச்சுவடி ஜோதிடம்.

"நான் ஒன்ன ஏமாத்தினத்துக்கு என்ன மன்னிச்சுக்கோ தேனு." என்று அவளுக்குக் கடிதம் போட்டான். அவள் பேரிலும், தன் பேரிலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகன் கோவிலில் அர்ச்சனைச் செய்யத் தொடங்கினான் பகலவன்.

கடிதம் கண்ட தேன்மொழியும், பெயர் தெரியாதவனும் சிரித்தார்கள்.


என்ன செய்தும் தேன்மொழி வரப்போவதில்லை என்பதறியாத பகலவன் அர்ச்சனை செய்து கொண்டேயிருந்தான் அந்த அர்த்த ராத்ரி பிசாசுக்காக.

Monday, 30 December 2013

போட்டிச்சிறுகதை-54

சிறுகதை-ஒரு மாலை வேளையில்!!


அது சோவென மழை பொழிந்து கொண்டிருந்த மாலை நேரம், ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்ப இருந்து, ஏழு மணிக்கு மின்னஞ்சல் தயார் செய்து, அதை மேலதிகாரி பார்த்து சில திருத்தங்கள் சொல்ல, அனைத்தும் முடிகையில் மணி எட்டை ஆசையாக தழுவி இருந்தது, தினசரி கிளம்பும் நேரத்தை விட அரை மணி நேரம் தாமதமாக.

வழக்கமாக சாலை விதிகளையும், போக்குவரத்து வரைமுறைகளையும் கண்ணென பேணி காக்கும் குமரன் அன்று ஆறறிவில்லா சிக்னலிடம் கடிந்து கொண்டான்.பச்சை விளக்கு கொடுத்த பிறகும் சாலையை கடந்து கொண்டிருந்த நடுத்தர வயது நபரை இறைந்தவாறு தன் இருசக்கர வாகனத்தை முறுக்கினான்.

அவன் பேருரை அடையும் போது மணி 8.30-ஐ நெருங்கிவிட்டது, கடைகள் அடைக்கும் நேரம் அது. உணவகங்களில் மக்கள் உணவை ருசிக்கும் நேரம் பேருந்து நிறுத்தங்களில் காதலர்கள் அன்றைய தினத்தின் பிரிவை, கலியுகம் முடிந்து பிறக்கும் மறுயுகம் போல அல்லவா இருக்கும் இந்த இரவின் இடைவெளி என ஏங்கி பிரியும் நேரம், பணக்கார தாத்தாக்கள் தனது பேத்திக்கும் அவள் தோழிக்கும் உயர் ரக மிட்டாய்  வாங்கி , அந்த கழுதைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போலேனா, வீட்டுக்கு போனதும், தாத்தா எதுவும் வாங்கிட்டு வரலேன்னு மூஞ்ச தூக்கி வச்சிக்கும் என தனக்கு தானே பேசி, வாங்க வந்த மாத்திரையை மறந்தாலும், பேத்திக்கு பிடித்த மிட்டாயை வாங்க மறவாத நேரம். அதே நேரத்தில் இடம் இருந்து வலம் வந்தால், என்னடா இவனுக இன்னைக்கு பாத்து இத்தன பேரு வந்துகிட்டு இருக்கானுக என உணவகங்களில் வேலை பார்க்கும் வேலைக்கார சிறுவர்கள் சலிக்கும் நேரம், இவனுக தொல்ல தாங்க முடியல என பேருந்து நிறுத்த காதல் ஜோடியை பேருந்து கண்காணிப்பாளர் கடிந்து கொள்ளும் நேரம், ஏழை தகப்பனார்கள் தன் மகள் ஆசையாய் கேட்ட கிரீம் பிஸ்கட் வாங்க முடியாமல், 2 ரூபாய் பிஸ்கட்-ஐ வாங்கி சோகம் நெஞ்சை அடைக்க பையில் பிஸ்கட்-ஐ அடைத்து வீடு திரும்பும் நேரம்.

அத்தகைய நேரத்தில் தான் குமரன் துணி கடையில் நுழைந்தான். வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவரும் அன்றைய கூலி வாங்கி கிளம்ப, மாரியம்மாவும் துணிகளை அடுக்கி விட்டு கிளம்ப தயாரானாள்.

