ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday, 7 January 2014

சிறுகதைப் போட்டி 88


ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு:



பாட்டுப் பையம் வெள்ளிக்குச்சம்

தில்லாலங்கிடி லேலம்

பதினாறு வெத்தலையாம்

தில்லாலங்கிடி லேலம்

சின்னப் பையன் கொடுத்த பை

தில்லாலங்கிடி லேலம்

சிரிக்குதடி இடுப்பு மேலே

தில்லாலங்கிடி லேலம்

என பாடிக்கொண்டு ஏற்ற மரத்தின் மேல் நின்று கொண்டு நெல் வயலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தார் கருப்பு. ஏற்ற மரத்தின் அடியில் கட்டியிருந்த சாலிலிருந்து நீர் வாய்க்கால் வழியே பாய்ந்த போது, அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஓடையோரம் கெணறு வெட்டி

ஏலோலந்தன் ஏலோ

மானுக்கொம்பு ஏத்தம் வச்சி

ஏலோலந்தன் ஏலோ

மாமன் மகன் இறைத்த தண்ணி

ஏலோலந்தன் ஏலோ

நெல்லு வயல் பாயுதடி

ஏலோலந்தன் ஏலோ

என கீழே வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த மீனாட்சி எதிர் பாட்டுப் பாடினாள். பாடலைக் கேட்டு களைப்பை மறந்த படியே ஏற்ற மரத்தின் மீது முன்னும் பின்னும் நடந்தபடி வயலுக்கு தொடர்ந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தார் கருப்பு.

மழைக் காலத்தைத் தவிர ஈரத்தையே காண முடியாத வானம் பார்த்த பூமி அது. அந்த மண்ணும் அவ்வளவு வளம் கிடையாது. அருகில் சென்ற நீரோடையால் நிலமும் மணல் பரந்து வளம் குன்றியிருந்தது. இருப்பினும் வருடம் முழுவதும் கருப்புவின் குடும்பத்திற்கு வேண்டிய கஞ்சியை அந்த நிலமே விளைவித்துக் கொடுத்தது. வருடம் முழுவதும் பாடுபட்டும் விளைச்சலை அறுவடை செய்யும் காலத்தில் பொய்த்த மழையினால் அனைத்தும் வறண்டு

பெய்யுதம்மா பெய்யுது

பெரு மழையா பெய்யுது

கல்லு முள்ளு காட்டுல

சடசடன்னு பெய்யுது

கல்யாண வாசல்

கைகழுவ தண்ணியில்ல

புள்ள பெத்த வாசல்

பிய் கழுவ தண்ணியில்ல.

என ஊரே சோக கீதம் வடிக்குமளவிற்கு வானம் பொய்த்து மழை காணாத நேரத்தில் இவர்களது வயிறும் காய்ந்து போவதுண்டு. இந்த நிலையைப் போக்க வேண்டும் என எண்ணியவாறே கருப்பு ரெண்டு மண்வெட்டி, ரெண்டு கலைக்கட்டு, நாலு வெட்டிக் கூடை இவற்றைக் கொண்டு கிணறு வெட்ட ஆரம்பித்தார். ஊரிலிருந்த அனைவரும் இது பொட்டல் காடு, வானம் பார்த்த பூமி நீங்கள் அம்பதடி தோண்டுனாலும் மண்ணு தான் வரும். தண்ணி வராது. அப்படியே தண்ணி வந்தாலும் எப்படி தண்ணிய எறப்பீங்க? முன்னூறு ரூவா கட்டுனாத்தான் உங்களால கரண்டு இழுக்க முடியும். உங்க சொத்த வித்தாலும் இருநூறு ரூவாய தாண்டாது.என பேசிச் சென்றனர். ஆனால் இருவரும் மனம் தளராது ஆறு மாதம் விடாமல் தோண்டினர். ஐந்தடி அகலக் கிணறு ஆறடி ஆழத்தை அடைந்த பொது மணல் மாறி கடின மருதுப் பாறையானது. ஒவ்வொரு அடியையும் தோண்டியபோது அவர்களது உயிர் போய் திரும்பியது. பத்தடி கடந்து பதினைந்தாவது அடியை அடைந்தது கிணற்றின் ஆழம். கிணற்றிலிருந்து அவர்கள் வெட்டிக் கூடை மூலம் வெளியேற்றிய மண் குன்று போல காட்சியளித்தது. பதினைந்தாவது அடியில் வெட்டிய கருப்புவின் முள்ளு வெட்டி கலைக்கட்டு வேகமாக உள்ளே பொதக்கென்று உள் வாங்கியது. மேலும் ரெண்டடி ஆழம் தோண்டினர்.  தண்ணீர் பாதி கிணறு வரை ஊறி விட்டது. ஆறு மாதம் வெயிலில் அவர்கள் பட்ட உழைப்புக்கு பலன் கிடைத்ததை அறிந்த அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.வயிறு நிறைய கிணற்று நீரைப் பருகி களிப்படைந்தனர்.

