ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 6 January 2014

போட்டிச் சிறுகதை 58

கூலி (சிறுகதை)

வேக வேகமாக ஓடி வந்ததில் மூச்சிரைத்தது வதனிக்கு. வேலைக்கு வர பிந்திவிட்டது. கனகக்கா, செல்லம்மா ஆச்சி, மயிலம்மா என்று ஒரு பெரும்படையே தோட்டத்தில இறங்கிவிட்டது. இவள் மட்டும் 'லேட்'. கழுத்தில் சுற்றி போட்டிருந்த சாரத்தை (கைலி) எடுத்து போட்டிருந்த சட்டைக்கு மேலாக அவசர அவசரமாக உடுத்திக்கொண்டாள் வதனி. வேகமாக தங்கராசண்ணா பார்ப்பதற்குள்ளாக தோட்டத்துக்குள் பாய்ந்து அமர்ந்து கொண்டாள். தயாராக தான் கொண்டுவந்திருந்த வெற்றிலை சரையை எடுத்து செல்லம்மா ஆச்சியிடம் கொடுத்தாள் வதனி.
"செல்லம்மாக்காட இண்டையான் கோட்டா வந்திட்டு..."
சொல்லி சிரித்தாள் கனகா. இதழோரம் மெல்லிய புன்னகையை தவளவிட்டவளாக அவர்களோடு சேர்ந்து கொண்டாள் வதனி.

நெளிநெளியான அந்த கேசம் எண்ணை கண்டு பல மாதங்கள் இருக்கும். இரு சிறிய சீலைத் துண்டினால் பிடித்து கட்டி இருப்பாள். கறுத்த பின்னணியில் மஞ்சள் பூ போட்ட சட்டை. இது கூட, வலது கை மேல் பகுதியில் இலேசாக தையல் விட்டிருந்தது. கடந்த மாதம் சந்திரன் அண்ணரின் தோட்டத்தில் வெங்காயம் நடவுக்கு சென்ற பொழுது சந்திரனண்ணா மனைவி கொடுத்தது. இவள் சட்டையின் லட்சனம் அப்படி இருந்தது!

இன்று வேலை முடித்தால் கையில் எழுநூறு ரூபா கிடைக்கும். இன்றைய விலைவாசியில் இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்.
ஒரு இராத்தல் பாண் 60 ரூபா. சீனி ஒரு கிலோ 110 ரூபா. வசந்தனின் டியுசன் காசும் கட்ட வேணும். இன்று பதினெட்டாம் திகதி. அஞ்சாம் திகதிக்குள்ள காசு கட்ட சொல்லி அங்க அவனுக்கு அடி வேற. பாவம் அவன். இதுக்குள்ள இந்த மனிசன் கொண்டே வைக்கிற காசெல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போய் கோதாரி விழுந்த குடியில விட்டுப்போடும். 
சிந்தனையில் வசப்பட்டிருந்தவளை அதட்டிய தங்கராசுவின் குரல் நிஜத்துக்கு இழுத்துவந்தது.
"எடியே வதனி! என்னடி அங்க இருந்து எந்த *காம்படிக்க யோசிக்கிறா? அந்தா அந்தப்பக்கம் போய், பரமனுக்கு பின்னால கடகடவெண்டு அந்த அறுகுகளைப் பொறுக்கி புல்லரி பாக்கலாம். இங்க வந்து எங்களிட்டை  சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு மிலாந்திறது. நேரத்த ஒரு மாதிரி  போக்கட்டிப்போட்டு நேரம் போட்டுது எண்டு சொல்லி இன்னும் நூறு புடுங்கிறது. ஏய்... நீங்களும் போய் வெங்காயத்த துத்துங்கோ. கடகங்கள் கிடக்கெள்ள அதுகள்ள அள்ளி வையுங்கோ காயை. டேய் பாலன் பாத்தியா நேரா கயித்தோட கட்டு. பிறகு சொத்தியா இருக்க கூடாது சொல்லிப்போட்டன்... "
தன் முதலாளித்தனத்தை காட்டினார் தங்கராசு. அதுவரை ஆசுவாசமாக வெத்தலையோடு ஊரையும் மென்றுகொண்டிருந்த அத்தனை பேரின் மத்தியிலும் ஒரு எறும்புகளின் சுறுசுறுப்பு ஒட்டிக்கொண்டது. ஒரே எம்பலில் பாய்ந்த வதனி **சாறி  புல்லுத்தட்டி இருந்த அந்த மண்ணில் இருந்த அருகம் வேர்களையும் மற்ற புற்களையும் வேக வேகமாக இரு கைகளாலும் அரித்து எடுத்து ஓரமாகப் போட்டாள். மற்ற பெண்களும் சிலர் புல்லரித்தனர். சிலர் சாக்கு கோணிகளில் நடவுக்கு தயாராக இருந்த வெங்காயங்களை பெரிய கடகங்களில் கொட்டி விட்டு அவற்றை காற்றில் தூத்தி சிறிய கடகங்களில் போட்டுக்கொண்டனர். 

