ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday, 19 December 2013

போட்டிச் சிறுகதை-30

சிறுகதை- பாசத் துளிர்

லண்டனின் ஒதுக்குப்புறமான இடத்தில சிறிய வீட்டை அமைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் வில்லியம்ஸ். அறுபது வயதைக் கடந்த அவரது முகத்தில் காலதேவனின் கோடுகள் முளைத்திருந்தன. நீண்ட நாள் கழித்து தனது மகளின் புகைப்படத்தைப் பெட்டியில் இருந்து வெளியில் எடுத்துப் பார்த்தார் வில்லியம்ஸ். அவளது பெயர் ஜூலியா. நீண்ட காலம் புகைப்படம் பெட்டியிலேயே உறங்கிக் கொண்டிருந்ததால் தூசு படிந்து அழுக்காக இருந்தது. அதை மெல்லத் துடைத்து தனது மகளை நோக்கினார். அவரது கண்களில் மெல்லிய கண்ணீர் திரை படர்ந்தது. 

புகைப்படத்தை எடுத்துக்கொண்டு ஜன்னல் அருகே சென்றார். ஏராளாமான பறவைகள் சப்தமிட்டபடி அங்கே சுற்றிக்கொண்டிருந்தன. பச்சைப் புற்கள் மண்டிக் கிடந்த இடத்தில குதிரைகள் தங்கள் பசியைப்  போக்கிக்கொண்டிருந்தன. உடல் முழுதும் வெள்ளை ரோமங்களைச் சுமந்தபடி ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றையெல்லாம் ஒரு முறை நோக்கினார் வில்லியம்ஸ். பின்பு, புகைப்படத்தை மீண்டும் பெட்டியிலேயே வைத்துப் பூட்டிவிட்டு, முகத்தில் கவலையை அப்பிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்திற்குச் சென்றார். ஆள் அரவமே இல்லாத அமைதியான இடம். எங்கும் மரங்கள், செடி, கொடிகள், பச்சை புற்கள் போர்வை போர்த்தியதைப் போன்ற தரை என அனைத்தும் சொர்க்கமாய் இருந்தாலும் அவற்றை ரசிக்கும் மனநிலையில் அவரில்லை.

கைத்தடியைத் தரையில் ஊன்றியபடி, தனது பழையகால காரை நோக்கி நடந்து சென்றார். கைத்தடியை காரின் சீட்டில் கிடத்திவிட்டு தானும் ஏறி கார் என்ஜினை ஸ்டார்ட் செய்தார். அச்சத்தம் கேட்டதும் குதிரைகளும் ஆடுகளும் சற்று மிரண்டு போயின. வில்லியம்ஸ் காரை மெதுவாகச் செலுத்தினார். சாலையின் இரு பக்கமும் பச்சைப் புற்கள் மேகமெனப் படர்ந்து கிடக்க, நடுவே உள்ள குறுகிய மண்தரையில் கார் மிதமான வேகத்தில் சென்றது.

எழில் கொஞ்சும் இயற்கையைப் பார்த்தபடி பழைய நினைவுகளை அசைபோடத் தொடங்கினார் வில்லியம்ஸ். தாயில்லா தன் மகளை பாசமாய் வளர்த்ததும், அவளுக்காக தன் சந்தோசங்கள் அனைத்தையும் துறந்ததையும் எண்ணுகையில் அவரது நெஞ்சு லேசாக விம்மியது.

பத்து வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் இன்னும் அவரது நினைவை விட்ட அகலவில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஜூலியா ஒருவனைக் காதலிக்கிறேன் என்று வில்லியம்ஸ் முன் வந்து நின்றாள். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளோ பிடிவாதம் பிடித்தாள். தந்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஜூலியா தன் முடிவில் உறுதியாய் இருந்தாள். தந்தையை எதிர்த்துக் காதலனையே கைபிடித்து, தந்தையை விட்டுப் பிரிந்து சென்று வாழத் தொடங்கினாள்.

