ஆன்லைனில் புத்தகம் வாங்க

Friday, 27 December 2013

போட்டிச் சிறுகதை-47

சிறுகதை- காவல் கருத்தான்


2013 டிசம்பர் 

திருச்சியில் இருந்து காரைக்குடி நெடுஞ்சாலையில் சாலையில் நீந்தி வந்து கொண்டிருந்தது அந்த இன்னோவா கார்! உள்ளே முன் இருக்கையில் இருப்பவர் பெயர் கருப்பையா, சொந்த ஊரான காரைக்குடி அருகில் உள்ள கண்டனூரை விட்டு பிழைப்புக்காக திருச்சியில் குடியேறியவர். ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்று கடந்த வாரம் திருமணம் முடிந்த தன் மகனையும் மருமகளையும் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட தன் கிராமத்துக்கு அழைத்துப் போய்க்கொண்டிருப்பவர். மகன் விடுமுறை முடிந்து அடுத்தவாரம் மீண்டும் அமெரிக்கா செல்லவிருப்பதால் இந்த அவசரப்பயணம்.  மகன் மருமகள் அவர் மனைவி மூன்று பேரும் பின் இருக்கையில் இருந்தனர். திருச்சி விமான நிலையம் வரை பொதுவாகப் பேசிக்கொண்டு வந்தவர்கள், அதைத் தாண்டி கார் வேகம் எடுத்ததும் திடீரென்று மருமகள் கேட்டாள் " இப்ப எந்தக் கோவிலுக்கு அத்த போறோம்? அவசரமா அங்க போய் கும்பிடற அளவுக்கு அப்பிடி என்ன அங்க விசேசம்?" என்றாள்.

"விசேசம்தான்..அதுவும் உன்ன..  என்னை வாக்கப்பட்டு வர்ற ஜென்மங்களுக்கு அது ரொம்ப விசேசம்தான்" என்றாள் அவள் அத்தை.

"எப்படின்னு சொல்லுங்க அத்த? இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல நாம ட்ராவல் பண்ணணும்ல? அதையாவது கேட்டுகிட்டு வர்றேன்" என்றாள் 

கருப்பையா அர்த்தத்தோடு திரும்பி மனைவியைப் பார்த்தார், அவளும் அந்தக் கதையை மருமகளுக்கு சொல்ல ஆரம்பித்தாள்......

1800களின் பிற்பகுதி 

எப்படா விடியும் என்று காத்திருந்ததைப்போல சேவல் ஒன்று கூவத்தொடங்கியது! ஆனாலும் நீ என்ன கூவுறது நான் என்ன போறதுன்னு வளர்பிறை நிலவு போகம்மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த அதிகாலை, கொஞ்ச நேரம் பொறுத்துப்பார்த்த சேவல் தன் கூட்டாளிகளையும் சேர்த்துக்கொண்டு கூவ ஆரம்பித்தது. அப்பிடியும் அந்த நிலா அசையவில்லை. கொஞ்ச நேரத்தில் வேப்ப மரத்தில் அடைந்திருந்த குருவிகளும் சேர்ந்துகொள்ள வேறு வழியில்லாமல் நிலா மேகங்களுக்கு இடையில் பம்ம ஆரம்பித்தது.

வெளியில் நடந்த இந்தச் சண்டையின் களேபரத்தில் கருத்தான் லேசாகக் கண் விழித்தான். ஐப்பசி மாத விடிகாலைக் குளிர் லேசாக உடம்பை உதறியது. லேசாகச் சிலிர்த்துக்கொண்டு அப்போதுதான் கவனித்தான், அவன் வெற்று மார்பைக் கட்டிக்கொண்டு புது மனைவி பொசலியாத்தா தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அவன் மண்டைக்கு உரைத்தது, தனக்கு நேத்துதான் கல்யாணம் ஆகியதும் இது தன் பொண்டாட்டி பொசலியாத்தான்னும், நேற்று இரவு நடந்ததை நினைத்து லேசாக அப்படியே கண்களை மூடிக்கிடந்தான்.

திடீரென்று நினைவு வந்தவனாக எழுந்திருக்க எண்ணி பொசலியின் கைகளை மெதுவாகத் தூக்கி வைத்துவிட்டு அவளிடம் இருந்து நகர்ந்தான். சேலைக்குப் பதிலாக அவனைச் சுருட்டிக்கொண்டு தூங்கியவள் திடீரென்று அவன் விலகவும் பதறி எழுத்தாள். எழுந்தவள் புது இடத்தின் சூழ்நிலையை உள்வாங்கவே வினாடிகள் ஆயிற்று, அப்போதுதான் உணர்ந்தாள் தான் சேலை கூட இல்லாமல் இருப்பதையும் கருத்தான் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும். அவனை கட்டிக்கொண்டு தூங்கியபோது இல்லாத வெட்கம் இப்போது அவளுக்கு வந்தது. அனிச்சையாக அருகில் கிடந்த சேலையை எடுத்து சுற்றிக்கொண்டவள் அப்போதும் தலையைக் குனிந்தபடியே நின்றாள்.

