தரிசான பரிசு
இந்தவருட முழுஆண்டுத் தேர்வு விடுமுறை, இவ்வளவு சீக்கிரமாக
முடிய நான் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததும் ஒரு காரணம். கொஞ்சகொஞ்சமாக
பெடல்போட ஆரம்பித்து, ரெண்டுகையையும் விட்டு பறவையின் சிறகைப்போல் காற்றில் கைவீசி
ஓட்டுமளவிற்கு கற்றுக்கொண்டுவிட்டேன்
.நதியாவாகியா நான் நாளை விடிந்தபின் ஊரின் பெரிய ஸ்கூலில்
ஆறாம் வகுப்பில் சேரப்போகிறேன். நானும் எவ்வளவோ புரண்டுபுரண்டு படுத்தேன், தூக்கம்
வரவில்லை.மனசு முழுசும் புது ஸ்கூல் பற்றிய கற்பனைகள் ஆக்கிரமித்திருந்தன
ஸ்கூல் ரொம்ப தூரம் என்பதால், சீக்கிரமே கெளம்பனும் என்று
அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன், ஆசைஆசையாய்
கிளம்பினேன். வேகவேகமாக குளித்துவிட்டு என்னிடமிருந்ததிலயே நல்ல உடையென்று
கருதுமொன்றை போட்டுக்கொண்டு வந்தேன்.
”இதையேண்டி போட்ட?” அம்மா திட்டிக்கொண்டே பீரோவைத் திறந்து
நான் சுமாரென ரகம் பிரித்த வயலட் நிற கவுனை நீட்டினார்.
”இதுவா? அய்யே.” முகச்சுழிப்பால் அந்த கவுனுக்கு மரியாதை
செய்துவிட்டு அம்மாவிடம் கெஞ்சினேன்.இது வேணாம்மா, தீபாவளி ட்ரெஸ்
போட்டுக்கறேன்மா..ப்ளீஸ்மா.அது பெரிய ஸ்கூல்லமா நெறையபேரு வருவாங்க, எல்லாரும்
புது ட்ரெஸ் போட்டுட்டு வருவாங்கள்ல..நானும் புதுட்ரெஸ் போட்டுக்கறேன்மா.
இரட்டைஜடையின் பின்னலை மஞ்சள் நிற ரிப்பனால்
முடிபோட்டுக்கொண்டே, வாயிலிருந்த சீப்பை எடுத்த அம்மா, அதில்லடா, ”உனக்கு
யூனிஃபார்ம் எடுக்கிற வரை நீ கலர் ட்ரெஸ்தானே போடனும், அப்புறம் சனிக்கிழமை ஸ்கூல்வைச்சா
அப்பவும் கலர்ட்ரெஸ்தான்,எதாவது விசேசம் வந்தாலும் அதையேதான் போடனும்,அதனால
கொஞ்சம் பழசாயிருக்கற ட்ரெஸெல்லாம் ஸ்கூலுக்கு போடு,அதுக்குள்ள அப்பா யூனிஃபார்ம்
எடுத்துருவார்”, என்றார். அப்றம் கலர் ட்ரெஸ் போடறன்னிக்கு நீ உன்னோட புது ட்ரெஸெல்லாம் போட்டுட்டு
போவியாம்,ம்ம்ம்..என் முகவாயைத் தடவி முத்தமிட்டு நகர்ந்துவிட்டார்..அப்போதைக்கு
அந்த முத்தம் மட்டுமே ஆறுதலாயிருந்தது. சமாதானமடையாத மனம், புது பள்ளிக்குப்
போகும் ஆர்வத்தின்பால் திசைதிரும்பியது.
ஐந்துவருட கடும் உழைப்பின் காரணமாக தேய்ந்துபோய் நிறைய
காயம் சுமந்திருந்த பழைய பேக்குக்கு பழிப்பு காட்டிவிட்டு, அப்பா வாங்கிக்கொடுத்த
புதுபேக்கில் புத்தகங்களை அடுக்கினேன். அப்போதுதான் கவனித்தேன், இன்னும் ரெண்டு
நோட்ஸீம்,மூணு புக்கும் வாங்கவில்லை.
பேக்கை அப்படியே போட்டுவிட்டு, அப்பாவிடம் ஓடினேன்.
அப்பா,அப்பா..இன்னும் கொஞ்சம் நோட்ஸீம் புக்கும்
வாங்கவேயில்லப்பா, மறந்துட்டிங்களா?.
கையிலிருந்த பணத்திற்கு மட்டுமே புத்தகங்கள் வாங்கியதை
மறைக்க நதியாவின் அப்பாவிற்கு மறதி உதவியது.
