ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday 8 December 2013

போட்டிச் சிறுகதை-12

சிறுகதை-தொலைந்துப்போனவன்             

கடைசியாக ஒருமுறை கேட்டப்பார்த்தால் என்னவென்று தோன்றியது கிரிதரனுக்கு. அவனது உடலில் பசியின் வலி முழுக்க பரவியிருந்தது. கைக்கால்களில் சற்று முன்பு பெய்திருந்த மழையின் ஈரம் அப்பியதில், அவை விறைத்துக்கொண்டு நின்றன. வயிறு உள்பக்கமாக ஒடுங்கிக்கொண்டே போனது. நேரமாக நேரமாக மனம் என்னவெல்லாமோ கற்பிதம் செய்துகொண்டது. சாலையில் அவனை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் ஏதோ சவ ஊர்வலத்தில் செல்வதைப்போல சாவகாசமாக சென்றுக்கொண்டிருந்தது மேலும் அச்சத்தை கிளறியது. உயிர் மெல்ல பிரிந்துக்கொண்டிருக்கிறதோ.
தொலைவில் சண்முகம் அண்ணனின் டீக்கடையில் இப்போது கூட்டம் அமோகமாக கூடியிருந்தது. முன்பே இரண்டு முறை “ஒரேயொரு குவளை தேநீர் கடனாக கொடுங்க, பொழுதுக்குள் சில்லறை கொடுத்துடுறேன்” என்று எவ்வளவோ கேட்டுப்பார்த்தும், சண்முகம் அண்ணன் “காசிருந்தா வா, கடன் மட்டும் கேக்காத”ன்னு ஒரேயடியாக சொல்லிவிட்டார். பசி அறியாது வளர்ந்தவர். தனது அப்பாவின் நிழலில் தவழ்ந்து எழுந்தவர். அதனால் உத்தரவுகள் மட்டுமே போடத் தெரியும் அவருக்கு. கோரிக்கைகளுக்கு அவரிடம் இடமில்லை.
டீக்கடையை மொய்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை தனது துவண்டு நடுங்கும் கால்களை ஊன்றி ஒருமுறை எக்கி நின்று பார்த்தான் கிரிதரன். இப்போது கேட்டுப்பார்ப்பதில் தப்பில்லை என்று தோன்றியது அவனுக்கு. கொடும் பசி எப்போது இயல்பை புரிந்துக்கொள்கிறது. கிரிதரன் டீக்கடையை நோக்கி நகரத் தொடங்கினான். ஏனோ சாலை நீண்டுக்கொண்டே போவதாக ஒரு நொடித் தோன்றியது. சொர்கத்துக்கு செல்லும் வழி. இல்லை நரகத்துக்கு தாவி ஓடும் பாதை. எதுவானாலும் போராடிப் பார்த்துவிடுவதென்று முடிவு செய்திருந்தான். பசியை விடவும் பெரிய போராட்டம் எதுவாக இருக்க முடியும்?
“அண்ணே, ஒரேயொரு கிளாஸ் டீக் கொடுங்க... கொஞ்ச நேரத்துல காசு கொடுத்துடுறேன்..” உடலில் பரவியிருந்த பசியின் வலி, இப்போது முகத்துக்கு ஏறியிருந்தது.   
“ஏம்பா... சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியா.. எத்தன தடவ சொல்றது... காசிருந்தா வா.. இல்லன்னா நடைய கட்டு.. சும்மா காலைலயே கழுத்து அறுக்காத”
அறுபடுவது கிரிதரனின் கழுத்துதான் என்றாலும், செயற்கை வலியை சண்முகம் அண்ணன் கக்கிக்கொண்டிருந்தார். கையில் காசில்லாதவனுக்கு ஒரு கிளாஸ் டீக்கூட கருணை காட்டுவதில்லை. கிரிதரன் உடல் கூச சில நொடிகள் அவர் முகத்தை பார்த்து அங்கேயே நின்றிருந்தான். சிறிதளவு கருணை, மெல்லிய சிரிப்பு, குறைந்தபட்சம் பொய்யான அன்பு என கிரிதரன் எதிர்பாராத எதுவுமே அவரது முகத்தில் இல்லை. நேரமாக நேரமாக கடுமைதான் கூடிக்கொண்டே போனது. இனிமேலும் அங்கு நிற்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த கிரிதரன் மெல்ல அங்கிருந்து நழுவ முற்பட்டபோது, அவனது முதுகுக்கு பின்னாலிருந்து ஒரு குரல் அவனை தழுவி நிறுத்தியது.
