ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday, 27 November 2013

போட்டிச்சிறுகதை-4

சிறுகதை-ரஜினிசம்



நாள்: 30-செப்-2010

காலை எழுந்தவுடன் ஒரு மகிழ்ச்சி. இது போன்ற ஒரு மகிழ்ச்சி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும். எங்கள் இதய அரியணையின் முதலமைச்சர் ரஜினிகாந்த் நடிக்கும் “எந்திரன்” திரைப்படம் நாளை வெளியாகிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. டிக்கெட் முன்பதிவு எல்லாம் முடிந்து விட்டது. நாளைப் படத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும் முடிவு செய்து விட்டோம்.

ஆனால் இதய ஓரத்தில் ஒரு பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. ஒருவேளை நாளை படம் ரிலீஸ் ஆகாமல் போய்விட்டால்? இந்த விபரீத சிந்தனை நேற்று இரவு அந்த செய்தியைக் கேட்டதில் இருந்து வந்தது. இன்று மதியம் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துகளுக்கு சொந்தமா? அல்லது இஸ்லாமியர்களுக்கு சொந்தமா? என்று தீர்ப்பு வழங்கப்படும் செய்திதான் அது.

கலவரம் நடக்குமா? என்ற சிந்தனையை விட படம் ரிலீஸ் ஆகுமா? என்ற சிந்தனை மேலோங்கி இருந்தது. இதற்க்கு நீங்கள் என்னை கேவலமாக நினைத்தால் ஒரு முறை உங்களைப் பற்றியும் சிந்தித்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் வாழ தமிழ்நாட்டில் வழி இல்லை என்றால் அவர்களுக்கு ஒரு ருபாய் கூட நாம் தர முன் வரமாட்டோம். அனால் இதுவே ஒரு நடிகருக்கு தமிழ்நாட்டில் வாழ வழி இல்லை என்றால் சொத்தைக் கூட தர முன் வருவோம். அந்த வழியில் வந்த நான் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்று எண்ணுவதில் எந்த தவறும் இல்லை.

ரஜினி படம் ரிலீஸ் ஆவதற்கு மட்டும் பிரச்சினைகள் வருவதில்லை.ரஜினி ரசிகனாய் இருப்பதற்கே நிறைய பிரச்சினைகள் உண்டு. டிவியில் ரஜினி படம் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் “டேய்! சும்மா பைத்தியகாரன் மாதிரி கை, கால் ஆட்டிட்டு இருக்கான்.இதை போய் பார்க்கிறியேடா? என்று அப்பா கேட்பார்.
“இன்னைக்கு தேதில நாட்டுல இருக்கிற நல்லவங்க எல்லாரும் பைத்தியகாரங்கதான்பா! என்றேன்.

“இவன் தேரமாடான்” என்று கூறிவிட்டு அப்பா சென்று விட்டார். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அப்பா சினிமா தியேட்டரில் போய் பார்க்கும் படம் ரஜினியின் படம் மட்டும் தான். அது ஏன் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை.

கண்டிப்பாக நமக்கு நெருங்கிய நண்பன் கமல் ரசிகனாய் இருந்துகொண்டு உலக படத்தைப் பற்றி பேசுவான். ரஜினி படம் ஹாலிவுட் படம் போல் இல்லை என்பான். போடா! அவர் ஹாலிவுட் படத்திலேயே நடித்துவிட்டார் என்பேன் நான்.

“ரஜினி தமிழ்நாடு இல்லை” என்று கூறுவான் இன்னொருவன். தமிழ்ப் பெண்ணை மனம் முடிந்து, தன் மகள்கள் இருவரையும் தமிழர்களுக்குக் கட்டி வைத்து சென்னையில் வாழும் அவர், இந்த மண்ணின் மைந்தன் என்று நான் கூறுவேன்.

ரஜினி ஒரு குழப்பவாதி. அவர் அரசியலுக்கு வருவேன், வர மாட்டேன் என்று கூறி மக்களைக் குழப்புகிறார் என்பான் எப்பொழுதும் டாஸ்மாக்கில் இருக்கும் தெளிவான என் நண்பன். இந்திய துணைக்கண்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் அரசியலில் ஈடுபட்டு ரசிகர்கள் ஆதரவை இழந்து நிற்கும் நடிகர்களை சுட்டிக்காட்டி அவர் எவ்வளவு தெளிவான முடிவு எடுத்து இருக்கிறார் என்பதைக் கூறுவேன். உண்மையான ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலிற்கு வருவதை விட வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பதைத்தான் விரும்புவார்கள் என்று பதில் அளிப்பேன்.

