ஆன்லைனில் புத்தகம் வாங்க

Saturday, 21 December 2013

போட்டிச் சிறுகதை-33

சிறுகதை-திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்!


கோவையிலிருந்து மதுரை செல்லும்  அரசுப் பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் மரகதவல்லி. பேருந்தின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய சற்று நேரத்திற்கெல்லாம்ஓட்டுனரும் நடத்துனரும் வந்து சேரபேருந்து கிளம்பியது. பயணச் சீட்டினை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள். பேருந்து கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம்மரகதவள்ளியின் இரு பிள்ளைகளும்அவளது மடியில் ஒருவரும்தோளில் இன்னொருவருமாய் சாய்ந்து உறங்க ஆரம்பித்து விட்டனர். மெல்ல ஜன்னல்  கண்ணாடியில் சாய்ந்தவளை பல்வேறு நினைவுகள் ஆட்கொண்டன.

மதுரை ! தூங்கா நகரம் என்ற பெயருக்கேற்ப,எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். வெளியூரிலிருந்து மதுரை ஆரப்பாளையம் அல்லது பெரியார் நிலையம் வந்து சேரம் நேரம் எந்நேரமாயினும் சரிஅது விடியற்காலை இரண்டு மணியானாலும்ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். உணவு விடுதிகளிலோ,சுடச் சுட இட்லியும் பரோட்டாவும் எப்போதும் தயாராகவே இருக்கும்.

மல்லிகை ! மணக்கும் மல்லிகை ! மதுர மல்லி என்று அழைக்கப்படும் மல்லிகை மலர். காணும் கண்களையும் மனங்களையும் கொள்ளை கொண்டுவிடும் தூய்மையான வெண்மை நிறத்தில்ஆளையே கிறங்கடிக்கச் செய்துவிடும் மணத்துடன்குண்டு குண்டாய் இருக்கும் மல்லிகைப் பூக்களைகுண்டு மல்லிகளை அழகாய் நெருக்கமாய்  தொடுத்துநீர் தெளித்து வைக்கப்பட்டிருக்கும் மல்லிகைச் சரங்களைக் கண்டால்வாங்கித் தலையில் சூடாது செல்ல மங்கையரின் மனது ஒப்புமோ ?

சங்கம் வளர்த்த மதுரை மாநகருக்கு காவல் தெய்வமாய் விளங்கும் அன்னையவள் மீனாட்சிஅந்த மரகத முகமுடையாளை நினைத்துக் கொண்டால்துன்பமனைத்தும் துள்ளியோடி மறைந்து போகாதோ ! அவள்தம் மணக்கும் குங்குமத்தின் சக்தியையும் சிறப்பினையும் என்னவென்று சொல்வது !

இப்படி எத்தனை எத்தனையோ நினைவுகள் மரகதவல்லியை  ஆட்கொண்டன. மரகதவல்லி மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்தவள். மணமாந பின்கணவரின் வேலை நிமித்தமாக கோவைக்கு இடம் பெயர்ந்தனர். கோவைக்கு குடிபெயர்ந்து கிட்டத்தட்ட பதினைத்து ஆண்டு காலம் ஆகிவிட்டிருந்தது.மரகதவல்லியும்  கோவையில் ஓர் பள்ளியில்  ஆசிரியராகப்  பணிபுரிந்து வந்தார். பிள்ளைகளுக்கும் விடுமுறை கிடைக்கும் காலம்  அரையாண்டுத் தேர்வு அல்லது முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையே ஆதலால்அப்போது தான் சொந்த ஊருக்கே செல்ல முடிந்தது.

பேருந்து செல்லும் வேகத்தில் , முகத்தை வந்து   தழுவும் குளிர் காற்றினால்மரகதவல்லிக்கு தூக்கம் கண்களைத் தழுவின. உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை கவனித்தவாறுதன் கவனத்தை திசைதிருப்பி,உறக்கத்தை கட்டுப்படுத்த முயன்றாள். கைபேசியில் பாட்டு கேட்டால் தூக்கத்தை ஒருவாறு கட்டுப்படுத்தலாமே என்று பாட்டு கேட்டுக் கொண்டே வரலானாள் மரகதவல்லி.

வழியில்ஏதோ  ஓர்  சிற்றூரில் பேருந்து நிற்கநிறைய பேர் பேருந்தில் ஏறினார்கள்.இரவில் வெளியூர் செல்லும் பேருந்துகள்அவ்வளவாக இடையில் எந்த ஊரிலும் நிற்காது. எங்கேனும் ஊருக்கு வெளியில் இருக்கும் ஓர் உணவு விடுதியில் கால் மணி நேரம் நிறுத்துவர். அவ்வளவே. ஆனால் பகலில்பேருந்து பல நிறுத்தங்களிலும்,பேருந்து நிலையங்களிலும் நின்று செல்லும். எரியவர்கட்கு அமர இடம் கிடைக்காததால் நின்று கொண்டே வந்தனர். பிள்ளைகள் இருவரில் ஒருவன் மரகதவள்ளியின் மடியில் அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டே வந்தான். இன்னொருவன்தாயின் அருகில் அமர்ந்து கொண்டுஅவளது தோளில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டே வந்தான். திடீரெனநின்று கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி,

ஏம்மா ! சின்னப் புள்ள தானகொஞ்சம் தள்ளி உன் பக்கத்துல உக்கார வெச்சுக்கோ . நானும் உக்காந்துக்கறேன் " என்றாள்.

இருவர் அமரும் இருக்கை தான் அது. இருவருக்கு நடுவில் அமர்வதென்பது சிரமம்.தவிரஅவன் வேறு உறங்கிக் கொண்டே வந்தான்.

