சிறுகதை -சொர்க்கத்தீவு
------------------------------ --------------
------------------------------
இக்கதையானது வரலாற்றில் இடம்பெற்றுள்ள உண்மைச் சம்பவங்களுடன் வதந்திகளையும் கற்பனையையும் கலந்து புனையப்பட்டுள்ளது.
சொர்க்கத்தீவு’ன்னா அங்க போறவங்க எல்லாம் செத்துடுவாங்களா...? வேண்டுமென்றே நக்கலடிக்கும் தொனியில் கேட்டான் அகிலன்.
போடா ஃபூல் என்றபடி சித்தார்த் தன் விவரிப்பை துவங்கினான். கடலுக்கு நடுவுல சுமார் நாப்பதாயிரம் ஸ்கொயர் ஃபீட்டில் ஒரு தீவு. தங்குவதற்கு பங்களாக்கள், வேளாவேளைக்கு நாம விரும்பிக் கேக்குற சாப்பாடு, விதவிதமா வெளிநாட்டு சரக்கு, (கண்ணடித்துக்கொண்டே) அப்புறம் தேவைப்பட்டா கை பிடிச்சுவிட, கால் அமுக்கிவிட ஃபிகருங்க, அது மட்டுமா உள்ளயே ஜிம், ஸ்பா, ஸ்விம்மிங் பூல், பில்லியர்ட்ஸ், கோல்ப், பீச் வாலிபால், தியேட்டர்.... போடா டேய்... ஒரே வார்த்தையில சொல்லணும்’ன்னா அங்க எல்லாமே இருக்குடா... அதை சொர்க்கத்தீவு’ன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்லுவாங்க...?
அந்த தியேட்டர்ல கரகாட்டக்காரன் படம் போடுவாங்களா...? மறுபடியும் நக்கல்.
போடாங்கொத்.... கெட்டவார்த்தையின் தொண்ணூறு சதவிகிதத்தை சொல்லிவிட்ட சித்தார்த் பேச்சு சீரியஸ் ஆகிவிடக்கூடாதென நிறுத்திக்கொண்டான்.
காசு கொடுத்தா சொர்க்கமெல்லாம் நல்லாத்தான்டா கிடைக்கும் சலித்துக்கொண்டான் அகிலன்.
நாம என்ன காசு கொடுத்தா போறோம்... மூடிக்கிட்டு வாடா... பொறிந்தான் சித்தார்த்.
*********
‘ஐந்து ரூபாயில் சொர்க்கத்தீவு’ என்று ஒரு ‘பொழுதுபோக்கு’ வார இதழ் சில மாதங்களுக்கு முன் விளம்பரப்படுத்தியது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வாராவாரம் ஒரு போட்டி.. தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் சரியாக பதில் சொல்லி, குலுக்கல் முறையில் தேர்வாகும் அதிர்ஷ்டசாலி வாசகர் தன்னுடன் ஒருவரை அழைத்துக்கொண்டு நான்கு பகல், மூன்று இரவுகள் இத்தாலிக்கு அருகேயுள்ள ஒரு தனியார் தீவில் தங்கி புத்தாண்டு கொண்டாடி விட்டு வரலாம். போட்டி ஒன்றும் அத்தனை கஷ்டமில்லை. தொப்புளுக்கு உரிய நடிகையை கண்டுபிடிப்பது, படம் பார்த்து அளவு சொல்வது, போட்டோவுக்கு இரட்டை அர்த்த கேப்ஷன் எழுதுவது போன்ற எளிமையான பொது அறிவு கேள்விகள் தான். சித்தார்த்துக்கு கண்டிப்பாக ‘அந்த’ இடத்தில் மச்சமிருக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றுவிட்டான். அவனும் அவனது மனைவியும் செல்வதாக திட்டம். அவனுடைய நல்ல நேரம் மனைவி சினையுற்று இருப்பதால் தொலைதூர பயணமெல்லாம் மேற்கொள்ளக் கூடாதென மருத்துவர் சொல்லிவிட்டார். இல்லையென்றாலும் ஏதாவது காரணம் சொல்லி கழட்டி விட்டிருப்பான். இல்லையென்றால் அங்கே போய் எப்படி கூத்தடிப்பது...? அதற்காக தனக்கு வாய்த்த மிகச்சிறந்த அடிமையான அகிலனை அழைத்துச் சென்றிருக்கிறான்.