ஆமா நதியா. அப்பா மறந்தேபோயிட்டேன்.இதுக்குத்தான் அப்பவே
உன்ன ஒருபேப்பர்ல எழுதிகுடுக்கச் சொன்னேன்.சரிவிடு, இன்னிக்கு இதெல்லாம்
எடுத்துட்டு போ,இன்னும் ரெண்டுநாள்ல மீதி புஸ்தகம்லாம் வாங்கலாம்.
சரிப்பா.
உண்மையில் எனக்கு புத்தகமில்லையென்பது குறையில்லை,புது
பேக்கில் இன்னும் இடமிருக்கிறதே என்பதுதான்!!
டிபன் எடுத்து உள்ள வை, மிச்சவைக்காம சாப்பிடனும் .
இங்கமாதிரியே மெதுவா சாப்பிடாதே,அங்கயெல்லாம் மணியடிச்சதும் க்ளாஸ்க்கு போயிடனும்.
அம்மா இதையும் இதைத்தொடர்ந்து ஏதேதோவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்
என் கவனம் முழுக்க வாசற்படியை நோக்கியேயிருந்தது. எங்கள்
தெருவிலிருந்து அந்தப் பள்ளிக்கு நடந்துசெல்லும் பக்கத்துவீட்டு பெண்கள் எல்லாரும்
வந்து, நதியா.. வா.போகலாம் என அழைத்ததுதான் தாமதம், அவசரமாக பேக்கை மாட்டிக்கொண்டு
சாப்பாட்டுகூடையையும் தூக்கிக்கொண்டு துள்ளிக்குதித்து ஓடினேன்.
ஜெயந்தி, செல்லா, பாத்துக்கோங்க இவளை. மத்தியானம் ஒழுங்கா
சாப்பிட சொல்லுங்க. அம்மாவின் அட்வைஸ் இப்போது அவர்களை குறிவைத்திருந்தது.
சரி, சித்தி நாங்க பாத்துக்கறோம் என சொல்லிவிட்டு
ஜெயந்தியக்கா என் கைபிடித்துக் கொண்டாள்.
கதைபேசிக்கொண்டே உற்சாகமாய் நடக்க ஆரம்பித்தோம்.வீட்டிலிருந்து ரெண்டு
கிலோமீட்டர் தூரத்திலிருந்தது ஸ்கூல் .ஜெயந்தியக்காவும் செல்லாக்காவும் என் க்ளாஸை
தேடிப்பிடித்து என்னை உள்ளே அனுப்பிவிட்டுச் சென்றனர்.
ஜெயந்தியக்கா திரும்பவும் என் க்ளாஸீக்குள் வந்து,
சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சதும் கேட் கிட்ட நிக்கச்சொல்லிவிட்டு போனாள்.
ரெண்டுமூணு மிஸ் வந்தனர்.தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு
ஒவ்வொருத்தர் பேரும் ஊரும் அப்பாவின் தொழிலும் சொல்லச்சொன்னார்கள்.அப்பாவுக்கு கடலை
உருண்டை, மசால் கடலையெல்லாம் செய்யும் வியாபாரமென சொல்ல கொஞ்சம்
சங்கடமாயிருந்ததெனக்கு.
ஒருவழியாய் முதல்நாள் முடிந்தது, ஜெயந்தியக்கா சொன்னபடி
சமர்த்தாக கேட் கிட்ட போய் நின்னுக்கிட்டேன். மத்த பொண்ணுங்களலாம் வரவும்
பேசிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சோம். கொஞ்சதூரம் போனதும் எனக்கு கால்வலிக்க
ஆரம்பிச்சது.
செல்லாக்கா, கொஞ்சம் மெதுவா போலாமா எனக்கு கால்வலிக்குது,
கெஞ்சலாய் சொன்னேன்.
அதுசரி இப்பிடி நடந்து பழகினா, எப்ப வீடு போய்சேர,
செல்லாக்கா அலுத்துகிச்சு.
ஜெயந்தி அக்காதான் , என் சாப்பாட்டுக்கூடையை கைல வாங்கிட்டு
மத்தவங்கள முன்னே போகச்சொல்லிட்டு, என்னோட மெதுவா நடந்துவந்துச்சு.
என்னென்னமோ கதையெல்லாம் பேசிட்டு வீடு வந்து
சேர்ந்தோம்.வீட்டுக்கு போனதும், விற்க தயாரான இட்லி மாவைக் கலக்கிகொண்டிருந்த அம்மாவைக்
கட்டிக்கிட்டு, கால் வலிக்குதுனு சொன்னேன். அம்மாவுக்கு வருமானம், அந்த மாவு தான்.
அது ஒண்ணுமில்லமா, புதுசா ரொம்ப தூரம் நடண்ட்தையில்ல..
அதுனாலதான் வலிக்குது, தூங்கும்போது அம்மா தைலம் தேய்ச்சுவிடறேன் சரியாய்டும்,
விடு. அம்மா ஆறுதல்படுத்தினார்.
