பாப்பா என்னும் பெரியம்மா
‘யெட் அனதர் டே’ என்பது போல
மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு
அதை தலைகீழாக புரட்டிப்போடும் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். ஷிப்மண்ட்
செய்த அய்டங்களும் ரீஸிவ் செய்யபட்ட அய்ட்டங்களுக்கும் டேலி ஆகாதது, மேலாளர் வள் என்று கடிந்துகொண்டது, பக்கத்து சீட் நீலவேணி
முகம் சுளித்தது என்று எல்லாம் சேர்ந்து அவன் தலைவலியை மாலைமுதல்
அதிகப்படுத்தியிருந்தது. காலார நடந்து சென்று பீச் மணலோடு அளவளாவினான். காற்று
இதமளித்தாலும் அவன் மண்டைக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்த ஷிப்மண்ட் பிரச்சினை
வெளியேற மறுப்பு தெரிவித்துக்கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு
கைவிட்டிருந்த சிகரெட்டை அவனுக்கே உரித்தான ஸ்டைலில் பற்ற வைத்துக்கொண்டான். ஆழமாக, திருமூலர் கூறிய பிரணாயாமம் பயிற்சி போல் மூச்சை 16 வினாடிகள் உள்ளிழுத்து 4 வினாடிகள்
புகையை உள் வைத்து அனுபவித்து 8 வினாடிகள் மூச்சை மெதுவாக
விட்டு சிகரெட்டுடன் சேர்த்து தன்னையும் கரைத்துக்கொண்டிருந்தான். அடுத்த ஒரு
மணிநேரத்திற்கு 5 சிகரெட்டுக்களை தனது நண்பனாக்கிக்கொண்டான்
.
பசி வயிற்றை கிள்ளவே
அருகிலிருந்த மாமி மெஸ்சை அடைந்து ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்று ஆர்டர் செய்துவிட்டு
முகநூலில் மேய ஆரம்பித்திருந்தான். பத்து நிமிடத்திற்கு பின் ஆர்டர் செய்த
ஊத்தப்பம் வர, அவசரப்பட்டு கைவைத்து சுட்டுக்கொண்டான். தேங்காய் சட்னியுடன் குழைத்து
மெதுவாக அனுபவித்து உண்ண ஆரம்பித்திருந்தான். உண்டு முடிக்கும் தருவாயில் அவன்
ஊரிலிருந்து அழைப்பு வந்தது.
‘பாப்பா
பெரியம்மா தவறிட்டா டா. என்று ஊரிலிந்த அவனது மாமா அழைத்து தகவல் கூறினார். குரல்
உடைந்திருந்தது. வார்த்தைகள் குழறின. விஷயத்தை அவனால் தெளிவாக கேட்க முடியவில்லையென்றாலும் மறுபக்க குரல்
வெளிப்படுத்திய உணர்வுகளால் அவனால் கிரகிக்க முடிந்திருதது. ‘கிளம்பிட்டேன் மாமா’ என்று கூறிவிட்டு அழைப்பை
தூண்டித்தான். அதற்கு மேல் சாப்பிட முடியாது விக்கித்து மெஸ்சை விட்டு
வெளியேறிக்கொண்டான். வீட்டை அடைந்து உடுமாற்ற துணியை எடுத்துக்கொண்டு காரை
ஸ்டார்ட் செய்தான். ‘என்ன சார், நைட்
பார்ட்டியா?’ என்ற வாட்ச்மேனின் வார்த்தையை அலட்சியம் செய்து
காரை வேகமாக செலுத்த ஆரம்பித்திருந்தான்
கடைசியாக திருமணத்தின் போது
பெரியம்மாவை பார்த்திருகிக்கிறான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஒடுங்கியிருந்த
தேகம். பெரியப்பாவை இழந்து ஐந்து வருடங்களை கடந்திருந்தாள். இல்லை.