     இந்தா முருகா???!! – என்ன அண்ணாச்சி??  - முருகன்
கடைக்கு கஸ்டமர் வந்திருக்காரு குழந்தைங்க செக்சென காட்டு - முதலாளி.

வந்துட்டானுக கடை அடைக்குற நேரத்துல என மனதில் கடிந்து கொண்டே  குமரனை கூட்டி போனார் முருகன்.
இந்தா மாரி சார்-க்கு பொம்பள பிள்ளைங்க துணிகளை எடுத்து காட்டு, சார் பில் கீழ. சார் கடை அடைக்குற நேரம் கொஞ்சம் சீக்கிரம் பாருங்க  - முருகன்.
குழந்தைக்கு என்ன வயசு சார்  - மாரியம்மாள்,
2 வயசுகா  - குமரன்
எந்த மாதிரி பார்க்குறிங்க? வெஸ்டனா இல்லா காட்டன் மாதிரி பார்க்குறிங்களா? – மாரியம்மாள்
இரண்டும் காட்டுங்க-கா.நல்லா மார்டனாவே எடுத்து காட்டுங்ககுமரன்
      
மாரியம்மாள் மார்டனில் ஆரம்பித்து காட்டனில் முடித்தாள். அது வரை மூன்று துணி எடுத்து வைத்து எதை எடுக்கலாம் என குழம்பியிருந்த குமரன் அவளிடமே, அக்கா இந்த மூனுல எதுக்கா நல்லா இருக்கும்? நான் இதுக்கு முன்னாடி அதிகமா குழந்தைகளுக்கு துணி எடுத்ததில்ல, என தன் அறியாமையை விளக்கி மாரியம்மாளின் உதவியை நாடினான். அவளும் தன் பதினான்கு ஆண்டுகள் அனுபவங்களில் இருந்து, இதை எடுத்துக்கங்க தம்பி இது தான் குழந்தைங்க போட்டுகிறதுக்கு நல்லா இருக்கும் என கூறி அவன் தேர்ந்தெடுத்து வைத்ததில் இருந்து காட்டன் மிடி-ஐ காட்ட, அளவு சரியா இருக்குமா அக்கானு இரண்டு,மூன்று முறை கேட்டும் திருப்தி அடையாமல், அதற்கு அடுத்த அளவையும் பார்த்து, இறுதியாக முதலில் எடுத்ததே சரியென திருப்தியானான்.

என் அக்கா பொண்ணுக்கு இன்னைக்கு பிறந்த நாள்-கா 6 மணிலே இருந்து எனக்காக காத்துகிட்டு இருப்பா,நான் இன்னும் வீட்டுக்கு போகல.அவளை எப்பிடி சமாளிக்கப் போரேன்னு தெரியல. துணி செலக்ட் பண்ணி கொடுத்ததுக்கு ரொம்ப தங்கஸ் அக்கா என்று கூறி விட்டு குமரன் பில் போட கீழே விரைந்தான்.

ஏற்கனவே சோகத்தில் இருந்த மாரியம்மாள் அழுது குமிறினாள் 3 வருடங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் பரிகொடுத்த தன் பெண் குழந்தையை எண்ணி

மாரி  மாரி     -  முதலாளி.
கீழிருந்து சத்தம் கொடுத்தார் முதலாளி கடையை அடைத்து விட்டு வீடு செல்ல.
இதோ வந்துட்டேன் அண்ணாச்சிமாரியம்மாள்

கண்ணீரைத் துடைத்து விட்டு கீழிறங்கினாள் மாரியம்மாள், நாளைய பொழுதின் சவால்களை எதிர் நோக்கி!!

போட்டிச் சிறுகதை-53


சிறுகதை-ரிஜிஸ்டர் நம்பர்


"நான் போயிட்டு வரேன் மா..." எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய்.

"ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு  எல்லாம் எடுத்துகிட்டியா ???" - அவன் அம்மா.

"ஆங்... "

" சரி. பத்திரமா போயிட்டு வா.."

