ஆருடம் பலித்த கதை.
எனக்கு ஆருடத்தில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. வாழ்வின் அடிப்படை
நம்பிக்கைகள் தகர்ந்து போய் நிற்கும்பொழுது இது போன்ற பூச்சுற்றல் வேலைகள் எல்லாம்
ஒரு வித நடுத்தரவர்கத்து பம்மாத்துத் தனம் என்பதுதான் என் முடிவு.எல்லையற்ற
சுயநலமே இது போன்ற விஷயங்களை வளர்த்து வருவதாக என் அபிப்பிராயம்.இருப்பினும்
நாளிதழில் தனுர் இராசிக்கு இன்று என்ன என்று பார்ப்பதற்கு காரணம் நானும் இது போன்ற
ஒரு மத்தியதர வர்க்கம் என்று சமாதானம் செய்து கொள்வேன்.
ஆருடம் இன்று நேற்று சமாச்சாரமில்லை. சோதிடர்களின் தொல்லை பொறுக்காமல்
அப்பர் பெருமானே ஒன்பது கோள்கள் மீதும் பதிகம் பாட நேரிட்டது.ஓரளவு வசதியான சைவக்
கோவில்களில் வெளிப் பிரகார சுவர் மீது உபயம் ராமலிங்க முதலியார் அல்லது பொன்னுசாமி
கவுண்டர் என்று போட்டு கோளறு பதிகத்தை கல்லில் செதுக்கியிருப்பார்கள்.அடுத்த முறை
சிவன் கோவில்களுக்கு போகும்பொழுது மறக்காமல் படித்து பார்க்கவும்.
கதை ஆருடம் பற்றியது இல்லை. முத்துராமனையும் அவன் அக்கா
பூங்கோதையையும் பற்றியது.
முத்துராமன் எங்கள் வங்கி கிளைக்கு ஒரு பன்னாட்டு ஆயுள் காப்பீட்டுக்
கழகமும் எங்கள் வங்கியும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக ஒரு
பாலிசி பிடிப்பவனாக வந்து சேர்ந்தான்.என் வங்கிக் கிளையில் அவனுக்கு தனி இருக்கை,
கணினிக்குள் தனி உள்நுழையும் வசதி கொடுக்கப்பட்டாலும் அவன் மாத வருவாயை அவன்
நிறுவனம்தான் வழங்குகிறது.வங்கிகள் இன்னமும் வெள்ளைப் பூண்டும் புளிச்ச கீரையும்
மட்டும்தான் விற்கத் தொடங்கவில்லை.மற்ற எல்லா சங்கதிகளையும் விற்கத் தொடங்கி வெகு
நாட்களாகிறது.எனவே முத்துராமன் போன்றவர்களின் அத்து மீறிய பிரவேசம் எங்களுக்குப்
புதியதில்லை. இருப்பினும்,
முத்துராமன் முற்றிலும் ஒரு கார்பரேட் செட்-அப் ற்கு பொருந்தாமல் தேனி
மாவட்டத்திலிருந்து வந்ததுதான் அவன் மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்தியது.
ஆள் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பான் என்பது அடிப்படை அனாடமி
என்றாலும் அவன் புன்னகையைக் குறிப்பிட்டாக வேண்டும்.வெள்ளந்தியான புன்னகையை தென்
மாவட்டங்களில்தான் காண முடியும் என்றால் வட மாவட்டத்தினர் அடிக்க வருவார்கள்.அந்த
மாத குறியீட்டு இலக்கை எட்டமுடியாமல் மேல் அதிகாரிகளிடம் வறுபட்டால் அதற்கும் அதே
சிரிப்பு.ஏப்பை சாப்பையாக ஒரு அசட்டு வாடிக்கையாளன் ஒரு பெரிய பாலிசியில் மாட்டிக்
கொண்டான் என்றால் அதற்கும் அதே சிரிப்பு. அந்த சிரிப்புடன் அவர்கள் பிராந்திய
தமிழ். மதுரை தமிழ் என்று இப்பொழுது வரும் திரைப்படங்களில் வருவது போன்று இல்லாமல்
ஒரிஜினல் ஸ்லாங். திருமணம் ஆகாத அத்தனை பெண் ஊழியர்களையும் மடக்கி விடும்
சாமர்த்தியம் ஒன்று அவனிடம் இருந்தது.
