ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 6 January 2014

போட்டிச் சிறுகதை 73

அர்த்த ராத்ரி பிசாசு
ஊரின் வெளிப்புறத்தில் பிரும்மாண்டமாக அமைந்திருந்து வெற்றி வித்யாலயா. அன்று நேர்காணலாதலால் அதிகாலையிலேயே பரபரப்பாய் இருந்தார்கள் பள்ளி ஊழியர்கள். பகலவனையும் சேர்த்து ஐவர் வந்திருந்தனர். அவனைத்தவிர மற்ற நால்வரும் பெண்கள். மூன்று பெண்கள் நம் கதைக்குத் தேவையற்றவர்கள். ஏனெனில் அவர்கள் நேர்காணலில் தேர்வாகவில்லை. இனி தேன்மொழி பற்றிக் காண்போம். பெயர் மட்டுமல்ல, குரலும் தேன் தான். கர்நாடக இசை கற்று கச்சேரி செய்தவள். பெயர்தான் தேன்மொழி. வீட்டில் சுந்தரத் தெலுங்கு. கலாக்ஷேத்ராவில் குச்சுப்புடி கற்றவள். கராத்தேவில் கறுப்புப் பட்டை பெற்றவள். இலேசான மாறுகண். படிப்பில் படுசுட்டி. மற்ற விஷயங்களில் கெட்டி.
“You could have gone to industry” அவளாகவே மௌனத்தை உடைத்தாள்.
“Pardon me”, இது பகலவன். அவளது அழகில் மயங்கியிருந்ததால் மீண்டும் கேட்டான்.
மீண்டும் சொன்னாள் தேன்மொழி.
“போகணும்.” தலையாட்டி மழுப்பலாய்ச் சிரித்தான் பகலவன்.
“நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ். பெங்களூர்ல வேல கெடச்சது. ஆர்த்தடாக்ஸ் பேமிலி. ஆத்துல விடல.” தன்னிலை விளக்கமளித்தாள் தேன்மொழி.
“நான் எம்.எஸ்.சி.கம்ப்யூட்டர் சயின்ஸ்.”, அவள் தலையாட்டும் அழகை ரசித்துக் கொண்டே பகன்றான் பகலவன்.
பதினைந்து நாட்களுக்கெல்லாம் பள்ளி மறுதிறப்பு அடைந்து பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். ஜீனியர் சினியர் அறிமுகங்கள் நடந்தன.
"எம்.எஸ்.சி முடிச்சுட்டு ஏம்பா இந்த வேலைக்கு வந்த?" எல்லாரும் பகலவனைத் திட்டினார்கள்.
"வேற வேலைக்குப் போகணும்." இந்த முறை பகலவன் பேச்சில் உறுதி தெரிந்தது.
வீடு, இன்னபிற சமாச்சாரங்களை வினவிய பிறகு தேன்மொழி, பகல்வனுக்கு ஒரே ஓய்வறை (staff room) அளிக்கப்பட்டதுஎல்லாம் முறையாகக் கற்றவள் தேன்மொழி. எல்லாவற்றையும் கேள்வி ஞானம் மூலம் கற்றவன் பகலவன். இருவர் உலகமும் சுற்றிவந்தது. பேசினார்கள். பாடினார்கள். அளவளாவினார்கள்.
"நீங்க எஸ்.பி.பி மாதிரி வருவீங்க." பகலவன் பாட்டுக் கேட்டுச் சொன்னாள் தேன்மொழி.
"அவரும் மொறையா இசை கத்துக்கல தெரியுமா?" யாருமறியாத செய்தியைச் சொல்வது போல் சொன்னாள்.
"தேங்க்யூ" அனிச்சையாய்ச் சொன்னான் பகலவன்.
"பாரத ஸமுதாயம் வாழ்கவே."
இருவரும் சேர்ந்து ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பாரதியார் பாட்டு குடியரசு நாள் விழாவிற்காகச் சொல்லிக் கொடுத்தார்கள்.
