ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 30 December 2013

போட்டிச் சிறுகதை-52

சிறுகதை-வினாயகமணாளினியின் பெருங்கதை


சில சம்பவங்களில் சந்தித்தவர்களை மறக்க இயலாது. அதற்கு காரணமே இல்லாமல் கூட இருக்கலாம். இப்படி ஒரு மதிய வேளையில் திருச்செந்தூர் நீதிமன்ற வாசலில் பார்த்த அந்த சம்பவமும் அறிமுகமான நபர்களும் நினைவில் இன்னமும் இரத்தம் வரக் கீறுகிறார்கள்.

நான் கிளைக் கருவூலத்தில் பணம் கட்டி பத்திரம் வாங்க வந்திருந்தேன். பத்திரம் விற்பதுதான் என் தொழில். ஸ்டேட் பாங்கில் பணம் கட்டிவிட்டு சாயங்காலம் பத்திர டெலிவரிக்காகக் காத்திருந்தேன். அங்கே வினாயகமணாளினி என்ற கணக்கர் எனக்கு நன்கு பரிச்சயம். என்னைப் போன்ற விபரம் பற்றாக்குறையான கஸ்டமர்களுக்கு விழுந்து விழுந்து உதவுவாள். அவள் இல்லையென்றால் முருகன் சந்நிதிக்கு அருகிலே இருக்கும் அந்த பிராஞ்சுக்கு என்னைப் போன்ற பலர் வருவதைத் தவிர்ப்பார்கள். அப்படி ஒரு பாங்கு.

பிரதிபலன் பார்க்காமல் உதவுபவர்கள் கூட சொந்தப் பிரச்சினைகளின் முன்னிட்டு சில நாட்களில் எரிந்து விழுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வினாயகமணாளினியை ஒரு நாள் கூட முகத்தில் கடினத்துடன் நான் கண்டதில்லை.

இப்படி காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் எனது பொழுதுபோக்கு நீதிமன்ற வாசல்தான். அருகிலேயே தாசில்தார் அலுவலகமும் உள்ளதால், விதவிதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். சில நேரங்களில் பொய் சாட்சி சொல்லி நூறு இருநூறு என்று மதிய உணவை தேத்தியிருக்கிறேன்.

அன்றும் அப்படித்தான் வேடிக்கை பார்க்கப் போய் அவர்களில் கரைந்தேன்.

*****

ராஜபாண்டி நாடரை அந்த ஊரே கொண்டாடும். ஊரில் உள்ள எல்லோருக்கும் தேவையான மளிகைச் சாமான்களை விற்பது மட்டுமில்லாமல், அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் பாதி ஆயுளைக் கடந்து விட்டிருந்தவர்களுக்கு வடிகாலாய் இருப்பதும் அவர் கடை முன்னால் போட்டிருக்கும் பந்தலும் பெஞ்சுகளும்தான். ஊர் புரளி பேசுபவர்களையும் தேசப்பற்றோடு அரசியலை அலசுபவர்களையும் அவர் அன்பாக அரவணைத்துக் கொள்வார். காலையும் மாலையும் அவர் மனைவி சிவந்திகனி போட்டுக் கொடுக்கும் இஞ்சி மணக்கும் டீக்காகவும் சிலர் கூடுவதுண்டு அங்கே. அவர் வீடு கடைக்குப் பின்புறம் இருந்தது. காக்கா கூட்டில் குயில் முட்டையிடுவது போல்தான் அவர் வீட்டில் திருவிழா தினந்தோறும் நடக்கும்.

சுப்பையா பிள்ளை வாத்தியாருக்கு மட்டும் அவர் கடைக்கு உள்ளே கல்லாவிற்கு அருகில் சேர் போட்டுக் கொடுப்பார். அவருக்குப் படித்தவர்களைக் கண்டால் அவ்வளவு பிரியம். வீட்டில் முத்தவனாகப் பிறந்து அப்பாவிற்கு துணையாக தொழிலில் இறங்கிவிட்டதால் படிப்பதற்கு பிராப்தி இல்லாமல் போய் விட்டது. அவரது தம்பிகளான முருகபாண்டியும் கணேசபாண்டியும் கூட அப்பாவின் கண்டிப்புக்குப் பயந்து படிக்காமல் கம்பி நீட்டியவர்கள் சென்னையில் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். படிப்பு தன் குடும்பத்திற்கே எட்டாக் கனியானதால், அவருக்கு வாத்தியார் மேல் ஏற்பட்ட அந்த மதிப்பு கலந்த பிரியம் நாளாவட்டத்தில் பாசமாக பக்குவப்பட்டிருந்தது. வாத்தியார் கடையை மூடு என்றால் மூடி விடுவார். ஏன் என்று கூட கேட்க மாட்டார்.

