ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 6 January 2014

போட்டிச் சிறுகதை 60

டாட்டாவின் அம்மா:
”சாப்ட வந்த பய அப்டியே தூங்கிட்டியாம்மா.. இனிமே எதுக்கு எழுப்பிக்கிட்டு? காலேல எந்திரிச்சதும் நானே அனுப்பி வைக்கிறேன். இல்லேனா நீயும் இங்கயே படுத்துக்கோயேன்” வாசலில் நின்று கொண்டிருந்த லட்சுமியிடம் விசிறியால் தனக்கும் பேரனுக்கும் விசிறிக்கொண்டே சிதம்பரம் சொன்னார்..
“இல்ல இருக்கட்டும்ப்பா.. அவுகளும் இன்னும் வல்ல. எப்ப வாராகன்னும் தெரில. நான் வீட்ல இல்லேனா சோறு சாப்புடாமயே படுத்துருவாக”
“ஆமா அவரு சாப்டுட்டாலும் அப்டியே ரோசம் வந்துறப்போது பாரு” தன் கணவனைப்பற்றி பேசினாலே அப்பாவுக்கு கோபம் வந்துவிடும் என்பது லட்சுமிக்கு தெரியும். வெட்டியாக திரிந்து கொண்டிருக்கும் மாப்பிள்ளையை எந்த மாமனாருக்குத்தான் பிடிக்கும்?
அவர் கோபத்தை கண்டுகொள்ளாதவளாக, “நான் காலேல வந்து இவன பாத்துக்கிடுறேன்” என சொல்லிவிட்டு வேண்டா வெறுப்பாக வெறுமையாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள் லட்சுமி. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவள் போல, டக்கென்று திரும்பி, “செல்வம் சாப்டான்ல?” என்றாள்.
“சாப்புடாமயா தூங்க விடுவோம்? அதெல்லாம் டாட்டா நல்லா சாப்டுட்டு தான் தூங்குறாரு” லட்சுமியின் தங்கை சங்கரியின் மடியில் ஒரு கறுத்த முயல்குட்டி போல் சுருண்டு படுத்திருந்த செல்வத்தின் தலையை ஒரு லேசான புன்னகையுடன் வருடிக்கொடுத்துக்கொண்டே சிதம்பரம் சொன்னார். மீண்டும் பேரனுக்கு விசிற ஆரம்பித்துவிட்டார். சிதம்பரம் மட்டும் செல்வத்தை டாட்டா என்று தான் அழைப்பார். அவன் பிறந்த ராசிப்படி அவன் பெயர் ’ட’ வரிசையில் தான் ஆரம்பிக்க வேண்டும் என யாரோ ஜோசியர் சொன்னதால் அந்த தாத்தாவுக்கு அவன் ‘டாட்டா’வாகி விட்டான். மகளுக்கு லட்சுமி என்கிற பெயர் வைத்து தான் வீட்டில் செல்வம் கொழிக்கவில்லை, பேரனுக்கு டாட்டா என்று பெயர் வைத்தாலாவது ஏதாவது நடந்து விடாதா என்கிற நப்பாசை அவருக்கு. பாவம் அவரும் என்ன செய்வார்? பத்து வயதில் இருந்து இதோ இந்த அறுபது வயது வரை பயர் ஆபிசில் வெடி மருந்துக்கு மத்தியில் தன் வீட்டுக்கான சோற்றை தேடுபவர்.
தன் பையனை மடியில் கிடத்தியிருக்கும் சங்கரியை பார்க்கும் போது லட்சுமிக்கு பொறாமையாக இருந்தது. தன் தங்கை என்றாலும் சங்கரியை லட்சுமி கோபத்தோடு முறைத்துக்கொண்டிருந்தாள். இன்னைக்கும் பையன் தன்னுடன் தூங்க மாட்டான் என்கிற சோகம் அவள் தொண்டையை அடைத்தது. தனிமையின் பயத்தை எண்ணிக்கொண்டே லட்சுமி அடுத்த தெருவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி, தன் வயிற்றை தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டாள். ஆம், இப்போது அவள் வயித்துப்பிள்ளைக்காரி, மூனு மாசம் ஆகிறது. அந்த பிள்ளைக்கு கூட பிர்லா என்கிற பெயரை சிதம்பரம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார் என்பது இங்கு ஒரு கொசுறு. இன்றிரவும் புருஷன் வர மாட்டான் என லட்சுமிக்கு தெரியும். இருந்தாலும் தன் அம்மாவின் வீட்டில் தங்க அவளுக்கு விருப்பம் இல்லை. நன்கு விசாரித்து மகளை கட்டிக்கொடுத்தும், அவள் கஷ்டப்படுவதை ஒரு தகப்பன் கண்ணெதிரே பார்த்து வருந்துவதை அவளால் காண முடியாது. ஒரு வித குற்றவுணர்வு அவளை ஆட்கொள்ளும். அதனால் தனியாக தான் மட்டும் வருந்தினால் போதும் என தன் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறாள். அவளுக்கு தெரியாது சிதம்பரம் தினம் தினம் மனதுக்குள் வருந்திக்கொண்டு தான் இருக்கிறாரென்பது.
