ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday, 29 December 2013

போட்டிச் சிறுகதை-50

சிறுகதை- வீடு திரும்புதல்


வர வர காலையில் எழுந்ததும் இவள் முகத்தைப் பார்க்கவே பிடிக்க மாட்டேனென்கிறது. எப்போது பார்த்தாலும் தனக்குத் தானே செய்ய வேண்டிய வேலைகளை உரக்கச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பது, பிள்ளைகளை காலையில் விரட்டுகிறேன் பேர்வழி என்று பக்கத்து வீட்டுக்கு கேட்கிறாற் போல் கத்துவது, எப்போது பார்த்தாலும் அழுக்குப் புடவையும் வியர்வைக் கசகசப்புமாக வளைய வருவது என்று எதுவுமே பிடிக்கவில்லை.

தூங்கும் போது இன்னும் கொடூரம். மிக்ஸியில் கொப்பரைத் தேங்காயைப் போட்டு அரைப்பதைப் போல் அவள் விடும் குறட்டை பல நாட்கள் என் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. குறட்டை விடுவதற்கெல்லாம் வெளி நாட்டில் டைவர்ஸ் பண்ணுகிறார்களாமே? கொடுத்து வைத்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேல் காலையில் காபியைக் கொண்டு வந்து கையில் கொடுக்கும் போது, வியர்வை, வெங்காயம், புளிக் கரைசல், அடுக்களை எனக் கலந்து கட்டி அவள் மேலிருந்து வரும் வாசனை...அப்பப்பா..

ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? என்ன பெரிதாக கேட்கிறேன்? கொஞ்சம் திருத்தமாகப் புடவை கட்டிக் கொள். அவ்வப்போது முகம் அலம்பிக் கொள். பேச்சின் வால்யூமைக் குறை..இவ்வளவு தானே? இதையெல்லாம் கூட ஒருத்தர் சொல்லித் தர வேண்டுமா என்ன? அதையும் மீறி எவ்வளவோ முறை நிதானமாக சொல்லிப் பார்த்தாயிற்று. சொல்லும் போதெல்லாம் மண்டையை ஆட்டுவதோடு சரி. செயலில் ஒன்றையும் காணோம்.

வெளியில் சேர்ந்து போனால் சிங்கத்தின் வாயில் அகப் பட்ட எலியைப் போல் என்னை போவோர் வருவோரெல்லாம் பரிதாபமாகப் பார்க்கிறான்கள்.எல்லா இடத்திலும் அவள் குரல் மேல்ஸ்தாயியில் தான் ஒலிக்கும். கீழே இறங்கினதாக சரித்திரம் இல்லை. நாகரிகமான ரெஸ்டாரென்டுகளுக்கு போவது கூட இதனால் நின்று விட்டது. எப்போது பார்த்தாலும் இட்லியும் தோசையும் தான். மிஞ்சிப் போனால் ஒரு உப்புமா.அதுவும் வியர்வை வாசனையுடன்.

முப்பத்தி மூன்று வயது வரை கல்யாணம் ஆகாமல் , நானும் வருத்தப் பட்டு, அப்பா அம்மாவையும் வருத்தப் பட வைத்துக் கொண்டிருந்த சமயம், குணசீலன் இந்த வரனைக் கொண்டு வந்தார். பெண்ணுக்கு ஏதோ ஜாதகக் கோளாறினால் முப்பது வயது ஆகியும் கல்யாணம் ஆகவில்லை என்றும் ஆனால் என் ஜாதகத்தோடு அருமையாகப் பொருந்திப் போகிறதென்றும் சொல்லி, அப்பா அம்மாவை மயக்கி, என் எதிர்பார்ப்பையும் கிளறி விட்டு, பெண்ணின் போட்டோவைக் காட்டாமலேயே பெண் பார்க்க அழைத்துப் போய் விட்டார்.

