ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday 1 December 2013

போட்டிச் சிறுகதை-7

சிறுகதை-ஒருகதைஉருவாகிறது

முழுக்க முழுக்க அவளை மட்டுமே மையமாக்கி ஒரு கதையினை எழுத இருக்கிறேன். ஆனால் இந்த அவள் நான் குறிப்பிடும் அவள்தான் என யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.அப்படி சொன்னீர்களெனில் காதிற்கு காது மாறி அவளின் காதுகளுக்கு சென்று பின் என்னதான் ஆகும் என்பதனை தாங்கள் இந்நேரம் அறிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள். 

தங்களின் ஆசை நியாயமானதுதான். அந்த நியாயத்திற்கு ஏற்றவாறு நானும் சொல்ல வேண்டுமெல்லவா. நான் மூன்றாவது மனிதனாகி அவர்களுடைய கதையினை ஆரம்பத்திலிருந்து சொல்லிவந்தால் பழைய காலகதைக்கும் இக்கதைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். 

அதனால் நான் ‘எனக்கும் அவளுக்குமான அந்தரங்கம்’  என எழுதியிருந்த சிறுகதையிலிருந்து ஒரு வசன பரிமாற்றத்தினை அளிக்கிறேன். அது எனக்கும் என் எண்பத்தி மூன்றாவது காதலிக்கும் இடையே நடந்த குறுஊடல்.

83 – எங்கிட்ட பேசாத. நீ ஒருநாள் பெரிய ஆள் ஆகப் போறன்னு நானும் நினைச்சிருக்கேன். ஆனா அந்தநாள் வந்தும் அங்க நான் வரணும் உங்கூட நிக்கணும்னு உனக்கு ஆசை இல்லல்ல. என்ன டேஷுக்கு லவ் பண்ற ?. 

எனக்கு சத்தியமா தெரியல. . .

ஐயோ நான் யாரென சொல்ல மறந்து விட்டேனே. என்பெயர் அக்கதைப்படி “!”தான்.  இந்தகதைக்காக என் பெயரினை  “?” என நானே சூட்டிக் கொள்கிறேன். மேலும் ஒரு குறிப்பு. இந்த உரையாடலில் அதிகம் டேஷு என்னும் வார்த்தை வருவதை காண்பீர்கள். அது பெண்கள்அகராதியில் கெட்ட வார்த்தையாம். கல்லூரியினை கடக்கும்வரை அந்த வார்த்தைதான் உபயோகிக்கப் படவேண்டும் என பெண் இன தலைவி சொல்லியிருக்கிறார் போல. ஆண் வர்க்கத்திற்கு சொல்லகூடாது என்னும் விதிக்குள் அது இருப்பதால் எனக்கும் தெரியவில்லை!

83 –பதில் சொல்லு. தேவையில்லாம இருக்குற நேரத்துல எல்லாம் எரிஞ்சு எரிஞ்சு விழத் தெரியுதுல்ல. இப்ப வாய தொறந்து பேசு. ஏன் என்ன வர சொல்லல ??

? –  அப்படியில்ல 83.எனக்கு நீ எப்பவும் வேணும். நீ இல்லாம என் எழுத்து எப்பவுமே முழுமையடயாது. அத புரிஞ்சுக்க. நீயா நான் வர்றேன் நான் இல்லாம நீ ப்ரைஸ் வாங்கிருவியா, வாங்கதான் விட்ருவேனா அப்டீன்னு கேக்கணும், என் மேல இருக்குற உரிமைல நீயா சொல்லணும். அததான் நான் எதிர்பார்த்தேன். இதுதப்பா 83. . .83 – காரணம் சொல்லாத. அந்த புளிச்ச காராணத்த நான் கேக்கவே விரும்பல. என்னிக்காவது என்னை சமாதான படுத்திருக்கியா ?? எப்ப பாத்தாலும் காரணத்த மட்டுமே சொல்றியே அதனால நான் இருக்குற டென்ஷன் குறையவா போது. சொல்டா….