ஸ்கூலைப் பற்றிய புது மோகம் தீர்ந்து,நாட்கள் செல்லச்செல்ல
எனக்கு சக பள்ளிக்கூட பெண்களோடு நடப்பது பிரம்மப் பிரயத்தமானது. ஓட்டமும் நடையுமாக
அவர்களோடு சேர்ந்து போகவேண்டும். இதில்
நான் ஓடியும், அவர்கள் நடந்தும் வந்தனர் என்பது தான் சரியாயிருக்கும்.
இப்பிடி ஓட்டமும் நடையுமாக அவர்களைத் தொடர சிரமப்பட்டதைப்
பார்த்து, பெரும்பாலான நாட்கள் என் சாப்பாட்டுக்கூடையை ஜெயந்தி அக்காவேதான்
தூக்கிக்கொண்டு வருவாள்.தினமும் சாயந்திரம் வீட்டில் வந்து கால்வலியென நான்
புலம்புவது வாடிக்கையானது.
நீ ஒழுங்கா,சத்தா சாப்பிடாதனாலதான் கால்வலி,கைவலியெல்லாம்
வருது. அப்பாவின் திட்டு கலந்த பதில் இப்பிடியாக வரும்.
ஒருமாதம் ஓடியிருந்தது, புது ட்ரெஸ் என்று நான் கருதிய
எந்தன் சிவப்பு அம்பர்லா கவுன் அடிக்கடி போட்டதின் விளைவாக வெளுத்திருந்தது.
இன்றைக்கு அதைத்தான் போட்டிருந்தேன். வழக்கம்போல் மத்த பெண்கள் வாசலில் வந்து
கூப்பிட்டதும், பேக்கை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் சென்றேன்,
அப்பா, இன்னும் நாலு பேர்தான் யூனிஃபார்ம் எடுக்கல.இந்த
வாரமாச்சும் எடுத்துதாங்கப்பா. கவலையில் நனைத்து சோகத்தில் பட்டை தீட்டிய
வார்த்தகளை சொல்லிவிட்டு கிளம்பினேன்.
சிறிதுநேரம் கழித்துதான் கவனித்தேன், எங்களோடு வரும்
சரண்யா, அன்று வரவில்லை.ஜெயந்தி அக்காவிடம் காரணம் கேட்க, சரண்யா புது சைக்கிள்
வாங்கிவிட்டதாகவும் இனிமேல் எங்களுடன் வரமாட்டாள் எனவும் சொன்னார்கள்.
கவலையை சுமந்துகொண்டு போய் பள்ளியில் இறக்குவதும்,
பள்ளியிலிருந்து பரிசாய் கால்வலியோடு வீடு வருவதுமாக என் நாட்கள்
நகர்ந்துகொண்டிருந்தன.இன்னும் ஒருவாரத்தில் மிட்-டெர்ம் டெஸ்ட் வரவிருந்தது. பள்ளியின்
முதல்நாள் வாங்காமல் வைத்திருந்த நோட்ஸை நான் இன்னும் வாங்கவில்லை.
ட்யூசன் மிஸ் யாரிடமோ சொல்லி பழைய நோட்ஸ் ஒன்றை
வாங்கிக்கொடுத்தார்.அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனக்கு முன்பு ட்யூசனில் படித்த
யாரவது ஒருவரின் புத்தகங்களும் நோட்ஸீம் அடுத்தவருடம் என் கைகளில் வந்து சேர்வது
அவரின் பொறுப்பானது.
மிட்-டெர்ம் டெஸ்ட்டில் செகண்ட் ரேங்க்
வாங்கியிருந்தேன்.வீட்டின் பக்கத்தில் குடியிருந்த ஸ்கூல் டீச்சர் அப்பாவை
பார்த்து, உங்க பொண்ணு நல்லா படிக்கிறா, அவள என்கரேஜ் பண்ணி படிக்கவைச்சா பெரியாளா
வருவா, என்று சொல்லிவிட்டுப் போனார்.
அந்த வார்த்தைகள் அப்பாவிற்கு கொடுத்த ஊக்கத்தினாலோ, என்னமோ
யாரிடமோ கடன்வாங்கி ரெண்டேநாளில் புது யூனிபார்ம் வாங்கிகொடுத்தார்.அடுத்தநாள்
திரும்ப முதல் நாள் பள்ளிக்குச் சென்ற சந்தோசம் வந்து தொற்றிக்கொண்டது.கால்வலியை
தற்காலிகமாக மறக்கவும் அது உதவியது.