வில்லியம்ஸால் ஜூலியா அவ்வாறு செய்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் மேல் உயிரையே வைத்திருந்த அவரை உதாசினப்படுத்தியதால் மகளின் மேல் வெறுப்புக்கொண்டு தனிமையைத் தேடி இங்கு வந்து வாழ்கிறார்.

புகையைக் கக்கிக் கொண்டு கார் அதே வேகத்தோடு சென்றுகொண்டிருந்தது. அவரின் நினைவும் பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தது.

திருமணமான இரண்டு வருடத்தில் ஜூலியா ஒரு பெண் பிள்ளைக்குத் தாயாகி இருக்கிறாள் என்ற சந்தோசமான செய்தியைக் கேட்டும் அவர் மனம் இரங்கவில்லை. குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் கணவன் அவளை விட்டுப் பிரிந்து சென்று வேறொரு துணையை தேடிக்கொண்டான். அப்பொழுதும் மகளின் மேல் இரக்கம் பிறக்கவில்லை. ஆனால், இப்போது மகளைப் பார்க்கத்தான் சென்றுகொண்டிருக்கிறார். ஆம்...இன்று காலை இறந்து போன தன் மகளின் ஈமச்சடங்கிற்குத் தான் கனத்த மனதோடு செல்கிறார்.

வானில் மேகம் படர்ந்து லேசான மழை பொழிந்துகொண்டிருந்த நேரம். ஜெசிகா இறந்து போன தன் தாயின் முகத்தைக் கண்களில் நீர் வழிய பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுடைய தாயின் உடல்
சவப்பெட்டியில் மௌனமாய் படுத்துக்கொண்டிருந்தது. சர்ச் ஃபாதர் இறந்து போன ஜெசிகாவின் அம்மாவிற்காக  கர்த்தரிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். கூடியிருந்த சிறிய கூட்டம் மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தது. பிரார்த்தனை முடிந்தது. .உடலைக் குழியில் இறக்கினர்.

ஜெசிகா கண்ணீர் மல்க தன் தாய் புதைந்து போவதைக் கனத்த மனதோடு வெறித்துக்கொண்டிருந்தாள். எட்டு வயதே ஆன அந்தப் பிஞ்சு மனதில் பெருத்த சோகம் உருவெடுக்கத் தொடங்கியது.

தனது மகளின் முகத்தைக் கூட்டத்தோடு கூட்டமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார், வில்லியம்ஸ். அவரின் கலங்கிய விழிகள் ஜெசிகாவைச் சந்தித்தன. அங்கிருக்கும் சில பேர் வில்லியம்சை அடையாளம் கண்டுகொண்டனர். 'இவர் தானே ஜூலியாவோட தந்தை' என்று ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டனர். ஈமச்சடங்கு முடிந்தது. எல்லோரும் கலைந்து சென்றனர்.

வில்லியம்சும் ஜெசிகாவும் மட்டுமே இறுதி வரை நின்றுகொண்டிருந்தனர். இருவரின் விழிகளும் சந்தித்துக்கொண்டன. பாச உணர்வுகள் வில்லியம்ஸின் உள்ளத்தில் பொங்கி வழிந்தன. ஆனால், அவர் அதை உடனே துடைத்தெறிந்துவிட்டு, தனது காரை நோக்கி வேகமாய்ச் சென்றார். அவரின் கைத்தடி அங்கிருந்த ஈரமான மணலில் அழுந்தப் படிந்து சுவடாய் மாறியது. ஜெசிகாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் காரில் ஏறிச் சென்றார்.

அவரின் உள்ளத்தில் பாசம் முழுவதும் வற்றிப்போய் விட்டது. தனது பொம்மை விற்கும் கடைக்குச் சென்று உட்கார்ந்தார். தன் மனக்குமுறலை வேலை செய்யும் ஆட்களிடம் கோபமாய் வெளிக்காட்டினார். 'ஏன் இப்படி எரிந்து விழுகிறார்?' என்பது வேலையாட்களுக்கும் புரியவில்லை. ஒருவரையொருவர் புதிராய்ப் பார்த்துக்கொண்டு மௌனமாய் இருந்தனர். இரண்டு மணி நேரத்திற்குப் பின் கடையிலிருக்கப் பிடிக்காமல் தனது வீட்டிற்குச் சென்றார்.

