ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 9 December 2013

போட்டிச் சிறுகதை-13

சிறுகதை-ஆயிஷா

சவூதி அரேபியாவின் பிரதான விமான நிலையத்தில் அமர்ந்திருக்கிறேன். என் கலங்கிய கண்கள் அடிக்கடி இவ்விடத்தைச் சுற்றிப் பார்க்கின்றன. என் மனதில் பயம் படர்ந்து கைகள் நடுங்கின. சிங்கக் குகையில் சிக்கிய சிறு உயிரனத்தின் நிலைமையும் என் நிலைமையும் ஒன்று தான். இவ்வுலகத்தில் மிகவும் பாவப்பட்ட பிறவி பெண் பிறவி தான். என் கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.

என் பெயர் ஆயிஷா. பெற்றோரில்லை. சிறு வயதில் இருந்தே சித்தி வீட்டில் தான் வளர்ந்தேன். ஆசைகளைத் தொலைத்தே வாழ்க்கையைக் கடந்து வந்தவள் நான். சித்தி ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஊட்டியின் தேயிலைத் தோட்டத்தில் உழைக்கும் ஒரு கூலித் தொழிலாளி. நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. எனது பள்ளிக் கட்டணத்தைக் கட்ட எனது சித்தி பணம் கொடுக்கும்போது அவரது வாய் சில கடின வார்த்தைகளை உதிர்க்கும்.

"இப்போ படிச்சி என்ன செய்ய போற? ஒழுங்கா என் கூட வந்து வேலைய பாரு" என்று சொல்லுவார்.

விடுமுறை நாட்களில் நானும் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்வேன். வேலை முடிந்ததும் வீட்டுப் பாடங்கள் செய்வேன். புறாக்கூடு போன்ற எங்கள் வீட்டில் ஒரே ஒரு விளக்கு மட்டுமே. அதையும் இரவு ஒன்பது மணிக்கு மேல் அணைத்துவிடுவார் சித்தி. அதற்குள் பள்ளியில் கொடுத்த வேலையை முடித்துவிடவேண்டும். நான் எல்லாப் பாடங்களிலும் தேறினாலும் கணக்குப் பாடத்தில் மட்டும் தோல்வி மட்டுமே என்னைத் தொடர்ந்தது.  

இவ்வாறு என் வாழ்க்கை கடந்துகொண்டிருந்த நேரத்தில், அன்று தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். அவர் பெயர் கார்த்தி. தேயிலைத் தோட்ட முதலாளியின் பையன். கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் அங்கு வந்திருந்தார். நல்ல சிகப்பு; மிதமான உயரம். அவ்வப்போது தோட்டத்திற்கு வந்து, வேலை செய்பவர்களைக் கவனிப்பார்.

அவரின் பார்வை என் மேல் விழுந்தது. என் மேல் ஏதோ ஒரு கரிசனம் அவர் உள்ளத்தில் உதயமாகி இருக்க வேண்டும். மௌனமொழியில் என்னுடன் பேசத் துவங்கினார். எங்கள் கண்கள் சந்தித்தன. இருவரின் எண்ணங்களும் உறவாடின. அவர், அங்கு வேலை செய்யும் தொழிலாளியிடம் விசாரித்து, என்னைப் பற்றித் தெரிந்துகொண்டார். 

ஒரு நாள் எனக்குக் கடுமையான காய்ச்சல். என்னால் பள்ளியும் செல்ல முடியவில்லை; வேலைக்கும் செல்ல வலுவில்லை. என் சித்தி மட்டும் வேலைக்குச் சென்றார். நான் வறட்டு இருமலோடு போராடியபடி அடுப்பில் சுடுநீரை தயாரித்துக்கொண்டிருந்தேன்.

"யாராவது இருக்கீங்களா?" என்றது ஒரு குரல், அதுவும் ஆண் குரல்.  

நான் யாரென்று அழுக்குப் படிந்த முகத்தோடு வெளியில் எட்டிப் பார்த்தேன். கார்த்தி நின்றுகொண்டிருந்தார். எனது இதயம் ஒரு முறை துடிப்பது மறந்து போனது; முகத்தில் லேசான கலவரம் உண்டானது. என்னைக் காணாமல் அவர் வருந்தியிருக்கவேண்டும். அதனால் தான் என்னைத் தேடி என் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன்.