லட்சுமியின் புருசன் வைரமுத்து ஒன்றும் குடிகாரனோ, மோசமானவனோ இல்லை. கொஞ்சம் பொறுப்பற்றவன். கொஞ்சம் என்ன கொஞ்சம், நிறையவே பொறுப்பற்றவன் தான். சிவகாசியில் எந்த வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் தங்களுக்கென்று எந்த வித தகுதியையும் வளர்த்துக்கொள்ளாத அந்த ஊரின் சாதாரண குடிமகனில் ஒருவன் தான் அவனும். இந்த வாரம் ஏதாவது அச்சாபீசில் வேலை பார்ப்பான்.. அடுத்த வாரம் தன் உறவினர் ஒருவரின் பலசரக்கு கடையில் பொட்டலம் மடித்துக்கொண்டிருப்பான். அதற்கும் அடுத்த வாரம் தான் முதலில் வேலை பார்த்த பயர்ஆபிசில் வெடிக்கு மருந்து அடைத்துக்கொண்டிருப்பான். ஒரு இடத்தில் அவனால் குண்டியை அமுக்கி வேலை செய்ய முடியாது. கல்யாணம் ஆன மூன்றாவது நாளில் இருந்து அவன் ஏதோ ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான், ஆனால் சம்பளம் தான் வாங்கியபாடு இல்லை.
“வீட்ல ஆம்பளனா செலவுக்கு காசு குடுக்கணும். ஒழுங்கா வேலைக்கு போயி குடும்பத்த காப்பாத்தணும்.. ஒன்னத்துக்கும் லாய்க்கி இல்லாம எனக்குன்னு வந்து வாச்சிருக்கே” என்று லட்சுமியிடம் வைரமுத்து பாட்டு வாங்காத நாளே இல்லை. கோபத்தில், அழுகையில், ஆற்றாமையில் என லட்சுமி அவனிடம் பல நூறு முறைகள் இந்த வார்த்தைகளை சொல்லியிருப்பாள். அவனுக்கு தான் பொறுப்பு வந்த பாடில்லை. கல்யாணம் ஆன நாளில் இருந்து சண்டை தான். லட்சுமி ஒன்றும் பங்குனிப்பொங்கலுக்கு புதுத்துணி வாங்கும் அளவிற்கெல்லாம் அவனை சம்பாதிக்க சொல்லவில்லை. வேளாவேளைக்கு சாப்பிடும் அளவிற்காவது சம்பாதிக்க சொன்னாள். அதற்கு கூட அவன் லாயக்கு இல்லை என்றால் அவளும் என்ன தான் செய்வாள்? வீட்டிற்கு வந்தாலே சண்டை என்பதால் அவன் பல நாட்கள் வீட்டிற்கு வர மாட்டான். அவனுக்கும் சேர்த்து சமைத்து வைப்பாள். ரெண்டு ரூவாய்க்கு பக்கோடா பொட்டலமும் வாங்கி வைப்பாள். இரவில் அவன் வந்து தின்றால் உண்டு, இல்லையென்றால் காலையில் அதுவே லட்சுமிக்கு பழைய சோறாகிவிடும்.
இப்போதெல்லாம் லட்சுமி அவனை அதிகம் எதிர்பார்ப்பதில்லை. புருஷன் உருப்படியாக இல்லாத வீட்டில் பொண்டாட்டி தானே குடும்பத்தலைவன்? லட்சுமி ’மேப்ட்டி’ கெட்டு ஒட்ட ஆரம்பித்திருந்தாள். முக்காலியின் ஒரு மூலையில் பசையை கொட்டி, இன்னொரு மூலையில் நீல நிறத்தில் இருக்கும் தாள்களை சரித்து வைத்திருப்பாள். தன் வலது கை சுட்டு விரலால் அந்த பசையை தாளில் தேய்த்து, அதை அப்படியே எடுத்து தன் இடது கையில் வைத்திருக்கும் மரச்சில்லில் ஒட்டி மடித்துபோடுவாள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தீப்பெட்டியின் டப்பா உருவாகிவிடும் அவள் கையின் சில நொடி வேலையில். விளக்கு பொருத்தவோ, வீட்டைக்கொழுத்தவோ, சிகரெட் ஊதவோ, இருட்டை போக்கவோ எதற்கு அவைகள் ஒவ்வொன்றும் பயன்படுத்தப்படும் என அவளுக்கு தெரியாது. ஆனால் இப்போது மூன்று வேளையும் அவள் உண்ணும் உணவு மேப்ட்டியால் தான் என்பது மட்டும் நன்கு தெரியும். அதனால் தான் அதிகாலை முதல் மறுநாள் அதிகாலை வரை தன்னருகில் ஒரு பாக்கெட் ரேடியோவை நண்பனாக கூட்டு சேர்த்துக்கொண்டு வெறிபிடித்த ஒரு ஓட்டக்காரனைப்போல் வேகவேகமாக கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பாள். சிவகாசிப்பெண்கள் தீப்பெட்டிக்கும், தண்ணீர்க்குடங்களுக்கும் தானே காலம் காலமாக வாழ்க்கைப்பட்டிருக்கிறார்கள்? லட்சுமி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
