உப்பு
வானத்தின் நிறத்தை தனக்குள் பிரதிபலித்தபடி
கருப்பு நிறமாய் படர்ந்து கிடந்தது கடல். நட்சத்திரங்களுக்குப் போட்டியாக
கடலுக்குள் மின்விளக்குகளை ஒளிரவிட்டபடி நின்றிருந்த மீன்பிடி படகுகளின் கூட்டத்தை
வேடிக்கை பார்த்தபடி தன் பிம்பத்தை கடலலைகளின் ஊடாக கரைத்துக்கொண்டிருந்தது
நிலா...
நூற்றுக்கணக்கான
படகுகள்...
டீசல் படகொன்றை
சொந்தமாக வாங்கி தொழில் செய்ய வேண்டும் என்பதே ஏழை மீனவனாக பிறந்துவிட்ட
ஒவ்வொருவனின் கனவாக இருக்கிறது, கடலும் தொழிலும் அவ நம்பிக்கைகளை அள்ளிப்
பூசினாலும் கூட ஒரு படகு இன்னமும்
நீந்திக்கொண்டுதான் இருக்கிறது ஒவ்வொரு மீனவனின் மனதிற்குள்ளும்..
அந்த வகையில்
ஒவ்வொருப் படகும் நிஜமாக்கப்பட்ட கனவு !!
அலைகடலின் அசைப்பிற்கு அசைவுகொடுத்தபடி
ஆடிக்கொண்டிருந்த படகுகளுக்குள்ளிருந்து வலைகளை எடுத்துக் கடலுக்குள் வீசுவதிலும்,வீசிய
வலைகளை இழுப்பதிலும் ,வலைகளுக்குள் சிக்கிய மீன்களை
எடுப்பதிலும் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர் மீனவர்கள்.
அலைச் சத்தமும் , கயிறுசுற்றும் வின்ச்
கருவியின் "டகடகாவும்" காற்றோடு சுருதி சேர்த்து மறுபடியும் அந்த பழைய
பல்லவியை ஆழ்கடலுக்குள் இசை பாடிக்கொண்டிருந்தது.
"என்னடா இது !
இன்னைக்கும் மீன் பாடு சொல்லிக்கிற மாறி
இல்ல" கவலை ரேகையை தன் முகத்தில் சுமந்தவாறு, தன் முகத்தில் இருந்த மீன்
செதில்களை தன் கைகளால் துடைத்தபடி சகாயம்
புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்தோணிச்சாமி என்ற
பெயர் தாங்கி கடலுக்குள் நின்று கொண்டிருந்த அந்த படகில் மொத்தம் ஐந்து பேர் ,
போட் ட்ரைவர் சூசை, களஞ்சியம்
,சேசு,பாண்டி,சகாயம்
அங்கிருந்த அத்தனை பேரிலும் சகாயமே மூத்தவர் !
பாண்டி மீன்களை பிரித்துப் பிரித்துப் பெட்டிகளை
நிரப்பிக் கொண்டிருந்தான்,களஞ்சியமும் சேசுவும் கயிறு இழுப்பதில் கவனமாய் இருந்தனர் ! சகாயத்தின்
புலம்பல்களுக்கு செவி சாய்த்தபடி போட் ட்ரைவர் சூசை "அட அமாண்ணே ! ,நமக்கு மட்டும் ஏன் இந்த கடலு ஓர வஞ்சனை செய்யுது னு தெரிய மாட்டேனுதே
" என புலம்பலுக்கு வலுவேற்றிக் கொண்டிருந்தான்.
வலைகளின் கொள்ளளவு , மீன்
வலையை மீனவர்கள் வீசுகிற ,இழுக்கிற திறமை, மீன்வரத்து இவைகளைத் தாண்டி ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக குழுமி இருக்கிற
நூற்றுக்கணக்கான படகுகளின் கூட்டத்தில் ஒவ்வொரு படகுக்கும் ஒரே மாதிரி படி
அளப்பதென்பது கடல் தேவதைக்கு மிகுந்த கஷ்டமான காரியமாகத்தான் இருக்க வேண்டும் ,பல சமயங்களில் அவள் பாரபட்சமாகத்தான் படியளக்கிறாள்.
"இந்த தடவையும் கம்மியான
"பாடோட" போனா பெரியவரு திட்டியே
தீர்த்துருவாரு ! " வலை இழுத்துக்கொண்டிருந்த களஞ்சியம் மூச்சிரைக்க தன்
வியர்வையை துடைத்துக்கொண்டான்.
