ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday, 29 December 2013

போட்டிச் சிறுகதை-51

சிறுகதை- பிற்பகல் திருட்டு

பிற்பகல் இரண்டு மணி. அந்த சிறிய கிராமத்தின் கடைத்தெரு வெறிச்சோடியிருந்தது. பெரும்பாலானோர் மத்தியானத் தூக்கத்தில் இருக்க, கடை வைத்திருந்த ஒரு சிலரும் வார மலர்களில் மூழ்கியிருந்தனர்.ரோட்டில் ஆளரவமே இல்லை.எதிரே வந்த கவர்ன்மெண்ட் பஸ் ஒரு 60+ ஐ உதிர்த்து ஊரும்ம்ம என்றவாறே ஊர்ந்தது.நான் எனது கடையில் வலது மூலைச்சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு சாப்பிட போலாமா..வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்.பஸ் ஸ்டாண்டை ஒட்டி இடது புறம் சற்று அழுத்தமாக எட்டு வைத்து நடந்து போய்க்கொண்டிருந்தவளை அப்போதுதான் பார்த்தேன்.பார்வை அவள் மேல் விழுந்தது. அவள் முகம் ஏதோ யோசனையில் இருப்பதாக தோன்றியது. மூக்கை அடிக்கடி சீலைத்தலைப்பால் துடைத்து கொண்டாள். ஏதோ தீர்மானம் செய்தவள் போல் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவளிடம் மெதுவாகியது.நான் சாவகாசமாக அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வண்டியின் பின்புறம் உக்கார்ந்திருந்தவன் அவள் மேல் நேரே கையை கொண்டு வந்தான். நான் சற்று நிமிர்ந்தேன். அவன் சட்டென அவள் மேல் படர்ந்து தொங்கிக்கொண்டிருந்த அவள் சங்கிலியை பிடித்து சட்டென மேல தூக்க அவள் அனிச்சையாக அவன் கையை பிடிக்க அவன் செயினை கழட்டியவாறே அவள் புடனியில் கை வைத்து தள்ள அவசரமாக கீழே விழுந்தாள்.பதற்றத்தில் செயினு செயினு டேய்ய்ய்ய்ய்ய்... எனக் கத்தினாள். நான் அவசரமாக எழுந்து கடையைவிட்டு வெளியே வருவதற்கும் ஹெல்மெட் அணிந்த அவர்கள் இருவரும் என்னை கடப்பதற்கும் சரியாய் இருந்தது. சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டன. கூப்பிட்டு கேட்கலாம் என்றாள் என்ன கேட்பதென்று தோன்றவில்லை. எல்லாவற்றையுமே நானே பார்த்ததாயிற்றே அவளை பார்க்கவே பாவமாய் இன்னுமும் விசும்பியவாறே போய்விட்டாள். அமைதியான குளத்தில் போட்ட கல்லாக சில நொடி பரபரப்பிற்கு பின் பழைய நிலைக்கு திரும்பிய தெருவில் யாரும் அவள் குறித்து கவலை பட்டதாய் தெரியவில்லை அண்ணாச்சிக்கு நடந்தது என்னவென்றே தெரியாமல் கடையின் வெளியே கையில் வாரமலருடன் நின்றுகொண்டிருந்தான்.எனக்கு பதட்டமாகவே இருந்தது.நான் உடனடியாக போலீஸ்க்கு போன் பண்ண வேண்டுமென தோன்றியது. வண்டி நம்பரை கூட நோட் பண்ணவில்லையே.கருப்பு கலர் என்ன வண்டி ஹீரோ ஹோண்டா போல தெரிந்தது. 100 க்கு அழுத்தினேன்.

“ஹலோ..போலீஸ் கண்ட்ரோல் ரூம்”
ஹலோ சார் நான் குறிச்சி ல இருந்து பேசறேனுங்க...எங்க ஊர்..
“எந்த ஊரு...?
“கோயமுத்தூருங்க”.. சார் எங்க ஊர்ல....
“கொஞ்சம் லைன்ல இரு...”
“ஹலோ B9,,,,”
சார் நா குறிச்சில இருந்தே பேசறேனுங்க எங்க ஊர்ல ஒருத்தன் செயின அத்துட்டு போய்ட்டாணுங்க.. புடிக்க பாத்தமுங்க முடிலீங்க...
“செயின் ஸ்நாட்ச்சிங்கா”
“ஆமாங்க...”
உன் பேரு என்ன...
“ரவிங்க... ” இங்க சைக்கிள் கடை வெச்சுருக்கேனுங்க..
வர சொல்றேன் எந்த ஊரு...?
“குறிச்சிங்க.... ” சரவனம்பட்டி பக்கத்தாலே.

