ஆன்லைனில் புத்தகம் வாங்க

Friday, 13 December 2013

போட்டிச் சிறுகதை-18


சிறுகதை-அரிதாரப் பதுமை(கள்)


சிறந்த மாவட்ட ஆட்சியாளருக்கான பாராட்டு விழாமேடையில்  நாயகனாய் ரூபன் அமர்ந்திருக்க,  அவன் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்ல, கதாசிரியர் மற்றும் சமூக சேவகர் என அவனைப்பற்றி   பலரும் பேசிக்கொண்டிருந்தாலும், அவன் கண்கள் மட்டும் பார்வையாளர்களில் யாரையோத் தேடிய வண்ணமிருந்தது. ரூபன் தன் ஏமாற்றத்தை முகத்தில் பிரதிபலிக்காமல் பேச்சாளரைக் கவனிக்கத் துவங்கியதை  முதல் வரிசையில் அமர்ந்திருந்த மோஹினி கவனிக்கத் தவறவில்லை.  சிறப்பு விருந்தினரிடமிருந்து பரிசைப் பெற்றவன் கண்கள் பணிக்க அதை முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்து மகிழ்வதைக் கண்ட மோஹினியின் கண்கள் கண்ணீர் முத்துக்களால் நிரம்பியது.


ஏமாற்றத்துடன் காரில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த ரூபன் கண்களை மூடியவாறே சாரதாவைப் பற்றிய  நினைவுகளை மெல்ல அசைபோட ஆரம்பித்தான்.


ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காகவும், ஐ.ஏ.எஸ். படிப்பதற்காகவும் ரூபன் சென்னைக்கு வந்திருந்த சமயம் பக்கத்து வீட்டில் குடியிருந்த சாரதா  அறிமுகமானாள்.  சாரதா வேலைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் மனதிற்குப்பிடித்தவாறுஒரு முதியோர் இல்லத்தில் பகுதிநேர உதவியாளராக சேவை புரிந்துவந்தாள். அமைதி, அடுத்தவரின் பேச்சுக்கு செவிசாய்த்து கற்றுக்கொள்ளும் குணம். அதே சமயம் துடுக்குத்தனமும் அதிகம் உடையவள். தங்கை விமலா ஆசிரியையாக வேலை பார்க்கிறாள்.  சாரதாவின் தாயார் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், சாரதாவிற்கு வீட்டின் பொறுப்பும் இருந்தது. சாரதாவின் தந்தை மிகவும் அமைதியானவர். மகள்களை சுதந்திரமாக வளர்த்திருந்தார்.


ரூபன் பார்ப்பதற்கு சற்று கோவக்காரன்போல் தெரியவே அவனிடம் அதிகம் பேசாமல் அவ்வப்பொழுது சாரதா, தன்  தங்கை விமலாவிடம் மட்டும் இவனைப்பற்றி கிண்டலிப்பது வழக்கம்.   இவர்களின் துடுக்குத்தனமும் கிண்டலும் கண்டும் காணாததுபோல் ரசித்து வந்தான் ரூபன். தங்கை சில நாட்களில் ரூபனுக்கு நன்கு அறிமுகமானாள்.  நகைச்சுவையாக பேசுவது, நாட்டு நடப்பு இப்படி அனைத்தையும் அலசி நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.  தங்கை பள்ளியில் சுற்றுலா சென்றிருந்த நாட்களில் அக்கா சாரதாவின் குணமும், நடவடிக்கையும் அவனை வசீகரிக்க அவளுடனும் நெருங்கிய  நட்பு பாராட்டினான்.

அவளுடன் முதியோர் இல்லம் சென்று அங்குள்ளவர்களிடம் அன்புடன் பழகிவந்தான்.  ரூபனின் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற இலட்சியத்தைக் கண்டு அவனை  ஊக்குவித்து வந்தாள் சாரதா. ஐ.ஏ.எஸ் கனவுகளோடு , சாரதாவின் முதியோர் சேவையில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டான்.  கதையெழுதுவதிலும் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைக்க வேண்டும் என்ற வேகத்துடன் முழு நேரத்தையும் தன் இலட்சியத்திற்காக அர்ப்பணிக்க முடிவெடுத்திருந்தான்.  அவனது இந்த முடிவிற்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்தாள் சாரதா.



