ஆன்லைனில் புத்தகம் வாங்க

Friday, 27 December 2013

போட்டிச் சிறுகதை-45

சிறுகதை- ஆணாதிக்கம்


நான் எனது திருமணப் போட்டோவை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றோடு எனக்கும் மோகனாவுக்கும் திருமணமாகி சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.அவள் மட்டும் என்னுடன் இருந்திருந்தால் கோவில்,சினிமா,பீசா ஹட் என்று இந்நாள் மகிழ்ச்சியாக கழிந்திருக்கும்.அவள் தான் என்னோடு கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாளே.மோகனா அழகானவள் மட்டுமல்ல அன்பானவளும் கூட.அதிலும் நான் நோய் வாய்ப்பட்ட போதும் சரி கவலைகளில் உழன்ற  வேளைகளிலும் சரி ஒரு தாய் போல் என்னை அரவணைத்தவள் அவள். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்த போதும் பணத்திமிர் அவளிடம் துளி கூட இல்லை. எனவே நான் அவளை அதிகம் நேசித்ததில் வியப்பொன்றும் இல்லை.ஆனால் மேல்தட்டுப் பெண்களுடன் அதிகம் பழகியதாலோ இல்லை மகளிர் விழிப்புணர்வு அமைப்புகளில் அங்கத்தவராக இருந்ததாலோ என்னவோ ஆணாதிக்கம், பெண் விடுதலை போன்ற விடயங்களில் அவள் ரொம்பவே  சென்சிட்டிவாக இருந்தாள்.சமைப்பது,பாத்திரம் கழுவுவது போன்ற பெண்களின் வழமையான செயற்பாடுகளைக் கூட ஆண்களால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு விடயமாகவே அவள் கருதினாள். இதனால் தான் விரும்பும் நேரங்களில் மாத்திரம் அவற்றைச் செய்வதும் நான் அவற்றைச் செய்யச் சொல்லும் போது சில நேரங்களில் என்னோடு முரண்படுவதும் அவளின் வாடிக்கையாய் இருந்தது. எனக்கும் அவளுக்கும் இடையே இடைக்கிடை கருத்து முரண்பாடு ஏற்படக் காரணமாக இருந்தது மோகனாவின் இத்தகைய மனநிலை மட்டுமே.

எமக்குள் அடிக்கடி பிரச்சனையை ஏற்படுத்துவது சமையல் விவகாரம் தான். சமையலை ஆணாதிக்கத் திணிப்பாக கருதும்  மோகனா நன்றாக சமைக்க கூடியவள் என்பது ஒரு முரணே. பெண்ணியவாதிகளுடனான தொடர்புகள் ஏற்பட்டது கம்பஸில் படித்த காலத்தில் தான் என்றும் அதற்கு முன்னரே தான் சமைக்கப் பழகி விட்டதாகவும் அவள் என்னிடம் ஒரு முறை கூறியிருந்தாள். அவள் செய்யும் புரியாணி எனது பேவரிட் சாப்பாடு. அன்றும் அப்படித் தான்.

மூன்று நாள் தொடர்ந்து கடையிலும் கன்டீனிலும் சாப்பிட்டு எனக்கு ரொம்பவே போரடித்திருந்தது. அன்று மோகனாவின் சமையலைச் சாப்பிட ஆசையாய் இருந்தது. அவளைச் சமைக்கச் சொன்னேன்.அவள் மறுத்தாள். இவ்வாறு  அவள் மறுப்பது வழக்கமானதே என்றாலும் அன்று அவள் செய்கைகள்  எனக்கு கோபமூட்டின.  அவளோடு வாக்குவாதம் தொடங்கியது. அவள் வழமை போல ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்று பேச எனக்கு கோபம் தலைக்கேறி அவள் கன்னத்தில் அறைந்து விட்டேன். மோகனா முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சி. சில வினாடிகள் ஆடாமல் அசையாமல் சிலை போல நின்றவள் பின்னர் கண்களைக் கசக்கிக்கொண்டு பக்கத்து அறைக்குள் போய்த் தஞ்சமடைந்தாள். வழக்கமாக வாக்குவாதப்படும் போது மோகனா லேசாக கண் கலங்கினாலே எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கிவிடும் நான் அன்று அவள் கண்ணைக் கசக்கிக் கொண்டு அறைக்குள் ஓடிய பிறகும் எதுவும் செய்ய முயலாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.இவ்வளவு நாளாக சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த கோபம் அன்று பெரும் காட்டுத்தீயாக மாறி என் மனமெங்கும் வியாபித்திருந்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.மொட்டை மாடிக்குச் சென்று வீட்டைச் சுற்றி நின்ற தென்னை மரங்களையும் ஆங்காங்கே ஓடி விளையாடும் அணில்களையும் கீச்சிடும் குருவிகளையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிலும் மனம் ஒப்பவில்லை. கோபம் சற்று தணிந்த போது தான் என்ன இருந்தாலும் அவளை அடித்தது தவறு என்று எனக்கு புலப்பட்டது.