இரண்டுவருடம் முடிந்து இப்போது எட்டாம் வகுப்பு. இன்று
முதல் நாள் வகுப்பு. முன்புபோல் அம்மா அதிகமாக அறிவுரை எதுவும் சொல்லவில்லை,
போய்ட்டுவரேன்மா, போய்ட்டுவரேன்ப்பா என்பதைமட்டும் சொல்லிவிட்டு நானே கிளம்பிச்
சென்றேன். தம்பியை புது ஸ்கூலில் சேர்க்கும் காரணத்தால், இந்தவருடமும் என்
சைக்கிள் கோரிக்கைக்கு வீட்டில் தடா போடப்பட்டது.
முந்தி, எங்களோடு வரும் பெண்களில் யாரும் வரவில்லை. நான்,
ஜெயந்தி அக்கா மட்டும்தான். செல்லா அக்கா பத்தாவது வரை படித்துவிட்டதால் அவங்க
வீட்டில் நிறுத்திட்டாங்க. மாலதி இந்த வருசமிருந்து ஆட்டோல போயிடுமாம். நாம
ரெண்டுபேருதான் இனிமே. அன்றைய முக்கிய செய்தியை வாசித்தாள், ஜெயந்தி அக்கா.
அப்பிடியா அக்கா, என யோசனையில் ஆழ்ந்துபோனேன்.என் யோசனை
எப்போது பாதயாத்திரைக்கு சுபம் போடுவோம் என்பதைப் பற்றி சுற்றிக்கொண்டிருந்தது.
எங்களுக்குபின் ஏரியாவில் உள்ள பெண்களெல்லாம், ஒன்று
சைக்கிள் இல்லை ஆட்டோ என முடிவுசெய்த பின்னே எங்கள் பள்ளியை தேர்ந்தெடுத்திருந்தனர்.
அதனால் நானும் ஜெயந்தி அக்காவும் மட்டுமே தனிப்பெரும்பான்மையாய் பாதயாத்திரையை
நடத்திக்கொண்டிருந்தோம். இரண்டுவருட நடைபயணம், எனக்கு சில குறுக்கு பாதைகளையும்
கொஞ்சம் வேகமாக நடக்கவும் பழக்கப்படுத்தியிருந்தது.இப்போதெல்லாம் வீட்டிலிருந்து
20 நிமிடத்தில் ஸ்கூலுக்கு போய்விடுகிறேன், ஆனால் ஒவ்வொரு நாளும் லேட்டாக
வந்தவர்களின் கூட்டத்தில் நானும் இடம்பெறுவதை தவிர்க்கமுடிவதில்லை.
ஜெயந்தி அக்கா ஒருநாள் லீவு போட்டுவிட, தன்னந்தனியே
போய்க்கொண்டிருந்தேன் அப்போது எங்களோடு வந்துகொண்டிருந்த லட்சுமி, தன்
புதுசைக்கிள் என்மேல் உரச பக்கத்தில் வந்து பெல் அடித்தாள்.
திரும்பிப்பார்த்தேன், லட்சுமி அப்பிடியேதான் இருந்தாள் என நினைக்கிறேன்
சரியாக பார்க்கவில்லை. என் பார்வை முழுதும், அவளின் ப்ளூ கலர் லேடிபேர்டு மீது
மையல் கொண்டிருந்தது.
என்ன லட்சுமி, புது சைக்கிள் வாங்கிட்டியா என்றபடி அந்த
ப்ளுலேடியின் தேகத்தை மிக மென்மையாக தடவிப் பார்த்தேன்.
ம்ம், ஆமா, நதியா நல்லாருக்குல்ல, ரெண்டாயிரம் ரூபாய்னு
எங்கப்பா சொன்னார். சைக்கிளின் மினுமினுப்பு லட்சுமியின் கண்களில் பட்டு
தெறித்தது. சரி, ஏன் தனியா போற, எங்கூட வா, நான் உன்ன வைச்சு டபுள்ஸ் கூட்டிட்டுப்
போறேன், என்றாள். நானும் ஆசையாக அவளோடு சேர்ந்துகொண்டேன், இரண்டுபேருமாக மாத்திமாத்தி
அழுத்தி ஸ்கூல் போய் சேர்ந்தோம்.
அன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்குள்ள நுழைஞ்சதுலயிருந்து
தூங்கறவரை ப்ளுலேடி புராணம் பாடிக்கிட்டுருந்தேன்.என் புலம்பல் தாங்கமாலும்
யதார்த்தத்தை எனக்கு புரியவைக்கவும், அப்பா ஒரு கண்டிசன் போட்டார்.
நீ பத்தாவதுல 400 மார்க்குக்கு மேல வாங்கு, நான் கண்டிப்பா
உனக்கு சைக்கிள் வாங்கித்தரேன், சொல்லிக்கொண்டே சட்டையை ஹேங்கரில் மாட்டினார்
அப்பா.
பத்தாவதுலயா, அதுவரைக்கும் நடந்துதான் போகனுமா? முழுக்கமுழுக்க
ஏக்கம் தொக்கி நின்ற குரலில் கேட்டுவிட்டு விசும்பலோடு தூங்கிப்போனேன்.