சாரதாவிற்கு  அவளையறியாமலேயே அவன் மீது காதல் ஏற்பட, உள்ளுக்குள் அவனுக்காக எதையும் செய்யத் தயாரானாள்.  அவனது படிப்பிற்குத் தேவையான தகவல்கள் சேகரித்துக்கொடுப்பது, நூல்கள் தேடித் தேடி வாங்கிவருவது, அவனுக்கு எதுபிடிக்கும் எது பிடிக்காது எனப் பார்த்து பார்த்து அவனுக்கான உதவிகளை ஏன் எதற்கு எனக் கேட்காமல் ஒருவித அர்ப்பணிப்போடு செய்துவந்தாள்.  ஒரு கட்டத்தில் தன்னையே அவன் வசமிழக்கும் அளவு...... .

முதியோர் இல்லத்திற்கு உதவி செய்ய அடிக்கடி வந்து செல்லும் விஜயும், சாரதாவிடமும், ரூபனிடமும் நெருங்கிப்பழகத்துவங்கினான்.  விஜய் அதே பகுதியைச்சார்ந்தவன்.  அவனும் ஐ.ஏ.எஸ். படிக்கவிருந்ததால், இருவருக்குமான நட்பு அதிகரித்தது. ரூபன் சாரதாவை சந்திப்பதை கூட தவிர்க்கும் அளவு.  ரூபன்மீது கொண்ட அபார காதலினால் இவற்றையெல்லாம் யதார்த்தமாக கருதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை சாரதா.    தான் கர்ப்பமாக இருப்பதை ரூபனிடம் சொல்லவேண்டும் என அதற்கான சந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த சாரதா, சிலவாரங்களாக அவன் முன்புபோல் சரியாக பேசாததை உணர்ந்தவள், அவனைத்தொடர்பு கொண்டு விவரம் சொல்லுவதற்காக அழைத்தவள், அவனிடம் தன்னிடம் முன்புபோல் பேசாததன் காரணம் கேட்க, “அதிக படிப்பு இருக்கு, விஜயுடன் படிப்பு விசயமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்,  அனாவசிய பேச்சினால் என் படிப்பு  தடைப்படும் என்று சொன்னான்.”


அவனது வெற்றியில் அவனைவிட மகிழ்ச்சி தனக்குதான் என எண்ணியவளிடம் அவன் இப்படி கூறியதை அவளால் ஜூரணிக்க முடியவில்லை. முன்பு தன்னிடம் பேசுவதில் மகிழ்ச்சியடைந்தவன், இன்று தன்னுடன் பேசினால் வெற்றிக்குத் தடையாக இருப்பதுபோல் ரூபன் பேசிய வார்த்தைகள்,  யதார்த்தமாகவே அவன் கூறியிருந்தாலும் வலிக்கவே செய்தது. வலித்ததோடு, இந்த நேரத்தில் தான் கர்ப்பமுற்றதை அவனிடம் கூறி, காதலித்தவனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவேண்டாம் என்ற எண்ணம் தோன்றவே, அதை அவனிடம் கூறாமல் இணைப்பைத் துண்டித்தாள். தன்னுடன் பேசுவது கூட தடையாக இருக்கலாம் என நினைப்பவன் இந்த விசயத்தை  நாம் கூறி அதன்பொருட்டு நிர்பந்தத்தில் தன்னை ஏற்றுக்கொள்வானோ என்று நினைத்த சாரதா உள்ளுக்குள்ளே புழுங்கி உணவு, உறக்கம் தவிர்த்து தன்னையே வருத்திக்கொண்டாள்.  வெளியில் சிரித்து எதுவும் நடவாதது போலவே அவனுடனும், முதியோர் இல்லத்திலும் சகஜமாகவும் இருக்கக் கற்றுக்கொண்டாள்.  அவன் மீது கொண்ட காதலால் திருமணமே ஆகாவிட்டாலும் தாம் கொண்ட தாம்பத்தியத்தையும் அதனால் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசையும் மறக்க முடியாமல் அதைப்பற்றிப் பேசி அவனை மனச்சங்கடப்படுத்தவும் விரும்பாததால் தனக்குள்ளேயே குழம்பி, யோசித்து ஒரு தெளிவிற்கு வந்தாள்.  