அவளைச் சமாதானப்படுத்துவதற்காக கீழே இறங்கி வந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மோகனா தனது துணிமணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாக இருந்தாள். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.அவளைச் சமாதானப்படுத்த முயன்றேன்.அவளோ தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தாள்.இறுதியாக “யூ ஆர் எ மேல் ஷாவினிஸ்ட்.யூ ட்ரீட் மீ லைக் எ ஸ்லேவ்.ஐ கான்ட் லிவ் வித் யூ” என்றாள்.எனக்கு தணிந்திருந்த கோபம் மீண்டும் தலைக்கேறியது.”சரி தான் போடி.நீயில்லாம என்னால வாழ முடியாதா என்ன? உன்ன தேடி உன்ர வீட்டு பக்கம் வந்தா என்ன செருப்பாலேயே அடி. மேல் ஷாவினிசமாம் மண்ணாங்கட்டியாம். பெரிய ரோசா லக்சம்பேர்க் எண்டு மனசில நினைப்பு” கோபத்தில் மனதில் தோன்றியதையெல்லாம் பொரிந்து கொட்டினேன்.என் அம்மா அப்பாவிடம் அடிவாங்கித் துடித்த நிமிடங்களில் என் தாயோடு சேர்ந்து அழுதவன் நான்.பெண்களை அடிமையாகப் பாவிக்கும் ஆணாதிக்கத்தையும் அதன் சின்னமாக விளங்கிய என் அப்பாவையும் மனதுக்குள்ளே திட்டி தீர்த்தவன் நான்.    அதனால் எனக்குத் தெரிந்தவரை நான் அவளை அடக்கியாள முனைந்ததே இல்லை. தன் அலுவலகத்தில் பணிபுரியும் சில பெண்கள் கணவர்மாரால் துன்புறுத்தப்படுவது குறித்து சொல்லிவிட்டு "நான் கொடுத்து வைத்தவள்.நீங்கள் எவ்வளவு நல்லவர்" என்று மூன்றோ நான்கு தடவை சொல்லியிருக்கிறாள். இப்படிச் சொன்ன அதே வாயால் என்னை ஆணாதிக்க வாதி என்றும் தன்னை அடிமையாக நினைப்பதாகவும் சொன்னால் எனக்கு எப்படியிருக்கும்? கொஞ்ச நாள் தாய் வீட்ட போய் இருந்து அனுபவிச்சிட்டு வரட்டும்.அப்ப தான் என்ர அருமை தெரியும். இவளோட சண்டையும் பிடிக்கத் தேவையில்ல. எனக்கும் நிம்மதி" என்று எனக்கு நானே சொல்லி என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.மறுநாள் வழக்கம் போல அலுவலகம் சென்றேன் ஆனாலும் வேலைகளில் மனம் ஒன்ற மறுத்தது. "மோகனா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளுக்கு என் மீதான கோபம் தணிந்திருக்குமா? அவளிடம் மன்னிப்புக் கேட்டு வீட்டுக்கு அழைத்து செல்லலாமா? இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் போது நான் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வந்தன. “நான் ஏன் போக வேண்டும்.நானா வீட்ட விட்டு கலைச்சன்.அவளாத் தானே போனவா.வேணுமெண்டா அவளே வரட்டுமேன்.ஒரு பொம்பளைக்கே இவளவு திமிரென்டா ஒரு ஆம்பிளை எனக்கு எவ்வளவு இருக்கும்”.