ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday 26 January 2014

சிறுகதைப் போட்டி 118


வளரி

"யுத்ததேவன் பூமியை ஆட்கொண்டிருந்த காலம் அதுஆடவர் போரில் சண்டையிட்டுஉணவு உண்டுமதுஅருந்திஉறங்கிவிழித்து மீண்டும் போருக்கு சென்று சண்டையிடுவதையே தம் குலத் தொழிலாககொண்டிருந்த அந்தக் காலத்தில்பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்துஅவர்களைவீரர்களாகவும் அரசர்களாகவும் மாற்றினர். இன்னும் சில வீர தமிழ் பெண்மணியினர்  தங்கள் தந்தையினரும், தமயர்களும், கணவன்மார்களும், மகன்களும் போர்களத்தில் தினம்தோறும் செத்துமடிய; உள்நாட்டில் சதிசெய்து மன்னர் இல்லாத நாட்டை சூறையாட நினைத்த கயவர்களிடமிருந்து நாட்டை காத்தனர். 
ஒரு வெப்பமான கோடைக்காலத்தின் மாலைப் பொழுதில் ராமநாதபுரத்தின் வீதிகளின் வழியே நிதி அமைச்சர்தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்அவர் நடையில் ஒருவித அவசரம் தெரிந்தது. தலைநகரில் வசித்தவர்களுக்கு போர் எங்கோ ஒரு தூர தேசத்தில் நடப்பது போன்ற உணர்வு இருந்ததுஇருப்பினும் போரின்எதிரொலி அந்த நகர வீதிகளில் காணப்படவில்லைஇருப்பினும் போரின் விளைவுகள் மேல் தட்டு அரசியலில்தென்படத் தொடங்கியிருந்தன.
அமைச்சர் கடைத்தெருவில் இருந்த ஒரு சிறிய கடை முன் நின்றுதேன் மற்றும் மூன்று முழம் மல்லிகைப் பூவாங்கினார்போரினால் நான்கு மடங்கு விலை அதிகரித்து இருந்ததை அவர் பொருட்படுத்தாமல் கூடுதலாகஒரு நாணயத்தை அந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டுமீண்டும் நடக்கத் தொடங்கினார்.
அவர் சென்றவுடன்அந்த மூதாட்டி ஒரு பழைய கோணிப் பையால் தன் கடையை மூடி விட்டுகடைத்தெருவின் எதிர் திசையில் நடந்தாள்அவள் ஒரே மகன் போர்க் காயங்களால் கை கால் செயலற்றுகுருடாகிவீட்டில் இருந்தான்அவள் பதினேழு வயதுத் பெயரன்போர் முனையில் அவன் தந்தையின் இடத்தில் இருந்து,ராமநாதபுரத்தின் வீரப் புகழை நிலை நாட்ட போராடிக்கொண்டிருந்தான்.
வேகமாக கடைத்தெருவை கடந்த அமைச்சர்ஒரு குறுக்குச் சந்தில் திரும்பினார்சாதாரண நாளில்ராமநாதபுரத்தின் நிதி அமைச்சர் வீதிகளில் தனியாக நடந்து செல்வது அதிசயக் காட்சியாக இருந்திருக்கும்.ஏனெனில் அவரது மெய்க்காப்பாளர்கள் அவரை ஒரு அடி கூட தனியாக விட்டதில்லையுத்தமானது இயல்புவாழ்கையை விழுங்கி நாடெங்கும் ஒரு குழப்பமான நிலையை நிலவச் செய்திருந்த காலம் அதுஅவரதுமெய்க்காப்பாளர்களை சில தெருக்கள் தள்ளி இருக்கும் கள்ளுக் கடையில் சில மணி நேரம் காத்திருக்கஆணையிட்டிருந்தார்அவர்களும் அவரது ஆணைக்கு அடிப்பணிந்து அந்தக் கள்ளுக் கடையில்காத்துக்கொண்டிருந்தனர்.
அமைச்சர் ஒடுக்கமான பாதையில் திரும்பி நடந்தார்அந்தப் பாதை சற்று இருட்டாக இருக்கவே குழிகளிளும்சாணத்திலும் சிக்காமல் கவனமாக நடந்து அந்தப் பாதையின் முடிவில் இருந்த ஒரு வீட்டின் வாசலைஅடைந்தார்வீட்டின் மரக் கதவை குறிப்பிட்ட சில இடைவெளியுடன் மூன்று முறைத் தட்டிஅந்தக் கதவுதிறக்க காத்திருந்தார்...