புருஷனோடு சண்டையிட்டதால் ஒரு சில முறை அவள் துத்தம் தின்று தற்கொலைக்கும் முயன்றிருக்கிறாள். ஆனால் செல்வம் பிறந்த பின் தான் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு, நம்பிக்கை வந்தது. அவளுக்கு ஒரே ஒரு ஆசை உண்டு. தன்னைப்போலோ, தன் தகப்பனைப்போலோ, உருப்படாத தன் புருஷனைப்போலோ செல்வம் ஒரு சாதாரண சிவகாசிக்காரனாக வளர்ந்துவிடக்கூடாது என்பது தான் அது. அவன் படிக்க வேண்டும், அதுவும் மெட்ரிகுலேசனில் படிக்க வேண்டும்; படித்துவிட்டு இந்த ஊருக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, உயிருக்கு உத்திரவாதமான ஒரு வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து அவளையும் வைரமுத்துவையும் கடைசி காலத்தில் காப்பாற்ற வேண்டும். ச்சேய் வைரமுத்துவை ஏன் காப்பாற்ற வேண்டும்? ஒரு அப்பனாக அவன் என்ன செய்தான்? தன்னை மட்டும் தன் மகன் கவனித்துக்கொண்டால் போதும். நினைக்க நினைக்க அவ்வளவு சந்தோசமாக இருக்கும் அவளுக்கு. கெட்டு ஒட்டிக்கொண்டே லேசாக சிரித்துக்கொள்வாள் வருங்காலத்தில் தன் மகன் தனக்கு பங்குனிப்பொங்கலுக்கு பட்டுச்சேலை எடுத்துத்தருவதாகவும், தன்னை கெட்டு ஒட்ட விடாமல் சந்தோசமாக பார்த்துக்கொள்வதாகவும், தண்ணீருக்கு அடுத்த தெரு வரை குடத்தை தூக்கி அலைய விடாமல் வீட்டிலேயே தண்ணீர் மோட்டார் வாங்கி தருவதாகவும், திருப்பதி கோயிலுக்கு கூட்டிப்போவதாகவும். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் படிப்புக்கு காசு? மேப்ட்டி ஒட்டுற காசுல ஞாயித்துக்கிழமை கறி கூட எடுக்கமுடியலையே? என்ன பண்ணுறது?
”எப்பா எம்மகன நான் படிக்க வக்க போறேன்”
“நல்ல விசயம் தானம்மா?நல்லா படிக்க வையி..எந்த ஸ்கூல்லா பாரம் வாங்கிட்டு வாரது?மங்களா ஸ்கூல்லயா?முனிசிபல் ஸ்கூல்லயா?”
“இல்லப்பா நான் அவன பாய்ஸ் ஸ்கூல்ல சேக்கப்போறேன்”கர்வமாய் சொன்னாள் லட்சுமி. அது அந்த ஊரின் மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்று.
“ஒனக்கு கூறுகீறு இருக்கா இல்லையா?அங்க அவன படிக்க வைக்க ஒனக்கு ஏது காசு?”
“அதாம்ப்பா ஒங்கள தேடி வந்திருக்கேன்”
வெறுமையாக சிரித்தார் அவர். அதில் அவரது இயலாமை இயன்ற வரை தெரிந்தது. “நான் என்னம்மா பண்ண முடியும்? நீயே பாக்குறீல?சங்கரிய எத்தன பேரு கேட்டு வாராங்க?நம்மளால அதுக்கே ஒரு பதில் சொல்ல முடியுதா?இதுல டாட்டாவோட படிப்பு செலவையும் நான் எப்படிம்மா பாப்பேன்?”
“எம்பையன நான் படிக்க வைக்கிறேன்ப்பா.. யூனிபாரம், பள்ளிட செலவு எல்லாத்தையும் நானே பாத்துக்கிடுறேன். என்ன, தெனமும் இன்னும் கொஞ்ச நேரம் கண்ணுமுழிச்சு கெட்டு ஒட்டணும், அவ்ளோ தான?நீங்க எம்பையனுக்கு மூனு வேள சோறு மட்டும் போட்ருவீங்களாப்பா?”சொல்லும் போதே லட்சுமியின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது.
“அய்யோ என்னம்மா இப்டி கேட்டுட்ட?” மகள் அழுவதை பார்த்து சிதம்பரம் திகைத்துவிட்டார். எந்த கஷ்டத்திலும் அழாதவள் அவள். நெஞ்சழுத்தக்காரி.
“எம்பையன் தெனமும் ஒரு கைப்பிடி சோறு திம்பானா?அத மட்டும் நீங்க பாத்துக்கோங்கப்பா. பசின்னு மட்டும் அவன் கேட்டுறவே கூடாது. எந்த கஷ்டமும் அவனுக்கு தெரிய கூடாது. அவன நான் படிக்கவைக்கிறேன். தயவு செஞ்சு நீங்க ……………………………………” அவளால் சொல்லி முடிக்க முடியவில்லை. தன் தகப்பனை நோக்கி இருகைகளை குவித்து கும்பிட்டுக்கொண்டே மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள்.