கிளம்பும் முன் பாண்ட் உள் பக்கெட்டில், வீட்டில் டப்பாவிலிருந்து 'சுட்ட' நூறு ரூபாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டான். மனதில் நமுட்டு சிரிப்புடன், சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

"ஒன்பதரைக்கு ஒரு ஷோ ; அதைவிட்டா ஒரு மணிக்கு ஷோ.. அம்பதும், முப்பதும் ஒரு எண்பது.. அது ஒரு தொண்ணூறு, நூத்திஇருபது ... ஹ்ம்ம்.... இது போதும்", என மனதில் கணக்கு போட்டப்படியே  சென்றுகொண்டிருந்தான்.

சைக்கிளை மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள 'கல்யாண் சைக்கில் ஸ்டாண்டில்' போட்டு விட்டு, ஸ்டேஷன் உள்ள சென்று ரயில் ஏறினான்.

மீனம்பாக்கத்தில் ரயிலேறி தாம்பரத்தில் இறங்கி, 'ரோஜா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' எதிரே அவனுடைய கல்லூரி பேருந்தில் தினசரி எட்டு மணிக்கு ஏறி கல்லூரி செல்வது அவன் வழக்கம்.

ஆனால் இன்று,  தினசரி அட்டவணையிலிருந்து சிறு மாற்றம். இன்று  காலேஜுக்கு போக அவனுக்கு மனசில்லை. 'கட்' அடித்துவிட்டு, தாம்பரம் எம்.ஆர். தியேட்டரில் "விருமாண்டி" படம்  பார்த்து விட்டு, மதியம் சாப்பாட்டுக்கு அங்கேயே பன்னோ, பப்ஃபோ எதோ ஒன்று தின்றுவிட்டு, அப்படியே ரயில் ஏறி தாம்பரம்- மவுண்ட் வரை மாறி மாறி போயிட்டு வந்து டயம் பாஸ் செய்துவிட்டு, வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடலாம் என திட்டம் திட்டி இருந்தான். இது அவனுக்கு புதுசு தான். இருந்தாலும், ஒரு சேஞ்சுக்கு முதல் தடவையாக காலேஜ் கட் அடித்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடியது.

ரயில்  பல்லாவரத்தை அடந்த போது, எதோ யோசித்தவனாய், திடீரென  பிளாட் பாரத்தில் இறங்கி ஒரு ஓரமாக பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான்.

"மணி ஏழே முக்கால் தான் ஆகுது.. இன்னும் நெறைய டைம் இருக்கு. கொஞ்சம் கழிச்சி போகலாம் ." என எண்ணி கொஞ்ச நேரம் ரயில்வே பெஞ்சை தேய்த்தான்.

"இனிமே யாரவது லீவு போடணும்னா, முன்னாடியே ஆபிஸ் ரூம்ல பாலு சாருக்கு போன் பண்ணி சொல்லிடனும். இல்லேன்னா முப்பது ரூபாய் பைன். கம்பல்சரி!" - போன வாரம் வகுப்பில் வந்த சர்குலர் அவனுக்கு தீடீரென ஞாபகம் வந்தது.

முக்கால் மணி நேரம் கழித்து எதோ யோசித்தவனாய், ரயிலேறி தாம்பரதிற்கு கிளம்பி  சென்றான். தாம்பரம் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு பி.சி.ஓ -வில், ஐ.டி கார்டு பார்த்து காலேஜ் அட்மினுக்கு டயல் செய்ததான்.

" ஹலோ! பாலு சாரா ! என்னோடைய பையன் பேரு விஜய் ஆனந்த். அவனுக்கு உடம்பு சரியில்லை. அதனால இன்னக்கி காலேஜ் வர மட்டான் சார்."

"நீங்க யார் பேசுறது???"

"நான் விஜயோட பாஃதர் பேசுறேன்  சார்."

"ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த டிபார்ட்மெண்ட் ? "

"ஐ.டி. செகண்ட் இயர் சார்."

"எந்த செக்ஷன்? "

"..அஅஅ...து  தெரியலையே.."

"ஏங்க ! உங்க பையன் எந்த செக்ஷன் கூடவா தெரியாம இருப்பீங்க ??? "

"வந்து.. அ..அவன்.. ஐ.டி. 'பி' செக்ஷன் சார்.."

"ம்ம்ம்.. உங்க பையன் ரிஜிஸ்டர்  நம்பர் சொல்லுங்க.."