 போன பிறகு தான் விஷயம் தெரிந்தது. பெண் என்னை விட உயரம் அதிகம். உயரத்தை விட பருமன் அதிகம்.உட்காரப் பொறுக்கவில்லை.எப்படா கிளம்புவோம் என்றிருந்தது. அதிலும் இடியைப் போடுவது போல் பெண்ணின் அப்பா வந்து பெண்ணுக்கு என்னை ரொம்பப் பிடித்திருப்பதாகக் கூறினார். எப்படா வாய்ப்பு வரும் என்று காத்திருந்த அப்பாவும் அம்மாவும் உடனே சரி சரி என்று தலையாட்டி என் தலையில் மண்ணள்ளிப் போட்டனர்.   

அப்பா அம்மாவின் கெஞ்சலான பார்வையும்  என்னுடைய அதீதமாக்க் காய்ந்து போயிருந்த தன்மையும் அதற்கு மேல் என்னை எதுவும் பேச விடவில்லை. அப்படித் தான் இவள் என் மனைவி ஆனாள்.

என்னிடம் மிச்சமிருக்கும் பலப் பல பெருமூச்சுகளில் ஒன்றை வெளியேற்றி, பழைய நினைவுகளிலிருந்து மீண்டேன். அலுவலகம் கிளம்ப வேண்டும். நேரம் ஆகிறது. இந்தக் கை வலி வேறு பாடாய்ப் படுத்துகிறது.ஆபீஸிலிருந்து வரும் போது டாக்டரைப் பார்த்து விட்டு வர வேண்டும். வீட்டுக்கு லேட்டாக வர இன்னொரு காரணம்.

கிளம்பி தயாராகி வாசலுக்கு வர வர கை வலி அதிகமாகி முழங்கைக்குப் பரவி...கண்கள் இருட்ட,..

லேசான ஏ சி யின் உறுமல் காதுகளில் தீனமாகக் கேட்டது. கண்களைத் திறக்க முடியவில்லை. நினைவு சுழன்று சுழன்றூ வந்தது. சில நிமிடங்கள் கழிந்த்தும் நினைவு ஒரு நிலைக்கு வந்தது. கண்களை லேசாகத் திறக்க முடிந்தது. கட்டிலின் அருகில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்த உருவத்தை சரியாக நினைவுபடுத்.... ஞாபகம் வந்து விட்டது. பக்கத்து வீட்டு பாஸ்கர்.சென்னைத் தமிழ் பேசும், தோட்ட வளர்ப்பில் ஆர்வம் கொண்ட சரித்திரப் பேராசிரியர்.

இவரிடம் நான் அவ்வளவாகப் பேசியதில்லை. போகும் போது வரும் போது பார்த்து ரேஷன் புன்னகை செய்வதோடு சரி. அவள் தான் எப்போது பார்த்தாலும் காம்பவுண்டு சுவருக்கு அந்தண்டை இருக்கும் இவரோடு வெண்டை தக்காளி, கீழாநெல்லி , கீரை என்று என்னத்தையாவது பேசிக் கொண்டிருப்பாள். எனக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம்.

கண் விழிப்பதை அவரும் பார்த்து விட்டார். மெலிதாகப் புன்னகைத்தார்.” ஹௌ டூ யூ பீல் நௌ?” என்றார். புன்னகைத்தேன். பயப்பட ஒண்ணியும் இல்லை சார். மைல்ட் அட்டாக் தான்.  கரெக்ட் டைமுக்கு இட்டுக்கினு வந்த்தால ஒண்ணும் பிரச்சினையில்லை.

ஆனா உங்க ஒய்ப் சொம்மா சொல்லக் கூடாது சார். நீங்க கீழ உயுந்தவொடனே என்னைத் தான் கூப்டாங்க. நான் வந்து பாத்து ஆட்டோ இட்டுகினு வந்ததும் கொஞ்சம் கூட யோசிக்காம உங்கள அப்டியே அலாக்கா கொயந்தைய தூக்கறாப்ல தூக்கிகினு வந்து ஆட்டோல ஏத்தினாங்க பாருங்க. ச்சே..வாட் அ வுமன்!!!. ஆஸ்பத்திரிக்கு வந்து ரெண்டு நாள் சொட்டு ரெஸ்ட் இல்லாம உங்களா பாத்துகினாங்க.