ஒன்றாம் வகுப்பு பாய்ஸ் ஸ்கூலில் சேர்ந்துவிட்டான் செல்வம். மஞ்சள் சட்டையும், பச்சை டவுசரும், பச்சை டையும் கட்டிக்கொண்டு அவன் பள்ளிக்கு கிளம்பும் அழகை அந்த தெருவே பார்த்தது. பின்ன? அந்த தெருவுல மொத மொத மஞ்ச ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு போற ஆளு நம்ம செல்வம் தானே? எல்லாரும் வெள்ள சட்ட போட்ட முனிசிபாலிட்டி ஸ்கூல் பயலுக.
ஆச்சி வீட்டில் சங்கரி அவனுக்கு சோற்றில் பால் ஊற்றி பெரியதாக ரெண்டு பக்கோடா துண்டுகளை வைத்தாள்.. சோற்றை மென்றுகொண்டே “சித்தி ஸ்கூல்ல மிஸ்ஸு அடிப்பாங்களா?”
“அவுங்க மக்கு பயலுகள தான் அடிப்பாங்க.. நீ தான் நல்ல புள்ளேல?ஒன்ன எதுக்கு அடிக்கப்போறாங்க?.”
“இல்ல, எங்கம்மா காலேல நான் கெளம்பும் போது, ஒழுங்கா படிக்கலேனா மிஸ்ஸு அடிப்பாங்கன்னு சொன்னாங்க.. நான் ஒழுங்க படிப்பேன்ல சித்தி?”
“ஒங்க ஸ்கூல்லயே நீ தான்டா சூப்பரா படிப்ப” அவன் தலையை கோதிக்கொண்டே சங்கரி சொன்னாள்..
“ம்ம்ம் சித்தி…. அம்மா அழகா சேக்கு சீவிருக்காங்க..ஒழைக்காதீங்க” செல்லமாக அவள் கையை தட்டி விட்டு சினுங்கினான்.
அவன் சாப்பிட்டு வருவதற்குள் லட்சுமி ரெண்டு கெட்டு ஒட்டிவிட்டாள். வீட்டை பூட்டி அவனுக்காக தெருமுக்கில் பையோடு காத்திருந்தாள். அவன் வந்ததும் ஒரு கையில் அவனையும் இன்னொரு கையில் பள்ளிப்பையையும் இழுத்துக்கொண்டு பள்ளியை நோக்கி நடப்பாள். பள்ளிக்கு செல்லும் வழியிலேயே ஏபிசிடி, ஒன் டூ ஹண்ட்ரெட், எல்லாம் அவன் சொல்லிக்கொண்டே போக வேண்டும். லட்சுமியும் சும்மா கிடையாது. மங்களா ஸ்கூலில் எட்டாம் வகுப்பு வரை படித்தவள். தப்பாக ஏதாவது அவன் சொல்லிவிட்டால் ‘நறுக்’கென்று தலையில் ஒரு கொட்டு விழும். அவளைப்பொறுத்தவரை அந்த கொட்டெல்லாம் பையன் நன்றாக படித்து ஒரு நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக.. ஆனால் செல்வத்தை பொறுத்தவரை அது எல்லாமே ’அம்மா நம்மமேல வச்சிருக்கிற கோவம்’. மிஸ்ஸுக்கு பயப்படுவதை விட அவன் லட்சுமிக்கு தான் ரொம்ப பயந்தான். பள்ளியில் அவனை விட்டுவிட்டு டாட்டா சொல்லும் போது லட்சுமிக்கு கண்கள் கலங்கிவிடும். ‘நல்லா படிக்கணும் கனி. மிஸ்ஸு சொல்றத கவனிக்கணும்யா. அம்மா மத்தியானம் சோறு கொண்டுவாரேன், என்ன?” அவன் முகத்தை வருடிக்கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவாள்.
வீட்டிற்கு வந்த பின் ரேடியோவை அருகில் வைத்துக்கொண்டு நாளை உலகமே அழிந்துவிடுவது போல் கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பாள் மதியம் வரை. செல்வத்தை பள்ளியில் சேர்த்ததில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் லட்சுமி சமைத்தாள். வெறும் சோறு, பால் ஊறுகாய் போதும் அவளுக்கு, பக்கோடாவெல்லாம் அவள் மறந்து நாட்களாகிவிட்டன. செல்வம் வீட்டில் சாப்பிடாததால் அவளுக்கு சமையல் வேலையும் மிச்சம், சமையல் செலவும் மிச்சம். ’எல்லாமே அவன் படிப்புக்கு தான?’ என மனதிற்குள் நினைத்துக்கொள்வாள்.