இப்படி நிறைய பேர் எழுப்பும் அர்த்தம் இல்லாத கேள்விகளுக்கு பதில் அளித்து அளித்து ஒரு முடிவு எடுத்தேன். கல்யாணம் பண்ணா ஒரு ரஜினி ரசிகையைத்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று. இதை என் அம்மாவிடம் கூறினேன். அவர் என்ன கூறி இருப்பார் என்று இங்கு எழுதுவது நாகரிகமாக இருக்காது. நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

தலைமுடி ரஜினிமாதிரி சீவுவதைப் பார்த்து “இவன் எப்பொழுதும் ரஜினியைப் பின்பற்றுகிறான். இவன் எப்படி உருப்படப் போறான்” என்பார் அம்மா.

என்னது? ரஜினியை நான் பின்பற்றுகிறேனா? அவரிடம் உள்ள நற்பண்புகளில் பத்து சதவீதம் என்னிடம் இருந்திருந்தால் கூட நான் எப்படி இருந்திருப்பேன்?

ரசிகர்களை அடித்தார்கள் என்பதற்காக ஒரு அரசியல் கட்சியை எதிர்த்து அறிக்கை விட்டார். அதே அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு திருமண பத்திரிக்கை தரும் அளவிற்கு நடந்து கொண்டார்.அவருடன் இருந்த பகைமையை மறந்து “மறப்போம், மன்னிப்போம்” என்று அண்ணா கூறியதுபோல் நடந்து கொண்டார். அனால் இன்றுவரை என்னால் அந்த அரசியல் கட்சிக்கு ஓட்டுப் போட முடியவில்லை. அதேபோல் சில நடிகர்கள், இயக்குனர்கள் ரஜினிக்கு எதிராக பேசினார்கள். அவர்களது படத்தை இன்று வரை நான் பார்ப்பதில்லை. ஆனால் அவர்களை ஏற்கனெவே கட்டி அனைத்துவிட்டார் ரஜினி.

இவ்வளவு ஏன் ரஜினி இன்றுவரை தன் நெருங்கிய நண்பராக நினைக்கும் கமல்ஹாசன் தான் ரஜினி ரசிகனைப் பொறுத்தவரை அவருக்கு எதிரி. குடும்பம்தான் முதலில்,சினிமா எல்லாம் அதற்கு பிறகு தான் என்று அவரே பலமுறை கூறி உள்ளார்.

அவரிடம் உள்ள எளிமை, உண்மை, உழைப்பு இதில் ஒன்றை நான் பின்பற்றி இருந்தால் கூட எங்கோ போய் இருப்பேன்.

ஆனால் என் அம்மா நான் ரஜினி மாதிரி முடி வாருவதைப் பார்த்து அவரை பின்பற்றுகிறேன் என்கிறார். அவரை சொல்லி குற்றம் இல்லை. நம் சமூகம் அவருக்கு சொல்லி கொடுத்தது அவ்வளவுதான்.

சரி நாம் ரிலீஸ் பிரச்சனைக்கு வருவோம். காலையில் நான் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனத்திற்கு சென்றதும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்கள்.அலுவலகம் மதியம் விடுமுறை என்றார்கள். கலவரம் நடக்கும் என்று யூகித்து இவர்களே முடிவு எடுத்தார்களாம். நாளை மறுநாள் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை விடமுடியாது அனைவரும் வரவேண்டும் என்று கூறியவர்கள், கலவரம் நடக்கும் என்று யூகித்து விடுமுறை விடுகிறார்கள்.

இவ்வளவுதான் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டிற்க்கு கொடுக்கும் மரியாதை. நாம் அவர்களது அடிமை. நமக்கு இந்த பண்டிகைக்குத்தான் விடுமுறை விட வேண்டும் என்பதை முடிவு செய்வதே இந்த நிறுவனங்கள் தான். அதைப்பற்றி எல்லாம் சிந்திக்க இப்பொழுது நேரமில்லை. என்னுடைய பயம் நாளை படம் ரிலீஸ் ஆகுமா? என்பதுதான்.

