ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 6 January 2014

போட்டிச் சிறுகதை 59

ச்சேச்சே..என்ன இது ஈனப்பொழப்பு..!
(சிறுகதை)

"வறுமைதான் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறதென்றால், பாழாய் போன இந்த வெயிலும் மனுசனை போட்டு இந்த வறு வறுத்தெடுக்குதே..ச்சே என்ன இது ஈனப்பொழப்பு..."

சொக்கன் ஒட்டிப்போன வயிற்றைத் தடவியவாறே அந்த பொட்டல் வெளியில் நடந்துகொண்டிருந்தான்..

இன்னும் நான்குமைல் தூரம் நடக்க வேண்டும்... உச்சிவெயில் வறுத்தெடுத்தது...காலிப் போட்டிருந்த தோல்வார் செருப்பு அறுந்துவிடும்போலிருந்தது...வெயிலில் வேலை செய்து கறுத்துப்போயிருந்த உடம்புதான் என்றாலும் இன்று என்னவோ வெயில் அதிகமாக சுட்டெரிப்பதாக தோன்றியது.

நிழலில் நின்று இளைபாற நினைத்தாலும், அந்த பொட்டல் வெளி மேட்டுப் பாங்கான நிலப்பகுதியில்,  நிழலுக்கு ஒதுங்க ஒரு மரம் கூட இல்லை.. அங்கொன்றும் இங்கொன்றுமாக பனை மரம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது..  அதுவும் பாதையைவிட்டு நெடுந்தொலைவில் இருந்தது.

அந்த மரத்தடிக்குப் போவதைவிட கொஞ்சம் தூரம் நடந்தால் பாதையாவது முடியும்.. எப்படியும் பாதை ஓரத்தில் மரம் இல்லாமலா போய்விடும்... எப்போதோ வந்து போன பாதை அது.. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் தடத்தின் அருகிலேயே ஒரு பெரிய பனைமரம் இருந்ததாக. நினைவு. அதனடியில் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு போகலாம் என்று மனது சொல்லிக்கொண்டது.

ஆனால் நடக்க நடக்க.. அந்த ஒற்றைப் பனைமரம் இருக்கும் பக்கமாக பார்வையை செலுத்தினான். ஆனால் பனைமரம் கண்ணணுக்குத் தெரியவேயில்லை..

அங்கேதானே இருந்தது.. அந்த மரம் என்னவாகியிருக்கும்....? சிந்தனையோட்டத்துடன் சென்று அந்த இடத்தை நெருங்கியபோதுதான், அதை வெட்டியிருப்பது தெரிந்தது..

"அடடா...இந்த மரத்தை நம்பிதானே வந்தோம்... இதையும் வெட்டிப்புட்டாய்ங்களே..." என்று மனதில் சிறு கலக்கம் இருந்தது.. தொடர்ந்து நடந்து வந்ததில் உடம்பு களைத்துப்போயிருந்தது.. நிழலைத் தேடியது மனசு....

நல்லவேளை பனைமரத்துக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன பனை மரம் முளைந்திருந்தது.. நான்கடி உயரம் இருக்கும்... அதிலும் சுற்றிலும் மட்டையை வெட்டியிருந்தார்கள்..ஒடிசலாக இருந்தது. மூன்று மட்டைகள் (பண ஓலைகள்) மட்டுமே அதிலிருந்தது....நல்லவேளை அந்த மட்டை கொஞ்சம் அகலமாக இருந்தது.. அதை அப்படி வளைத்து விரித்து அகலமாற்றி, ஒலையின் அடிப்பகுதி தண்டை ஒடித்து குடை மாதிரி செய்தபோது, கீழே கொஞ்சமா நிழல் கிடைத்தது.  அந்தநிழலில் உட்கார்ந்த போது உடல் முழுவதும் வெயில் படாமல் சுருண்டு உட்கார்ந்தான்...