வானைக் கிழித்துக்கொண்டு மாமழை பொழியத் தொடங்கியது. தான் வளர்க்கும் குதிரைகள், ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு, சோர்வோடு படுக்கைக்குச் சென்று சாய்ந்துகொண்டார். தூக்கம் வரவில்லை. வெறுமனே கண்களை மூடிக்கொண்டு நடந்தவற்றையெல்லாம் மறக்கப் போராடினார். மழை விடவில்லை. தனது ருத்ரதாண்டவத்தை மேலும் மேலும்
அதிகப்படுத்தியது. மழையோடு புயல்காற்றும் கலந்துகொண்டதால், வீட்டு ஜன்னல்கள் 'டப் டப்' என அடித்து மழையின் இரைச்சலுக்கு சுதி சேர்த்தன. வீட்டிலிருக்கும் சிறிய விளக்கும் இப்பொழுதோ அப்பொழுதோ என அணையப் போராடியது.

அப்பொழுது கதவு தட்டும் ஒலி அவரைத் திடுக்கிட்டு எழும்ப வைத்தது. "இந்நேரத்தில் யார் கதவைத் தட்டுகிறார்கள்?" என்று முணுமுணுத்தபடி எழுந்தார் வில்லியம்ஸ். அணையப் போராடிக்கொண்டிருந்த விளக்கை அணைய விடாமல், மேலும் ஒளி கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டுக் கதவின் அருகே சென்று கதவைத் திறந்தார்.

மின்னல் பளிச்சென மின்னியதில் வந்தவரின் முகம் அவருக்கு நன்றாகவே தெரிந்தது. அவரின் விழிகள் அதிர்ச்சியைக் கக்கின. மழையில் நனைந்தபடி முதுகில் பையுடனும் கையில் ஒரு பொம்மையுடனும் பரிதபாபமாக நின்றுகொண்டிருந்தாள் ஜெசிகா.

சோகமான அவள் முகத்தில் தாத்தாவைக் கண்ட புன்னகை அரும்பியது. முதுகில் சுமந்திருந்த பையை அவிழ்த்து பாலித்தின் கவரில் பத்திரப்படுத்தியிருந்த ஒரு காகிதத்தை அவரிடம் நீட்டினாள் ஜெசிகா. ஜெசிகாவைப் பார்த்துக்கொண்டே அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கிப் பிரித்துப் படித்தார் வில்லியம்ஸ்.

"அன்புள்ள அப்பாவிற்கு,

உங்களிடம் பேசக்கூட தகுதியற்றவளாய் நான் இருக்கிறேன். உங்கள் பேச்சைக் கேட்காமல் நானே எனது வாழ்க்கை முடிவை எடுத்துகொண்டது, என் வாழ்க்கையையே தடம் புரள வைத்துவிட்டது. வர வர என் உடல் நிலையும் சரியில்லை. மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்று என் மனம் கூறுகிறது. அப்படி ஏதேனும் நடந்தால் உங்கள் பேத்தியை அனாதையாக விட்டு விடாதீர்கள். உங்களையும் விட்டால் அவளுக்கு யாருமில்லை" என எழுதி இருந்தாள் இறந்து போன ஜூலியா.

வில்லியம்ஸ் கடிதத்தைப் படித்ததும், அதைக் கசக்கித் தூக்கி எறிந்தார். மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட காகிதத்தை ஜெசிகா ஓடிச் சென்று எடுத்து, தான் வைத்திருந்த பாலித்தீன் கவரில் பத்திரப்படுத்தி வில்லியம்சை அழுகை முகத்தோடு பார்த்தாள்.

வில்லியம்ஸ் அவளை முறைத்துவிட்டு, கதவை மூடாமல் தனது படுக்கையில் சென்று படுத்துக்கொண்டார். அவரது உள்ளம் குமுறியது; தப்பு செய்கிறோமா? என்று கூட எண்ணினார். ஆனால், ஜூலியா அவரை விட்டுப் போன அந்த நிமிடத்தை நினைத்தார். முகம் கடுமையானது.

