ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday, 18 December 2013

போட்டிச் சிறுகதை-27

சிறுகதை-கழுத்துமணி


அய்யய்யோ, மகமாயீ... ஆட்டுக்குட்டியக் காணொமே , எங்க போச்சோ...?

குடிசையினுள்ளே தூங்கிக் கொண்டிருந்த முருகன் புரண்டு படுத்தான் எட்டாவதே படிக்கும் , பதின்வயதைத்தொடும் சிறுவன். வெளியே அதிகாலையிலேயே அம்மாவின் அலறல் உச்சகட்டத்தை அடைந்திருந்தது.

அய்யோ என் ஆட்டுக்குட்டிய திருடுனவங்க நல்லா இருப்பாங்களா...?!

தே , லச்சுமி , ஆட்ட யாரு திருடியிருக்க போறாங்க, ஏதாவது நரி, கிரி இழுத்துட்டு போயிருக்கும்டி..! என்று நிறுத்தி, ஒரு நொடி தாமதித்து , ஆனா , நரி இழுத்துட்டுப்போற அளவுக்கு அவ்ளோ சின்ன ஆடு இல்லியே அது...!
என்ற பக்கத்து வீட்டு ராமாயக்காவின் குரல் வெகு அருகில் கேட்க, பாயிலேயே எழுந்து அமர்ந்தான் முருகன்.

ஏன் இந்தம்மா இப்படிக் கத்துது...?!

சலித்துக்கொண்டு, கண்ணைத்தேய்த்துக் கொண்டே வெளியே வந்தவனைப் பார்த்து , ஒப்பாரியைக்கூட்டினாள் லச்சுமி.

வெளியே எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருக்க,  ஓரிருவர் மட்டும் வேலை செய்வதாக நடித்துக்கொண்டே , லச்சுமியின் ஒப்பாரியை ரசித்துக்கொண்டிருந்தனர். ஆடு கட்டியிருந்த வேப்பமரத்தடி வெறுமையாக இருந்தது.

முருகா... இங்க பார்றா அநியாயத்த , ஒம்மாம ஆட்டுக்குட்டிய விட்டுட்டுப் போயி ,பத்து நாக்கூட ஆவல, எவந்திருடுனான்'னு தெரியலயே, ஆட்டத்திருடுனவன் கைல கட்ட மொளைக்க... மாசாணியாத்தா நீயே பாத்துக்க... என பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பிக்க, ராமாயி இடைமறித்தாள்.

ஏ லச்சுமி, யாரும் திருடிருக்க மாட்டாங்க, எங்காவது அத்துட்டு ஓடிருக்கும்டி... போயி களத்துமேடு, வாய்க்காமேட்ல நல்லாத்தேடிப்பாருடி...
இல்ல ராமாயக்கா, காலைலயே எல்லா எடத்துலயும் தேடிட்டேக்கா, எங்கியுமே காணோமே, குட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலயே….?! லச்சுமி ஏறக்குறைய அழவே ஆரம்பித்திருந்தாள்.

கலைந்த தலையுடன் நின்றிருந்த முருகன், அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஆட்டுக்குட்டியை முருகனின் மாமா என்ன காரணத்தினாலோ, இங்கு விட்டுச்சென்று, ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை.

டே, முருகா, எங்கியாவது போயித்தேடிப்பாருடா... லச்சுமி குரல் உடைந்து, அழ ஆரம்பித்த அதே சமயத்தில், முருகனின் பள்ளிக்கூட சினேகிதன் பரமு வந்தான். லச்சுமி அழுது கொண்டிருந்ததைப் பார்த்ததும் ,வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான் பரமு.

என்னடா , என்னாச்சு..?! லச்சுமிக்குக் கேட்காமல் மெதுவாகக் கிசுகிசுக்க.
ஆட்டுக்குட்டிய காணம்டா... முருகன் வெறுப்பாக சொல்ல, ஆடு கட்டியிருந்த இடத்தையும், லச்சுமியையும் மாறி, மாறிப்பார்த்தான் பரமு.
என்னாது , ஆட்டக்காணோமா...?!