முதலில் நீங்கள் கேட்ட உரையாடலில் இருந்தே தெரிந்திருக்கும் சித்தார்த் ஒரு உல்லாசி. உலகத்தில் உள்ள எல்லா சந்தோஷத்தையும் ஒருமுறையாவது அனுபவித்துவிட வேண்டுமென துடிப்பவன். அட்வென்ச்சர் என்றால் சாகுற வரைக்கும் கூட ரிஸ்க் எடுப்பான். ஹனிமூனுக்கு போனவன் 233 மீட்டர் உயரத்திலிருந்து பஞ்ஜி ஜம்ப் செய்துவிட்டு வந்திருக்கிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்ணாசை கொஞ்சம் தூக்கல். அகிலன் அப்படியெல்லாம் இல்லை. அப்படியே சித்தார்த்துக்கு நேரெதிர் என்று சொன்னால் வாயில் குத்த வருவீர்கள். உண்மையில் அகிலனுக்கும் அதுபோன்ற ஆசைகள் உண்டு. ஆனால் ஆசையை பயம் ஓவர்டேக் பண்ணிவிடுவதால் அவன் எந்த விபரீத முயற்சிகளுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்வதில்லை. சினிமாக்களில், புத்தகங்களில் மட்டும் சாகசங்களை பார்த்து, படித்து சிலிர்த்துக்கொள்வான். குறிப்பாக டான் பிரவுன், மைக்கேல் க்ரைட்டன் போனறவர்களின் நாவல்களை படிப்பதற்கு ரொம்பப் பிடிக்கும். செய்முறை ஞானம் இல்லையென்று அகிலனுக்கு சித்தார்த் மீது கொஞ்சம் பொறாமை தான் என்றாலும் அவ்வப்போது இப்போது கிடைத்த ஓசி டூர் மாதிரி சலுகைகள் காரணமாக அண்டியிருக்கிறான். அந்த பொறாமையின் காரணமாகத்தான் முதல் உரையாடல் போல அடிக்கடி சீண்டிப் பார்ப்பான்.
சென்னையிலிருந்து லண்டன், லண்டனிலிருந்து வெனிஸ். அதிகாலை நான்கு மணிக்கு துவங்கி இருபது மணி நேர பயணம். ஆனால் நேர வலய மாற்றம் காரணமாக அதே நாளின் இரவு ஏழு மணியில் தான் இருக்கிறார்கள். மறுநாள் மதியம் ஹெலிகாப்டரில் ‘அந்த’ தீவை நோக்கி பயணிக்க வேண்டும். தங்களுக்கென வழங்கப்பட்டிருந்த அறைக்கு சென்று அசதி காரணமாக தூங்கியே போனார்கள்.
காலையில் படகு சவாரி போனார்கள். எனக்கு இருபது உனக்கு பதினெட்டு படத்தில் த்ரிஷா நின்ற பாலத்தில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள், பக்கலா மண்டேகடா என்ற வாய்க்குள் நுழையா பெயரைக் கொண்ட உணவை வாய்க்குள் நுழைத்தார்கள், ரஸ்க்குக்கு மேலே தேங்காய் துவையலை அப்பி வைத்தது போலிருந்தது. புகழ் பெற்ற புனித.மார்க் தேவாலயத்தை சுற்றிப் பார்த்தார்கள். தேவாலயத்திற்கு அருகில் தான் ஹெலிபேட் இருக்கிறது. நிறைய செக்யூரிட்டி சோதனைகள். இருவரும் எறி அமர, ஒரு சிப்பந்தி வந்து சில நடத்தை முறைகளை சொல்லித்தந்துவிட்டு போனான். கதவுகள் அடைக்கப்பட்டன. ஆலைச்சங்கு சத்தத்தை போல சுமார் அறுபது நொடிகளுக்கு குரலெழுப்பி ஹெலிகாப்டரின் இறக்கைகள் சுழலத் துவங்கின. அடுத்த அரை நிமிடத்தில் இறக்கைகள் அதன் முழு வேகத்தில் சுழன்று, ஹெலிகாட்பர் உயர்ந்து வேகமெடுத்தது. பத்து நிமிடங்களில் சொர்கத்தீவை அடையப்போகிறது.
