ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 6 January 2014

போட்டிச் சிறுகதை 72

இலக்கியத்தால் வந்த வினை

மடி மீது 'துயில்' குடி கொண்டு இருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணனை படிப்பதே அலாதியான அனுபவம் தான்.தனது கவித்துவ வார்த்தைகளால் மயக்கி கொண்டே செல்வார்.இன்னும் கொஞ்ச நேரம் தான் படிக்க முடியும். கடைக்கு போன மனைவியும் குழந்தையும் திரும்பும் வரை தான் இந்த திருட்டுத்தனத்தை நான் செய்ய முடியும் மன்னிக்கவும் இது அவளது மொழி...

நான் நாவலில் வரும் நோய்மையை கவனித்து கொண்டு இருக்கிறேன். என்னுள் நோய்மை நிரம்பி இருப்பதாக அவள் எப்போதும் எண்ணுகிறாள்.

நான் புத்தக புழுவாக இருப்பது தான் அவளது பிரச்சனை,எனக்கான நேரத்தை (அது எவ்வளவு என்றெல்லாம் சொல்ல இயலாது) ஒதுக்காமல் இருப்பது தான் நான் அவளிடம் காணும் பிரச்சனை.

எங்களது காதல் திருமணம்.பொருளாதார ரீதியில் நல்ல நிலை என்று சொல்லலாம்.நாங்கள் தனியர்கள் தான் சொந்த பந்தம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

வாசிப்பு தான் எங்களை இணைத்தது,இன்று வாசிப்பு தான் எங்களை பிரிக்கிறது.

நான் படிக்கும்போது அவள் செய்யும் இடையூறுகள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும் அவை உங்களுக்கு சுவாரசியமாக இருக்கலாம் என நினைத்து சொல்கிறேன்

"குழந்தை ஏதோ கேட்கிறா கடைக்கு போய் வாங்கிட்டு வாங்க"

"ஏங்க இந்த மாடல் செயின் எனக்கு நல்லா இருக்கும்ல?,இத பாருங்க புக்க அப்புறம் பாக்கலாம்"

"இந்த துணிய கொஞ்சம் காய வச்சுட்டு வாங்க"

"நான் சமைக்க போறேன் பக்கத்துல உக்காந்து பேசிட்டு இருங்க"

"குழந்தைய தூங்க வைங்க" இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஒரு நாள் நான் விடிய காலையில் அலாரம் வைத்து  எழுந்து அசோகமித்திரன் கட்டுரைகள் படித்து கொண்டிருந்தேன்,திடீரென எழுந்து வந்தவள் "எனக்காக ஒரு நாளாவது இப்படி எந்திரிச்சு இருக்கியா, உனக்கு யார் செத்தாலும் பரவாயில்லை புக்கு தான் முக்கியம்" என சண்டைக்கு வந்து விட்டாள்.

இப்படியே சண்டை நீண்டு இன்று திருட்டுத்தனமாக படிப்பதில் வந்து நிற்கிறது நாளை படிப்பதே நின்று  விடலாம்.

கதவின் அருகே ஏதோ அசைந்ததை போன்ற தோற்றம் மனதில்.

அவசர அவசரமாக புத்தகத்தை மறைத்து வைத்து விட்டு,பதற்றத்தை குறைத்து கொண்டு, கதவின் அருகே மெல்ல நகர்ந்தேன் என் மனைவி யாருடனோ தொலைபேசியில் குறைந்த டெசிபெல்லில் பேசி கொண்டிருந்தாள்.

"அம்மா இவன் தொல்லை தாங்க முடியல சாவடிக்கிறான்"

"....."

"வேலைக்கு போயி 6 மாசம் ஆகுது நான் மட்டும் வேலைக்கு போகலனா,நானும் என் பொண்ணும் நடு தெருல தான் நிக்கனும்."

"...."

"ஏதாவது புக்க வச்கிட்டு உக்காந்து இருக்கான்,பொண்ண கூட ஒழுங்கா பாத்துக்க மாட்டேங்குறான் நான் வேலைக்கு போற சமயத்தில, வந்து பாத்தா அவ எங்கயாவது அடிபட்டுகிட்டு நிக்குறா!,பசில துடிக்கிறா! பாவமா இருக்கு,நீயும் படுத்த படுக்கையா இருக்க நான் என்ன தான் பண்ணி தொலையுறது?"

"...."

"எவ்ளோ சொன்னாலும் திருந்தி தொலைய மாட்டேங்கிறானே,அவன் செத்தா தான் எனக்கு நிம்மதி"

"....."

"ஆமா L.I.C பாலிசி 15 லட்சம் ரூபாய்க்கு போட்டு இருக்கான்... அதுக்கு?"

"...."

"என்னமா இப்படி சொல்ற எதுவும் பிரச்சனை வராதே?"

"...."

"சரிமா செஞ்சுடுறேன்,அவன இங்க எல்லாரும் பைத்தியம்னு தான் சொல்றாங்க...அதுனால கண்டிப்பா எந்த பிரச்னையும் வராது...நாளைக்கு நீங்களாம் இங்க வர மாதிரி இருக்கும் பாக்கலாம்..."

இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்கும் நான் சொன்னவை எல்லாம் பொய் என்று...எல்லாமே பொய் அல்ல வாசிப்பிற்கான இடையூறுகள் முற்றிலும் உண்மை...அந்த இடையூறுகள் தான் என்னை வேலையை விட வைத்தது,எல்லோரிடமும் ஏச்சு பேச்சு வாங்க வைத்தது,எனக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டியது,இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மனைவியின் வழி என்னை கொல்ல போகிறது.

ஆனால் நான் விஷம் உண்டு அரைமணி நேரம் ஆகிறது.

என் மனைவி பாவம் அவளும் கொஞ்சம் என்னை கொல்லட்டுமே.

நான் கதவை திறந்து விடுகிறேன்.