ஏன்தான் நமக்கு இத்தனை வம்பு.. திரும்பி போயிடலாமா? எதுக்காக இப்போ போகணும்? ச்சே.. என்ன இது ஈனப்பொழப்பு....

மனம் சிந்தித்துக்கொண்டே இருந்தது...கடந்த முறை கூட இப்படிதான்...எப்படியோ சுதாரித்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்கே திரும்பிவிட்டான். இந்த  முறையும் போய் பார்த்தவுடனே கிளம்பிடணும்.. எப்படியும் திரும்பினால் சாமநேரத்துக்கு முந்தியே வீடுபோய் சேர்ந்திடலாம்....!

பார்க்கலாம்..பார்க்கலாம்... எப்படியும் பொழுது சாயறதுக்குள்ள அங்கே போயி சேர்ந்திடலாம்....

மனசுக்குள் எண்ண ஓட்டங்கள் போய்க்கொண்டே இருந்தது...வெயில் பாலைவனத்தில் இருப்பதுபோல தகித்தது. வயல்வெளிகளில் வெறுங்கால்களோட ஏர் உழுது...ஏர் உழுது... கால் பாலம்பாலமாக வெடித்து இருந்தது.

கொஞ்ச நாட்களாக செருப்பில்லாமல் வெளியில் செல்ல முடிவதில்லை... பாதத்தின் அடிப்பகுதி மட்டும் தேய்ந்திருந்தது. இந்த முறை கோடை உழவு செய்த போதுகூட காலில் கொப்புளம் போட்டுவிட்டது... வயல்வெளியிலிருந்த கட்டை ஒன்று ஆழமாக ஏறியதில் இரத்தம் சொட்ட சொட்ட கொட்டியதுதான் மிச்சம். அப்படியே உழுத மண்ணை எடுத்து அப்பியதில் மண் முழுவதும் இரத்த சேறாக மாறியது.

அதையெல்லாம் பொருட்படுத்த எங்கே நேரம்.. எப்படியும் பொழுதுக்குள் உழவை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது..

பொழுதுக்குள் உழவு முடிந்துவிட்டது.. ஆனால் கட்டை ஏறிய காலில் மண் அப்பிய இடத்தில் "விசுக் விசுக்" என்று அன்று இரவிலிருந்தே வலிக்கத் தொடங்கியது..

அதன் விளைவு இப்போதுதான் தெரிந்தது..நடக்க முடியவில்லை.. வெயிலுக்கு பயப்பாடமல் இருந்த காலும், உடம்பும் இப்போது வெயிலுக்கு கொஞ்சம் பயப்படவே செய்தது...

சிந்தனைக்கிடையே திடீரென நினைப்பு வந்தவனாக மீண்டும் எழுந்து நடந்தான்.... நடையென்றால் அதுதான் நடை.... வாழ்க்கையில் ஒரு வேகத்துடன் கூடிய நடை அது.. மனதிற்குள் இருந்த அந்த எண்ணமே அவனை வேகமாக நடக்க வைத்தது...

இதோ.. பொழுதும் சாயத்தொடங்கிவிட்டது.. வெயிலின் கடுமை குறைந்திருந்ததாலும், மணற்பாங்கான அந்த நிலப்பரப்பில் இன்னும் சூடு ஆறவில்லை...

நடையை சற்று எட்டிப்போட்டான்.....சூரியன் பழுத்த பழமாக பாதிமறைந்த நிலையில் இலேசாக இருள் கவ்வத்துவங்கியது.  கண்ணுக்கு அந்த ஒற்றைக் குடிசை கருமையாக இருளுடன் கலந்து தெரிந்தது.

குடிசை அடைந்தபோது,

"வா மச்சான்.. இப்பதான் வந்தியா..  கொஞ்ச நேரமா வந்திருக்கலாம் இல்லை... " நிழலுருவாய் தெரிந்த அந்தப் பெண்ணின் வார்த்தைகளில் ஆசையும் பாசமும் ததும்பி வழிந்தது.

