ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 6 January 2014

போட்டிச் சிறுகதை 70

முள்வேலி
விஜி அந்த நாளிதழிலிருந்த ஒரு பெட்டிச் செய்தியைப் படித்து அதிலிருந்தகண்ணீர் அஞ்சலிவிளம்பரமே நனைந்து போகுமளவுக்குத் தாரை தாரையாகக் கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தாள். அறைக்குள் அம்மா நுழையும் ஓசை கேட்கவே துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்துவிட்டு எதிர்ப்பையும் எரிச்சலையும் காட்டும் ஒருவித முகபாவத்தோடு உர்ரென்று இருந்தாள். மனது பலவீனமாகி அழுவது அம்மாவுக்குத் தெரிந்துவிட்டால் தன் சுயமதிப்பு என்னாவது?

இப்படியே உக்காந்து உக்காந்து ஊர ஏமாத்திட்டிருஎன்று அறையைப் பெருக்கியவாறே திட்டிக்கொண்டிருந்த விஜியின் அம்மா திடுமென அவளை நோக்கி விளக்குமாற்றோடு வந்தாள்.

நீயெல்லாம் வீட்டுல ஒருவேளையும் செய்யாம எதுக்கு இன்னும் உயிரோட இருக்க? பூமிக்கு பாரத்துக்கு?”

விஜி அழுதது கண்ணீர் அஞ்சலி செய்திக்காகவோ அந்நாழிதளின் வேறெந்த செய்திக்காகவோ அல்ல. உண்மையான காரணம், அம்மா அவளைத் திட்டுகிறாள். ஏன் திட்டுகிறாள்? விஜிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இதுவரை நூறு வரன்களுக்கும் மேல் பார்த்தாயிற்று. பையன் சரியிருந்தால் ஜாதகம் சரியில்லை. ஜாதகம் பொருந்திவந்தால் பையனின் குடும்பத்தைப் பிடிக்கவில்லை. சிலருக்கு விஜியைப் பிடிக்கவில்லை. செய்திகேட்டு கவலைப்படாதேஎன்று குறுந்தகவல் அனுப்பித் தேற்றிய தோழியிடம் ஒருமுறை விஜி கேட்டாள்,

இட்ஸ் ஓகே. ஆனா என்னை ஏன் எங்கம்மாவுக்கு பிடிக்காம போச்சு?”

நாற்பதிலே நாய்குணம்என்னும் சொலவடையை உண்மையென நிரூபித்துக் கொண்டிருப்பவள், நாற்பத்தைந்து வயதான விஜியின் தாய் ரஞ்சிதம். பதினாறு வயதில் திருமணமாகி வரிசையாக நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்த அவளுக்குப் பெற்றோரோ உற்றார் உறவினரோ யாரும் இப்போது இல்லை. தந்தையும் காலமாகிவிட, அவளுக்குத் திருமணம் செய்துவைத்தது, பேறுகாலம் பார்த்தது என எல்லாமே விஜியின் பாட்டிதான். ரஞ்சிதத்துக்குக் கடைசிப் பிள்ளை பிறந்த கொஞ்ச காலத்திலேயே அவளும் காலமாகிவிட, கணவனே கதியாகிப் போனாள். அவருடனும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருந்த இந்த இருபத்தெட்டு வருடங்களில் ஒரே ஒருமுறை ரஞ்சிதத்தை அடிப்பதற்காக மனிதர் கையை ஓங்கியிருக்கிறார். அவ்வளவுதான்.

என்ன கேக்க நாதியில்லனு அடிக்க வாரீங்களா?” என்று மூக்கை உறிஞ்சத் தொடங்குபவள்தான். அடுத்த ஒரு வாரத்துக்கு வீட்டில் யாருக்கும் நல்ல சாப்பாடு இருக்காது. யாரோடும் பேசாமல் அங்கேயிங்கே படுத்து அழுதுகொண்டிருப்பாள்.

ரஞ்சிதத்துக்கு நான்கில் மூன்று ஆண்பிள்ளைகள். விஜியையும் சேர்த்து இன்னும் யாருக்கும் கல்யாணமாகவில்லை. யாரும் இன்னும் வேலை வெட்டிக்கும் போயிருக்கவில்லை. இப்போதைக்கு அவளுக்கிருக்கும் ஒரே பிரச்சனையும் அதுதான். கணவனின் சொற்ப சம்பளத்தில் குடித்தனம் நடத்தியாக வேண்டும். இந்தக் கவலைகளை மறப்பதற்காகவோ என்னவோ ரஞ்சிதத்தின் வாய் எப்போதும் மென்றுகொண்டேயிருக்கும். அதற்காக அவல் கிடைக்கவில்லையென்றால் அவளாகக் கொஞ்சம் உருவாக்கிக் கொள்வாள்.