"ஒண்ணுமில்ல, இந்தப் பக்கம் வந்தேன். நீங்க போன சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை செய்த வேலைக்கு காசு வாங்கல. இந்தாங்க" என்று சில நூறுகளை நீட்டினார்.

நடுங்கிய கைகளோடு பெற்றுக்கொண்டேன் நான்.

"குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டபடி உள்ளே வந்தார்.

நான் வேகமாக தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தேன். படுக்கையின் அருகிலிருந்த என் பள்ளிப் புத்தகங்களை எடுத்துப் பார்த்தார். கணக்கில் ஒற்றை இலக்க எண்ணைப் பெற்றிருந்த ஒரு விடைத்தாளையும் கண்டு புன்னகைத்தார்.  

பிறகு என்னைப் பார்த்து, "ஏன் நீங்க வேலைக்கு வருவதில்லை?" என்று விசாரித்தார்.

என் உடல் நிலையை அவருக்கு மெல்லிய குரலில் விளக்கினேன். அவரது முகம் சில நொடிகள் பரிதாபத்தின் சாயையைப் பூசிக்கொண்டது.  

"கணக்குப் பாடம் உங்களுக்குப் பிடிக்காது போலிருக்கே?" என்றார்.

நான் சங்கடத்தில் நெளிந்தேன்.

"எனக்கு ஓரளவுக்கு கணக்கு பாடம் வரும். உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகம்னா என்கிட்ட தயங்காம கேளுங்க" என்றார்.

"சித்தி இப்போ வந்திடுவாங்க" என்றேன் நான்.

"சரி, நான் கிளம்புறேன்" என்று புன்முறுவலோடு விடைபெற்றுச் சென்றார்.

அன்று இரவு எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அவரின் நினைவு என் கண்களில் நிழலாடியது. என் கணக்கு மதிப்பெண்ணைப் பார்த்து அவர் சிரித்ததை எண்ணுகையில் எனக்கும் சிரிப்பு வந்தது.

உடல்நிலை சரியான பின் மீண்டும் வேலைக்குச் சென்றேன். அவருடன் பேசவேண்டும் என்று மனது கூறினாலும், ஏனோ நான் பேசவில்லை. அவரே வந்து பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி முடித்துவிடுவேன்.  

எனக்குப் பரிட்சை தொடங்கியது. கணக்குப் பாடத்தின் மீது பயம் பற்றிக்கொண்டது. எப்படியாவது கணக்குப் பரிட்சையில் தேறிவிடவேண்டும் என்று முடிவெடுத்து அவரிடம் சென்றேன்.

அன்று சனிக்கிழமை. அவர் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். தயங்கிய நிலையில் அவர் முன் கணக்குப் புத்தகத்தோடு நின்றேன். சில வினாடிகளில், என் நிலையைப் புரிந்துகொண்ட அவர், அங்கிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து என்னையும் அமரச் சொன்னார்.

என் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி, "எதிலெல்லாம் சந்தேகம்?" என்று வினவினார்.

நான் புத்தகத்தில் குறித்து வைத்திருந்த கேள்விகளை அவரிடம் காட்டினேன். அவர் பொறுமையாக ஒவ்வொரு கணக்கையும் எனக்கு விளக்கினார். சில சூட்சுமங்களையும் சொல்லிக்கொடுத்தார்

தினமும் எங்களின் படிப்புப் பேச்சுக்கள் அதிகரித்தன. அவருடன் பழகும்போது, தொலைந்துபோன என் சந்தோசங்கள் எல்லாம் என்னைத் தேடி வருவதைப் போன்ற உணர்வை நான் அடைந்தேன். அதனால், தினமும் அவரைச் சந்தித்தேன். சில நேரங்களில் அவர் கஷ்டங்களை என்னிடம் கூறுவார். சிறு வயதிலேயே தாயை இழந்தவர் அவர். என்னைப் பார்த்தால் அவர் தாயின் முகஜாடை போலிருந்தது என்றும் அதனால் தான் என்னிடம் பேசவேண்டும் என்று விரும்பியதாகக் கூறினார்.