மெதுவாக அருகில் வந்த கருத்தான் அவளது அச்சத்தையும் பதட்டத்தையும் போக்கும்விதமாக அவளை லேசாக மார்போடு அணைத்துக்கொண்டான். அவளுக்கும் அது தேவையாக இருந்தது போல, ஒன்றிக்கொண்டாள். சற்று நேரம் அப்படியே இருந்தவன் மெதுவாக அவளை விலக்கி, அப்போதுதான் பார்ப்பது போல பார்த்தான், மாநிறத்தில் அழகாகவே இருந்தாள்! கழுத்தில் மஞ்சள் பூசிய தாலியும் நெற்றியில் கருத்தானின் கை வண்ணத்தில் அழிந்த குங்குமமும் அவளுக்கு இன்னும் அழகைக் கூட்டியது.  "ஏ புள்ள பொசலி, இந்த வீடையும் உன் வீடா நினைச்சிக்க.. வாக்கப்பட்டு வந்த இடம்னு வெசனப்பட்டு நிக்காத, உனக்கு என்ன தெரியலைனாலும் ஆத்தாக்கிட்ட கேளு.. இல்லையா ரெண்டு நாளைக்கு அக்கா இங்கதான் இருக்கும் கேட்டுக்க, நேத்தே உன்கிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன், உன் பக்கத்துல வந்ததுமே இந்தப்பாலாபோன ஆச எதையும் பேசவிடல... இருந்தாலும் போகப்போக உனக்கே தெரிஞ்சிரும்" என்றான்.

அவளும் வெட்கத்தோடு "ம்ம்.." என்றாள் ஒற்றை வரியில்.

கருத்தானும் விடாமல் " புள்ள.. ஒதுங்குறது குளிக்கிறது எல்லாம் அக்காகிட்ட கேட்டுக்க, நான் ஒழவுக்கு போக போறேன்" என்றவனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள் பொசலி.

அவள் பார்வையில் இருந்த கேள்வியை புரிந்தவனாய் " என்ன புள்ள பண்றது? அடுத்த வாரம் நடவு வச்சாச்சு, இருவது குழிக்கு மேல தருசு கொட அடிக்காமக் கெடக்கு, தொணை ஏறு கூட்டறதும் இல்ல, ஒத்த ஏரு இன்னைக்கு ஆரம்பிச்சாதான் ரெண்டு மூணு நாளைக்குள்ள முடிச்சிட்டு நடவுக்கு பக்குவம் பண்ண முடியும்" என்றான் ஒரே மூச்சாக.

அவளும் குடியானவக் குடும்பத்தின் வழக்கம் புரிந்தவளாய் " சரிங்க மாமா" என்றாள் மெதுவாக.

அவள் பதிலைக்கேட்டு சந்தோசத்துடன் அவளைப்பார்த்த கருத்தான் "என்ன புள்ள சொன்ன?" என்றான் ஆசையும் கிண்டலும் கலந்து.

இன்னும்கொஞ்சம் வெட்கத்தோடு சிவந்தவள்.. " ஆத்தா இன்னைக்கு மறுவீட்டுக்கு வரச்சொன்னுச்சு மாமா.." என்றாள் இழுவையாக.

"ஏம்புள்ள... உன் ஆத்தா ஊடு என்ன சீமையிலையா இருக்கு? பங்காளி சாமிநாதன் சந்தைக்கு வண்டி கட்டிக்கிட்டு உங்க ஊரு வழியாத்தானே போவான்..ஒரு எட்டு உங்க வீட்டுல போய் இன்னைக்கு வரலியாம் ஒருவழியா நடவ முடிச்சிட்டு வர்றோம்னு சொல்லிவிடறேன்" என்றான் கருத்தான்.

சொல்லிவிட்டு அவள் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தையும் உணர்ந்தவனாக.. "சரி புள்ள..நீச்சத்தண்ணிய குடிச்சிட்டு நான் வயலுக்கு போறேன்.. மத்தியானத்துக்கு நீயே சாப்பாடு கொண்டு வா புள்ள, வயலுக்கு உனக்கு வழி தெரியாது.. அக்காகிட்ட கேட்டுக்க" என்று கூறியவாறு அவள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியில் நடந்தான்.