டே முருகா, இன்னிக்கு இஸ்கூலு , லீவு தானே, நீயும் ஓ சினேகிதனும் போயி , வாய்க்காமேட்டுல தேடிப்பாருங்கடா , அங்கதான் எங்கியாவது மேயும்..' என்று சொன்ன ராமாயி'யை முறைத்தான் முருகன் .

இதே வேறெதாவது சூழ்நிலையாக இருந்தால், 'நீ போக்கா உன் வேலையப் பாத்துக்கிட்டு ' என்று சொல்லியிருப்பான் . ஆனால் இப்போது அதை சொன்னால் லச்சுமி கையில் கிடைப்பதை எடுத்து அடிப்பாள் என்ற ஒரே காரணத்துக்காக , முறைப்பதோடு நிறுத்திக்கொண்டான். லச்சுமியும் ,
முருகா போ சாமி, பரமுவையும் கூடக்கூட்டீட்டுப் போயி எங்காவது தேடிப்பாரு சாமி, என்றவுடன் பரமு உற்சாகமானான். யக்கா , நாங்க ஆட்டக்கண்டுபுடிச்சுடுவோம்க்கா, போன மாசம் கூட ஓடிப்போன அருக்காணிக்கா கோழிய நாந்தேன் கண்டுபுடிச்சு கொண்டாந்து கொடுத்தேன். 

டே முருகா , வாடா போலாம் என்றபடி கிளம்ப ஆயத்தமானான் பரமு. முருகனுக்கு காணாமல் போன ஆட்டைத்தேடுவதில் விருப்பம் இல்லையெனினும் , அம்மாவை நினைத்துக்கொண்டு ,வேண்டா வெறுப்பாகக் பரமுவுடன் கிளம்பினான்.

லச்சுமி பிண்ணனியில் தான் ஆடு , வந்த நாள் முதலாக , அதை எப்படி கவனித்துக்கொண்டாள் என்பதை விலாவரியாக ராமாயிடம் விளக்கிக்கொண்டிருக்க, பரமுவும், முருகனும் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.

பொதுவாகவே முருகனுக்கு ஆடுகளின் மீது அவ்வளவாகப்பிரியம் கிடையாது. குறிப்பாக , இந்த ஆட்டுக்குட்டியை சரியாகக்கூடப் பார்த்ததில்லை. பின்புறம் வளைந்த கொம்புகளுடன், அடர்கருமை நிறத்தில் , கோலிக்குண்டு போன்ற கண்களுடன் , பார்க்கும் போதெல்லாம், எப்போதும் தரையில் எதையோ தேடிக் கொண்டும், வேப்பமரத்தடியில் எதையாவது அசை போட்டுக்கொண்டுமிருக்கும். மரத்தடியைக்கடந்து சொல்லும் இவனை, ஒரு வினாடி அசைபோடுவதை நிறுத்திவிட்டு, தலையைத்தூக்கிப்பார்க்கும்.

ஆனால், லச்சுமி அந்த ஆட்டை நன்றாகவே கவனித்துக் கொண்டிருந்தாள் .காலையில் காட்டுவேலைக்குப் போகும் போது, ஆட்டையும் கூடவே ஓட்டிச்சென்று விடுவாள். சில நேரங்களில் பாதுகாப்பாக, வீட்டு ஆசாரத்தினுள்ளேயே , மர தூணில் கட்டி, தளைகளைப்போட்டு ,சென்று வேலைக்குச்சென்றிருப்பாள். பள்ளி முடித்து, மாலையில் முருகன் வரும் போது , வீடு முழுவதும் புழுக்கையை போட்டு வைத்து விட்டு, அசை போட்டுக்கொண்டிருக்கும். எரிச்சலும் , கோபமும் வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டான்.

ஆனால் அது கழுத்தில் கட்டியிருந்த அந்த சிறிய மணி , அடிக்கடி அதன் இருப்பைப்பதிவு செய்து கொண்டிருக்கும். அதுவும் இரவு நேரங்களில் விழிப்பு வரும் போது, நிசப்தமான இரவில் , ஆட்டின் கழுத்தில், மெலிதாக ஆடும், மணியோசையைக் கேட்கும் போது, இந்த ஆடு தூங்கவே தூங்காது போலும் என நினைத்துக்கொள்வான். ஆட்டிற்கும் அவனுக்குமான உறவு அவ்வளவு தான்.