"4...1...9...0...3...2...0...5...0...7..4.. "

"5...0.... ????? "

"....5074 சார்."

"ம்க்கும்...  எந்த பாரான்ட்சு-க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் இவ்வளவு மனப்பாடமாக தெரியும்..?"

"என்னது சார்.?!?!? "

"ம்ம்ம்....சொல்லுங்க..."

" ........................................  "

"நீங்க யார்பேசுறதுனு சொன்னீங்க ??? "

"விஜய்....... பாஃதர் சார்....."

"சொல்லுங்க சார் ... எந்த பாரான்ட்சு-க்கு சார் பையனோட ரிஜிஸ்டர் நம்பர் மனப்பாடமாக தெரியும் ?"

"ஆங்... போன் பண்ணா, என் ரிஜிஸ்டர் நம்பர் கேப்பாங்கனு என் பையன் சொன்னான் சார்..."

"பொய் சொல்லாதீங்க.. நீங்க ஸ்டுடெண்ட் தான் பேசுறீங்கன்னு நல்லா தெரியுது."

"இல்ல சார்.. அது வந்து......"

"ஒண்ணும் சொல்ல வேணாம். நீங்க நாளைக்கு காலேஜ் வாங்க. பார்த்துக்குறேன்..."

போன் துண்டிக்கப்பட்டது. யாரோ அவனை பளார்... பளார்... என செவிட்டில் அறைவது போல இருந்தது.


தலையில் அடித்து கொண்டு, செய்வதறியாது ஒரு பத்து  நிமிஷம் பி.சி.ஓ வாசலிலே நின்றான். இப்போது அவன் சினிமாவுக்கு போவதில் எண்ணம் செல்லவில்லை. வேறு வழியின்றி வீட்டுக்கு போக முடிவு எடுத்து, மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். 

போட்டிச் சிறுகதை-52

சிறுகதை-வினாயகமணாளினியின் பெருங்கதை


சில சம்பவங்களில் சந்தித்தவர்களை மறக்க இயலாது. அதற்கு காரணமே இல்லாமல் கூட இருக்கலாம். இப்படி ஒரு மதிய வேளையில் திருச்செந்தூர் நீதிமன்ற வாசலில் பார்த்த அந்த சம்பவமும் அறிமுகமான நபர்களும் நினைவில் இன்னமும் இரத்தம் வரக் கீறுகிறார்கள்.

நான் கிளைக் கருவூலத்தில் பணம் கட்டி பத்திரம் வாங்க வந்திருந்தேன். பத்திரம் விற்பதுதான் என் தொழில். ஸ்டேட் பாங்கில் பணம் கட்டிவிட்டு சாயங்காலம் பத்திர டெலிவரிக்காகக் காத்திருந்தேன். அங்கே வினாயகமணாளினி என்ற கணக்கர் எனக்கு நன்கு பரிச்சயம். என்னைப் போன்ற விபரம் பற்றாக்குறையான கஸ்டமர்களுக்கு விழுந்து விழுந்து உதவுவாள். அவள் இல்லையென்றால் முருகன் சந்நிதிக்கு அருகிலே இருக்கும் அந்த பிராஞ்சுக்கு என்னைப் போன்ற பலர் வருவதைத் தவிர்ப்பார்கள். அப்படி ஒரு பாங்கு.

பிரதிபலன் பார்க்காமல் உதவுபவர்கள் கூட சொந்தப் பிரச்சினைகளின் முன்னிட்டு சில நாட்களில் எரிந்து விழுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வினாயகமணாளினியை ஒரு நாள் கூட முகத்தில் கடினத்துடன் நான் கண்டதில்லை.

இப்படி காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் எனது பொழுதுபோக்கு நீதிமன்ற வாசல்தான். அருகிலேயே தாசில்தார் அலுவலகமும் உள்ளதால், விதவிதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். சில நேரங்களில் பொய் சாட்சி சொல்லி நூறு இருநூறு என்று மதிய உணவை தேத்தியிருக்கிறேன்.

அன்றும் அப்படித்தான் வேடிக்கை பார்க்கப் போய் அவர்களில் கரைந்தேன்.