"உனக்கு என்னவாக விருப்பம்?" என்று கேட்டார்.

"ஆசிரியை" என்றேன் நான். "ஆனால், என் சித்தி படிப்பை நிறுத்திவிடும்படி என்னிடம்
கூறிக்கொண்டிருக்கிறார்" என்றும் கூறினேன்.

"எக்காரணத்தைக் கொண்டும் படிப்பை நிறுத்திவிடாதே. கடைசி வரை படிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும்" என்றும் அறிவுறுத்தினார்.  

பரிட்சை நடந்தது. எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றேன். எனக்குப் பிடிக்காத கணக்குப் பாடத்தில் அறுபது மதிப்பெண் எடுத்தேன். அதை அவரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எங்கள் சந்திப்பு தொடர்ந்துகொண்டேயிருந்தது.

ஒரு நாள், அவர் "என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?" என்று கேட்டார்

நான் ஸ்தம்பித்தேன். என்ன பதில் கூறுவது என்று குழம்பினேன். அவரைக் காயப்படுத்தக்கூடாது என்றும் விரும்பினேன். அதனால், நான் யோசித்துக் கூறுவதாய்ச் சொல்லி தற்காலிகமாகத் தப்பித்தேன். என் மனதிலும் அவரின் மேல் ஓர் ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால், என் ஏழ்மை நிலை அவர் எட்டாக்கனி என்று கூறியது. அவரும் அதன் பிறகு காதல் என்ற வார்த்தையை என்னிடம் கூறாமல் தவிர்த்து வந்தார்.  

நாங்கள் சந்தித்துப் பேசுவது ஒரு நாள் அவருடைய தந்தைக்குத் தெரிந்துபோனது. அவரை எச்சரித்து, என்னையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டார். என் சித்தியிடமும் விஷயத்தைக்
கூறிவிட்டார். அன்று என் சித்தி என்னை அடித்தார். சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்தார். நான் தூங்காமல் அழுதுகொண்டேயிருந்தேன்.

சில நாட்கள் கழித்து, ஊருக்கு செல்லப்போவதாய் என்னிடம் கூறினார் கார்த்தி. நான் உடைந்து போனேன். கண்களில் கண்ணீர் மட்டுமே எனக்கு ஆறுதல் தந்தது. சில மாதங்களில்
திரும்பிவிடுவதாகவும், எந்நாளும் என்னை விரும்பிக்கொண்டிருப்பேன் என்றும் கூறினார். தந்தையைச் சமாதானம் செய்து என்னைக் கைபிடிப்பேன் என்றும் உறுதியளித்தார்.  

நானும் அரைமனதோடு அவரை வழியனுப்பினேன். எப்படியும் என்னைக் கரம் பிடிப்பார் என்ற நம்பிக்கை என்னில் துளிர்த்தது. அந்தக் கற்பனையில் என் நாட்களைத் தள்ளினேன். இன்பமயமான நேரமது.

*****

விதி என்றுமே நாம் நினைப்பது போன்று வளைவதில்லை. அதன் ஆசைப்படி நம்மை வளைத்து விடும் ஆற்றல் கொண்டது அது. விதியின் விழிகள் என் மீது விழுந்து சதி செய்யத் தொடங்கின.

என்னைப் பெண் பார்க்க ஒருவர் வந்தார். சவூதி அரேபியாவில் பணிபுரிவதாகவும் கைநிறைய சம்பளம் என்றும் அவர் குடும்பத்தார் கூறினார்கள். நல்ல வரன் என்று எண்ணிய என் சித்தி என்னைக் கேட்காமல் சரி என்று ஒப்புக்கொண்டார்.

சித்தியை எதிர்க்க என் நெஞ்சில் துணிவில்லை. ஆதலால், கனத்த மனதோடு திருமணத்திற்குச் சம்மதித்து திருமணமும் நடந்தேறியது. என் கணவரின் பெயர் முஹம்மத் ரபிக். திருமணமான சில வாரங்களிலேயே என்னை சவூதிக்கு அழைத்துச் சென்றார்.