நண்பர்களுடன் நான் படம் முன்பதிவு செய்து இருந்த திரையரங்கிற்கு சென்றேன். வீதி எல்லாம் அனைவரும் வீட்டிற்க்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.தானே புயலை வேடிக்கைப் பார்த்த தைரியசாலிகள் எங்கே என்று தேடிக் கொண்டு சென்றேன். அப்பொழுது ஒரு பெட்டிக் கடையில் மாலை தினசரியின் தலைப்பு செய்தி கண்ணில் பட்டது.

        “நாளை எந்திரன் ரிலீஸ் ஆகுமா? கவலையில் ரசிகர்கள். கண்டிப்பாக அந்த நாளிதழில் செய்தி ஒன்றும் இருக்காது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அந்த நாளிதழை வாங்கிப் பார்த்தேன். எந்திரன் தொடங்கப்பட்ட நாள் முதல் இப்படம் சம்மந்தமாக வெளியான அனைத்து செய்திகளையும் வாங்கிப் படித்து உள்ளேன்.

        “ நூறு கோடியில் “ரோபோ” படம். அம்பானி தயாரிக்கிறார், ரஜினி நடிக்கிறார். “ முதன் முதலில் மாலை நாளிதழ் வெளியட்ட செய்தி.

        “ ரோபோக்களிடம் இருந்து சென்னையை காக்கும் ரஜினி”
        “ ரோபோ படம் கைவிடப்பட்டது”
        “ ரஜினிக்கு மூன்று ஜோடிகள்” கத்திபாராவில் போக்குவரத்து பாதிப்பு”

அப்பா! படம் முடிவதற்குள் ஆயிரக்கணக்கான செய்திகள். அனைத்தையும் வாங்கிப் படித்து விட்டேன். இதை வைத்து இன்னும் நூறு எந்திரன் படம் எடுக்கலாம்.

நான் முன்பதிவு செய்து இருந்த திரையரங்கம் இருந்த தெருவிற்கு சென்றேன். ஒரே ஆரவாரம். விண்ணைப் பிளக்கும் சூப்பர் ஸ்டார் கோஷங்கள். கட் அவுட் கட்டும் நண்பர்கள் என திரையரங்கம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. அங்கே ஒரு இடத்தில் ஒரு இஸ்லாமிய நண்பரும், ஹிந்து நண்பரும் ப்ளெக்ஸ் பேனர் வைத்துக் கொண்டு இருந்தனர். அந்த பேனரில் இருந்த வாசகத்தைப் படித்ததும் எனக்கு ஆச்சிரியமாக இருந்தது.

“கோயில் கட்டுங்க! மசூதி கட்டுங்க! ஆனா அப்பாவி மக்களுக்கு சமாதி கட்டாதிங்க!” .

யாரு அந்த பதினொரு பேரு கொண்ட குழு என்று நினைத்துக் கொண்டேன்.

அருமையான வாசகம். நான் அவர்களிடம் சென்று நாளைக்கு படம் ரிலீஸ் ஆகுமா? என்றேன்.

ஏன்பா உன் ஊத்த வாய வெச்சிக்கிட்டு இப்படி எல்லாம் கேட்குற? என்றார் இஸ்லாம் சகோதரர்.

“இல்லை! இன்னைக்கு அயோத்தி வழக்குல தீர்ப்பு சொல்றாங்க! அதுதான் கலவரம் ஏதவாது வருமான்னு கேட்டேன்?”

“வரும்! கலவரம் வரும்! அது நாளைக்கு படம் ரிலீஸ் ஆகலனா மட்டும் தான் வரும்” என்றார் இஸ்லாம் சகோதரர்.

அப்படி சொல்லு மச்சி! என்று பேனர் கட்டி கொண்டு இருந்த இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.