*****

ராஜபாண்டி நாடரை அந்த ஊரே கொண்டாடும். ஊரில் உள்ள எல்லோருக்கும் தேவையான மளிகைச் சாமான்களை விற்பது மட்டுமில்லாமல், அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் பாதி ஆயுளைக் கடந்து விட்டிருந்தவர்களுக்கு வடிகாலாய் இருப்பதும் அவர் கடை முன்னால் போட்டிருக்கும் பந்தலும் பெஞ்சுகளும்தான். ஊர் புரளி பேசுபவர்களையும் தேசப்பற்றோடு அரசியலை அலசுபவர்களையும் அவர் அன்பாக அரவணைத்துக் கொள்வார். காலையும் மாலையும் அவர் மனைவி சிவந்திகனி போட்டுக் கொடுக்கும் இஞ்சி மணக்கும் டீக்காகவும் சிலர் கூடுவதுண்டு அங்கே. அவர் வீடு கடைக்குப் பின்புறம் இருந்தது. காக்கா கூட்டில் குயில் முட்டையிடுவது போல்தான் அவர் வீட்டில் திருவிழா தினந்தோறும் நடக்கும்.

சுப்பையா பிள்ளை வாத்தியாருக்கு மட்டும் அவர் கடைக்கு உள்ளே கல்லாவிற்கு அருகில் சேர் போட்டுக் கொடுப்பார். அவருக்குப் படித்தவர்களைக் கண்டால் அவ்வளவு பிரியம். வீட்டில் முத்தவனாகப் பிறந்து அப்பாவிற்கு துணையாக தொழிலில் இறங்கிவிட்டதால் படிப்பதற்கு பிராப்தி இல்லாமல் போய் விட்டது. அவரது தம்பிகளான முருகபாண்டியும் கணேசபாண்டியும் கூட அப்பாவின் கண்டிப்புக்குப் பயந்து படிக்காமல் கம்பி நீட்டியவர்கள் சென்னையில் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். படிப்பு தன் குடும்பத்திற்கே எட்டாக் கனியானதால், அவருக்கு வாத்தியார் மேல் ஏற்பட்ட அந்த மதிப்பு கலந்த பிரியம் நாளாவட்டத்தில் பாசமாக பக்குவப்பட்டிருந்தது. வாத்தியார் கடையை மூடு என்றால் மூடி விடுவார். ஏன் என்று கூட கேட்க மாட்டார்.

சுப்பையா பிள்ளைக்கு ஊர் சுற்றுவது நிரம்பப் பிடிக்கும். நீள விடுமுறை கிடைத்தால் போதும் குடும்பத்தோடு கொடைக்கானல் ஊட்டி என்று எங்காவது சுற்றுலா சென்று விடுவார். ராஜபாண்டிக்கு ஞாயிறு கூட ஒய்வு இல்லை. கடைக்கு ஷட்டர் போடும் போதுதான் விசாலாட்சியோ மதியழகியோ "அண்ணாச்சி...." என்று ஓலமிட்டு ஓடிவருவார்கள். பிறகு எப்படி ஓய்வது.

அன்று சுப்பையாபிள்ளை அரக்கப் பறக்க ஓடி வந்தார். "ராஜபாண்டி உடனே புறப்படு...இன்னிக்கு ராத்திரி ராமேஸ்வரம் போறோம் நியும் வர்ற..."

"ஐயா...." ராஜபாண்டி தலையை சொறிந்தான். "நீங்க எப்படியும் இரண்டு மூனு நாள் சுத்திட்டு வருவீங்க எனக்கு வியாபாரம் கெட்டுப் போகும்..."

"அதெல்லாம் ஒன்னும் ஆவாது... சிவந்திகிட்ட என் பொஞ்சாதி பேசிட்டா... உன்ன மாதிரியே அவளையும் ஏம்பா இந்த ஊருக்குள்ளேயே அடைச்சி வச்சிருக்கே...அவளுக்கும் நாலு ஊர கண்ணுக்குக் குளிச்சியா காட்டுப்பா..."

"பாப்பா..."

"ஒன்னும் பிரச்சினையில்லை வண்டியிலேயே தொட்டில் கட்டிக்கலாம்..."

அதற்கு மேல் ராஜபாண்டியை பேச விடவில்லை வாத்தியார்.