"குடிக்க முதல்ல தண்ணீ கொடு பார்வதி...நாக்கெல்லாம் வறண்டு போயிடுச்சு...."

" அய்யோ மச்சான்.. நடந்தேதான் வந்தியா.. ஏஞ்சாமி....ஏந்தங்கம்....காலு என்னத்துக்கு ஆறது..."

"காலுக்கெல்லாம் ஒன்னுமில்ல புள்ள.... ஒழவோட்டறப்பதான் சின்ன கட்டை ஒன்னு ஏறிடுச்சு..சீமெண்ணைய் வச்சா சரியாப் போயிடும்...கொஞ்சம் இருந்தா கொடேன்..."

"இரு மச்சான்.. நானே போட்டுவிடறேன்...."

"வேண்டாம் புள்ள... நீ கொடு..நானே சீமெண்ணைய தடவிக்கிறேன்..."

அவளின் கண்களில் கண்ணீர் பொலபொலவென்று அந்தி சாயும் நேரத்தில் மின்னியது...உடனே கண்ணைத் துடைத்துக்கொண்டு,

"பசியோட வந்திருப்பீங்க... செத்த நேரம் இருங்க...கோழி அடிச்சு குழம்பு வச்சிடறேன்....இருந்து சாப்பிட்டுப்போங்க மச்சான்...இந்த அன்புக்குத்தான், இவ்வளவு ஆழமான உள்ளார்ந்த இவ்வளவு தூரம் நடந்து வந்தது.. இப்போது நடந்த வந்த களைப்புத் தெரியவில்லை..  மல்லாக்க வானத்தையே பார்த்தான்.. வானத்தில் நட்சத்திரங்கள் முளைக்கத்தொடங்கவிட்டிருந்தன....

காற்று நன்றாக வீசியது.... வெயிலில் நடந்து வந்த உடம்பிற்கு அது சுகமாக இருந்தது...அப்படியே படுத்திருந்தான்.... அப்படியே கண்ணயர்ந்தபோது, அவளின் குரல் எழுப்பியது..

"ஏம் மச்சான்..எழுந்திருங்க.. சாப்பிடுவீங்க..."

கோழிக்குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது....நல்ல வாசனை....சாப்பிட்டு முடித்தான்... இதமான காரத்தில் நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டதில் மூக்கில் சளி தண்ணீராக ஒழுகியது.. தலையில் கட்டியிருந்த முண்டாசை எடுத்து மூக்கை ஒற்றிக்கொண்டான்...
கை கழுவிவிட்டு, எழுந்தான்....

"சரி..நான் கிளம்பறேன் புள்ள...உன்னைப் பார்த்து ஆறு மாசத்துக்கு மேல ஆகிடுச்சா..அதுதான் வந்தேன்...நீ நல்லா இருக்கியில்ல..எனக்கு அதுவே போதும்புள்ள..."

"ஏம்மச்சான் இருந்துட்டு காலம்பற போலாமில்ல...."

"அய்யோ வேண்டாண்டி ஆத்தா..இப்பவே உங்கக்கா நான் உன்னை வச்சிகிட்டேன்னு தினமும் என்னைப் பேசி பேசி சாகடிக்கிறா...சரி..சரி... உன்கிட்ட ரூவா எதுனாச்சும் இருந்தா கொடேன்.. பசங்களுக்கு முழுப் பரீட்சையாம்...பணம் எட்டு ரூவா கட்டணும்ன்னு கேட்டாங்க. .."

முந்தானையில் முடிந்து வைத்திருந்த அந்த கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தாள்... உடனே ,

இருங்க மச்சான்.. பிள்ளைங்களுக்கு கொண்டு போய் கொடுங்க என்று நன்கு பழுத்து வெடித்திருந்த வாழை நார் போட்டு சுற்றி கட்டியிருந்த அந்த வெள்ளரிப்பழங்களை எடுத்துக்கொண்டு வந்தாள். பலாப்பழங்களைப் போல பெரிய பெரிய அந்த பழங்களை அந்த சனல் பையில் போட்டு அவனிடத்தில் கொடுத்தாள்... கூடவே தூக்குச்சட்டியில் கோழிக்கறி குழம்பும்..