சுப்பையா பிள்ளைக்கு ஊர் சுற்றுவது நிரம்பப் பிடிக்கும். நீள விடுமுறை கிடைத்தால் போதும் குடும்பத்தோடு கொடைக்கானல் ஊட்டி என்று எங்காவது சுற்றுலா சென்று விடுவார். ராஜபாண்டிக்கு ஞாயிறு கூட ஒய்வு இல்லை. கடைக்கு ஷட்டர் போடும் போதுதான் விசாலாட்சியோ மதியழகியோ "அண்ணாச்சி...." என்று ஓலமிட்டு ஓடிவருவார்கள். பிறகு எப்படி ஓய்வது.

அன்று சுப்பையாபிள்ளை அரக்கப் பறக்க ஓடி வந்தார். "ராஜபாண்டி உடனே புறப்படு...இன்னிக்கு ராத்திரி ராமேஸ்வரம் போறோம் நியும் வர்ற..."

"ஐயா...." ராஜபாண்டி தலையை சொறிந்தான். "நீங்க எப்படியும் இரண்டு மூனு நாள் சுத்திட்டு வருவீங்க எனக்கு வியாபாரம் கெட்டுப் போகும்..."

"அதெல்லாம் ஒன்னும் ஆவாது... சிவந்திகிட்ட என் பொஞ்சாதி பேசிட்டா... உன்ன மாதிரியே அவளையும் ஏம்பா இந்த ஊருக்குள்ளேயே அடைச்சி வச்சிருக்கே...அவளுக்கும் நாலு ஊர கண்ணுக்குக் குளிச்சியா காட்டுப்பா..."

"பாப்பா..."

"ஒன்னும் பிரச்சினையில்லை வண்டியிலேயே தொட்டில் கட்டிக்கலாம்..."

அதற்கு மேல் ராஜபாண்டியை பேச விடவில்லை வாத்தியார்.

*****

குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வருபவரின் கண்களைப் போல சிவந்து சூரியன் கடல் மட்டத்திற்கு மேல் எழும்புவதை ராஜபாண்டியும் சுப்பையாபிள்ளையும் ஒரு கவிதையைப் போல ரசித்துக் கொண்டிருந்தனர்.

கடலுக்குள் இறங்கி குளித்து பல ஆண்டுகள் இருக்கும். சிறு வயதில் மணப்பாடு கடலில் பயந்து பயந்து நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்ததை நினைத்துக் கொண்டார் ராஜபாண்டி. இங்கே ஆண் பெண் சிறுவர் பெரியவர் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கடலில் மீன் போல துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது பார்க்க இனித்தது.

"நாமும் இங்கேயே குளித்தால் என்ன?" ராஜபாண்டி சந்தேகமாய் வினவினார்.

"ஓய் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தது ரூம்ல குளிக்கவா? நல்லா கேக்குறியே? துண்ட கட்டிகிட்டு இறங்கிட வேண்டியதுதான். அம்மா ராசாத்தி நீனும் சிவந்தியோட தயாராயிட்டு வா" சுப்பையாபிள்ளை எல்லோரையும் உசிப்பினார்.

"பாப்பா...?"

"அவள  முதல்ல நான் பாத்துக்கிறேன்...நீங்க குளிச்சிட்டு வந்ததும் நான் குளிக்க போறேன்..."

"வேண்டாம்... டிரைவர் தம்பி பாத்துக்குவார்... அவ வண்டிலதான் தொட்டில்ல தூங்குறா..."

"தம்பி பிள்ளைய பாத்துக்குங்க... முழிச்சா சத்தம் கொடுங்க..."

பெண்களுக்கு சிறிது சங்கோஜம் இருந்தாலும் கூட்டத்தில் எல்லாம் துளிர்ந்து போயிற்று.

ராஜபாண்டியும் சிவந்தியும் கையைக் கோர்த்துக் கொண்டு தண்ணீரோடு போகவும் வரவுமாக ஊஞ்சல் போல மிதந்து விளையாடினர். சுப்பையாபிள்ளைக்கு ராஜபாண்டியின் ஆனந்தத்தைப் பார்க்க சுவராஸ்யமாக இருந்தது.

"ராசாத்தி, பாத்தியா... இந்த பசங்க பிசினஸ் பிசினஸ்னு வாழ்க்கையை மறந்துடுரானுக... இனிமே நாம எங்கப் போனாலும் வருவேன்னு அடம் பிடிப்பான் பாரு..."

"எனக்கு சிவந்திய பாக்கத்தான் பிரமிப்பா இருக்கு... குழந்தை மாதிரி அவ துள்ளுறத பாருங்க..."

"ஓய் உள்ள தள்ளி போகாதிங்க... கிணற்று நீச்சல் கடலுக்குப் புரியாது..."

ஓங்காரமாய் ஒலிக்கும் அலையின் பேரிரைச்சல்களும் மனிதர்களின் சந்தோஷ சம்பாசனைகளும் சங்கமித்து ஒரே அலைவரிசையானது.

*****

தலை துவட்டி, வேட்டியை கட்டிக் கொண்டு சூரியனைப் பார்த்து தலையில் போட்டுக் கொண்டார் சுப்பையாபிள்ளை. "பகவானே இன்னைக்கு முழுதும் உன் அனுக்கிரகம் வேணும்..."