முப்பது நாட்கள் யுத்த களத்தில் சண்டை புரிந்த அந்த வாலிபன் தனது வலது கை பெறு விரலைஇழந்திருந்தான்மேலும் அவன் கால் விரல்கள் குதிரைக்குளம்பில் நசுக்கப்பட்டு காயமடைந்திருந்தனஎதிரியின்வாள்வீச்சில் தனது ஒரு காதை இழக்காமல் மயிர் இழையில் தப்பியிருந்தான்இருப்பினும், துணியால் தன்காயங்களைக் கட்டிக் கொண்டுபோர்க்களத்தில் எதிரி நாட்டு வீரர்களை பந்தாடிக்கொண்டிருந்தான்தன் உடலில்இருந்து வியர்வை, ரத்தம் என எது வடிந்த பொழுதும் அவன் சண்டையை நிறுத்தவில்லைஎதையும்பொருட்படுத்தாமல் போர் புரிந்த அந்த வாலிபன் யுத்தகளத்தில் ராமநாதபுரத்தின் மாவீரனாகவேகாட்சியளித்தான்.
தன் தந்தையிடம் இருந்துபோர்க் கதைகள்அவரின் வீர சாகசங்கள்நாடு மற்றும் அரசன் மீது ஒருகுடிமகனுக்கு இருக்க வேண்டிய பற்று போன்றவற்றை கேட்டு வளர்ந்த அவனுக்கு சிறு வயதில் இருந்தே போர்மீது ஒரு காதல் இருந்ததுபல நூறு வீரர்களுடன்உடைந்த காலுடன் இருட்டில் தடுமாறிகொசுக்கள் நிறைந்தசதுப்பு நிலத்தில் மலம் கழிக்கும் பொழுதுஎந்தக் கதையும் ஒரு வெற்றிக்குபின் இருந்தமுகம் தெரியாத பலஆயிரக்கணக்கான வீரர்களின் வலிகளைப் பற்றி சொல்வதில்லை என்று தன்னுள் எண்ணி வருந்தினான்அவன்தேச பக்தியே அவன் காயத்திற்கு மருந்தாகஅவன் வீரத்தை நிலை நாட்ட உதவியது...

'நீங்க இதை வாங்கி இருக்கக் கூடாதுஎன்றது வளையல்களின் பின்னணி இசையுடன் ஒரு ரம்மியமானபெண்ணின் குரல்.
'என்னிடம் இல்லாத செல்வமா?' என்று கூறிக்கொண்டே அமைச்சர் தேனையும் மல்லிகையையும் அந்தப்பெண்ணிடம் கொடுத்தார்.
'இன்றைக்கு என்ன விலை?' என்று அவள் தினமும் கேட்பதுபோலவே இன்றும் கேட்ட கேள்வி, அமைச்சர்காதில் விழுந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை.
'நிதி அமைச்சர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்?' என்று கேட்டாள் சிரித்தபடியே.
‘அமைச்சரா?... மஹும்... இன்னும் சில நாட்களில் ராமநாதபுரத்தின் அரசன் நான்என்று பெருமையாக சிரித்தார்.
'என்னிடம் எதையும் முழுசாக சொல்லாதிங்கஎன்று சலித்துக் கொண்டாள்.
'என்னுடைய வருங்கால அரசிக்கு கோவமாஎத்தனையோ முறை சொல்லிவிட்டேன். இன்னுமொரு முறை சொல்கிறேன் கேள். அரசன் போருக்கு சென்றவுடன்வடதேசத்து படையில் இருந்து சில வீரர்களை விலைகொடுத்து வாங்கிஅவர்களை போர்க்களத்திற்கு அனுப்பிஅரசனை வஞ்சனையாக கொன்றுஎதிர்க்கும் அரசர்களுக்கு கப்பம் கட்டிராமநாதபுரத்தின் மன்னனாக முடிசூடிக் கொள்ளப்போகிறேன்', அமைச்சரின் முகத்தில்அந்தக் கணம் ஒரு கொடிய நாகத்தின் சீற்றம் இருந்தது, 'இதற்கு பலிகடா யார்மக்கள். வரி கட்டி,தந்தைகளையும் தமயன்களையும் போருக்கு அனுப்பிஎனக்காக சண்டையிடும் மக்கள்'.
'மக்களுக்கு உண்மை தெரிந்தால்?' என்று பயத்துடன் கேட்டாள் அவள்.
'அரசனை எதிர்த்து அவர்களால் என்ன செய்ய முடியும்என்று சொல்லி ஏளனமாக சிரித்தான்.