   ள்ளி வேக வேகமாய் நடந்து கொண்டிருந்தாள்.7 மணி நேரம் உழைத்த களைப்பு ஆயாசம் அவள் கண்களில் தெரிந்தது. கச கச வென வியர்த்திருந்தாள். போனவுடனே குளிக்கணும் இந்த ஆளு வேலைக்கு போய்ருப்பானா.. இல்ல இனிக்கும் சூதுக்கு போய்ருப்பானோ.. அதை நினைக்கையில் அடி வயிறு கொஞ்சமாக கவ்வியது.ஏற்கனவே ரெண்டுல ஒண்ணை வளக்க முடியாம தங்கச்சிக்கிட்ட இருக்கு. இதுல இவள அடுத்த வருஷம் பள்ளிக்கூடம் வேற சேத்தோனும். பொழக்க வந்த ஊர்ல இந்த ஆளு இப்பிடி சூதுக்கு போயிட்டுருந்தா குடும்பம் வெளங்குமா.... என பலவாறே யோசித்தவாறு குத்திய தலையை சற்று நிமிர்ந்தேன். மோட்டார் சைக்கிளில் ரெண்டு பேர் எல்மெட் போட்டுட்டு பின்னால இருப்பவன் கை என்னை நோக்கி நீளுது. அதிர்ச்சியுடன் அனிச்சையாக கையை தூக்கினேன்.சட்டெனே அவன் என் கழுத்தில் இருந்த சங்கிலியை தொட்டு தூக்க எனக்கு குப்பென உடம்பு சில்லிட்டது. பின் கழுத்தில் புரு புருவேன இருக்க பொடனியில் சட்டேர் என ஒரு அடி... கசங்கி கீழே விழுந்தேன். எழுந்து கதறுவதற்குள் போய் விட்டான். சுற்றிலும் ஆண்கள் நின்று வேடிக்கை பார்க்க ஆறுதலுக்கு கூட ஒருத்தி இல்லாமல் “மீனாச்சியம்மா உனக்கு நான் என்ன பாவம் பண்ணன்.” இந்தாளுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவானோ..

வீட்டில் தான் இருக்கிறான்.ஐயையோ.... அழுதவாறே.... உள்ளே நுழைந்து அனைத்தையும் சொல்ல.., மவுனமாக கேட்டவன் சரி சாயங்காலம் போலீஸ்க்கு போகலாம் என பொறுமையாக சொன்னது வியப்பாக இருந்தது. ஏனோ அமைதியாகவே இருந்தான்.

யாரு வண்டினா அது...? என கேட்டபடியே மேன்சன் ஹவுசை ஊற்றினான் கனகு.

காளப்பட்டிக்காரன் வண்டி என்றான் பால்ராசு.

இன்னொரு ரவுண்டு ஊத்து... பரதேசி பஞ்சம் பொழக்க வந்த நாயிக்கு என்ன ஒரு திமிரு தெரியுமாடா....

ஏன்னே, அந்த கணேசன் அவ்ளோ நல்லா சூதாடுவானா..?

டேய்., அந்த தே... பையன பழக்குனதே நானு...

அண்ணே நீ சும்மா வாடா கொஞ்ச நேரம் வண்டி ஓட்டுன்னு சொல்லும்போது சும்மா தான் கூப்டரீன்னு நெனச்ச. இப்பிடி பண்ணுவீன்னே தெரில  எனக்கு பதட்டமாயிருச்சு...

டேய், இதுக்கே பயந்தா எப்பூடி அந்த தா.... ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவன  கொன்னாத்தான் ஆத்திரம் எனக்கு தீரும். எச்சக்கல., அவன சூதுக்கு கூட்டிட்டு போயி பளக்குனது நானு. உள்ளூர்க்காரன் என்னையே ஏமாத்தி பிராடுத்தனம் பண்றான்னா அவனுக்கு என்ன ஒரு தெகிரியம் இருக்கோனும். அங்கயே கொடுவாள கழுத்துல வெச்சுருப்பன்... பொசுக்குன்னு கால்ல உழுந்துட்டான். காச திருப்பி தரேன்னு சொல்லிட்டு இன்னிக்கு ஊருக்கு ஓடிப்போக பிளான் பண்ணிருக்கான். அதான் என்ன பண்ணலாம்னு யோசன பண்ணிட்ருந்த அவன் பொண்டாட்டி கம்பெனியில இருந்து நடந்து  வரத அப்பதான் பாத்தன். மதுரக்காரிதானே.. நல்ல பெரிய நீளமான சங்கிலி. எப்பிடியும் மூணு பவுன் தேரும். இழுத்து அக்கர வேலைலாம் இருக்காது. தூக்குனா கழ்ண்டுக்கும். பாத்தன். தூக்கிட்டன்.

இறுதி ரவுண்டை முடித்தவுடன் இருவரும் தள்ளாடியபடியே எழுந்தார்கள்.
சிகரெட்டை பற்ற வைத்தான்....

கனகு, இந்த ரெண்டு ஹெல்மட்டையும் சட்டையையும் அங்க போயி கொஞ்சம் பெட்ரோல ஊத்தி பத்த வெச்சிட்டு வந்துரு...


சட்டைக்குள் கை வைத்த அதை இறுகப்பற்றியவாறே சாய மரத்தின் பின்புறம் அமர்ந்திருந்த கணேசன் அவர்கள் இருவரும் எழுந்து பின்னர் ஒருவன் விலகுவதை கண்டு மெல்ல அவனை நெருங்கினான்.