பெரியவர்
அந்தோணிச்சாமின் படகில் இந்த வாரமும் "பாடு" (மீனவர்கள் வலைக்குள்
சிக்கும் மீன்களை பாடு என்று சொல்கிறார்கள்) கொஞ்சம் கம்மி தான், இந்த
முறையும் கூட வலைகளில் பாசியும், சங்குகளும் ,சிப்பிகளுமே சிக்கியது !!
"டேய் சூசை போட்’ட
கொஞ்சம் கெழக்கால வுட்டுப் பார்க்கலாம்டே, அந்த பக்கம் போன கண்டிப்பா எதுனா
கெடைக்கும் "
இன்னும் ஆறு மணி
நேரத்தில் அவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க அனுமதி கொடுத்த அனுமதிச்சீட்டின்
ஆயுள் முடிகிறது.
"சூசை ராத்திரி
நிலவடங்குற நேரம் ரோந்தெல்லாம் வர மாட்டாய்ங்க ! போய் ஒரு ரெண்டு பாடு வலை வீசி
இழுத்துப்புட்டு வந்துடலாம் " சகாயம் சூசையிடம் சொல்லிக்கொண்டிருந்தார்
"பெரியவரும்
சந்தோசபடுவாரு ,
நமக்கும் கொஞ்சம் மனதிருப்தியா இருக்கும்"
"சரி ! போய்த்
தான் பாப்பமே " என்று கோரசாய் ஒரு குரல் ஒலித்தது !
சகாயத்தின் காய்ந்த
உதடுகள் லேசாக அசைந்து விரிந்தது, தான் சொன்னதை யாவரும் சம்மதித்ததை எண்ணி அவர்
புன்னகை செய்திருக்கக் கூடும்.,
படகு கிழக்குத்
திசையில் முடுக்குவிக்கப் பட்டது, அந்தோணிச்சாமி படகோடு இன்னும் இரு படகுகள்
இணைந்திருந்தன டீசல் விசையின் வேகத்தில் கடலில் கோடுகள் போட்டபடி தனுஷ்கோடிக்கும்,
தலைமன்னாருக்கும் இடைப்பட்ட இடம் நோக்கி விரையத் துவங்கின படகுகள்..
கடலை வேடிக்கைப்
பார்த்தபடியே வந்த பாண்டி திடீரென்று
ஞானோதயம் வந்தவன் போல சூசையிடம் நகர்ந்து செந்தில் ஸ்டைலில் ஒரு கேள்வியை
கேட்டுவைத்தான் " கடல்ல எப்டிண்ணே எல்லைக்கோடெல்லாம் போடுவாங்க !!" அவன்
கேட்ட கேள்வி படகிலிருந்த அத்தனை பேரையும் சிரிக்க வைத்திருந்தது ! சிரிப்பு
சத்தத்தை கடந்தபடி பாண்டியின் அசட்டுப் பார்வை மறுபடியும் கடலுக்குள் செல்ல
ஆரம்பிக்கையில் பாண்டியின் பக்கமாய் நடந்துவந்து அவன் தோல்களில் கைவைத்தபடி சகாயம்
அவனோடு பேச ஆரம்பித்தார் :
" ஏலேய் பாண்டி இப்போ நாம போற இந்த இடத்துல
நிறைய மணல் திட்டுகள் இருக்கும் , ராத்திரிங்க்றதால கடலுக்குள்ள மூழ்கிருக்கு
, ஒரு காலத்துல அதுங்கல்ல போர்டு வச்சிருந்தாங்க ! இது
இந்தியா, இது இலங்கை னு, இப்போ
அதுங்கல்லாம் காத்துக்கு காணாம போயிடுச்சு "
மறுபடியும்
சிரிப்புக்குள் மூழ்கிப்போனார் ...
படகுகள் தங்கள் வலைகளை
கடலுக்குள் இறக்கியபடி செல்லத்துவங்கின...
பாண்டி மறுபடியும் ஒரு
கேள்வியை கேட்க ஆரம்பித்தான்...
"அண்ணே இப்போ நாம
மீன் பிடிக்கிற இடம் இலங்கையா ! இந்தியாவா !, "
பாண்டியின் தலையை
நோக்கி அடிப்பது போல கை ஓங்கியபடி களஞ்சியம்
"அடிங்க்....
