ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday, 7 January 2014

போட்டிச் சிறுகதை 77

கண் கெட்டதும்..............

அண்ணா, அவங்க உங்கள கூப்பிடறாங்க                              

பேருந்து நிலையத்தில் பேருந்திற்க்காக காத்துக்கொண்டிருந்த ரகுராமன், “யார், என்னையா? என்னை யாருப்பா கூப்பிடறாங்க?

அங்க உள்ள இருக்காங்க அண்ணா.  அங்க பாருங்க சாராயக் கடைக்குள்ள, அவங்க தான் கூப்பிடறாங்க  

“இத பாரு தம்பி, அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நான் வர மாட்டேன். மத்தவங்க அங்க நுழையறதே எனக்கு பிடிக்காது. அதெல்லாம் வரமாட்டேன். போ, போ, சின்னப் பையன் உனக்கென்ன அங்க வேலை

“டேய் கஸ்மாலம், கஸ்டமரை கவனிக்காம அங்க என்னடா செய்யற?

“இதோ வந்துட்டேன் அண்ணேமுதலாளி விட்டெறிந்த ஸ்பூன் மேலே படாதவாறு லாவகமாக ஓடி கடைக்குள் மறைந்தான் அந்தச் சிறுவன்.   

***

வீட்டிற்குள் நுழைந்த ரகு கொஞ்சம் கோபமாகவே இருந்தான்.  யாரது என்ன தைரியம் இருந்தால் என்னை கூப்பிடுவார்கள்.   விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு திருவாசகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

***

மூன்று படுக்கை அறைகளும், ஒரு சின்ன ஹாலும், அதைவிடச் சின்ன சமையலறையும் கொண்ட பழங்கால வீடு அது.  ஒரு அறைக்கு இருவராக ஆறு பிரம்மச்சாரிகளுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார் அந்த வீட்டின் சொந்தக்காரர்.  அதிலும் அரசு அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்குத்தான் முன்னுரிமை.   குடி வருபவர்களிடம் ராசியான வீடு என்று பெயர் பெற்றிருந்தது அந்த வீடு.   மேலும் எண்பதுகளில் இதுபோல் சென்னையில் பிரம்மச்சாரிகளுக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு.  அதுவும் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில். அதனால்தானோ என்னவோ அந்த வீட்டில் தங்கி இருப்பவர்களில் ஒருவர் திருமணமாகிப் போனாலோ அல்லது வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனாலோ அடுத்த ஆள் உடனே குடி வந்து விடுவார்கள், வீட்டின் சொந்தக்காரர் கறாராக இருந்த போதும்.    நம்ப கதாநாயகன் ரகுராமன் அந்த வீட்டிற்குக் குடி வந்தபோது வேறு, வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த அன்பரசு, தேவராஜன், ராஜமாணிக்கம், இளஞ்செழியன், முத்துக்குமரன் ஆகியோர் அந்த வீட்டில் குடி இருந்தனர்.  முத்துக்குமரனின் அலுவலகத்தில் ரகுராமன் வேலையில் சேர்ந்ததும் இவர்களுடன் ஆறாவது நபராக அந்த வீட்டில் குடியேறினான்.  ரகுராமன் ஒரு ஸ்டவ்வை ஊரிலிருந்து கொண்டு வந்து தானே சமைத்து சாப்பிட ஆரம்பித்ததும், மற்றவர்களுக்கும் ஓட்டலில் சாப்பிடும் ஆசை குறைந்தது.  ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு பாத்திரங்கள், இன்னும் ஒரு ஸ்டவ் எல்லாம் வாங்கி வைத்திருந்தனர்.  ஆனால் பாத்திரம் தேய்க்க சோம்பேறித்தனப்பட்டு அந்த ஆசை நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.

                                                                           ***

வாசல் கேட் திறக்கும் சப்தம் கேட்டது.  அன்பரசு, தேவராஜன், ராஜமாணிக்கம், இளஞ்செழியன் நால்வரும் உள்ளே நுழைந்தனர்.  அவர்களைப் பார்த்தவுடன் ரகுராமனுக்கு சட்டென்று பொறி தட்டியது.  சரி உறவினர் திருமணத்திற்கு ஊருக்குச் சென்றிருக்கும் முத்துக்குமரன் வரட்டும், அதுவரை எதுவும் பேச வேண்டாம் என்று தன் அறைக்குச் சென்று தாளிட்டுக்கொண்டான் ரகு.