விஜி தன் நிலையை எண்ணித் தானே நொந்து கொண்டாள். ‘ஒருவேள அம்மாக்கு ஹிஸ்டீரியா நோய் இருக்குமோ? ஐயோ, இப்படி நினைக்கிறது மட்டும் அவங்களுக்குத் தெரிஞ்சா இங்கவொரு சூறாவளியே உருவாயிருமேஎன்று பயந்த மாத்திரத்திலேயே ஒரு சூறாவளிக்கான எல்லா அறிகுறிகளும் அங்கே தென்பட்டதைப் போலிருக்கவே அழுவதை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்டாள். சூறாவளி, பக்கத்து அறையில்.

ஒரு ஆம்பளப் பையனுக்கு அம்பது பெர்சண்டேஜ் மார்க் வாங்க முடியாதா? உனக்குப் படிக்கதுக்கு பணம் கட்டி அழுததுக்கு அவளுக்கு நாலு நகையச் சேத்திருந்தா இந்நேரம் எவன்கிட்டயாது புடிச்சிக் குடுத்திருக்கலாம். எல்லாம் என் தலயெழுத்துஎன்று சொல்லிக்கொண்டே மறுபடியும் விஜியிடம் வந்தாள். ‘அம்மா எல்லார்கிட்டயுமே இப்படித்தானாஎன்று நினைத்துக்கொண்டாள் விஜி.

நீ எதுக்கு இப்பொம் மொதலக் கண்ணீர் வடிச்சிட்டிருக்க? ஒரு வேலையும் ஒனக்குச் செய்யத் தெரீலன்னா நாளைக்குப் போற இடத்துல என்னயல்லா கேப்பா? பிள்ள வளத்திருக்குற அளகப் பாருன்னு

ஆமா, நான் உங்ககிட்ட தான் வந்து நிக்கப்போறேன். உதவி பண்ணுங்கனு

விஜி வெகுநேரமாக அழுதுகொண்டிருந்தாள். இவ்வளவு நடந்த பின்னும் அம்மாவோடு ராசியாகிவிடலாமா? கூடாது.. செத்துப்போன அம்மாச்சி அவளின் நினைவுக்கு வந்தாள். அம்மாவுக்கு அம்மா தான் என்றாலும் அவளைவிட விஜியிடத்துப் பாசமாக வேறு யாராலும் நடந்துகொள்ள முடியாது.

என்ன தனியா தவிக்கவிட்டுட்டு பொயிட்டியே ஆச்சிஎன்று நினைத்தவுடன் அவள் கண்கள் அருவியாகப் பொழிந்தன. துடைத்துக் கொண்டே யோசித்தாள். ‘இப்போ இங்கே நடக்கிறதயெல்லாம் ஆச்சி வானத்திலிருந்து பார்த்துட்டு இருப்பாளா? இல்ல, வேற எங்கயாவது மறுபிறவி எடுத்திருப்பாளா?’

விஜிக்கு ஆறாம் வகுப்பில் பாடம் எடுத்த ரெஜினா மிஸ்ஸின் நினைவு வந்தது. அந்த வயதில் அவளிடம் வந்துஇந்த உலகத்துலயே உனக்கு ரொம்பப் பிடிச்சது யாரு?” என்று யார் கேட்டிருந்தாலும்ரெஜினா மிஸ்என்றே பதில் வந்திருக்கும். உண்மையில் ரெஜினா மிஸ் மிகவும் கண்டிப்பானவள். ஒருநாள் அறிவியல் வகுப்பு போய்க்கொண்டிருந்தது. அப்போது சோதனை முயற்சி ஒன்றுக்காக ஏதாவது பேனாவின் மூடியொன்று தேவைப்பட்டது. “எனிவன் கிவ் மீ பென் லிட் ப்ளீஸ்என்று ரெஜினா மிஸ் கேட்டவுடன் நான்கைந்து பேர் மூடியைக் கழட்டி நீட்டினாலும் விதி என்னவோ விஜியிடமிருந்தே வாங்கிக்கொள்ள வைத்தது. சோதனையை முடித்து மூடியைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