கடத்தியிருந்தாள். அட்சதை தூவி ஆசீர்வதித்து, அதன்பின் திருமணத்தில் அவளைக்காணவில்லை. கல்யாண
களேபரத்தில் வசதியாக மறந்தே போயிருந்தான். பின் புகைப்படத்தில் தேடியபோதும் காணாது
துணுக்குற்றான் என்றாலும் அதிகம் அலட்டிக்கொள்ளாது மற்றைய விடயங்களில் கவனத்தை
செலுத்த தொடங்கியிருந்தான். திருமணம் முடிந்த மூன்று வருடங்களில் அவள் முடிவு
அவனுக்கு தெரியவரும் என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் அதிகமுறை சென்று
பார்திருந்திருப்பான். சர்க்கரை நோய்க்கான டைஜெஸ்டிவ் கிராக்கர்ஸ் பிஸ்கட்டுக்களை அவனால்
பிரியத்தோடு வாங்கிக்கொடுத்திருக்க முடியும். இந்தா உன் பேத்தி, தொடையில்
நுள்ளி அவளிடம் விளையாடு என்று கூறியிருக்க முடியும். ஆனால் விதி வலியது என்று
அவனால் தன்னை போலியாய் சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. தனது அலட்சியத்தால் தன்
மூத்த தலைமுறையின் சுவடை பதிவு செய்யாது கண்முன்னே இழந்திருந்த குற்ற உணர்ச்சி அவனிடம்
மிகுந்திருந்தது.
காரை எவ்வளவு வேகமாக
செலுத்தியபோதும் சாலை ஒத்துழைக்கவில்லை. இடையே மழை பிடித்துக்கொண்டு வைப்பர் வேலை
செய்யாது கண்ணாடியில் விழும் மழைத்துளிகளில் பெரியம்மாவின் பிம்பத்தை
கடந்துணர்ந்தான்.
‘‘சாப்பிட்டு
கை கழுவ போயிருக்காடா. என்ன செஞ்சதுனு தெரில, அங்கேயே குத்த
வச்சு உக்காந்துட்டாட. பேச்சு மூச்சு இல்ல. கையும் ஓடல,
காலும் ஓடலடா.’
மாமாவின் வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்து கொண்டேயிருந்தன. எத்துனை பெரிய
மனிதராயினும் தன் இறப்பை தன்னால் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாத
துரதிர்ஷ்டசாலியாகவே இருக்கிறான். ஒருவேளை தன் பேரனின் திருமணத்தை முடித்துவைத்து
இறந்துகொள்ளலாம் என்று நினைத்திருப்பாளோ? சர்க்கரை நோயை முழுவதுமாக ஒழித்து
கட்டியபின் முடிவை விரும்பியிருப்பாளோ? பெரியப்பாவின்
போட்டோவை பார்த்துக்கொண்டே? அல்லது தூக்கத்தில் வலி தெரியாது? தன் அந்திமகாலம் நெருங்குவது எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்று
சொல்லக்கேட்டிருக்கிறான். அவன் மகளின் மடியில் தலைசாய்த்து கண் மூடி தன் உயிர்
பிரிவதாக நினைத்துப்பார்த்து கொண்டான். காரின் தடதடக்கும் ஓசையில் தன் கண் அயர்ந்துவிட்டதை
உணர்ந்து காரை நிறுத்தி முகம் கழுவிக்கொண்டான்.
சிலிரென்ற தண்ணீர் முகத்தில்
அறைந்தபொழுது பெரியம்மாவின் எச்சில் நிறைந்த முத்தம் அவனது நியாபகத்திற்கு வந்தது.
எப்பொழுது பார்த்தாலும் முகத்தை வாஞ்சையோடு தடவி கன்னம் இழைத்து ‘என்ன
பெத்தாரே. இப்போதான் பெரியம்மையை தேடுச்சோ? என்று கன்னத்தில் முத்தம் கொடுப்பாள். வெற்றிலை பாக்கு வாசம் அடிக்கும்.
ஒவ்வொரு தலைமுறையும் தன்னுடைய வாரிசுகளிடம் தனது முந்தைய தலைமுறையை தேடிக்கொள்கிறது.