*********
SAN SPIRITO வெனிஸிலிருந்து வான்வழி பயணமாக நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ள சிறிய தனியார் தீவு. அதன் உரிமையாளர் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். பிரபல நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் பமீலா ஆண்டர்சன். பமீலாவுடையது ஆனால் சிறியது - என்ன ஒரு நகை முரண். சிதிலமடைந்த பழம்பெரும் பள்ளிகூடத்தை கொண்டிருந்த அந்த தீவை, சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் இருபத்தியெட்டு மில்லியன் யூரோக்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார் பமீலா. இந்திய ரூபாயில் ஏறத்தாழ 240 கோடி. வாங்கிய கையோடு பல கோடிகள் செலவு செய்து சகல வசதிகள் கொண்ட ரிஸார்ட் ஒன்றையும் கட்டிவிட்டார். அப்படியாப்பட்ட பெருமைகள் கொண்ட தீவினை நோக்கித்தான் அகிலனும் சித்தார்த்தும் பறந்துக்கொண்டிருக்கிறார்கள்.
*********
ம்ம்ம்... மைக்கேல் க்ரைட்டனை கொண்டு வந்திருந்தாலாவது நான் பாட்டுக்கு செவனே என்று படித்துக் கொண்டிருந்திருப்பேன் – பறக்கும்போது கூட விடாமல் தொன தொனத்தான் அகிலன்.
ஒரு முறை முறைத்துவிட்டு, உனக்கென்ன படிக்கணும். அவ்வளவுதான ? என்றபடி பைக்குள்ளிருந்த ஒரு புஸ்தகத்தை எடுத்துக்கொடுத்தான் சித்தார்த்.
அட்டையில் ஆலய மணி வடிவத்தில் ஒரு தீவுடைய சாட்டிலைட் வியூ அச்சிடப்பட்டிருந்தது. அலட்சியமாக தன்னுடைய பையில் அதனை திணித்து முதுகில் மாட்டிக்கொண்டான் அகிலன்.
திடீரென ஹெலிகாப்டர் முனக ஆரம்பிக்கிறது. சிப்பந்திகள் தங்களுக்குள் இட்டாலிய மொழியில் ஏதோ விவாதித்துக்கொள்கிறார்கள். சித்தார்த் ஒரு பக்கம் லூஸு மாதிரி சிரித்துக்கொண்டிருக்கிறான். த்ரில்லை அனுபவிக்கிறானாம். மடையன். அகிலனுக்கு அல்லு கழண்டுவிட்டது. ஹெலிகாப்டர் டாஸ்மாக் வாடிக்கையாளனைப் போல காற்றில் கிடந்து தள்ளாடுகிறது.
அதோ தூரத்தில் ஒரு நிலப்பரப்பு தெரிகிறது. தேவாலய மணியின் வடிவில். எங்கேயோ பார்த்த மாதிரி. சுதாரிப்பதற்குள் ஹெலிகாப்டரின் வால் பகுதி தீப்பிடித்து எரியத்துவங்கிவிட்டது. தீ மிகத்துரிதமாக பரவ, பாராசூட் மாட்டுவதற்கெல்லாம் நேரமில்லாமல் சிப்பந்திகளோடு சேர்த்து நான்கு பேர் கடலில் குதிக்கிறார்கள்.