சாரதா பணிபுரியும் முதியோர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து உதவி செய்யும் ஒரு வெளிநாட்டுப்பெரியவர்  அமெரிக்காவில் இருக்கும் தம் சொத்துக்களை விற்பனை செய்துவிட்டு இந்தியாவிலேயே நிரந்தரமாய் தங்கி நல்லமுறையில் இல்லத்திலேயே தன் வாழ்நாளைக் கழிக்கவிரும்புவதாகவும்,  அமெரிக்காவில் இருக்கும் தன் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு திரும்பும்வரை சாரதாவையும் உடன் அழைத்துச்செல்ல விரும்புவதாகவும் அனுமதி கேட்டார். அவளுக்கும் அந்த மாற்றம் தேவைப்படவே தந்தையிடம் பேசி சம்மதிக்கவைத்து அனுமதி வாங்கிவிட்டாள்.  விடைபெற்று செல்லுமுன் ரூபனிடம்  ஒரு கடிதம் கொடுத்தாள். 

நான் யாதுமாய்க் கருதியவன், என்னை யாரோவாய் நினைக்கும் காலமும் வருமெனக் கனவிலும் நினைக்கவில்லை. நெருங்கியிருந்து யாரோவாய் இருப்பதைவிட, விலகியிருந்து உனக்கு யாதுமாய் விளங்கிட எண்ணுகிறேன். இங்கு நானிருப்பின், தங்கள் மனம் என்னால் வருந்தும் வாய்ப்பு இருக்கு. உங்கள்மீது நான் கொண்ட அன்பே உங்கள் வளர்ச்சிக்குத் தடையாகிவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.  எப்பொழுதும் உங்கள் அருகாமை விரும்பும் என்னால் உங்கள் படிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எனக்கருதியதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.  தங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.  எங்கு இருப்பினும் எம் நினைவும், தங்களுக்கான பிரார்த்தனையும் தொடரும்.   இறைசித்தம் இருக்குமெனில் சந்திப்போம். படித்து முடித்தவன்,  இவள் இப்படி முடிவெடுக்க காரணம் என்ன என அறியாமல் மனம் கணமாய் உணர்ந்தான்.

அமெரிக்கா சென்றவள், அவ்வப்பொழுது அலைபேசியில் ரூபனை அழைத்துப்பேசி அவனது உடல்நலம், படிப்பு இப்படி விசாரிப்பதோடு அவனது இலட்சியத்தை அடைய அவன் செய்யும் முயற்சிகள் பற்றியெல்லாம் ஆலோசிப்பாள். தங்கை விமலாவிடமும் போன் செய்து அவ்வப்போது ரூபன் பற்றி அறிந்துவந்தாள். அவளாக ஓரிரு மாதங்களுக்குப்பிறகு, அமெரிக்கப் பெரியவர் ஊர் திரும்பிவிட்டதை அறிந்த ரூபன் முதியோர் இல்லம் சென்று பார்க்க அவர் மட்டுமே வந்திருந்தார்.  சாரதா வரவில்லையென்றும், அங்கேயே இருந்துவிட முடிவுசெய்துவிட்டதாகவும் பெரியவர் தெரிவிக்க மிகவும் வருந்தினான்.   அமெரிக்கப் பெரியவருடன் இருந்த   30 வயதையொத்த மோஹினி என்ற பெண்ணை தனது உதவியாளர் என அறிமுகப்படுத்த அவள் கரம் குவித்து முகமன் சொல்ல சம்பிரதாய வணக்கம் சொல்லி வீட்டிற்குத் திரும்பினான் ரூபன். அப்பாவிற்கு போன் செய்த சாரதா பெரியவரையும், மோஹினியையும் தங்கள் வீட்டிலேயே தங்க அனுமதிக்கும்படி கூற, அவர்களும் சாரதா வீட்டிலேயே குடிபெயர்ந்தனர். அக்கம்பக்கம் யாருடனும் அதிகம் பேசாமல் அமைதி காத்தாள் மோஹினி.  பெரியவரை ஐயா என்று அழைப்பது மட்டும் அனைவரும் அறிவர்.  அவர் மோஹினிக்கு என்ன உறவு..மோஹினிக்குத் திருமணம் நடந்ததா என்பதையறிந்துகொள்ள அக்கம்பக்கத்தினர் ஆர்வம் காட்டினாலும் அவள் ஒருபொழுதும் இதுபோன்ற பேச்சுக்களை அனுமதிப்பதில்லை.  அவ்வப்பொழுது நூல்கள் படிப்பது, பெரியவரோடு இல்லம் சென்று உதவிகள் செய்வது என இருந்தாள்.  ரூபனும் தன்னுடைய படிப்பு, பணி, அவ்வப்பொழுது முதியோர் இல்லத்து சேவையோடு நிறுத்திக்கொண்டான்.