கிணறு வெட்டியாகிவிட்டது. அதனை இறைக்க நிலத்திலிருந்த வேப்ப மரத்தை வெட்டி ஏற்றமரம் செய்து கொண்டனர். நிலத்தினை ஏர் கொண்டு உழுது, அதில் வருடம் முழுவதும் குப்பைக் குழியில் கொட்டி சேகரித்திருந்த ஆட்டு மாட்டின் எருவைக் கொட்டி ஏற்றமிறைத்து சேறு அடிக்க ஆரம்பித்தனர். ஏற்கெனவே அவர்கள் இரண்டு நாள் கிணற்று நீரில் ஊற வைத்த விதை நெல்லை சேற்றில் விதைத்து இருபத்தி இரண்டாவது நாளில் பிடுங்கி வயலில் நட ஆரம்பித்தனர். இதற்கு முன் வயலை ஆடாதோடை செடி, வாதனாரை மரத்தின் மெல்லிய கிளை என இன்னும் நிறைய முள் இல்லாதசேற்றில் முளைக்காத செடி கொடிகளை வெட்டி சேற்றில் புதைத்து நடப்போகும் நெற்பயிருக்கு உயிர் சத்தை அதிகப்படுத்தினர். பண்படுத்திய நிலத்தில் இருபத்தி இரண்டு நாள் பயிரை வரி வரியாய் நட்டனர். இப்படி வியர்வையைச் சிந்தி, உடல் உழைப்பைக் கொட்டிய நிலத்தில் தான் இருவரும் மகிழ்வுடன் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தனர்.

வளர்ந்திருந்த நெற்பயிரையும், பாயும் கிணற்று நீரையும் கண்ட போது அவர்கள் இருவரும் பட்ட பாடு எல்லாம் காணாமற் போயிற்று. மூன்று போகங்களில் சம்பாவிற்கு மட்டும் தடையின்றி நீர் கிடைக்கும். சம்பாவில் விளைந்த நெல் வருடம் முழுவதும் வயிற்றைக் கழுவி விடலாம். கூலி வேலைக்குச் செல்லும் வருவாயில் மற்ற செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவர்களின் உழைப்பிற்கு தகுந்த படியே பலன் கிடைத்தது. நெல்லும் மூட்டை மூட்டையாய் விளைந்தது. நீர் கிடைக்கும் ஒரு போகத்தில் நெல்லையும் மற்ற காலங்களில் கேழ்வரகு, நிலக் கடலை, எல் என குறுகிய காலப் பயிரை விதைத்து கிணற்றில் ஊரும் கொஞ்ச நீரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

வருடங்கள் பல கழிந்தன. கிணற்று ஏற்ற மரம் காணாமற் போய் நீர் இறைக்கும் மோட்டார் இருந்திருந்தது. மண் சுவரை மட்டுமே கொண்ட கேணி, மண் சரியாத வண்ணம் தற்போது கருங்கல் கொண்டு சுற்றி கட்டப் பட்டிருந்தது. நீரிற்கு பஞ்சமில்லாததால் ஒரு வீசத்திற்கு விளைய வேண்டிய நான்கு மூட்டை நெல்லும் தடையின்றி விளைந்தது. நெல் களத்தில் இரவு முழுவதும் கூலியாட்கள், காளைகளால் நெல் அடித்து பதறு தூற்றிய பின் பன்னிரண்டு வீசம் சேர்ந்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஐம்பது மூட்டைகளுக்கு மேல் விளைந்தது.

வயதான கருப்புவின் உடலின் பலம் காணாமற் போயிருந்தது. அவரது பார்க்கும் திறனும் குறைந்துகொண்டிருந்தது. பெரும் கிணற்றைத் தானே தோண்டிய அவரது யானை பலம் காணாமற் போய், நான்கு அடி மண் வெட்டி பிடித்து வெட்டுவதற்குள் அவரது கைகள் சோர்ந்து போகும்படி வயோதிகமடைந்திருந்தார்.