கேள்வி கேக்காம வேலைய பார்டா "
யாரும் வலை வீசாத
பகுதி, ஆழமான இடம் முதல் பாடு நன்றாகவே வந்திருந்தது ! அத்தனை முகங்களிலும்
சந்தோசம் ! இரண்டாம் பாடிற்காக இன்னொரு முறை வலை கடலுக்குள்
இறக்கிவிடப்பட்டிருந்தது,
"டக டக
டக...."
அங்கிருந்த மூன்று
படகுகளில் ஒன்று முதல் பாடை முடித்துக்கொண்டு திரும்பிகொண்டிருந்தது !!
தங்களை ரட்சிக்க வந்த கடவுளைப் போல சகாயத்தை
பார்த்துக் கொண்டிருந்தார் சேசு ! பெட்டிகளுக்குள் வேகமாக மீன்களை
பிரித்துப்போட்டுக்கொண்டிருந்தான் பாண்டி !
களஞ்சியம் தன் கையிலிருந்த பீடியை பற்றவைத்தபடி படகின் ஓரத்தில் நின்று
கொண்டிருந்தார்...
துப்பாக்கிச்சத்தம்
!!!
"உங்களுக்கு
எத்தன தடவ சொன்னாலும் திருந்தவே மாட்டீங்களா டா !!" ... அது தமிழ் தான் !!
தமிழ்க்குரல் தான் !!
தூரத்திலிருந்து ஒரு
படகு அவர்களை நெறுங்கிக் கொண்டிருந்தது
மற்றொரு முறை
துப்பாக்கிச்சத்தம் !!
"அண்ணே நாம இப்போ
இருக்குறது இலங்கையோட இடமா??"" பாண்டி பயத்தில் அழுதுகொண்டே உளறிக்கொண்டிருந்தான் !
வலை
கடலுக்குள்ளிருந்து வேக வேகமாக இழுக்கப்பட்டுக்கொண்டிருந்தது !! "டேய் சூசை
வின்ச்ச வேகமாக ஓட்டு இன்னும் வேகமா..." கயிறு சுற்றும் வின்ச் கருவி வேகமாக
சுழன்று கொண்டிருந்தது !!
வலை உள்ளிழுக்கப்
படுவதற்கும் அந்த ரோந்துப் படகிலிருந்து கேட்ட அந்த சத்தம் அவர்களை அடைவதற்கும்
சரியாக இருந்தது.
"
சுட்டுக்கொல்லுங்க !! அவனுங்கள்ள ஒருத்தன் கூட கரை திரும்பக்கூடாது !! நம்ம
நாட்டோட மீனுங்க எல்லாத்தையும் கொள்ளை அடிக்கிற திருட்டுப் பயலுக ! விடாதீங்க
ஒருத்தனையும் "
படுவேகமாக திருப்பப் பட்டது படகு.
அந்தோணிச்சாமியின்
படகோடு மீன்பிடிக்க வந்திருந்த இன்னொரு படகை கைப்பற்றியது ரோந்துப் படகு !!!
"சுட்டு
கொல்லுங்க ,நம்ம கடல கற்பழிக்கிற அயோக்கியப் பயலுக, ஒருத்தனும்
உசுரோட போகக் கூடாது"
சூசை வேகமாக படகை
செலுத்திக்கொண்டிருந்தான் !!
"
துப்பாக்கிச்சத்தம் "
யாரை நோக்கிச் சுடப்பட்டது என்று யாருக்கும்
தெரியவில்லை !
இன்னொரு ரோந்துப் படகு
அந்தோணிச்சாமியின் படகை நோக்கி துரத்திக்கொண்டு வந்தது.
“எப்படி இவைங்கள்ட்ட
மாத்திரம் இத்தனை ரோந்துப் படகுகள் இருக்குது ,இவை ரோந்துப் படகுகள் தானா இல்லை
கொலைவெறியுடன் சுற்றித்திரியும் கொள்ளைப் படகுகளா ! “ பாண்டி தன்னிடமிருந்த கேள்வியை பயத்தை மீறி
கேட்டுக்கொண்டிருந்தான்
"பேசாமல்
நம்மலும் துப்பாக்கி வாங்கி வச்சுக்கிறனும் ணே !! இவனுங்க நம்மள சுடுற மாதிரி
இவனுங்கள நம்ம சுடனும் " சேசு கோபம் கொப்பளிக்க காற்றில் கைநீட்டி
கர்ஜித்துக் கொண்டிருந்தான் .
