ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday, 9 January 2014

சிறுகதைப் போட்டி 99

பைக்கில் பறந்த பட்டாம்பூச்சி
"ஒன்னு,ரெண்டு,மூனு" என சுவரில் ஒட்டிய பல்லி போல் மின் கம்பத்தில் ஒட்டிக்கொண்டு சதீஸ் வேகமாக எண்ணத் துவங்கினான்.கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் இது என சொன்னால் சண்டை பிடிப்பார்கள் அந்த தெருவின் வாண்டுகள்.இந்த ஆட்டத்தின் பெயர்  "ஐஸ் பாய்". பெப்பே,7 ஸ்டோன் , கவட்டை,கரண்ட் என மாறிக் கொண்டே இருக்கும் அந்த தெருவின் தற்பொதைய‌ சீசன் இந்த ஜஸ் பாய் தான்.மணி அடித்தார் போல சரியாக 9 மணிக்குத் துவங்கும் இவர்களது ஆட்டம், சித்திரை வெயில் கத்திரி கொண்டு உடலை கிழித்தாலும் முடிவதேயில்லை.தாகம்,பசி,சோர்வு என எதுவும் அவர்களை நிறுத்தியதில்லை.

பழகிய இடங்கள் ஐஸ் பாய் விளையாட சுவாரஸ்யமாக இருக்காததால் இடத்தை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.புதிதாக கட்டும் கட்டிடங்கள் தான் ஒளிந்துக் கொள்ள தோதுவாக இருக்கும்.சமையல் அறை மாடம்,பரணி,செப்டிக் டாங்க் குழிகள்,மாடிப்படியின் இடுக்கு என விதவிதமாக ரகசிய இடங்கள் நிறைந்திருக்கும்.தேனை தேடி அலையும் வண்டை போல இவர்களும் அவ்வப்போது புது கட்டிடங்களை தேடி அலைவார்கள்.ரொம்ப நாள் கழித்து விளையாட ஒரு ரகளையான வீடு மாட்டியது.அதில் தான் ன்றைய ஆட்டம் அரங்கேறியது.
90 வந்ததும் அதுவரை தாழ்ந்திருந்த சதீஸின் டெசிபெல் மெல்ல மெல்ல உயர்ந்து 100 ல் உச்சத்தை தொட்டது.நூறு என்று முடித்ததும் வேகமாக தனது தேடலைத் துவங்கினான்.ஜஸ் பாய் ஆட்டத்தில் சிம்ம சொப்பணமாக இருப்பது குமாரசாமி தான்.குமாரசாமியால் மாடியிலிருந்து மணல் மேட்டின் மீது எளிதாக குதிக்க முடியும்,மரக்கிளையின் நுனி வரை செல்ல முடியும்.இன்னும் பல வித்தைகள் அவனிடமிருந்ததால் சதீஸ்,  ரகு அல்லது சுரேஷை முதல் ஐஸாக அடிக்க திட்டம் தீட்டிருந்தான். எங்கு ஒளிந்திருந்தாலும் முதல் ஐஸாக அகப்பட்டு அடிக்கடி மாட்டித்தவிப்பது இவர்கள் தான்.ரகு தான் இந்த முறை எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்பதில் உறதியாக இருந்தான். மாடிப்படி இடுக்கு அவனது மெல்லிய தேகத்திற்கு ஏற்றதாக இருந்தது.சதீஸ் கொஞ்சம் குண்டு , ஆதலால் அவன் குனிந்து பார்த்தாலும் கண்டுப்பிடிப்பது கடினம் என்று ரகு ஒரு கணக்குப் போட்டிருந்தான்.ரகுவின் கணக்கும் பொய்க்கவில்லை..