நடவு ஆரம்பமாகியது. சுறுசுறுப்போடு ஆண்கள் தரையை கொத்தி சாறி பண்படுத்தி பாத்தி கட்டி கொடுக்க,  பெண்கள் அவர்கள் பின்னாலே நின்ற நிலையிலேயே வெங்காயங்களை பாத்திகளில் ஊன்றினர். அப்பப்ப தங்கராசு சத்தமிட்டு திட்டிக்கொண்டிருந்தார். எருமை மாட்டின் மீது மழை பொழிந்ததுபோல் அவற்றை கவனிக்காமலேயே தங்கள் வேளைகளில் கவனமாக இருந்தனர்.

பகல் பத்து மணி தாண்டிய பொழுதில் ஒரு வெவேறுந்தேநீரும் பாணும் பருப்புகறியும் வந்தது. ஒரு அரை மணிநேர இளைப்பாறுகையில் உணவை முடித்துக்கொண்டு மீண்டும் வேலை. சூரியன் உச்சி மண்டையைப் பிளந்ததை பொருட்படுத்தாமல் மாலை மூன்றுக்குள்ளாக வேலையே முடித்து வெளியேறினர். வதனி கையில் ஒரு ஐநூறும் இரு நூறுகளும் அவளைப்பார்த்து சிரித்தன. அவற்றை இறுக்கமாக பொத்தி தடவிக்கொண்டாள்.அவை அவளுடன் இருக்கப்போவது இன்னும் சில மணிகள் மட்டும் தானே... 

மீண்டும் வேக நடையில் தன் விட்டை ஒரு மணி நேரத்தில் அடைந்தவள். தெரு முனையில் இருந்த பெட்டிக்கடையில் அரிசி காய்கறிகளை வாங்கிக்கொண்டாள். 
'வசந்தன் பாவம். பிள்ளை எதுவும் சாப்பிடாமலே டியுசனுக்கு போயிருப்பான். அவன் வரதுக்குள்ள எதாவது சமைத்து விட வேண்டும். இந்த மனிசன் குடிச்சுப்போட்டு எங்காவது மூலைல இருக்கும் எண்ட வரவுக்காக. காசை ஒழிக்க வேணும் எங்கயாச்சும்...'
நினைத்தபடியே நூறு ரூபாவை மட்டும் கைகளில் எடுத்துக்கொண்டு மீதியை சட்டையினுள் மறைத்து வைத்துக்கொண்டால். எதிர் பார்த்தது போலவே இவள் விட்டில் காலடி வைக்கவும் வரதன்
"இடியேய்... எங்கடி காசு..."
என்று கேட்டபடி அவள் பதிலுக்கு காத்திராமல் அவள் மேல் விழுந்து கைகளில் அவை வைத்திருந்த நூறு ரூபா பணத்தை பறித்து  தள்ளாடியபடி வெளியே சென்றான் மீண்டும் குடிப்பதற்கு. 

வேக வேகமாக அடுப்படியில் இருந்த பாத்திரங்களை மரத்தடியில்  அள்ளி போட்டு குடத்து நீரை ஊற்றி கழுவினாள். அவசர அவசரமாக சிறிது மண்ணெண்ணையை தேங்காய் சிரட்டையில் ஊற்றி அதன் மேல் சிறிது சாம்பலை போட்டு வைத்து அதன் மேல் சுள்ளி தடிகளை அடுக்கி அடுப்பை  பற்ற வைத்தாள். வேகமான சமையல்.

அவசரமாக சமையலை முடித்தவள் தன் பழைய சட்டையை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த பொதுக்கிணத்துக்கு ஓடிச்சென்று வேகமாக நாலு வாளி அள்ளி குளித்துக்கொண்டு அசதியாக விட்டுக்குள்ளே வந்தாள் வதனி. வந்தவள் அங்கே இருந்த முருகன் பட கலண்டரில் வந்து நின்று கண்ணை மூடவும் வாசலில் கேட்டது குரல்.
"அக்கா... அக்கா... பசிக்குது... எங்கயிருக்கா ஆக்கா... "
பத்து வயது பாலகனின் குரல். தன் பசி மறந்த இந்த பதின்நான்கு வயது சிறுமி 
"வாடா தம்பி. அக்கா சமைச்சிட்டன். இந்தா வா சாப்பிடு..."
என்றபடி ஓடிச்சென்று அவனுக்கு தாய்ப்பாசத்தோடு சாப்பாடுகளை கொடுக்க தொடங்கினாள், தன் பத்து வயதுகளில் தாயை இழந்த இந்த கூலி.





* காம்படிக்க: இலங்கை யுத்தத்தின் பின் இந்த சொல் உருவாகி இருக்கலாம். பலமான சிந்தனையில் இருந்தால் ஏதாவது ஆமி காம்பை தகர்க்க திட்டமா என்பதாக வினாவுவது...

**சாறி: தோட்டம் கொத்தப்பட்ட பின் மீண்டும் நிலத்தை பண்படுத்த மெதுவான முறையில் கொத்தி பண்படுத்தும் முறை சாறல்.