ரூபனுக்கு அவனது பிறந்தநாளைக்கு பார்சலில் பரிசு வரவே ஆச்சரியத்துடன் எடுத்துப்பார்த்தான். அவனது சமீபத்திய புகைப்படம் ப்ரேம் செய்து அதோடு அவனது கதைப் பிரசுரமாயிருந்த பத்திரிக்கையும் அவனுக்குப் பிடித்தமான வண்ணத்தில் சர்ட்டும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.  அவன் எழுதுவானேத் தவிர பத்திரிக்கைக்கு அனுப்புவதில்லை.   விமலா,  விஜய் இருவரையும் விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் அனுப்பவில்லை எனக்கூறவே, தம் பெயரில் தமது கதையை யாரோ அனுப்பியது யாராக இருக்கும் என யோசித்து விடையறியாமல் திகைத்தான்.

தேர்வு நேரத்தில், அதிகாலை  ரூபன் வீட்டு காலிங் பெல் அடிக்கும்,  வாசலில் வந்துபார்த்தால் காஃபி ப்ளாஸ்கில் இருக்கும்.  அதோடு நன்றாகப் படிக்கவும் என சீட்டு இருக்கும்.  யார் வைத்தது எப்பொழுது வைத்தார்கள் என எதுவும் புரியாது குழம்பியபடியே, காஃபி குடித்துவிட்டு படிப்பான்.  அவன் நேரத்திற்கு எழவேண்டும், படிக்கவேண்டும் என அவனது வாழ்வின் முன்னேற்றத்தில் அக்கரை கொண்டிருப்பவரை அறிய அவன் செய்த முயற்சிகள்  அனைத்தும் தோல்வியே அடைந்தது.   இப்படி அவனது ஒவ்வொரு செயலிலும் உடன் இருக்கும் அந்த நபரை அடையாளம் காண மனம் விரும்பியது.  அனைத்து செயல்களும்  அவனுக்கு சாரதாவையே  நினைவூட்டின.



சாரதாவிடமிருந்து எப்பொழுதேனும் போன் வரும்.  நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.  அவனது படிப்பு, எதிர்காலம், கதை உடல்நலம் என விசாரிப்பாள்.  ரூபனுக்கு சாரதா மேல் அளவுகடந்த அன்பு உண்டு என்பதை அவளும் அறிவாள்.  இருப்பினும், அவளைத்தாண்டிய அவன் நடவடிக்கை, மற்றும் இலட்சியம், சிலநேரம் நடந்துகொள்ளும் விதம் அவளை அவனிடமிருந்து விலகியிருக்கவைத்தது. எப்பொழுது வருவாய். எங்கிருக்கிறாய் என்று கேட்டால், துண்டித்துவிடுவாள். ஒருநாள் திடீரென மோஹினியின் இல்லத்திலிருந்து அலறல் சத்தம் வர அதுவரை அவள் வீட்டிற்குச் சென்றிராத ரூபன் உள்ளே செல்ல, பெரியவர் அவனை வாப்பா. நல்லவேளை நீயே வந்துட்டே..நானே கூப்பிட எண்ணினேன்.  மோஹினிக்கு பிரசவவலி வந்துவிட்டது..நர்சிங்ஹோம் செல்லவேண்டும் என்றார்.  ஒருநிமிடம் ஆச்சரியப்பட்டாலும், அதைக்கேட்கும் நேரம் இதுவல்ல என உணர்ந்தவன், கால் டாக்ஸி அழைத்து அவளை அருகில் இருக்கும் நர்சிங்க்ஹோமில் சேர்த்தான்.  வலியில் துடித்தவள் பிரசவ அறைக்குச் செல்லுமுன் ரூபனின் கைகளை இறுக பிடித்துக்கொண்டு கண்களில் கண்ணீர் மல்க கனிவுடன் ரூபனை அவள் பார்த்தப் பார்வையை இன்றும்  அவனால் மறக்க முடியவில்லை.  ஆண்குழந்தை பிறந்திருப்பதாக வாழ்த்து சொல்லி நர்ஸ் குழந்தையைப் பெரியவர் கையில் கொடுக்க வாங்கியவர் ஒரு சம்பிரதாயத்திற்காக  ரூபனிடம் கொடுத்தார்.  தயங்கியபடியே மறுக்காமல் வாங்கியவன் குழந்தைக்கு மனதார வாழ்த்துகூறி, முத்தமிட்டான்.  தன்னையறியாமல் உடல் நடுங்குவதை உணர்ந்தான். .