*********
அகிலன் கண்விழித்து பார்த்தபோது ஒரு மருத்துவமனையின் அறையில் படுத்திருக்கிறான். ஒரு போர்வைக்குள் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறான். எழுந்திருக்க முற்படுகிறான். வலது காலில் வலி பின்னியெடுக்கிறது. போர்வையை விலக்கிப்பார்த்தால் காலில் கட்டு போடப்பட்டிருந்தது. எப்படி உயிர் பிழைத்தேன்...? யார் என்னைக் காப்பாற்றியது...? என்ன இடம் இது...? சித்தார்த்தும் சிப்பந்திகளும் எங்கே...? பல கேள்விகளுடன் அவன் திருதிருவென முழித்துக்கொண்டிருக்க, காலடி ஓசை ஒன்று அவனை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. போர்வையை கழுத்து வரை இழுத்துப்போர்த்திக்கொண்டான். வந்திருந்தது ஒரு பெண். வயது முப்பது இருக்கலாம். வெள்ளைக்காரி. பழுப்பு நிறத் தலைமயிர். வெளிர் பச்சை நிற மேற்கத்திய சாயல் அங்கி. அதன்மேலே மருத்துவர்களுக்கு உரித்தான வெண்ணிற மேலாடை. காலில் உயர் குதிகால் காலணி. அகிலனைப் பார்த்ததும் புன்னகைத்துவிட்டு, அவளுக்கு தெரிந்த மொழியில் ஏதோ விசாரிக்கிறாள். போர்வையை விலக்கி அப்பால் வீசிவிட்டு கால்களை தொட்டுப் பார்க்கிறாள். ஒருவனை நிர்வாணமாக பார்ப்பதைப் பற்றி எந்த உணர்ச்சியையும் காட்டாமல், வலி எப்படி இருக்கு என்னும் தொனியில் ஏதோ கேட்கிறாள். இவனும் அவளுக்கு புரியாத மொழியில் ஏதோ பதில் சொல்லுகிறான். அவளும் எல்லாம் புரிந்தது போல சிரித்துக்கொள்கிறாள். ஆரஞ்சு பழச்சாறு பருகக்கொடுக்கிறாள். போர்வையை போர்த்திவிட்டு அவனுடைய நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்கிறாள். இரவு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அவள் அப்படிச் சொல்லும்போது கண்களில் குறும்பு கொப்பளித்தது.
எல்லாம் நன்றாகத்தான் இருந்தது அகிலனுக்கு. ஆனால் அவன் அதனை அனுபவிக்கும் சூழலில் இல்லை. கதவுகள் காற்றில் தடதடவென சத்தம் போட்டன. வலியை பொறுத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி எழுந்துச் சென்று கதவை அடைத்தான். அதற்கு மேல் உடல் ஒத்துழைக்கவில்லை. மறுபடி வந்து படுத்துக்கொண்டான். எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. கண்விழித்தபோது எங்கிருந்தோ மணியோசை ஒலித்தது. ஏதாவது தேவாலயமாக இருக்கக்கூடும். அறையில் சூரிய ஒளி குறைந்திருந்தது. அருகிலிருந்த ஸ்விட்ச் போர்டின் பாகங்கள் ஒவ்வொன்றாக தட்ட, அறையில் செயற்கை வெளிச்சம் பரவியது. அவளது வருகைக்காக காத்திருந்தான். தனிமையில் ஒவ்வொரு நொடியும் அவனது மனநிலையை மோசமாக்கிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த மேஜையில் அவன் சுமந்து வந்த முதுகுப்பை வைக்கப்பட்டிருந்தது. மருத்துவச்சி எப்போது வருவாள் என்று தெரியவில்லை. அதுவரைக்கும் பொழுது போக்கலாம் என பையிலிருந்து புத்தகத்தை எடுத்தான்.
அதன் தலைப்பு – பொவெக்லியா தீவின் மர்மங்கள்...!
