ஆன்லைனில் புத்தகம் வாங்க

Saturday, 28 December 2013

போட்டிச் சிறுகதை-48

சிறுகதை-அந்தி வானம்

எழுந்து கொல்லைபுறத்துக்கு போகவேண்டும் போல இருந்தது மாரியம்மாவுக்கு.வெளியே வானம்,இரவுமுழுக்க குடித்த இருள் எனும் மதுவின் போதையில் மயங்கிகிடந்தது.பக்கத்துவீட்டு கோணவாயன், மாட்டை கறவைக்கு அழைத்துசெல்ல தயார்படுத்தி கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.மணி நாலு இருக்கும் என நினைத்துக்கொண்டாள்.எரிச்சலாய் இருந்தது மாரியம்மாவுக்கு.இப்படி நடக்கமுடியாம,ஒரு வெளிய தெருவ போவகூட யாரோடு உதவியாவது தேவையாய் இருக்கிறதே என தன்னையே நொந்துகொண்டாள்.அவள் இப்படி புலம்புவது இதுஒன்றும் முதல்முறை அல்ல.வருஷகணக்காய் இதே நிலைமை தான்!எப்போது,அவளின் நடமாட்டம் குறைய தொடங்கியதோ அப்போதே,அவளை வாசல் திண்ணையின் ஒரு மூலையில் போட்டுவிட்டனர்.சொல்லப்போனால் மாரியம்மாவுக்கு,இந்த உலகில் வேறெதையும் விட அதிகம் நெருக்கமாய் இருப்பது,ஓரம் கிழிந்துபோய் கோரைகள் நீட்டியிருக்கும் அந்த பாயும்,மூத்திர வீச்சடிக்கும் அந்த கம்பளி போர்வையும் தான்.

இத்தனைக்கும் மாரியம்மா ஒன்றும், ஒண்ணே ஒன்னுன்னு பெத்து அதையும் கண்காணா தூரதேசத்துக்கு பொழைக்க அனுப்பி வச்சிட்டு இங்க ஒத்தையில கிடக்கிறவ இல்ல.பிள்ளைகள் விசயத்தில் அவள் வாழ்வரசி.பொறந்தது மொத்தம் எட்டு புள்ளைக.அதுல அம்மை,பேரு தெரியாத வியாதின்னு வாரி குடுத்தது போக தப்பிப்பிழைச்சதுங்க அஞ்சு.மூணு பொண்ணு,ரெண்டு ஆணு!மாரியம்மாவுக்கு புருசன்னு வாய்ச்சவன் ஒண்ணுத்துக்கும் ஆவாத ஒரு குடிகார பய.மாசத்துல பாதிநாள் வீட்டுக்கு வந்தான்னா..மீதிநாள் ஆத்தங்கரையில சீட்டு விளையாடி கட்டியிருக்கிற வேட்டி வரைக்கும் அவுத்து குடுத்துபுட்டு,தோத்த சோகத்துல எவன்கிட்டாயாச்சும் அஞ்சு பத்துன்னு கடனை வாங்கி குடிச்சிபுட்டு கோவணம் அவுந்தது கூட தெரியாம,ஆத்தங்கரை ஓரமா விழுந்துகிடப்பான்.

ஆனாலும் இவ எப்பவும் புருஷனை விட்டுக்கொடுத்தது கிடையாது.அப்படியே எவனாச்சும் எதாச்சும் சொல்லிபுட்டாக்கூட சாமியாடிருவா சாமி!அப்படித்தான் ஒருநாள் மாரியம்மா குடிச்சிட்டு விழுந்து கிடந்தவனை கைத்தாங்கலா தூக்கிட்டு வர்றப்ப,எதுக்க வந்த ஊர் பெருசு ஒன்னு வாய வச்சிகிட்டு சும்மா இருக்காம அரை மயக்கத்துல இருந்தவனை பாத்து,

"ஏன்டா,இப்படி எப்ப பாத்தாலும் சீட்டும்,குடியுமே கதின்னு கிடக்குறதுக்கு என்னத்துக்குடா உனக்கெல்லாம் ஒரு கல்யாணம் ஒரு குடும்பம்?"ன்னு எக்குதப்பா ரெண்டு வார்த்தையை உட்டுபுட்டான்."ஏன் மாரி,நீயாவது இதையெல்லாம் கண்டிக்ககூடாதா"ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள..
 "யோவ்,சும்மா நிறுத்துய்யா.ஊர்ல எந்த ஆம்பிளையா சூதாடல? இல்ல எவன் குடிக்காம இருக்கான்? என்னமோ எல்லா பயலுவளும் யோக்கியமா இருக்கமாதிரி இவரை பேச வந்துட்டியே?! இவ்வளவு ஏன்,உன் யோக்கித என்னன்னு  எனக்கு தெரியாதா?பொழுது சாஞ்சா போதும்,தலைக்கு முக்காட போட்டுக்கிட்டு வயக்காட்டு ஓரமா ஒதுங்குறவன் தானே நீயி?பெருசா பேச வந்துட்ட?" என ஒரு உலுக்கு உலுக்கிவிட்டாள்.அதுக்கப்பறம் பெருசு வாயைதிறந்து ஒருவார்த்தை பேசுவானேன்?!