? – எனக்கு சமாதானம் செய்ய தெரியல. .

83 – நிறுத்துடா. என்ன டேஷுதான் ஒனக்கு தெரியும் ? இல்ல கேக்கறேன் ? ஏதாவது செஞ்சி என்ன ஹர்ட் பண்ண தெரியும் ஆனா சமாதானம் செய்ய தெரியாது… மத்த லவர்ஸ பார்த்திருக்கியா அவனவன் கால்ல விழுந்து லவ்வர தூக்கி வச்சிருக்கான். நீ. . . . என்னிக்காவது இப்படி யோசிச்சிக்கவாவது செஞ்சிருக்கியா. . .

? – நான் யோசிச்சிருக்கேன். . . ஆனா யோசிச்சு சொன்னா என்ன ஃபீல் இருக்க போவுது சொல்லு ? தானா வரணும்மில்ல

83 – அப்ப ஒனக்கு என்ன நினைச்சு எதுவுமே வரல. . .

இதனை கேட்கும் போதுதான் நேற்று தின்ற மாம்பழத்தினால் கடந்து பத்து மணி நேரமாக சென்று கொண்டிருந்த பேதியின் பதிமூன்றாவது நிலையினை ஆசுவாசமாக கழிந்து கொண்டிருந்தேன். எவ்வளவு சுகமான அனுபவம். இந்த அனுபவத்தின் போதுதான் வாழ்க்கையே எனக்கு வித்தியாசமாகத் தெரிகிறது.
இவ்வளவு ஏன் இந்த கக்கூஸ் ஆனுபவங்களை எல்லாம் அவளிடம் சொல்ல நான் அதிகம் ஆசைப்படுவேன். அவள் ஒத்துக் கொள்வாளா ? நிச்சயம்மாட்டாள் அவளுக்கு தேவையெல்லாம் காதல். எனக்கு இப்போது கக்கூஸ் சுகங்கள். ஒருவேளை அப்படியே சொன்னால் கூட என்னை விட அந்த கக்ககூஸ் அதிக சுமகளிக்கிறதா என கேள்விகள் எழலாம். என்ன ஒரு விந்தையான உலகம் இந்த பெண்களுடையது ? இப்போது என் விசனமெல்லாம் நான் யாரிடம் போய் இந்த சுகத்தினை பரிமாறிக்கொள்வது ? நண்பர்களிடம் சொன்னால் அவர்களால் என் சுகத்தினை நான் உபயோகபடுத்தும் வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடியாது. நான் சொல்வதை அப்படியே சிரிப்பாக்கி ஊர் முழுக்க தண்டோரா அடித்துவிடுவார்கள். அடுத்து அந்த சந்தோஷம் கூட எங்கு கேமிரா வைத்து என் சுகங்களை போட்டோ எடுக்கிறார்களோ என பயத்திலேயே இருக்கும். சிலரிடம் மட்டும்தான் சொல்ல முடியும்.இதனை இங்கு பதிவிட்டதற்கு காரணம் அவளுக்கும் எனக்குமான அந்தரங்கம் என நான் எழுதியிருந்த சிறுகதை முழுக்க முழுக்க தோல்வியினை தழுவும் ஒருசிறுகதை. எப்படி என்பதற்கு “அவனுக்கும் அவளுக்குமான அந்தரங்கம்” என்னும் சிறுகதையிலிருந்து ஒரு உரையாடல்

அவன் – சொல்லுமா இன்னிக்கு எப்படி இருந்திச்சு ?

அவள் – செம போர்டா. எப்பதான் நீ மெஸேஜ் அனுப்புவன்னு வெயிட் பண்ண வேண்டியதா இருந்திச்சு.

அவன் – அதான் வந்துட்டல்லடா செல்லம். இன்னிக்கு என்ன கலர் டிரஸ் ?

அவள் –ப்ளூகலர்ல அன்னிக்கி நாம ரெண்டு பேரும் ஒரு டிரஸ் எடுக்கப் போகும் போது ஒண்ணு போடுகிட்டு வந்தேனே அதான். ஞாபகம் இருக்கா ?