இதுக்கு ஊடால, உங்க பையன் வேற ஸ்கூல்ல வெளாடும் போது கீய வுயுந்து அடி பட்டுகினு அது வேற ஒரே ரகளையா போச்சி. அவனையும் இங்கேயே இட்டுகினு வந்து கட்டு போட்டு இப்ப பரவால்ல. வெளில தான் டி வி பாத்துகினு இருக்கான். உங்க ஒய்ப் என்னாண்ட கூட ஒரு ஹெல்ப்புனு கேக்கல. எல்லாத்தையும் அவங்களே பாத்துக்கினாங்க. சும்மா பம்பரமா சுத்தினாங்க சார் இந்த ரெண்டு நாளும்.இன்னிக்கு ஈவினிங் மேல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிகீறாங்க.

இன்னிக்கு தான் காலையில மொத தபா ஹெல்ப் கேட்டாங்க. இன்னிக்கு உங்க டாட்டர ஹாஸ்டல்ல இருந்து இட்டுகினு வர நாளாமே? அதான் “ நான் போய்ட்டு வந்துர்றேன். அது வரைக்கும் நீங்க பாத்துக்கங்க” அப்டினு சொல்லிட்டு போனாங்க” என்று பேசி நிறுத்தியவர், என் முகத்தில் ஓடும் ரியாக்ஷன்களை கணிக்க முடியாமல், அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தவாறு, “ ரொம்ப போரடிச்சிட்டேன் போல. ஜூஸு கீஸு எதுனா குடிக்கிறீங்களா?”  என்றார் நிஜமாகவே அன்பாக.

வேண்டாம் என்று புன்னகைத்துத் தலையசைத்தேன். திடீரென்று எனக்கு ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.நான் தானா இது? வெராந்தாவில் இருந்து பேச்சரவம் கேட்டது. அவள் குரல் தான். வந்து விட்டாள் போல. “ நீ என்னத்தையோ படிச்சேன் படிச்சேங்கற. அப்புறம் ஏண்டி உங்க மிஸ்ஸு க்ளாஸ்ல நீ ஒழுங்கா கவனிக்கறதே இல்லைன்னு கம்ப்ளெயின்ட் பண்றாங்க?” என்று பெண்ணை திட்டிக் கொண்டே வந்தாள்.

உள்ளே நுழைந்ததும் நான் கண்விழித்திருப்பதைப் பார்த்து லேசாக மிக லேசாக கண்களில் மலர்ச்சி காண்பித்தவள் , “ ஓ!! முழிச்சிட்டீங்களா... இருங்க . ஜூஸ் போடறேன்” என்று வேலையில் பிஸியானாள்.

எப்படி இருக்கீங்கப்பா? என்று கேட்ட பெண்ணைப் பார்த்து ஆமோதிப்பாகத் தலையசைத்தேன். அருகில் அவளின் வழக்கமான வியர்வையும் புளிக் கரைசலும் கலந்த வாசனை. அதே எண்ணெய் வழியும் முகம்.மும்மரமாக ஜூஸ் தயாரித்துக் கொண்டிருந்தாள். நெற்றியில் இருந்து வியர்வை சொட்டுவதைக் கூட துடைக்கத் தோன்றாமல்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஜூஸை டம்ளரில் நிரப்பி நீட்டினாள் இடது புறங்கையால் நெற்றி வியர்வையைத் துடைத்தவாறே.

அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பரிவாகப் புன்னகைத்தேன் எத்தனையோ வருடங்கள் கழித்து. எத்தனை?....


தெரியவில்லை.