என்னதான் கஞ்சிகுடிக்க ஒழுங்கா காசு குடுக்காம,குடிச்சிபுட்டு விழுந்து கிடந்தாலும்..மரியாம்மாவை தவிர வேறோருத்தியை நினைச்சி பாத்ததில்லை அவனும்.அதுனாலயே அவளுக்கும் தன் புருசனை பத்தி ஒரு கர்வமுண்டு!வாழ்க்கை அப்படியே கரும்பாறையை போல அசையாமல் ஓரிடத்தில் நின்றுவிடுவதில்லை.அது கூழாங்கல் போல..காலம் எனும் நதியின் ஓட்டத்திற்கு ஏற்ப அந்த கல் பயணித்து கொண்டேயிருக்கிறது. அப்படி, குடித்து குடித்து வாய்வயிறெல்லாம் வெந்துபோய் ஒருநாள் செத்தும்போனான் மாரியம்மாவின் புருசன்.வாழ்ந்தவரைக்கும் பெருசா சம்பாத்தியம்னு அவன் எதுவும் கொடுத்ததில்லை.ஆனால் போகும்போது மட்டும் மறக்காம அவளின் பூவையும்,பொட்டையும் வாங்கிட்டு போயிட்டான்.

மூத்தது மூணும் பொட்ட புள்ளைக.அதுலயும் மொத புள்ள,இப்பவோ அப்பவோன்னு உக்கார நேரம் பாத்துகிட்ருக்கு.கடைசி பய,இப்போதான் பால்குடியவே மறந்துருக்கான்.இப்படி நண்டுசிண்டுகளையா வச்சிகிட்டு இவ என்னத்த சமாளிப்பாளோ,எப்படி கரையேறப்போறாளோ என அக்கம்பக்கத்துல உள்ளதுக துக்கம் விசாரிச்சிட்டு ஆறுதல் சொல்றதுக்கு பதிலா இன்னும் பயமுறுத்திவிட்டு சென்றார்கள்.

ஆனால் மாரியம்மா ஓயவில்லை.அவ வைராகியத்துக்கு பொறந்தவ."நீ பொறக்கையில உன் அம்மா வயித்துக்குள்ள தலைசுத்தி போயி,உசுரோட உன்ன வெளில கொண்டுவர்றதே போராட்டமா போச்சு.அப்புறம் ஒருவழியா நீ பொறந்தப்ப,ஊரே அத அதிசயமா பேசிகிடுச்சி"என்பாள் அவளின் அப்பத்தா!புருஷன் செத்ததுக்கு அப்புறம் காலுக்கு சக்கரம் கட்டினது போல ஆகிவிட்டாள் மாரியம்மா.எப்போ எழுந்திருப்பா,எப்போ தூங்குவான்றதெல்லாம் அந்த படைச்சவனுக்கே வெளிச்சம்.இன்ன வேலைன்னு கிடையாது.ஐயர் வீட்டு மாட்டுதொழுவத்தை கூட்டி பெருக்குறதிலிருந்து,ஆம்பிளையாட்டம் முழங்கால் வரைக்கும் புடவையை ஏத்தி கட்டிக்கிட்டு வயகாட்டுல உழுவுற வரைக்கும் ஒண்ணுத்தையும் விட்டுவைக்கல.அவ கும்பிடுற சாமி ஏதும் உடம்பில் இறங்கிவிட்டதோ என ஊர்க்காரர்கள் எல்லாம் பயந்துதான் போனார்கள்.

ஒருவழியாய் மூணு  பொம்பளை புள்ளைகளுக்கும் அவள் சக்திக்கு ஏத்தமாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துகொடுத்தாள்.மூத்தவன் ரைஸ்மில்லுக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சு,ஆறுமாசத்திலேயே,ஒரு பெண்ணை பிடிச்சுபோய் இவளைத்தான் கட்டிப்பேன்னு வந்து நின்னான்.பொண்ணு வசதி இல்லைதான்."ஆமா,நாம ரொம்ப வசதி..எனக்கு கல்யாணம் ஆனப்ப,ரெண்டு நூல் புடவையும்,தாலிக்கயிறுல ஒரு குண்டுமணி அளவுக்கு தங்கத்தையும் தானே,எங்கப்பன் சீதனமா கொடுத்தனுப்பிச்சான்" என அவளாகவே சமாதனப்படுத்திக்கொண்டாள்.கடக்குட்டியும் படிப்பு சரியா வராததால லாரியில் கிளீனர் வேலைக்கு போயிட்டான்.இன்னநேரம் தான் வருவான்,போவான்னு சொல்லமுடியாத வேலை அது.மாரியம்மாவுக்கு அவன் மீது பாசம் கொஞ்சம் ஜாஸ்தி.கடைக்குட்டின்றதால மட்டுமில்ல,அவன் அப்பன் ஜாடை அப்படியே அவனுக்கும்ங்கிறதனாலயும் தான்!

