ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday, 18 December 2013

போட்டிச் சிறுகதை-25


சிறுகதை-பாதை மாறிய பயணங்கள்

காதலிக்கும் பெண்ணிற்காக காத்திருப்பதை தவிர,வேறு யாருக்காகவும் அல்லது எதற்காகவும் காத்திருப்பது மாதிரியான கொடுமை இந்தஉலகத்தில் வேறெதுவுமில்லை.அந்த மாதரியான ஒரு கொடுமையைத்தான் இப்போது அனுபவித்து கொண்டிருந்தான் ஆனந்த்! நேரம் ஆகஆக எரிச்சல் அதிகமாகி,செல்போனின் திரையையே வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.சட்டென செல்போன் திரை உயிர்பெற்று ‘வர வர காதல் கசக்குதய்யா’ என ரிங்டோன் ஒலிக்க,திரையில் ‘பாலு காலிங்’ என எழுத்துகள் ஒளிர்ந்தது.கண்கள் பிரகாசிக்க அழைப்பை எடுத்தான் ஆனந்த்.

“மச்சி,நான் எல்லாம் பேசிட்டேன்டா..நாளைக்கு ஈவ்னிங் ரெடியாயிரு,நானே வந்து உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன்..ஓகே.வா?” என்றான் பாலு.

ஆனந்த்,"சரிடா..அப்புறம் பாலு..எந்த பிரச்சனையும் வராதில்லடா?யாருக்காச்சும் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்..அதான் பயமாயிருக்கு!"

“டேய் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது..எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்,நீ ஈவ்னிங் கெளம்பி இரு..நானே கால்பண்றேன் உனக்கு..ஓகே வா? பை மச்சி” எனசொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆனந்துக்கு லேசாய் வியர்க்க ஆரம்பித்தது..வழக்கத்தைவிட லப்டப் சத்தம் சற்று வேகமாய் அடிப்பதாய் தோன்றியது.செய்வது தவறு தான்..புரிகிறது! ஆனால் நான்செய்வது தவறு என்றால்,இதை செய்வதற்கு என்னை தூண்டிய இந்த சமூகத்திற்கும் தவறில் சரிபாதி பங்கு உண்டுதானே? என ஏதேதோ சொல்லி மனதை சமாதனபடுத்தி கொண்டான்.

இங்கு ஆணாய் பிறப்பதே பாவம்.அதிலும்,என்னைப்போல் மிடில்கிளாசில் பிறந்து,முப்பது வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகாமல்,அதைப்பற்றி யோசிக்க கூட நேரமில்லாமல் ‘வாழ்க்கையில செட்டில் ஆகணும்’ என்ற ரேஸில் ஓடிக்கொண்டேஇருக்கும் ஆணாய் பிறப்பது மகாபாவம்!முதிர்கன்னிகளை பற்றி கவலைப்பட்டு கவிதையாய் எழுதித்தள்ளும் கவிஞர்கள் கூட,என்னை மாதிரி முதிர்கண்ணன்களை(!) பற்றி கண்டுகொள்வதில்லை.ஹூம்..ஆண் என்றால் அவ்வளவு இளக்காரம் எல்லோருக்கும்! சரி..வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காவிட்டாலும் பரவாயில்லை,குறைந்தபட்சம் ‘நல்லவன்’ என்ற பட்டத்தோடு,திருமணம் ஆகும்வரை கட்டபிரம்மச்சாரியாய் வாழ்ந்துவிடலாம் என நான் நினைத்தாலும்,என்னை அப்படி வாழவிட இந்த சமூகம் நினைப்பதில்லை!

எந்தப்புத்தகத்தின் நடுப்பக்கத்தை திறந்தாலும்,ஏதேனும் ஒரு கவர்ச்சி நடிகை,டூ பீஸ் உடையில் நீச்சல்குளத்திலிருந்து அப்போதுதான் குளித்துவிட்டு மேலேஎழுந்து வருவது போலான புகைப்படம் கட்டாயமாய் இடம்பெறுகிறது.புத்தகம் மட்டும்தான் என்றில்லை.இப்போதெல்லாம் ரோட்டில் நிம்மதியாய் நடந்துசெல்ல முடிவதில்லை,இந்த தயாரிப்பாளர்களுக்கெல்லாம் என்ன பணப்பிரச்சனையோ,அவர்களின் பஞ்சத்தையெல்லாம் நடிகைகளின் உடைகளில் காட்டிவிடுகிறார்கள்.அவர்கள் சாலையில் ஒட்டும் எந்த போஸ்டரிலும்,நடிகைகள் முழுசாய் துணி உடுத்தியிருப்பதேயில்லை.இதற்கு ஒரு முடிவு கட்டினாலே போதும்,நாட்டில் பாதி விபத்துகளை தடுத்துவிடலாம்!சில வருடங்களுக்கு முன்பெல்லாம், ’ஒருமாதிரியான’ படங்களை பார்க்கவேண்டுமெனில்,ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருக்கும் தியேட்டருக்கு தலையில் முக்காடு போட்டுகொண்டு செல்லவேண்டும்.ஆனால் இப்போது அந்த கஷ்டமெல்லாம் இல்லை.எந்தநேரத்தில் டிவியை ஆன் செய்தாலும் ஏதோஒரு சேனலில்,’நேத்து ராத்திரி யம்மா’ மாதிரியான தத்துவ(!)பாடல்களுக்கு ஏதேனும் ஒரு ஜோடி உச்சபட்ச கவர்ச்சியோடு ஆடிக்கொண்டிருக்கும்.இதெல்லாம் போதாதென்று தியேட்டர்,பார்க் என்று எங்கும் வியாப்பித்திருக்கும் இந்த திடீர்காதலர்கள் வேறு.இவர்களுக்கு கொஞ்சமாய் இருளோ,மறைவோ கிடைத்துவிட்டாலே போதும்..காதல் செய்வதற்கு!!

