ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

போட்டிச் சிறுகதை 81

கடலும் காதலும் - சிறுகதை

கடலின் அலையும் காற்றின் சப்தமும் இன்னிசையால் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அழகிய கடற்கரை கிராமம் அது! எப்போதும் ஏதாவது சில படகுகள் பயணித்துக் களைத்துக் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். அதில் ஒரு படகின் நிழலில் படகின் மேல் சாய்ந்தவாறு  நினைவுகளில் மூழ்கியிருந்தான் கார்வண்ணன்.
"வாழ்க்கை மிக அழகானது! பரந்த உலகம்… பார்த்து ரசிக்க கடல்… கடலில் உதயமாகும் சூரியக் காட்சி… தனிமையில் துணைக்கு வரும் சிந்தனைகள்!… இதைவிட வேறென்ன வாழ்வில் வேண்டும்" கார்வண்ணனின் நினைவுகள் இவை!

இருபத்தைந்து அகவை! திருமணம் ஆகாத கட்டிளம் காளை அவன். பெற்றோரைப் பேணிக்காக்கும் சிறந்த மகன்.  வளர்ந்து மீன் பிடிக்க படகுக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு அவன் அப்பாவைக் கடலுக்குச் செல்ல அவன் அனுமதித்ததே இல்லை!  "எத்தனைக்காலத்துக்கு எனக்காகக் கடலுக்குப் போயிருப்பாரு! இனி அவருக்காகக் காலம் முழுசும் நான் போவணும்" இது அவனுடைய பதில்!
சுழலும் உலகத்தில் சாப்பிடக்கூட நேரமில்லாமல் பட்டணத்து வீதிகளில் பயணித்து வாகனத்து நெரிசலில் மூச்சிறைத்து மன உளைச்சலில் கை நிறைய சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை ஒருநாள் விட்டுவிட்டு ஒரு முறை என்னுடன் கடல் வந்து பாருங்கள் வாழ்க்கையில் நாம் சம்பாதித்தது எது செலவழித்தது எது என்று உங்களுக்குப் புரியும் என்பது அவனுடைய கடல் சித்தாந்தம். அது உண்மையும் கூட. வேதாந்தங்களை விட சித்தாந்தங்கள்தானே நமக்கெல்லாம் எளிதாய்ப் புரிகின்றன.
அவன் ஒரு கடல் பிரியன். கடலின்பால் காதல் கொண்டவன்.  கடலில் படகில் பயணிப்பது எல்லோருக்கும் கிடைத்துவிடும் பாக்கியம் அல்ல!
"டேய் காரு! போலாமாடா கடலுக்கு?"
குரல் வந்த திசையில் வந்தவன் அவன் நண்பன் முத்து! முத்து அவனின் பால்ய நண்பன். இருவரும் ஒன்றாகத்தான் எப்போதும் கடலுக்குச் செல்வார்கள்.
"போலாம்டா! அந்த வலைய எடுத்துப்போடு" சொல்லிக்கொண்டே படகை நகர்த்த ஆரம்பித்தான் கார்வண்ணன். கடலில் மிதக்கும்வரை நகர்த்திய இருவரும் ஏறிக்கொண்டனர். பயணம் பேச்சுடன் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

"முத்து! இந்தக் கடல் வாழ்க்கைதான் எவ்ளவு அலாதியானதா இருக்குது பாரு. கடலில்தான் எத்தனை ஜீவராசிகள்! சில்லிடும் காற்று!! ஓயாமல் அலையிடும் அலைகள்! மனதுக்கு ரம்மியமான பறவை கீச்சுகள்! இவையெல்லாம் தொலைத்துவிட்டு நிம்மதியாய் வாழ்கிறோம்னு எந்த நினைப்பில் வாழ்கிறார்களோ மற்றவர்கள்.   கடற்கரையில் கால் நனைத்துவிட்டு கடலுக்கேச் சென்று வந்ததுபோல் பேஸ்புக்கில் ஷேர் செய்பவர்களையும் அதற்கு லைக் போடுபவர்களையும் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. வாழ்க்கையின் ரசனைகளைத் தொலைத்துவிட்டு அதை  தேடிக் கொண்டிருக்கிறார்கள்" கார்வண்ணனின் ரசனைகளுக்குத் தலையாட்டிக் கொண்டு வந்தான் முத்து.
திடீரென எதையோ பறிக்கொடுத்தவன்போல் கார்வண்ணன் "டேய் அம்மாட்ட சொல்லாம வந்துட்டேன்டா! பாதிக்கடல் தாண்டியாச்சு!! தேடப்போவுதோ என்னுமோ" என்றவன் மீண்டும் "நான் எப்ப வருவேன் எங்கிட்டுப் போயிருக்கேனு என் சிந்தனையாவே இருக்குற அம்மா! எனக்காய்க் காத்திருக்கும் என் காதலி மலர்விழி…"  எனத் தொடர்ந்தான்.
எத்தனைமுறை கேட்டுக்கேட்டுப் பழகிப்போன வார்த்தைகள். "டேய் போதும் நிறுத்து! உனக்கு அழகான காதலி! அன்பான அம்மா, அப்பா! உயிரான பிரெண்டு நான். அமைதியான வாழ்க்கை! எல்லாமும் கொடுக்கும் கடல்!! எத்தனவாட்டிதான்டா சொல்லுவ… உன் பேச்சுக்கொரு எல்லையே இல்லாமப் போச்சு"னு முத்து பதில் பேச்சுச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
திடீரென ஒரு சத்தம்.
தூரத்தில் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்டது. "எல்லையே இல்லாமப் போச்சு" என்ற இறுதி வார்த்தைகள்தான் அந்தச் சத்தத்திற்கு காரணம் என அவர்கள் அறிந்திருக்கவில்லை.இருவரும் படகுக்குள் விழுந்தனர்.
கார்வண்ணனின் வயிற்றில் இரத்தம் கசிய ஆரம்பித்தது. கடல் மேல் கொண்ட காதலைத் துளைத்ததுக் கடலில் எல்லை பிரித்த குண்டுகள்!
"கடலுக்கு கரைகள் தானே எல்லை!! கடலில் ஏது எல்லைகள்!! கடல்பால் கொண்ட காதலும் கண்முன்னே புகைகளைக் கக்கியப்படி துப்பாக்கிகளும் கார்வண்ணனின் நினைவை நிலைகுனிய செய்தன. முத்துவை வளைத்தாற்போல் தோளைச் சாய்த்தப்படியே சாய்ந்தான். இப்போது முத்துவின் கண்களில் கண்ணீர்… பாசமும் பயமும் சுற்றி வளைத்தபடியே…!!