படகு வேகம் அதிகரித்தபடியே
இருந்தது! "சூசை வேகமா போ..." சகாயம் பயந்திருக்க வேண்டும் என்பதை அவர்
குரல் உணர்த்தியது ..
வேகம் வேகம் வேகம்
அந்தோணிச்சாமி படகை
துரத்திப் பிடித்துவிட்டது ரோந்துப் படகு
துப்பாக்கிச்சத்தம்
!!!
சூசை நிலை தடுமாறி
கீழே சரிந்தான் !!
சரிந்த விழுந்த
சூசையின் கைகளை பிடித்தபடி சகாயம் அழத்துவங்கினார் !
அடுத்தடுத்த
துப்பாக்கிச்சத்தம் !
"எல்லோரையும்
சுடு ,ஒருத்தனும் உசுரோட போகக்கூடாது..."
துப்பாக்கிக்குண்டு
தோல்ப்பட்டையில் பாய்ந்தது !! சேசு கடலுக்குள் சாய்ந்தான் !!
சகாயத்தின் அழுகை
நின்றுவிட்டிருந்தது...
பாண்டி இறந்து கிடந்த
மீன்களுக்கு ரத்தம் பாய்ச்சியபடி களஞ்சியத்தின் கைகளை பிடித்த நிலையில் மீன்
குவியலுக்குள் இறந்து கிடந்தான்..
சில
வினாடிகளுக்குள்ளாக படகு அமைதியாகியிருந்தது...
ரோந்துப்படையினர்
படகிலிருந்து தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டார்கள் !!
பிறகு படகுக்கு கொல்லி
வைக்கப்பட்டது ! கடலில் மிதந்து கொண்டிருந்த அந்தப் படகு எரியத்துவங்கியிருந்தது, நீருக்குள்
நெருப்பு பிழம்பாக எரிந்து கொண்டிருந்தது .
கிழக்குத்திசை வானத்தை சிவப்பாக்கியபடி சூரியனை பிரசவித்துக் கொண்டிருந்தது
.
"அப்பா !"
"அப்பா !" சேசுவின் காதுகளுக்குள் அவன் குட்டி மகளின் குரல் கேட்டுக்
கொண்டிருந்தது ,
அவன் இன்னும் செத்திருக்கவில்லை ! கடலுக்குள் மூச்சுத் திணறியபடி
மூழ்கிக்கொண்டிருந்தான் !
அவன் மகள் அவனை
மறுபடியும் எழுப்ப ஆரம்பித்தாள் "அப்பா" "அப்பா" கை கால்களை
அசைத்து அருகில் இருந்த மணல்திட்டை நோக்கி நகர ஆரம்பித்தான்.
" 5 ஆம்
மணல்திட்டு இந்திய எல்லை" சகாயம்
பாண்டியிடம் காற்றில் காணமல் போனதாய் சொன்ன போர்ட் ஒன்று கரையருகே சாய்ந்து கிடந்தது. மெல்லமாய்
தன் தோல்ப்பட்டையில் குண்டு பாய்ந்த இடத்தை தடவிக்கொண்டான் ! காயத்தில் ஊடுருவி
பாய்ந்திருந்த உப்புநீர் அவன் உயிரை பறித்துக்கொண்டிருந்தது...
"இப்போதிருந்து
நீந்த ஆரம்பித்தால் இரவுக்குள் கரைக்கு போய் விடலாம் ! "
சேசுவின் மனதிற்குள்ளிருந்தபடி
அவன் மகள் கூப்பிட்டுகொண்டிருந்தாள் .,
கடலுக்குள் நீந்த
ஆரம்பிக்கிறான் சேசு !! கடலில் இருந்து புறப்பட்டு கரைநோக்கிச்செல்லும் ஒவ்வொரு
அலையும் அவனுக்குள் நம்பிக்கை அலையை எழச்செய்தபடியே இருந்தது !
வானத்தின் நிறத்தை தனக்குள் பிரதிபலித்தபடி நீல நிறமாய் படர்ந்து கிடந்தது கடல் !
கடலுக்குள் மீன்பிடியை
முடித்துக்கொண்டு கரைதிரும்பும் படகெதுவும் கண்ணில் தட்டுப்படுகிறதா என தேடியபடியே
நீந்திக்கொண்டிருந்தான் சேசு !