உள்வீட்டில் இருந்து பத்திக்கு வந்தவன், இன்னும் தூங்கிக்கொண்டிருந்த அக்கா குழந்தைகளையும் மச்சானையும் மிதிக்காமல் கவனமாகத் தாண்டி வந்தவன் வாசலில் சாணி தெளித்துக்கொண்டிருந்த அக்காவைப் பார்த்ததும் லேசாகத் தயங்கி நின்று ஆத்தாவைத் தேடியவன், வீட்டுக்கு கிழக்கில் வாரம் இறக்கி அதை அடுப்படியாக மாற்றி வைத்த குடிசையில் அந்த நேரத்திலும் ஆத்தாக்காரி என்னமோ செய்து கொண்டிருந்தாள், இந்தப்பக்கம் திண்ணையில் அவன் அப்பன் வெளத்தன் அந்த நேரத்திலும் வெத்தலையைக் கொதப்பிக் கொண்டிருந்தான்.

மெதுவாக ஆத்தாகாரி பக்கம் திரும்பி "ஆத்தா..கொஞ்சம் நீச்சத்தண்ணி உப்பு போட்டுக் கொடுத்தா..குடிச்சிட்டு வயலுக்கு போவனும்" என்றான்.

அதைக்கேட்ட ஆத்தாகாரி பரமாயி " ஏன்டா கூறுகெட்டவனே.. கல்யாணம் ஆயி இன்னும் ராத் திரும்பல..வயலுக்கு போறானாம் வயலுக்கு.. போடா போக்கத்தவனே" என்றாள் கொஞ்சம் பழைய கஞ்சியை எடுத்து கோழிகளுக்கு போட்டபடியே.

அதைக்கேட்ட வெளத்தன் மகனுக்கு தோதாக வந்தார் "ஏண்டி.. போக்கத்தவளே, அவன்தான் அடுத்தவாரம் நடவு வச்சுருக்கான்ல.. அப்பறம் வயலுக்கு போவாம என்னடி பண்றது? பேச வந்துட்டா.." என்று தன் பொண்டாட்டி வாயை அடைத்தார்.

ஆத்தா கொடுத்த நீச்சத்தண்ணியை குடித்துவிட்டு சொம்பைத் திண்ணைலே வைத்துவிட்டு "ஆத்தா..பங்காளி ராமன் சந்தைக்கு போவான்.. இன்னைக்கு ஏதோ மருவீட்டுக்கு போவனுமாம்ல அந்த புள்ள வீட்டுக்கு.. நடவு முடிஞ்சதும் வர்றோம்னு சொல்லி விட்ரு ஆத்தா" என்று சொல்லியபடியே கட்டுத்தரையை நோக்கி நடந்தான்.

அங்கே ஆத்தாகாரி வைத்த தவிட்டு தண்ணியை குடித்துவிட்டு கருத்தானுக்கு கல்யாணம் ஆயிருக்கு ரெண்டு நாளைக்கு நம்மள சீண்ட மாட்டான்னு சந்தோசமாக அசை போட்டுக்கிட்டு நின்ன வண்டி மாடுகள் மண்டையனும் கொரட்டையும் கருத்தானை பார்த்ததும் இவன் எங்கடா இங்க வந்தான்னு பார்த்தபடி நின்றன.

அவைகளைத் தட்டிக்கொடுத்து அவிழ்த்தவன் மம்மாட்டிய ஒரு தோளிலும் கலப்பையை ஒரு தோளிலும் சுமந்தபடி வயலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அவன் கலப்பையோடும் மாடுகளோடும் நடப்பதைப் பார்த்த சாமிநாதன் 'ஏன்டா கருத்தா.. கல்யாணம் ஆயி மாமியார் வீட்ல கறிச்சோறு திங்காம எதுக்குடா கலப்பைய தூக்கிட்டு போற? கொஞ்ச நாளைக்கு இந்த உழவ மறந்துர்ரா" என்றான் சிலேடையாக சிரித்தபடி.

இப்படி வழியில் எதிர்ப்பட்ட கேள்விக்கெல்லாம் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். கருத்தான் எப்போதுமே இப்பிடித்தான், எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டான் காலையில் ஆரம்பித்தால் உச்சி வெயில் ஏறும் முன்னரே ஏர் அவிழ்த்து மாடுகளைக் குளிப்பாட்டி அவைகளை கம்மாக் கரையோரம் மேய விட்டு ஆத்தாகாரி கொண்டுவரும் சாப்பாட்டை சாப்பிடுவான். சிறிதுநேரம் அந்த ஆல மரத்தடியில் துண்டை விரித்துப் படுப்பவன் கொஞ்ச நேரத்தில் மம்மட்டியை தோளில் மாட்டியபடி கிளம்பிவிடுவான்.

