ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday, 26 December 2013

போட்டிச் சிறுகதை-44


சிறுகதை- வாழ்க்கை சில மாறுதல்களுக்குட்பட்டது!


டீயைக் குடித்து முடித்து விட்டு நுரை மட்டும் மீதமிருந்த கண்ணாடி டம்ளரை டேபிள் மீது வைத்தவன் கிங்ஸ் சிகரெட் ஒன்றை வாங்கிக் கொண்டு கடையின் பின்புறமிருந்த மறைவான இடத்துக்கு சென்றான். அங்கு பள்ளி மாணவர்கள் என்று மதிப்பிடக்கூடிய நான்கைந்து பேர் ரகசியமாக புகை ஊதிக் கொண்டிருந்தனர். இந்த இடம் புகை பிடிப்பவர்களுக்காகவே மறைவாய் ஒதுக்கப்பட்டிருப்பதால் திருட்டு தம் அடிப்பவர்களுக்கு இது சாதகமாய்ப் பட்டது. சரவணன் பொது வெளியிலேயே அடித்திருக்கலாம்தான் இருந்தாலும் சொந்த ஊரில் தெரிந்த முகங்களின் முன்னால் புகை ஊதிக்கொண்டிருப்பது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று யோசித்துதான் உள்ளே வந்தான். சிகரெட்டைப் பற்ற வைத்தவன் அங்கிருந்த தென்னை மரம் ஒன்றில் சாய்ந்து ஊதத்தொடங்கினான்.

இந்த இருபத்தெட்டு வயதில் சரவணனுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இருக்கவில்லை. சுதந்திரப் பறவையாய் எல்லையின்றி பறக்கும் அவனது சிறகுகள் திருமணத்துக்குப் பின் முறிக்கப்பட்டு ஒரு வட்டத்துக்குள் அடக்கப்பட்டு விடும் என்றே அவன் நினைத்தான். சரவணன் வீட்டுக்கு ஒரே பையன்... அவனது பெற்றோர்என் பேரப்புள்ளையை தூக்கிங்கொஞ்சுற ஆசை எங்களுக்கு இருக்காதா?” என்று அருகப்பழசான வசனத்தைப் பேசிப்பேசியே ஒரு வழியாய் சரவணனை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்தனர். திருப்பூர் கே.எஸ்.டி டெக்ஸ்டைல்ஸில் முதன்மை செயல் அலுவலராய் பணிபுரியும் சரவணனுக்கு உடுமலைப்பேட்டையில் வசதியான குடும்பத்திலிருந்தே பெண் கிடைத்தது. முதுகலை வணிகவியல் பட்டதாரியான அந்த பெண்ணை பார்த்ததும் சரவணன் மறுப்பேதும் சொல்லவில்லை. “எனக்குன்னு இருக்குற ஒரே வாழ்க்கையை பங்கு போட ஒருத்தி வந்துட்டாஎன்று உள்ளுக்குள் யோசித்து சிரித்துக் கொண்டான். நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிறது. திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணி நிமித்தமாக கம்பெனிக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்து விட்டான். தூக்கநாயக்கன்பாளையத்தில் இவனது நண்பர்களைத் தவிர்த்து இவனுக்கு பெரிய அளவில் யாரும் பரிச்சயம் கிடையாது என்பதால் இவனது அப்பா மாணிக்கம்தான் தெரிந்தவர்களை அழைக்க இரண்டொரு நாட்களில் வருவதாக இருந்தார். இருந்தும் தனது நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்கும் பொருட்டு அவன் காலையிலேயே தூக்கநாயக்கன்பாளையம் வந்து விட்டான்.