மறுநாள் காலையில் ஊரிலிருந்து வந்த முத்துக்குமரனிடம் தான் வேறு இடம்
பார்த்துக் கொள்வதாகச் சொன்னான் ரகு.  விஷயம் தெரிந்ததும் மற்றவர்களைக் கண்டித்து, இனி இது போல் நடக்காது, அதற்கு தான் உத்தரவாதம் என்று சொன்னபிறகே சமாதானமாகி அங்கு தங்க சம்மதித்தான் ரகு.
                                                                           ***
காந்தி ஜெயந்தி அன்று நங்க நல்லூர் அனுமார் கோவிலைச் சுற்றி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான் ரகு.

“அண்ணா, நல்லா இருக்கீங்களா?என்று குரல் கேட்டு நிமிர்ந்த ரகு, “நீ....

என்ன அண்ணா மறந்துட்டீங்களா? அன்னிக்கு பஸ் ஸ்டாண்ட்ல, நான் வேலை செய்யற சாராயக்கடை கிட்ட..

என்ன தம்பி, என்னவோ பாங்க்ல வேல பார்க்கற மாதிரி சொல்ற

என்ன அண்ணா செய்ய, அப்பா குடிச்சு, குடிச்சு இறந்துட்டாரு.  அம்மா நாலு வீட்ல வேலை செய்யறாங்க.  தங்கச்சியையாவது படிக்க வெக்கணும்.  எனக்கும் படிக்கணும்ன்னு கொள்ள ஆசைதான் அண்ணா.  சாராயக்கடை முதலாளி எங்க வீட்டுக் கிட்டதான் இருக்காரு.  அவர்தான் இந்த வேலையை குடுத்தாரு.  நானும் சம்பாதிச்சாதான அண்ணா குடும்பம் நடத்த முடியும்”.

“இந்த பொறுப்பு இவனோட அப்பாவுக்கு இருந்திருந்தா இந்தப் பையனோட படிப்புக் கனவு தகர்ந்திருக்காதேஎன்று நினைத்து பெருமூச்சு விட்டான் ரகு.
“என்ன அண்ணா யோசிக்கறீங்க

ஒண்ணும் இல்ல தம்பி.  இன்னிக்கு வேலைக்கு போகலயா    

“தெரியாதா அண்ணா, இன்னிக்கு காந்தி ஜெயந்தி, அதனால எல்லா சாராயக் கடையும் லீவு.  ஆனா நேத்தே எக்கச்சக்கமா சரக்கு வித்துப்போயிடுச்சு அண்ணா

அது சரி, முன் பின் தெரியாத என் கிட்ட இவ்வளவு பேசறியே

“ஒருத்தர் முகத்த பார்த்தே அவர் எப்டின்னு கண்டு பிடிச்சுடுவேன் அண்ணா

அடேங்கப்பா, அது சரி, உன்னோட ஒரு மாச சம்பளம் எவ்வளோ

“அதுவா, மாசம் 250 ரூபா அண்ணா

சரி உன் பெயரக் கூட கேக்காம பேசிட்டிருக்கேன்.  உன் பேர் என்ன?

ஜெய்சங்கர்.  எங்க அப்பாவுக்கு நடிகர் ஜெய்சங்கர ரொம்ப பிடிக்குமாம்.  என்ன செல்லமா ஜெய், ஜெய்ன்னு கூப்பிடுவாரு.  உங்க பேர் என்ன அண்ணா?

“ரகுராமன்.  எனக்கு உங்க அம்மாவை பாக்கணுமே.   என்ன உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறியா?

“இல்ல அண்ணா, எங்க வீடு நல்லாவே இருக்காது.

“பரவாயில்ல, நானும் வரேன் உன்னோட

***
வணக்கம்மா

யாருப்பா இது

“அம்மா, அன்னிக்கு சொன்னேனே. ஒரு அண்ணன்...........

“அம்மா, என் பேர் ரகுராமன்.  எனக்கு அம்மா மட்டும்தான். அவங்க ஊர்ல இருக்காங்க.  நான் இங்க அரசு அலுவலகத்துல வேலை செய்யறேன்.  ஒரு வீடு எடுத்து ஆறு பேர் குடி இருக்கோம்.  உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் ஜெய்யை அழைச்சிட்டு போறேன்.  வீடு சுத்தம் செய்து, பாத்திரம் தேய்க்கணும்.  சாப்பாடு கொடுத்துடறோம்.  ஜெய்யை படிக்கக் கூட வெக்கறேன்  அம்மா

“இப்டி திடீர்ன்னு வந்து கேக்கறீங்களே தம்பி.  கொஞ்சம் யோசிச்சு சொல்றேனே

“அவசரம் இல்ல அம்மா.  நீங்களும் நாங்க குடி இருக்கற வீட்டுக்கு வந்து பார்த்துட்டே சொல்லுங்க.  நான் வரேன் அம்மா”.

