ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday, 5 December 2013

போட்டிச் சிறுகதை-10

சிறுகதை-பேய்களைத் திண்ணும் மீன்கள் 


அதிகாலையும் லாந்தரும் கலந்த இருட்டில் பெட்டிக் கடைத் தாத்தா சில்லறை எண்ணுவதை  உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவனுக்குவெளியே "ஆத்துல மருந்து போட்டுருக்காங்களாம்" என்று யாரோ பேசிக்கொண்டது கடைக்குள் பரவிய காலை வெளிச்சத்தைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக மூளை வரை எட்டியதுடீத்தூளையும் சில்லரையும் வாங்கிக் கொண்டு ஒரே எட்டில் வீட்டிற்கு ஓடி, அடுப்பங்கரை ஜன்னல் வழியே எறிந்து விட்டு, மீண்டும் தெருவுக்கு வந்து எல்லோரும் பேசிக்கொள்வதை கவனித்தான். அவர்கள் பேசியதில் இருந்து மருந்து போட்டது ஓரளவு உறுதியானாலும் எல்லாரும் பெரியவர்களாகவே இருந்ததால் யாரிடமும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தான். அத்தையுடன் குளிக்கச்சென்று கொண்டிருந்த ராமதாசை பின்னால் சென்று இழுத்துக் கேட்டான்  "எங்கடா மருந்து போட்டுருக்காங்க?"
"பொம்பளைங்க துறைக்கும், மாட்டுப் பாதைக்கும் நடுவுலடா, சீக்கிரம் வா, எங்க மாமா எல்லாம் முன்னாடியே போய்டுச்சு" என்று சொல்லிவிட்டு ஓடி அத்தையுடன் சேர்ந்துகொண்டான்.

"டீ போட்டு எவ்வளோ நேரம் ஆச்சு, எங்கடா போன? அப்புறம் ஆறிப் போச்சு, சுடவச்சுத்தான்னு கேக்க வேண்டியது" என்று திட்டிக் கொண்டேடம்ப்ளரை நாகமணி நீட்ட, அனிச்சையாய் வாங்கிக் குடித்துக் கொண்டே கேட்டான் "பொம்பளைங்க துறைக்கு மேற்க்க மருந்து போட்டுருக்காங்களாம், சீக்கிரம் கெளம்புமா நாமளும் போலாம்"
"சாமான்லாம் வெளக்குறதுக்கு எடுத்து வைக்கணும், உங்க அப்பாயியும் டீ குடிச்சுட்டு தரட்டும் போலாம், ஆனா மீன் புடிச்சுகிட்டு இருந்தா ஸ்கூலுக்கு போக வேணாமா?"
"எட்டு மணிக்குள்ள வந்துரலாம்மா, சீக்கிரம் வா" என சொல்லிக் கொண்டே துண்டையும் சோப்பையும் எடுத்துக் கொண்டு தயாராக நின்றான்.
காவிரிக்குப் போகும் வழி முழுவதும் கூட்டம் கூட்டமாக செத்து மிதக்கும் மீன்கள் பற்றிய கற்பனையே வினோத்துக்கு நிறைந்திருந்தது. ரமேஷ் சொல்லி இருக்கிறான் "வெடியும் போடலாம், மருந்தும் கலக்கலாம். வெடி போட்டா அப்படியே மீனெல்லாம் தெறிச்சு செத்துப் போயி கரைல கூட விழுந்திடும், ஆனா மருந்து போட்டா சின்ன மீனுங்க மட்டும்தான் சாவும். போட்ட எடத்துல எல்லாமே செத்துடும், பெரிய மீனெல்லாம் மயங்கிப் போய் இருக்கும்". வினோத் நம்ப முடியாமல் கேட்டான்
"அது எப்படிடா தண்ணிக்குள்ள வெடி வெடிக்கும்?"
அதுக்கு ஒரு வெடி இருக்குடா, தண்ணிக்குள்ள கொஞ்ச நேரம் வச்சிருந்தாலே வெடிச்சுடும், ஒரு தடவை தாடிக்காரன் கொல்லைக்கு நேரா இருக்குற நடுவாய்க்கால் குழியில வெடி போட்டு எங்க பெரியப்பா ஒரு சிமெண்ட்டு சாக்கு புல்லா மீன் அள்ளுனாரு"