அதன்பின் வந்த நாட்களில்
நான் வகுப்பில் எழுந்து நின்றால் இரண்டு காரணம் இருக்கும்.
1.எதாவது கேள்விக்கு சரளமாக பதில் சொல்லிக்கொண்டு.
2.எல்லாரும் ஃபீஸ் கட்டிய பின் இன்னமும் கட்டவில்லை என்பதை
குரல்கம்ம முணகிக்கொண்டு.
பத்தாம் வகுப்பும் ஆரம்பித்தது. காலம் தன் காலில் சக்கரம்
கட்டிக்கொண்டு பறந்தது.ரிசல்ட் பாத்து வர சென்ற அப்பாவை எதிர்பார்த்து அம்மாவும்
நானும் நொடிக்கொருதரம் வாசலைப் பார்த்தோம்.
வாசலில் செருப்பு சத்தம் கேட்டது, பக்கத்து
வீட்டுக்காரர்களெல்லாம் அப்பாவிடம் விசாரித்துமுடித்து அப்பா உள்ளே வரும்வரை நான்
இறுகக் கண்மூடி காதைப் பொத்தியிருந்தேன்.
மனசுக்குள், கடவுளே நிச்சயமாக 450 மார்க் மேலதான்
இருக்கனும், இடைவிடாமல் பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன்.
என்னங்க, எவ்ளோ மார்க்? பேப்பர்ல எழுதி வாங்கியாந்திங்களா?
அம்மாவின் கேள்விக்கு பதிலாக ஒரு சின்ன துண்டு காகிதத்தை நீட்டினார், அப்பா.
எலக்ட்ரான்களும் புரோட்டான்களும் மோதிக்கொண்டிருந்தன என்
பார்வைபுலத்தில்.
மெல்லமாக அப்பா சொன்னார், என்ன பரீட்சை எழுதுன, 45 மார்க்க
விட்டுட்டு வந்துருக்க.
அழத்தொடங்கிய பின்தான் அர்த்தம் புரிந்தது, 45 மார்க் ஆ,
எந்த சப்ஜெக்ட்ல பா? கேவிக்கொண்டே கைநீட்டி அந்த துண்டு பேப்பரை வாங்கினேன். என்
பார்வை பேப்பரில் பதியும்போது என்னுயரம் சற்று கூடியிருந்தது, அப்பா என்னை
தூக்கியிருந்தார். பேனாவின் நீலநிற ரத்தத்தில் ”மொத்தம் மதிப்பெண் =455” என்று எழுதியிருந்தது.
வீடு முழுக்க பரவசம் பரவியிருந்தது.ஜெயந்தி அக்காவும்
பூங்கொடியும் ஓடிவந்தனர்.
நதியா. நீ தான் நம்ம ஏரியாலயே நெறைய மார்க் வாங்கியிருக்க.,
இருவரும் என்னைக் கட்டிக்கொண்டனர். தெருவில் இருப்பவர்களெல்லாம் வந்துவந்து
வாழ்த்துசொல்லி போனார்கள். சந்தோச சப்தங்கள் ஓய்ந்ததும், அப்பாவிடம் சைக்கிள்
புராணத்தை ஆரம்பித்தேன்.
அப்பா அமைதி காத்தார், பின் தொண்டையை செருமிக்கொண்டு,
வாங்கலாம்பா, கடனவொடன வாங்கியாச்சும் இந்ததடவ சைக்கிள் வாங்கிடலாம், என் கையை
பிடித்துக்கொண்டு சொன்னார்.
ஸ்கூல் ரிஓப்பனாக இன்னும் இரண்டு மாசமிருந்தது, அப்பாவிடம்
எப்படியோ அனுமதி வாங்கி, ஒரு எஸ்டிடி பூத்தில் வேலைக்குபோகத் தொடங்கினேன். என்
பங்காக சைக்கிளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில்.
சரியாக ஸ்கூல் தொடங்கி மூன்றாவது வாரம், அப்பாவுக்கு உடம்பு
சரியில்லாமல் போனது. மதுரை ராஜாஜி ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி அம்மா கூட தங்க
வேண்டியதானது.
அப்பாவின் வியாபரமும், அம்மாவின் கைத்தொழிலும் என்னை நம்பி
விடப்பட்டிருந்தது. மாசக்கணக்கில் தங்கியிருந்து கேன்சர் என்று கண்டுபிடித்து
ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.
மாசத்துக்கொருதடவ அம்மா வந்து வீட்டுக்கணக்கும், வியாபாரக்
கணக்கும் சரிபாத்து வேண்டியதெல்லாம் வாங்கிப்போட்டுட்டு போனாங்க.
இந்தக் களேபரத்தில் என் சைக்கிள் ஆசை பரதேசம் போய்விட்டது.