"மாச்சான் போயே ஆகணுமா?... இருட்டுல எப்படிய்யா போவே....ஏதாவது பூச்சி, புழுவு கடிச்சா என்ன பண்ணுவ...?"  அவளின் அன்பில் அவளது ஏக்கமும் இருந்தது...

"உங்க அக்கா பேசறது உண்மையாகிடாதா?....சொக்கன் சிரித்துக்கொண்டான்.... கையில பந்தம்  வச்சிருக்கேன்.... எனக்கு பயமில்லை.... எப்படியும் விடியற்காலைக்குள்ள வீடு போய் சேர்ந்திடுவேன்... பசங்களுக்கு பரிட்சைக்கு கட்ட பணம் இல்லை..அதையும் வாங்கிட்டுப்போலாம்னுதான் வந்தேன்...." அவன் கண்களிலும் கண்ணீர் இலேசாக வந்தது...

அது அன்பின் வெளிபாடாக இருந்தது...

"சரி.. புள்ள நான் இப்பவே கிளம்பினால்தான் விடியற்காலமாவது வீட்டிற்கு போ முடியும்... உங்கக்காகிட்ட வேற நான் சொல்லவே இல்லை... சொன்னா அவ விடமாட்டா. பிள்ளைகளுக்கு பரிட்சை முக்கியம்தானே..அதுதான் என்ன செய்யறது தெரியாம , உன் நினைப்பு வந்தது.. உடனே வயக்காட்டிலிருந்து அப்படியே வந்துட்டேன்...."

சொக்கன் மீண்டும்... திரும்பி நடக்கத் தொடங்கினான்.. தலையில் வெள்ளரிப்பழங்கள்.. கையில் கோழிக்கறி சோற்றுடன் தூக்குச் சட்டி... காசை பத்திரமாக முண்டாசில் முடிந்து வைத்துக்கொண்டான்....கையில் பந்தந்தை எரியூட்டியபடி எட்டி நடைபோட்டான்......

தலையில் இருந்த பாரம் தெரியவில்லை...வழியில் பயமில்லை... தீப்பந்தத்தின் வெப்பம், வெயிலைவிட அப்படியொன்றும் கடுமையாக இல்லை... விடுவிடுவென நடந்தான்....

காலில் "விசுக், விசுக்" வலியும் இல்லை... பிள்ளைகளுக்குத்தான் பரீட்சைப் பணம் கிடைத்துவிட்டதே.. அந்த சந்தோஷம்...

வீட்டை அடைந்தபோது கோழி கூவ, விடிய  ஆரம்பித்திருந்தது.. தலையில் வைத்திருந்த வெள்ளரிப்பழங்களை இறக்கி வைத்தான்...

பிள்ளைகள் ஓலைப் பாயை விட்டு விலகி அந்த குடிசையின் மண் தரையில் படுத்திருந்தார்கள்.. அழகாக எடுத்து ஓலைப்பாயில் கிடத்தினான்...

நாளைக்கு அந்த ஒரு பாத்தி தக்காளி பயிருக்கு உரம் வாங்கணும்... மழைபெஞ்சா விதை விதைக்கணும்.... பக்கத்துக்காட்டுகாரரிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டணும்....என்ன செய்ய?  மாட்டுக்கு லாடம் கட்ட ஆசாரிய வரச்சொல்லணும்.. அவனுக்கு உடனே காசுகொடுக்கணும்..

எண்ணங்கள் அவனது மனநிலையைவிட வேகமாக ஓடியது.... படுக்கலாமா என்று யோசித்தபோது விடிந்துவிட்டது...