“யாரது.. நம்ம கிரிதரனா.....?“
ஏதொயொரு இனம் புரியாத உள்ள கிளர்ச்சி அந் நொடியில் கிரிதரனின் மனதில் பற்றிக்கொண்டது. வெகு காலத்திற்கு பிறகு, தனது பெயரை யாரோ கூவி அழைத்தது அவனது காதுகளில் சக்கரையாக இனித்தது. அதுவும் உறவற்ற இந்த ஊரில். நிச்சயமாக அந்த குரல் அழைப்பது தன்னைத்தான் என்று மீண்டும்மீண்டும் மனதில் சத்தியம் செய்துக்கொண்டான். அவனுக்கு பின்னால் நாற்பதை நெருங்கும் வயதுடையவர் ஒருவர் நின்றிருந்தார். பார்த்ததும் சட்டென்று அவரது உருவத்தை நினைவுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றாலும் அவருக்கு தன்னை தெரிந்திருக்கிறது எனபதே பேச்சுக் கொடுக்க போதுமானதாக இருந்தது. 
“ஆமாங்க கிரிதரன்தான்... நீங்க யாருன்னு சட்டுன்னு  பிடிபடலையே...” கண்களை விரித்து நெளித்து பார்த்தும் அவனால் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை.    
“என்ன தெரியலையா...? நாந்தாம்பா வரதராஜன்.... அய்யாகிட்ட நீ வேலை செய்யும்போது... அவர பாக்க அடிக்கடி வருவேனே...”
கிரிதரனுக்கு சட்டென்று நினைவுகள் சுழலத் துவங்கின. நெற்றியில் அப்பிக் கிடந்த விபூதிப் பட்டையும், காதுகளில் புடைத்துக்கொண்டு நின்ற மயிரும், உடைந்து ஒழுகும் அவரது குரலும் கிரிதரனுக்கு பரீட்சயமானதுதான், என்றாலும் முகம் சரியாக இனம் கண்டுக்கொள்ள முடியாததாக இருந்தது. சர்வ நிச்சயமாக மனித இனம்தான் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. ஒருவேளை பசியால் கண்கள் இருட்டிக்கொண்டிருக்கலாம்.
“சார்... உங்கள சரியாக அடையாளம் தெரியல... ஆனா பார்த்த மாதிரித்தான் இருக்கு... தப்பா எடுத்துக்காதீங்க... பசி வயித்த கிளறுது.. ஒரேயொரு டீ வாங்கிக் கொடுங்களேன்....”
கிரிதரன் இப்படி சட்டென்று கேட்டுவிட்டதில் வரதராஜனுக்கு சங்கடமாகிவிட்டது. அவனை கையை இறுகப் பற்றியவர்
“வாப்பா.... டிபன் சாப்பிடலாம்... “ என்று சொல்லி இழுக்கவும், கிரிதனுக்கு மனம் கனத்து கண்களில் ஈரம் கசிந்தது. எதுவும் பேசாது அவர் கைச் சூட்டில் முழுவதும் கரைந்து அவர் பின்னாலேயே சென்றுக்கொண்டிருந்தான். சில்லறையற்று நின்றுக்கொண்டிருந்த தனக்கு சாப்பாடு வாங்ககொடுக்க முன்வருகிறாரே என்று அவர் மீது அன்பு பொங்கியது. உயிர் தெழுதல் எனபது இதுதானோ. 
ஓலைக் கூரையால் வேயப்பட்டிருந்த ஒரு சிறிய ஹோட்டலை இருவரும் அடைந்தார்கள். சூடாக நான்கு நான்கு இட்லிகள் இருவருக்கும் பரிமாறிப்பட்டத்து. கிரிதரன் நொடியும் தாமதிக்காமல் இட்லியை பிய்த்து திண்ண துவங்கினான்.
“எவ்ளோ நாளாப்பா... இந்த ஊர்ல இருக்க.....?”
