ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 3 February 2014

சிறுகதைப் போட்டி 90

கலம்பகக் கண்னி

 இடம்: வீரபாண்டியபட்டினம், தினம்: வைகாசி மாதம் தேய் பிறை த்ரயோதசி.

பாண்டியர்கள் காலத்தில் மிகவும் புகழ் வாய்ந்த நகரமாக விளங்கிய வீரபாண்டிய பட்டினம், கதை நிகழும் காலத்தில் ஒரு சிறிய கடற்கரைக் கிராமமாக மட்டுமே எஞ்சி  இருந்தது. அதன் பழம்பெருமையை உணர்த்தும் விதமாக ஒப்பிலாமணீசுவரர்  திருக்கோவிலும், ஒரு காலத்தில் பெளத்த விகரையாக இருந்து  இப்பொழுது சுருங்கி விட்ட பெளத்த மடமும் கிராமத்தின் முக்கிய வீதிகளில்  வீற்றிருக்கின்றன. இது போக கோயிலிலிருந்து கூப்பிடு தூரத்தில்,ஒரு  காற்றாழி மண்டபமும் உள்ளது.

முத்துக்குமார சாமி பண்டிதர், வழக்கம் போல் மாணவர்களுக்கு காற்றாழி மண்டபத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திருக்குறளும்,
காப்பியங்களும் ஓலைச் சுவடிகளாக பாழடைந்த மண்டபங்களிலும், பெரிய மனிதர்கள் மற்றும் அந்தணர்களின் வீட்டுப் பரணிலும் தூங்கிக் கொண்டிருந்த காலமது. காற்றாழி மண்டபத்திலும், பண்டிதர், ஆதித்தர் முதலான அந்தணர் இல்லங்களிலும் கிடைத்த பழஞ்சுவடிகளைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரும்பாலும் திருக்கோயில் மீது இயற்றப் பட்ட சிற்றிலக்கிய வகைகளும், அவற்றுக்கான உரைகளும், உரையில் எடுத்தாளப்பட்ட வேறு சில பாடல்களையும் உள்ளடக்கிய  தமிழ் இலக்கிய வகுப்பு  பண்டிதரால் நடத்தப்பட்டது. ஜோதிடம், வான சாஸ்திரம் முதலான பேரறிவியல் வகுப்புகளும், வானிலை, பருவநிலை, நிமித்தம், காரணம் போன்ற அன்றாட வாழ்வியல்  குறித்த
வகுப்புகளும் ஆதித்தரால் அதே மண்டபத்தில் நடத்தப்பட்டது. கணிதம், வணிக நுட்பம் மற்றும் கோட்பாடுகள், புவியியல் மற்றும் அயல் மொழி வகுப்புகள் அம்மையப்பச் செட்டியாரால் நடத்தப்பட்டது. இவை போக, அயலூர் விற்பன்னர்களும் உள்ளூர் பெரியவர்களும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதுண்டு.  இதே போன்றதொரு சிறு பள்ளி பெளத்த மடத்திலும் நடைபெற்றது. காற்றாழிப் பள்ளி போலல்லாது அங்கு அனைத்து  இனத்தவரும்  மாணவர்களாய் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பௌத்தப் பள்ளியில் சிலம்பம், வாள் பயிற்சி முதலான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பெளத்த துறவிகளுக்கு மேலும் விரிவான வகுப்புகள் கமுக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததையும் குடியானவர்கள் அறிந்திருந்தார்கள். அவருள் சிலர்க்கு
அதைக் கற்கும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றிருந்தது.  இன்று பண்டிதர் நடத்தும் வகுப்பு நம் கதையுடன் தொடர்புடயதாதளால் நாம் காற்றாழி மண்டபத்திற்கு செல்வோம்.