ஆனால், வந்த ஒரு வாரத்திலேயே, தன் அம்மா அந்த ஆட்டின் மீது வைத்திருந்த அன்பு, அவனுக்குப்புதிதாக இருந்தது. ஏதோ குழந்தையைத்தொலைத்தது போலல்லவா கண்ணீர் வடிக்கிறாள்? ஆட்டை அவள் எப்படி கவனித்துக்கொண்டாள் என்பதை யோசித்துக்கொண்டே வந்தவனை பரமு உசுப்பினான்.

ஏண்டா , எங்க போயித்தேடலாம்...?! மொதல்ல வாய்க்காமேட்டுல தேடுவோமா..?

ம்ம்...

ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு , மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.
ஊரில் அவனுடைய வீட்டையும் சேர்த்து, மொத்தம் ஐம்பது வீடு கூடத்தேறாது. பெரும்பாலும் எல்லாமே குடிசை வீடுகள்.  அவன் குழந்தையாக இருக்கும் போதே அப்பா இறந்து விட்டபடியால் , நினைவு தெரிந்த நாள் முதலாய் இந்த ஊரில் தான் வாழ்கிறான். அம்மாவைத்தவிர அவனுக்குத் தெரிந்த சொந்தம் , அவன் மாமா மட்டுமே , அவரும் பக்கத்து ஊரிலிருந்து எப்போதாவது வந்து போவார், ஆடு கூட அவருடையது தான் .

அம்மா , கோபத்தில் கத்துவாளே தவிர, அவள் கண்கலங்கி இதுவரை பார்த்ததே இல்லை, ஆனால் இந்த ஆடு காணாமல் போனதால் முதன்முதலாக அவள் கண்கலங்கியது முருகனின் மனதை என்னவோ செய்தது. நிலக்கடலையை உடைத்து தின்றுகொண்டே வந்த பரமு, முருகன் முகத்தையே பார்த்தான்.

ஏண்டா சோகமா இருக்க..?! ஆடு கெடைச்சிடும்டா , கவலப்படாத... என்று ஆறுதல் படுத்தவும் , முருகனும் அம்மாவிற்கேனும் ,ஆட்டைக்கண்டு பிடித்தே தீருவது என உறுதி எடுத்துக்கொண்டான்.
அந்த சிறிய ஊரில் தேடுவதற்கான இடமும் குறுகிய அளவிலேயே இருந்தது. வாய்க்காமேடு, கருவேலங்காடு, சுடுகாடு இது தவிர்த்து ஊரில் தேட இடமே இல்லை.

                                     **********************************************************************

வாய்க்கா மேடு முழுவதும் சல்லடை போட்டுத்தேடியாகி விட்டது. அங்கு ஆடு, மாடு மேய்த்தவர்களிடமும் விசாரித்தாயிற்று, ஆனால் ஆடு அங்கு வந்ததற்கான அறிகுறியே இல்லை. வாய்க்கா மேட்டை ஒட்டியிருந்த அந்தக் கருவேலங்காட்டிலும் ஒரு பார்வை பார்த்தாகி விட்டது. வேலிக்காட்டைத் தாண்டி நீளும் ஒற்றையடிப்பாதையின் முடிவின் சுடுகாட்டுக்கொட்டகையில் சீட்டாடிக்கொண்டிருந்தவர்களிடமும் கூட விசாரித்தாயிற்று. அப்பொழுதே ஏறக்குறைய மதியம் தாண்டியிருந்தது. அந்த ஊரில் லச்சுமியையும் , முருகனையும் தவிர வேறு யாருமே அந்த ஆட்டைப் பார்க்காதது போன்று தோன்றியது பரமுவுக்கு.  தளர்ந்து போய் , நடக்க ஆரம்பித்தனர்.