சேருமிடம்
தெரியாத பாதங்களுக்கு பாதை பற்றி பெரிதாய் என்ன கவலை இருக்கப்போகிறது.
ஒன்பதரைக்கு ஸ்கூல் என்றால், நான் வீட்டிலிருந்து ஒன்பதேகாலுக்குத்தான்
கெளம்புவேன்.அதுவரை வேலைகள் சரியாக இருக்கும். சாயந்திரம் நாலேகாலுக்கு
முடிகிறதென்றால் நாலரைக்கு வீட்டிலிருப்பேன், அடுத்த வேலைகளை கவனிக்க.
வீட்டுக்குள் வந்ததும், சூரியம் எஃப் எம் போட்டுவிட்டு
வேலைகளை ஆரம்பிப்பேன்.அரிசி களைந்து கிரைண்டரில் போட்டுவிட்டு, தண்ணிபிடித்து
வைத்து, தம்பியை வசூலுக்கு அனுப்பிவிட்டு,வீட்டுக்கு எள் இடிக்கவரும் யசோதா
அக்காவுக்கு காசு கொடுத்து, இடித்ததை வாங்கி, உருண்டைகளாக உருட்டி பத்திரப்படுத்தி
இடையிடையே கிரைண்டரை கவனித்து அடுத்தநாளுக்கான மாவை ஆட்டிமுடித்தும், அந்தநாளுக்கான
மாவை விற்றுமுடித்தும் ஆயாசமாகையில் மறுநாள் சமையலுக்கானதை எடுத்துவைக்க ஞாபகம்
வரும், மணி பணிரெண்டைத் தொட்டிருக்கும்.
அதிகாலை நாலரைக்கு முழிப்புதட்டும். சாயந்திரம்
விக்கவேண்டிய மாவை ஆட்டிவைத்து, சமையலை முடித்து, தம்பியை ஸ்கூலுக்கு அனுப்பி,
வீட்டைபூட்டி கெளம்பும்போது மணி ஒன்பதரையாகி விடும் சிலநாள்களில்.
பதினொன்றாம் வகுப்பில் என்ன படித்தேன் என்பதே எனக்கு
நினைவில் இல்லை.ரெக்கார்ட் நோட்டெல்லாம் கூட பள்ளித்தோழிகள்தான் ஆளுக்கொன்றாய்
எழுதிமுடித்து தந்தார்கள்.எப்படியோ பெயிலாகாமல் தப்பித்துக்கொண்டிருந்தேன்.
பதினொன்றாம் வகுப்பு முடியும் தருவாயில், அப்பா டிஸ்சார்ஜ்
ஆகி வீட்டிற்கு வந்தார். பாதிக்குமேலே இளைத்திருந்தார். குரலில் முன்புபோல
கம்பீரம் இல்லை. இதனிடையே என் சைக்கிள் ஆசை துருயேறிப் போயிருந்தது.
பனிரெண்டாம் வகுப்பு தொடங்கும்போது, பாடத்திற்கொன்றாக நாலு
ட்யூசன் இருந்தது. காலை நாலரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி ஐஞ்சரைக்குள்
ட்யூசன் போகவேண்டும். எட்டு மணிக்கு ரெண்டு ட்யூசன் முடிந்துவிடும். ஸ்கூல்
ஒன்பதரைக்குத் தான். ஆனால் அங்கிருந்து வீட்டுக்குவந்துசெல்ல முடியாது. அதனால்,அங்கிருந்தே
அப்பிடியே ஸ்கூலுக்கு போய்விடுவேன். அம்மா வேறு யாரிடமாவது சாப்பாட்டை
கொடுத்தனுப்புவார்கள்.
அப்பாவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டிருந்தது,
நைட்டெல்லாம் கூடயிருந்து பாத்துவிட்டு நான் கெளம்பும்போதுதான் அம்மா லேசா கண்
அசந்திருப்பார்கள்.அதுமாதிரி நேரங்களில் அப்பா என்னோடு தெருமுனை வரை பேசிக்கொண்டே
நடந்துவருவார், தெருமுக்கு கடையில் டீயும் பன்னும் வாங்கி குடுத்துவிட்டு, நம்ம
சைக்கிள்கடை தண்டபானி கிட்ட செகண்டட் சைக்கிள் ஒண்ணு சொல்லிருக்கேன்பா, சீக்கிரம்
வாங்கனும், எவ்ளோ தூரம் நடந்து சிரமப்படுற, என்பார்.
சின்னசின்ன அறிவுரைகள், டீக்கடை மாஸ்டரிடம், ஆடையை
வடிகட்டிட்டு குடுப்பா, புள்ளைக்கு புடிக்காதெனும் அவரின் வாஞ்சையான குரல்,
இதெல்லாம் அப்பாவிடம் என் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.