“அது சரியா தெரியலைங்க.... ஆனா ரொம்ப நாளா இங்கதான் இருக்கேன்... அய்யா போனதுக்கு அப்புறம்... நமக்கு அந்த ஊர்ல எந்த வேலையும் இல்லையே...அவர விட்டா நமக்கு வேற நாதி...அதான் அப்படியே இந்த பக்கமா ஏதாவது செஞ்சு பொழப்ப ஓட்டலாம்னு வந்துட்டேன்“
“அதுவும் சரிதான்.... அய்யாவ விட்டா அங்க பொழைக்க வேற வழி ஏது..? நீ ஒரு நாவல் எழுதணும் சொல்லிக்கிட்டு இருந்தியே.. அது எந்த நிலைல இருக்கு...?”
வரதராஜன் இப்படி கேட்டதும்தான், அவரை யாரென்று கிரிதரனால் சரியாக நினைவுப்படுத்திக்கொள்ள முடிந்தது. வியர்வையில் ஊறிய விபூதி அலங்கரிக்கும் அதே வட்ட முகம். கூரிய கண்கள். மயிர்கள் அடர்ந்த கைகள். நிச்சயமாக அவரேதான். 
கிரிதரன் முன்பு அய்யா என்பவரிடத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தான். அய்யா ஒரு எழுத்தாளர். மனிதநேயம் மிக்க கதைகள் அவருடையவை. ஆளும் மனிதர்களை மதிக்க தெரிந்தவர்தான். அதனால்தான் தினசரி பத்திரிகையொன்றில் மாதம் ஐநூறுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை அழைத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டார். அவருக்கு வயது எழுபதை நெருங்கிக்கொண்டிருந்ததால், விரல்கள் அவருக்கு இசைவு காட்ட மறுத்தன. அதனால்தான் இப்படியொரு ஏற்பாடு. அய்யா சொல்லசொல்ல கிரிதரன்தான் அதனை எழுதிக்கொண்டிருப்பான். அய்யாவின் புகழை உயர்த்திய பல கதைகளுக்கு உயிரூட்டியவன் கிரிதரன்தான்.
அய்யாவுக்கு உறவென்று யாரும் கிடையாது என்பதால் கிரிதரன் அய்யாவின் நிழலைப்போலவே அவரோடு ஒட்டியிருந்தான். அவர் திருமணம்கூட செய்து கொள்ளாதவர். அதனால் அய்யாவுக்கும் இவன் மீது அலாதியான அன்பு இருந்தது. எப்போதும் “நீயும் ஒருநாள் பெரிய எழுத்தாளரா ஆகணும்டா” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். சொல்வதோடு மட்டுமில்லாமல் உலக புகழ் பெற்ற பல எழுத்தாளர்களை அவனுக்கு அறிமுகமும் செய்து வைத்தார். கிரிதரன் மெல்ல தனக்குள்ளாக ஒரு எழுத்தாளனாக தன்னை செதுக்கிக்கொண்டிருந்தான்.
அந் நாட்களில் அய்யாவை தேடி பலரும் அவரது வீட்டுக்கு வந்துசெல்வதுண்டு. இலக்கியம் குறித்து உரையாடவும், தங்களை உரமேற்றிக்கொள்ளவும் அடிக்கடி இப்படி வருவார்கள். பொழுதுகளற்று நீளும் உரையாடல்கள் அவை. அவர்களில் வரதராஜனும் ஒருவர். எப்போதுமே அவரது நெற்றியில் விபூதி அப்பியிருக்கும். கண்களில் ஒரு திராட்சை, ஒரு ஒளி. பேச்சில் பணிவு. அய்யாவுக்கு வரதராஜனை ரொம்பவும் பிடிக்கும். நிறையவே சொல்லி இருக்கிறார் கிரிதரனிடம். “ரொம்ப நல்லவன்டா.... “
நாட்கள் ஓட ஓட அய்யாவுக்கு உடல் நிலை ரொம்பவும் மோசமாகிக்கொண்டே இருந்தது. படுக்கையை விட்டு அவர் எழுவதே நிச்சயமில்லாமல் இருந்ததால் தன்னை அண்டி வாழும் கிரிதரனுக்கு ஏதேனும் செய்து விட வேண்டுமென்று தீர்மானமாய் இருந்தார். அந் நாட்களில் அய்யாவை தேடி வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டேப்போனது. எழுத்தாளர்களின் இறுதிகால பேச்சை யார்தான் கேட்டுக்கொண்டிருக்க முடியும். அதனால் திடீரென்று ஒருநாள் வரதராஜனை அவசராக அழைத்து,
“கடவுள நெருங்குற நாள் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.... நிறைய எழுதிட்டேன்.. இப்போ ரொம்ப களைப்பாக இருக்கு... நான் போகுறதுக்குள்ள இவனுக்கு ஒரு நல்லது பண்ணிடணும்னு பிரியப்படுறேன்... வரதா.. நீதான் பாத்துக்கணும் இவன... நாவல் ஒன்னு எழுதி வச்சிருக்கான்...ரொம்ப நல்லா வந்திருக்கு... “வேடிக்கை மனிதர்கள்”ன்னு தலைப்பு. இன்னும் ஒன்னும் எழுதிகிட்டு இருக்கான்... யாரையும் இப்ப என்னால நம்ப முடியல... தேடிப் போகவும் கூச்சமா இருக்கும். அதான் உன்கிட்ட சொல்றேன்... ஏதாவது பண்ணு...”