அந்தத்தேடலில் கிடைக்கும் அமைதியை மீண்டும் மீண்டும் சுவாசிக்க ஏங்குகிறது, தன்னால் தன் சகோதர சகோதரியின் குழந்தைகளிடம் இத்துணை பரிவோடு முத்தம் தர
இயலுமா என்ற சந்தேகித்திருக்கிறான். அவன் குழந்தையின் வளர்ச்சியோடு தனது
சந்தேகக்கேள்விகள் தூபப்புகையாய் காற்றில் மறைந்து தனது முந்திய தலைமுறையின் அடையாளங்களை ஒவ்வொரு பிள்ளைகளிடமும் அனிச்சையாய் தேடத்தொடங்கியிருந்தான்.
ஊரை அடைந்தபோது, நீராட்டுவதற்காக
கையில் குடத்தோடு ஆற்றில் தண்ணீர் எடுக்க அண்ணன் தன் காரை கடந்து போனதை கண்டான். விவரிக்கமுடியாத
சோகத்தோடு அவனது முகம் இருண்டிருந்தது. நேர்கொண்டு பார்க்கமுடியாது தலை குனிந்து
வீடு நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். வீட்டை நெருங்க நெருங்க பெண்களின் ஒப்பாரி
இவனை உலுக்க ஆரம்பித்திருந்தது. முதல் நாள் இரவிலிருந்து இறந்துபோன பெரியம்மாவின்
உடலுக்கருகில் அழுது அழுது கலைத்திருந்த அக்காளின் முகத்தை கண்டான்.
என்னவென்றரியாத சிறுசிறு குழந்தைகள் அவர்கள் ஒப்பாரியுடன் அழத்தொடங்கியிருந்தன.
ஒரு ஆரெஞ்சு விலையில் அவர்களை சமாதானபடுத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்த
அப்பாக்கள்.
சரியாக பன்னிரெண்டு மணிக்கு
பெரியம்மாவின் உடல் வீட்டிலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டது. மூன்று வருடத்திற்கு பின்
பார்க்கிறான். மூச்சை முழுவதுமாக நிறுத்தியிருந்தாள். இரு கைகளும் மடித்து
வைக்கப்பட்டிருந்தது. தான் பெற்றெடுத்த குழந்தையை பெரியம்மாவிடம் கொடுத்து கொஞ்ச
வைக்க வேண்டும் என்று நினைத்து வேலை காரணமாக தட்டிக்கழித்து, இப்பொழுது
உயிரற்ற உடலுடன், ஜீரணிக்க முடியாத துக்கத்துடன் ஒடுங்கி
நின்றான். ஊர்தியில் உடலை ஏற்றி, உயிரற்ற உடல் கீழே விழாது
இருக்க ஒரு சேலை கொண்டு இருக்ககட்டி, சாலையில் பூ தூவி நடக்க
ஆரம்பித்திருந்தனர். செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்கள் தன் வாசமிழந்து இறப்பை பறைசாற்றும்
வாசத்தை தனதாக்கிக்கொண்டிருந்தன.
பெரியம்மாவின் உடலோடு
ஊர்தியின் பின் நடக்க ஆரம்பித்திருந்தான். இடுகாடு இன்னும் இரண்டு மைல் தொலைவில்.
எத்தனை முறை அழுது அரற்றி பின் சென்றாலும் அவள் எழுந்து வந்து முத்தம்
கொடுத்துவிடப்போவதில்லை. என்னை பெத்தாரே என்று உச்சந்தலையை மோந்து
பார்க்கபோவதில்லை. தன் உடலோடு இறுதியாத்திரைக்கு இவனும் வந்திருந்தான் என்று
பெரியம்மாவிற்கு தெரியப்போவதில்லை. இருந்தும் தன் குற்ற உணர்ச்சியிலிருந்து
தப்பிக்கும் ஒரு விமோச்சனமாய் இறுதி ஊர்வலத்தில் பெரியம்மாவின் உடலை ஒட்டி
நடந்துகொண்டிருந்தான். சிவபுராணம் ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
‘புல்லாகி
பூடாகி புழுவாய் மரமுமாகி,
பல்மிருகமாகி, பறவையாய், பாம்புமாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல் அசுரராகி, முனிவராய், தேவராய்
செல்லாநின்ற இத்தாவர
சங்கமத்துள்
எல்லாப்பிறப்பும் பிறந்தொழித்தேன்
எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள்
கண்டுன்று வீடுற்றேன்.’