கையில் குச்சியை வைத்து ஆட்டிக்கொண்டே வந்த பரமு, ஏதோ புதிதாகக் கண்டுபிடித்த பரபரப்புடன்,

ஏண்டா ஒருவேள காட்டுமுனி அடிச்சு ரத்தம் குடிச்சிருக்குமோ..?! என்றவன், பரபரப்பு மெதுவாக அடங்க, ஏன்னா, எங்க தாத்தா ஊருல இப்பிடித்தாண்டா ஒரு கன்னுக்குட்டிய முனி அடிச்சிட்டதா சொல்லுவாங்க...?! ஆனா எனக்குத்தெரிஞ்சு நம்ம ஊருல முனியெல்லாம் இல்ல, என்றவனை முறைத்தான் முருகன்.

முனியும் இல்ல , ஒண்ணும் இல்ல , பேசாம வா...

சிறிது தூரம் இருவரும் எதுவும் பேசாமல் வந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல்' என நீண்ட நெல்வயலின் வரப்பிலேறி நடந்தனர் .
இனி பக்கத்து ஊருல போய்த்தாண்டா தேடணும்.ஆனா எனக்கு ராமாயக்கா மேல கூட ஒரு டவுட்டு இருக்கு...

பேசாம வா... என்று அவனை அதட்டிவிட்டு, வரப்பின் நடுவே பாயும் ஓடையில் இறங்கி கால் நனைய நடந்த முருகன் , சட்டென நின்றான். அவன் பாதச்சுவட்டிலேயே கால் பதித்து வந்தான் பரமு.

என்னடா..?!

இருடா ... என்று கைகாட்டிவிட்டு காதைத்தீட்டினான். சந்தேகமேயில்லை அதுவே தான்.

டே, உனக்கு கேக்குதா..?!

என்ன , கேக்குதா...?!

அந்த மணிச்சத்தம்.

பரமு கையைக் குவித்துக் காதில் வைக்க , கரும்புத்தோட்டத்தினுள் மெதுவாக ஆடும் மணி சத்தம் கேட்டது.
ஆமாடா எதோ மணிச்சத்தம் கேக்குது..!.

சற்றும் தாமதிக்காமல் ஓடையிலிருந்து வயலுக்குள் குதித்து, கால்கள் அப்படியே சேற்றுக்குள் பதிய , ஓட முடியாமல் எட்டு வைத்து, கரும்புக்காட்டை நோக்கி விரைந்தான் முருகன். அவன் ஏன் ஓடுகிறான் எனத்தெரியாமலேயே அவனைத் தொடர்ந்தான் பரமு. கரும்புத்தோட்டம் செழிப்பாக வளர்ந்து சோகைகளை அசைத்துக் கொண்டிருந்தது.
வரப்பின் மீது ஏறிய முருகன் , குனிந்து சோகைகளுக்கு நடுவே ஊடுருவிப்பார்க்க முயன்றான். மணிசத்தம் மட்டும் மெதுவாக ஆடிக்கொண்டிருப்பது கேட்டது. சந்தேகமேயில்லை , காதுகளுக்கு மிகவும் பழக்கமான ஓசை , வரப்பின் மீதேறி தோட்டத்தை சுற்றி ஓடி வந்தான்.

மே....எ..!

எதிர்பார்க்காத சமயத்தில் உள்ளேயிருந்து ஆடு கத்தும் சத்தம் வர, யோசிக்காமல் , தோட்டத்தினுள் பாய்ந்தான். பின்னயே ஓடி வந்த பரமு , ஏதோ புரிந்தவனாக, முருகனின் பின்னே அவனும் தோட்டத்தினுள் பாய்ந்தான். கரும்புச்சோகைகள் கை, கால் என கண்ட இடங்களில் கோடு கிழிக்க, எதுவும் தோன்றாமல் முருகனின் காதுகள் மணி சத்தத்தைத் தேடியது. சில நிமிட அமைதிக்குப்பின்,

மே...ஏ...!

இந்த முறை சற்று அருகிலேயே கேட்க, சத்தம் வந்த திசையை நோக்கி தவழ்ந்து சென்றான். சோகைகளுக்குள் ஏதோ கருப்பாக அசைவது தெரிய, பாம்பு,எறும்புக்கடி, சோகைமுள் என எதையும் பொருட்படுத்தாமல், முன்னேறினான்.