அவனது தினசரி அலுவல்களில் தன்னை மூழ்கடித்தவன், மோஹினி பற்றிய நினைப்பை மறந்தான்.  மாதங்களும் நிமிடங்களாய் செல்ல ஒரு நாள் மோஹினியை வழியில் சந்தித்தான். “குழந்தை நலமா..??” எதுவும் கூறாமல் ஹ்ம்ம்.  என்றாள்.   அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காணாது வினவ ஏதும் பதிலளிக்காமல் புன்னகைத்து அவர்களைப் புறக்கணித்து உள்ளே சென்றாள்.


அன்று அவனது கதைக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாபற்றிய செய்தி வந்தது.  அலைபேசியில் ரூபனை அழைத்து வாழ்த்துக்கூறினாள் சாரதா.  வெளிநாட்டில் இருந்தபடியே எப்படி ஒன்றுவிடாமல் என்னைப்பற்றித் தெரிந்து கொள்கிறாய்..?  விழாவிற்கு நீ வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும்.? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி என்றவனிடம், உங்களுக்கு விருது வழங்கும் விழாவில் நான் இல்லாமலா..!? எனக்கூறியவளிடம், “வெளிநாட்டில் இருந்து பேசற, மாலை நிகழ்ச்சி என்ன விளையாட்டு” என்று கேட்டவனின் இணைப்பை சிரித்தபடியே துண்டித்தாள்.  விழாமேடையில் ரூபனின் கண்கள் தேடியதும் இந்த சாரதாவைத்தான்.

விழா முடிந்து இரவு வீடு திரும்பியவன் வீட்டு வாசலில் இரண்டு பெண்மணிகள் ஒரு வயதுக்குழந்தையுடன் காத்திருக்க, என்ன விவரம் ஏதேனும் உதவிகள் தேவையா என்று கேட்டு வரவேற்றான்.  நாங்கள் வேளச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்துவருகிறோம் எனக்கூறிய ஒரு பெண் ஒரு ஆல்பத்தையும், கடிதத்தையும் அவனிடம் கொடுத்தாள். கடிதத்தைப் பிரித்து படிக்கத்துவங்கினான் ரூபன்...


வணக்கம் ஆசிரியரே எனத் துவங்கியது கடிதம்..அவனுக்கு இன்ப அதிர்ச்சி. கதை எழுதத் துவங்கிய காலம் முதலே சாரதா மட்டுமே அவனை அப்படி அழைப்பாள்.  மேற்கொண்டு கடிதத்தை ஆவலுடன் படிக்கத் துவங்க,  நான் ஏற்கனவே தங்களிடம் ஒருமுறை தங்களைப் பார்க்க நானே அனுமதி வாங்கி பார்க்கும்படி வளர்ச்சியடைவீர்கள் என்றேன், நினைவிருக்கா...அதுபோலவே தங்களை அனுமதிப் பெற்ற பிறகே சந்தித்தேன்.  தாங்கள் விருது வாங்கும்போது நான் முதல்வரிசையில் இருந்து ஆனந்தக்கண்ணீர் வடிப்பேன் என்றேன்..அதுவும் நிகழ்ந்தது..