இருப்பினும் உழுத மாடும், உழைத்த கரமும் சும்மா இருக்காதுஎன்ற கிராமத்து சொலவடைக்கு ஏற்ப உழைத்து தேய்ந்திருந்த அவரது உடலால் சும்மா இருக்க இயலவில்லை. நெற்களத்தில் சிதறியிருந்த நெல்லை கூட்டிக் கொண்டும், ஒவ்வொரு நெல்லுமாக தனித் தனியே கூர்மையிழந்திருந்த அவரது கண்களால் பார்த்து தடவித் தடவி பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது தாத்தாவிற்கு உதவும் பொருட்டு வந்த அவரது பேரன் குமரன், சிதறியிருப்பது கொஞ்ச நெல் தானே, தாத்தா! மொத்தமாக சேர்த்தால் உழக்கு நெல் கூட தேறாது. ஏன் இப்படி இந்த வெயில்ல கஷ்ட்டப் படுறீங்க? என அவரை நிழலிற்கு அழைத்தான் குமரன். பேரனது அழைப்பை மறுத்த தாத்தா, இந்த நெல் மணிய முதல் முதல்ல பார்க்க எவ்ளோ கஷ்டப் பட்டுருக்கோம், உனக்கு தெரியாதுப்பா?ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு என்று கூறியபடிய சிதறிய நெற்மணிகளை பொறுக்குவதை அவர் நிறுத்தவில்லை. அவர் அப்படி கூறியது எதுவுமே சிறுவன் குமரனுக்குப் புரியவில்லை.

தலைமுறை மாறியது. கிணற்று மோட்டார் மூலம் பாய்ச்சிய தண்ணீர் தற்பொழுது நிலத்தடி நீர்மூழ்கி மோட்டார் மூலம் விரைவாக இறைக்கப்பட்டது. கிணறும் தூற்றப்பட்டு காணாமற் போயிருந்தது. ஏற்றம் மூலம் நாள் முழுவதும் ஏற்ற மரத்தில் நடந்து பாய்ச்சிய நீர், தற்பொழுது அரை மணி நேரத்தில் பாய்ச்ச முடிந்தது. ஆடு மற்றும் மாடுகளின் உரங்கள் காணாமல் போய் என்.பி.கே, யூரியா, பாஸ்பேட் என ரசாயன உரங்களாக பழக்கத்திற்கு வந்துவிட்டது. பூச்சிகளையும், களைகளையும் கட்டுப் படுத்த பன்றியின் சாண எருவைத் தேடி ஊர் ஊராய் தேடியலைந்த காலம் சென்று மோனோ அச்டாப், டமக்ரான் போன்ற பூச்சிக் கொல்லிகள் தெளிக்குமளவிற்க்குமாறிவிட்டது. எருதைக் கொண்டு நான்கு நாட்கள் உழுத நிலை மாறி சில மணி நேரங்களில் டிராக்டர்கள் கொண்டு உழும் நிலைக்கு விவசாயம் வளர்ந்திருந்தது. நெல்லை அடித்துக் கொண்டு, நெற்களத்தை சாணம் கொண்டு சுத்தமாக மொழுகி ஒரு வாரம் இரவு கண் விழித்து நெல் அடித்த காலம் போய் நெல்லடிக்கும் இயந்திரத்தை வயலிற்கே கொண்டு வந்து அதுவே நெல்லையடித்து நெல், வைக்கோல், பதறு என தனித் தனியே பிரித்துக் கொட்டும் அளவிற்கு விவசாயத்தில் விஞ்ஞானம் பெருகியிருந்தது.

அப்போது கருப்புவின் பேரனான குமரன் வயதாகி வேலை செய்ய தகுதியிழந்து நெல் அடிக்கும் இயந்திரம் வயலில் நெல் அடித்திருந்த இடத்தில் சிதறியிருந்த நெல் மணிகளை பொருக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவனது பேரன் தாத்தா நாலு அஞ்சி நெல்லு தான சிந்தியிருக்கு? அத எதுக்கு தாத்தா இப்படி ஒன்னு ஒண்ணா பொறுக்கிக்கிட்டு இருக்க. வெயிலுபாருங்க, உங்க உடம்பெல்லாம் வேர்க்குது, வேலை செய்யத் தான் நாங்க இருக்கோம்ல. நீங்க எதுக்கு இந்த வெயில்ல இப்படி துன்பப் படுறீங்க! என்று அவரை நிழலிற்கு அழைத்தான். அப்போது குமரன் தன் பேரனை அருகில் அழைத்து, அவனது தலையைக் கோதியபடி சொன்னார்.‘ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு’ப்பாஎன்று.