சுரேஷ் 1 ஜஸ்என்ற சதீஸின் சத்தம் கொள்ளபுரத்திலிருந்து வந்தது.
எப்படியோ தான் தப்பித்ததை நினைத்து மன ஆறுதல் அடைந்தாலும் சுரேஷை காப்பாற்ற வேண்டுமென எண்ணினான்.அதுதான் அந்த ஆட்டத்தின் மரபும் கூட.சதீஸ் கொள்ளைபுரத்திலிருந்து மாடிப்பக்கம் சென்றான்.மாடியில் ஒளிந்திருந்த குமாரசாமி, ஜஸ் அடிக்க தயாராக இருந்தான்.ஆனால் சதீஸ் விவரமாக பாதி படி ஏறியதும் சுவற்றினை பிடித்து தாவி எட்டிப் பார்த்தான் அங்கு ஒளிந்திருந்த குமாரசாமியை "2 ஐஸ் குமாரசாமி " என்றான்.எப்பொழுதும் கடைசி ஐஸாக மாட்டும் குமாரசாமி,ஐஸ் பாய் வரலாரிலே முதல் முறையாக இரண்டாவது ஐஸாக பிடிப்பட்டான்.குமாரசாமியை பிடித்து விட்டோம்,மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம் என சதிஸ் எண்ணினான்,அவனது எண்ணமும் கைகூடியது.1௦ நபர்களில் ரகுவை தவிர அனைவரும் மாட்டிக்கொண்டனர். ரகுவிற்கு ஐஸ் அடித்துவிடும் ஆர்வம் அதிகமானது,இத்தனை நாட்கள் ஐஸ் பாய் விளையாட்டில் தான் சம்பாதிக்காத பெயரினை எடுக் ஓர் அறிய வாய்ப்பாக கருதினான்.தனது ஜம்புலங்களையும்  ஐஸ் அடிப்பதற்காக தயார் செய்தான்.

சில காலடி சப்தங்கள் கேட்டது , வருவது யாரென தெரியவில்லை.வருவது யாராக இருந்தாலும் சற்று தன்னை கடக்கட்டும் என்றிருந்தான்.கடந்தது சதீஸ் இல்லை மற்றொரு நண்பன் பாலு தான் அது.ரகுவிற்கு புழுக்கத்தில் வியர்த்துக் கொட்டியது.ஒரு கல்லை எடுத்து பாலு மீது வீசினான்.பாலுவிடம் சதீஸின் இடம்,பொருள்,ஏவல் பற்றின தகவல்களை செய்கையில் கேட்டு பரிமாறிக் கொண்டான்.பாலு,சதீஸின் வருகையை உறுதி செய்துவிட்டு ஏதும் தெரியாது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.சதீஸும் , ரகுதானே என கொஞ்சம் மேம்போக்காக தான் தேடினான், தீஸ் அருகில் வர ரகு தயார் நிலையில் இருந்தான்.சதீஸ் டக்கென படிகளின் எதிர்ப்பக்கம் உள்ள ஓர் மறைவில் தேடினான்.தக்க தருணம் இது தான் என வேகமாக வெளியே வர முயன்றான்.அவ்வளவு நேரம் குனிந்திருந்த அவன் நிமிர்ந்து எழுந்தான்.

தனது தலை எதிலோ முட்டியதை உணர்ந்தான் ரகு.சத்தம் கேட்டதும் சதீஸ் , மற்றும் அனைவரும் அந்த வேங்கையின் திடீர் பாய்ச்சலின் பக்கம் திரும்பினர்.

"ரகு 1௦ ஐஸ் " என வாயெடுத்த சதீஸ் .. "அவனை பிடிங்க டா விழுந்திர போறான் " என்று கத்திக் கொண்டே ஒடி வந்தான்.
ரகுவின் ஊதா நிற சட்டை மெல்ல கருமையாகிக் கொண்டிருந்தது.மாதுளையை உடைக்கும் போது வரும் சாரைப் போல் அவன் தலையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.முதலுதவி என்ற வார்த்தையை கேட்டிராத அந்த பிஞ்சுகள் அனைத்தும் முதலுதவி செய்துக் கொண்டிருந்தன.ஒருவன் ரகுவின் சட்டையை கட்டினான்,இன்னொருவன் தனது சட்டையால் ரகுவிற்கு கட்டுப்போட முயற்சித்துக் கொண்டிருந்தான்.ரத்தம் படிந்த சட்டையை பார்த்ததிலிருந்து பாலுவிற்கு மயக்கம் வருவது போலிருந்தது.பாலு அந்த சட்டையை எடுத்துக் கொண்டு ரகுவின் வீட்டிற்கு ஓட்டம் பிடித்தான்.