மருந்தோ வெடியோ போட்ட கதைகளை ஏராளமாகக் கேட்டிருந்தாலும் அவனுக்கு அவை எல்லாமே மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையாகவே இருந்தன. காவிரியைப் பொருத்தவரை கரைக்கு அருகில் வரும் குட்டி மீன்களை காலால் உதைத்து அவை கரையில் துள்ளும் போது பிடிப்பது மட்டும்தான் அவனுக்குத் தெரியும். வாய்க்காலில் இட்லித் துணியில் ஒட்டி இருக்கும் துகள்களுக்காக வரும் கெண்டைகளை சேலையில் பிடித்துத் தருவாள் நாகமணி. சின்ன மீன்களின் மீதான ஆசை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, மொத்தமாக காவிரியில் உள்ள அத்தனை மீன்களையும் ஒரு நாள் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவனுள் நிலை கொண்டிருந்தது.

அனால் அன்று எல்லா மீன்களையும் வெடி சாகடிக்கவில்லை. சிலர் கையிலும், துண்டிலும் மீன்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். கரையில் ஆங்காங்கே சில மீன்கள் மொய்க்கக் கிடந்தன. ஈயா அல்லது கொசுவா என சொல்ல முடியாது, அனால் மீன்கள் செத்துக் கிடந்தால் கூட்டமாக அவை மொய்க்கும். "செத்த மீனை எல்லாம் வுட்டுடு, கெறக்கத்தில அலையுறத மட்டும் புடி, ஆழத்துக்கு போவம இந்தப் பக்கம் வர்றத மட்டும் புடிச்சுட்டு வா" எனச் சொல்லிவிட்டு கரையில் சாமான்களை வைத்து விட்டு நாகமணியும் மீன் பிடிக்க இறங்கினாள். தண்ணீரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத அரை மயக்க மீன்கள், நெளிந்து கொண்டே முன்னேற முயற்சித்து அவன் கையில் மாட்டிக்கொண்டிருந்தன. ஆண்கள் எல்லோரும் மேற்கே மருந்து போட்ட திட்டுக்கு அருகில் பெரிய மீன்களைப்  பிடிப்பதில் இருந்தனர், நாகமணியுடன் வராமல் இருந்திருந்தால் வினோத்தும் அங்கே ஓடி இருப்பான். இங்கே எளிதாக ஓடும் மீன்களைப் பிடிப்பது ஒரு கட்டத்தில்  நேரடியாக மீன்குழம்பை சாப்பிடுவதைப் போல் சராசரியாகத் தோன்றியது. கையில் மீன்கள் நிறைந்ததால் அவை நழுவிவிடாமல் இருக்க, துண்டை விரித்து வைத்து விட்டு வந்து பிடிக்கும் ஒவ்வொரு மீனாக அதில் போட்டுக் கொண்டிருந்தான். நாகமணி பாத்திரங்களைக் கழுவிவிட்டு மீன்களை கழுவிக் கொண்டே கத்தினாள் "டேய் நேரமாவுது வரியா இல்லையா?, ஸ்கூல்க்கு போறாப்புல இல்லையா?"
"வரேன்மா" என கத்திக் கொண்டே, ஒரு ஆறாவைத் துரத்திக் கொண்டிருந்தான். மெதுவாகத் தான் நகர்ந்தது, அனால் ஒரு பாம்பு ஏற்படுத்தும் பயத்தில் பாதியை அது அவனுள் கிளப்பி இருந்தது, இன்னும் நேரமானால் அம்மா தண்ணீருக்கே இறங்கி வந்து அடிப்பாள் எனத் தெரியும், அனால் ஆறாவைப் பிடிக்கவும் பயம் விடவில்லை. கடைசியில் மணலில் பாதி புதைந்திருந்த ஒரு கிழிந்த துணியினுள் நுழைந்த ஆறாவை துணியுடன் சேர்த்து பிடித்து கரையில் போட்டான்.

அன்று பள்ளியில் முழுவதும் மீன்பிடி கதைகள்தான். ஒவ்வொருவரும் எவ்வளவு மீன்களைப் பிடித்தனர் என்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். மாலை வீட்டில் வறுத்த மீன்களை சாப்பிடும் போது ஒவ்வொரு மீனையும் அவனுக்கு அடையாளம் தெரிந்தது. கிலோவாக வாங்கும்போது எல்லாமே கெண்டையாகவோ, விராலாகவோ இருக்கும், ஆனால் இன்று ஒரு கதம்பமாக இருந்தது. விடிந்ததும் அம்மாவுக்கு முன்னால் காவிரிக்குச் சென்று, மீன் பிடிக்கும் ஆசை அவனை தூங்கவிடாமலே செய்தது.