முதலில் தாம்பத்திய வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. போகப் போக என் கணவரின் போக்கு மாறியது. பல பெண்களிடம் அவர் தொடர்பு வைத்திருந்தார். தினமும் ஓயாமல் சண்டை பிடித்து என்னை அடிப்பார். சில நாட்களில் வீட்டிற்குக் கூட வருவதில்லை. அவரின் தாய் தந்தையரும் என்னைக் கொடுமைசெய்ய ஆரம்பித்தார்கள். எல்லாவற்றையும் வலியோடு தாங்கிக்கொண்டேன்.

ஆனால், ஒன்றில் மட்டும் என் உள்ளம் உறுதியாக இருந்தது. அது படிப்பு. அங்கேயும் படித்தேன். நல்ல மதிப்பெண் வாங்கினேன். கணக்குப்பாடம் எழுதும்போது கார்த்தியின் ஞாபகம் என் நெஞ்சில் ஈட்டியாய் பாயும்.

வருடங்கள் உருண்டோடின. ஒரு நாள் என்னைக் கொல்ல என் கணவர் துணிந்து விட்டார். அதற்கு மேல் அங்கிருக்க நான் விரும்பவில்லை. இறந்து விடலாம் என்று கூட துணிந்து விட்டேன்.

என் பக்கத்துக்கு வீட்டுகாரர் என் கஷ்டங்களை அறிவார். அவர் ஒரு போலீஸ்காரர்; பெயர் சலீம். அவரிடம், "என்னை என் ஊருக்கே அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்" என்று மன்றாடினேன். சில நாட்களில் இந்தியா திரும்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

நான் சில துணிமணிகளையும், பள்ளிச் சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, இங்கு பயத்தோடு உட்கார்ந்திருக்கிறேன். என் பயணம் தடைபட்டு விடுமோ? என்ற பயம் என்னைக் கொல்கிறது. உண்மை தெரிந்து என் கணவர் வந்தால் நான் என்ன செய்வது?

நான் செல்லப்போகும் விமானம் இன்னும் சிறிது நேரத்தில் செல்லப்போவதாய் மைக்கில் ஒருவர் கூறினார். இன்னும் பயம் என்னை விட்டபாடில்லை. என் உடமைகளைச் சுமந்து கொண்டு அவசர அவசரமாக செல்கிறேன். சில நடைமுறைகளை முடித்து விமானத்தினுள் ஏறியபின்தான் பய உணர்வு என்னை விட்டு விலகியது.

என் பையில் விஷ மாத்திரை ஒன்று உள்ளது. இறுதியாகக் கார்த்தியைப் பார்த்துவிட்டு, என் கஷ்டங்களை அவரிடம் கூறாமல், எனது பள்ளிச் சான்றிதழ்களை அவரிடம் காட்டிவிட்டு, பழைய நினைவுகளை மீட்டியபடியே என் உயிரைப் போக்கிக்கொள்ள நான் துணிந்துவிட்டேன்.

*****

மீண்டும் என் பாதச்சுவடுகள் நான் பிறந்து வளர்ந்த ஊட்டியின் மண்ணை முத்தமிட்டன. நான் பார்த்துப் பழக்கப்பட்ட இடங்களெல்லாம் இந்த மூன்று வருடங்களில் பெரிய மாற்றமில்லாமல் மௌனமாய் என்னை நலம் விசாரித்தன. குளிர்க்காற்று என் உடலைத் தீண்டி குமுறிய என் மனதில் புஷ்பமாய்ப் பூத்தன. படர்ந்திருந்த பனியின் குளுமை சாலையுடன் ஸ்பரிசித்து மண்வாசனையை 'கம்மென்று..' பரப்பியது.