முதல்வரிசையில் சாரதாவைக்கண்ட நினைவில்லையே என யோசித்தவாறே மேற்கொண்டு கடிதம் படிக்க... விலைமதிப்பில்லா ஒரு பரிசு உங்களுக்காக அனுப்பியிருக்கிறேன்.   உங்கள் வாரிசை இவர்களோடு அனுப்பியிருக்கிறேன். தாங்கள் விரும்பியபடியும் தங்கள் பெயர் நிலைக்கும்படியும் இவனை வளர்க்கவும். நம் இருவரின் உறவிற்கு அடையாளமான தங்களது வாரிசை நித்தமும், தங்களையே நினைத்து நினைத்துத் தங்களுக்காகவே சுமந்திருக்கிறேன்.   என் விருப்பப்படியே எனது பிரசவத்தின்போது தங்களைக் கண்டபிறகே சென்றேன்.  நான் இத்தனை நாளும் வாழ்ந்ததின் பயனே இந்த நேரத்திற்காகத்தான்.  எனக்குத் தெரிந்தவரை நம் வாரிசை நீங்கள் விரும்பியவண்ணமே வளர்த்திருக்கிறேன். இனி தாங்கள் விரும்பும் வண்ணமும் அனைவரும் போற்றும்படியாகவும் நல்ல குணமுடையவனாகவும் வளர்ப்பீர்கள் என்பதையறிவேன்.    தன் மனதாள்பவனுக்காக இந்தக்காதலி வழங்கும் ”உயிர்ப்பரிசை ஏற்கவும். கண்களில் கண்ணீர் மல்க கடிதத்தைப் படித்தவன்...
நிமிர்ந்து பார்க்க, குழந்தை...அவனைப்பார்த்து பரிச்சயமாய் சிரிக்க, அந்தப்பெண்மணி குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.  வாங்கியவன்..கைகள் நடுங்க, கண்ணீர் மல்க செய்வதறியாது கட்டியணைத்து சிலைபோல் நின்றான்.  அந்தப்பெண் மற்றுமொரு கவரை கொடுத்தாள்.  பிறப்புச் சான்றிதழ் தந்தையின் பெயரில் ரூபன் பெயரும், தாயின் பெயரில் சாரதா எனவும்  மிகத்தெளிவாக  சட்டரீதியாக சான்றிதழ் இருக்க என்ன ஒரு தெளிவாக சிந்தித்து செயல்பட்டிருக்கிறாள் என்று வியந்தவன், நம்மிடம் வந்து சேராத்தை எண்ணி கோபமும் அடைந்தான்.  ஆல்பத்தைப் பிரித்துப் பார்த்தவன் அதில் அவர்கள் சந்தித்த ஆரம்ப காலம் முதல் இன்று மாலை விருது வாங்கியது வரையிலான அவனது புகைப்படங்களை விதவிதமாக அவளது விருப்பம் போல் தயார் செய்திருந்தாள்.  பிறந்தது முதல் இன்றுவரையிலான குழந்தையின் புகைப்படமும் அதில் இருக்க, சாரதாவின் புகைப்படம் ஏதேனும் இருக்கிறதா எனத் தேட; கடைசிப் பக்கத்தில் என்னுள் நிறைந்து, என் ஆன்மாவாய் விளங்குபவன் நீயென்பதால் எனக்கென தனி உருவம் இல்லை.. என எழுதி அங்கும் அவனது புகைப்படமே வைத்திருந்தாள். கண்ணீர் அவனது கண்களை மறைக்க, நாங்கள் விடைபெறுகிறோம் என்ற பெண்களின் குரல் கேட்டு நினைவிற்கு வந்தவன், அவர்களுக்கு விடையளித்து தன் மகன் அறிவொளியை  அள்ளியணைத்துக் கண்ணீர் வடிக்க, குழந்தை அவனை உற்று நோக்கி சிரித்தது.

சாரதாவின் ஆசைப்படி குழந்தை அறிவொளியை கண்ணிமைபோல் காத்துவந்தான்.  போன் செய்த சாரதாவிடம் மிகவும் கடுமையாக,” அப்படி என்னதான் தவறு செய்தேன்..இப்படிப்பட்ட விசயத்தை என்னிடம் இருந்து மறைக்கும் அளவிற்கு.. சரி இவ்வளவு நாள் கண்ணாமூச்சி ஆடிய நீ இனியாவது என்னோடு வந்திருக்கலாம் அல்லவா என சினந்தவனிடம், அன்று சென்றது உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்க விரும்பாமல், இன்று வராமல இருப்பதும் உங்கள் வளர்ச்சிக்கு கலங்கம் சேர்க்காதிருக்க அவள் இணைப்பு துண்டிக்கப்பட்டும் ரீசிவரை காதில் வைத்திருந்தான்.