கதை வேறு பாதையில் செல்வதற்கு முன் என் பாதையில் மடக்கி கொண்டு
வருகிறேன்.
“ பிரபாகரன் சார் “ என என்னருகில் வந்தான். excel விரிப்பில் சில
மாற்றங்களை செய்வதற்கு நான் தடுமாறிக் கொண்டிருந்தபோது அவனாகவே வந்து அந்த
மாற்றங்களை செய்து எனக்கு பழகிக் கொடுப்பான்.அவன் கூப்பிட்ட பொழுதெல்லாம் கடை
கடையாக ஏறி இறங்கி சோப்பு விற்பவனை போல” எங்கள் வங்கி புரிந்துணர்வு செய்து கொண்ட
முன்னணி காப்பீட்டு நிறுவனத்தின் மிக அருமையான பாலிசி” என நான் ஒப்பிக்க
தயங்காததால் ஏற்பட்ட பாசமா அல்லது நானும் முன்னாள் மதுரைக்காரன் என்பதாலா எனக்கும்
அவனுக்கும் ஒரு பிணைப்பு எப்பொழுதும் இருக்கும்.
“ என்ன? ” என்றேன்.
“ ஒங்களுக்கு நல்ல ஜோசியர்
யாரையாவது தெரியுமா? “ என்றான்
இதற்கு ஒரே வரியில் பதில் சொல்ல என்னால் முடியவில்லை.வேலை கிடைக்காத
என் மதுரை நாட்களில்கணித விரிவுரையாளர் தேவராஜன் சாரின் மனைவியும் என் இலக்கிய
குருவுமான கோமதி மாமி என் ஜாதகத்தை பார்த்து விட்டு லக்னத்தில் சூரியன் இருப்பதால்
உனக்கு பிரபலம் அடைவது சுலபமான விஷயம் என்பதை சொல்ல கேட்டதிலிருந்து ஆருடத்துடனான
எனது ஜாலி விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த விளையாட்டில் என்
மனைவியும் இனைந்து கொள்ள இருபது வருட எங்கள் மண வாழ்க்கையில்
சூரமங்கலம்,சேந்தமங்கலம்,சத்தியமங்கலம்,தேவிபட்டிணம்,பவானி , பொள்ளாச்சி என்று
நாங்கள் ஜோதிடர்களை தேடிப் போகாத ஊர்களே இல்லை எனலாம்.இதுவரையில் எந்த ஆருடரும்
நாமாக சொல்லாத வரையில் அவர்களாக தங்கள் கருத்தை சொன்னதில்லை.ஆங்கில மருத்துவர்களும்
இந்த ஜோதிடர்களும் ஒன்று. வாடிக்கையாளர்கள் வாயைப் பிடுங்குவதில் வல்லமை
மிக்கவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஆட்டையாம்பட்டியில் ஒரு ஜோதிடரை சந்திக்கும்
வாய்ப்பு கிட்டியது.சேலம் திருச்செங்கோடு பாதையில் ஒரு சின்ன ஊர் இந்த
ஆட்டையாம்பட்டி.என் மைத்துனன் ஒருவன் வளைகுடா நாடுகளில் நல்ல உத்தியோகத்தில்
இருந்து விட்டு நாற்பத்தைந்து வயதில் இந்தியா திரும்பினான். அத்தனை வயதாகியும்
திருமணம் ஆகாதா தன் தம்பிக்கு வருத்தப் பட்ட அக்கா காரணமாகத்தான் நான் ஊர் ஊராக
ஜோதிடர்களை தேடி செல்ல வேண்டியதாயிற்று.அவனாவது நிம்மதியாக இருக்கட்டுமே என்று
சொன்னால் என் மனைவி சொரூபம் காட்டுகிறாள்.