இப்படி எந்தப்பக்கம் திரும்பினாலும் பெண் என்பவளும் சாதாரண சக மனுஷி தான் என்பதை மறைத்து,அவளின் உடம்பை மட்டும் பிரதானாமாக்கி,பெண் என்பவள் ஏதோ எட்டாவது அதிசயம் போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது இந்த சமூகம்.அப்படி என்னதான் இருக்கிறது என ஆர்வக்கோளாரில் எவனாவது அறிய முற்படுகையில்,’பொம்பளை பொறுக்கி’ என ஒற்றைவார்த்தையில் அவமானபடுத்தி உட்கார வைத்துவிடுவார்கள்..உன்னைசுற்றி ஆயிரம் அசிங்கங்கள் நடக்கும்.ஆனால் நீ யோக்கியமானவனாய் தான் இருக்கவேண்டும் என சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?! நான் முடிவு செய்துவிட்டேன்..அந்த விசயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என பார்த்துவிடுவதென்று!

அதைப்பற்றி சொல்வதற்கு தான் பாலு போன் செய்திருந்தான்.என்னதான் பாலு என் பள்ளித்தோழன் என்றாலும் இந்தாமாதிரி விசயத்தில் எல்லாம் அவன்தான் எனக்கு குரு!அதனாலேயே அவனுக்கு ‘பலே பாலு’ என்ற பட்டமும் உண்டு!அவனுக்கு தெரிந்த பார்ட்டியிடமே அழைத்துசெல்வதாய் சொல்லியிருக்கிறான்.முகூர்த்தமெல்லாம் கூட குறித்தாயிற்று!

என்னதான் பாலுவிடம் சரி என்று சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலாய்த்தான் இருக்கிறது.யாரிடமாவது மாட்டிக்கொண்டால்,இத்தனை வருடம் கட்டி காப்பாற்றி வரும் நல்லவன் என்ற கோட்டை ஒரே நொடியில் சுக்குநூறாய் உடைந்துவிடக்கூடும்.ஆனாலும்,ஆசையும் ஆசையும்,விதியும் யாரை விட்டது?!

பாலு அழைத்துபோவதாய் சொன்ன பெண் எப்படியிருப்பாள் என தெரிந்துகொள்ள ஆர்வமாயிருந்தது ஆனந்துக்கு.இந்த சினிமாவில் எல்லாம் வருவதுபோல்,பவுடருக்குள் மறைத்த முகமும் ரத்த சிகப்பில் உதட்டுச்சாயமும் பூசியபடி சொருகிய கண்களுடன் நிற்பாளோ? ஒருவேளை பாக்க சகிக்காதமாதிரி இருந்துவிட்டால் என்னசெய்வது? ச்சே,என்னயிருந்தாலும் பாலு நம் நண்பன்,நம்பிக்கை துரோகம்(!) செய்யமாட்டான் என,ஏதேதோ யோசித்தவாறே சென்று நின்ற இடம் ஒரு மெடிக்கல்ஷாப்!!

அதேதான்..!என்னதான் இது முதல்முறை என்றாலும்,இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கேள்விஞானத்தால் நிறையவே தெரிந்து வைத்திருந்தான்.அந்தநேரம் நேரம் பார்த்து,கடையில் நல்ல கூட்டம்.ஆணுறை வாங்குபவனை பார்த்து நமட்டுசிரிப்பு சிரிப்பவர்கள் உள்ளவரையிலும்,இந்தமாதிரியான பாதுகாப்பு சாதனங்கள் சாதாரண பெட்டி கடைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யாதவரையிலும் இங்கு எய்ட்ஸை ஒழிப்பது என்பதெல்லாம் ஆகாத காரியம்தான்! என சாதாரண மனிதனின் மனசாட்சி தேவையில்லாத நேரத்தில் பேச எத்தனிக்கையில் அதை உடனடியாய் தலையில் தட்டி அமைதிபடுத்த வேண்டியாதயிற்று.கடைக்காரர் என்னிடம் வருவதற்குள்,அந்த ஆணுறை பாக்கெட் எங்கேயிருக்கிறது என கண்கள் தேட ஆரம்பித்தது.தேடலின் பலனாய்,ஒருவழியாய் கண்ணாடி ஷெல்ப்க்குள் இருந்த அந்த பாக்கெட்டை கண்டுபிடித்துவிட்டேன்!என் பார்வையை வைத்தே கடைக்காரர் யூகித்துவிட்டார்.இதற்க்கு பெயர்தான் அனுபவமென்பது!அவர் அனுபவத்தில் என்னைமாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பார்.ஒருவாறாய் பணத்தை கொடுத்துவிட்டு,பேன்ட் பாக்கெட்டுக்குள் அதை திணித்துக்கொண்டு வெற்றிகளிப்புடன் வீடு திரும்பினேன்.