நான் என் மனதிற்குள் சிரித்தேன். அப்பொழுது “ சோதனை வரும், சோதனை எப்பொழுது சாதனை ஆகும். நீ சோதனையை சந்திச்சாதான்யா அது சாதனை ஆகும்” என்று என் செல்போன் மணி அடித்தது.. நான் எடுத்து பேசினேன். என் நண்பன் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையும் அதன் விபரத்தையும் கூறினான்.

“தல! என்னப்பா தீர்ப்பு” என்றார் முஸ்லிம் சகோதரர்.

“நிலம் இந்துகளுக்கும் சொந்தம்! முஸ்லிம்களுக்கும் சொந்தம்னு சொல்லி இருக்காங்கனா” என்றேன்.

உடனே அருகில் இருந்த ஒருவர், “அப்ப கிறிஸ்துவர்களுக்கு சொந்தம் இல்லையா என்றார்?”

அங்கே இருந்த அனைவரும் சிரித்தார்கள். அவர் வழக்கைப்பற்றி தெரியாத ஒரு கிறிஸ்துவராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வழியில் வருவோர் போவோர், வயது வந்தோர், வயது முதியோர், கல்யாணம் ஆன பெண்கள் என அனைவரும் தலைவரின் கட் அவுட்டை பார்த்துக் கொண்டே சென்றார்கள். அவர்களும் இச்சமூகம் அனுமதித்தால் முதல் நாள், முதல் காட்சி பார்க்கத் துடித்துக்கொண்டு இருக்கும் ரசிகர்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அவர்களிடம் இருந்து விடைப்பெற்று நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டே சென்றேன். ரஜினி படத்தை முதல் நாள் முதல் காட்சிப் பார்ப்பது எனக்கு ஒரு கௌரவப் பிரச்ச்சனையாகவேப்பட்டது. இதுவரை வீராவிற்கு பிறகு வந்த அனைத்துப் படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து இருக்கிறேன். யாரவது ஒருவர் ரஜினி ரசிகனாய் இருந்து நீ முதல் காட்சி பார்க்கவில்லையே என்று கேட்டு விட கூடாது என்ற ஒரு எச்சரிக்கை.

நடந்த நிகழ்சிகளைப் பார்க்கும்பொழுது நாளை படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கை வந்தது. நாளை படம் வெளிவரவில்லை என்றால்தான் பிரச்சனை வரும் என்பதும் நன்றாகத் தெரிந்தது. அதனால்தான் 160 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அயோத்தி தீர்ப்பு வரும் மறுநாள் ரிலீஸ் செய்யும் அந்த  தைரியம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் வந்தது என்று நினைத்துக் கொண்டேன். அவர்களும் நம்மைப்போல் ரஜினி இருக்கிறார் பார்த்துக்கொள்வார் என்று எண்ணி இருக்கலாம்.

வீட்டிற்க்கு சென்றேன். அம்மா கேட்டார், “ என்னடா? வெளிய ஒரே கலவரமா இருக்குனு சொல்றாங்க! எங்க சுத்திட்டு வர?

“அம்மா, நாளைக்கு ரஜினி படம் ரிலீஸ் ஆகுதுமா” என்றேன்.

நான் என்ன கேட்குறேன்? நீ என்ன சொல்ற? நீ ரஜினி பைத்தியமாதான் போகபோற என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

நான் என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். “ அம்மா! உனக்கு என்ன தெரியும்? இந்துஸம், இஸ்லாம் மாதிரி தமிழ்நாட்டுல இன்னொரு மதம் இருக்கு. அந்த மதத்திற்குள் சண்டை, கலவரம் எதுவுமே வராது. அது அன்பால தானா சேர்ந்த . எங்களுக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து மந்திரம் “ரஜினி”.

என்னடா இவன் கிறுக்கனா இருப்பான் போல? இப்படி எழுதி இருக்கிறான்? என்று நீங்கள் சொல்லலாம். அப்படி சொல்லிவிட்டு அடுத்த பக்கத்தில் கோச்சைடையான் பற்றி ஏதாவது செய்தி இருக்குமா? என்று கூட்டம்தேடுபவராகவும் நீங்கள் இருந்தால் அப்போ நீங்க எங்க மதம்தான் பாஸ்! புரியலையா? அதான் பாஸ்.

                                “ரஜினிசம்”     
                      கடமையை செய் பலனை எதிர்பார்.