“ எதுக்கு ? “ என்றேன் முத்துராமனிடம்.
“ ரெண்டு வருஷமாச்சு சார் வேலையில் சேர்ந்து.
கை நிறைய சம்பளம்.இன்னமும் எனக்கு பொண்ணு அமையலை சார். அதான் என் ஜாதகத்தை நல்ல
ஜோசியரிடம் காட்டலாம்னு இருக்கேன்.”
முத்துராமன் பின்புலம் சினிமாக்களில் வரும் மிராசுதார் நாட்டாமை
ரேஞ்சுக்கு இருக்கும்.இவன் அப்பா தேனி மாவட்டத்தில் பெரிய புள்ளி.முத்துராமன் என்ற
பெயர் மூலமே அவன் இனம் விளங்கி விடும்.தென்னந்தோப்பு பல ஏக்கராவில் நஞ்சை
உள்ளூரில் கவுன்சிலர் பதவி என்று அவன் அப்பா கொஞ்சம் தடபுடலான ஆசாமி.முத்துராமன்
அவன் தம்பி சந்திர போஸ் அவன் அக்கா பூங்கோதை மற்றும் அவன் தாய் பவுனம்மாள் . இதில்
அக்கா பூங்கோதையை ஊரில் இன்னொரு பெரிய குடும்பத்தில் ஒரு சிங்கபூர் மாப்பிளைக்கு
கட்டி கொடுத்து விட்டனர்.கடந்த ஏழெட்டு மாதங்களாக இருபது ஜாதகங்களுக்கு மேல்
பொருத்தம் பார்க்கப் பட்டாலும் ஒன்று கூட அமையாததுதான் முத்துராமனின் கவலை.
நானும் அவனும் ஆட்டையாம்பட்டி ஜோசியர் வீட்டு வாசல் முன்பு வண்டியை
நிறுத்தினோம்.நிழல் மரங்களின் ஊடே பயணித்த அந்த முப்பது நிமிட கார் பயணமும் ஒரூ
பெரிய ஏரிக்கரையின் அருகில் அமைந்திருந்த அவருடைய குடிலும்தான் எனக்கு மிகவும்
பிடித்த விஷயங்கள். மற்றபடி இவரும் மற்ற ஆருடர்களைப் போலவேநாம் சொல்லும்
தகவல்களைக் கொண்டுதான் சூ மந்திரகாளி வித்தை காட்டினார்.
“ சந்திரன் உன் ராசிக்கு
ஏழாவது இடத்தில் இருப்பதால் நீ மற்றவர்களுக்கு உழைக்கும் நிலை “ என அவர் கூறஆரம்பித்ததும்
அவன் தனது டவுசர் போட்ட பருவத்திலிருந்து நேற்று வரை நடந்தஎல்லாவற்றையும் ஒன்று
விடாமல் கொட்ட ஆரம்பித்தான். நான் சோதிடருக்குத் தெரியாமல் முத்துராமன் தொடையை
சுரண்டியும் பயன் இல்லை. இந்த விளையாட்டு கொஞ்ச நேரம் போய்க் கொண்டிருந்தது.
“ கடைசியா நீ என்ன கேட்க விரும்புறியோ அதை கேளு” என்றார் முடிவாக.
“ எனக்கு இன்னும் கலியாணம்
அமையவே மாட்டேங்குது எப்ப அமையும்? “ என்றான்.
“ வியாழன் இப்ப பலமா இல்லை. இன்னும் ரெண்டு மாசமாகும். உன் மூத்த
சகோதரி பார்த்து வைக்கும் பொண்ணுதான் உனக்கு துனைவியா வருவா. இப்ப எழுதி வச்சுக்க.
“ என்றார்.
சேலம் திரும்பொழுது முத்துராமன் சிரித்தான்.
காரணம் கேட்டேன்.