மதியம் சங்கரி கொடுக்கும் சாப்பாட்டுக்கூடையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென சாப்பாட்டு மணி அடிப்பதற்கு முன் பள்ளிக்கு சென்று விட வேண்டும், செல்வம் பசி பொறுக்க மாட்டான். சாப்பாட்டு நேரத்தில் அன்று நடத்திய பாடங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அவனிடம் கேட்பாள். அவன் ராமர் வில் ஒடித்த கதையையும், சிங்கம் எருமையை வேட்டை ஆடிய கதையையும் கைகளால் விவரித்துக்கொண்டே சொல்வதை கேட்கும் போது அவளுக்கு வாய் பூரா பல்லாகிவிடும், ஏதோ தன் மகன் சிவகாசிக்கே கலெக்டர் ஆகிவிட்டது போல. மதியம் டீச்சர் வரும் வரை காத்திருந்து ஜன்னல் வழியாக டாட்டா காட்டிவிட்டுத்தான் கிளம்புவாள். வீட்டிற்கு திரும்பியவுடன் சோறு தண்ணீர் மறந்து கெட்டு, பின் மீண்டும் மாலை அழைக்க வந்துவிடுவாள். வீட்டிற்கு செல்லும் வழியில் காலை போல் அவன் வாய்ப்பாடு, அது இதுவென்று என்று மிஸ் நடத்திய பாடத்தை ஒப்பித்துக்கொண்டே வர வேண்டும். தவறாக சொன்னாலோ தெரியாமல் முழித்தாலோ வழக்கம் போல கொட்டு விழும். அம்மா என்றாளே அடிப்பவள் என நினைத்துக்கொண்டான்.
வீட்டிற்கு சென்றதும் அவனை மீண்டும் படிக்க சொல்லுவாள். கெட்டு ஒட்டிக்கொண்டே அவனிடம் கேள்வி கேட்டு ஒப்பிக்க வைத்துக்கொண்டிருப்பாள். அந்த நேரத்தில் மட்டும் ரேடியோ ஓடாது. அவன் சரியான பதில் சொல்லிவிட்டால், “குட் பாய்” என கட்டிப்பிடித்துக்கொள்வாள். தவறான பதில் அவன் கூறினாலும் கெட்டு ஒட்டும் மும்முரத்தில் “இன்னொருக்க படிச்சிட்டு வா” என நோட்டை கொடுத்துவிடுவாள். அடுத்து அவன் சரியாக ஒப்பித்துவிடுவான். மீண்டும் “என் செல்லம் குட் பாய்” என அவனை கொஞ்சுவாள்.
“இப்ப என்ன பாத்து சிரிக்குறீங்க.. அப்பத மட்டும் எதுக்கு தலையிலயே கொட்டுனீங்க? எனக்கு இன்னும் தலேல வலிக்குது தெரியுமா?” தலையை தடவிக்கொண்டே சொன்னான்.
“ஆமா படிக்கலேனா பெறகு செல்லம் கொஞ்சுவாங்களா தம்பிய? ஒழுங்கா படிச்சாத்தான நாளைக்கு நல்ல வேலைக்கு போலாம்?”
“நல்ல வேலைக்கு போயி?”
“அம்மாவ கெட்டு ஒட்டாம பாத்துக்கலாம்”
“அப்பறம்?” தலையை சாய்த்துக்கொண்டு அழகாக கேட்பான்.
“பெரிய வீடு கட்டலாம்”
“பெரிய வீடா?” கையை அகலமாக விரித்து கண்களை பெரிதாக்குவான். “அப்பறம்?”
“அப்பறம் ஒரு காரு வாங்கலாம்”
“எம்மா டைவருலாம் வேண்டாம். நாந்தான் ஓட்டுவேன். டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” கார் ஓட்டுவது போல் சைகை செய்துகொண்டிருப்பான்.
வெளியே சங்கரியின் சத்தம் கேட்கும், “செல்வம்…………………” அவன் நிமிர்ந்து அம்மாவை பார்ப்பான். “போ, சித்தி கூப்டுறால? போயி ஆச்சிவீட்ல சாப்ட்டு வா”
இப்படியே கொஞ்ச நாள் சென்றது. செல்வத்துக்கு ஆச்சி வீட்டில் தாத்தாவும் சித்தியும் மிகவும் செல்லம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அங்கு யாரும் டேபில்ஸ், போயம் எல்லாம் ஒப்பிக்க சொல்லி கேட்பதில்லை, தலையில் நறுக் கொட்டு கிடையாது. அவனுக்கு ஆச்சி வீடு மிகவும் பிடித்துப்போய்விட்டது. சித்தியிடம் மிகவும் ஒட்டிக்கொண்டான். ஒரு சனிக்கிழமை இரவு, “சித்தி நாளைக்கு எனக்கு லீவு தான? நான் இங்கயே படுத்துக்கிறேனே? ப்ளீஸ் சித்தி” அவள் நாடியை பிடித்து கொஞ்சிக்கொண்டே கேட்டான். சாப்பிட போனவன் இன்னும் வராததை நினைத்து பயந்து லட்சுமி வந்தாள். “சாப்ட்டு இன்னைக்கு இங்கயே தூங்கிட்டான், ரொம்ப அலுப்பு போல” என சிதம்பரம் சொன்னார். அன்று லட்சுமிக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அதன் பின் அடிக்கடி, என்ன அடிக்கடி, தினமுமே அவன் அங்கு தூங்க ஆரம்பித்துவிட்டான். சங்கரியுடன் தான் மிகவும் ஒட்டுகிறான். எதுவென்றாலும் சித்தி சித்தி என்று உயிரை விடுகிறான். ”வீட்ல போயி தூங்குப்பா”னு சொன்னாலும் கேட்காமல் அழ அரம்பித்துவிடுவான். ’வீட்டுக்கு போ மாட்டேன் சித்தி’ என அடம்பிடிப்பான் சங்கரியை இறுக்க கட்டிக்கொண்டு. லட்சுமிக்கும் சங்கரி மேல் லேசான பொறாமை வந்துவிட்டது. இப்போதெல்லாம் அவனின் யூனிபாரம் கூட ஆச்சிவிட்டில் தான் உள்ளது. இந்த நேரத்தில் தான் லட்சுமி மீண்டும் உண்டாகியிருந்தாள். ஒரு ஞாயிறன்று மதியம் சாப்பிடப்போனவனைத்தேடி அம்மாவீட்டிற்கு வந்தவள் தெருவில் அவன் மற்றவர்களோடு விளையாடுவதைக்கண்டாள்.