வழக்கமாக
மீன்பிடிக்கும் இடத்திலிருந்து வேறு திசையில் மீன்பிடிக்க வந்துவிட்டதாலோ என்னவோ
ஒன்றும் தட்டுப்படவில்லை ... பசியும் களைப்பும் ,வலியும் கூட ஒன்றாய்
சேர்ந்து அவன் கண்களில் இருந்து படகுகளை தெரிய விடாமல் மறைத்திருக்கக்கூடும்...
இல்லை இந்நேரத்திற்கெல்லாம் அவை கரை அடைந்திருக்கக் கூடும் !
படகுகள் பார்வைக்கு
அகப்படாததன் காரணத்தை பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான் சேசு.
படகுகள் பார்வையில்
தெரியாவிட்டாலும் சேசுவின் பார்வையில் அவன் அடையப்போகிற கரை தெளிவாகவே தெரிந்து
கொண்டிருந்தது !
"அண்ணே ! இந்த
கடல்ல எப்டிண்ணே எல்லைக்கோடெல்லாம் போடுவாங்க !!" பாண்டியின் கேள்வியும் , எல்லோரது
சிரிப்பும் , எரிந்துபோன படகும் சேசுவின் கண்முன் தோன்றி
மறைந்தது.
தனக்கு மேலாக பறந்து கொண்டிருந்த பறவையின் நிழல்
தன் மேல் படர்வதை உணர்ந்து மெல்ல மேலே தலையை திருப்பி விட்டு மறுபடியும் நீந்த
துவங்கியிருந்தான் !!
தூரத்தில் யாரோ எப்போதோ விளையாடிவிட்டு
விட்டுப்போன பந்து ஒன்று மிதந்து கொண்டிருந்தது ! "அப்பா , வரும்போது பொம்மை
வாங்கிட்டு வரேன் அழமா அம்மாட்ட இருந்துக்க " தன் மகளின் அழுகை அவனுக்குள்
கேட்க ஆரம்பித்தது "நானும் அப்பாகூட போறேன்.....நானும் அப்பாகூட
போறேன்....."
களைப்பு, வலி, பசி
! பக்கம் இருந்த மணல்திட்டில் மூச்சிரைக்க
சாய்ந்துபோய் படுத்துவிட்டான், களைப்பும் கவலையும் மறந்து சில மணி நேரங்கள்
தூங்கிப்போனான்....
அவன் விழிகளை திறந்த
பொழுதில்
சூரியன் சுள்ளென
சுட்டுக்கொண்டிருந்தது !
தூக்கம் கலைந்து கரையை
மனதில் சுமந்தபடி கடலுக்குள் பிரவேசித்தான்
நீந்த
துவங்கியிருந்தான்....
கடல்... கடல்... கடல்...
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறெதுவும் புலப்படவில்லை !
அவன் மனதில்
சுமந்திருந்த கரை அவனை இன்னும் வேகமாக்கியிருந்தது !
சேசுவுக்கு கடவுள்
நம்பிக்கை உண்டு ! கடலை இருகூறாக பிரித்து கடவுளின் அருளோடு இறைதூதர்கள் மக்களை
காப்பாற்றிய கதைகளை அவன் படித்திருக்கிறான்,கேட்டிருக்கிறான், நம்பியும் இருக்கிறான் !
"கர்த்தரே !
என்னை கரை நோக்கி செலுத்தும் ! உமக்கு ஸ்தோத்திரம்....." மனம் விட்டு
கர்த்தரை நோக்கி ஜெபம் செய்து கொண்டிருந்தான் ! .வழக்கமாக படகில் ஜெபம் செய்து
கொண்டிருக்கையில் களஞ்சியம் சேசுவை கிண்டல் செய்வதுண்டு ! களஞ்சியத்திற்கு
கர்த்தர் நம்பிக்கை இல்லை !
இந்த முறை அவன் செய்கிற ஜெபத்தினை கிண்டல் செய்ய
களஞ்சியம் இல்லை !இல்லாது போன களஞ்சியத்தின் நினைவுகளை நினைத்தபடி இல்லாத
களஞ்சியத்திற்காக இன்னொரு முறை கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் ; அவன் ஆத்மா சாந்தி அடையட்டும்
என்றும் அவன் குடும்பத்திற்காகவும் களஞ்சியத்திற்கு நம்பிக்கை இல்லாத கர்த்தரிடம்
ஜெபித்துக்கொண்டான் !
"கர்த்தரே உமக்கு
ஸ்தோத்திரம் ! ..."
"ஒருவேளை நாங்கள்
சாகடித்த மீன்கள் எங்களுக்கிட்ட சாபமோ என்னமோ எங்கள் வாழ்க்கை எப்போதுமே இப்படி
கேள்விக்குறியாகவே இருக்கிறது !"