கரையில் நேற்று இறந்திருந்த மீன்கள் மட்டும் எறும்புகள் மொய்த்தக் கூடுகளாய்க் கிடந்தன. இன்று எல்லா மீன்களும் தண்ணீரில் முன்னெப்போதும் இல்லாததை விட வேகமாகப் போவதாக அவனுக்குத் தோன்றியது. "ஏன்டா இன்னிக்குலாம் மருந்து போடமாட்டங்களா?" என மூர்த்தியிடம் கேட்டான். "டெய்லி எல்லாம் மருந்து போட்டா மீன்காரங்க சண்டைக்கு வந்துருவாங்கடா, நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே நாம போலாம்டா மீன் புடிக்க, நீ உங்க வீட்ல ஏதாச்சும் சொல்லிட்டு வந்துரு" என்றான் மூர்த்தி. என்ன சொல்லி சமாளிப்பது என்ற பயம் அந்த வினாடி முதலே மனதில் ஒட்டிக் கொண்டது.

முதல் குட்டையில் கிடைத்த கெண்டைக் குஞ்சுகளை கம்பியில் குத்தி பலி கொடுத்துவிட்டு கிளம்பினார்கள், மொத்தம் ஏழு பேர். "உன்கிட்ட கம்பி இல்லைல?, நீ இந்த சாரதாஸ் பையை வச்சுக்க, நாங்க கம்பியில கெண்டையை சைடுல இருந்து விரட்டுறப்ப அது நடுவுல தான் ராக்கெட் மாதிரி வரும், நீ உன் காலை சேத்து வச்சு நின்னாப் போதும், அது கால் கலங்கல் தண்ணியிலேயே நின்னுடும்" என்று சொல்லி மூர்த்தி அவனை நடுவில் நிறுத்தி மற்றவர்களுடன் கம்பியில் மீன்களை அணைத்து விரட்டினான். சுரேஷ் மீன்கள் ஆழத்தில் இறங்காமல் பார்த்துக் கொண்டான். எல்லோரும் அணைத்து குவித்த போது, அவன் காலில் எதோ உரசுவது போல இருந்தது, உடனே "டேய் இங்கடா, இங்கடா" எனக் கத்தினான். கம்பியைப் போட்டுவிட்டு வந்த சுரேஷ், வினோத் காலுக்கு முன்னும் பின்னும் மெதுவாக கையை நகர்த்தி மீனைத் தலையுடன் பிடித்துத் தூக்கினான் "ஒக்காளி, கருஞ்ஜிலேபி".