“அம்மா அண்ணன் கூட மெயின் ரோடு வரைக்கும் போயிட்டு வரேன்

“அண்ணா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே, உங்களுக்கு அம்மா மட்டும்தான் இருக்காங்கன்னு சொன்னீங்களே, உங்க அப்பாவும் குடிச்சு குடிச்சு இறந்துட்டாரா?

இல்ல ஜெய், குடியே இல்லாத ஊர்ல குடி நுழையக் கூடாதுன்னு உயிரை விட்டுட்டார்.

“புரியல அண்ணா

“நீ சின்னப் பையன். சரி நீ வீட்டுக்கு போ, நான் வரேன்”.

***

அடுத்த வாரம் ஜெய் இவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.  ஆளுக்கு ரூ 100 போட்டு ஜெய்யின் அம்மாவிடம் மாதம் ரூ. 600 கொடுப்பதாகப் பேச்சு.   வந்த கொஞ்ச நாட்களிலேயே வேலை செய்யும் நேர்த்தியாலும், மரியாதையாகப் பழகும் வித்த்திலும் அனைவரையும் கவர்ந்து விட்டான் ஜெய்.

2,3 வருடங்களில் ரகு கொஞ்சம், கொஞ்சமாக பாடங்களை சொல்லிக் கொடுத்து நேரடியாக பத்தாம் வகுப்பும் தேறி விட்டான் ஜெய். அவனை  அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பில் சேர்த்து விட்டான் ரகு.
ரகுராமனின் நடவடிக்கைகளால் அவனுடன் தங்கியிருந்தவர்களின் மத்தியில் அவன் மதிப்பு மலை போய் உயர்ந்து விட்டிருந்தது.

***

பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற ரகு எப்பொழுது வருவான், வருவான் என்று துளைத்துக் கொண்டிருந்தான் ஜெய்.  ஆனால் தலையில் இடி விழுந்ததுபோல் செய்திதான் வந்து சேர்ந்த்து.  குடித்துவிட்டு பேருந்தை  ஓட்டிய ஓட்டுனரின் கவனக் குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் பொங்கலுக்கு ஊரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ரகுராமன் மரணமடைந்தான் என்று. செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவன் ஊருக்குச் சென்றனர்.

செய்தி கேட்டு கதறிய ஜெய் இந்த நிலையில் ரகுவைப் பார்க்க வர மாட்டேன் என்று மறுத்து விட்டான்.

ரகுராமனின் தாயார் அந்த துக்க நேரத்திலும் அவர்களிடம் ஜெய்யின் படிப்புக்காக ஒரு தொகையை கொடுத்து அனுப்பினார். 

ரகுவின் தந்தை அவர்கள் ஊரில் சாராயக்கடை திறக்கக்கூடாது என்பதற்காகப் போராடி அந்தப் போராட்டத்தில் உயிரைவிட்டவர் என்று தெரிந்ததும், எப்பேர்ப்பட்ட நண்பனை இழந்து விட்டோம் என்று மனம் வருந்தினர்.

.
***
7
ரகுவின் ஈமக்கடன்கள் முடியும் வரை கூட இருந்த நண்பர்கள் சென்னை வந்து சேர்ந்த பொழுது ஜெய் மூட்டை முடிச்சுக்களுடன் தயாராக இருப்பதைப் பார்த்து ரகுவைப் போல் ஒரு நல்ல நண்பனைத்தான் இழந்து விட்டோம்.  உன்னைப் போல் நல்ல ஒரு தம்பியை இழக்க எங்களுக்கு இஷ்டம் இல்லை.    நாங்க யாரும் இனிமே மதுவை கையால கூட தொட மாட்டோம். இது ரகுவின் மேல் சத்தியம்.   உன்னை தொடர்ந்து நாங்க படிக்க வைக்கிறோம்.  இதுதான் நாங்க ரகுவுக்கு செய்யற மரியாதைஎன்றார்கள்.

பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஜெய் அண்ணன்களின் பைகளுடன் தன் உடைமைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
                                                                             
*
***

*