“ எங்கக்கா பூங்கோதை போன மாசம் அவ கூட படிச்ச சிநேகிதியோட தங்கையை
எனக்கு ப்ரபோஸ் பண்ணிச்சு. அந்த பொண்ணு குடும்பமும் வசதியான குடும்பம்தான்.ஜாதகம்
பிரமாதமா பொருந்தியிருக்குன்னு சொல்ல முடியாட்டிலும் ஓரவுளு பொருந்தி
இருந்துச்சுன்னு பொண்ணு பாக்க கிளம்புறோம். அந்த பொண்ணுக்கு ஏற்கனவே நிச்சயம்
ஆயிடுச்சுன்னு அவங்க வீட்லருந்து ஆள் வந்து சொன்னாங்க. அதான் சிரிச்சேன்.”
அதன் பிறகு சேலம் நகரிலேயே ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்தான்.
பெண்களிடம் வழிகிற மாதிரிசிரித்து சிரித்து பேசினாலும் இந்த மாதிரி முக்கிய
முடிவுகளில் அவன் ஜாக்கிரதையாகவே செயல் பட்டான்.கேட்டால் காதல் திருமணங்களில்
வரதட்சினை,சீர், நகை, வாகன வசதி இவற்றை எதிர் பார்க்க முடியாது என்று கண்
சிமிட்டினான்.
ஒருவாரமாக அவன் ஆளை கண்ணிலேயே காணவில்லை. சுருளி நீர்வீழ்ச்சி போன்ற பேச்சும்
வெள்ளந்தியான சிரிப்பும் பார்க்காமல் என்னவோ செய்தது. சக ஊழியர்களிடம் அவனைப்
பற்றி விசாரித்தேன்.
“முத்துராமனின் சகோதரி கணவனை மதுரையில் மருத்துவமனை ஒன்றில் தீவிர
சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறார்கள்” என்ற தகவல் கிடைத்தது. ஏன் ? என்ற என்
கேள்விக்கு, “ மதுரை சாலையில் ஒரு லாரி ஏற்றி அவன் சகோதரி கணவன்
விபத்துக்குள்ளாகப் பட்டிருக்கிறான்” என்ற பதில் கிடைத்தது. ஒன்றும் புரியவில்லை.
முத்துராமனை கை பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பணி நிர்பந்தம்
காரணமாக பாலிசிக்கு ஆள் பிடிக்க பேசும்பொழுது வருமே ஒரு ஆள் மயக்கும் குரல் அது
இல்லாத முத்துராமனின் உண்மையான குரலைக் கேட்க முடிந்தது. பூங்கோதையின் கணவர்
சிங்கப்பூரில் இருப்பதாகவும் ஓரிரு மாதங்களில் இங்கேயே வந்து குடும்ப சொத்துக்களை
நிர்வாகிக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருப்பான்.அப்படி திரும்பி வந்த அக்கா
புருஷனை பங்காளிப் பகைவர்கள் சொத்து காரணமாக மதுரை சாலையில் லாரி ஏற்றி
விபத்துக்குள்ளாக்கியதாக சொன்னான். பின் மண்டையில் அடி பலமாம். பத்து விழுக்காடு
நம்பிக்கையைத்தான் மருத்துவர் அளித்திருப்பதாக சொல்லி அழுதான்.
இடையில்என் அலுவலகத்தில் பத்து நாள் பயிற்சி என்று என்னை தலைமை
அலுவலகம் அனுப்பி விட்டார்கள்.எனவே முத்துராமனை கை பேசியில் மட்டுமே தொடர்பு கொள்ள
முடிந்தது.
எவ்வளவு முயற்சி எடுத்தும் அவன் சகோதரி கணவரை காப்பாற்ற முடியாமல்
போனதை சொல்லி அவன் அழுதபொழுது அந்த எழுநூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த என்னால்
வாய் வார்த்தையில் மட்டுமே ஆறுதல் சொல்ல முடிந்தது.
“ அக்கா பாத்து வைக்கிற பெண்ணை கட்டிப்பேன்னு அந்த ஜோசியரு நம்மளை
எப்படி ஏச்சுப்புட்டாரு பாத்தியளா சார்?” என்று அவ்வளவு துக்கத்திற்கு நடுவிலும்
கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்வின் குரூரம் மூர்க்கமாக தாக்கும்பொழுது
ஆருடம், கடவுள்பால் ஈர்ப்பு போன்றவை செயல் இழந்து விடுகின்றன.