வீட்டின் வேலைகளை முடித்து விட்டு கொள்ளபுரத்தின் வழியே பிள்ளைகள் எப்போதும் விளையாடும் மைதானத்தை எட்டிப் பார்த்தாள்...அங்கு யாரையும் காணவில்லை..


"இன்னைக்கு எங்க போச்சுங்க எல்லாம்..க்ரவுண்ட்ல யாரையும் காணும் " என்று பக்கத்து வீட்டு சுரேஷ் அம்மாவிடம் கேட்டாள் ரகுவின் அம்மா.


"தெரியலையங்க..பசங்களோட பெரிய தொல்லையா போச்சு..ஒரு இடத்துல விளையாடுதுங்ளா ? இனிமே காலையில போறப்பவே இடத்த கேட்டிடனும்.." என்று புலம்பிவிட்டு தங்களது அன்றாட கூட்டத்தை துவங்க ஆயத்தம் ஆனார்கள்.

அப்பொழுது பாலு அறக்க பறக்க ஓடி வந்து..

"அத்தை விளையாடும் போது ரகுவிற்கு அடிப்பட்டுச்சு ..நீங்க உடனே வாங்க" என்றான்...அவன் கையிலிருந்த சட்டையை பார்த்தவுடன்..

"அய்யோ...அய்யோ" என பதட்டத்தில் கத்தினாள் ரகுவின் அம்மா..

அக்கம் பக்கமிருந்த அனைத்து அம்மாக்களும் கூடிவிட்டனர்.பாலு அழுது கொண்டே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். ரகுவை தன் மடியில் போட்டுக் கொண்டு...
"என்னைப் பாருடா.." என அவனிடம் அழுதுக் கொண்டே ஏதோ உளறினாள்.அவளது கேள்விக்கும் ரகுவும் பயத்துடன் பதிலளித்தான்.

அதற்குள் மெயின் ரோட்டிலுள்ள E.B ஆபிஸிக்கு சென்று தனது கணவரை அழைத்து வந்தார் சுரேஷின் அம்மா.ரகு அவரை பார்த்தவுடன்

"ஒண்ணுமில்லை மாமா ..லேசா தான் அடிப்பட்டுச்சு" என்றான்.

அவர் ஆபிஸிலிருந்து வண்டி ஒன்றை கடன் வாங்கி வந்திருந்தார் .ரகுவை பின்னால் உட்கார வைத்து,அவனுக்கு பின்னால் சுரேஷை அமரவைத்து மெடிக்கல் நோக்கி கிளம்பினார்.வண்டி தெருவின் முனையை தாண்டியதும் ஐஸ் பாய் விளையாடிய மற்ற அனைவரையும் அவர்களது அன்னைமார்கள்  துரத்திக் கொண்டிருந்தனர்.விதவிதமான அடிகளும் , திட்டுகளும் விழுந்தது.துடப்பம் , தோசை கரண்டி,ஸ்கேல் , மரக்கம்பு என தேர்விற்குப் பின் வேலையில்லாமல் இருந்த அனைத்து ஆயுதங்களுக்கும் அன்று திகட்ட திகட்ட வேலை கொடுத்தனர்.அடுத்த 2 மணி நேரத்திற்கு பிள்ளைகளின் அழு குரல்கள் அந்த தெருவை நிரப்பியது.ரகுவின் சட்டையை பார்த்து அவனது அம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.