"...  ஓப்பிலாமணீச்வரர் கலம்பகத்துள் புகுமுன், கலம்பகக் கூறுகளைப் பற்றி..." பண்டிதர் இன்னும் கதைக் குறிப்புகளை வெளியிடத் துவங்கவில்லை.
அதற்குள் இந்த காற்றாழி மண்டபத்தையும் வகுப்பையும் ஒரு சுற்று பார்த்து வருவோம். சேர நாட்டு மீன்விழிப் பலகணிகள் போல் கல்லினால் ஆன சுவர்களைக் கொண்ட மண்டபம். மண்டபத்தின் கடைக்கோடி  மூலையில் இருந்த கருவூலம் கதவுகள் இன்றி திறந்தே கிடக்கின்றது. அதனுள் சில கற்சிலைகளும், மரப் பொம்மைகளும் பரப்பி  வைக்கப் பட்டிருந்தன. அங்கிருந்து  திருக்கோவிலுக்கு செல்லும் சுருங்கை வழி இரும்புக்கதவால் அடைக்கப் பட்டிருந்தது.  இதே போல், சுருங்கையின் மறுமுனையும் கோவில் வளாகத்தினுள் அடைக்கப்பட்டே கிடந்தது. வகுப்புகள் நடக்கும் நுழை வாயிலின் இடது புறப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு துப்புரவாக காட்சி அளிக்கிறது. சுமார் 20 மாணாக்கர்கள் அமர்ந்து பாடம் கேட்கலாம். பதினைந்தே மாணவர்கள் தான் வந்திருந்தனர். நாம் பண்டிதரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.

"'வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!'

இந்த  ஈற்றுப் பாடலின் போது தீப்பற்றிய பந்தலுடன் நந்தி மன்னனும் சாம்பலானான். இந்நிகழ்வுக்குப் பின் கலம்பகம் பாடி காலனை ஏவலாம் என்ற
எண்ணம் உறுதி பட்டது. இது போன்றதொரு கலம்பகம் ஒப்பிலா மணீஸ்வரர் மீதும் இயற்றப்பட்டுள்ளது.  இறைவனின் வரலாறு, திறம், குணம், அடியார்க்கு அருளியமை பற்றி கூறி செல்லும்  எண்பது கண்ணிகளைக் கொண்ட இந்த கலம்பகம், திருக்கோவிலின் சிதைவையும், கோவில் கொண்ட நகரத்தின் அந்திமக் காலத்தையும் தொட்டுச் சென்று இறைவனின் மறைவுடன் முற்றுப் பெறுகிறது. இறைவனின் கீர்த்திக்கு என்றும் அழிவில்லாததால், லிங்க உருவத்திற்கே மறைவு ஏற்படும் என்று காலம் காலமாக மக்கள் நம்பி வருகிறார்கள். கலம்பக காலத்தினின்று பல
ஆண்டுகளுக்குப் பின்னும் நகரமும் மாந்தரும் எவ்விதக் குறையும் இன்றி வளர்ந்து கொண்டே வந்தனர். கோவில் சுருங்கிக் கொண்டே வந்தது. எந்நேரமும் இடிந்து விழுந்துவிடக் கூடும் என்ற பயம் மக்கள் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டது. கோவிலின் நிலை கண்ட பாண்டிய மன்னன், பழைய கோவிலின் அருகிலேயே புதியதாய் பிரம்மாண்டமான ஒரு கோவிலை எழுப்பினான். கலம்பகம் பெற்ற ஒப்பிலாமநீஸ்வரரின் லிங்க உருவத்தைத் தவிர அனைத்து சிற்பங்களும் புதிய கோவிலுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. இறைவனின்  புதிய லிங்க
உருவமும் கொண்டு வந்து பிரதிஷ்டை  செய்யப் பட்ட சில  நாட்களிலேயே பாண்டியன் மரணம் எய்த, பின் சில வருடங்களில் பாண்டிய வம்சமும் உரு தெரியாது அழிந்து போயிற்று. அதன் பின் இந்த நகரமும் அதன் பழைய பொலிவை இழந்தது. மக்களும் கலம்பகமே இவை அனைத்திற்கும் காரணம் என்று நம்பத் தொடங்கினர். பழைய கோவிலின் பெரும்பாலான பகுதிகள் விழுந்து விட, எஞ்சிய இந்த காற்றாழி மண்டபத்திலேயே மூல லிங்கமும் வைக்கப் பட்டது." மாணவர்கள் பயத்துடன், பண்டிதர் சுட்டிக் காட்டிய திசையில் இருந்த 'ஆதிமூலமகாலிங்க'த்தைக் கண்டார்கள்.