இன்றும் அப்படித்தான் உச்சி வெயில் வரும் முன்னரே மாடுகளை குளிப்பாட்டி முடித்து ஆல மரத்தருகே வந்தவன் அங்கே அக்கா மகள் காளியம்மா வழி காட்ட பொசலி சாப்பாட்டுக் கூடையுடன் வந்து சேர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் மாடுகளைக் கூட கட்ட மறந்துவிட்டு வேகமாக போய் அவள் எதிரில் நின்றான்.

அவளும் அவனின் பசியறிந்து எதுவும் பேசாமல் சாப்பாடை பிரித்து வைக்க துவங்கினாள். குழந்தை காளியம்மாவை வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியாமல் கருத்தான் முழிப்பதை பார்த்த பொசலி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, "காளி..நீ வீட்டுக்கு போத்தா... செத்த நேரம் கழிச்சு நானே வந்துருவேன்,பாத புடிபட்டுருச்சு எனக்கு, அத்தைக்கிட்ட சொல்லிரு..நீ போ" என்றாள்.

காளி சென்றுவிட.. இதுக்காகவே காத்திருந்த கருத்தான் "பொசலி..நீ சாப்புட்டியா புள்ள?" என்றான்.

"ம்ம்ஹூம்.." என்றாள்..

"இந்தா கொஞ்சம் வாங்கிக்க" என்று அவளுக்கும் ஊட்டினான் கொஞ்சம்.

ஆசைக்கும் வெட்க்கத்துக்கும் சின்ன பட்டிமன்றம் வைத்த பொசலி..கடைசியில் ஆசை பக்கம் சாய்ந்து ஊட்டியதை வாங்கிக்கொண்டாள். இப்பிடி ஆசையும் அக்கறையுமாக இரண்டு வாரங்கள் போக, நடவெல்லாம் முடிந்த ஒரு காலைப் பொழுதில் முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு வண்டி கட்டினான் கருத்தான், பொண்ணுங்களுக்கு எப்போதுமே புருசனோடு சேர்ந்து பிறந்தவீடு போகும் சுகமே தனி, பொசலியும் அப்பிடித்தான் சந்தோசமாக கிளம்பி வந்து கருத்தானோடு நின்றாள், அதனால்தான் என்னவோ மண்டையனும் கொரட்டையும் கூட அடம்பிடிக்காமல் வண்டியில் தங்களைப் பூட்டிக்கொண்டன.

அந்த நேரம் பார்த்து நடவுக்கு ஒத்தாசைக்கு வந்த கருத்தானின் அக்காவும் மகள் காளியம்மாவை கையில் பிடித்துக்கொண்டு வண்டியில் ஏறினாள் " டேய் கருத்தா.. நானும் வர்ரண்டா.. நானும் பொசலி வீட்டு பவுசு பக்கனும்ல" என்றபடி.

ஆயிரம் ஆசைகளோடு கிளம்பிய பொசலி உலை பொங்கி வரும்போது நெருப்பை புடுங்கியது போல அடங்கினாள். தன் வீடு போய் சேரும்வரை எதுவும் பேசவில்லை, பொசலியின் எண்ண ஓட்டம் புரிந்தவனாக கருத்தானும் பேசவில்லை.

மாமியார் வீட்டில் கருத்தானுக்கு ஏக தடபுடல்தான், பொசலியின் பூரிப்பை வைத்தே அவள் தாய் தெரிந்துகொண்டாள், தன் மகள் சந்தோசமாக இருக்கிறாள் என்று. ஆகவே இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் கருத்தானைக் கவனித்தார்கள். நாட்டுக்கோழி குழம்பும் வயல் நண்டு ரசமும் கம்மாய் மீன் குழம்பு சாப்பிட்ட அசதியில் கருத்தான் கொஞ்சம் கண்ணயர்ந்தான்.

பொசலியும் அவள் ஆத்தாவும் பேசிக்கொண்டிருக்க இடையிடையே கருத்தானின் அக்காவும் மூக்கை நுழைத்துக்கொண்டிருந்தாள், இதனால் தொடர்ந்து பேச விருப்பம் இல்லாத பொசலி "செத்த இரு ஆத்தா, கொல்லப்பக்கம் போயிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு பின்கட்டு வழியாக கொல்லைக்குச் சென்றாள். கிணற்றடியில் தண்ணீர் இறைக்கும் போதுதான் அவனைப்பார்த்தாள், கொல்லைக்கு அந்தப்புரமாக நின்று கொன்றிருந்தான், கையிலும் ஏதோ வைத்திருந்தான் இன்னவென்று தெரியவில்லை.