நான் எனது காலணிகளைக் கழட்டிவிட்டு வெறும் கால்களோடு நடந்தேன். என் பாதங்கள் குளிர்ந்து என் உடல் முழுதும் சுதந்திரக் காற்றை ஊடுருவச் செய்து இன்பக் கண்ணீரை வரவழைத்தன. நெடுதூரம் நடந்தே சென்றேன். குளிர் என்னைக் குண்டூசியாய் குத்திய போதிலும் நான் தளறாமல் நடந்தேன்.

அருவியின் அருகே உள்ள பாறையில் அமர்ந்தேன். 'ஓஓ..' வென அருவி கொட்டியது. சில நேரங்களில் நானும் கார்த்தியும் அங்கு அமர்ந்து பேசுவது வழக்கம். இப்பொழுது நான் மட்டும் தனியாக வந்திருப்பதால் அருவி என்னைக் கண்டு அழுவது போலிருந்தது. அன்று முழுதும் நான் அருவிக் கரையிலேயே அமர்ந்திருந்தேன். பால் நிலா தகதகப்பதை கண்டு நான் சிலாகித்தேன். மின்மினிப்பூச்சிகளின் ஒளி என் மேல் பட்டபோது புதுப்பிறவி எடுத்ததாய் உணர்ந்தேன். விடியற்காலை வரை நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

அதன் பின் என் வீட்டை நோக்கிச் சென்றேன். வீடு பூட்டி இருந்தது. என் சித்தி வேறொரு ஊருக்குச் சென்றுவிட்டதால், அவ்வீட்டை நோக்கியபோது, எனது பால்ய வயது ஞாபகங்கள் அணியணியாய் திரண்டு வந்தன. நான் பணி புரிந்த தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றேன். தேயிலைகளைத் தொட்டுப் பார்த்து சிலாகித்தேன். தாயின் கருவறையின் மென்மை அதிலிருந்ததை நான் உணர்ந்தேன்.

கார்த்தியின் ஞாபகம் வந்தது. 'இந்த இடைப்பட்ட வருடத்தில் அவருக்கு நிச்சயம் திருமணம் ஆகியிருக்கும். ஒரு குழந்தை இருந்தால் கூட ஆச்சர்யப்படுவதிற்கில்லை' என்று எண்ணினேன்.
கார்த்தியின் வீட்டை நோக்கிச் சென்றேன். வீட்டின் முன் அவர் தந்தையின் கார் நின்றிருந்தது. திரும்பிச் சென்றுவிடலாமா? என்று கூட எண்ணினேன். இருந்தும் தைரியத்தைத் துணைக்கழைத்துக்கொண்டு வீட்டின் கதவைத் தட்டினேன்.

கார்த்தியின் தந்தை கதவைத் திறந்து என்னைப் பார்த்தார். அவரின் முகத்தில் சுருக்கங்கள் முன்பை விட அதிகமாக இருந்தன. சில வினாடிகளில் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார் அவர். உடனே, அவர் கண்கள் குளமாயின. "வாம்மா..வாம்மா" என்று வாஞ்சையோடு உள்ளே அழைத்துச் சென்றார்.

"எப்போ வந்த? கணவர் நலமா?" என்று விசாரித்தார்

நான் எல்லோரும் நலம் என்று கூறினாலும், என் முகத்திலிருந்த கவலை காட்டிக்
கொடுத்துவிட்டது. பக்குவமாய்ப் பேசி என்னிடமிருந்து அனைத்து உண்மைகளையும்
வாங்கிக்கொண்டார். சில நிமிடங்கள் வருந்தினார்.

"கார்த்தி எங்கே?" என்றேன் நான்.

அவரிடம் மௌனம். அந்த மௌனத்தில் பேரதிர்ச்சி ஒன்று ஒளிந்திருந்தது என்பதை போகப் போகத் தான் தெரிந்துகொண்டேன். காரில் என்னை அழைத்துக்கொண்டு ஒரு மருத்துவமனையை அடைந்தார் அவர். மருத்துவமனையின் உள்ளே என்னை அழைத்துச் சென்றார்.

"எதற்காக என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள்? கார்த்தியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்தா?" என்று பதறியபடி அவர் பின்னே சென்றேன் நான்.

ஒரு அறையினுள் என்னை அழைத்துச் சென்றார்.