விளக்கு அணைந்து வீடே இருளில் மூழ்கியது. மின்னலும் இடியும் வீட்டையே அலற வைத்தது. சிறிது நேரத்தில் விளக்கை மீண்டும் ஏற்றினார் வில்லியம்ஸ். சில மணித்துளிகள் விளக்கையே வெறித்துக்கொண்டிருந்தார். பிறகு, அதைக் கையில் ஏந்தியபடி அறையை விட்டு வெளியேறி வாசலை நோக்கினார். ஜெசிகா அங்கில்லை. விளக்கை உயரே தூக்கிப்பிடித்து எங்காவது அவள் கண்ணில் தென்படுகிறாளா? என்று நோட்டமிட்டார். அவளைக் காணவில்லை.

பெருமூச்சோடு உள்ளே வந்த பார்த்தபோது சோபாவில் நனைந்த ஆடைகளுடன் குளிரில் நடுங்கியபடி படுத்துக்கொண்டிருந்தாள் ஜெசிகா. அவளது கை கால்கள் உதறின. விளக்கொளியில் சில வினாடிகள்  அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றுவிட்டார் வில்லியம்ஸ். உறக்கம் தொலைந்தது போன்று விழித்தே கிடந்தார்.

காலை நேரமானது. சோபாவின் அருகில் உள்ள மேசையில் 'டப்' பென ஒலிகேட்டு கண்களைத் திறந்தாள் ஜெசிகா. சூடான காஃபி அவள் எதிரில் இருந்தது. அதை எடுத்துப் பருகியபடி வில்லியம்ஸ் எங்கே எனத் தேடினாள் ஜெசிகா. குதிரைகளையும் ஆடுகளையும் கொட்டகையிலிருந்து அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தார் வில்லியம்ஸ்.

வாசலில் நிற்கும் ஜெசிகாவைக் கண்டதும் தனது முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார். ஜெசிகா குளித்து முடித்து, பள்ளி ஆடையை உடுத்தி தாத்தா செய்த உணவை லஞ்ச் பாக்ஸில் போட்டு வெளியில் சென்றாள். வில்லியம்ஸ், தனது கடைக்குச் செல்ல காரை தயார் செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தபடியே காரில் ஏறி அமர்ந்துகொண்டாள் ஜெசிகா. அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் காரை ஓட்டிச் சென்றார் வில்லியம்ஸ்.

ஜெசிகாவின் கண்கள் வில்லியம்சின் முகத்தையே ஊடுருவிக்கொண்டிருந்தன. அவள் அப்படிப் பார்ப்பதை விரும்பாத வில்லியம்ஸ், 'என்னைப் பார்க்காதே' என்பது போல் அவள் தலையைப் பிடித்து ஜன்னல் பக்கமாய் திருப்பிவிட்டு வண்டியை வேகமாய் இயக்கி தன் கடையில் சென்று நிறுத்தினார். ஜெசிகாவிடம் எதுவும் கூறாமல் கடைக்குள் சென்று மறைந்து போனார். ஜெசிகா அங்கிருந்து நடந்தே பள்ளிக்குச் சென்றாள்.

பள்ளி முடிந்ததும் தாத்தாவின் பொம்மைக் கடைக்கு வந்தாள், ஜெசிகா. அவளது கண்களில் ஓர் அழகான கரடி பொம்மை தென்பட்டது. அதை எடுத்து ஆசையோடு அணைத்துக் கொண்டாள். இதைக் கண்ட வில்லியம்ஸ் வேகமாய் வந்து அந்த பொம்மையை அவளிடமிருந்து பிடுங்கி, அவள் மீண்டும் அதை எடுக்காத வண்ணம் உயரே தூக்கி வைத்துவிட்டார். ஜெசிகா முகம் வாடிப் போனாள். எதுவும் பேசாமல் வில்லியம்சின் காரினுள் சென்று அமர்ந்தாள்.

