ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

போட்டிச் சிறுகதை 75

                  அந்த ஒரு கணம்!!

                      கைகளில் பிடித்திருந்த காபி டம்ளரையே உற்று நோக்கியபடி அமர்ந்திருந்த அவன் முகத்தில் கோபத்தின் தணல் தெரிந்தது. இதோடு பல முறை சொல்லியாயிற்று, தனக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லையென்று. ப்ரித்யேகமாய் காரணங்கள் எதுவும் இல்லையென்றாலும் திருமணம் என்பதன் மீது எதோ ஒரு வெறுப்பு அப்பிக் கொண்டிருந்தது. தன்னைக் கேட்காமல் தரகரிடம் சொல்லியதும் இல்லாமல் இன்று தன் கையில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை கொடுத்த போது உண்டான கோபம் வயதான தாயிடம் கொட்ட விரும்பாத வார்த்தைகள் உஷ்ணக் காற்றாய் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க அந்த பூங்காவின் அருகிலிருந்த பெஞ்சில் கையில் காபியுடன் அமர்ந்திருந்தான் பாஸ்கர்.

                         அன்னையின் செய்கையை தடுக்க வழிகளை யோசித்தபடி காபியை உறிஞ்சியபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் சப்தம் கேட்டது. சறுக்கு விளையாட்டில் ஏறிய ஒரு குழந்தை மெதுவாக மேலிருந்து கீழே சறுக்கி வந்தது. கீழே வரும்வரை அதன் முகத்தில் பூத்திருந்த புன்னகை இவனை எதோ செய்தது. கீழே விழுந்ததும் தனக்குத்தானே மழலை மொழியில் "டமால்" என்று சொல்லிக் கொண்டு எழுந்தது.. இரண்டரை வயதிருக்கலாம் அந்த குட்டிப் பெண்ணிற்கு, மீண்டும் ஓடிச் சென்று சறுக்கு விளையாட்டின் படிகளில் ஏறியது. அதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணும் ஆணும் அந்த குழந்தையை தூக்க "ஒன் மோர் ரவுண்ட் டாடி" என்று சொன்ன அந்த குழந்தையிடம் "இல்லம்மா, நீ நான் அம்மா எல்லாம் இப்போ தியேட்டர்க்கு போகலாம், சரியா?"  அந்த தந்தை தூக்கிக் கொண்டு நடக்க "அங்கே கோன் ஐஸ் வாங்கி தருவியாப்பா" என்று கொஞ்சும் மொழியில் கேட்க "ரெண்டு வாங்கித் தர்றேண்டா" என்றவாறு பூங்காவை விட்டு வெளியே சென்றனர். 

                          இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கருக்கு மனசுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு.. முன்பு குடியிருந்த கோபத்தின் தடம் மறைந்து சாந்தம் நிலவியது. மெதுவாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த அவனுக்கு சற்று முன் நடந்த சம்பவங்கள் தோன்றி மறைந்தன. வரும் வழியில் ஒரு பெண் ஸ்கூட்டியில் இவனைக் கடந்து செல்லும் போது இவனை உரசிவிட, பாஸ்கர் அப்போதிருந்த மன நிலையில் அந்தப் பெண்ணை ஆங்கிலத்தின் ஆறாவது எழுத்தில் துவங்கும் சொற்களைக் கொண்டு வசை பாடினான். அவளுடைய மன்னிப்பு அவன் குரலுக்கு முன் மெல்லியதாய் ஒலித்தது. தன்னை சுற்றி ஒரு கூட்டம் நிற்பதும் தனக்கெதிரே அந்தப் பெண் அழுது கொண்டிருப்பதையும் கூட ஓரிரு நிமிடங்கள் கழித்து தான் உணர்ந்தான். அப்போதும் கோபம் தீராத அவன் "உனக்கெல்லாம் வண்டி வாங்கி கொடுத்து அனுப்பினானே உங்கப்பன் அவன சொல்லணும்" என்று சொல்லிவிட்டு நகர அந்தப் பெண்ணின் விசும்பல்களைக் கூட அவன் சட்டை செய்யாது நடந்து சென்று பூங்காவில் அமர்ந்தான்.

                         இப்போது அந்த செயலை நினைத்து தன்னைத் தானே திட்டிக் கொண்டே பஸ்ஸில் ஏறினான்..ஏறியதும் அவனுக்கு உட்கார்வதற்கு ஒரு இடம் கிடைத்துவிட, "ஸார் கொஞ்சம் குழந்தைய வச்சுக்கறீங்களா, மடியில" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த போது அங்கே பூங்காவில் பார்த்த அதே பெண் கையில் அந்த குழந்தையுடன் நின்றிருந்தாள். சட்டென எழுந்து "நீங்க உட்காருங்க"  என்று அவளுக்கு இடம் கொடுத்து அவன் நின்றான்.. "தேங்க்ஸ் ங்க " என்றாவாறு அமர்ந்த அந்த பெண்ணின் மடியில் இருந்த குழந்தை அவன் விரல்களை பற்றிக் கொண்டது. பஞ்சு போன்ற அந்த விரல்களின் ஸ்பரிசம் அவனுள் இதுவரை காரணம் தெரியாமல் வெறுத்து ஒதுக்கிய திருமணம் எனும் பந்தத்தின் மேல் சட்டென்று மானாவரியான மதிப்பு தோன்றியது.

                           மனது முழுக்க சந்தோஷத்தோடு வீட்டை அடைந்த அவன் தாயிடம் சென்று, "அம்மா வாங்க போலாம் பொண்ணு வீட்டுக்கு". சந்தோசம் மேலிட அவன் மாற்றத்தை பார்த்த அவள் உடனே தரகருக்கும் டாக்சிக்கும் போன் செய்தாள்.. அப்பா, அம்மா, தரகர் சகிதமாய் புறப்பட்ட அவர்கள் கார் பகுதி தூரம் சென்ற போது அம்மா அவனிடம் "காலையில கோபத்துல பொண்ணோட போட்டோவ பாக்காமயே போயிட்டே." என்றபடி போட்டோவை கொடுக்க அவன்  வெடித்து அலறியபடி கூறினான் " வண்டிய நிறுத்துங்க"