பயிற்சி முடிந்து ஊர் திரும்பிய முதல் ஞாயிற்றுக் கிழமை முத்துராமனின்
சொந்த ஊரான தேனிக்குக் கிளம்பிப் போனேன். அவன் ஊர் தேனீ இல்லை. தேனியிலிருந்து
போடிநாயக்கனூர் போகும் வழியில் சின்னமன்னூர் அருகில் ஒரு சிறிய கிராமம்.வைகையின் வாய்க்காலினால்
பசுமை செழிக்கும் வயல்களில் கொக்குகள் சர்வ சாதராணமாக பறந்து ஒரு பூலோக சொர்கத்தை
உண்டு பண்ணும் கிராமம்.
ஆனால் இதை எல்லாம் ரசிக்க விடாமல் செய்தது அவன் பெற்றோரின் கதறல்.
‘ ஒன் சிநேகிதக் காரவுகளைஎல்லாம் விருந்துக்கு கூப்பிடனும்னு
இருந்தனே.இப்படி எழவுக்கு வரும்படியா ஆயி போச்சே.”என்ற அவன் அம்மா பவுனம்மாவின்
கதறலும்,
“ மதுர ஜீனாபாய் அசுபத்திரியிலதான் கருப்பு ரோசா பூவாட்டும் பொறந்த
புள்ளைய சீராட்டி வளத்து என்ன பிரயோஜனம்? இப்படி முண்டச்சியா பார்கிறதுக்கா? “
என்ற அவன் தந்தையின் பெருமூச்சும்,
“ சொத்துத் தகராறு
சாதிக் கலவரமுன்னு நம்மூரு ஆம்பிளைங்க பலியாவது சாஸ்தியாச்சுன்னாபொட்ட புள்ளங்க
முண்டச்சியாவதும் சாஸ்தியாயிகிட்டே போகும் அப்பு“என்று
பிலாக்கணம் பாடிய பெண் ஒருத்தியின் கூப்பாடும்,
இந்த வாழ் நாள் முழுவதும் மறக்கக் கூடிய சமாச்சாரங்களாக தெரியவில்லை.
பூங்கோதையை அவர்கள் இல்லத்தின் ஒரு மூலையில் பார்த்தேன்.தனது மூன்று
வயது மகனுக்கு உடல் துடைத்து உடுப்பு மாட்டிக் கொண்டிருந்தாள்.முகத்தில் சுகம்
துக்கம் மலர்ச்சி கோபம் பொறாமை ஆத்திரம் விசனம் என எவ்வித உணர்ச்சியும் இன்றி
இருந்தாள். என்னை முத்துராமன் அறிமுகப் படுத்தியபோது கை எடுத்து கும்பிட்டாள்அந்த
வணக்கத்தை வாங்கிக் கொள்ளும் வலு என்னிடம் இல்லை.
இரண்டு வாரத்தில்மீண்டும் அலுவலகம் வந்த முத்துராமன்ஆண்டிறுதி இலக்க
எண்ணிக்கைக்காக ஒரு மோப்ப நாயை விட வேகமாக அலைந்து கொண்டிருந்தான். வாழ வேண்டிய
நிர்பந்தத்திற்காக முள்ளிவாய்க்களிலும் நாசி முகாம்களிளும்தான் மனித உயிர்கள் கிழி
பட வேண்டும் என்பதில்லை. இது போன்ற கட்டமைப்புடன் கூடிய கார்பரேட் நிர்வாக முள்
வேலிகளில் கூட கிழிபட முடியும் என்பதற்கு முத்துராமன் போன்றோர் சாட்சிகள்.
நானும் விடாமல் அவன் சகோதரியை பற்றி கேட்ட வண்ணம் இருந்தேன்.