வீட்டிற்கு வந்து குளித்து முடித்து தயாரானேன்.நேரம் செல்லசெல்ல பாலுவின் அழைப்பை எதிர்ப்பார்த்து,என் கவனமெல்லாம் செல்போன் மீதே இருந்தது.பாலு வரும்வரை வாசலில் காத்திருக்கலாம் என்று,வெளியே கிளம்ப எத்தனிக்கையில்,அம்மாவின் குரல்!

"டேய்,இப்போதானேடா வந்த,அதுக்குள்ள மறுபடி எங்க கிளம்பிட்ட?" என்றாள்.

எனக்கிருந்த பரபரப்பு எரிச்சலாகி, “ம்மா,நானும் பாலுவும் முக்கியமான ஒரு வேலையா வெளில போறோம்..நைட்டு வர்றதுக்கு லேட்டாவும்.நீ சாப்பிட்டுட்டு படுத்துக்க” என சொல்லிவிட்டு நழுவுவதற்குள்,

அம்மா,"சரிசரி,கேபிள்காரருக்கு பணம் குடுக்கணும்.காலையிலேயே வந்து பணம் கேட்டாங்க,நீ வீட்ல இல்ல..சாயந்தரமா வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேன்.பணம் குடுத்துட்டு போடா" என்றாள்.

"என் அவசரம் புரியாம நீ வேற ஏன்மா படுத்துற” என அலுத்துக்கொண்டே பேன்ட் பின்பாக்கெட்டில் கையை விட்டு பர்ஸை எடுக்க.....

பர்ஸுக்கும்,பின்பாக்கெட்டுக்கும் இடையில் இருந்த அந்த ஆணுறை கவர் சொத்தென்று கீழே விழுந்தது.ஒருநொடி என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.சில விஷயங்கள் எல்லாம் நடக்காமலிருந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாய் இருக்கும் என நினைத்து பார்ப்பதுண்டு.ஆனால்,வாழ்க்கை ஒரு மாயவிளையாட்டு.அது யாருடைய கட்டளைக்கும் காத்திருப்பதில்லை.அதன் விருப்பம் போல்,மனிதர்களையும் காட்சிகளையும் மாற்றிபோட்டு விளையாடிக்கொண்டே இருக்கிறது.

கீழே விழுந்த அந்த கவரை அம்மா பார்த்துவிட்டாள்.பார்த்தது மட்டுமல்ல,அது என்னவென்று கவனித்தும்விட்டாள்.என்மீதான பிம்பங்கள் அனைத்தும் ஒற்றை நொடியில் என் கண் முன்னாலயே தூள்தூளாகிவிட்டது.என்னை நானே காறி உமிழ வேண்டும்போல் இருந்தது.என்னவென்று சொல்வது,அல்லது எதை சொல்லி நியாயப்படுத்துவது?அம்மா, கன்னத்தில் நாலு அறை அறிந்திருந்தால் கூட கொஞ்சமேனும் குற்றஉணர்ச்சி குறைந்திருக்கும்.ஆனால் ஒரு வார்த்தை பேசவில்லை,பேசவில்லை என்றால் பேசவே இல்லை!’பாலு காலிங்’ என செல்போன் அலறிக்கொண்டே இருந்தது..ஆனால் எடுத்த பேசத்தான் மனம் வரவில்லை.


எந்த காமத்திற்காக ஒரு தருணத்தில் ஏங்கி அலைந்தேனோ,அதைப்பற்றி நினைத்தாலே இப்போதெல்லாம் மனம் குற்றஉணர்ச்சியில் குறுகிப்போகிறது.காதலும்,காமமும் மிகைப்படுத்தப்பட்டு காண்பிக்கும் தேசமிது! பசி தூக்கத்தை போல காமமும் சாதாரண ஒரு உணர்வு தான் என்பதை சரியான விதத்தில் புரிய வைக்கப்படாதவரை,அக்னி கக்கும் இந்த காமத்தின் நாக்குகள்,என்னைமாதிரி ஆயிரமாயிரம் இளைஞர்களின் வாழ்வை ஏதோ ஒரு ரூபத்தில் சுட்டு பொசுக்கி கொண்டேதான் இருக்கபோகிறது.