*********
300 பக்கங்களுக்கு மேல் கொண்ட அந்த புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவம் :-
பொவெக்லியா, வெனிஸ் நகரத்திற்கும் லிடோ தீவிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு. உண்மையில் அது மூன்று சிறிய தீவுகள் ஒன்றிணைந்து தேவாலய மணியை பிரதிபலிக்கும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
பொவெக்லியாவின் அறியப்பட்ட வரலாறு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், ரோமப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் துவங்குகிறது. அச்சமயத்தில் இத்தாலியில் ‘ப்ளேக்’ நோய் பரவி மக்கள் கொத்து கொத்தாக மடிந்தார்கள். ப்ளேக் எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்தும் பொருட்டு பொவெக்லியா தீவுகளுக்கு வலுகட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நோய் குணமானதாகவோ மீண்டும் நாடு திரும்பியதாகவோ சரித்திர குறிப்புகள் இல்லை. அதன்பிறகு பதினான்காம் நூற்றாண்டில் மீண்டும் ஐரோப்பிய கண்டத்தில் ப்ளேக் நோய் பரவியது. இம்முறை அதீத சீற்றத்துடன். அப்போது, கிட்டத்தட்ட பாதி ஐரோப்பிய மக்களை ப்ளேக் நோய் கொன்றுவிட்டதாக சரித்திரம் சொல்கிறது. black death என்று கூகுளினால் தெரிந்துக்கொள்ளலாம். ப்ளேக் நோயால் மடிந்தவர்களை புதைக்கும் / எரிக்கும் மைதானமாக பொவெக்லியா தீவுகள் பயன்படுத்தப்பட்டன. இறந்தவர்கள் மட்டும்தான் என்றில்லை, ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டாலே அவர்களையும் பிணங்களுடன் சேர்த்து உயிரோடு எரித்த / புதைத்த கொடுமைகளும் அரங்கேறின. ஏறத்தாழ ஒரு லட்சத்து அறுபதாயிரம் பிணங்கள் கொண்ட தீவு அது. அதனுடைய மண்ணில் பாதிக்கு மேல் மனித சாம்பல் கலந்திருக்கிறது, அப்பகுதியில் மீன் பிடித்தால் கூட மனித எலும்புகள் வலையில் சிக்குகின்றன. எனவே மீனவர்கள் கூட அப்பகுதியில் மீன் பிடிப்பதில்லை.
நிற்க. பொவெக்லியாவின் கோர சரித்திரம் அத்துடன் முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1922ம் ஆண்டு பொவெக்லியாவில் பிரம்மாண்டமான மணிகூண்டுடன் ஒரு மனநல மருத்துவமனை அமைக்கப்பட்டது. அங்கே சிகிச்சை எடுத்துக்கொண்ட பல மனநோயாளிகளுக்கு ப்ளேக் நோயால் இறந்தவர்களின் மரண ஓலம், முனகல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. ஆனால் மனநோயாளிகள் என்பதால் அவர்களுடைய வார்த்தையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவரின் பெயர் மரியா. மரியா அழகும் இளமையும் தளும்பப் பெற்றவள். ஆனால் அவளுடைய மனது அத்தனை அழகாக இருக்கவில்லை. காலை வேளைகளில் நோயாளிகளை பொறுப்புடன் கவனித்துக்கொண்ட மரியா, சூரியன் மறைந்தபிறகு விநோதமாக செயல்பட துவங்கினாள். தன்னுடைய நோயாளிகளை பல கொடிய சோதனைகளுக்கு உட்படுத்தினாள். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய லொபோடோமி என்னும் சிகிச்சை முறையை நோயாளிகளின் மீது செயல்படுத்தி பரிசோதித்தாள்.
வருடங்கள் கழிய, மரியாவே ஒரு மனநோயாளியாகிப் போனாள். அவளுடைய காதுகளுக்கும் ப்ளேக் நோயாளிகளின் மரண ஓலம் கேட்கத்துவங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் தாளமுடியாத மரியா மணிகூண்டின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டாள்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தாலிய அரசாங்கம் பொவெக்லியா தீவுகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. அங்கிருந்த மணிக்கூண்டிலிருந்து ராட்சச மணி அகற்றப்பட்டது. எனினும் இன்றளவும் அம்மணியின் ஓசை தொடர்ந்து கேட்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அப்பகுதியில் செல்லும் மீடியாக்காரர்கள், த்ரில் விரும்பிகள் கண்களுக்கு மரியா இன்னமும் தெரிவதாகவும், அவர்கள் அவளுடைய சித்திரவதையிலிருந்து மீண்டு வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அப்படி மீண்டு வந்த மீடியாக்காரர்கள் மிகச்சிலர் மட்டுமே. மற்றவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.
இன்றும், பொவெக்லியா தீவுகளுக்கு யாராவது வந்தால் மரியா மருத்துவ சீருடையுடன் வரவேற்று உபசரிப்பதாகவும், சூரியன் மறைந்தபிறகு விருந்தினர்களை சித்திரவதை செய்து கொன்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது.
*********
கதவு தட்டப்பட்டது...!
REFERENCES: