ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday, 15 December 2013

போட்டிச் சிறுகதை-21

சிறுகதை- அமானுஷ்யம்


                         "அம்மா, இந்த பேய், பிசாசு எல்லாம் சுத்த ஹம்பக் ன்னு என் பிரண்ட் வினோத் சொல்றாம்மா.. பேய் பிசாசெல்லாம் நிஜமாவே இருக்கா, இல்லையா" சமையல்கட்டில் மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்த காமாட்சிக்கு பகீர் என்றிருந்தது.. ஏற்கனவே தன் கணவன் துஷ்ட சக்திகளுடன் பேசுவது, ஜீனியை வரவழைப்பது என வயிற்றில் புளியை கரைக்கும் பல சித்து வேலைகளை செய்து வருகிறான்.. இன்று தன் மகன் அது சம்பந்தமான கேள்வியை கேட்டதும் கொஞ்சம் ஆடித்தான்  போனாள். "போடா, பரீட்சை பக்கம் வந்திடுச்சு.. போய் படி" என்று அதட்டினாள். " பேய் இருக்கா இல்லையான்னு சொல்லும்மா.. நான் போய் படிக்கிறேன்" என்று அடமாக நின்றவனின் முதுகில் ஒன்று போட்டாள். அவன் அழுது கொண்டே தன் அறைக்குச் சென்றான்.

                          அன்று ஒரு பவுர்ணமி இரவு. இரண்டாவது மாடியில் நட்சத்திர கட்டங்களும் அதைச் சுற்றி பூக்களங்களும் அமைக்கப்பட்டு அன்றிரவு பூஜைக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தான் மாசாணி (பெற்றோர் இட்ட பெயர் வேறு எதுவோ, ஆனால் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பெயர் இது). இவனுக்கு பெண் கொடுக்க ஊரில் எல்லோரும் தயங்கிய போது இவனுடைய மாமா தன் பெண்ணை தைரியமாக தாரை வார்த்துக் கொடுத்தார். அவனும் மனைவியை சிறப்பாய் கவனித்துக் கொண்டாலும், அவனுடைய இந்த சித்து விளையாட்டுகள் காமாட்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பலமுறை எடுத்துச் சொன்னபோதும் அவன் கேட்பதாய் தெரியவில்லை.அன்றும் எதேச்சையாய் மாடிக்கு வந்தவள் இவன் ஏற்பாடுகளைப் பார்த்து கோபமுற்றாள்..

                           "பாவி மனுஷா, உனக்கு பல முறை சொல்லிட்டேன். இது நமக்கு வேணாம்னு. எப்பதான் நான் சொல்றத கேப்பியோ? இந்த பேய் பிசாசெல்லாம் விட்டுட்டு சாமி மேல நம்பிக்கை வை. நமக்கு என்ன கொறச்சல், ஆசைக்கும் ஆஸ்திக்குமா ஒரு பையன் இருக்கான். எங்க அப்பாரு சீதனமா கொடுத்த பணத்த வச்சு வியாபாரம் பண்ணி நாம சந்தோசமா வாழலாம். நான் சொல்றத கேளுய்யா.. இன்னைக்கு நம்ம புள்ள என்கிட்டே பேய் பிசாசெல்லாம் இருக்கான்னு கேட்டான்.. எனக்கு பகிர்ன்னு ஆயிடுச்சி.. வேணாம்யா இது.."   என்ற கண்ணீரால் மொசைக் தரையை நனைத்துக் கொண்டிருந்தவளை உள்ளுக்கு இழுத்து கதவை சாத்தினான்.. "புள்ள கேட்டுறப் போறான். சத்தம் போடாம இரு.. இன்னைக்கு பவுர்ணமி பூசை முடிச்சுட்டா நம்ம பையன் ஓஹோன்னு வருவான். அவனுக்காக தாண்டி நான் இவ்வளவு கஷ்டப்பட்டு பூசையெல்லாம் செய்யுறேன்.."