அவனைப்பார்த்ததுமே அதிர்ந்துபோய் நின்றாள் பொசலி, "ஆத்தே..நீ எதுக்கு இப்ப வந்த? அப்பனும் ஆத்தாளும் பார்த்தா வம்பாவுல்ல போயிரும், இங்க இருந்து போயிரு" என்று குரல் வராமல் கதறினாள் பொசலி.

"ஏம்புள்ள வெரட்டுற? நீ வந்துருக்கன்னு தெரிஞ்சு காலைல இருந்து மரத்தடில கெடக்குறேன், கல்யாணம் கட்டி போய்ட்டா ஒறவு இல்லேன்னு ஆயிருமா? கல்யாணத்துக்குதான் ஒன்னும் செய்யல இதையாவது வாங்கிக்க புள்ள" என்று கையில் உள்ளதைக் கொடுத்தான்.

"ஆத்தே..மொதல்ல இங்க இருந்து போ" என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அரவம் கேட்டு பதறி திரும்பினாள், கருத்தானின் அக்கா வந்து கொண்டிருந்தாள், அவனும் அந்த இடத்தை அவசரமாக விட்டு நகர்ந்தான்.

"யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்க இங்க?" என்றபடியே வந்தாள்

"யாருகிட்டயும் இல்ல அன்னமண்டி... " என்றபடி அவசரமாக உள்ளே போய்விட்டாள் பொசலி.

ஆனாலும் திருப்தியில்லாத கருத்தானின் அக்கா கொல்லைக்கு அந்தப்பக்கமாக எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போனாள்.

விருந்தெல்லாம் முடித்துவிட்டு ஊருக்கு போன மறுநாள் கருத்தானின் அக்காவும் ஊருக்கு கிளம்பினாள். போகும்முன் கருத்தானை தனியாகப் பார்த்து காதுக்குள் ரகசியம் ஓதினாள் "டேய் இவனே...மறுவீட்டுக்கு போன இடத்துல ஒம் பொண்டாட்டி கொல்லப்பக்கமா யார்கூடயோ பேசிகிட்டு இருந்தாடா, நான் போனதும் ஒண்ணுந் தெரியாத புள்ளையாட்டம் நின்னுட்டா, சூதனமா இருந்துக்கடா..என்னமோ நான்ச் சொல்ல வேண்டியதச் சொல்லிட்டேன்..அப்பறம் ஒம்பாடு அவபாடு" என்றபடியே அப்பன் வீட்டு அரிசிப்பைய தூக்கிக்கொண்டாள்.

கருத்தானுக்கு மனதுக்குள் குமைந்தாலும் அக்காவைப் பற்றி கொஞ்சம் தெரிந்ததால் பொசலியிடம் இதைப்பற்றி கேட்க வில்லை. வாழ்க்கையும் வசந்தமாகவே போய்க்கொண்டிருந்தது. ஒரு மாதம் ஓடியிருக்கும்.

கருக்கலில் வயலுக்கு போகும் வழியில் பக்கத்துக்கு வீட்டு வீரம்ம்மா வந்தாள். 

"என்ன கருத்தா களையெடுப்பா? கருக்கள்ளே போறியே?" என்றாள்.

"ஆமாக்கா... தண்ணி வடிக்கனும், அதான் கருக்கள்ளே போறேன்" என்றான் 

"ம்ம்..நீயும் வயலே கதின்னு கெடக்க.. அங்க என்னடான்னா.. சரி வேணாம் விடு, எனக்கெதுக்கு பொல்லாப்பு?" அடிப்போட்டாள்.

கருத்தானுக்கு அடுத்த அடி எடுத்து வைக்க மனது வரவில்லை, "யக்கா..சொல்ல வந்தத சொல்லுக்கா.." என்றான்.

