ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 30 December 2013

போட்டிச் சிறுகதை-53


சிறுகதை-ரிஜிஸ்டர் நம்பர்


"நான் போயிட்டு வரேன் மா..." எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய்.

"ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு  எல்லாம் எடுத்துகிட்டியா ???" - அவன் அம்மா.

"ஆங்... "

" சரி. பத்திரமா போயிட்டு வா.."

கிளம்பும் முன் பாண்ட் உள் பக்கெட்டில், வீட்டில் டப்பாவிலிருந்து 'சுட்ட' நூறு ரூபாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டான். மனதில் நமுட்டு சிரிப்புடன், சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

"ஒன்பதரைக்கு ஒரு ஷோ ; அதைவிட்டா ஒரு மணிக்கு ஷோ.. அம்பதும், முப்பதும் ஒரு எண்பது.. அது ஒரு தொண்ணூறு, நூத்திஇருபது ... ஹ்ம்ம்.... இது போதும்", என மனதில் கணக்கு போட்டப்படியே  சென்றுகொண்டிருந்தான்.

சைக்கிளை மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள 'கல்யாண் சைக்கில் ஸ்டாண்டில்' போட்டு விட்டு, ஸ்டேஷன் உள்ள சென்று ரயில் ஏறினான்.

மீனம்பாக்கத்தில் ரயிலேறி தாம்பரத்தில் இறங்கி, 'ரோஜா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' எதிரே அவனுடைய கல்லூரி பேருந்தில் தினசரி எட்டு மணிக்கு ஏறி கல்லூரி செல்வது அவன் வழக்கம்.

ஆனால் இன்று,  தினசரி அட்டவணையிலிருந்து சிறு மாற்றம். இன்று  காலேஜுக்கு போக அவனுக்கு மனசில்லை. 'கட்' அடித்துவிட்டு, தாம்பரம் எம்.ஆர். தியேட்டரில் "விருமாண்டி" படம்  பார்த்து விட்டு, மதியம் சாப்பாட்டுக்கு அங்கேயே பன்னோ, பப்ஃபோ எதோ ஒன்று தின்றுவிட்டு, அப்படியே ரயில் ஏறி தாம்பரம்- மவுண்ட் வரை மாறி மாறி போயிட்டு வந்து டயம் பாஸ் செய்துவிட்டு, வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடலாம் என திட்டம் திட்டி இருந்தான். இது அவனுக்கு புதுசு தான். இருந்தாலும், ஒரு சேஞ்சுக்கு முதல் தடவையாக காலேஜ் கட் அடித்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடியது.

ரயில்  பல்லாவரத்தை அடந்த போது, எதோ யோசித்தவனாய், திடீரென  பிளாட் பாரத்தில் இறங்கி ஒரு ஓரமாக பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான்.

"மணி ஏழே முக்கால் தான் ஆகுது.. இன்னும் நெறைய டைம் இருக்கு. கொஞ்சம் கழிச்சி போகலாம் ." என எண்ணி கொஞ்ச நேரம் ரயில்வே பெஞ்சை தேய்த்தான்.

"இனிமே யாரவது லீவு போடணும்னா, முன்னாடியே ஆபிஸ் ரூம்ல பாலு சாருக்கு போன் பண்ணி சொல்லிடனும். இல்லேன்னா முப்பது ரூபாய் பைன். கம்பல்சரி!" - போன வாரம் வகுப்பில் வந்த சர்குலர் அவனுக்கு தீடீரென ஞாபகம் வந்தது.

முக்கால் மணி நேரம் கழித்து எதோ யோசித்தவனாய், ரயிலேறி தாம்பரதிற்கு கிளம்பி  சென்றான். தாம்பரம் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு பி.சி.ஓ -வில், ஐ.டி கார்டு பார்த்து காலேஜ் அட்மினுக்கு டயல் செய்ததான்.

" ஹலோ! பாலு சாரா ! என்னோடைய பையன் பேரு விஜய் ஆனந்த். அவனுக்கு உடம்பு சரியில்லை. அதனால இன்னக்கி காலேஜ் வர மட்டான் சார்."

"நீங்க யார் பேசுறது???"

"நான் விஜயோட பாஃதர் பேசுறேன்  சார்."

"ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த டிபார்ட்மெண்ட் ? "

"ஐ.டி. செகண்ட் இயர் சார்."

"எந்த செக்ஷன்? "

"..அஅஅ...து  தெரியலையே.."

"ஏங்க ! உங்க பையன் எந்த செக்ஷன் கூடவா தெரியாம இருப்பீங்க ??? "

"வந்து.. அ..அவன்.. ஐ.டி. 'பி' செக்ஷன் சார்.."

"ம்ம்ம்.. உங்க பையன் ரிஜிஸ்டர்  நம்பர் சொல்லுங்க.."

"4...1...9...0...3...2...0...5...0...7..4.. "

"5...0.... ????? "

"....5074 சார்."

"ம்க்கும்...  எந்த பாரான்ட்சு-க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் இவ்வளவு மனப்பாடமாக தெரியும்..?"

"என்னது சார்.?!?!? "

"ம்ம்ம்....சொல்லுங்க..."

" ........................................  "

"நீங்க யார்பேசுறதுனு சொன்னீங்க ??? "

"விஜய்....... பாஃதர் சார்....."

"சொல்லுங்க சார் ... எந்த பாரான்ட்சு-க்கு சார் பையனோட ரிஜிஸ்டர் நம்பர் மனப்பாடமாக தெரியும் ?"

"ஆங்... போன் பண்ணா, என் ரிஜிஸ்டர் நம்பர் கேப்பாங்கனு என் பையன் சொன்னான் சார்..."

"பொய் சொல்லாதீங்க.. நீங்க ஸ்டுடெண்ட் தான் பேசுறீங்கன்னு நல்லா தெரியுது."

"இல்ல சார்.. அது வந்து......"

"ஒண்ணும் சொல்ல வேணாம். நீங்க நாளைக்கு காலேஜ் வாங்க. பார்த்துக்குறேன்..."

போன் துண்டிக்கப்பட்டது. யாரோ அவனை பளார்... பளார்... என செவிட்டில் அறைவது போல இருந்தது.


தலையில் அடித்து கொண்டு, செய்வதறியாது ஒரு பத்து  நிமிஷம் பி.சி.ஓ வாசலிலே நின்றான். இப்போது அவன் சினிமாவுக்கு போவதில் எண்ணம் செல்லவில்லை. வேறு வழியின்றி வீட்டுக்கு போக முடிவு எடுத்து, மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.