வாழ்க்கை சில மாறுதல்களுக்குட்பட்டது என்ற உலகப் பொது விதி இவனுக்கும் தெரியும். ஆனால் இந்த பதினோரு ஆண்டு காலத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை சரவணன் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாமே அவனுக்கு விசித்திரமாகப் பட்டது. அவன் நடை பயின்ற தூக்கநாயக்கன்பாளையத்து தெருக்களா இவை என்கிற குழப்பமும் அவனுள் சூழ்ந்திருந்தது. இன்று அன்பு காம்ப்ளக்ஸ் என்று ஓங்குதாங்கி உயர்ந்திருக்கும் வளாகம் இருக்கும்  இடத்தில் அன்று பழைய கட்டடம் ஒன்றிருந்தது, மளிகைக்கடை ஒன்று இயங்கி  வந்த அந்தக்கட்டடத்தின் பின்புறத்தில் வாரத்தின் சில நாட்களில் மீன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ பேக்கரி, ஸ்டுடியோ, சலூன், செல்காம், ரெடிமேட்ஸ் என பல கடைகள் அந்த வளாகத்தை நிறைத்திருந்தன. அண்ணாசிலை பேருந்து நிறுத்தத்தில் அன்று இவன் பார்த்ததை விட இன்று கடைகளும் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே தென்பட்டன.  ஆங்காங்கே தெரிந்த முகங்கள் பேருந்துக்காக காத்திருப்பதும், பீடி இழுத்துக் கொண்டும், டீ குடித்தபடியே அரட்டை அடித்துக் கொண்டும் தட்டுப்பட்டன. அந்த பிரம்மிப்பில் இருந்து மீளாமல் ஊரையே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் வாழ்க்கை பாதை எங்கோ தொடங்கி எங்கெங்கோ நம்மை கொண்டு சேர்த்து விட்டாலும் தொடங்கிய இடத்திலேயே பயணம் முடிவதால்தான் உலகம் உருண்டை என்கிறார்களோ என்று யோசித்தபடியே ஊருக்குள் வண்டியை முடுக்கினான்.

வாழ்க்கை என்பது ஒரு பகடையாட்டம் இதில் வெற்றியும் தோல்வியும் உருட்டுபவர்களது கையில் இல்லை என்கிற எண்ணம் சரவணனின் மனதுக்குள் வேர் பரப்பியிருந்தது. அதற்கு அழுத்தமான காரணமும் உண்டு. பட்டிக்கடை பேருந்து நிறுத்தத்தில் தமிழன் தையலகம் நடத்திக் கொண்டிருந்த இவனது அப்பா மாணிக்கம்தான் ஒரு காலத்தில் ஊரின் முக்கியமான தையலராய் இருந்தார். பரபரப்புடன் மரக்கோலில் அளவெடுத்து மார்க்கரில் குறித்து துணியை வெட்டுவதும் ஒட்டுவதுமாய் இருக்கும் தந்தையைத்தான் சரவணன் பார்த்திருக்கிறான். மாணிக்கத்திடம் துணியைத் தைக்கக் கொடுத்து விட்டு இரண்டு மூன்று முறை நடையாய் நடந்த பின்புதான் வாங்க முடியும் என்கிற சூழல் இருந்தது. தீபாவளி, பொங்கல் சமயங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அப்பொழுதெல்லாம் மாணிக்கத்தைக் கையில் பிடிப்பதே முடியாத காரியம். வாழ்க்கை வண்டி அதிவிரைவு தொடர் வண்டியைப் போல் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தண்டவாளங்களில் இருந்து ரயில் தடம் புரள்வதற்கு பெயர் விபத்து என்றால் அப்படியொரு விபத்து மாணிக்கத்துக்கும் ஏற்பட்டது. தூக்கநாயக்கன்பாளையம் சிறிது முன்னேற்றத்தைக் கண்ட சமயம் புதிது புதிதாக முளைத்த ஓரிரண்டு தையலகங்கள் பல வித மாடல்களில் தைத்து ஊராரை அசத்தியது.  ஜன்னல் வைத்த ஜாக்கெட் கூட தைக்கத் தெரியாத மாணிக்கத்துக்கு இது பெருத்த அடியாக இருந்தது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த மக்களும் எண்பதுகளிலேயே இருப்பார்கள்.