வகுப்புகள் முடிந்த உச்சி வேளையில், "கலம்பகம் சொல்வது போல்  நடக்கும் என்றால், ஏன் இதுவரை லிங்கத்திற்கு எதுவும் நேர வில்லை? சந்நிதி
விழுந்தபோது லிங்கம் எந்த சேதாரமும் இன்றி தப்பித்தது எதனால்?" உருத்திர பசுபதி கேட்டான். "லிங்கம் ஊனப்படும் நாளும் நேரமும் துல்லியமாக
கணிக்கப்பட்டிருப்பதை வியந்து ஆதித்தர் கூறியதை ஒரு முறை கேட்டிருக்கிறேன். சோமா! உனக்கு இது பற்றி தெரிந்திருக்கும் இல்லையா?" அவர்களுள் மூத்த மாணாக்கன் சதுர்வேதி கேட்டான். "இல்லை. தெரியாது" என்று கூறி முடித்துக் கொண்ட  சோமன் வகுப்புத் தோழர்களை நீங்கி தனிப் பாதையில் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அன்றைய வகுப்பும், அதன் பின் வரும் வழியில் நண்பர்கள் பேசிக்கொண்ட  உரையாடல்களும் மனதில் நின்றாலும், அவற்றைப்  புறந்தள்ளிவிட்டு, யோசிக்க, செய்ய வேண்டிய காரியங்கள் அவனுக்கு நிறைய இருந்தன. காலையில் அவன் வேட்டியில் இருந்த குறி, அவனை ஆற்றங்கரை நோக்கி ஓடச் செய்தது.

"இதோட ஏழு தடவ மாத்தியாச்சு. இதான் கடைசி பார்த்துக்க..."  தூரத்தில் சோமன் பாறைகளுக்குப் பின்னல் மறைவதை பார்த்து விட்டு, அவனை நோக்கி சென்றவளை தொடர்ந்து வந்தன வார்த்தைகள். செடிகளுக்குள் நுழைந்து போக்கு காட்டிவிட்டு சோமன் இருந்த பாறைக்கு சென்றாள். 
"கல்யாணம் என்னைக்கு?",
"இந்தக் கிழமைக்குள்ள.. மாமென், நேத்து ரவைக்கே சொக்காரவுகளோட தண்டு இறங்கியாச்சு. அம்மைக்கும் உறவுல கொடுக்குரதுல சம்மதந்தான்." "சரி. இதுக்கு மேல ஒத்தி வைக்க வேணாம்..ரோகிணி!  இன்றை ராத்திரி காற்றாழி மண்டபத்துக்கு வந்துவிடு. வெள்ளி எழுமுன்னே கிளம்பிருவோம்". "நாழி ஓடுது. அம்மைக்கு  சொல்லி மாளாது. வர்றம்." என்று ஓடியவள், நின்று "வந்துருவீகள்ள?" என, "நிச்சயமாக.." என்றான் சோமன்.