பேனா மூடிக்குள் தண்ணீர் போயிருக்கவே, அதை நன்றாக உதறியபின் வாயருகேவைத்து வேகமாக ஊதிவிட்டாள் விஜி. “ஃபீஈஈஈக்என்று ஒரு விசில் சத்தம் வகுப்பையே திரும்பிப் பார்க்கவைத்தது. முக்கியமாக அவளை எப்போதும் கேலிசெய்து சிரிக்கும் ராகவனும் திரும்பிப் பார்த்தான். ‘அவ்ளோதான், இனிமே ரெஜினா மிஸ் நமக்கு சேர்(chair) பனிஷ்மெண்ட் தான் தரப்போறாங்கஎன்று பயத்தில் உறைந்துபோயிருந்த விஜியைப் பார்த்து ரெஜினா மிஸ்ஸோ அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்புதான் எவ்வளவு அழகு! அன்றிலிருந்து ரெஜினா மிஸ் அவளுக்கொரு தேவதையாகத் தெரிய ஆரம்பித்தாள். அதற்குப்பின் வந்த சில நாட்களில் ரெஜினா மிஸ்ஸையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அதைக் கவனித்தாள் விஜி. ‘மிஸ் ஏன் அடிக்கடி சிரிச்சிட்டே இருக்காங்க?’ பதில் சில நாட்களில் அவளுக்குக் கிடைத்தது.

ரெஜினா மிஸ்க்கு கல்யாணமாம். இனிமே நம்ம ஸ்கூலுக்கே வரமாட்டாங்களாம். நமக்குப் புதுமிஸ் வரப்போறாங்கஎன்று ப்ரீத்தி சொன்னாள். ப்ரீத்தியின் தந்தைதான் பள்ளியின் தாளாளர். அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். விஜிக்கு அழுகையழுகையாக வந்தது.

அன்று பள்ளியில் ரெஜினா மிஸ்ஸின் கடைசி நாள். மாணவர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போதுதான் கண்களில் நீர்கட்டி நின்றுகொண்டிருக்கும் விஜியை அவள் பார்க்க நேர்ந்தது. உடனே ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். என்னவோ சமாதானம் சொன்னாள். விஜிக்கு எதுவும் கேட்கவில்லை. அன்றோடு ரெஜினா மிஸ் என்னும் அந்த க்கை முளைத்த தேவதை விஜியின் உலகத்துக்கு அப்பாலிருந்த ஏதோவொரு வானவெளிக்குப் பறந்துசென்று மறைந்தது. அந்நொடியிலிருந்து அம்மா தன்னை அழவைக்கும் ஒவ்வொரு முறையும் தனது பிரியமான ரெஜினா மிஸ்ஸிடம் மனதிற்குள்ளேயே சொல்லி அழத்தொடங்கினாள். அவள் எங்கேயோ அந்த அழகான சிரிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்.

இப்போது விஜிக்கு மதுவின் ஞாபகம் வந்தது. பத்தாம் வகுப்பில்தான் அவள் புதிதாக அப்பள்ளியில் சேர்ந்திருந்தாள். பார்த்தபோதெல்லாம் லேசாக நடிகை மாளவிகா மாதிரி சிரித்தாள். பேசுவது சிரிப்பது எல்லாமே அவ்வளவு அமைதி, அழகு. விஜியின் பக்கத்தில்தான் உட்காரவைக்கப்பட்டாள். ஒருநாள் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வண்ண உடை உடுத்திவருமாறு சொல்லப்பட்டது. அன்று மது, விஜியின் வெள்ளைநிற ஜிகினா துப்பட்டாவைத் தன் மடியில் போட்டுத் தடவியவாறே ரசித்துக் கொண்டிருந்தாள். மதிய உணவுக்குப்பின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தற்செயலாக ஒரே வண்ணக் கலவையிலான உடைகளிலிருந்த விஜியும் மதுவும் சில தோழிகளோடு அமர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து டியூஷன் முடித்து சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது விஜியை யாரோ பெயர்சொல்லி அழைப்பதுபோல் கேட்க, திரும்பிப் பார்த்தால் மது அவள் தந்தையின் பின்னால் பைக்கில் இருந்தபடி எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தாள். ஒருகணம் மிதிவண்டியை நிறுத்தியவள் மதுவுக்குக் கையசைத்துடாடாசொல்லிக்கொண்டேயிருக்க மது அவள் தந்தையோடு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையிலிருந்து மறைந்தாள். அடுத்தநாள் தான் அந்தச் செய்தி வந்தது. முந்தைய நாள் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மது இறந்துபோனாள் என! சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கழுவப்பட்டுக் கையில் வந்து சேர்ந்தபோது மது உயிரோடில்லை. விஜிக்கு மட்டும் ஏன் மதுடாடாசொல்லியிருக்க வேண்டும்?