இங்கு இப்படி இருக் , வண்டியில் சென்ற ரகு ; தலையில் தையல் போடுவதற்காக மருத்துவமனையில் காத்துக் கொண்டிருந்தான்.மருத்துவமனைக்கு நுழையும் போது OP யில் மருத்துவர் இருந்ததால் முதல் உதவி செய்துவிட்டு தையல் போட காத்திருக்க செய்தார்.தலையில் வலி குறைந்திருந்தது.சுரேஷ் அவனது கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.வண்டியில் வரும் வழியெல்லாம்

பத்திரமா பிடிச்ச்சிக்கோ “ “மயக்கம் வர மாதிரி இருந்தா சொல்லுஇந்த இரண்டையும் சுரேஷின் தந்தை சொல்லிக்கொண்டே   இருந்தார்.

சுரேஷிடமும்  “அவனை நல்லா பிடிச்சிக்கோஎன்று பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருந்தார்.


கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் என்றவுடன் சாப்பிட ஏதாவது வாங்கிவர வெளியே சென்றிருந்தார்.மருத்துவமனையின் வாடையும் , அந்த சுழலும் கொஞ்சம் பயம் தருவதாக இருந்தது.மக்கள் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தனர்.


சுரேஷ்அங்க பாருடா...என ஏதாவது காட்டி பேசுவான்.அவனுக்கு தெரிஞ்ச திரைப்பட மருத்துவ காட்சிகளை சொந்த பாணியில் சொல்லுவான்.நடுவேவலிக்குதா ? “ என கேட்பான். ஆனால் , ரகுவின் சிந்தனை முழுவதும் தற்பொழுது வந்த தனது முதல் பைக் பயணத்தை பற்றியே இருந்தது .அவன் அன்று வரை ஸ்டான்ட் போட்ட வண்டியில் ஏறி வாயால்ட்ரூரூஎன்று கூறி தான் கற்பனையில் பயணித்திருக்கிறான்.ரகுவின் அப்பாவிடம் சைக்கிள் மட்டும் தான் உள்ளது , அவனது தாத்தாவிடம் கூட சைக்கிள் மட்டும் தான்.வண்டியில் செல்வதை பற்றி பல நாள் யோசித்திருக்கிறான்.ஒரு முறை அம்மாவிடம் கூடஅப்பா வண்டி எப்ப மா வாங்குவாங்கஎன்று கேட்டிருக்கிறான்.ரகுவின் அப்பாவிற்கு வண்டி ஓட்ட தெரியாததால் இப்போதைக்கு அது நடக்காது என அறிந்திருந்தான்.சுரேஷின் அப்பாவிடமும் வண்டியில்லை ஆனால் அவருக்கு வண்டி ஓட்ட தெரியும்.ஓரிருமுறை நண்பரின் வண்டியில் வீட்டிற்கு மதிய இடைவேளையில் வருவார்;அப்போது சுரேஷை ஒரு ரவுண்டு அழைத்துச் செல்வார்.ரகு இதை அவ்வப்போது கவனித்திருக்கிறான்.ஒரு நாள் சுரேஷ் வீட்டிற்கு சென்று தானும் அவனுடன் செல்லாம் என்று நினைத்திருந்தான்.அவன் நினைத்தது  இன்று கைகூடியது அவனுக்கு மகிழ்வாக இருந்தது.வண்டியில் வரும் போது காற்றில் அவன் முடி ஆடியது , அடிப்பட்ட வலிக்கு இதமாக இருந்தது.துணியால் கட்டு போடப்பட்டிருந்ததால் ; அங்கும் இங்குமாக தலையில் அரிக்கச் செய்ததது.வண்டியை அவன் கெட்டியமாக பிடித்திருந்ததால் என்ன செய்வதென்று தவித்தான்.கையை எடுத்தால் விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.