'மனசாட்சி இல்லாத பெருசு' என கடையில் வேலை செய்வோர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இரவு நேரத்தில் கடையை அடைத்து விட்டு வீடு திரும்பினர் இருவரும்.

இப்படியே இவர்களது நாட்கள் கடந்து சென்றன. ஜெசிகாவும் வில்லியம்சுடன் பேசவில்லை. வில்லியம்சும் ஜெசிகாவிடம் பேசவில்லை. இருவரும் அந்நியர்கள் போலவே நடந்துகொண்டார்கள்.

வில்லியம்ஸ் வளர்த்து வந்த பெண் குதிரை ஒன்று குட்டியை ஈன்றது. தனிமையின் மடியில் தவழ்ந்திருந்த ஜெசிகாவிற்கு குதிரைக் குட்டி ஆறுதலாய் அமைந்தது. பள்ளி முடிந்து வந்ததும் அதனுடன் விளையாடுவாள். இதையெல்லாம் கண்டும் காணாதது போல் தன் வேலையைப் பார்த்தார் வில்லியம்ஸ்.

ஒரு நாள், குதிரைக் குட்டியின் மேல் ஏறி விளையாடிக்கொண்டிருந்த ஜெசிகா கீழே விழுந்து கால் முட்டியில் லேசான அடி பட்டது. அதைக்  கண்ட வில்லியம்ஸ் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளித்தார்.

அடுத்த நாள், ஜெசிகா குதிரைக் குட்டியோடு விளையாட கொட்டகைக்குச் சென்று பார்த்தாள். அங்கு குதிரைகளும் இல்லை; குதிரைக் குட்டியும் இல்லை. வில்லியம்ஸ் அனைத்துக் குதிரைகளையும் விற்றுவிட்டிருந்தார். தனக்கிருந்த ஒரே துணையும் இப்பொழுது இல்லையே என்று அன்று முழுதும் ஜெசிகா அழுதுகொண்டே இருந்தாள். சாப்பிடாமல் தனது எதிர்ப்பைக் காட்டினாள். வில்லியம்ஸ் அதைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை.

சில நாட்கள் கழித்து, ஜெசிகா தாத்தாவின் முன் சில பேப்பர்களை வைத்தாள். என்னவென்று எடுத்துப் பார்த்தார் வில்லியம்ஸ். ஜெசிகா பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பதாகவும், மறு நாள், பள்ளியில் பரிசளிப்பு விழா நடக்கவிருப்பதாகவும், பெற்றோர்கள் வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் எழுதியிருந்தது. படித்ததும் அதைச் சலிப்போடு வீசினார் வில்லியம்ஸ். ஜெசிகாவின் முகம் சுருங்கிப் போனது.

அடுத்த நாள், மாலையில் பரிசளிப்பு விழா பள்ளியில் நடந்தது. எல்லாக் குழந்தைகளும் தங்கள் பெற்றோரை அழைத்து வந்திருந்தனர். ஜெசிகா மட்டும் தன் தாத்தா எப்பொழுது வருவார் என
எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். இறுதி வரை வில்லியம்ஸ் பள்ளிக்கு வரவில்லை. ஜெசிகாவின் பெயரை விழா தொகுப்பாளர் மேடையில் நின்றபடி ஒலித்தார். ஜெசிகா பரிசை வாங்கச் செல்லாமல் அழுதுகொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

நெடு நேரம் அழுதுகொண்டே இருந்ததால் உறக்கம் அவளை மெல்ல அணைத்தது. சிறிது நேரம் தூங்கியவள் பசியால் விழித்துக்கொண்டாள். தாத்தா வந்துவிட்டாரா? என அவரின் அறைக்குச் சென்று பார்த்தாள். வில்லியம்ஸ் இல்லை. வாசலின் வெளியே வில்லியம்சின் காரும் இல்லை.