என் மனதின் எங்கோ ஒரு மூலையில் கிடந்த ஆண் என்ற அகந்தையும் ஆணாதிக்க மனோபாவமும் எனக்குள் விஸ்வரூபம் எடுத்தன. மோகனாவைப் பற்றிய சிந்தனைகளில் மனம் உழன்றதில் என்னால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியவில்லை.விடுமுறை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.சோபாவில் படுத்திருந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த நான் அப்படியே தூங்கிப் போனேன்.எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியவில்லை. தூக்கம் கலைந்து எழும்பும் போது தலை பயங்கரமாக வலித்தது. “மோகனா,தலையிடிக்குது ஸ்ட்ரோங்கா ஒரு கோப்பி கொண்டு வாம்மா” பதில் எதுவும் இல்லை.”சே,அவள் தான் இங்க இல்லையே.முட்டாள் முட்டாள்” என்று என்னை நானே திட்டிக்கொண்டே எழுந்து சென்று கோப்பி போட்டுக் குடித்தேன்.வழக்கமாக கலகலப்பாய் இருக்கும் வீடு இன்று  வெறிச்சோடிக் கிடந்தது.எங்கும் அமைதி,வீடு எனக்கு மயானம் போல் தோன்றியது.என் மனதில் எதையோ இழந்தது போன்ற உணர்வு.எம் திருமண வாழ்க்கையின் பழைய நினைவுகள் மனதில் அடிக்கடி வந்துபோயின.திருமணம், ஹனிமூன், மோகனா செய்யும் குறும்புகள், நான் டெங்கு வந்து படுக்கையில் விழுந்த போது அவள் என்னைக் கவனித்த விதம் கூடவே அவள், தனக்கு பிடிக்காத போதும் என்னைத் திருப்திப்படுத்துவதற்காக செய்த விடயங்கள் என் மனதில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டிருந்தன. “உனது திருப்திக்காக பல தடவைகள் மோகனா  தனது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்பட்டிருக்கிறாள்.நீயும்  அவளுக்காக பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறாய். உனக்கும் மோகனாவுக்குமிடையே பலமான பாசப்பிணைப்பு இருக்கும் போது அவளது நம்பிக்கைகளிலுள்ள தவறுகளை, அவை தொடர்பான உனது கவலைகளைப் பற்றி எப்போதாவது மோகனாவோடு மனந்திறந்து பேசியிருக்கிறாயா? நீ அவ்வாறு செய்திருந்தால் அவள் நிச்சயம் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்திருப்பாள். உன் மீது பெரிய தவறை வைத்துக் கொண்டு அவளை மட்டும் குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கின்றது” மனச்சாட்சி என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.என்னால் ஏதும் பதில் கூற இயலவில்லை. குற்ற உணர்ச்சி என் கவலையை மேலும் அதிகப்படுத்தியது. மோகனாவை தேடிப் போக புறப்பட்ட வேளையில் மீண்டும் சுயகௌரவம் என்னைத் தடுத்து நிறுத்தியது.