அவன் – அதா. . .வாவ் செம அழகா இருந்திருப்பியே ?ஊர் கண்ணே உம்மேலதான் இருந்திருக்கும் போல இருக்கு

அவள் – போடா லூசு.

அவன் – அப்பறம்

அவள் – எதாவது சொல்லேன்

அவன் – என்ன சொல்றது.

அவள் – எதாவது. . .

அவன் - எப்படீ என்ன கல்யாணம் பண்ணிக்குவ ?

அவள் – அவசரத்த பாரு. ஆமா எனக்கு நான்ஆசைபடுற கோர்ஸ் கிடைக்குமா? அது கிடைச்சாதான் நான் அமேரிக்கா போக முடியும்

அவன் – நீ போயிட்டா என்னைய யாரு பாத்துக்குவா ?


அவள் – நான் இருக்கேண்டா செல்லம். அமேரிக்க போயிட்டு சீக்கிரம் உங்கிட்டதான் வருவேன். அப்பறம் சந்தோஷமா ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம். ஆமா வீட்ல ஒத்துக்குவாங்களா ?


அப்பப்பா இந்த வசனம்தான் எத்தனை வதனத்தினை தன்னுள் கொண்டிருக்கிறது. இருந்தாலும் விஷயம் இரண்டாவது நாள் இவர்கள் பேசியதை நான் எழுதினால்தான் தெரியும். அது அப்படியே இதனை நகல் எடுத்தது போல் இருந்தது. 

தவறு என் மீதுதான் இருக்கிறது. கேட்கும் போதே சலிப்பினை அடைகிறேன். அதுவும் இரண்டு வாரம்தான். இவர்களோ மூன்று வருடம் இதனையே திருப்பி திருப்பி பேசியிருக்கிறார்கள். அவர்களின் முகபாவனைகளை பார்த்தால்தான் எவளை நினைத்து அவன் உரலை இடித்திருக்கிறான் என்று என்னால் யூகிக்கவாவது முடியும்.

இப்போது சிறுகதை தோல்விக்கு வருகிறேன். இது அந்தரங்கமா ? நிச்சயம் இல்லை. இந்த வசனங்களை வீட்டு வேலைக்காரனுடன் கூட பேசலாமே. இதற்கு ஏன் காதலன் என்னும் பதவி ? உச்சகட்ட கொடூரம் யாதெனில் நேரில் பார்க்கும் போது இந்த இரு பக்க வசனங்கள் ஒரு பக்க வசனங்களாகி அருகருகே அமர்ந்து அவள்மட்டும் அழகுற சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருப்பாள். 