*****

குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வருபவரின் கண்களைப் போல சிவந்து சூரியன் கடல் மட்டத்திற்கு மேல் எழும்புவதை ராஜபாண்டியும் சுப்பையாபிள்ளையும் ஒரு கவிதையைப் போல ரசித்துக் கொண்டிருந்தனர்.

கடலுக்குள் இறங்கி குளித்து பல ஆண்டுகள் இருக்கும். சிறு வயதில் மணப்பாடு கடலில் பயந்து பயந்து நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்ததை நினைத்துக் கொண்டார் ராஜபாண்டி. இங்கே ஆண் பெண் சிறுவர் பெரியவர் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கடலில் மீன் போல துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது பார்க்க இனித்தது.

"நாமும் இங்கேயே குளித்தால் என்ன?" ராஜபாண்டி சந்தேகமாய் வினவினார்.

"ஓய் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தது ரூம்ல குளிக்கவா? நல்லா கேக்குறியே? துண்ட கட்டிகிட்டு இறங்கிட வேண்டியதுதான். அம்மா ராசாத்தி நீனும் சிவந்தியோட தயாராயிட்டு வா" சுப்பையாபிள்ளை எல்லோரையும் உசிப்பினார்.

"பாப்பா...?"

"அவள  முதல்ல நான் பாத்துக்கிறேன்...நீங்க குளிச்சிட்டு வந்ததும் நான் குளிக்க போறேன்..."

"வேண்டாம்... டிரைவர் தம்பி பாத்துக்குவார்... அவ வண்டிலதான் தொட்டில்ல தூங்குறா..."

"தம்பி பிள்ளைய பாத்துக்குங்க... முழிச்சா சத்தம் கொடுங்க..."

பெண்களுக்கு சிறிது சங்கோஜம் இருந்தாலும் கூட்டத்தில் எல்லாம் துளிர்ந்து போயிற்று.

ராஜபாண்டியும் சிவந்தியும் கையைக் கோர்த்துக் கொண்டு தண்ணீரோடு போகவும் வரவுமாக ஊஞ்சல் போல மிதந்து விளையாடினர். சுப்பையாபிள்ளைக்கு ராஜபாண்டியின் ஆனந்தத்தைப் பார்க்க சுவராஸ்யமாக இருந்தது.

"ராசாத்தி, பாத்தியா... இந்த பசங்க பிசினஸ் பிசினஸ்னு வாழ்க்கையை மறந்துடுரானுக... இனிமே நாம எங்கப் போனாலும் வருவேன்னு அடம் பிடிப்பான் பாரு..."

"எனக்கு சிவந்திய பாக்கத்தான் பிரமிப்பா இருக்கு... குழந்தை மாதிரி அவ துள்ளுறத பாருங்க..."

"ஓய் உள்ள தள்ளி போகாதிங்க... கிணற்று நீச்சல் கடலுக்குப் புரியாது..."

ஓங்காரமாய் ஒலிக்கும் அலையின் பேரிரைச்சல்களும் மனிதர்களின் சந்தோஷ சம்பாசனைகளும் சங்கமித்து ஒரே அலைவரிசையானது.

*****

தலை துவட்டி, வேட்டியை கட்டிக் கொண்டு சூரியனைப் பார்த்து தலையில் போட்டுக் கொண்டார் சுப்பையாபிள்ளை. "பகவானே இன்னைக்கு முழுதும் உன் அனுக்கிரகம் வேணும்..."

"இந்த வருசமாவது எங்களுக்கு ஒரு பிள்ளைய தாப்பா..." ராசாத்தி முனகிக் கொண்டே அவர் அருகில் வந்தாள்.

"என்னங்க சிவந்திக்கும் அவ புருசனுக்கும் கடலவிட்டு வெளிய வர விருப்பம் இல்ல போல..."

பிறகு தேடி தேடி எங்கும் கிடைக்காமல்... ராஜபாண்டியும் சிவந்தியும் வெவ்வேறு திசைகளில் சடலமாக ஒதுங்கினர்.

சுப்பையா பிள்ளைக்கு அடித்து துவைத்து உலர்த்தியது போல் இருந்தது. இதற்காகத்தானா வலுக்கட்டாயமாக ராஜபாண்டியை இழுத்து வந்தோம்.