மறுநாளும் அலுவலகம் போனேன். மனம் அதே பல்லவியை மீண்டும் பாடியது. எங்கேயாவது வெளியூர் போனால் மனதுக்கு நிம்மதியாய் இருக்கும் என்று எண்ணி இரண்டு வாரம் விடுமுறை எடுத்துகொண்டு வீட்டுக்கு வந்தேன்.அன்று மாலை மோகனாவின் அப்பா என்னை சந்திப்பதற்காக வந்திருந்தார். என் கண்கள் மோகனாவைத் தேடின.ஏமாற்றம் தான் மிஞ்சியது.அவரின் பேச்சிலிருந்து மோகனாவும் என்னைப் போல் நிம்மதியின்றி தவிப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.இறுதியாக மோகனாவை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதாக அவர் கூறியபோது என் மனதில் சந்தோஷ அலைகள் பொங்கிப் பிரவாகித்தன. 

வெளியூர் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு மோகனாவின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினேன்.காலிங் பெல் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவள் தான் வந்திருக்கிறாளோ என்று ஓடி வந்து பார்ப்பேன். ஆனால் எனக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றம் தான்.சில நேரங்களில் நேரிற்  சென்று அழைத்துக்கொண்டு வந்துவிடலாமா? என்று தோன்றும். அப்போதெல்லாம்  நான் கடைசியில் சொன்ன வாசகங்கள் என்னைத் தடுத்து நிறுத்தின.நாட்கள் ஓட ஓட என் நம்பிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் தேய்ந்து கொண்டிருக்க மோகனாவை நானாகச் சென்று அழைத்து வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. இன்றாவது வருவாளா? திடீரென்று காலிங் பெல் அடித்தது. வந்தது மோகனாவாயிருக்குமோ? ஓடிச்சென்று கதவைத் திறந்தேன். என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.வந்தது அவளே தான். என்னால் நம்பமுடியவில்லை.கண்களை ஒரு முறை மூடித் திறந்து மீண்டும் பார்த்தேன்.அவள் தான்.ஒரு நிமிடம் என் மனமெங்கும் சந்தோஷ அலைகள் பரவுவதை உணர்ந்தேன். “என்னை இவ்வளவு நாளாக கலங்க வைத்தவள் தானே இவள்” மறு நிமிடமே சந்தோஷ அலைகள் கோப அலைகளாக மாறின.அவளுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றேன்.அவள் வீட்டினுள் வந்தவுடன் அவளை வார்த்தைகளால் சீண்டத் தொடங்கினேன். அவள்  தாய் வீட்டுக்கே திரும்பிப்  போய் விடுவாளோ? என்று மனதின் ஓரத்தில் பயம் ஒன்று எழுந்த போதும் என் மனதில் பொங்கிய கோபம் அதனையும்  தாண்டி என்னைப் பேச வைத்தது.மோகனா சிறிது நேரம் ஏதும் பேசாமல் நின்றாள்.அப்படி நின்றவள் திடீரென்று என் கால்களைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள். “பெண்ணுரிமை பேசி என்னிடம் சண்டை பிடிக்கின்ற மோகனாவா என் கால்களைக் கட்டிக்கொண்டு அழுகின்றாள்??” என்னால் நம்பவே முடியவில்லை.அவளைத் தூக்கி நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டேன்.அவளை அப்படியே மார்புறத் தழுவி ஆறுதல் கூற வேண்டும் போலிருந்தது.ஆனால் மறு நிமிடமே மனம் மாறி எனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டேன். கண்களை மூடினாலும் தூக்கம் வர மறுத்தது. ”உடல் மெலிந்து கவலை தோய்ந்த முகத்துடனிருக்கும் மோகனாவைப் பார். உன் மீதான அன்பு தானே அவளை இந்தளவுக்கு மாற்றியிருக்கின்றது.பெண்ணுரிமை பேசியவளை ஒரு பேதைப்பெண் போல உன் காலடியில் விழுந்து கதற வைத்திருப்பது உன் மீதான உண்மையான காதல் தானே.அவளைப் போய்க் காயப்படுத்துகின்றாயே?? நீயெல்லாம் ஒரு மனிதன் தானா? “ என் மனச்சாட்சி மீண்டும் என்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.எழுந்து வரவேற்பறைக்கு வந்தேன். மோகனா சோபா ஒன்றில் உட்கார்ந்திருந்து எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.முகத்தில் கவலை ரேகைகள் தாராளமாகப் பரவியிருக்க கண்களின் ஓரமாய்  சில கண்ணீர்த்துளிகள் இன்னமும் காயாதிருந்தன. அவளைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.அந்த நிமிடத்தில் என் மனதிலிருந்த கோபம்,அகந்தை எல்லாம் எங்கோ சென்று மறைந்திருந்தன.நான் அவளிடம் தோற்றுப் போயிருந்தேன். அவளுக்கு அருகாமையில் சென்று அமர்ந்தேன்.அமர்ந்ததும் மோகனா என் கைகளைப் பற்றிக்கொண்டு “என் மேல் கோபம் இன்னும் தீரலையா? ‘என்று வினவினாள்.அவல தலையை மெதுவாக வருடியவாறு “ உம் மேல கோபம் இல்லம்மா” என்றேன். “இனி மேல் தேவையில்லாம சண்டை பிடிக்க மாட்டன்.இந்த பதினைஞ்சு நாளில நான் பட்ட வேதனையே போதும்” என்றாள் மோகனா.