இவனுடைய ஒரே வேலை அவளை கவனிப்பது. அப்படி தப்பினால் – தவணை முறையில் மரணமும் நிகழலாம். இப்படி நடந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எனக்கு நடந்ததை பாருங்கள். என் பதினேழாவது காதலி என்னிடம் ஒரு கோரிக்கையினை முன் வைத்தாள். எனக்கு ஒரு அந்தரங்கமான கடிதம் எழுத முடியுமா ? அதில் நான் மட்டுமே இருக்க வேண்டும் என்றாள். அடுத்த வார்த்தையினை அவள் உதிர்ப்பதற்குள் என் பேனா எழுத ஆரம்பித்திருந்தது
“கோடைகாலத்தின் போது வரும் வியர்வை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அன்பே. அதே பனிபொழியும் காலத்தில் எனக்கும் உனக்கும் போர்வைக்குள் இருக்கும் இடைவெளியின் வெப்பத்தில் மூக்கின் நுனியில் குமிழும் வியர்வை அப்படியே இதழினை கடந்து உன் தாடையில் சென்றாலும் என் இதழ்கள் உன் வியர்வையின் தடங்களை மிருதுவாக தடவிக் கொண்டே அதன் சுவை என்ன என தெரியாமல், அருந்தினால் வியர்வை சென்று விடுமே என்னும் ஏக்கத்திலும் தன் தேடலினை கொண்டிருக்கும் போது (வழியில் இருக்கும் இடங்கள் சென்சார்களுக்கு உட்பட்டது) தொப்புளில் கரையும் முன் அதன் சுவையினை நான் அறியும் நேரத்தில் உன் முகத்தினை பார்க்க ஆசைப்படுகிறேன். எத்தனை முரணாக இருக்கிறது இந்த காதலின் விளையாடு என கூற நீயோ இது வியர்வையின் விளையாட்டு என அடுத்த வியர்வை பெருக்கத்தின் நெருக்கத்தினை ஆரம்பித்தாய்” இப்படி எழுதினாலு ம் கண்ணாடியில் என்னை பார்க்கும் போது என் பிம்பம் வியர்வைக்கு பதில் சொந்த உமிழ்நீரால் நிறைகிறது. என் பலம் தேற்றங்கள். அதே என் பலவீனம் செய்முறைகள்!!! இந்த பலவீனத்தினால் என் எண்பத்தி இரண்டு காதலிகள் என் தங்கையாகி விட்டார்கள். காரணம் என் அப்பா அல்ல அடியேன்தான். இந்த எண்பத்தி மூன்றாவது காதலியும் இப்போது என் தங்கையாகும் தருணத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். இனி வரப்போகும் சில வரிகளை கொஞ்சம் சீரியஸாக வாசிக்க வேண்டும் என வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்ன தோன்றியதோ தெரியவில்லை என் முக்கியமான சிறுகதை ஒன்றினை யாருமே அறியாத பத்திரிக்கைக்கு அனுப்ப தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு காகிதம் கிட்டியது. அது என் முதல் காதலியினை பார்த்தபோது எழுதிய கவிதை. அவள்தான் என் முதல் தங்கையும் கூட. அந்த கவிதையினை என்ன ஏதென்று பாராமல் அவளின் பெயருடன் எனக்கான இணையத்தில் பதிவேற்றம் செய்துவிட்டேன். இதுவரை என் எழுத்தினையே வாசித்திராத என் எண்பத்தி மூன்றாவது காதலி இன்று வாசித்துவிட்டாள். விளைவு அகோரமாய் கிளம்பியது

83 – பேசாத எங்கிட்ட. நீயெல்லாம் ஒரு லவ்வரா ? என்னய என்ன டேஷுக்கு லவ் பண்ற ? சீரியஸா கேக்குறேன் ? என்னய லவ் பண்ணுவ ஆனா அடுத்தவன் பொண்டாட்டிய வர்ணிப்ப ? என்ன கருமாந்திரத்த எழுதிறியோ தெரியல


? – என் எழுத்த எதுவும் சொல்லாத. ஒனக்குதான் எழுத்தே புடிக்காதுல்ல அப்பறம் ஏன் வாசிக்குற ?83 – ஏன் கேக்கமாட்ட ? நான் வாசிக்கறதில்லங்கற காரணத்தினால கூட நீ இப்புடியெல்லாம் எழுதிருப்ப யார் கண்டா ? இதெல்லாம்தான் நீ எழுதுற லட்சணமா ? குத்துகல்லாட்டம் நான் இருக்கேன் ஆனா வேற ஒரு பொண்ணு கேக்குது ஒனக்கு என்ன திமிரு இருக்கும்


? – நான் வேற என் எழுத்து வேற. அது மட்டுமில்லாம நான் எழுதுன அந்த கவிதையும் உண்மை.அது எழுதுனப்ப நீ என் வாழ்க்கைல இல்ல. ஒரு வேளை இருந்திருந்தா உன்ன பத்திதான் எழுதிருப்பேன்


83 – அப்ப என்ன பத்தி எழுத ஒனக்கு ஒண்ணுமே இல்ல? டேய் போயிடு என்ன விட்டு. என்ன பாத்தா ஒனக்கு எப்படி தெரியுது ?வாயில எதாவது வர்றதுக்குல்ல ஓடிடு பேசாம? – ஒனக்கு என்ன பிரச்சினை ?நான் வேற ஒரு பொண்ண பத்தி எழுதி ஒன்னைய எழுதலேன்னா ?83 – ஆமான்னு சொன்னா எழுதவா போற. மூடிகிட்டு போய் அவளையே கட்டிக்க. என்ன புடிச்ச பீடை இன்னியோட போகட்டும்!!!