மனசு சொல்றதை அப்படியே உடம்பு கேக்குற வரைக்கும் தான் வாழ்க்கை நிம்மதியாயிருக்கும்.மாரியம்மாவிற்கு வயது அதன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது.சும்மாவா,சாப்பிடகூட நேரமில்லாம சக்கரமா சுழண்ட கட்டையாச்சே.அதுனாலதான் என்னவோ,இப்போ மொத்தமா ஓஞ்சிருச்சி போல உடம்பு என நினைத்துகொண்டாள்.அதுபோதாதென்று ஒருமுறை தண்ணி தூக்க போறேன்னு சொல்லி,குளத்தாங்கரையில் வழுக்கி விழுந்துவிட்டாள்.அன்று படுத்தவள் தான்.அது ஆச்சு வருஷம் ஒண்ணு!இடுப்புக்கு கீழே அசைவுகள் குறைந்து போய்விட்டது.ஒண்ணுக்கு போவக்கூட யாராச்சும் தூக்கிகிட்டு போனாத்தான் உண்டு.

லேசாய் வானம் விடிய ஆரம்பித்திருந்து.வெகுநேரமாய் மூத்திரம் முட்டிக்கொண்டு நின்றது மாரியம்மாவுக்கு. "பெரியவனே,பெரியவனே" என கூப்பிட்டு பார்த்தாள்.கதவு திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.இடுப்பாலயே தேய்த்துதேய்த்து நகர்ந்துபோய் கதவருகில் சென்று கதவை தட்டினாள்.

"ஏன்மா,காலையிலேயே இப்படி படுத்துறே,சும்மா தட்டிகிட்டே இருக்காதே.இரு இரு வர்றேன்"என அலுத்துக்கொண்டே கதவை திறந்தான்.

"வாழ்ற வயசெல்லாம் பொசுக்கு பொசுக்குனு போய் சேருதுங்க.இந்த கிழத்தைப் பாரு.இன்னும் கிடந்தது நம்ம உசுரை வாங்குது" என உள்ளிருந்து மருமகளின் குரல் மட்டும் கதவை தாண்டி வெளியே வந்தது.

மாரியம்மாவுக்கு கண்கள் கட்டிக்கொண்டது.ஏற்கனவே இருந்த அரைகுறை பார்வையையும்,அந்த விழிநீர் படலம் இன்னும் அதிகமாய் மறைத்தது.ஒருகாலத்தில,இந்த புள்ளைங்க வயிறு நிறைய உக்கார கூட நேரமில்லாம ஓடிகிட்டு இருந்தவளை,இப்படி ஒண்ணுக்கு போவக்கூட அடுத்தவங்க உதவி தேவைப்படுறமாதிரி எழுதிட்டானே ஆண்டவன் என தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டாள்.கந்தலாய் கிடந்தவளை கையோடு சேர்த்து தூக்கியபடி,கொல்லைக்கு அழைத்துபோய் மீண்டும் தூக்கி வந்து படுக்கையில் போட்டான்.ஏனோ,வழிகின்ற கண்ணீரை மட்டும் அவளால் நிறுத்தமுடியவில்லை.அந்த உடலில் இப்போதைக்கு அதுமட்டும் தான் உருப்படியாய் வேலை செய்கிறது போல என நினைத்துகொண்டாள்.

வானம் நல்ல பிரகாசாமாகியிருந்தது.மருமக தன் பிள்ளையை பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.பள்ளி வாகனம் வரும் சத்தம் கேட்டது."பாப்பூம்மா,டிபன் பாக்ஸ்ல மதியத்துக்கு அஞ்சு இட்லி வச்சிருக்கேன்.ஒழுங்கா எல்லாத்தையும் சாப்பிட்றனும்"என பாசம் பொங்க மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.எல்லா வேலைகளையும் முடித்தபின்பு,மாமியார் என்ற ஒரு ஜீவன் வீட்டில் இருப்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தவளாய்,தட்டில் ஒரு இட்லியை வைத்து கதவுக்கு அந்தப்பக்கத்திலிருந்து தட்டை மட்டும் தள்ளிவிட்டாள்."கெழவி,இட்லியை தின்னுட்டு படுத்துக்க,எனக்கு கொள்ளை வேலை  கெடக்கு"என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.


வெகுநேரம் ஆகியும் அவள் சாப்பிடவில்லை.தட்டில் ஈ மொய்க்க ஆரம்பித்திருந்தது.எதையோ வெறித்து பார்த்தபடியே திறந்திருந்தன அவள் கண்கள்.இப்போது மாரியம்மாவின் கண்களிலிருந்து நீர் வரவில்லை.இன்னும் சொல்லப்போனால் இனி எப்போதும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரப்போவதேயில்லை!