ஒருகட்டத்தில் அது அவனுடைய ஆடுதான் எனத்தெரிந்த போது , அவன் வேகம் அதிகமானது. ஆடு மிரண்டு, வழி தெரியாமல் தப்ப முயல, முருகன் அதைப்பிடிக்க எத்தனிக்க, ஆடு கழுத்தில் கட்டியிருந்த கயிறு , எதிலோ மாட்டிக்கொள்ள , ஆடு முருகனிடம் வகையாக மாட்டியது.

ஆட்டை அப்படியே குழந்தையைப்போல அள்ளி, தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு,புன்னகையுடன் ,கரும்புத்தோட்டத்தை விட்டு வெளியே வந்தான் முருகன். ஆட்டைப்பார்க்கும் அம்மா எப்படி சந்தோஷப்படுவாள் எனக் கற்பனை செய்து கொண்டான். கரும்புத்தோட்டத்தின் இன்னொரு மூலையிலிருந்து வெளிப்பட்ட பரமு, தலையில் ஊர்ந்த எறும்புகளைத் தட்டிவிட்டுக் கொண்டே , ஆட்டுடன் நிற்கும் முருகனைப் பார்த்தான். அவன் வாய் மெதுவாக சந்தோஷத்தில் விரிந்தது ,
ஹெஹேய்...! நாந்தான் சொன்னேன்ல...!
என்று கத்திக்கொண்டு , முருகனை நோக்கி ஓடி வந்தான்.
                                         **********************************************************
முருகனின் வீடு.
லச்சுமி , வீட்டு வாசலின் ஓரத்தில் இருந்த விறகுகளை அடுக்கிக்கொண்டிருக்க, முருகனும், பரமுவும் மூங்கில் தடுக்காலான வெளிக்கதவைத்தள்ளிக் கொண்டு, ஆட்டுடன் உள்ளே நுழைந்தனர். 

 இருவரையும் யதேச்சையாகப் பார்த்தவள் , ஆட்டைக்கண்டவுடன் , கையிலிருந்த விறகைப்போட்டு விட்டு, சந்தோஷத்தில் ஓடி வந்து, ஏறக்குறைய முருகனின் கையிலிருந்த ஆட்டைப்பிடுங்கிக்கட்டிக்கொண்டாள்.
அன்று இரவு.

ஆடு அதே வேப்பமரத்தில் கட்டப்பட்டு, வழக்கம்போல தரையில் எதையோ தேடிக்கொண்டு இருந்தது. தான் ஆட்டை எப்படிப்பிடித்தேன் என்பது பற்றி பரமு ,லச்சுமியிடம் அளந்துவிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் முருகன் எதுவும் பேசாமல் அந்த ஆட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று இரவும் முருகன் , வழக்கம்போல அந்த ஆட்டுக்கழுத்துமணிசத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

மறுநாள் ,

காலையிலேயே மணிச்சத்தம் உசுப்ப, படுக்கையிலிருந்து எழுந்து வந்து, ஆட்டைப்பார்த்தான்.

வேப்பமரத்தடியில் , அசைபோட்டுக் கொண்டே படுத்திருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தள்ள, அருகிலிருந்த காட்டுக்குச்சென்று, ஆடு தின்ன இலை தளைகளை ஒடித்து வந்து ஆட்டிடம் காட்ட, அது அவசர, அவசரமாக அவன் கையிலிருப்பதைப் பிடுங்கித்தின்பதை, ரசித்தான். லச்சுமி அவனை வினோதமாகப் பார்த்தாள்.

பள்ளிக்கூடத்திலும் பரமு, முருகனின் ஆடு தொலைந்தது , அதைக்கண்டுபிடித்தது என பக்கம் பக்கமாக கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

பள்ளிவிட்டு வீட்டுக்கு வரும் போது, ஆடு அகத்திக்கீரையை விரும்பி உண்ணும் என்று அம்மா எப்போதோ சொன்னது நினைவுக்குவர, வழியிலுள்ள காட்டில், அகத்திக்கீரையை ஒடித்து வந்தான்.

அடுத்த சில நாட்களிலேயே ஆட்டைக்கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். போகுமிடமெல்லாம் ஆட்டைக்கூட்டிக்கொண்டு சென்றான். கழுத்துமணி கிண்கிணிக்க தலையை ஆட்டிக்கொண்டே ஆடு அவனுடன் நடக்க இப்படியே ஒரு வாரத்திலேயே, கொஞ்சம் கொஞ்சமாக ஆடு, அவனுக்கு மிகப்பிடித்த நண்பனாகவே மாறியிருந்தது. பள்ளிக்கூடம் விட்டு வரும்போதே ஆட்டைப்பார்க்க வேண்டுமென்ற நினைப்பில் தான் வருவான்.