? – என்னைய என்ன வேணா திட்டு ஆனா என் தெறமைய அசிங்க படுத்தாத. .. என சொல்லும் போது அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது. எனக்கு தெரியவில்லை ஏன் அந்த கடைசி வார்த்தைகளை உதிர்த்தேன் என. பரவாயில்லை நானும் ரௌத்திரம் மிக்கவன் என இந்த பெண் உலகம் அறியட்டும். முந்திய பத்தியுடன் கதை முடிந்துவிட்டது. அடுத்து எனக்கு ஒரு காதலி தேவைப்படுகிறாள்.


குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் எண்பத்தி நான்காவது காதலி. அதற்கு என் வசம் இருக்கும் அனைத்து சமூக வலைதளங்களிலும் எனக்கென இருக்கும் பிரத்யேகதளத்தினிலும் விண்ணப்பிக்க இருக்கிறேன். அதற்கான என் பயோடேட்டா


பெயர் - ? 

வயது – 24 

தொழில் –எழுத்தாளன் (இதனால் பயன் உனக்கு யாதெனில் எப்போதும் உன்னுடன் பேசிக் கொண்டே இருக்கலாம். நீ உறங்கும் நேரத்தில் நான் எழுத்து வேலையினை பார்த்துக் கொள்வேன்)  

தோற்றம் – கொஞ்சம் வெள்ளையாக இருப்பேன். அதனால் மூக்கினருகில் இருக்கும் மச்சம் தெளிவாகத் தெரியும் 

எனக்கு பிடித்த கவிதை வரிகள் – உன் இடையில் இருக்கும் வளைவு (நான் பருத்த பெண்ணாக இருந்தால் என கேள்வி கேட்காதே உனக்கும் கொழுகொழுவென இடுப்பு ஒன்று நிச்சயம் இருக்கும்) 

பிடித்தது – உன் சிணுங்கல்கள் (இதுவரை நீ உணரவில்லையெனினும் வருத்தம் கொள்ள வேண்டாம்) 


பிடிக்காதது – அந்தரங்கம் என சொல்லி நண்பர்களை பற்றி பேசுவது(நம்மை பற்றி பேசவே 24 மணிநேரம் போதாதே கண்ணே)


சிலமுக்கியகுறிப்புகள் : எனக்கு என்ன பிடிக்கிறதோ அந்த பெயரில்தான் அழைப்பேன்.  வரிகளின் முடிவினில் உன்னை ‘டி’ விகுதி போட்டு அழைக்கக்கூடும். என் அப்பாக்கூட அப்படி அழைத்ததில்லையே என சொல்லக்கூடாது. ஏன் எண்பத்தி மூன்று பேரை காதலித்தாய் என கேட்க கூடாது. பதிலினை இந்த காகிதம் முடியும் போதே விண்ணபிக்க விரும்புவர்கள் அறிந்து கொள்வார்கள்.என்னை பற்றி நான் போதுமான அளவு சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். மீதியினை என்னுடன் பழகி அறிந்து கொள்ளலாம். அடுத்து தாங்கள் எனக்கு தகுதியானவரா என அறிந்து கொள்ள ஒரே கேள்வி – எழுதிய கதையில் இருக்கும் உரையாடல்கள் நான் பேசியதா ?கேட்டதா ? நான் எழுத்தாளனா? தொகுப்பாளனா ? நான் எண்பத்தி மூன்று பேரினை காதலித்தேனா? அறிந்து கொண்டேனா ? ஏதேனும் ஒன்றிற்க்கு கூட பதில் சொல்லி விண்ணப்பிக்கலாம். உங்கள் சாய்ஸ். . .