பகலவன் தேன்மொழியிடம் காதல் கொண்டான். காதலை அவளிடம் சொல்லவில்லை. வேலையில் சேர்ந்து மூன்றாவது வாரம் வெற்றி வித்யாலயாவிலிருந்து வேறு பொறியியல் கல்லூரிக்கு வேலைக்குச் சென்றான். செல்லும் போது தேன்மொழியின் கண்களைச் சந்திக்க மனமில்லாமல் அவளிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டான்.
அடுத்தது பொறியியல் கல்லூரி. சூழல் வேறு. காணும் உலகம் வேறு. அவனது படிப்புக்கேற்ற வேலை அது இல்லையென்றாலும், முன்பு பார்த்த வேலையை விட ஒசத்தி. ஆனா ஊதியம் குறைவு. ஏசி அறையில ப்ரோக்ராமர் வேலை.
அவனைக் காணாமல் பள்ளியில் தேடினாள் தேன்மொழி. அவன் ஊர்க்காராளிடம் விசாரித்தாள். பொறியியல் கல்லூரி தேடி ஓடினாள். நெடுநேரம் தேடியலைந்து அவனைக் கண்டாள்.
கல்லூரி விரிவுரையாளர் அறையில் முக்கால் மணி நேரம் பேசினார்கள். கேண்டினில் குளிர்பானம் அருந்தினார்கள். பேச்சுப் பேச்சாயிருந்தாலும் பகலவன் அவள் மனதை நோகடித்தான். அவன் பார்க்கும் வேலை ஒசத்தி என்ற நினைப்பு, மமதை. பொது இடத்தில் அவளது அழகை வெட்கமில்லாமல் மேய்ந்தான்.
"ஆத்துக்கு கண்டிப்பா வரணும்." அவளுக்கு பிடிக்கவில்லையெனினும் சம்பிரதாயத்திற்கு கூறிவைத்தாள்.
காலம் மாறியது.பகல்வன் வேறு வேலையில் பரிமளித்தான். தேன்மொழி தலைநகரில் மென்பொருள் துறையில் வேலைக்குச் சேர்ந்தாள். பகலவன் மின்னஞ்சல் செய்தான். மறுமொழியில்லை.
பகல்வன் தந்தை மாரடைப்பால் இறந்தார். மீண்டும் மின்னஞ்சல் தந்தான் சோகச் செய்தியோடு. இந்த முறை இரண்டு கணினித்திரைகளுக்கு மறுமொழி. ஆறுதல் சொல்லியிருந்தாள். இணையத்தில் அவள் நிறுவன முகவரி அறிந்து வாழ்த்து மடல் அனுப்பினான் மனம் பறிகொடுத்தவன். தொடர்ந்து கைபேசி எண்கள், குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டன.
எனக்கு மழய்ல நனையப் பிடிக்கும். மழலைச் சத்தம் பிடிக்கும். எலுமிச்சைச் சோறு பிடிக்காது. Friendsங்க கூட ஃபோன்ல கடல போடப் பிடிக்கும்.
“நா. சாதாரணமாக தூங்கறதத்துக்கு நைட் மூனு மணி ஆகும். அதுனால வீட்லஅர்த்த ராத்ரி பிசாசுன்னு கூப்பிடுவா.” அலை பேசி அரட்டையில் அடுக்கினாள் அந்த நகர நாயகி.
"ம்..." தவிர எதுவும் சொல்லவில்லை அவன்.
"எனக்குப் புடிச்சதெல்லாம் சொன்னா ஒங்களுக்குப் புடிச்சதெல்லாம் மறந்துடுமா?" ஏமாற்றத்தில் சற்று உரக்கவே பேசினாள்.
"இங்க நா. ஒரு கேரளா பொண்ணக் காதலிக்கிறேன். சிவப்பு நாசி. கரிய விழிகள்." என்று பொய்கள் பெய்தான் பகலவன்.