காலையில் வந்தியன் வந்த பொழுது, இயல்பாய் இருந்த ஆதித்தரின் முகம் இப்போது இறுகி  இருந்தது. வந்தியன் இன்னும் அவர்  அறையிலேயே இருந்தான். அவர் முன் பல சுவடிகள் விரிந்து கிடந்தன. 
"இம்முறை அறிவிக்கத்தான் வேண்டும்."
"இல்லை, வந்தியா! நாம் அவசரம் கொள்ளலாகாது. நம் காலத்தில் மட்டுமின்றி, அதற்கும்  முன்னேயும் கூட பல முறை அறிவித்து, தேடிக் கொண்ட
பழி போதும். நாம் சொன்னால், நம்பிய காலத்தை மக்கள் கடந்து விட்டார்கள்."
"ஆனால் சொல்ல வேண்டிய கடமையும், கட்டாயமும் இருக்கிறதே."
"சேதத்தின் விகிதம்,  எல்லை, தாக்கம்  எதுவுமே அறியாது என்ன சொல்வாய் ? மீண்டும் பார். ஆராய். உறுதி செய். பின் நிறுவுவோம் ".
"ஆராய  நம்மிடம் நேரமில்லை."
"அறிவிக்கவும் தான். இருட்டி  நேரம் ஆகி விட்டது." என்றபடி அறையை விட்டு வெளியேறினார். வந்தியன் மறுபடியும் சுவடிகள் மூழ்கினான்.
வீட்டில் அனைவரும் உறங்கிக் கிடந்தனர்.
 "என்னப்பா சோமா!  உறக்கம் வரவில்லையா? எனக்கும் தான்." என்றபடி ஏதேதோ பேசினார். 

அதற்குள் வந்தியன் அழைக்க மீண்டும் அவர்கள் விவாதம் தொடர்ந்தது. இவர்கள் விழித்திருப்பதால், இங்கும் அங்கும் நகர முடியாத படிக்கு கட்டப் பட்டிருந்த சோமன் ஒரு கட்டத்தில் உறங்கியும் விட்டான். விழித்துப் பார்த்த போதும், அவர்கள் விவாதம் ஓய்ந்த பாடில்லை. இன்னும்  சில நாழிகைகளில் வெள்ளி விழுந்து விடும். அதற்கு மேலும் பொறுக்க மாட்டாது, சோமன் உள்ளே நுழைந்தான்.

"சோமன் வந்து விட்டான். நாம் முதலில் அவனிடம் அறிவிப்போம்." சோமன் தூக்கம் தோய்ந்த விழிகளை பிரித்து வைத்துக் கொண்டான். 
"வேறொன்றுமில்லை. நம்மூர் கலம்பகக்  கதை தான். ஈற்றுப் பாடலுக்கு முந்தைய பாடலின் உரை நடை  வடிவம் என பண்டிதர் அளித்தது  இது. இதன்படி இந்த வருடம் வைகாசி அமாவாசை அன்று கலம்பகக் கூற்று உண்மையாகும் என்று தெரிகிறது ." சோமன் வாங்கி வாசித்தான்.

'சோமனின் ஆசைநாயகி, தாய் வழி சொந்தம் நீங்கி, சோமனைக் கூட வருங்கால், ஆதித்தன் சோமனை முகமோடு முகம் நோக்கிப் பிரித்த நள்ளிரவில், அவளிட்ட சாபம், சோமனை தாக்காது, சோமசுந்தரனையன்றோ பீடித்தது'

அவன் படித்து முடிக்கவும், ஆதித்தர் ஒரு முடிவுக்கு வந்தவராகக் காணப்பட்டார்.

"இந்த இரவு தான் அது. விடிந்து விட்டது.  நட, சென்றே பார்த்து விடுவோம்". 
மூவரும் காற்றாழி மண்டபம் நோக்கி  விரைந்தனர். ஆதிமூலமகாலிங்கம் இரண்டாக பிளந்து கிடந்தது. ஆதித்தர் " சிவசிவா " என அலறினார். வந்தியன் மக்களிடம் அறிவிக்க விரைந்தான்.

ற்றங்கரையில் " ஏட்டி நேத்து தான சொன்னேன். கல்லை உடிச்சுப் பிடாதன்னு. என்னத்தச் சொல்லிக்  கொடுத்தாளுவளோ அந்த பிக்குணிமாறுங்க" என ரோகிணியை வைது கொண்டிருந்தாள் அவள் அம்மா .