வாழ்க்கை சில மாறுதல்களுக்குட்பட்டதுதானே, மாணிக்கத்தின் தொழில் படுத்தது. எந்நேரமும் நிற்க நேரமில்லாமல் தையல் மெஷினே கதி எனக் கிடக்கும் மாணிக்கமோ வழக்கமான பரபரப்புகளற்று முடங்கிப் போய்க்கிடந்ததைப் பார்க்க சரவணனுக்குள் வேதனையாய் இருந்தது. அப்போது அவன் பங்களாப்புதூர் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. இனியும் இந்த மண்ணில் பிழைப்பை நகர்த்த முடியாது என்பது மாணிக்கத்துக்கு உறுதியாய் பட்டது. திருப்பூர் பனியன் கம்பெனிகளில் தையலர்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. சொந்த ஊரில் பிழைக்க வழியற்றவர்கள் எல்லோரும் திருப்பூர் என்னும் டாலர் சிட்டியில் தஞ்சம் புகுகின்றனர். மாணிக்கமும் அந்த முடிவைத்தான் தேர்ந்தெடுத்தார்.
சரவணனின் தேர்வு முடிந்ததும் திருப்பூருக்கு மூட்டை முடிச்சுகளோடு சென்று விட்டனர்பல்லாயிரம் பேருக்கு வாழ்வு கொடுக்கும் இந்த திருப்பூர் மாநகரம் இவர்களை வாரி அணைத்துக் கொண்டது. மாணிக்கத்துடன் அவனது அம்மா செல்வியும் பனியன் கமெனிக்கு சென்றார். சொந்த மண்ணை விட்டு பிரிந்து விட்டோமே என்கிற கவலையைத் தவிர்த்து அவர்களுக்கு வேறெந்த கவலைகளும் இருக்கவில்லை. தூக்கநாயக்கன் பாளையத்துக்காரர்கள் தன்னைக் கை விட்டு விட்டார்கள் என்கிற கோபம் மாணிக்கத்துக்குள் இருந்தது. சரவணனைப் பொறுத்தமட்டிலும் பிழைக்க வழியின்றி ஊரை விட்டு வந்தாலும் அவர்கள் மூக்கின் மேல் விரல் வைத்துப்பார்க்கும்படி முன்னேறிக் காட்டிவிட்டு வெற்றிக்களிப்போடுதான் அந்த மண்ணில் கால் பதிக்க வேண்டும் என நினைத்தான்.

எம்பொழப்புத்தான் இப்படி படிக்காததால நாசமாப்போச்சு நீயாவது நல்லா படிடாஎன்று மாணிக்கம் விரக்தியில் உதிர்த்த வார்த்தைகள் சரவணனை உந்தியது. பள்ளிக்காலங்களில் படிப்பு மீது அக்கறை எடுத்துக் கொள்ளாதவன் சிக்கண்ணா கல்லூரியில் இளங்கலை வணிக மேலாண்மை படிக்க சேர்ந்ததிலிருந்து புத்தகமும் கையுமாகவே சுற்றித் திரிந்தான். “நானா இப்படியெல்லாம்என்கிற கேள்வி அவனுக்குள்ளாகவே வந்தது. “தோ... வந்துட்டார்றா படிப்பாளி..” என்ற சக மாணவர்களின் கிண்டல்களை காதில் வாங்கிக்கொள்ளும் மன நிலையில் இல்லை. மூன்றாண்டு கால படிப்பு முடிந்தது அவனது மதிப்பெண்ணை அவனே நம்ப முடியாத உணர்வோடுதான் பார்த்தான். கண்ணைத் துடைத்து விட்டு நன்கு உற்றுப் பார்த்தான் அவனால் நம்பவே முடியவில்லை பங்களாப்புதூர் பள்ளியில் ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்களில் ஃபெயிலாகி பெரும்பான்மையான நேரம் வகுப்புக்கு வெளியேயே நின்ற நானா 95 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளேன் என்பது போல இருந்தது அவனது குழப்பப் பார்வை. வாழ்க்கை என்பது மாறுதல்களுக்குட்பட்டதுதானே. நல்ல சதவிகிதம் என்பதால் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை படிக்க மெரிட்டில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு ஆண்டு கால விடுதி வாழ்க்கை அவனுக்கு பலவற்றை கற்றுக் கொடுத்தது. நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டது போலொரு உணர்வு அவனது படிப்பு முடிந்தது. கே.எஸ்.டி டெக்ஸ்டைல்ஸில் முப்பதாயிரம் ரூபாய் ஊதியத்தில் செயல் அலுவலராய் பணியில் சேர்ந்தான். எப்படியும் தன் மகன் நல்ல நிலைக்கு வருவான் என பாடுபட்ட மாணிக்கத்தின் நம்பிக்கை வீண் போகவில்லை இரண்டே  ஆண்டுகளில் சரவணன் முதன்மை செயல் அலுவலராய் பணி உயர்த்தப்பட்டான்.

சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தவன் கடைக்குள் வந்து குடித்த டீக்கும், இழுத்த சிகரெட்டுக்கும் சில்லரையைக் கொடுத்து விட்டு வெளியே வந்தான். தனது வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதை ஊராருக்கு பறை சாற்றும் விதமாக இருந்தது அவனது கரிஷ்மா வண்டி. “ஒன்னேகால் லட்சத்துக்கு வண்டி வாங்கணுமா?” என்று அம்மா செல்வி மறுத்த போது மாணிக்கம்தான்அவன் சம்பாதிக்குறான் வாங்குறான் நம்ம பையன் பந்தாவா எந்தக் குறையும் இல்லாம சுத்துறதுக்கு எத்தனை லட்சத்துல வேணாலும் வாங்கிக்கட்டும் ஆனா ஒன்னே ஒன்னுதான் கவனமா ஓட்டணும்டாஎன்று சொன்ன பிறகுதான் இந்த வண்டியை எடுத்தான். தோரணையான இந்த வண்டியில் பயணிக்கும்போதெல்லாம் சரவணனுக்குள் ஒரு நாயகத்தன்மை வந்து விடும். சாவியைத் திருகி ஷெல்ஃப் ஸ்டார்ட் செய்தவன் வண்டியை தமிழ்நகர் நோக்கி செலுத்தினான்.

பள்ளிக்காலத்தில் தன்னுடன் டாம் அண்ட் ஜெர்ரி, பவர் ரேஞ்சர்ஸ் கார்டூன்களை பற்றியும் கெய்னின் இரும்புப்பிடி குறித்தும் ரஜினியின் சண்டை குறித்தெல்லாம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்த நண்பர்களில் சிலர் மணமுடித்திருந்தார்கள் இன்னும் சிலருக்கு குழந்தையே பிறந்திருந்தது. திருமண அழைப்பிதழ் கொடுப்பது இது போன்ற நமது பழைய நினைவுப்புதையலை கிளறிவிடுவதற்கான சந்தர்ப்பம்தான். வாழ்வில் எதுவும் நிரந்தரமல்ல என்பது அவர்களோடு பேசும்போது புரிந்தது. விளையாட்டுத்தனமாக வாழ்க்கை குறித்து எந்த வித கவலையோ அக்கறையோ அன்றி விடலைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்தவர்களா இன்று வாழ்க்கையின் கோரப்பிடியில் நாம் அகப்பட்டு விட்டோம் என்று தத்துவம் பேசுகிறார்கள் என்பது சரவணனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. இவர்களே இப்படி மாறுகையில் ஊர் மாறிவிட்டதில் பெரிய வியப்பொன்றுமில்லை என சரவணனுக்கு பட்டது. காலங்கள் கடந்து போயினும் வீடு தேடி வந்து அழைத்ததில் சரவணன் மீது பலரும் பெருமிதம் கொண்டனர்.

தமிழ்நகர் பேருந்து நிறுத்தம் என்று மஞ்சள் நிற போர்டில் கருப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. முகப்பில் உள்ள வேப்ப மரத்துக்கடியில் வண்டியை நிறுத்தினான். தமிழ்நகரின் பிரதான சாலை குறுக்குவட்டாக சென்று சந்தை வீதியில் முற்றுப்பெறும். இந்த மாலை வேளையில் சாலையில் பலர் உட்கார்ந்து கதை பேசிய வண்ணம் இருந்தனர். குழந்தைகள் பலரும் சாலையில் குறுக்கு மறுக்காக ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். அதோ அங்கு இடப்புறமாக ஒரு பெட்டிக்கடையை அடுத்துள்ள வீடுதான் பழனிச்சாமியின் வீடு. நான்கு எட்டு வைத்தால் பழனிச்சாமி வீடு வந்து விடும்தான் இருந்தும் குழப்பம் சரவணனை ஆட்கொண்டிருந்தது. பழனிச்சாமியைப் பார்க்கத்தான் தமிழ் நகருக்கே வந்தான் இருப்பினும் அவன் இரண்டு மனதாய் இருந்தான்.