அம்மா வைதது மறுபடியும் நினைவுக்கு வந்தது. மனதைக் கொல்லும் ரணமான தருணங்களில் மரணித்தவர்களையோ நிரந்தரமாகப் பிரிந்து சென்றவர்களையோ நினைத்து அழக் கற்றுத்தந்தவர் யார்?  

அடுத்து வந்த மூன்று தினங்களில் விஜியும் ரஞ்சிதமும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. விஜி சரியாகச் சாப்பிடவில்லை. யாருடைய சமாதான முயற்சியும் எடுபடவில்லை.

அம்மா புலம்பிப் புலம்பி ஓய்ந்து போயிருந்தாள். விஜிக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அம்மா நல்லவள்தான் என்ற எண்ணம் திடீரென வந்தது.  ‘இதுவரை எத்தன பேருக்குத் தானம் செஞ்சிருப்பாங்க? எத்தன பேர் கல்யாணத்துக்கு வரன் பாத்துக் கொடுத்திருப்பாங்க? சின்ன பிள்ளைங்ககிட்ட குழந்தைத்தனமாப் பேசி வெளாடுததும், அலமாரில அடுக்கி வெச்சிருக்க பொம்மைங்கட்ட பேசுததும், பூனைக்குட்டி, நாய்க்குட்டி, ஆடுமாடுனு அனிமல்ஸ்கிட்ட கூட அவளால சகஜமாப் பேசமுடியுதே? அதுக்கெல்லாங்கூட அம்மா பேசுதது புரியுதோ? வீட் ஒரு பொருள் கூட இரைஞ்சு கெடக்காது. அவ்ளோ சுத்தம். பஸ்ல எத்தன புள்ளத்தாச்சிப் பொண்ணுங்களுக்கு ந்திரிச்சி டம் ந்திருக்காங்க? எத்தன குழந்தைகள மடியில வாங்கி வெச்சிருப்பாங்க? எல்லாரும் இதையெல்லாம் செய்வாங்கதான்னாலும் யாரும் கேட்காம அவங்களாச் செய்வாங்க அம்மா. ஒரு நாள் கோயில் போகும்போது மாலதி கூட சொன்னாளே, “அக்கா, உங்க அப்பா என்ன கொஞ்சம் ஸ்ட்ரிக்டோ? ஆனா, உங்க அம்மா அமுல்பேபி மாதிரி. எனக்கு ரொம்பப் பிடிக்கும்

அம்மா செஞ்ச ஒரே தப்பு, படிக்கிறேங்கறதுக்காக என்ன ஒரு வீட்டுவேல கூட செய்யவிடாதது. ஐந்திலே வளையாதது ஐம்பதிலே எப்படி வளையும்? வெட்கத்தவிட்டு ஒன் சொல்லணும்னா என் இன்னர்ஸகூட அம்மாதான துவச்சித் தாராங்க. பாத்ரூமுக்குள்ள நான் துவைக்கிற சத்தம் கேட்டா, “அத தூரவச்சிட்டு நீ நல்லா குளி பிளே. உனக்குத் துவைக்கத் தெரியாதுனு மெதுவா கதவுகிட்டவந்து சொல்லிட்டுப் போவாங்க. படிச்ச படிப்புக்கு இன்னும் வேலையும் கிடைக்காம கல்யாணமு ஆகாம பெருசா நகையும் சேர்த்துவைக் முடியாம ஒரு பொண்ண வீட்டுல வச்சிருக்கிறவங்களோட மனசு எப்படியிருக்கும்?’ இப்படியே கழிவிரக்கத்தோடு யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவளின் அருகே நிழலாடியது.

ரஞ்சிதம், விஜிக்குப் பிடித்த மஞ்சள்நிறப் பீங்கான் கோப்பையில் தேனீர் கொண்டுவந்திருந்தாள். பொதுவாகத் தம்ளரில் காபி தரும் ஒவ்வொரு நேரமும் விஜி அலுத்துக்கொண்டது உண்டு.