சில மாதங்களுக்குப்பிறகு, ஒருநாள் கடைக்குச் சென்று அறிவொளிக்குத் தேவையான பொருட்கள் வாங்கிவரும்போது எதிரே தென்பட்ட மோஹினியைப் பார்த்த அறிவொளி சிரித்து கை நீட்ட, அவளும் அவனைக் கொஞ்ச, ரூபன் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருக்கையில், அவனுக்கு அவசர அழைப்பு வரவே, சாலையருகில் நிற்பதையும் மறந்து தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தவன்  கட்டுப்பாடின்றி வந்துகொண்டிருந்த பேருந்தை  கவனிக்கவில்லை.  ரூபன் கூப்பிடு தூரத்தில் இருந்தாலும், கூப்பிட்டு அவன் சுதாரிக்க நேரமில்லாது போனது. கண் இமைக்கும் நொடிக்குள், ஆசிரியரே என்ற கதறலில் திடுக்கிட்டு என்னவென உணரும்முன்னே தரையில் விழுந்துகிடந்தான் ரூபன்.  ரத்தவெள்ளத்தில் மோஹினி..என்ன நடந்தது என யூகிக்க முயற்சிக்கும் முன், மோஹினி ரூபனிடம்,” ஆசிரியரே... உங்களுக்கு முன்னாடி போய் நல்ல இடமா பார்த்து வைக்கிறேன் அப்புறம் வாங்க என்றாள் கண்சிமிட்டியபடி.”

"சாரதா..??" அதிர்ந்த ரூபனிடம், ஆம் என்றவளைப் பார்த்துக் கதறியவன், அவளை மடியில் கிடத்தி அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தான்.  அவனது கரங்களைப் பற்றியவள், “இனி நான் பிழைப்பது கடினம்.  உங்கள் இதயத்துடிப்பை கேட்டபடியே உங்கள் மடியில் தான் நான் இறக்கவேண்டும்” என்றபடியே அவன் இதயத்தோடு இதயம் வைத்தபடி இறுக்கியணைத்துக் கொண்டாள்.” இத்தனை நாள் பிரிவையும், ஈடுசெய்வதுபோல், அவனை உள்வாங்குவதை சுற்றியிருப்பவர்கள் கண்ணீர்மல்க வேடிக்கைப் பார்ப்பதையும் பொருட்படுத்தாதவாறு, கடைசி மணித்துளிகளை வீணடிக்காமல் குழந்தை அறிவொளிக்கும், ரூபனும் இறுதி முத்தம் வழங்கி ரூபனுக்கு வாழ்த்துகூறி அவனைப் பார்த்தவாறே கண்கள் வழியே அவள் உயிர் பிரிவதைக் கண்ட ரூபன் இது கனவா..? நனவா என்றுகூட உணரமுடியாதவாரு நடுவீதியில் சிலையாய் அமர்ந்திருந்தான்...!! 

தன் ஆசைக்காதலன் மீது கொண்ட அபரிமிதமானக் காதலில், அவனுக்காக அவனைவிட்டு வெளிநாடு சென்றாலும், அவன் வாரிசைப் பெற்றெடுக்கும் தருணத்தில் அவனை நெருங்கியிருக்க விரும்பிப் பெரியவரின் உதவியினால் இந்தப்பதுமை சாரதா ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் அடையாளத்தை மறைத்து மோஹினியாய் அரிதாரம் பூசிக்கொண்டதை இவனுக்கு எடுத்துப் புரியவைக்கவேண்டியவள் தற்போது இவ்வுலகில் இல்லை. துணையாய் இருந்தப் பெரியவரும் சத்தியத்தை மீறி அவனுக்கு உண்மையை உணர்த்தப்போவதில்லை.  அதிர்ச்சியும், வியப்புமாய் சாரதா..?! என்று அவன் எழுப்பிய  ஒற்றைவார்த்தையில் ஒட்டுமொத்தப் புரிதலையும் வெளிப்படுத்தியவனிடத்தில், காதலுக்காக இவள் பூசிக்கொண்ட அரிதாரத்தை கலைக்கவேண்டிய அவசியமே ஏற்படவில்லை.  சாரதாபோன்று அரிதாரம் பூசப்பட்ட பதுமைகள் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் நம்மிடையே.