"என்னத்தடா சொல்றது? ஒம்பொண்டாட்டி பொசலி போற போக்கு சரியில்லடா நான்ச் சொல்றேன்னு தப்பா நெனக்காதடா.. தெனம் நீ வயலுக்கு போயிற.. உன் அப்பன் வெத்தலைய மென்னுகிட்டு ஊரு வம்பு தேடிப் போயிர்ராரு..ஆத்தாவும் ஆடுகள கட்டிக்கிட்டு அழுகுறா, இதான் சமயமுன்னு ஒரு எளவட்டப் பய வீடு தேடி வந்துர்றான், பொசலியும் அவனும் என்னமோ பேசுறாங்க, கொஞ்ச நேரத்துல காணாம போயிர்றான், என்ன கருமமோ என்னமோ போ.. பொண்ணு எடுக்க முன்னாடி நாலு எடத்துல நல்லா சாரிக்க வேண்டாமா கருத்தா.. நானே ரெண்டு வாட்டி பாத்துட்டேன், ஊரு பாக்காம இருக்குமா? ஊரு சிரிக்க முன்னாடி என்ன சேதின்னு கேட்டு வை..வரவா.. காலைல எந்திரிச்சதும் நீச்சதண்ணி கொடுக்கலைனா ஒம் மச்சானுக்கு மூக்கு மேல கோவம் நிக்கும்" என்றபடி ஒரு புயலைக் கிளப்பிய எந்தச் சுவடும் இல்லாமல் சென்றாள்.

கருத்தானுக்கு நின்ற இடம் நழுவுவது போல இருந்தது. எப்படி வயலுக்கு போனான் எப்படி தண்ணி வடிச்சான் என்று அவனுக்கே தெரியவில்லை. மனது முழுக்க பொசலியாத்தா இருந்தாள். "கல்யாணம் ஆயி இந்த மூணு மாசத்துல எந்தக் குறையுமே இல்லையே? ஆத்தாவுக்கு அடுத்த எடத்துலதானே வச்சுருக்கேன், அன்னக்கே அக்கா சொன்னப்ப கூட என் பொண்டாட்டி மேல எனக்கு நம்பிக்க இருக்குன்னு ஒரு வார்த்த கூட கேக்கலயே அவகிட்ட" இப்படி பலவிதங்களில் அவனே மனதுக்குள் புளுங்கிக்கொண்டிருக்கும்போதே மதியம் வந்துவிட்டது.

வயிறு சுண்டி இழுப்பதில் நேரத்தைப் பார்த்த கருத்தான் வெயில் உச்சிக்கு வந்திருந்தது. களை எடுப்பவர்களும் கொண்டு வந்த கஞ்சியைக் குடிக்க பக்கத்துக்கு நிழல்களில் ஒதுங்கினார்கள். "கைகளை கண்களுக்கு அடக் கொடுத்து பார்த்த கருத்தான் ஆலமரத்தடியில் பொசலி சாப்பாட்டுக் கூடையோடு இருப்பதைப் பார்த்ததும், அக்கா சொன்னது வீரம்மக்கா சொன்னது எல்லாம் மனதுக்குள் மீண்டும் ஓட ஆரம்பித்தது,மம்மட்டியை தோளில் போட்டுக்கொண்டு நடக்கத் துவங்கினான். "இன்னக்கி பொசலிகிட்ட ரெண்டுல ஒன்னு கேக்கணும்" என்று பாதிக் குழப்பத்தோடும் மீதிக் கோபத்தோடும் போனான்.

போனவன் மரத்தடியில் சாப்பாட்டுக் கூடை மட்டும் இருக்க பொசலியைக் காணாமல் அக்கம் பக்கம் பார்த்தான். ஆலமரத்துக்கு அந்தப்புறம் இருந்து பொசலி பேச்சுக்குரல் கேட்டது, கூடவே ஒரு ஆண்குரலும் வர அதிர்ச்சியாகி நின்றான் கருத்தான், 

"ஆத்தே..எத்தனதடவ சொன்னாலும் கேக்க மாட்டியா? என்னப் பாக்க வராத, நீ சும்மா வந்து பேசிட்டு போனாளே வவுத்துல நெருப்ப கட்டிக்கிட்டு நிக்கிறேன், இதுல கையுல சேலத் துணியோட வந்து நிக்கிற. மாமா சாப்பாட்டுக்கு வர்ற நேரமாச்சு வெரசா போயிரு" என்றபடி நின்றாள் பொசலி 

இதைப்பார்த்ததும் கருத்தானுக்கு எங்கிருந்துதான் வந்ததோ அந்த ஆத்திரமும் கோவமும் "ஏண்டி..ஊருமேஞ்ச சிரிக்கி..இவங்கூட ஊரு மேஞ்சிட்டுத்தான் இங்க வந்து பத்தினி வேசம் போட்டுக்கிட்டு இருக்கியா? என்றபடி பொசலியின் முடியோடு சேர்த்துப் பிடித்து இழுத்து மரத்தடியில் தள்ளினான்.