அப்படியிருக்கையில் ஒரு நாள் வழக்கம்போல பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தான் தூரத்திலேயே வீட்டின் முற்றத்தில் மனிதர்கள் நடமாட்டம் தெரிந்தது.
முருகன் ஏதும் புரியாமல், தயக்கத்துடன் வீட்டை நெருங்கி, கண்கள் வேப்ப மரத்தடியைத்தேடியது.

தோ , முருகனே வந்துட்டானே...! எனக்கூட்டத்தில் ஒருவர் சொல்ல, கூட்டமே அவனைத் திரும்பிப்பார்த்த அதே வேளையில் , மாமா வீட்டினுள் இருந்து வந்தார்.

வாடா மாப்ளே...! எனப்பல்லைக்காட்ட, முருகனுக்கு அடிவயிறு பகீரென்றது.
ஆட்டை ஓட்டிப்போக வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. என்ன ஆனாலும், ஆட்டை விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியபோதே, அம்மாவும் ஆட்டை ஓட்டிப்போக சம்மத்திக்க மாட்டாள் என்பது ஆறுதலாகவும் இருந்தது.

 யாரையும் பொருட்படுத்தாமல் வீட்டினுள் ஓடினான்.

முற்றத்தில் பெண்கூட்டத்திற்கே உண்டான கேலிச்சிரிப்பு கலகலக்க, ஆங்காங்கே, குழுகுழுவாக நிறையப் பெண்கள் குழுமியிருந்தனர்.

 எதற்காக இவ்வளவு கூட்டம் என்னும் கேள்வி மனதில் எழவே இல்லை. மாறாக, கூட்டத்தில் முருகனின் கண்கள் அம்மாவைத் தேடி அலைந்த போது,
முருகா இங்க வாடா...! என்று லச்சுமியின் குரல் கேட்டது.

யாரிடமோ சிரித்துப்பேசிக் கொண்டிருந்த லச்சுமியை நோக்கி ஓடினான் முருகன்.

அம்மா, அம்மா ஆடு எங்கம்மா...?! எங்க...?

இதுதா எம்பையன் முருகன் ' என யாரிடமோ அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள் லச்சுமி .

எரிச்சலடைந்த முருகன்,

யம்மா, ஆடு எங்கம்மா...?! ஏறக்குறைய கத்த, கையை ஒரு திசையில் நீட்டிக்கொண்டே , அவள் பேச்சைத் தொடர்ந்தாள்.  லச்சுமி கைகாட்டிய திசையில் பார்த்த முருகன் அதிர்ந்தான்.

லச்சுமி கைகாட்டிய திசையிலிருந்த அடுப்புத்திண்டில் வெட்டப்பட்ட ஆட்டின் தலை சரிந்து கிடந்தது, ஆட்டின் கண்கள் நிலைகுத்தியிருக்க,அருகில் ரத்தக்கறை படிந்த பெரிய பாத்திரம் மூடி வைக்கப்பட்டிருந்தது.  என்ன நடந்திருக்கும் என்பது புரிந்த அந்த ஒரு நொடியில், முருகனின் கன்னங்களில் அவனையும் அறியாமல் , சூடான கண்ணீர் உருண்டது.

கண்ணீரைத் துடைக்கத்தோன்றாமல் , லச்சுமியைப் பார்த்தான் முருகன். லச்சுமி முகத்தில் சந்தோஷம் பொங்க,  இன்னும் பேசிக்கொண்டுதானிருந்தாள்.
ஆடு காணாமல் போன அன்று , லச்சுமி அழுதது நினைவுக்கு வந்தது. முருகனுக்கு அந்த அழுகை, கண்ணீரின் அர்த்தம் புரிய ஆரம்பித்த போது,


தூணின் ஆணியில் மாட்டியிருந்த அந்த கழுத்துமணி மட்டும் , அப்போதும் காற்றில் அசைந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.