அடுத்த அடியை எடுத்து வைக்க சரவணனுக்குள் ஏற்படும் குழப்பத்துக்கும் ஒரு காரணம் இருக்கிறது. பங்களாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் துளிர் விட்ட பகைதான் அது. அறிவியல் துறை மாணவர்களுக்கும், கலைத்துறை மாணவர்களுக்கும் பொதுவாகவே மோதல்கள் இருந்து கொண்டே இருக்கும். அறிவியல் துறை மாணவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும், படிப்பாளிகளாகவும் நினைத்துக் கொள்வது கூட அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். இப்படியான இரண்டு அணிகளில் அறிவியல் துறை மாணவரணிக்குத் தலைமை தாங்கியவந்தான் பழனிச்சாமி. அதன் எதிரணியான கலைத்துறைக்கு தலைமை தாங்கியவன் சரவணன் என்பதுதான் இவர்களது பகையின் அடிநாதம்.

இவர்களைப் பொறுத்த வரைக்கும் கபடி என்பது விளையாட்டு மட்டுமல்ல இவர்களின் மோதலுக்கான களம் அது. எந்த அணியாகட்டும் வெற்றி வாய்ப்பை எட்டும் நிலையில் ஏதேனும் காரணத்திற்காக எப்படியேனும் கைகலப்பு ஏற்பட்டு விடும். பெரும்பாலும் சரவணனின் அணியே வெற்றியை எட்டுவதை பழனிச்சாமியால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பழனிச்சாமியை மிகச்சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்து தமிழ் நகரிலேயே அறிவியல் துறையில் படிக்கும் மாணவன் பழனிச்சாமிதான். படிப்பாளி என்பது மட்டுமின்றி அந்த வயதுக்கே உரித்தான காலரைத் தூக்கி விட்டுச் செல்லும் தெனாவெட்டும் நிறைந்தேதான் காணப்பட்டான். படிப்பாளிகள் தவறு செய்ய மாட்டார்கள் என்கிற பொதுவான எண்ணத்தை உடைத்தெறிந்தவன் பழனிச்சாமி பதான் பாக்கை வாயில் அதக்கிக் கொண்டும், பில்டர் சிகரெட்டை இழுத்துக் கொண்டும் திரிந்தவன்.

 அந்த ஆண்டு மாணவர் தலைவனுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியான போதுதான் அந்தப் பள்ளி சூடு பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் போட்டியிடும் வேட்பாளர்கள் சரவணனும், பழனிச்சாமியும்தான். ஆளாளுக்கு தங்களது படைகளைத் திரட்டிக் கொண்டு வகுப்பு வாரியாக சென்று வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார்கள்.