“டேய் செல்வம் ஒங்கம்மா வாராங்கடா” டவுசர் கூட போடாத அவன் நண்பன் ஒருத்தன் சொன்னான்.
செல்வம் மெல்ல திரும்பி பார்த்துவிட்டு, “டேய் அது எங்க அம்மா இல்லடா, சித்தி. எங்கம்மா ஆச்சி வீட்டுக்குள்ள பாத்திரம் மினுக்கிட்டு இருக்காங்க”. லட்சுமிக்கு அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிய சில நொடிகள் தேவைப்பட்டன. புரிந்தவுடன், டக்கென்று இதயம் நின்றுவிடுவது போல் இருந்தது. அவள் தலையில் பலமால ஏதோ இறங்குவது போல் உணர்ந்தாள்.
”என்னடா சொன்ன?”
“எம்மா நல்லாருக்குல? நீங்க தான் இனிமேல் சித்தி.. சித்தி தான் இனிமேல் அம்மா” சுட்டுவிரலை மடக்கிக்காட்டி சிரித்தான். உதட்டைக்கடித்துக்கொண்டு அழுகையை அடக்கியவாறே அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் லட்சுமி. பெரிதாக வாயைத்திறந்த அவனால் அழமுடியவில்லை. மூச்சு முட்டிக்கொண்டது. சில நொடிகள் கழித்து தான் குரல் வெளியே வந்தது. தெருவே அதிரும் அளவிற்கு அழுதான். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள் சங்கரி. “ஏன்க்கா பிள்ளைய அடிச்ச?” செல்வத்தை தூக்கிக்கொண்டு அவன் முதுகில் தடவிக்கொண்டே கேட்டாள்.
“ஒன்னுமில்ல என் பிள்ளைய என்ட்ட குட்றீ நான் பாத்துக்கிறேன்” வெடுக்கென்று சங்கரியின் கையில் இருந்த செல்வத்தை பிடுங்கிக்கொண்டு, அக்கா அக்காவென சங்கரி கத்துவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். லட்சுமியின் தோளில் கிடந்த செல்வம் சித்தி சித்தி என சங்கரியை நோக்கி பாய்ந்து கத்தினான். சங்கரிக்கு லட்சுமியின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை.
இரவு அவன் சாப்பிட வரவில்லை. வேலை முடிந்து வந்த சிதம்பரம் நடந்தவைகளை எல்லாம் கேள்விப்பட்டு, லட்சுமியிடம் வந்து, தூங்கிக்கொண்டிருந்த செல்வத்தை காட்டி, “பையன சாப்ட அனுப்பலையா?”
“இல்ல” கெட்டு ஒட்டிக்கொண்டே அப்பாவை நிமிர்ந்து பார்க்காமல் சொன்னாள்.
“எதுக்கு?”
“நான் பெத்த பிள்ள எவளையோ அம்மான்னு சொல்லும். என்ன சித்தின்னு சொல்லும். இதெல்லாத்தையும் பாத்துட்டு நான் சும்மா இருக்கணுமா?” பொங்கி வரும் அழுகையை கைகளால் துடைத்துக்கொண்டே அவள் குனிந்தபடி கெட்டு ஒட்டிக்கொண்டிருந்தாள்.
“ஏ கூறுகெட்டவளே சின்னப்பய ஏதோ தெரியாம சொல்லிட்டியான் அதுக்கு ஏன் அழுகுற?”
“எனக்குன்னு வேற யாருப்பா இருக்கா? அவனுக்காக தான நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்? வயித்துல ஒன்ன வச்சுக்கிட்டு அதுக்கு ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட போயி காட்டாம நான் எதுக்கு இருக்கேன்? அவனுக்காகத்தான? அவன் அப்படி சொன்னா மனசு கேக்குமா?” சிதம்பரத்தை நிமிர்ந்து பார்த்து இன்னும் அதிகமாக அழுதாள்.
“அவன் யார சொல்லிட்டான்? சங்கரியத்தான? இதுல என்ன இருக்கு?”
“என்னப்பா இப்டி சொல்றீங்க?”