அன்று இரவு அந்த வாலிபன் தன் கூடாரத்திற்கு திரும்புகையில், காட்டின் முனையில் குதிரைகள் வரும் சலசலப்பு கேட்டது. ஒரு வீரனின் வீட்டில் வளர்ந்த அந்த வாலிபனுக்கு ராமநாதபுரத்து குதிரைகள் எந்த தூரத்தில் இருந்து வந்தாலும் சரியாக கணித்து விடும் சக்தி உண்டு. இந்த சலசலப்பு ராமநாதபுரத்து குதிரைகளுடையது அல்ல என்பது அவனால் நிட்சயம் உணர முடிந்தது. அவை வடதேசத்துப் படைக் குதிரைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு சில நொடிகளே தேவைப்பட்டது. சுதாரித்துக் கொண்டு ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். குதிரைகளின் சலசலப்பு நெருங்கி வர, அந்த சத்தத்தின் எதிர் திசையை நோக்கினான். வீரர்களின் கூடாரத்திற்கு மேலே இருந்த ராஜாவின் கூடாரம், பௌர்ணமி நிலவொளியில் தனியாக தெரிந்தது.  ஆபத்தை உணர்ந்து 'ராஜாவிற்கு ஆபத்து' என உரக்க கத்திக் கொண்டு, அரச கூடாரத்தை நோக்கி ஒற்றைக் காலை நொண்டிக்கொண்டு ஓடினான். அதற்குள் நீண்ட தாடிகளுடன் கறுப்புக் குதிரையில் வந்த சுமார் நாற்பது வீரர்கள் அரசனின் கூடாரத்தை நெருங்கினர்.

அந்த வடக்கு வீரர்கள் குதிரையில் இருந்து இறங்கி தங்கள் வாள்களையும் வேல்களையும் கையில் உயர்த்திப் பிடித்தனர். அரச கூடாரத்தின் வாயிலில் நின்ற அந்த வாலிபன் மேல் எறியப்பட்ட வேல், அவன் வலது தோளை உறசிச் சென்று கூடாரத்தின் துணியைக் கிழித்தது. வாலிபனின் கூச்சலில் விழித்த மற்ற வீரர்கள் ஆயுதங்களுடன் அரச கூடாரத்தை நோக்கி விரைந்தனர்.

வடக்கு வீரர்கள் தன்னை நோக்கி முன்னேற, மற்ற வீரர்கள் அரசனை காக்க கீழே இருந்து ஓடி வர, அரசர் கூடாரத்தை விட்டு வெளியே வருவதையும், அவர் கையில் ஆயுதம் இல்லாததையும் அந்த வாலிபன் கண்டான். வடக்கு வீரர்கள் மற்ற வீரர்களுடன் சண்டையிட, அந்த வாலிபன் கூடாரத்தின் வாயிலில் அரசரை பாதுகாக்க விரைந்தான். வடக்கர்கள் எப்பொழுதும் வஞ்சகமாக வெல்பவர்கள் என்பதால் இருட்டில் நாலாப் புறமும் விழிப்புடன் நோக்கியபடியே சிதைந்த கால்விரல்களுடன் ஓடினான். நிலவை மேகம் மறைக்க, எங்கும் இருள் சூழ கூடாரத்தின் மற்ற முனையில் இருந்து தாடியுடன் ஒரு வீரன் மெதுவாக அரசரை நெருங்வதை கவனித்தான்...

மறுநாள் மாலை அதேக் கடையில் பூக்களை வாங்கிய அமைச்சர், காசு கொடுக்க முயலும் பொழுது, அந்த மூதாட்டி அவற்றை வாங்க மறுத்து, 'போரில் துயரப் படும் நம் வீரர்களுக்கு நான் கொடுக்கும் காணிக்கையாக இதை வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு அமைச்சர் சென்றவுடன் தன் கடையை மூடத் தொடங்கினாள்.
அமைச்சர் கடைத்தெரு வழியே அந்தக் குறுக்கு வீதியில் சென்று, ஒடுக்கமான பாதையில் இருக்கும் அந்த வீட்டை அடைந்து, கதவை மூன்று முறை தட்டினார். அவரை பின் தொடர்ந்து வந்த மூதாட்டி எதிரில் இருந்த ஒரு புதரில் மறைந்ததை அவர் கவனிக்கவில்லை.

கதவு திறந்தது. 'இன்றைக்கு என்ன விலை கொடுத்து வாங்கினீர்?' என்று கேட்டது அந்த பெண்ணின் குரல்.

'இன்று இலவசம்' என்றார் அமைச்சார்.