க்ளாஸ்க்கு டஸ்டர் இல்லையா, டெஸ்கு ஒடஞ்சு போச்சா, டஸ்ட் பின் இல்லையா எதுவா இருந்தாலும் பள்ளி நிர்வாகத்துகிட்ட பேசி வாங்கித்தர்றது என் பொறுப்பு என்னை மட்டும் நீங்க தேர்ந்தெடுத்தீங்கன்னா உங்களுக்கான எல்லாத் தேவைகளையும் நான் பூர்த்தி பண்றேன்என்றபடியாக பழனிச்சாமியின் பிரச்சாரம் சென்று கொண்டிருக்க, சரவணனின் பிரச்சாரம் வேறொரு கோணத்தில் இருந்தது. அது ஆசிரியர்களையும் திகைப்பில் ஆழ்த்தக்கூடிய பிரச்சாரமாக இருந்தது. “மாணவமணிகளே ஒன்றே ஒன்றை இந்த இடத்திலே நான் கூற விளைகிறேன். இந்தப் பள்ளியில் நீங்கள் படிக்க உங்களுக்கு அடிப்படையான தேவை டஸ்டரோ, டஸ்ட் பின்னோ அல்ல... வேறெது என்கிறீர்களா? அதுதான் தன்மானம். மாணவனுக்கு முக்கியமான அந்த தன்மானத்துடன் நீங்கள் கல்வி பயில வேண்டுமா? என்னை தேர்ந்தெடுங்கள் உங்களின் அத்தனை அடிதடி பிரச்சனைகளையும் நான் தீர்த்து வைக்கிறேன். வீட்டுப்பாடம் எழுதாதததற்கு ஆசிரியர் அடித்தால் கூட என்னிடம் சொல்லுங்கள்... சட்டப்படி ஆசிரியர் பிரம்பு வைத்திருப்பதே குற்றம் உங்களை அடிக்கும் ஆசிரியரை நாம் சட்டத்தின் வாயிலாக சந்திப்போம். எதற்கும் கவலை வேண்டாம் நம்மை நாம் நம்புவோம் யோசியுங்கள்என்று உரைநடையில் சரவணன் நிகழ்த்திய உரைதான் மாணவர்களை மிகவும் கவர்ந்தது. தாங்கள் கண்டு பயப்படும் ஆசிரியர் மீது எவ்வித பயமுமின்றி அவர்களை சட்டத்தின் வாயிலாக சந்திப்போம் என்று பேசுகிற துணிச்சல்தான் அந்தக் கவர்ச்சிக்கு முக்கியக் காரணமாயிற்று.

இதனால் எரிச்சலுற்ற பழனிச்சாமியின் தரப்பு காட்டத்துடன் ஒரு காரியத்தில் இறங்கியது. அதாவது சரவணனின் வகுப்பு ஆசிரியையும் சரவணனையும் இணைத்து வைத்து தவறான சொற்களைப் பயன்படுத்தி கழிவறை சுவர்களில் கிறுக்கியது. சரவணனின் தரப்பும் சும்மா இருந்து விடவில்லை அவர்களின் கிறுக்கலுக்குப் பக்கத்தில் கையில் விளைக்கைப் பிடித்துக் கொண்டு ஒருவன் நிற்பதை போல வரைந்து அவனின் தலைக்கு மேல் பழனிச்சாமி என்று எழுதியது. அதற்குப் பிறகு பழனிச்சாமியின் முன்பு ஜாடை மாடையாக பலரும்விளக்குஎன்கிற சொல்லை பல்வேறு வார்த்தைகளோடு இணைத்துப் பேசலாயினர். தான் வரைந்தது தனக்கே எதிராய் திரும்பியது பழனிச்சாமியின் கோபக்கனலில் மேலும் எண்ணெய் கொண்டு ஊற்றுவது போலிருந்தது.

பிரச்சார அலைகள் ஓய்ந்து வாக்களிக்கும் நாளும் வந்தது. வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களிடமெல்லாம் தனக்கு வாக்களிக்க வேண்டும்படி பழனிச்சாமி வலியுறுத்திக் கொண்டிந்தான் ஆனால் சரவணனுக்குள் எந்தச் சலனமும் இல்லை தான் நிச்சயம் வெல்வோம் என்கிற நம்பிக்கை அதீதமாக இருப்பதாலோ என்னவோ தேர்தல் முடிவு வரும் முன்னரே தூக்கநாயக்கன்பாளையத்திலிருந்து பட்டாசுகளை வாங்கி வரப்பட்டு விட்டன. பள்ளி நிறைவு பெறும் தருவாயில் முடிவுகளை அறிவிப்பதற்காக பள்ளி மைதானத்தில் கூட்டம் போடப்பட்டிருந்தது. “இந்த முடிவுகள் யாரையும் விரோதியாக்கி விடக்கூடாது என்று முன்னரே அறிவித்த பின்புதான் தலைமை ஆசிரியர் முடிவை படித்தார். சரவணன் தரப்பினர் 300 ரூபாய் கொடுத்து வாங்கி வந்த பட்டாசுகள் வெடிக்க ஆயத்தமாகின. ஆம் சரவணன் 250 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிச்சாமியை தோற்கடித்தான்.