என்றேனும் லேட்டாகிவிட்டால், நான் நடக்கும் வேகத்துக்கு
ஈடுகொடுக்க முடியாமல், அவருக்கு மூச்சு திணறும். நடைபழகிக் கொடுத்தவர் என்னோடு
நடக்கவியலாமல் திணறுவதைப் பார்க்க, மனதைப் பிசையுமெனக்கு.
நானே போய்க்கறேன், நீங்க இருங்கப்பா எனச்சொன்னாலும்
கேட்கமாட்டார். வயசுப்புள்ள இந்நேரத்துல தனியா போகவா, என்னால முடிஞ்சவர கூடவரேன்
வா, என்பார்.
ஸ்கூலில் யாருடைய லேடிபேர்டு சைக்கிளையாவது பார்க்க
நேர்கையில், தூசியாய் என் பார்வை அதன்மீது படிந்து மீளுவதை மட்டும் தவிர்க்க
இயலவேயில்லை.
ஸ்கூல் ஒவரானதும் கெமிஸ்ட்ரி ட்யூசன் முடித்துவிட்டு,
அங்கிருந்து மேத்ஸ் ட்யூசன் போக வேண்டும், நடந்துவந்தால் லேட்டாகிவிடுமென்பதால்
தோழி சுஜியோடு சைக்கிளில் வந்துவிடுவேன்.
அன்று, கெமிஸ்ட்ரி ட்யூசன் முடிந்து எனக்காக சுஜியும்
இன்னும் சிலரும் காத்திருக்க, எதோ சந்தேகம் கேட்ட ட்யூசன் பையனிடம் பேசிவிட்டு
வந்ததில் லேட்டாகிவிட்டது.அவசரமாக பேக்கை தூக்கிக்கொண்டு சுஜியைத் தேடினால்,
முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க, அந்த ரோட்டின் கடைசியில் நின்று இருந்தாள்,
மற்றவர்கள் அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
சாரி, சுஜி, அந்தப் பையனாலதான் லேட் ஆகிடுச்சு.
உனக்காக நான் வெயிட் பண்ணிட்டுருந்தா, நீ எல்லார்கிட்டயும்
பல்லகாட்டிட்டு சாவகாசமா வா. ச்சே, இன்னிக்கு நானும் லேட்.
அவளின் வார்த்தை மிகமோசமாக என்னைத் தாக்கியது.உதவி
வாங்குவர்களுக்கு இருக்கவேகூடாத தன்மானம் என்னில் துளிர்விட்டது.
இத்தன நாள் ஹெல்ப் பண்ணினதுக்கு ரொம்ப தாங்க்ஸ்,இனிமேல்
எனக்காக வெயிட் பண்ணவேணாம்.அவமானத்துக்கும் அழுகைக்கும் இடையே வார்த்தைகள்
வெளிப்பட்டன.
போனாபோகுதுனு ஹெல்ப் பண்ணின, நீ இதுவும் பேசுவ, இன்னமும்
பேசுவ. என்னமோ பண்ணு,நான் போறேன். பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டாள்.
இத்தனை நாள் என்னுள் பொதிந்திருந்த சைக்கிள் ஆசை, அழுகையாய்
வெடித்தது. ட்யூசனுக்கு போகவில்லை. சிந்தனை முழுக்க கிடைக்காத சைக்கிளை நினைத்துத்
தேம்ப கால்கள் என்னை வீட்டுக்கு இழுத்துச்சென்றன.
அம்மா, யாருக்கோ பாத்திரத்தில் மாவை ஊத்தி வெளியேவைத்து
விட்டு, என்னடி, உடம்பு சரியில்லயா? முகம் ஒரு மாதிரியிருக்கு, ட்யூசனுக்கும்
போகாம வீட்டுக்கு வந்துட்ட என வரிசையாக கேள்வியை அடுக்கினார்.
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த உள்ளத்தின் ஆதங்கம் அத்தனையும்
அம்மாவின் மேல் திரும்பியது.
என்னால முடியலமா, எத்தன வருசமா கேட்டேன், ஒரு சைக்கிள்
வாங்கிக் கொடுத்திங்களா? என்னால நடந்தே சாகமுடியலமா. யார்யார்கிட்டயோ கெஞ்சி
என்னால அங்கயும் இங்கயும் அலைய முடியாது.
நதியா, என்ன ஆச்சு, ஏன்மா இப்பிடி பேசற என்ற அம்மாவிடம்
மேற்கொண்டு எதுவும் பேசமுடியவில்லை.துக்கத்தையாவது தொண்டைக்குழியோடு
அடைத்துக்கொள்ளலாம், திமிரும் கண்ணீரை எதைக்கொண்டு நிறுத்துவது.