“உன்னில மட்டும் இல்லம்மா என்னிலையும் நிறையப் பிழைகள் இருக்கு. என்ர அப்பா அம்மாவ பற்றி உனக்கு பெரிசா தெரியாது.நான் சின்னப்பையனா இருக்கேக்க அப்பா ஒவ்வொரு நாளும் குடிச்சிட்டு வந்து அம்மாவுக்கு அடிப்பார்.அம்மா அழும் போது எனக்கும் அழுகை அழுகையாய் வரும்.நானும்  அழுவேன்.ஒரு நாள் கோபத்தில் “அப்பா இல்லாட்டி நாம சந்தோசமா இருக்கலாம்.இல்லம்மா” என்று சொல்லிவிட்டேன். எனக்கு அடிச்சே இராத அம்மா அண்டைக்கு எனக்கு அடிச்ச அடி வாழ்க்கையில  மறக்கேலாது.அம்மாவுக்கு அப்பா மேல சரியான  பாசம். கொஞ்சக் காலத்தால அப்பாவும் இதை உணர்ந்து கொண்டார்.குடியை முழுமையாய் விட்டார். பிறகு அப்பா அவர் செய்யப்போற ஒவ்வொரு முக்கிய காரியத்தைப் பற்றியும் அம்மாவோட கலந்தாலோசிப்பார்.இத்தனைக்கும் என் அப்பா ஒரு நிர்வாக அதிகாரி.அம்மா ஏ/எல் கூட முடிக்கல.அம்மாவின் சொற்களுக்கு அப்பா மனசார  மதிப்பளித்தார் .அதுக்கு காரணம் அம்மா தன்னை முழுமையா நேசிப்பவள்.அவள் சொல்றது தன்னுடைய நன்மைய முன்னிட்டுத் தான் இருக்கும் எண்டு அப்பா நம்பியது தான்.”என்ன மனிசனாக்கினவள் அவள்.அவள் மட்டும் இல்லாட்டி நானும் குடும்பமும் நாசமாய்ப் போயிருக்கும்” என்று அப்பாவே பல தரம் எங்களிட்ட சொல்லியிருக்கிறார். அம்மாக்கு பெண்ணுரிமை எண்டா என்னென்டு தெரியாது.அம்மா பெண்ணுரிமை பேசியிருந்தா எங்க அப்பாவ திருத்தியிருக்கவும் முடியாது.                                    அம்மா இறந்த பிறகு அப்பா பைத்தியம் பிடிச்சவர் போல ஆயிட்டார். “பாக்கியம்,பாக்கியம்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். அம்மா இறந்து ஐஞ்சாம் நாள் அவரும் எங்கள விட்டுப் பிரிஞ்சிட்டார். இந்த உண்மையான பாசத்த ஆணாதிக்கத்தாலோ பெண்ணுரிமையாலோ விளங்கப்படுத்த முடியாதும்மா.புருசனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுறது பெரிய விசயம்.நீ சமைக்கேக்க நான் ஆம்பிளை எண்டு சும்மா நிக்கேல்லையே நானும் தானே உனக்கு வந்து உதவி செய்தன்.நீ அடிமை எண்டா நானும் அடிமை தானே.இதில எங்கம்மா ஆணாதிக்கம் இருக்கு? பெண்ணுரிமை பேசுறத நான் தப்பு சொல்லல.ஆணாதிக்கத்தின்  கொடுமைகள்  இருக்கிற வரை அது தேவையான விசயம் தான். ஆனா நல்லதொரு குடும்பத்தில இந்த ரெண்டுக்குமே இடமில்ல.  குடும்பம் எண்டுற வண்டில நீயும் நானும் ரெண்டு சில்லுகள்.நமக்குள்ள யாரும் பெரியவங்களும் இல்ல சின்னவங்களும் இல்லம்மா” என்று என் மனதிலிருந்ததை எல்லாம் கொட்டி முடித்தேன்.மனதிலிருந்து  ஏதோ பெரிய பாரம் இறங்கியது போல் ஒரு உணர்ந்தேன்.


என் கைகளை கண்ணீர்த்துளிகள் நனைக்கவே மோகனாவைத் திரும்பிப் பார்த்தேன்.மோகனாவின் கண்கள் கலங்கியிருந்தன.அவளை கண்ணீரைத் துடைத்து விட்டு என் மார்போடு சேர்த்து அணைத்து உச்சி மோந்து முத்தமிட்டேன்.அந்த வினாடியில்  சொர்க்கம் பூமிக்கு வந்துவிட்டதாய் உணர்ந்தேன் நான்.