 கலைத்துறை மாணவர்கள் அடைந்த வெற்றிக்களிப்புக்கு அளவே இல்லை. பள்ளி வாயிலில் பட்டாசு வெடிக்க முற்பட்ட போதுதான் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று பழனிச்சாமி தரப்பு பிரச்சனையைத் தூண்டியது அதற்குப் பிறகான சண்டை பள்ளி வளாகத்துக்கு வெளியில் நடந்ததால் பள்ளி நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை. ரத்தம் ஒழுக, சட்டை பட்டன்கள் கிழிய என சண்டை நடந்தது. பட்டாசுகள் தனக்கே உரிய இயல்பில் வெடித்துச் சிதறின. பின்னாட்களில் சரவணனை வெறுப்பேற்றும் பொருட்டே சம்பந்தமே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் எஸ்.பி.எல்தான் முடிவைச் சொல்லணும் என கடுப்பேற்றும் நிகழ்வுகளும் நடந்தது. பிறகு பொதுத்தேர்வை எட்டிய நிலையில் யாருக்கும் அங்கே சண்டையிட நேரமில்லை.

சரவணன் திருப்பூருக்கு வந்து கல்லூரி வாழ்க்கையை முடித்து விட்டு பணியில் அமர்ந்து விட்ட பிறகு பள்ளி வாழ்க்கை ஒரு வேடிக்கையானது எனத் தோன்றியது. அங்கு நடந்தேறிய சண்டைகளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் சரவணனுக்குள் சிரிப்பு வந்தது. மாணவப்பருவம் என்பதே குழந்தைத் தனமானதுதுதானே. சரவணனுக்கு தன் நண்பர்களைக் காட்டிலும் அந்நாட்களில் எதிரும் புதிருமாய் சுற்றித் திரிந்த பழனிச்சாமியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்தான் அதிகமாயிற்று. பள்ளிக்காலத்தில் ஏற்பட்டதெல்லாம் ஒரு பகையே அன்று என்பதுதான் சரவணனின் எண்ணம். புரிதல் உணர்வு இல்லாத போது எதிரியாய் இருந்தவனோடு இப்போது நட்பு பாராட்ட வேண்டும் என்கிற ஆவலோடுதான் இப்போது தமிழ் நகருக்குள் வந்து நிற்கிறான்.

தயக்கத்தை விடுத்து எட்டி நடையிட்டு பழனிச்சாமியின் வீட்டுக் கதவைத் தட்டினான். நைட்டி அணிந்த பெண் கதவைத் திறந்தாள். அநேகமாக அது பழனிச்சாமியின் மனைவியாக இருக்கக் கூடும்பழனிச்சாமிஎன்றதும், “ஏங்க உங்களை பார்க்கா யாரோ வந்திருக்காங்க..” என்று குரல் கொடுத்து விட்டுஉள்ள வாங்கஎன்றவள் வராந்தாவில் சேர் ஒன்றைப் போட்டு உட்கார வைத்தாள். முண்டாசு பனியனோடு உள்ளிருந்து வெளியே வந்த பழனிச்சாமி, சரவணனைப் பார்த்ததும் மெல்லிய  அதிர்ச்சிக்கு ஆளானான்

என்ன இப்படி பார்க்குற என்னத் தெரீலியா?” என்றான் சரவணன்.


தெரியாம என்ன, பெரிய மனுஷங்களெல்லாம் நம்ம வீடேறி வந்துருக்கீங்களேன்னு ஒரு அதிர்ச்சிதான்

இன்னும் நீ அதை மறக்கலையா? சரி வந்தவங்களுக்கு டீ போட்டுக் கொடுக்குற பழக்கமெல்லாம் இல்லையா?” என்றே சரவணன் புன்முறுவலுடன் கேட்க, சற்றே புன்னகையுடன் உள்ளே சென்றவன் டீ போடும்படியாக உத்தரவைப் பிறப்பித்து விட்டு இன்னொரு சேரை எடுத்து வந்து போட்டு அமர்ந்தான்.