கண்களில் நீர்த்திரை மறைக்க அப்பாவின் முகம் நிழலாக
தெரிந்தது. எதோ பேச ஆரம்பித்து இருமலாக ஓய்ந்து, மூச்சு இளைக்க என்னைப்
பார்த்தார். அந்த கண்ணில் இயலாமை அப்பியிருந்தது.
அடுத்தநாள் எந்த ட்யூசனுக்கும் போகாமல் ஸ்கூலுக்கு
வந்திருந்தேன். சுஜி வந்து கோபமா, சாரி நதி, மன்னிச்சுடு என்றாள். திரும்பவும்
அழுகைதான்.
மதியானம் செகண்ட் ப்ரீயட் நடந்துகொண்டிருந்தபோது, ப்யூன்
அண்ணா வந்து என் பேர் சொல்லிக் கூப்பிட்டார். என் பெஞ்சிலிருந்து வெளியே
வருவதற்குள், அபாயத்தின் அறிகுறியாக அசாதாரணமான உணர்வொன்று என்னை ஆட்கொண்டது.
நீ தான் நதியாவாமா? பரிதாபம் கலந்த பார்வையால் அளந்தபடி
கேட்டார்.
ஆமாம்,என்ன அண்ணா?
உங்க வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லயாமா?
எங்க அப்பாவுக்குத் தான் உடம்பு சரியில்லனா. ஏன்
கேட்கறீங்க.
அதுவந்து, அவர் மெல்ல பீடிகைபோட என் நெஞ்சு பத்துமடங்கு
அதிகமாக துடிக்கத்தொடங்கியது.
என்னன்னா, சொல்லுங்க.
உங்க அப்பாக்கு உடம்பு சரியில்லமா, உன்ன வீட்டுக்கு வரச்
சொன்னாங்க, நீ கெளம்பு. HM பெர்மிசன் குடுத்துட்டாரு.
எனக்கு சரியாக இன்னதென்று எதுவும் பிடிபடவில்லை, ஆனால்
இயல்பாக இருக்கவிடாமல் எதோ ஒன்று தடுத்தது. பக்கத்துவீட்டு சாமி அண்ணா, ஆட்டோவோடு ஸ்கூல்
வாசலில் நின்றிருந்தார்.என்னவென்று அந்த அண்ணாவிடம் விசாரிக்கத் தோணவில்லை.
தெருவில் ஆட்டோ நுழைகையில், எல்லா வீட்டு வாசல்களிலும்
தலைகள் தென்பட்டன.
மூளை எதையோ புரிந்துகொண்டது, அதை ஏற்காமல் இதயம் மறுக்க, நெஞ்சின்
அடியாழத்திலிருந்து வலியின் வீரியத்தோடு ”அப்பா” என அலறிக்கொண்டே வீட்டுக்குள்
ஓடினேன்.
அப்பா இருமலிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும்
விடைபெற்று, நெடுநாளுக்குப் பின் நிம்மதியான நிரந்தரமான தூக்கத்தை
தழுவியிருந்தார்.
அம்மாவின் கைகளுக்குள் நானும் தம்பியும் அடைக்கலமாகி
அழுதுகொண்டிருந்தோம்..கதறல் எங்கள்வீட்டு இசையாகியிருந்தது, மரத்துப்போன
உறவுகளையும் மறந்துபோன உரிமைகளையும் புதுப்பித்துக்கொண்டு உறவினர்கள் வர
ஆரம்பித்திருந்தார்கள்.
அப்பாவின் பேர் சொல்லி, ஒருவர் கேட்பதாக கீதா அத்தைசொல்ல
வாசலுக்கு வந்தேன், குள்ளமான ஒருவர் சித்தப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
நான், சைக்கிள் கடை தண்டபாணிங்க, உங்க அண்ணன் செகண்டட்
சைக்கிள் சொல்லிருந்தார். அவர் கேட்ட வெலைல இன்னிக்குதான் ஓண்ணு கடைக்கு
வந்துச்சு, அதான் கையோட குடுத்துட்டு போலம்னு வந்தேன்,அதுக்குள்ள இப்பிடியாகி
போச்சு. ஒரு சைக்கிளை கைகாட்டி,இந்தாங்க சாவி, என ஒப்படைத்துவிட்டு சென்றார்.
என் துக்கம் மொத்தமும் உயிர்பெற்று அந்த கருப்புநிற
சைக்கிள் ரூபத்தில் வாசலில் நின்றிருந்தது.இத்தனைவருட சைக்கிள் ஆசை, இப்போது பல
ஜென்ம வெறுப்பாக மாறியிருந்தது. எனக்கு நீ வேண்டாம், என் அப்பா போதுமென பலநாட்கள்
அந்த சைக்கிளை பார்த்து,அரற்றியிருக்கிறேன்.கடைசிவரை நான் அந்த சைக்கிளை
ஓட்டவில்லை,யாருக்கும் கொடுக்கவும் மனமில்லை.