“சொல்றேன்னு கோவப்படாத லட்சுமி.. நானே கேக்கணும்னு தான் நெனச்சேன். நீயும் இப்ப உண்டாயிட்ட. நாளைக்கே ஒனக்கு இன்னொரு பிள்ள வந்ததும் நீ ரெண்டு பேரையும் எப்படி கவனிப்ப?”
லட்சுமிக்கு லேசாக குழம்பியது, “அதுக்கு?”
“இல்ல சங்கரிக்கும் இப்போதைக்கு கல்யாணம் ஆகப்போற மாதிரி தெரில. அதனால செல்வம் எங்க கூடயே இருந்திரட்டுமே?”
தன் அப்பா இப்படி கேட்பார் என லட்சுமி கனவிலும் எதிர்பார்க்கவில்லை. “எப்டிப்பா இப்டி கேக்குறீங்க? நான் வாழுறதே செல்வதுக்காண்டி தாம்ப்பா!”
“ஆமா அதான் இப்ப வயித்துல ஒன்ன சொமந்துட்டு நிக்குறியா?” குத்தலாக கேட்டார் சிதம்பரம்.“யோசிச்சு பாரு, இன்னொரு பிள்ளயும் வந்துட்டா ஒன்னால இவனயும் படிக்க வச்சு, அவனுக்கும் செலவழிக்க முடியுமா? செல்வம் எங்க கூடயே இருந்திரட்டும். கொஞ்ச நாள் ஒரு மாதிரி தான் இருக்கும். எங்க போயிற போறோம்? பக்கத்து தெரு தான? வேணும்னா வந்து பாத்துக்கோ”
வீட்டில் பேச்சு சத்தம் வருவதை கேட்டு விழித்துக்கொண்ட செல்வம் தாத்தாவை பார்த்ததும் அவரிடம் ஒட்டிக்கொண்டான். “தாத்தா நான் ஒங்க கூடயே வந்துறேன் தாத்தா” அடம்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டான்.
“இங்காரு லட்சுமி பய சாப்டாம வேற இருக்கியான். இப்ப நான் சாப்ட கூட்டு போறேன். நாளைக்கு சாவகாசமா பேசிக்கலாம்” லட்சுமியின் பதிலுக்கு எதிர்பாராமால் செல்வத்தை தூக்கொண்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்துவிட்டார் சிதம்பரம். ‘அய்யா செல்வம் வேண்டாம்யா அம்மாட்ட வந்துருய்யா’ என அவள் சொல்வதை சிதம்பரமும் செல்வமும் காதிலேயே வாங்கிக்கொள்ளமால நடையை கட்டினர்.
மறுநாள் காலை லட்சுமி வரவில்லை. சரி மதியமாவது வருவாள் என எதிர்பார்த்தார் சிதம்பரம். அப்போதும் வரவில்லை. நேற்று தாத்தாவோடு வந்தவனுக்கு அம்மாவை இவ்வளவு நேரமாக காணாததால், அம்மா ஞாபகம் வந்துவிட்டது. “தாத்தா நான் அம்மாட்ட போறேன், அம்மாவ எங்க?” என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். லேசாக சினுங்கியவன் கொஞ்ச நேரத்துல் உறங்கிவிட்டான். லட்சுமி இன்னமும் வராததால் சந்தேகமடைந்தவர் ஒரு எட்டு போய் அவள் வீட்டை பார்த்தார். வீடும் பூட்டிக்கிடந்ததால் சிதம்பரத்திற்கு பயமாகிவிட்டது, லட்சுமி எதுவும் ஏட்டிக்குபூட்டி செய்துவிட்டாளோ என. பதறியடித்து சங்கரியிடம் வந்து விசயத்தை சொன்னார். இருவரும் என்னவோ ஏதோ என பதறியடித்து லட்சுமியை தேட கிளம்புகையில் அவள் சோர்ந்து போய் மிக மெதுவாக சிதம்பரத்தின் வீட்டு வாசலில் ஏறினாள். “எங்கக்கா போய் தொலஞ்ச? நானும் அப்பாவும் எப்படி பதறிட்டோம் தெரியுமா?”
மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தவளை பார்த்ததும் சிதம்பரத்திற்கு எல்லாம் புரிந்துவிட்டது. “அய்யோ ஏம்மா இப்டி பண்ணுன? அய்யோ” தலையில் அடித்துக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டார். லட்சுமி புடவையால் வாயை மூடிக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவளால் முடியவில்லை. இருவரும் அழுவதைப்பார்த்த சங்கரிக்கு என்ன ஏதென்று புரியவில்லை. “எப்பா ஏன்ப்பா அழுகுறீங்க? எப்பா சொல்லுங்கப்பா” என்று சங்கரி சிதம்பரத்தின் தோளை பிடித்து உலுக்கினாள்.