                          "இன்னைக்கு எனக்கு தொணைக்கு உக்கார எப்பவும் வர்ற சீதாராமன் வரல.. நீதாம்புள்ள இருக்கோணும்." அவளுக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் கணவனின் பேச்சை இதுவரை தட்டியதில்லை. அவன் சொல்லுக்கு மேல் என்றும் நடந்ததில்லை. அவன் சொன்னபடியே பூக்களத்தின் அருகே அமர்ந்தாள். அப்போதுதான் கவனித்தாள் அந்த நட்சத்திர மந்திரக் கோடுகளுக்கு நடுவே பரப்பி வைக்கப்பட்ட கும்குமமும் ஒரு மண்டை ஓடும் இருந்தது. சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கு மூட்டை அசைவது தெரிந்தது. பயத்துடன் அவள் அதை பிரிக்க, உள்ளே இரண்டாவது தெருவில் சுற்றித் திரியும் ஒரு அனாதைச் சிறுவன். அவனுக்கு ஆறேழு வயதிருக்கும். அவன் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்தது.. அவள் சாக்கு மூட்டையை பிரித்ததை பார்த்த மாசாணி கோபப்பட்டு "கழுதே, சொன்ன வேலைய மட்டும் செய், இந்தப் பையன இன்னைக்கு ஆத்தாளுக்கு பலி கொடுக்கோணும்" என்று மீண்டும் கோணியை கட்டினான். அவளோ "பாவம்யா.. அனாத புள்ள, இப்படியெல்லாம் பண்ணாதே." என்று கெஞ்சினாள். அவள் சொற்களை உதாசீனப் படுத்திவிட்டு பூஜையில் அமர்ந்தான்.

                             நாக்கைத் தொங்கப் போட்டிருக்கும் ஒரு காளியின் படத்தை முன்னே வைத்து சில மத்திரங்கள் சொல்லிவிட்டு தான் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்திருந்த ரத்தம் கொண்டு மண்டை ஒட்டிக் கழுவினான். "நான் போய் கொஞ்சம் காட்டுமல்லி பறிச்சுட்டு வர்றேன்.. அதுவரைக்கும் இந்த மண்டை ஓட்டை சுத்தம் செய்து வை புள்ள.." என்று சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினான். அவன் வெளியேறியதும் சட்டென ஒரு யோசனை தோன்ற அவள் அந்த கோணியை பிரித்து சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு ஒரு நாயை பிடித்து உள்ளே கட்டி வைத்தாள்.அவன் வருவதற்குள் மண்டை ஓட்டையும் கழுவி வைத்தாள்.

                          வேகமான நடையுடன் காட்டு மல்லியுடன் வந்து சேர்ந்த மாசாணி கோணியை பார்த்தான். அதன் அசைவை உறுதி செய்து கொண்டு பின் மீண்டும் பூஜையில் அமர்ந்தான். விளக்குகள் அணைக்கப்பட்டு கற்பூரத்தால் மட்டுமே அந்த  அரை முழுவதும் ஒளி பரவியிருந்தது. சற்று நேரத்தில் அவன் மந்திரத்தை சொல்லச் சொல்ல ஒரு மெல்லிய காற்று அவளை உரசிச் சென்றதை உணர்ந்தாள். தெரு நாய்கள் ஊளையிடும் சப்தமும் கேட்டது. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மண்டை ஓட்டிற்கு அடியில் வைத்திருந்த ரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட ஒரு துணி தானாக விரிந்து கொண்டது. அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒன்று சேர பார்த்துக் கொண்டிருந்த காமாட்சிக்கு அடுத்து நடந்ததைப் பார்த்ததும் மயக்கமே வந்துவிட்டது.

                             காளியின் முன் பற்ற வைக்கப்பட்டிருந்த ஒரு கற்பூர ஜோதி தானாகவே நகர்ந்து அந்தத் துணியின் மேல் நின்றது. "அந்த கோணி எடுத்தா புள்ள" என்ற கர்ண கொடூர குரலில் தன் கணவன் சொன்னதை கேட்ட காமாட்சி ஓடிச்சென்று  கோணியை இழுத்து அவன் அருகே வைத்தாள். மறுநொடி ஒரு பெரிய அருவாளைத் தூக்கி, மனதில் ஜெபித்துவிட்டு கோணியை ஒரே போடாக போட்டான். காளி தேவி உதிரத்தில் குளிக்க, தன் முகத்தில் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்துவிட்டு கோணியை அவிழ்த்தபடியே காளியிடம் பேசினான். "தாயி, எம் புள்ளைக்கு வந்த கண்டத்த இந்த புள்ளைய கொண்டு போக்கிடு. இதோ நீ கேட்ட புள்ள தல" என்றவாறு கோணிக்குள்ளிருந்து தலையை எடுக்க அது நாய் தலையாய்  இருக்க கண்களில் மிரட்சியோடு தன் மனைவியைப் பார்த்தான்.. நடந்த விபரீதம் உணர்ந்து "தப்பு பண்ணிட்டேயே புள்ள.. ஆத்தா கோபம் நம்மள சும்மா விடாது" என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே "அம்மா" என்ற அலறலோடு அவள் மகன் படிக்கட்டுகளில் உருண்டு கொண்டிருந்தான்.



                                                      ***********************