"எப்படிடா அது கால்கிட்டயே நிக்கிது" என்று கேட்டுக் கொண்டே, பையை விரித்து, மீனை வாங்கிக் கொண்டான். மூர்த்தி விளக்கிக்கொண்டே வந்தான்  "கெண்டைய ஓட விட்டு கம்பியில அடிச்சா அது கலங்கல் எங்க இருக்கோ அங்க போய் தாண்டா ஒண்டும், காலை அசைக்காம இருந்தா புடிச்சுடலாம்". போகும் வழியில் சில கெண்டைகள் கம்பி அடியிலேயே தலை சிதறி மிதந்தன. தண்ணீர் ஆழத்தில் அடி சரியாக விழாமல் மயங்கிய மீன்களை கையிலேயே பிடித்தார்கள். ஆற்றின் குறுக்கே நடக்கும் போது "விரால் எல்லாம் குழியிலதான் இருக்கும், ஒன்னு கட்டுத்தூண்டில் போட்டு புடிக்கணும், இல்லை கையால தலைய அமுக்கியோ, வெட்டியோ தான் புடிக்கணும். முட்டை விடாத கெண்டை எல்லாம் மெட்ராஸ் குச்சி திட்டு வேருக்குள்ளதான் பதுங்கி இருக்கும், கையை வச்சு வச்சு பாத்தா ஈசியா மாட்டிக்கும், குருசட்டி எல்லாம் சப்பையா குச்சி, எலைக்கு அடியில படுத்து இருக்கும், காலை வச்சே மிதிச்சு புடிக்கலாம், ராட்டு சாயந்தர நேரத்துல தான் வெளியவரும், கொடுக்கை மட்டும் பாத்து புடிச்சுட்டா பெரியா ராட்டை கூட புடிச்சுடலாம் " என்று வரிசையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டே வந்தான். "இதுல சில பேய் மீன் எல்லாம் இருக்குது தெரியுமா? ஆத்துல செத்துப் போறவங்களை திங்கிற மீனுங்க எல்லாம் பேயா மாறிடும்எங்க திண்டுக்கரை மாமா ஒரு நாள் நைட்டு ஊத்தா போட்டப்ப இப்படித்தான், ஒரு பெரிய கெண்டை, இத்தாசோடு இவங்களும் வெரட்டிகிட்டே போய்ட்டாங்களாம், ஆனா ஒரு சின்ன குழியில போய் காணாமலே போயிடுச்சாம், இவங்க குழிக்கு போற தண்ணிய மணல்ல அணைகட்டி நிறுத்திட்டு, மறுநா அந்த குழியில போய் பாத்தா அப்படி ஒரு மீனே இல்லையாம். பேய் மீன் எல்லாம் இப்படியே போக்கு காட்டியே ஆத்துக்குள்ள இழுத்துட்டு போய்டும்டா, எங்க போறோம்னே தெரியாது "
"கதை வுடாதடா"
"டேய் எங்க அம்மா சத்தியமாடா, நீ வேணும்னா எங்க மாமா வரப்ப கேளு" என்று சத்தியமே செய்தான் மூர்த்தி. அதுவரை மீன் பிடிப்பதில் மட்டுமே குறியாக அலைந்து கொண்டிருந்த அனைவரும் ஒரு வித பயத்துடனே கூட்டத்தில் இருந்து பிரியாமல் சேர்ந்து  வரத் தொடங்கினார்கள். சின்னதும் பெரியதுமாக பையும் நிரம்பிக் கொண்டே வந்தது.

"மணி எத்தனடா இருக்கும், எங்க அம்மா வந்துரும், சாவி என்கிட்ட இருக்கு" என்று கேட்டான் சக்தி.
"ஒரு மணி இருக்கும்டா"
"இப்ப தானேடா வந்தோம், அதுக்குள்ளே எப்படி இவ்ளோ நேரம் ஆச்சு, போலாம்டா" என நெளிந்து கொண்டே சொன்னான் சக்தி.
"மீனுக்கு வந்தாலே இப்படித் தான்டா, போறதே தெரியாது, முன்னாடிலாம் பழைய சோத்த ஒரு டப்பால போட்டு கொண்டு வந்துருவோம், போறதுன்னா போலாம்டா, நான் போயிட்டு மாடு ஓட்ட சாயிந்தரம் வருவேன் மறுபடியும்" என்று சொல்லிக் கொண்டே கம்பியைக் கரையில் போட்டான் மூர்த்தி.

கொண்டு வந்திருந்த பிளேடால் மீன்களை உலசி, எடுத்துக் கொண்டார்கள், கல்யாணத்திற்குப் போன அம்மாவும் அப்பாவும் மாலைதான் வருவார்கள் எனத் தெரிந்ததால், வினோத் இன்னும் கொஞ்சம் குளிக்கலாம் எனக் கேட்க அது அப்படியே தொட்டுப் பிடிக்கும் விளையாட்டாக மாறியது. திட்டு திட்டாக குதித்து தண்ணீரில் மூழ்கி மறைந்து கொண்டிருந்தார்கள். முதலில் தொடப்படுபவன் அடுத்த முறை துரத்த வேண்டும். சக்தி மட்டும் முன்னரே கிளம்பி விட்டான். ஓரளவு வெயில் மங்கிய பின்தான் விளையாடியது போதும் என நிறுத்தி மீனைப் பிரித்துக் கொண்டு கிளம்பினார்கள். வினோத்துக்கு பத்து மீன்களுக்கு மேல் கிடைத்தது. அனால் "வீட்டில் கொடுத்தால் என்ன சொல்வாள் அம்மா" என பயந்து கொண்டே வாங்கிக் கொண்டு வந்தான். வீட்டிற்கு வந்த போது ஓரளவு இருட்டி விட்டது.