“ஒங்கக்கா வயித்துல இருந்தத கழுவிட்டு வந்துட்டாம்மா. ஒரு பிஞ்சு உசுர கொன்னுட்டாடீ ஒங்கக்கா. அய்யோ பாவி இப்படி பண்ணிட்டியேடீ” சிதம்பரம் பெருங்குரலெடுத்து அழுதார். சங்கரிக்கு யாருக்கு ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள். மதியம் சாப்பிட்டு உறங்கிக்கொண்டிருந்த செல்வம் அழுகை சத்தம் கேட்டு எழுந்தான். எல்லோரும் ஏன் அழுகிறார்கள் என அவனுக்கு புரியவில்லை. அவன் முழித்துவிட்டதை பார்த்த லட்சுமி மெதுவாக அவன் அருகில் சென்றாள். ரொம்ப நேரம் கழித்து அம்மாவை பார்த்ததும் அவனுக்கு அவள் அடித்தது, கொட்டியது எதுவும் ஞாபகம் வரவில்லை. “அம்மா’ என கத்திக்கொண்டே அவளை இடுப்போடு சேர்த்துக்காட்டிக்கொண்டான். லேசாக அவளுக்கு வலித்தாலும் மகன் ஆனந்தமாக கட்டிக்கொண்ட சந்தோசம் அந்த வலியை மறக்கடித்துவிட்டது.
அவன் கையை பிடித்துக்கொண்டு “வாப்பா போலாம் நம்ம வீட்டுக்கு, நாளைக்கு ஸ்கூலுக்கு ஹோம் வொர்க் எழுதாம போனா மிஸ்ஸு அடிப்பாங்கல்ல? வா” அழுகையை அடக்கிக்கொண்டு அவனை அழைத்தாள் லட்சுமி. லட்சுமி அழுவதை பார்க்கும் போது அவனுக்கும் அழுகை வந்துவிட்டது. சித்தி, தாத்தா யாரும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை. அம்மா வயிற்றில் இருந்த தம்பியை காணவில்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. கம்மென அவள் பின் நடக்க ஆரம்பித்துவிட்டான். வாசலை விட்டு வெளியே இறங்கியவள் மெதுவாக சிதம்பரம் பக்கம் திரும்பி, “யூனிஃபாரம், நோட்டெல்லாம் வாங்க தெரிஞ்ச என்னால எம்பிள்ளைக்கு இனிமேல் மூனு வேள சோறாக்க முடியாதா? என்ன, தெனமும் இன்னொரு பத்து கெட்டு சேத்து ஒட்டுனா போதும். அவ்வளவு தான? எம் பிள்ளைய நான் நல்லா படிக்க வப்பேன். அவன் ஒருத்தன நல்லா வளத்தாலே போதும் எனக்கு. அவனும் எம்பிள்ளையா மட்டும் இருந்தா போதும். நான் எவ்வளவோ கஷ்டப்படுறது வேற யாரையோ அவன் அம்மான்னு கூப்டுறதுக்கா? பெரிய படிப்பெல்லாம் படிச்சி எனக்கு என்ன பிரயோஜனம்? அம்மான்னு ஒரு வார்த்த என்ன அவன் சொல்லலேனா எனக்கு எதுக்கு இந்த சீவன்? ஒரு வேள அவன் படிக்காம, இந்த ஊருக்காரனாவே ஆயி பயர் ஆபிஸ், அச்சாபீஸ்னு போனாலும், எம்பிள்ளையா இருந்தா அதுவே எனக்கு போதும்ப்பா” கண்களில் கண்ணீர் வந்தாலும் அவள் முகத்தில் ஒரு சின்ன சந்தோசம் தெரிந்தது. செல்வத்தின் கையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டாள் தன் தெருவை நோக்கி.
போகும் வழியில், “தம்பி இனிமேல் அம்மா ஒன்ன அடிக்கவே மாட்டேன். ஆனா நீயி நல்லா படிக்கணும், சேரியா?”
“தப்பா சொன்னா தான அடிப்பிங்க? நான் தான் கரெக்ட்ட சொல்லிருவேனே!?”
“ஹா ஹா சரி செல்லம்”
“ம்மா தம்பிய எங்கம்மா?”
“அது நீ நல்லா படிச்சாத்தான் தருவேன்னு சொல்லிட்டு சாமி திரும்ப எடுத்துக்கிட்டருப்பா”
“எம்மா நா நல்லா படிச்சி, நாம வீடு, காரெல்லாம் வாங்கிட்டு சாமிட்ட இருந்து தம்பியவும் திருப்பி வாங்கிருவோம், என்னம்மா….”

அவனை தன் உடலோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கண்ணீரின் ஆனந்தத்தை சுவைத்துக்கொண்டே நம்பிக்கையோடு நடந்துபோனாள் கெட்டுக்கும் வறுமைக்கும் வாக்கப்பட்டு பிள்ளைகளின் மேல் அனைத்து கனவையும் சுமந்து திரியும் ஒரு சாதாரண சிவகாசித்தாய்…டாட்டாவின் அம்மா:

அவனை தன் உடலோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கண்ணீரின் ஆனந்தத்தை சுவைத்துக்கொண்டே நம்பிக்கையோடு நடந்துபோனாள் கெட்டுக்கும் வறுமைக்கும் வாக்கப்பட்டு பிள்ளைகளின் மேல் அனைத்து கனவையும் சுமந்து திரியும் ஒரு சாதாரண சிவகாசித்தாய்…