திரும்பி செல்லும் போது எப்படி பிடிக்க வேண்டும் , வரும் போது சரியாக அமராததால் சரிக்கிக்கொண்டே போவதாக உணர்ந்தான் ஆதலால் சரியாக ஏறும்போதே உட்கார வேண்டும் .என வீடு திரும்புவதை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். அவனது முதல் பைக் பயண  அனுபவத்தின் அடிப்படையில்  தனது கனவை வடிவமைத்துக் கொண்டிருந்தான்.சுரேஷின் அப்பா கையில் பிஸ்கட்டடுடன் நுழைந்தார்,அவருடன் ரகுவின் அப்பாவும் வந்தார்.ரகுவின் அப்பாவும் E.B யில் தான் வேலை பார்க்கிறார்.ஆனால் வேறு டிவிஷன் ; சுரேஷ் அப்பா, அவருக்கு எப்படியாவது தகவல் கொடுக்கும்படியாகவும் உடனே மெடிக்கலுக்கு வரும்படியாகவும் அலுவலக நண்பர்களிடம் சொல்லி வந்தார்.


தந்தையை பார்த்தவுடன் ரகுவிற்கு பயத்தில் கண்கள் கலங்கின ; அப்பா திட்டுவாரென எதிர்பார்த்தான் அனால் அவர் அவனது காயத்தின் வலியை பற்றியே பேசினார்.அவனுக்கு அப்பாவின் வார்த்தைகள் தைரியத்தை அதிகரித்தது.தையல் போடும் போது எந்தவித அழுகையும் இன்றி அமர்ந்திருந்தான் அவ்வப்போதுஸ்என்ற சத்தம் மட்டும் தந்தான்.மருத்துவர் தையல் போட்டுவிட்டு , அவன் முகத்தை அணைத்தவாறு வெள்ளை நிறத்தில் கட்டினை போட்டார்.


வேற கலர் இருக்காஎன்று கேட்கலாமா என யோசித்து முடிப்பதற்க்குள்


வீட்டில அடங்கவே மாட்டேங்கிறாங்க நீங்களாச்சும் சொல்லுங்க டாக்டர்என்று தகப்பன்மார்களின் கோரிக்கைளை ஏற்று.


இனிமே ஜாக்கிறதையா விளையாடனும்என்று துவங்கி அவர் பாட்டிற்கு அறிவுரை மலர்களை பிள்ளைகளின் மேல் அள்ளி வீசினார்..இதற்கு அவர் போட்ட ஊசியின்  வலியே தேவலை என தோன்றியது.ரகுவை பார்த்து சுரேஷ்சரியான ப்ளேடு்”  என கையை கழுத்துப்பக்கம் வைத்து அறுப்பது போல சைகை காட்டினான்.ரகுவிற்கு சுரேஷின் திருட்டுதனமான அந்த சைகை  சிரிப்பு மூட்டியது,இருந்தும் அடக்கிக் கொண்டான்.


ஒரு வழியாக சிறிது நேரத்தில் விடைபெற்று  மருத்துவமனையை விட்டு அனைவரும் வெளியே வர,அப்பாவின் சைக்ககிளை பார்த்ததும் ரகுவிற்கு புரிந்தது .தனது பைக் கனவு நிறைவேறாது என்று. அதுவரை அவனுக்கு உணராத வலிகள் யாவும் அவனை வாட்டியது.உடலாலும் மனதாலும் சோர்ந்து போனான்.


ராஜு நான் பசங்கள கூட்டிட்டு போறேன்..நீ சைக்கிள்ள பின்னாடி வா" என சுரேஷின் அப்பா ரகுவின் அப்பாவை பார்த்து சொன்னார்.

பைக்கின் உறுமல் சத்தம் துவங்கியது....


காற்றில் சிறகை விரித்து இரு பட்டாம்புச்சிகள் பறந்தன அதில் ஒன்று தலையில் சிங் போல கட்டுப் போட்டிருந்தது.
-0-