'அப்படியா!' என்று அமைச்சரை நிமிர்ந்து பார்த்தவள், தன் பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அந்த கத்தி மின்னியதக் கண்ட அமைச்சர், சுதாரித்து சாலையில் சற்று பின் வாங்க, அவள் ஓங்கிய கத்தி அவர் மார்பில் பாய்ந்தது. வாசற்கதவு சட்டத்தில் இடறி விழுந்த அமைச்சர், அடி பட்ட பன்றி போல் தெருவில் உருண்டார். ஒரு நொடிப்பொழுதில் மாரில் செருகியிருந்த கத்தியை உருவி எறிந்துவிட்டு ஓடத் துவங்கினார். புதரில் இருந்த மூதாட்டி தன் சேலை மறைவில் இருந்த இரும்பு வளரியை எடுத்த வலிமையுடம் வீசினாள். அந்த வளரி தெருவில் ஓடிக்கொண்டிருந்த அமைச்சரின் பின் மண்டையை பதம் பார்த்தது. அவரது மண்டை பிளந்து, மூளை தெருவில் இருந்த மாட்டுச் சாணத்தின் மேல் தெளிக்க, அந்த வளரி சுழன்றுக்கொண்டு சற்றே தள்ளி விழுந்தது.

மூதாட்டி அந்த வளரியை எடுத்து, தன் மார்பு சேலை மடிப்பில் வைத்துக்கொண்டு, அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தாள்...

அந்த வடதேசத்து வீரன் அரசரை நெருங்குவதைக் கண்ட வாலிபன், தன் ஆடையினுள் இருந்த வளரியை கையில் எடுத்துக் கொண்டு, சரியான தருணம் வர தயாராக காத்திருந்தான். அவன் வளரி இரும்பினால் செய்யப்பட்டு, ஒரு முனை பந்துபோல் உருண்டையாகவும் மறு முனை வாள் போல் கூர்மையாகவும் இருந்தது. வடதேசத்து வீரன் தன் வாளை நீட்டக்கொண்டு அரசரை நோக்கி முன்னேற, வாலிபன் வளரியை வீசினான்.

அந்த வளரி காற்றில் சில வினாடிகள் தங்கி, மீண்டும் வலது புறம் திரும்பி அரசரை நோக்கி வந்தது. வளரி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அரசர், பதறி கீழே அமர, அந்த வளரி அரசரின் பின்னே நின்ற வடக்கு வீரனின் கழுத்தை துண்டித்தது. அமர்ந்தபடியே அந்த வடதேசத்து கொலைகாரன் முண்டமாக கீழே சரிந்து விழுவதைக் கண்டார் அரசர். மெய்க்காப்பாளர்கள் வந்து அரசரை சூழ, அந்த வாலிபன் தன் வளரியை எடுத்துக்கொண்டு வடக்கு வீரர்களுடன் போரிடச் சென்றான். அரசரின் பாசறை, சில நிமிடங்களில் அந்த வடக்கு வீரர்களை துவம்சம் செய்தனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்து அரசியிடம் இருந்து அரசருக்கு ஒற்றர் தலைவன் ஓலை கொண்டு வந்தான். 'நிதி அமைச்சரின் சூழ்ச்சி அம்பலமானது. தக்க சமயத்தில் தலைநகரம் காப்பாற்றப்பட்டது. உங்களை வஞ்சகமாக தாக்க சில வடக்கு வீரர்களை ஏவியுள்ளார். கவனாமாக இருங்கள்.' அரசர் ஓலை கொண்டு வந்த ஒற்றர் மூலம் அமைச்சரின் மரணம் குறித்த தகவல்களை கேட்டு அறிந்துகொண்டார். மெல்ல புன்னகைத்தார். போருக்கு ஆயத்தமான  அரசர் தனது மெய்க்காப்பாளராக உங்கள் அப்பாவை நியமித்தார்..." என்று சொல்லிமுடிக்கும் முன் கதை கூறிக்கொண்டிருந்த தான் தாய் மடியிலிருந்து, “'வளரி...வளரி' என்று கத்திக்கொண்டே கீழே குதித்தான் அந்த சிறுவன். 'அது என்னுடைய வளரி. திருப்பிகொடுடா' என்று அவன் அண்ணன் அவனை துரத்தினான். 'பெரிய மருது, அவன் உன் தம்பிதானே சற்று நேரம் விளையாடட்டும் விடு. நீ இங்கு வந்து சாப்பிடு. நீ உண்ணாவிட்டால் அம்மா உனக்கு வளரி வீச சொல்லித் தர மாட்டேன்' என்று கையில் சோற்றுக் கிண்ணதுடன் தன் மகன்களை பார்த்து சத்தமிட்டாள் அவள்.