"பிள்ளை தூங்கிட்டே வராம்மா சீட்டு நுனில உட்காரவெச்சா தூங்கி விழுந்து முன்னால சீட்ல இடிச்சுக்குவான். அடி பட்டுடும். பஸ் ஓடற வேகத்துல  கீழே தூங்கி விழுந்தாலும் விழுந்துருவான்" என்றாள்  மரகதவல்லி.

"சரி. நான் உக்காந்துட்டு பையனை மடியில வெச்சுக்கறேன்" என்றபடி சிறுவனை தன மடியில் அமரச் செய்து கொண்டுமரகதவள்ளியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் அப்பெண்மணி. சிறுவனோதூங்கி விழுவதும்,சாய்ந்துறங்க வாகாக இல்லாததால் விழித்துக் கொள்வதுமாகவும்தாயைப் பார்ப்பதுவுமாக இருந்தான். அவனைக் காணவே மரகதவல்லிக்கு பாவமாக இருந்தது.

மரகதவல்லிக்கும் கண் அசரவேஅவளும் அரைத் தூக்கத்தில் இருந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் மரகதவல்லியின் காலுக்கடியில் வைத்திருந்த பை நகர்வது போல் தோன்றியது. பேருந்தின் வேகத்தில் தான் பை பின்னால் நகர்ந்துவிட்டதோ என்னவோ என்று எண்ணியவள்பையை இழுத்து முன்னால் வைத்தாள். ஆனால்,மீண்டும் சிறிது நேரத்தில்மீண்டும் பை நகர்ந்தது. இப்போதுயாரோ வேண்டுமென்றே வேகமாக இழுத்தது போல் தோன்றியது. இப்போது சற்று கூர்ந்து கவனித்தவள்அருகிலிருக்கும் பெண்மணியே இதனைச் செய்கிராளென்று அறிந்து கொண்டாள். காலால் பையை முன்னும் பின்னும் நகர்த்துவதும்மரகதவல்லி கவனிக்கும் போது,ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்து கொள்வதுமாய் இருந்தாள்.

"ஏன்  பேக்கை காலால முன்னாடியும் பின்னாடியும் நகர்த்திட்டு இருக்கீங்க ?" என்று சற்று காட்டமாகவே கேட்டாள்  மரகதவல்லி.

"கால் வைக்க சிரமமா இருக்கு" என்று பதில் வந்தது.

"பேக்கை மிதிக்காமகால நகர்த்தி வையுங்க" என்று  சற்று அதட்டலாகக் கூறினாள். அதன் பின்அப்பெண்மணி அமைதியாக வருவது போல் பாவலா செய்து கொண்டாள்.

பேருந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வந்து சேரும் முன்னரேஅருகிலிருந்த பெண்மணி பேருந்திலிருந்து இறங்கி விட்டாள். பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும்இறங்குவதற்காக பையை எடுத்தவள்,அப்போது தான் பையினை கவனித்தாள்.  பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி. பை திறக்கப்பட்டு இருந்தது. வைத்திருந்த துணிமணிகள் கலைக்கப் பட்டிருந்தன. பக்கத்திலமர்ந்திருந்த பெண்ணின் நோக்கத்தினை ஊகித்துக் கொண்டாள். உடமைகளை சரிபார்த்துவிட்டுபேருந்தை விட்டிறங்கி ஆரப்பாளையம் நகர பேருந்து நிலையத்தினை சென்றடைந்தாள். பிள்ளைகள் இருவரும் அரைத் தூக்கத்தில் இருந்தனர்.

நகரப் பேருந்து நிறுத்தத்தில்பழங்காநத்தம் செல்லும் பேருந்திற்காய் காத்திருந்த வேளையில்சரம் சரமாய் தொடுத்து அடுக்கப்பட்டிருந்த மல்லிகையைக் கண்டதும்மரகதவல்லிக்கு ஆவல் மேலிட்டது. மல்லிகைச் சரம் வாங்கிக் கொண்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் பழங்காநத்தம் செல்லும் பேருந்தும் வந்து சேர்ந்தது. அதிகக் கூட்டமாக இல்லையென்றாலும்ஓரளவு கூட்டம் இருக்கவே செய்தது. பிள்ளைகளை ஏற்றி விட்டு தானும் ஏறிக் கொண்டாள். உட்கார இடம் கிடைக்கவில்லை.

சற்று நேரத்தில்ஒருவன் மரகதவல்லியின் அருகில் வந்து நின்றான். அப்படியே மெதுவாக நகர்ந்தவன்அங்கு நின்றிருந்த பெண்ணின் அருகில் போய் நின்றான். பிளேடால்அப்பெண்ணின் கைப் பையினை கீறினான். இதைக் கண்டதும் மரகதவல்லி பதறினாள். அந்தப் பெண்மணிக்கு இதை அறியச் செய்வதெப்படி என்றெண்ணினாள். அப்போது நடத்துனர் பயணச் சீட்டு கொடுக்க வரஅந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திஅப்பெண்ணிடம் தெரியச்செய்தாள். அவரும் உஷாராகி விடஅத்திருடன் அவ்விடத்தை விட்டு மெல்ல நழுவினான்.

அப்போது பேருந்தின் ஒலிநாடாவில்,
திருடாதே ! பாப்பா திருடாதே !
திட்டம் போட்டு திருடற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்கற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது !

என்று பாடல் ஓடிக் கொண்டிருந்தது. பேருந்திலிருந்த மக்களை உஷார் படுத்தவேஅப்பாடலை ஒலிபரப்பி இருப்பாரென்று மரகதவல்லிக்கு தோன்றியது.