எம்மா, நான் இதுலலாங் காபி குடிக்க மாட்டேன். நார்த்லல்லாம் ல்லாருமே கப்-அண்ட்-சாசர்ல தான் டீ குடிக்காங்க, தெரியுமா? நீங்க இன்னும் டம்ளர்லயே டீ தாரீங்க

ஆனால் இம்முறையோ, ரஞ்சிதம் அதை நினைவில் வைத்துக்கொண்டு பீங்கான் கோப்பையில் தேனீர் கொண்டுவந்திருக்கிறாள். உடனே உள்ளே சென்றவள் மறுபடியும் ஒரு தட்டில் இரண்டு முறுக்குகளை எடுத்துக்கொண்டு வந்தாள். அதைப் பரபரப்பாக நீட்டியவளிடமிருந்து சமாதான உடன்படிக்கையாக வாங்கிக்கொண்டாள் விஜி. ஒருவழியாகத் தேனீரும் முறுக்கும் இருவருக்குள்ளுமிருந்த பிணக்கை முடித்து வைத்தது.

வீடு நிசப்தமாக இருந்தது. அவ்வளவு வெறுமையை விஜி இதுவரை உணர்ந்திருக்கவில்லை. வாழ்க்கை முழுதும் ஓர் இரைச்சலான அருவியின் மடியிலமர்ந்து சொட்டச் சொட்ட நனைந்திருந்துவிட்டு, திடீரென ஒரு நடுக்கடலின் ஆழத்துக்குள் மூழ்கியதுபோல் இருந்தது. மருண்டோடும் மான்கன்று ஒன்றைப் பிடித்துக் கர்ஜிக்கும் ஒரு சிங்கத்தின் குகைக்குள் அடைத்தால் எப்படியிருக்கும்? ஓடி விளையாடும் நான்கு வயது குழந்தை ஒன்றைத் தூக்கிச்சென்று பள்ளிக்கூடத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைத்தால் அது எப்படி உணரும்? விஜிக்கும் அப்படித்தான் இருந்தது. ஏனென்றால் அவளுக்கு இப்போது கல்யாணமாகிவிட்டது. மாமியார், தன் அம்மாவைப் போலில்லாமல் மிகவே அமைதியாக இருந்தார். அதுவே அவளுக்குப் பயமாகவும் இருந்தது. எதையும் விஜியால் கணிக்கமுடியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் அம்மாவின் நினைப்பு அடிக்கடி வந்துபோவதைத் தடுக்க முயன்று கொண்டேயிருந்தாள் விஜி. ஆனால் மஹாபலியின் முன் விஸ்வரூபமெடுத்த வாமனனைப் போல ரஞ்சிதத்தின் நினைவுகள் அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த. அம்மாவை நினைத்தாலே எரிச்சலாக இருந்த, அம்மாவிடமிருந்து தப்பித்துச் செல்வதே தன் வாழ்க்கையின் விடுதலையென்று நினைத்திருந்த முந்தைய நாட்களைப் போலில்லாமல் தன் தாயின் மடிக்காக ஏங்கும் அன்று பிறந்த குழந்தையாக மாறியிருந்தாள் அவள். முள்ளாக இருந்தாள் என்பது உண்மைதான் என்றாலும் இந்த ரோஜாவை இதுவரைக் காத்துக்கொண்டிருந்தவள் அவள்தான் என்பதும் விஜிக்கு அப்போது விளங்கியது. கல்யாணம் முடிந்து தாய்வீட்டிலிருந்து பாத்திரப் பண்டங்களுடன் மாமியார் வீட்டுக்குக் கிளம்பியபோது பொலபொலவென்று கண்ணீர் சிந்திய அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது.

விஜி!!!!!!”

என்ன அத்தே..?”

என்னாச்சு? ரொம்ப நேரமா உன்னைக் கூப்பிட்டுட்டு இருந்தேனே? உனக்குக் கேட்கலையா?”

நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் அத்ததலைநிமிராமல் பேசியவளின் அருகே வந்துநின்ற மாமியாரிடம் விஜி தொடர்ந்தாள்.


என்கிட்ட இருக்குற நல்ல விஷயங்கள் எல்லாம் எங்க அம்மா எனக்குச் சொல்லித்தந்தது தான். ஏதாவது விசயத்துல நான் மோசமா நடந்துகிட்டா அதுக்கு நூறு சதவிகிதம் நானே பொறுப்பு. எங்க அம்மாவோட வளர்ப்பு இல்ல..”