அதிர்ந்து போன ஜெசிகா, தன் தாத்தாவைத் தேடி ஓடினாள். அவளுக்கு மூச்சு வாங்கியது. இருந்தும், தாத்தா இன்னும் வீட்டிற்கு வரவில்லையே என பரிதவிப்போடு ஓடினாள். அவளது கால்கள் வலித்தன. ஓடும் சக்தியை இழந்து சோர்ந்து நடந்து கொண்டு தாத்தாவைத் தேடினாள்.

வழியில், வில்லியம்சின் காரை கண்டாள். அவள் முகம் பிரகாசமானது. பஞ்சரான கார் சக்கரத்தைக் கழற்றி, இன்னொரு சக்கரத்தை அதில் பொருத்திக்கொண்டிருந்தார் வில்லியம்ஸ். ஜெசிகா கண்ணீர் ததும்பிய முகத்தோடு தாத்தாவின் அருகே சென்று நின்றாள். வில்லியம்ஸ் காரை சரி செய்து வண்டியை ஸ்டார்ட் செய்தார். அவர் அருகில் ஜெசிகா அமர்ந்து பக்கவாட்டில் உள்ள இருளில் தனது கவனத்தைச் செலுத்தினாள். வீடு சேரும் வரை அவள் முகத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டினார் வில்லியம்ஸ்.

அடுத்த நாள், பள்ளி ஆசிரியை ஜெசிகாவின் வீட்டிற்குப் பரிசோடு வந்தார். "நேற்று ஏன் பாதியில் சென்று விட்டாய்?" என அன்பாய் விசாரித்தார் ஆசிரியை. ஜெசிகா தன் தாத்தாவை நோக்கினாள். அவர் ஆசிரியையைக் கண்டுகொள்ளாமல் தோட்டத்திலுள்ள செடிகளுக்குத் தண்ணீரை வார்த்துக்கொண்டிருந்தார். தனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் தான் வீட்டிற்கு வந்துவிட்டதாகப் பொய் கூறினாள் ஜெசிகா.

ஆசிரியை ஜெசிகாவிடம் பரிசைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். மேஜை மீது தனது பரிசை வைத்துவிட்டு வேறொரு அறைக்குச் சென்றுவிட்டாள் ஜெசிகா. சிறிது நேரத்திற்குப் பின், உள்ளே வந்த வில்லியம்ஸ் மேஜையிலுள்ள பரிசுப் பொருளின் அருகில் சென்றார். ஜெசிகா இருக்கும் அறையை ஒரு முறை நோட்டமிட்டு, அந்தப் பரிசை எடுக்க எண்ணியபோது, கதவைத் திறந்து வெளியில் வந்து தாத்தாவை முறைத்தாள் ஜெசிகா. வில்லியம்சிற்கு என்னவோ போலானது. அதனால், மீண்டும் தோட்டத்திற்குச் சென்று வேறு வேலை செய்யத் தொடங்கினார்.

நாட்கள் செல்லச் செல்ல ஜெசிகா தன்னுடன் இருப்பதை அவர் விரும்பவில்லை. அதனால், அவளை ஹாஸ்டலில் சேர்க்க முடிவெடுத்தார்.

அடுத்த நாள், காலையில் அவளுடைய துணிகளை பெட்டியில் அடைத்து, பள்ளிக்குச் சென்று ஹாஸ்டலில் ஜெசிகாவை சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டினார். பள்ளி நிர்வாகமும் அதற்கு ஒப்புக்கொண்டது. ஹாஸ்டல் கட்டணத்தைக் கட்டிவிட்டு, ஜெசிகாவை அங்கேயே விட்டு விட்டு சென்றார் வில்லியம்ஸ். ஒரு ஆசிரியை அவளை ஹாஸ்டலுக்கு அழைத்துச் சென்றார். அன்று ஜெசிகாவிற்கு உறக்கமே வரவில்லை. தாத்தா தன்னை வந்து அழைத்துச் செல்லமாட்டாரா? என ஏங்கிக்கொண்டிருந்தாள்.

ஜெசிகாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார், வில்லியம்ஸ். வீடே வெறிச்சோடிக் கிடப்பது போன்று அவருக்குத் தோன்றியது. ஜெசிகா இல்லாதது தான் இதற்குக் காரணமா? என்று நினைத்தார். தனிமை பயம் முதன் முதலில் அவரை வாட்டி வதைத்தது. அவருக்கே தெரியாமல் ஜெசிகா அவர் உள்ளத்தில் பாச உணர்ச்சியைக் கிளறியிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டார்.

மீண்டும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விடலாமா? என்று எண்ணினார். பின், வேண்டாம் என நினைத்து தன் வேலையைக்  கவனிக்கலானார். இருந்தும், அவரது தனிமை பயம் கூடிக்கொண்டே போனது. இதயத்தின் மூலையில் சிறிய வலி உண்டானது. ஓடிச் சென்று பெட்டியைத் திறந்து ஜூலியாவின் போட்டோவைத் தேடினார். அதைக் காணவில்லை. எங்கே தொலைந்து போயிருக்கும்? என சிந்தித்தார். ஜெசிகாவின் நினைவு அவருக்கு வந்தது. ஒரு வேளை அவள் எடுத்துச் சென்றிருப்பாளா? என்று எண்ணினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜெசிகாவிடம் பேசவேண்டும் என ஆவல் வந்தது. ஹாஸ்டலுக்கு போன் செய்தார். ஜெசிகாவிடம் பேசவேண்டும் என்று வார்டனிடம் கூறினார்.

"நீங்க யாரு?" என்று விசாரித்தார் வார்டன்.

சற்று தயங்கிய வில்லியம்ஸ், "அவள் தாத்தா " என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்று கூறி "ஜெசிகா! ஜெசிகா!" என்று இருமுறை அழைத்தார் வார்டன். ஜெசிகா ஓடி வந்தாள். "உனக்கு போன் வந்திருக்கு" என்று கூறி ஜெசிகாவிடம் போனை நீட்டினார் வார்டன்.

"ஹலோ " என்றாள் ஜெசிகா.

அவள் குரலைக் கேட்டதும் போனைத் துண்டித்தார் வில்லியம்ஸ். அவரது கண்கள் கண்ணீர் குளமாயிருந்தன.

அடுத்த நாள் காலையில், வில்லியம்ஸ் அவசர அவசரமாய் வெளியே சென்றார். தான் விற்ற குதிரைகளையும் குதிரைக் குட்டியையும் விற்றவரிடமிருந்து மீண்டும் வாங்கி வீட்டிற்கு வந்தார். பிறகு, பள்ளிக்குச்  சென்று ஜெசிகாவை ஹாஸ்டலில் இருந்து விடுவிக்குமாறு கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்தார்.

"இன்று மாலை ஜெசிகா வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவாள்" என பள்ளி நிர்வாகம் கூறியது.

சந்தோசத்துடன் வீட்டிற்கு வந்தார் வில்லியம்ஸ். அவளுக்குப் பிடித்த குதிரைக் குட்டியையும், அன்று அவளிடம் இருந்து பிடுங்கிய கரடி பொம்மையையும் எடுத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்றார் வில்லியம்ஸ்.

ஒவ்வொரு பேருந்தும் வருவதும் போவதுமாய் இருந்தன. ஜெசிகா வரும் பள்ளிப் பேருந்தை ஏக்கமாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார், வில்லியம்ஸ்.

பள்ளிப் பேருந்து வந்தது. வில்லியம்சின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சிந்தின. பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாள் ஜெசிகா. எதிரே இருந்த தன் தாத்தாவை சோகம் படிந்த முகத்தோடு நோக்கினாள். குதிரைக் குட்டியையும் கரடி பொம்மையும் நோக்கினாள். அவளது இதழில் புன்னகை அரும்பியது. தாத்தாவை நோக்கி வேகமாய் ஓடினாள்.


வில்லியம்ஸ் தன் பேத்தியை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினார். இத்துணை நாளாய் அவர் உள்ளத்தில் மறைந்திருந்த பாசம் கண்ணீராய் வெளிவந்துகொண்டிருந்தது.