அது "வாலி" வந்திருந்த நேரம். வேற பொண்ணக் காதலிக்கறேன்னு சொன்னா அவ தன் காதலைச் சொல்வாள் என்ற எண்ணம். ஆனால் விளைவு வேறு மாதிரி. அவள் "ம்" கொட்டிக் கதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள்.
நாளாக நாளாக பொய்கள் பழுத்தன. இவனுக்குக் கதை சொல்லி மாளவில்லை. அவளோ கதை கேட்பதோடு சரி.காதலைச் சொல்லவில்லை.
அவளையே முதலில் சொல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணம் இவனுக்கு. மனதுள் பயம் வேறு. இப்போது நல்ல வேலையிலிருக்கிறாள். ஏற்பாளா, இல்லையா தெரியாது. தருணம் பார்த்துக் காத்திருந்தான் பகலவன்.
காதலர் நாள் வந்தது. வாழ்த்து அனுப்பினான். இரவு பதினொன்னறை மணிக்குக் கைபேசி அழைத்தது.
"நா.தேன்மொழி லவ்வர் பேசறேன். யாருங்க ஒங்களுக்கு இந்த அட்ரஸ குடுத்தது?" மென்குரலில் மிரட்டினான் பெயர் தெரியாதவன்.
"நீங்க யாரு"
"அதெல்லாம் ஒங்களுக்குச் சொல்ல வேண்டியதில்ல. நானும் தேன்மொழியும் லவ்வர்ஸ். அவளப் பத்தி டூ இஸட் எனக்குத் தெரியும். நாங்க என்ன பண்றோம்? என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? என்ன பண்ணப்போறோம்? அதெல்லாம் சொல்ல முடியாது."
“அவங்களே அத சொல்லியிருக்கலாம்ல. நீங்க சொல்றீங்க?”
"அவ ஒங்க மேல கோவமா இருக்கா. நீங்க அவ friend ங்கறதாலத்தான் மரியாதையாப் பேசறேன். இல்லைன்னா கெட்ட வார்த்தையிலயே திட்டியிருப்பேன்.” மீண்டும் பெயர் தெரியாதவன் பேசினான்.
"அவளக் கூப்டுங்க. நா. பேசறேன்."
தேன்மொழி வந்தாள் கான்பரேன்ஸ் காலில்.
“ஸீ பகல். நா.. ஒன்ன வெறுக்கறேன். இவன் தான் என்னோட லவ்வர்.”
"வாட் ராபிஷ் ஆர் யூ டாக்கிங் தேன்?"
"வாட் ராபிஷ் இன் திஸ்? யு சீட். சன் ஆஃப் பிட்ச்... ..." காதுகளால் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாள் தேன்மொழி.
"நீங்க என்ன வேண்ணா பண்ணிக்கங்க." பெயர் தெரியாதவன் மீண்டும் பேசினான்.
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பிறகு பகலவன் ஓலைச்சுவடி ஜோதிடரை அணுகினான். அவர் சொன்ன பரிகாரங்களைச் செய்தான் தன்னைத் திட்டியவள் கிடைப்பதற்காக. மேலும் யாகம் செய்தான் பெயர் தெரியாதவன் பிரிந்து போக.
"ஒரு வர்ஷத்துக்கு முருகன் கோவில் போனா அந்த்ப் பொண்ணு ஒங்களத் தேடி வருவா சார்." உறுதியளித்தது ஓலைச்சுவடி ஜோதிடம்.
"நான் ஒன்ன ஏமாத்தினத்துக்கு என்ன மன்னிச்சுக்கோ தேனு." என்று அவளுக்குக் கடிதம் போட்டான். அவள் பேரிலும், தன் பேரிலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகன் கோவிலில் அர்ச்சனைச் செய்யத் தொடங்கினான் பகலவன்.
கடிதம் கண்ட தேன்மொழியும், பெயர் தெரியாதவனும் சிரித்தார்கள்.
என்ன செய்தும் தேன்மொழி வரப்போவதில்லை என்பதறியாத பகலவன் அர்ச்சனை செய்து கொண்டேயிருந்தான் அந்த அர்த்த ராத்ரி பிசாசுக்காக.