இதைப்பார்த்ததும் அந்த இளைஞனுக்கும் கோவம் வந்து கருத்தானின் கையைப் பிடித்து பொசலியை அவனிடமிருந்து பிரிக்கப்பார்த்தான், இதைப்பார்த்ததும் கருத்தானுக்கு இன்னும் ஏறியது,அவனை ஒரே எக்காக எக்கி கீழே தள்ளியவன், அவனுக்கு எந்திரிக்க வாய்ப்பே கொடுக்காமல்அவன் நெஞ்சில் ஒரு காலால் மிதித்துக்கொண்டு கையில் இருந்த மம்மாட்டியால் அவன் கழுத்தில் இறக்கினான், நாள் முழுவதும் சகதிக்குள் ஊறி சாணம் ஏறிப்போய் கிடந்த மம்மாட்டியும் தொழிக்குள் நாத்து இறங்குவது போல இறங்கி கழுத்தை துண்டாக்கியது. 

இதைப்பார்த்த பொசலி "ஆத்தீ...குடி போச்சே...மாமா.." என்றபடி கழுத்து வெட்டப்பட்ட அவன் முண்டத்தை தன் மடியில் எடுத்துப் போட்டு அலறினாள். இதைப்பார்த்த கருத்தான் ஆத்திரமும் வெறியும் அடங்காமல் பொசலியைப் பிடித்து கீழே தள்ளி அதே மம்மாட்டியால் அவளையும் வெட்டினான். ஆனால் இந்தமுறை அவள் மேல் பாவப்பட்டோ என்னவோ மம்மட்டி அவள் கழுத்தில் பாதியோடு நின்றுவிட்டது!

ஆத்திரம் அடங்க மம்மட்டியை உருவி கீழே போட்டவன் சூழ்நிலை உறைக்க, அந்தப்பக்கம் கழுத்து இல்லாத முண்டமும் இந்தப்பக்கம் பாதி வெட்டுப்பட்ட கழுத்தோடு பொசலியைப் பார்த்தவன் பிரமை பிடித்து நின்றான், கம்மாய் வெள்ளத்தையே பார்த்துப் பழகிய கம்மாக்கரையும் ஆலமரமும் ரத்த வெள்ளத்தைப் பார்த்து நின்றன. அப்போது பொசலி ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சம் உசுரோடு கருத்தானைக் கையசைத்துக் கூப்பிட்டாள், அனிச்சையாக அருகே போன கருத்தானிடம் 

"தப்பு பண்ணிட்டியே மாமா...தப்பு பண்ணிட்டியே... வயித்துல நம்ம வாரிசு வந்துருச்சுன்னு சொல்ல வந்த என்னைய இப்படி வேரோட சாச்சிபுட்டியே மாமா.. " என்று வாய் வழியே வந்த காற்றோடு கலந்து அலறினாள்.

இதைக்கேட்டதும் கருத்தானுக்கு எல்லாம் மறந்தது.. " அய்யோ.. என் வாரிச நானே எங்கையால கொன்னுட்டனே, கள்ளப் புருஷன் தேடற அளவுக்கு ஒனக்கு என்ன புள்ள கொற வச்சேன்? நம்மவம்சத்துலே நடக்காத ஒன்ன எங்கையால நடத்தி வச்சிட்டியே? ஒவ்வொருத்தரும் சொல்லும்போதெல்லாம் நான் நம்பலயே.. எம் பொசலி அப்பிடி பண்ணமாட்டான்னு நெஞ்ச நிமித்திகிட்டு திரிஞ்சேனே! கடசில இந்தக் கருமத்த என் கண்ணாலேயே காண்க வச்சிட்டியே.. சொல்லு புள்ள..ஏன் இப்பிடி பண்ணுன?" என்று கதறினான்.

இதைக்கேட்ட பொசலிக்கு கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது, மெதுவாக இழுத்து இழுத்து பேசினாள் "ஆளாளுக்கு சொல்லும்போதே எங்கிட்ட ஒருவார்த்த கேட்டுருக்கப்படாதா மாமா? யார நீ கள்ளப்புருசன்னு சொன்னியோ.அது வேற யாரும் இல்ல மாமா, எனக்கு அண்ணன் மொற வேணும், கூடப் பொறக்கலதான், ஆனா ஒரே ரத்தம்தான்...." என்று கூறியவள் பேச முடியாமல் திணறினாள், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்