“ அக்காவுக்கு மயன் ( மகன் என்பத மரூஉ) இருப்பதால அப்பன் பாட்டன்
முப்பாட்டன் சொத்து பூரா அவனுக்குத்தான்.பைசல் பன்றாங்களானு பார்ப்போம்.இல்லையின்ன
அவுக வீட்டிலயே இருக்கட்டும்னு அக்காவை விட்டிற வேண்டியதுதான். சொத்துன்னா எங்க
சொத்து ஒங்க சொத்து கிடையாது.ரெண்டு ரைஸ் மில்லு , நாலு ரூட்டு வண்டி , நாலு
டிப்பர் லாரி , ஒரு பெட்ரோல் பங்க் இது போதாதுன்னு நெல்லு விளையிற பல ஏக்கர் பூமி.
தென்னந்தோப்பு எப்படி விடுறது இம்புட்டையும்?” என்றான்.
யார் எதற்கு பலி என்பது புரியவில்லை எனக்கு.
“ உன் திருமணம்? “ என்று கவலையுடன் கேட்டேன்.
“ அது கிடக்கு கழுத. ஏற்கனவே இருபத்தியெட்டு வயசாச்சு. இன்னும் இரண்டு
வருஷம் போனாத்தான் என்ன?”
சந்தையை
அடிப்படையாக கொண்ட நிறுவனத்தில் வேலை பார்க்கும் எவரும் தொடர்ந்து அதே
நிறுவனத்தில் பணி புரிய மாட்டார்கள் என்பதற்கு முத்துராமன் ஒரு சாட்சி..
முத்துராமன் என்னதான் தான் மாடாக உழைத்தாலும் நன்றி கெட்ட
நிறுவனம் கேட்ட கூலியை தர முன்வரவில்லை
என்பதற்காக வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியிடத்தை ஈரோட்டிற்கு மாற்றிக்
கொண்டு விட்டான்.
“ உன் திருமணம்? “ என்றேன்.
“ ஆகும்பொழுது “ என்றான்.
“ ஆட்டையாம்பட்டி ஜோதிடரை வேண்டுமானால் இன்னொரு முறை போய்ப்
பார்க்கலாமா?” என்றேன்.
சிரித்தான்.
அவன் தடம் மறைந்து போய் விடும் என்ற நேரத்தில் ஒருநாள் கையில் ஒரு
திருமணப்பத்திரிகையுடன் என் முன்னால் அதே வெள்ளந்தி புன்னகையுடன் வந்து நின்றான்.
“ தை மாசம் ஏழாம் நாள் எனக்கு தேனியில வச்சு கலியாணம் அவசியம் வந்து
ஆசீர்வாதம் பண்ணுங்க சார்” என்றான்.
“ உங்க அக்கா புருஷன் செத்து போய் ரெண்டு மாசம் கூட ஆகலியே முத்து?
என்றேன்.
“ எல்லாம் நேர்ல பேசிக்கலாம் கலியாணத்துக்கு வாங்க சார்” என்றான்.
மீண்டும் எனக்கு மதுரை பயணம்.
போகும் வழியில் அந்த ஆருடம் சொன்னவர் முத்துராமனிடம் கூறியது நினைவில்
எழுந்தது.வியாழன் பலமில்லாமல் இருப்பதால் இரண்டு மூன்று மாசம் ஆகும் என்பது
துல்லியமாக பலிக்கிறதே.
முத்துராமனின் சகோதரி பூங்கோதைதான் சிரித்த முகத்துடன் அனைவரையும்
வரவேற்பதும் காலியான வேலைகளில் ஈடுபடுவதுமாக இருந்தாள்.,மணமகள் நல்ல சிவப்பு நிறம்
இல்லை என்றாலும் முத்துராமன் அளவிற்கு கருப்பு நிறமில்லை.மிக களையாக இருந்தாள்.
திரும்பி வரப்பெற்றதை போன்றதொரு ஒளி கீற்று அவள் கண்களில் மின்னி மறைந்து
கொண்டிருந்தது.