கண்விழித்த அவனுடைய மனைவி, ருத்ரவ தாண்டம் ஆடினாள்..."ஏய்யா..ராப்பூரா எவகிட்ட போன...கொழுந்தியாள பார்க்க போனியா..இல்ல....ஓ..... " நாராசமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன..

வழக்கமான வேலைகளைச் செய்ய நினைத்திருந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் கோபக்கணலை மூட்டியது.. பிள்ளைகள் எழுந்துவிட்டார்கள்...சூரியன் சீக்கிரமாக வெயிலைப் பரப்பி வந்துவிட்டான்.... ஆனால் அவளின் வார்த்தை பிரயோகத்தை நிறுத்தவேயில்லை...

"தங்கங்களா... பரீட்சைக்கு காசு கேட்டீங்க இல்ல..இந்தாங்க.. ஆளுக்கு நாலு ரூபாய் எடுத்துக்கோங்க....மீதி இரண்டு ரூபாய செலவுக்கு வச்சிங்கோ... சரியா..நல்லபடியா போய் பரீட்சை எழுதணும் கண்ணுங்களா..." என்று அந்த பத்து ரூபாயை..எடுத்து அவர்களிடம் நீட்டினான்....

பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு, பள்ளிக்கூடத்திற்கு சென்றார்கள்...

இவளின் வார்த்தை  பிரயோகங்கள் மட்டும் நிற்கவே இல்லை.. "ஏண்டா சண்டாளா.. என்ன விட்டுட்டு, அவளென்ன உனக்கு அவ்வளவு சர்க்கரையா போயிட்டாளா..சொல்லாம கொள்ளாம போகறளவுக்கு வந்திடுச்சா....." என்று அவனது அரைஞான் கயிற்றைப் பிடித்து இழுத்தாள்.....

தூக்கம் கெட்டு, துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டே இருந்த சொக்கணுக்கு, கோபத்தால் கண்கள் சிவந்துவிட்டது...

"செவுட்டுல ஒன்னு விட்டேன்..கடவாப் பல்லு கழண்டுடும் ....என்னடி தலைக்கு மேல ஏற்ர நீ.... " என்ற அவன் கண்கள் சிவக்க....அடிக்க கை ஓங்க...

" அடிய்யா..அடி... நல்லா அடி.....இப்போ அடிக்கவும் அவ சொல்லிக்கொடுத்தாளா...." என்று மீண்டும் நாராசமாய் பேச்சைத்தொடங்கினாள்.....


"சேச்சே...அவ உன் தங்கச்சிடீ..... அவளையும் என்னையும் இணை வச்சிப் பேசாதேன்னு படிச்சு படிச்சு சொல்றேன்... நீ கேட்கவே மாட்டேங்கிற.....ஏன் இப்படி கேவலப்படுத்தறே...நீ....நீ இப்படி சத்தம் போடறதால....எனக்கு மட்டுமில்லே... உனக்கும் கேவலம்தான்...." ஓங்கிய கையை அப்படியே கீழிறக்கிக்கொண்டான்

"உன்கிட்டே என்ன பேச்சு.... ஆசாரியைப் பார்த்தாலாவது மாட்டுக்கு லாடம் கட்டி கொற (குறை) உழவை இன்னிக்கு பொழுது சாய முடிக்கலாம்... கடன் காரனுக்கு பதில் சொல்லணும்.... இந்த வருஷ கந்தாயம் (குத்தகைப் பணம்) கட்டணனும்... ச்சேச்சே..என்ன இது ஈனப்பொழப்பு...எத்தனை நாளைக்குத்தான்..மனுசன்..இப்படி புழுங்கி சாகறது....ச்சேச்சே என்ன இது ஈனப்பொழுப்பு..! போதா குறைக்கு இவ வேற....."

புலம்பியவாறே ஆசாரிக்காட்டை நோக்கி நடையை எட்டிப்போட்டான் சொக்கன்...ஒட்டிய வயிறோடு....