 "அது என் அப்பனுக்கு மொத தாரத்துப் புள்ள, கல்லாணம் ஆயி அண்ணன் பொறந்த கொஞ்ச நாள்லே புள்ளைய தூக்கிகிட்டு வெட்டிக்கிட்டுப் போயிருச்சு பெரியாத்தா, என்ன எதுக்குன்னு தெரியாது, அப்பல இருந்தே அப்பனுக்கு அவங்க ஆகாது, ஆத்தாள கட்டி நான் பொறந்ததுக்கு பின்னாடி அப்பன ஆத்தாளையும் மீறி அண்ணங்கிட்ட பேச ஆரம்பிச்சேன், அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தெரிஞ்சு பேச கூடாதுன்னு சொன்னாங்க, ரத்த பாசம் சுளுவா போயிருமா? தெரியாம வந்து வெசாரிசிட்டு போவும், இப்பவும் பொங்கலுக்கு சேலத் துணி கொடுக்க வீட்டுக்கு போயிருக்கு, நான் இங்க வந்தத தெரிஞ்சு இங்க வந்து கொடுக்க போது நீ பாத்து... என்று மேல்மூச்சு வாங்க ஆரம்பித்தாள்.. 

பொசலியை தூக்கி மடியில் போட்டுக்கொண்ட கருத்தான்."என்ன புள்ள சொல்லுற? அண்ணங்கூட பழகினதையா தப்பா நெனச்சு வெட்டுனேன்? எம்புத்தி ஏம்புள்ள இப்பிடி போச்சு? எங்கிட்ட சொல்லியிருக்கப்புடாதா? யாரு என்ன சொன்னாலும் நான் வீட்டுல கூப்புட்டு விருந்து வச்சுருப்பனே.."என்று கதறினான் 

இதற்குள் தகவல் பரவி ஊர் சனம் கம்மாக்கரையில் கூடியது காலையில் வத்தி வைத்த வீரம்மக்கா உட்பட..

பொசலியின் கழுத்து வழியே வழிந்த ரத்தம் கருத்தானின் வேட்டியை நனைத்தது, பொசலியின் வாய் அசைவதை பார்த்து அவள் முகத்தைப் பார்த்தான் " நீ வச்ச பொட்டோட, நீ கட்டுன தாலியோட... நீ குடுத்த வாரிசோட.. உங்கையால உம்மடியிலயே போறேன்ன்ன்ன் மாமாமாமா... " என்றவளின் பார்வை நிலைக்குத்தியது!

"பொசலிஈஈஈஈஈ......" கதறினான் கருத்தான்

மெதுவாக அவளை கீழே இறக்கியவன்...முண்டமாக கிடந்த அவள் அண்ணனின் அருகே கிடத்தினான், ஊர் மொத்தமும் செய்வதறியாமல் திகைத்து நின்றது, திகைத்து நிற்கும் போதே கூட்டத்தில் ஒருவன் வைத்திருந்த அருவாளைப் பறித்த கருத்தான் கூட்டத்தைப் பார்த்து ஆக்ரோசமாகக் கத்தினான் "இனி இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வரும் அத்தன பத்தினிகளுக்கும் பாவம் பழிச்சொல்லில் இருந்து நாங்கதான்டா காவல்" என்று அலறியவாறே ஒரு கையால் உச்சி முடியைப் பிடித்துக்கொண்டு தன் கழுத்தில் அருவாளை இறக்கினான்! வெட்டப்பட்ட கழுத்தை பொசலி காலடியில் போட்டுவிட்டு முண்டமாக அவள் மீது விழுந்தான் கருத்தான்!

2013 டிசம்பர் 


அந்த கண்மாய்க் கரையில் புதிதாகப் போடப்பட்ட தார்ச் சாலையில் ஊர்ந்து வந்த இன்னோவா கருப்பையாவின் வழிகாட்டலில் சரியாக அந்த ஆலமரத்தடியில் நின்றது! அனைவரும் காரைவிட்டு இறங்கி பொருட்களை இறக்குவதில் மும்மரமாக மருமகள் மட்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த ஆல மரத்தடியில் மூன்று நடுகற்கள் நடப் பட்டிருந்தது.அதன் மேல் காய்ந்த மாலைகள்!வலதுபுறம் உள்ள கல்லில் சேலை சுற்றியிருந்தது! பொசலி!  நடுவில் உள்ள கல்லுக்கு நேராக அருவாள்கள் வரிசையாக நட்டு வைத்திருந்தனர்! கருத்தான்! மனதுக்குள் படம் விரிந்தது மருமகளுக்கு! இடதுபுறம் உள்ள கல் இந்த இரு கற்களையும் பார்த்தவாறு நடப்பட்டுருந்தது! பொசலியின் அண்ணன்! அவளை அறியாமல் கையெடுத்து வணங்கினாள் மூன்று பேரையும்! அதைப் பார்த்துக் கொண்டிருந்த கருப்பையாவும் திருப்தியோடு வணங்கினார்!