"இந்த வருசமாவது எங்களுக்கு ஒரு பிள்ளைய தாப்பா..." ராசாத்தி முனகிக் கொண்டே அவர் அருகில் வந்தாள்.

"என்னங்க சிவந்திக்கும் அவ புருசனுக்கும் கடலவிட்டு வெளிய வர விருப்பம் இல்ல போல..."

பிறகு தேடி தேடி எங்கும் கிடைக்காமல்... ராஜபாண்டியும் சிவந்தியும் வெவ்வேறு திசைகளில் சடலமாக ஒதுங்கினர்.

சுப்பையா பிள்ளைக்கு அடித்து துவைத்து உலர்த்தியது போல் இருந்தது. இதற்காகத்தானா வலுக்கட்டாயமாக ராஜபாண்டியை இழுத்து வந்தோம்.

பிறகு என்ன என்னவோ நடந்து முடிந்து விட்டது. ராஜபாண்டியின் சகோதரர்கள் அவரது பூர்விக சொத்தை பங்கு போட காட்டிய ஆர்வத்தை பாப்பாவின் மீது காட்டவில்லை. ஊரில் யாரிடமோ தூரத்து சொந்தத்திடமோ  பாப்பாவை விட்டுவிடவும் சுப்பையாபிள்ளைக்கு மனசு ஒப்பவில்லை. ராசாத்தியும் பாப்பாவைத் தன் பிள்ளையாகவே வளர்க்கத் தயாரானாள்.

ஒருவருடத்திற்குப் பிறகு காந்தி என்றொரு பையனும் அவர்களுக்குப் பிறந்தான்.

*****

காந்தி இப்படி எடுத்தெறிந்து பேசுவான் என்று சுப்பையாபிள்ளை எதிர் பார்க்கவில்லை. வினாயகமணாளினியை காந்திக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் வேண்டாம் என்பதற்கு அவன் சொன்ன சாக்குப் போக்குகள் தான் சகிக்கவில்லை. முதலில் "முன்று வயது அதிகம்" என்றான், பிறகு "தங்கை போல் பழகியிருக்கிறேன்" என்றான்.

எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்ற சுப்பையாபிள்ளையின் நம்பிக்கையை உடைத்தான் மூன்றாம் நாளில். மாலையும் கழுத்துமாய் அவன் அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்டெனோவுடன் வந்து ஆசிர்வதிக்க வேண்டினான். சுப்பையாபிள்ளை பேசவில்லை. வாசலை நோக்கி கையைக் காட்டினார். அவருக்கு கோபம் வந்தால் பேச மாட்டார். அவர் உணர்ச்சியை புரிந்து நடந்து கொண்டால் தப்பிக்கலாம்.

வினாயகமணாளினிதான் விக்கித்துப் போனாள். விபரம் தெரிந்தது முதல் காந்தி அவளுக்கு கணவனாகத் தான் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறான் சுப்பையாபிள்ளையால். இது அவரின் தவறானாலும், சுப்பையாபிள்ளைக்கு இது கடனாகத்தான் பட்டது. இந்தக் கடன் வட்டி போட்டுத்தான் வளரும் போல.

*****

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர்களை அறிந்த பலரும் பச்சாதாபமாய் பார்த்தது எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது. நானும் கூட்டத்தை விலக்கிவிட்டு எட்டிப் பார்த்தேன்.

அவருக்கு ஓய்வுபெற்று ஒன்றிரண்டு வருடங்கள் இருக்கும் என்று மதிக்கத் தோன்றும் வயது. நான்கைந்து மிதிபட்ட பஞ்சுப் பொதியைப் போல துவண்டு கிடந்த ஒரு வாலிபனை வீல்சேரில் வைத்து தள்ளி வந்தார். வயதானவர்தான் சுப்பையாபிள்ளை என்றும் வாலிபன்தான் காந்தி என்றும் பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஒரு விபத்தில் காந்தி இரண்டு கால்களையும் இழந்திருந்தான். முகமும் அசிட் ஊற்றியது போல கோரமாகியிருந்தது.

திருமணமான ஒரே மாதத்தில் இப்படி ஆகிவிட்டதால் காதலித்து மணந்து கொண்டவள் விடுதலை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறாள். சட்டமும் காந்தியும் சம்மதித்து விட்டனர் அதற்கு.

ஒரு படி வீல்சேரை கீழே இறக்க வேண்டும். யாரோ ஒரு பெண் குனிந்து ஒரு கை கொடுத்து வீல்சேரோடு காந்தியையும் தரைக்கு இறக்கினாள்.

"மாமா கவலைப் படாதீங்க அண்ணன இனி நான் பாத்துக்கிறேன்..." சுப்பையாபிள்ளையை விலக்கிவிட்டு வீல்சேரை அவள் தள்ள தொடங்கினாள்.

நன்கு உற்று பார்த்தேன். அட அவள் எனக்குத் தெரிந்தவள் தான். அது விநாயகமணவாளினி.

******