“ இவுகதான் பிரபாகர் சார்” என என்னை தன் மனைவிக்கு முத்துராமன்
அறிமுகப் படுத்தினான்.
“ எப்படி என் செலக்ஷன்? “ என்று கண் சிமிட்டியபடி பூங்கோதை வந்து நின்றபொழுது
எனக்கு ஆச்சரியமானது.
“ ஏற்கனவே ஒரு பெண்ணை உன் சிஸ்டர் ப்ரபோஸ் பண்ணி அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கலியாணம்
ஆயிடுச்சுன்னு சொன்னியே... “ என்றேன்.
“ அவதான் இந்த பரிமளா” என்று சிரித்தபடி பூங்கோதை ஓடி விட்டாள்
சாப்பிட்ட பிறகு கை கழுவி விட்டு வரும் வேளையில் .ஒரு செவ்வக தூணின்
பின்னால் எனக்கும் முத்துராமனுக்கும் பேச
சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.
“ அந்த பொண்ணுக்குத்தான் வேற இடத்தில கலியாணம் ஆயிடுச்சுன்னு
சொன்னியே...? “ என்றேன்.
“ நெசந்தான்.இந்த பரிமளமும் எங்க அக்கா மாதிரி பெரிய இடத்தில் வாக்கப்
பட்டு போனவதான். அவ புருசனும் பெரிய பண்ணை வீட்டு பிள்ளைதான். பங்களா மாதிரி
வீடுஹோண்டா சிட்டி காரு. பய சுண்டி விட்டா ரெத்தம் தெரிக்கும்பாங்களே அப்படி ஒரு
நிறம்.ஆனா என்ன பய கொஞ்சம் முற்போக்குவாதி.
ஜாதி கூடாதுன்னு பிடிவாதமா நிப்பான். இது ஊர்க்காரவுகளுக்கு புடிக்கல. யாரை
அடிச்சு துரத்தனமுன்னு வெறியோட ஊர்க்கார பயலுக திரிஞ்சானுகளோ அவுகளுக்கு இவன் தன்
பண்ணை வீட்டில் அடைக்கலம் கொடுத்துட்டான். சொந்த ஜாதின்னு பாக்காம போட்டு
தள்ளிட்டானுங்க. என்னா சொத்து சுகம் இருந்து என்ன? புருஷன் போயாச்சுன்னா முண்டச்சியா
நிக்கிறதுதான் பொம்பளைங்க விதின்னு ஆயிருச்சு.நான் ஊருக்குப் போயிருந்தப்ப அக்கா
கேட்டுச்சு.பரிமளம் சின்னப் பொண்ணுடா.இப்படி தாலி அறுத்துட்டு நிக்கிறதை பார்க்க
அள்ளிப் பிடுங்குது.அவள கட்டிக்குவியானு கேட்டிச்சு. அப்ப அக்கா கண்ணில
எவ்வித பொறாமையும் அற்ற ஒருஎதிர்பார்ப்பு
மின்னி மறைந்ததை பார்த்தேன் சார். நான் அழுதுகிட்டே சரிக்கான்னு சம்மதிச்சுட்டேன்.”
என்ற முத்துராமனின் தோள்களை தொட்டேன். அவன் உடைந்து அழுது விட்டான்.
“ ஒரு விதவைக்குத்தானே சார் இன்னொரு விதவையோட வலியும் வேதனையும் தெரியும் .? ” என்றான் . அவன் கண்கள் இன்னமும் உலராமல் இருந்தது..
“ அட! நம்ம ஆட்டையாம்பட்டி ஜோசியர் சொன்னது பலிச்சிருச்சே. அக்கா
பார்த்து வச்ச பெண்ணைத்தான் கட்டிக்கிட்டிருக்க “ என்றேன் பேச்சை மாற்றும் முகமாக.
கண்களை துடைத்துக் கொண்ட முத்துராமன் தனது மாறாத வெள்ளந்தி
சிரிப்புடன் “ அட! ஆமால்ல? “ என்றபொழுது அவன் ஆரூடத்தைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டது தெரிந்தது.