இன்று அவன் கேட்கும் சிவபுராணம் வேறொரு அர்த்தத்தை அவனுக்கு விளக்கிக்கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. இடுகாட்டில் விறகு அடுக்கி சாணம் வைத்து எல்லா ஏற்பாடுகளும் முன்னரே செய்திருந்தனர். உடலை அதன் மீது கிடத்தி அண்ணனை வாயில் அரிசி ஊட்டி விடப்பணித்தனர். உயிரோடு இருக்கும்பொழுது நாம் எத்தனை முறை ஊட்டி விட்டிருக்கிறோம் என்ற கேள்வி அவனிடம் மிதமிஞ்சி நின்றது. மேடையின் ஓரத்தில் உட்கார வைத்து மொட்டையிட்டு பானையில் தண்ணீர் ஊற்றி மூன்று முறை சுற்றி, கடைசி சாணம் மூடுமுன் பெரியம்மாவை கடைசி முறையாய் பார்த்துக்கொண்டான். வாயிலிட்ட அரிசி உள்புகாது தேங்கி நின்றது.
தீ மூட்டுவதற்க்கு முன்பே
அந்த இடத்தை விட்டகன்றான். இதுகாறும் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராதது அவனுக்கு
ஆச்சர்யத்தை அளித்தது. அங்கேயே குளித்து பெரியம்மாவை இடுகாட்டில் உதறி வீடு
வந்தடைந்தான். நேற்று இதே அறையில் அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தவளை
இன்று தீக்கிரையாக்கி சுற்றம் சூழ அவளின் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தனர்.
இரண்டு மூன்று நாட்கள் முன்பு இத்துனை சுற்றமும் வந்து பெரியம்மாவுடன் அளவளாவியிருந்தாள்
அவள் எத்துனை சந்தோஷப்பட்டிருப்பாள் என்று நினைக்கதொடங்கியிருந்தான். இருக்கும்
வரை அதன் அருமை தெரியாது, இல்லாதபோது அதன் பெருமையை உணரும் மானுடம் அவனுக்கு விந்தையை
அளித்தது. ஒரு தலைமுறையின் மரணம் சில மணி நேரங்களில் எளிதாய் கடந்திருந்தது.
அதற்குமேலும் அங்கு
இருப்பதற்கு தைரியம் அற்று யாரிடமும் சொல்லாது காரை கிளப்பி செல்ல ஆரம்பித்தான்.
கடந்த இருபது மணிநேர பயணமும் கால அவகாசமும் அவனுடைய அனுபவத்தை மீறிய உணர்வுகளை
அவனுக்கு தந்து கொண்டிருந்தது. அதை செரிமானம் செய்ய இயலாது நினைவலைகள் அவனை நிலைகுலைய
செய்துகொண்டிருந்தன. முன் அனுமதி பெறாத விடுப்பு எடுத்ததை கடிந்து மேலாளர் அனுப்பிய
குறுஞ்செய்தி அவனை ஆயாசப்படுத்திக்கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பசி அவன்
வயிற்றை கிள்ளியது.
சாலையோர ஹோட்டலில் நிறுத்தி
உள் நுழைந்தான். கடுமையான பசி அவனை அதிகமாக உட்கொள்ளச்செய்தது. துக்கத்தை மீறிய
பசிக்கு உணவளித்து மீண்டும் காரைச்செலுத்தினான். மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.
தண்ணீர் தெளிக்காது இருக்க கண்ணாடியை ஏற்றி விட்டுக்கொண்டான். ஒரு சில
மணித்துளிகளில் காருக்குள் பெரியம்மாவின் வெற்றிலை பாக்கு நெடி பரவ, ‘என்னை பெத்தாரே’ என்று குரல் அவன் காதோரத்தில் கேட்க, முதல் முறையாக ஸிடியரிங்கில் தலையை முட்டிக்கொண்டு ‘ஓ’ வென்று கூக்குரலிட்டு அழ ஆரம்பித்தான்.