நாகமணியின் குரலும் டிவி சத்தமும் கலந்து கேட்டதால் எவ்வளவு நேரம் வாசலுக்கு வெளியே நின்று ஒட்டுக் கேட்டாலும் அவள் பேசுவதை அறிய முடியாமல், வேறு வழி இன்றி வீட்டுக்குள் நுழைந்தான்
"எங்கடா போன காலைல இருந்து, எங்கல்லாம் தேடுறது?, கையில என்ன பை?"
"மீனு மா"
"எடுங்க, லீவுல படிக்காம மீனு புடிக்க போயிருக்க" என்று கத்திக் கொண்டே அடுப்பங்கரைக்கு ஓடினாள் அடிக்க குச்சி எடுக்க, அவன் கையில் இருந்த மீனைக் கீழே போட்டுவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தான். இரவு ஒன்பது மணி வரை பஞ்சாயத்து டிவியைப் பார்த்துக் கொண்டே வீட்டுப் பக்கம் வரவில்லை, கிழவி வந்து "அம்மா அடிக்காது, சோறு திங்கவா" என்று கையோடு இழுத்துச் சென்றாள். தட்டில் சாதம் போட்டு மீனும் வறுத்து வைக்கப் பட்டிருந்தது.

அவன் சாப்பிடும் போது நாகமனியும் ஆரம்பித்தாள், "உங்க தாத்தனும் இப்படித்தான், டயரைக் கொழுத்திகிட்டு, விடிய விடிய மீனுக்கு போறேன்னு போயிட்டு, ஒரு சட்டி மீனோட வருவாரு, உங்க அம்மாயி தொறத்தி விடாத குறையா விரட்டுவாங்க" எந்தக் கதையையும் காதில் வாங்காமல், மீனை ரசித்து தின்று கொண்டிருந்தான்.
"ஒரு கிலோ மீனு எவ்வளோடா?"
அவனுக்கே தெரியவில்லை. "இப்படி நாலு மீனுக்காக ஒரு நாளை படிக்காம வீனாக்குனா, நஷ்டம் உனக்குத்தான், ஒழுங்கா படிச்சா ஒரு நாளைக்கு பத்து கிலோ மீனு வாங்குற அளவு சம்பாதிக்கலாம்", ஆனால் மீன் பிடிப்பதில் உள்ள சந்தோஷம் என்பது மீன் வாங்குவதில் இல்லை என்பதில் அவன் தெளிவாக இருந்தான். தூங்கப் போகும் வரை இப்படி ஏதாவது ஒரு அறிவுரை வந்து விழுந்துகொண்டே இருந்தது. அப்பா வந்தால் கண்டிப்பாக அடி நிச்சயம், அதற்குள்ளே தூங்கிவிட வேண்டும் என்று தூங்குவதைப் போல் நடிக்க ஆரம்பித்தான்.

குட்டைகளில் புரண்டு மீன் பிடிக்கும் போது டிராயரில் ஒட்டிக் கொள்ளும் ஒரு வாசனையே அவனை எப்போதும் மீன்களைப் பற்றி நினைக்க வைத்தது. நாகமணிக்கு அது "மீன் கவிச்ச". மீன் குழம்பு வைக்கும் போது தண்ணீர் குடிக்கும் டம்ப்ளர்களில் ஒட்டிக் கொள்ளும்  வாடையை அவனும் கவிச்சை என்று தான் சொல்லுவான். ஆனால் அது மீன் பிடிக்கும் போது தன் மேல் வரும் போது மட்டும் ரசிக்கும் மணமாகவே தோன்றியது. கண்ணை மூடிக் கொண்டு அன்று பிடித்த மீன்களை மீண்டும் ஒரு முறை நினைவுகளில் பிடித்துப் பார்த்தான். இப்போது அவனிடம் மட்டுமே கம்பி இருந்தது, எல்லோரும் இவன் பிடித்த மீன்களை வாங்க பைகளுடன் நின்றுகொண்டிருந்தார்கள். காவிரியில் இருந்த மொத்த மீன்களையும் அவனுடைய கம்பியால் அடித்துப் பிடிக்கும் முன், பகல் முழுக்க அலைந்த அசதியில் தூக்கம் அவனைப் பிடித்துக் கொண்டது.