பிறகு என்ன என்னவோ நடந்து முடிந்து விட்டது. ராஜபாண்டியின் சகோதரர்கள் அவரது பூர்விக சொத்தை பங்கு போட காட்டிய ஆர்வத்தை பாப்பாவின் மீது காட்டவில்லை. ஊரில் யாரிடமோ தூரத்து சொந்தத்திடமோ  பாப்பாவை விட்டுவிடவும் சுப்பையாபிள்ளைக்கு மனசு ஒப்பவில்லை. ராசாத்தியும் பாப்பாவைத் தன் பிள்ளையாகவே வளர்க்கத் தயாரானாள்.

ஒருவருடத்திற்குப் பிறகு காந்தி என்றொரு பையனும் அவர்களுக்குப் பிறந்தான்.

*****

காந்தி இப்படி எடுத்தெறிந்து பேசுவான் என்று சுப்பையாபிள்ளை எதிர் பார்க்கவில்லை. வினாயகமணாளினியை காந்திக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் வேண்டாம் என்பதற்கு அவன் சொன்ன சாக்குப் போக்குகள் தான் சகிக்கவில்லை. முதலில் "முன்று வயது அதிகம்" என்றான், பிறகு "தங்கை போல் பழகியிருக்கிறேன்" என்றான்.

எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்ற சுப்பையாபிள்ளையின் நம்பிக்கையை உடைத்தான் மூன்றாம் நாளில். மாலையும் கழுத்துமாய் அவன் அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்டெனோவுடன் வந்து ஆசிர்வதிக்க வேண்டினான். சுப்பையாபிள்ளை பேசவில்லை. வாசலை நோக்கி கையைக் காட்டினார். அவருக்கு கோபம் வந்தால் பேச மாட்டார். அவர் உணர்ச்சியை புரிந்து நடந்து கொண்டால் தப்பிக்கலாம்.

வினாயகமணாளினிதான் விக்கித்துப் போனாள். விபரம் தெரிந்தது முதல் காந்தி அவளுக்கு கணவனாகத் தான் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறான் சுப்பையாபிள்ளையால். இது அவரின் தவறானாலும், சுப்பையாபிள்ளைக்கு இது கடனாகத்தான் பட்டது. இந்தக் கடன் வட்டி போட்டுத்தான் வளரும் போல.

*****

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர்களை அறிந்த பலரும் பச்சாதாபமாய் பார்த்தது எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது. நானும் கூட்டத்தை விலக்கிவிட்டு எட்டிப் பார்த்தேன்.

அவருக்கு ஓய்வுபெற்று ஒன்றிரண்டு வருடங்கள் இருக்கும் என்று மதிக்கத் தோன்றும் வயது. நான்கைந்து மிதிபட்ட பஞ்சுப் பொதியைப் போல துவண்டு கிடந்த ஒரு வாலிபனை வீல்சேரில் வைத்து தள்ளி வந்தார். வயதானவர்தான் சுப்பையாபிள்ளை என்றும் வாலிபன்தான் காந்தி என்றும் பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஒரு விபத்தில் காந்தி இரண்டு கால்களையும் இழந்திருந்தான். முகமும் அசிட் ஊற்றியது போல கோரமாகியிருந்தது.

திருமணமான ஒரே மாதத்தில் இப்படி ஆகிவிட்டதால் காதலித்து மணந்து கொண்டவள் விடுதலை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறாள். சட்டமும் காந்தியும் சம்மதித்து விட்டனர் அதற்கு.

ஒரு படி வீல்சேரை கீழே இறக்க வேண்டும். யாரோ ஒரு பெண் குனிந்து ஒரு கை கொடுத்து வீல்சேரோடு காந்தியையும் தரைக்கு இறக்கினாள்.

"மாமா கவலைப் படாதீங்க அண்ணன இனி நான் பாத்துக்கிறேன்..." சுப்பையாபிள்ளையை விலக்கிவிட்டு வீல்சேரை அவள் தள்ள தொடங்கினாள்.

நன்கு உற்று பார்த்தேன். அட அவள் எனக்குத் தெரிந்தவள் தான். அது விநாயகமணவாளினி.

******