முடிவிலா மனப்புலம்பல்கள் அவன் மனம் முழுக்க
பரவியிருந்தது .
கரை மீதான
நம்பிக்கையும் கடவுள் மீதான நம்பிக்கையும் கரைநோக்கி அவனை அவனை
நகற்றிக்கொண்டிருந்தது.
மாணுடத்தின் பிரதான
பிரச்சனையான பசி அவனை பாடாய் படுத்திக்கொண்டிருந்தாலும் !! கரை நோக்கிய கனவுக்கு
தன்னை உணவாக்கியபடி கரைசேரும் உறுதியுடன் நீந்திக்கொண்டிருந்தான் .
என்னதான் கண்களுக்குள் கரையைப் பற்றிய கனவுகளை
நிரப்பி வைத்திருந்தாலும் ,கரைக்கான சுவடே அவன் கண்களுக்கு அகப்படவில்லை நீலக்கடல் நீந்த நீந்த
குறையாமல் நீண்டு கொண்டேப் போவது போன்ற பிரமை அவனுக்கு வரத்துவங்கியிருந்தது.
சூரியன் மேற்கை நோக்கி
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது ! இருட்டுவதற்குள் கரை சேர வேண்டும் !
"கடவுளே இந்த
சூரியனை இன்னும் கொஞ்ச நேரம் இழுத்துப் பிடித்து நிறுத்தி வை ! என் கரையை எனக்கு
சமீபமாக்கிக் கொடு"
அவன் கண்களில் இருந்த கண்ணீர்த் துளிகளை
கடலுக்குள் கொடுத்தபடி நீந்திக் கொண்டே இருந்தான்...
மணித்துளிகள் காலக்
கடலுக்குள் துளித் துளியாக காலமாகிகொண்டிருந்தது...
மேற்கில் ரத்தம்
சிந்தியபடி செத்துப்போய்க் கொண்டிருந்தது சூரியன் !
தூரத்து படகொன்று
நகர்ந்து வருவதை அவன் கண்கள் அடையாளம் காட்டியது !
நகர நகர கரை அவனுக்கு
சமீபமாகி கொண்டு வருவதை அவன் உணர்ந்தான் !
இன்னும் சில மணி
நேரங்கள் நீந்தினால் கரைதொட்டுவிடலாம் !
தூரத்துப் படகு இப்போது
அருகாண்மையாகி இருந்தது...
அந்தப் படகு ஆளில்லாமல் கரையில் நங்கூரமிட்டு
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது , இருந்தாலும்
நீந்தியபடியே அவ்வப்போது படகை நோக்கி கைகளை ஆட்டி சைகை செய்து கொண்டிருந்தான்.
ஆழம் குறைந்தபடியே
வந்தது...
கடல் நீரில் ஊறிப்போன
உடலுடன் ! வாயில் இருந்த உப்பு நீரை துப்பியபடி கரையில் கால் வைத்தான் சேசு ! காதுக்குள் கடல்நீர் போயிருந்ததால் காது
அடைத்திருந்தது
கரையைத்
தொட்டுவிட்டான் !
கரை அவன் கால்களை
முத்தமிட்டுக்கொண்டிருந்தது !
கரையைத் தொட்ட
மறுவினாடியில் அவன் மனது மறுபடியும் கடல் நோக்கி பயணப்பட்டது, எரிந்த
படகின் பிம்பம் அவன் மனதினை முழுவதுமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது ! சத்தமாக
அழுதபடி கடலை நோக்கி சாய்ந்து சரிந்து அழுது புலம்பினான் !
அவனை வரவேற்க யாருமில்லாத அந்த கடற்கரையை கடந்து
வீடு நோக்கி நடக்கத் துவங்கினான் ! ஒரு உண்ணாவிரத போராட்ட பந்தல் கண்ணில் பட்டது !
பேனரில்
தமிழினக்காவலர் ஒருவர் சிரித்துக் கொண்டிருந்தார் !
பசி அதிகமாகி அவன்
வயிறை குத்த ஆரம்பித்திருந்தது !
“அப்பா ! “அப்பா !
இன்னைக்காச்சும் வரும்போது பொம்மை வாங்கிட்டு வாப் பா “
வீட்டுக்கு போவதற்கு
முன் வேறு ஒரு படகில் வேலைக்கு கேட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என
நினைத்துக்கொண்டான் .