ஆனால் மறுநாள் முதல் காவிரிக்கு கிளம்பும் போது 'போனோம் வந்தோம்ன்னு இருக்கணும், மீனு கீனு புடிக்குறன்னு யாராச்சும் சொன்னாங்க, செத்த" என்று நாகமணி மறக்காமல் சொல்லிவிடுவாள். ஆனால், குழி குழியாக எங்கே மீன் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே ஏழே முக்கால் கோவில் மணி அடிக்கும் வரை தேடிவிட்டு பிறகு அவசரமாக குளித்து விட்டு ஓடி வருவான். கோடை நெருங்க நெருங்க முன் ஓடையில் இருந்த திட்டுகள் எல்லாம் வற்றிக் கொண்டே வந்தன. மீன் இருக்கும் குட்டைகளைப் பார்க்கவே குளிக்கும் ஓடையைத் தாண்டி கொஞ்சம் நடக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்தக் கோவில் மணி மட்டும் அவன் மீன்களைத் தேடுவதற்கு முன்னரே அடித்து விடுகிறது.

பனிரெண்டாம் வகுப்புக்கு பரீட்சையை முன்னிட்டு மதியம் மட்டுமே பள்ளி என அட்டவணை கொடுத்ததும், ஒரு நாள் கண்டிப்பாக காலையில் மீன் பிடிக்க போகவேண்டும் என முடிவு செய்துவிட்டான். அடுத்த வாரம் நாகமணி "எழவுக்கு போயிட்டு சாயந்தரம்தான் வருவேன், சோற தின்னுட்டு ஸ்கூல்க்கு கெளம்பிப் போ" என்று சொன்னதும், உடனே மூர்த்தி வீட்டுக்குச் சென்று 'மீனுக்கு போலாம்டா, எங்க அம்மா போனதும் வரேன்" என்று சொல்லிவைத்தான். அவள் சேலை கட்டும் வரை, கிழவிக்குத் தெரியாமல் பிடிக்கப் போகும் மீன்களை எப்படி வறுப்பது என்பதையே யோசித்துக் கொண்டிருந்தான். "அம்மா எழவுக்குப் போக வேன் வந்துருச்சாம்" என்று சொல்லி அவள் நகர்ந்த உடனே மூர்த்தி வீட்டுக்கு ஓடினான்.

இரண்டு பேர் மட்டும், ஒரு கம்பியுடன் திட்டு திட்டாக போய்க் கொண்டிருந்தார்கள், சில ஸ்கேல் கெண்டைகளைத் தவிர ஒன்றும் பெரிதாக மாட்டவில்லை. ஒரு குழியில் ஒரு உளுவையை மெதுவாக மண்ணில் புதைய விட்டு மூர்த்தி பிடித்தான். "இந்த குழியில கண்டிப்பா நெறைய இருக்கும்டா" என அங்கேயே ஒரு ஊற்று பறித்து உளுவையை விட்டுவிட்டு, அதை கொக்கு தூக்காமல் இருக்க கொஞ்சம் இலைகளைப் போட்டு மூடிவிட்டு, ஆழத்தில் இறங்கினான். கொஞ்ச நேரத்தில் "டேய் ஒரு பெரிய விராலு, கால்ல அடிச்சுட்டு போய்டுச்சு, கொஞ்சம் கலக்காம இருந்தா புடிச்சுடலாம்" என்று சொல்லிக் கொண்டே, செடி வேர்களில் கையை நகர்த்திக் கொண்டிருந்தான். வினோத் ஒரு பக்கம் சின்ன கெண்டைகளை கம்பியால் விரட்டிக் கொண்டிருந்தான். ஆறு வழக்கம் போல நேரத்தை அடித்துச் சென்று கொண்டிருந்தது. எலிமெண்டரி ஸ்கூலின் ஒரு மணி பெல் சத்தம் காதில் விழுந்ததும்
"ஒன்றை மணிக்கு நமக்கு ஸ்கூல்டா, நம்ம ஸ்கூல் பெல்லுலாம் இங்க கேக்காதுல்ல? எலிமெண்டரி ஸ்கூல் பெல்லு அடிக்குது பாரு , இப்பவே கெளம்புனாதான்டா, போகலன்னா எங்க அம்மா கொன்னேபுடும்" என்று மணலில் போட்டிருந்த டிராயர் சட்டையை எடுத்துப் போட ஆரம்பித்தான் வினோத்.
"நீ போடா நான் வரல, இந்த விரால புடிச்சுட்டு தான் வருவேன்" என்று சொல்லிக் கொண்டே மூர்த்தி கால்களால் விராலைத் தேடிக் கொண்டிருந்தான்.