அங்கு நான் கண்ட காட்சி..!!!அதைச் சொல்ல வார்த்தையேயில்லை...!!!

சுயநினைவின்றி கார்த்தி அங்கே படுத்திருந்தார். நான் விம்மிய நெஞ்சோடு அவர் அருகில் சென்று அவரையே வெறித்துக்கொண்டிருந்தேன்.

"நீ ஊருக்குப் போன அடுத்த மாசம் கார்த்தி வந்தான். உனக்கு கல்யாணம் நடந்தது தெரிஞ்சதும் துடிச்சிப்போய்ட்டான். பைத்தியம் புடிச்ச போல தனியாவே சுத்திட்டு இருந்தான். இங்கிருக்க பிடிக்காம மறுபடியும் ஊருக்குப் போனப்போ, அவனது கார் விபத்துக்குள்ளானது. இத்தனை வருஷமா சுயநினைவு இல்லாம கோமாவில் இருக்கான்" என்று விசும்பினார் அவர் தந்தை.

என் வார்த்தைகள் எல்லாம் தொலைந்தது போன்று சிலையென நின்றிருந்தேன் நான்.
அப்பொழுது மருத்துவர் ஒருவர் கார்த்தியின் தந்தையை அழைத்துச் சென்றார்.

அவர் சென்றதும், கார்த்தியைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதேன். அவர் நெஞ்சில் தலை சாய்த்து அவரின் இதயத் துடிப்பைக் கேட்டேன். 'இத்தனை நாள் எங்கிருந்தாய்? இப்பொழுது தான் என்னைப் பார்க்க வந்தாயா?' என்று கேட்டது அவரது இதயத் துடிப்பு. அவர் கேசத்தை மெல்ல வருடி நெற்றியில் முத்தமிட்டேன். என் கண்ணீர்த் துளிகள் இரண்டு அவர் முகத்தில் விழுந்தன. அப்பொழுது கூட அவரின் கண்கள் திறக்கவில்லை.

அவ்வறையை விட்டு வெளியேறினேன் நான். மருத்துவரும் அவரது தந்தையும் பேசியது என் காதில் விழுந்தது. 'கார்த்தியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், கோமாவிலேயே  அவர் இறந்து விடலாம்' என்று மருத்துவர் கூறினார். மருத்துவர் சென்ற பின், கலங்கிய கண்களோடு என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார் கார்த்தியின் தந்தை.

'கார்த்தி இறந்து விடலாம்' என்று மருத்துவர் கூறியது என் இதயத்தை அறுப்பது போலிருந்தது. 'அப்படி ஏதேனும் நடந்தால்...!' என்று எண்ணும்போதே என் மனம் பதறியது. என்னிடமிருக்கும் விஷ மாத்திரை ஒரு கணம் என் கண் முன் நிழலாடியது; விஷ மாத்திரை உண்டு இறந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

கார்த்தியை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமில்லை. அதனால், தினமும் நான் மருத்துவமனைக்குச் சென்று கார்த்திக்குப் பணிவிடை செய்தேன். இப்பொழுது ஒரே ஒரு ஆறுதல் கார்த்திக்கு நான் பணிவிடை செய்வது தான். தூரத்தில் மரணதேவன் எங்களை அழைத்துக் கொண்டிருக்கிறான்...

என்னை ஒரு கல்லூரியில் சேர்த்தார் கார்த்தியின் தந்தை. நான் எந்த மறுப்பும் கூறாமல் கல்லூரிக்குச் சென்றேன். நான் படிப்பது தான் கார்த்திக்குப் பிடிக்கும்.

'என்றாவது ஒரு நாள் கார்த்தி கண்விழிக்கமாட்டாரா? என்னைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கமாட்டாரா? என்னிடம் கூறாமல் சென்றுவிட்டாயே என்று கோபித்துக்கொள்ளமாட்டாரா?' என்று கற்பனையில் நான் தினமும் தத்தளிக்கிறேன். எப்படியும் நாங்கள் ஒன்று சேருவோம். அது வாழ்விலா? சாவிலா?


**********