கேள்விப்பட்டேன் சரவணா, திருப்பூர்ல ஏதோ டெக்ஸ்டைல் கம்பெனில சி..ஓவா இருக்கேன்னு, ரொம்ப சந்தோஷம்டா

நீ என்ன பண்ற பழனி கல்யாணமெல்லாம் ஆகிருச்சு போல

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு கோபிலதான் வேலை செய்யுறேன், படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் ஆகி ஒரு பையன் தெக்கு ஸ்கூல்ல ஒன்னாவது படிச்சுக்கிட்டிருக்கான்... எல்லாரும் கான்வெண்ட்ல சேத்த சொன்னாங்க எனக்கு பிடிக்கல... அதான் இங்கயே சேத்திட்டேன்.. உனக்கு எப்ப கல்யாணம்?”

அதுக்குத்தான வந்திருக்கேன்என்றபடியே சரவணன் அழைப்பிதழை எடுத்து நீட்டினான். பிரித்து உள்ளே பார்த்தவன் மெல்லிய சிரிப்போடு நிச்சயம் வர்றேன்என்ற பொழுது பழனிச்சாமியின் மனைவி இருவருக்கும் டீ கொடுத்து விட்டு சென்றாள்.

எல்லாமே வேடிக்கையா இருக்கு சரவணா, நீயும் நானும் கட்டிப் பொரண்டு சண்ட போட்டுக்கிட்டத இப்ப நெனைச்சாலும் சிரிப்புத்தான் வருது. ஏன் அப்படி செஞ்சோம்னு தோணுது... ஆனா இந்த யோசனை அப்ப நமக்கு இல்லை. இருக்கவும் இருக்காது இதெல்லாம் வயசுக்கே ஏத்த ஒன்னு சரவணா, அப்பப் புரியாது பின்னாலதான் புரியும். எனக்கும் உன்னைப் பார்க்கணும் உன்கிட்ட பேசணும்னு ஆசை இருந்துச்சு

அதெல்லாம் ஒரு வெளையாட்டுத்தனம்னு புரிஞ்சுகிட்டதாலதான் பழனி உன்னைப் பார்க்க வந்தேன். எல்லாருமே நல்லவங்கதான் பழனிஎன சரவணன் சொன்ன அந்த நொடி, பழனிச்சாமியின் மகன் கதவை நீக்கிக் கொண்டு உள்ளே வந்தான். எதையோ சொல்ல வருகிற ஆவலோடு வேகமாக நடையிட்டு வந்தான். சட்டை முழுக்க மண் படிந்திருந்தது. நேரே பழனிச்சாமியிடம் வந்தவன்அப்பா.... அந்தப் பையன் இருக்கான்ல... அந்த மகேஷ்ப் பையன்... வெளாண்டிருந்தமா... என்ன எட்டி எட்டி உதச்சு கீழ.. கீழ தள்ளி உட்டுட்டிருந்தான்... நானு... நானு வந்து அவ மூஞ்சியிலயே பங்... பங்னு ரெண்டு குத்து உட்டனா அழுதுட்டு ஓடிட்டான்என்றபடியே வெடித்துச் சிரித்தான்.

உன்னை யார்றா அவனுகளோடவெல்லாம் சேர்ந்து விளையாடச் சொன்னது... ஒழுங்கா வீட்ல டிவி பார்த்துட்டு இருக்க வேண்டியதான.. சரி போய் கை கால் மூஞ்சி கழுவு இனிமேட்டுக்கு அந்த பையங்கூடவெல்லாம் சேராத

போப்பா... நாளைக்கு அவந்தான் எனக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுப்பான்என்றவாறே பாத்ரூமுக்குள் நுழைந்தான்.


 குடித்து முடித்து விட்ட டீ டம்ளரை கீழே வைத்த சரவணன் பழனிச்சாமியைப் பார்த்தான் இருவரும் பேச வார்த்தைகளின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகையை மட்டுமே உதிர்த்தனர்.