முட்டாசுகளை  மட்டும்தான் வினோத் அதுவரை பிடித்திருந்தான். விரால்கள் காவிரியின் ராஜா. சாரையைப் போன்ற அடி உடல் வண்ணங்களுடன் வீட்டில் வாங்கப்படும் விரால்கள் குண்டான்களில் நீந்தும் போது மட்டுமே பார்த்திருக்கிறான். சஷ்டி அன்று வாங்கப்பட்ட விராலை தண்ணீர் ஊற்றி மறு நாளுக்காக வைத்திருந்த போது, இரவில் மூடி இருந்த பித்தளைத் தாம்பூலத்தை பறக்க விட்டு, துள்ளி தரையில் விழுந்து சுவாசித்துக் கொண்டிருந்த விராலை பயத்துடன் பார்த்திருக்கிறான். அது ராஜா தான். விராலைப் பிடிப்பதைப் பற்றிய அவனுடைய ஆர்வம் லீவ் போட்டுவிடலாம் என யோசிக்க வைத்தது. நாகமணி கையெழுத்தை அவனே போட்டுவிடுவான், ஆனால் பை, யுனிபார்ம் எல்லாம் வீட்டில் இருக்குப்பதால் கிழவி நிச்சயம் ஸ்கூல் போகவில்லை என்பதை சொல்லிவிடுவாள், இதை எல்லாம் யோசித்துக்கொண்டே, மதியம் மட்டும் தான் ஸ்கூல் என்பதால், லேட்டாக வந்தால் வெளியே நிற்கவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பொறுமையாகவே நடந்தான்.

கொஞ்ச நேரத்தில் அவனுக்கு எந்தப் பக்கம் போவதென்று தெரியவில்லை. அகண்ட காவிரியில் முக்கால்வாசி தாண்டி இருந்தான்.   எல்லாமே திட்டுகளாகவும் மணலாகவுமே தெரிந்தது. ஒரு வேளை, பேய் மீன் தான் தங்களை இழுத்து வந்துவிட்டதோ என்று ஒரு கணம் தோன்ற "அப்போ மூர்த்தி பேய் மீனைத்தான் தேடிக்கிட்டு இருப்பானோ?" என்று பயம் சூழ்ந்தது. வந்தவழியே ஓடி அந்தத் திட்டை அடைந்தான், மூர்த்தி இவன் வருவதைப் பார்த்து "ஏண்டா போகலையா?" என்றான் "ஆத்துல ஒரு மணிக்கு நெறைய பேய் இருக்கும்ன்னு கேள்விப் பட்டிருக்கேன், முழுகி செத்தவங்க எல்லாம் அலைவாங்கன்னு சொல்லி இருக்காங்க, அதான் சேந்து போலாம்னு வந்துட்டேன், ஆமா உனக்கு பயமா இல்லையா?"
"நான் அரணா கயித்துல ஈயம் கட்டி இருக்கேன்டா, ஊக்கு வேற இருக்கு"
"நான் வெள்ளியிலேயே போட்டிருக்கேன்டா"
""பேய் இரும்புக்கும் ஈயத்துக்கும் தான்டா பயப்புடும், நீ உட்காரு போலாம்" என்று சொல்லிவிட்டு மூர்த்தி மீண்டும் தேட ஆரம்பித்தான்.

மூர்த்தியைப் பார்த்ததும் ஓரளவு பயம் தெளிந்திருந்தாலும் லீவ் போடுவதை நினைத்து இன்னும் உள்ளுக்குள் படபடப்பாகவே இருந்தது.  "வெரா புடிச்சுட்டு போனா கூட எங்க அம்மா வுடாதுடா, நீ ஒரு ஊக்கு மட்டும் குடு, நான் போறேண்டா" என்று மீண்டும் கிளம்பத் தொடங்கிய போதுதிடீரென ஏதோ தட்டுப்பட்டு மூர்த்தி தண்ணீரில் கால்களை அலச
"என்னடா மாட்டிருச்சா?" எனக் கரையிலிருந்து கேட்டான் வினோத்.
"கால்ல மிதிச்சுட்டேன், ஆனா எஸ்ஸாகிடுச்சுடா, நீ அந்தப் பக்கம் இருந்து வா" என்று மூர்த்தி சொன்னதும், வேகமாக டிராயரைக் கழட்டிவிட்டு சுற்றி வந்து இறங்கினான், தூரத்தில் எலிமெண்டரி ஸ்கூலின்  ஒன்னே முக்கால்  மணி அடித்தது.