அய்யாவின் குரல் தழுதழுத்தது. வார்த்தைகள் வறண்டு காற்று மட்டுமே நொடிக்கொருதரம் வெளியேறிக் கொண்டிருந்தது.
“நம்ம கிரிய நான் பாத்துக்குறேன் அய்யா.... நீங்க ஏன் விசனப்படுறீங்க... உடம்ப பாத்துக்கோங்க..” என்று சொல்லி அய்யாவின் கைப்பிடியிலிருந்து நழுவிய வரதராஜன், கிரிதரனை நெருங்கி,
“அய்யா எல்லாத்தையும் சொல்லியிருக்கார்.... நீ ஒன்னும் கவலப்படாத... நான் பாத்துக்குறேன்... அய்யா கண்ணா மூடுறதுக்குள்ள... புக்க நாம பப்ளிஷ் பண்ணிடுவோம்..” நம்பிக்கை சொட்ட இதமாக பேசி கிரிதரனின் எழுத்தை வாங்கிக்கொண்டார்.
அய்யா கிரிதனினை வரதராஜனின் பொறுப்பில் ஒப்படைத்ததற்கும் காரணம் இருந்தது. வரதராஜனுக்கு பல பதிப்பாளர்களிடம் நேரடி பரீட்சயமிருந்தது. மேலும் கிரிதரன் அறிமுக எழுத்தாளன் என்பதால் அவனுக்கு அதிக சிரமம் கொடுக்க அய்யா விரும்பவில்லை.
அதன் பிறகு ஓரிரு நாட்களிலேயே அய்யாவின் மூச்சு அடங்கிவிட்டது. இறுதிக்கூட்டத்தில் கூட வரதராஜனை பார்த்ததாக கிரிதரனுக்கு நினைவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு அவனுடைய “வேடிக்கை மனிதர்கள்” அச்சாகிவிட்ட செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது. எழுதியது – வரதராஜன். கிரிதரனிடமிருந்து வார்த்தைகள் விலகி ஓடின. மானதில் வெறுமை அப்பிக்கொண்டது. அன்றோடு அவ்வூரிலிருந்து கிளம்பியவன்தான், அதன்பிறகு அந்த பக்கம் தலையைக்கூட காட்டவில்லை.
தனக்கு எதிரில் அமர்ந்திருந்த வரதராஜனின் முகத்தை ஒருமுறை கண்களால் துழாவிப் பார்த்தான் கிரிதரன். அதில் போலித்தனம் நிரம்பிக்கிடந்தது. கண்களில் ஒரு வன்மம். கறுத்த அவனது உதட்டில் பொய் ஊரிக்கொண்டிருந்தது.
“எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன் கிரி.... என்னால அந்த நாவல அச்சுக்கு கொண்டு வரவே முடியல..... அய்யா வேற உன்ன எப்படியும் கர செத்தே ஆகணும்னு சொல்லிட்டார்.... நீ பாட்டுக்கு பொட்டுன்னு சொல்லாம கொல்லாம போயிட்ட.... சரி விடு, கிரி. பழைய கத இப்போ எதுக்கு... அதான் என்ன பாத்துட்டல்ல... புதுசா எதுவும் எழுதியிருந்தா எடுத்துட்டு வா... உடனே பப்ளிஷ் பண்ண ஏற்பாடு செய்திடலாம்...”
கிரிதரனுக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டு வந்தது. வியர்வை திரண்டு உடலுக்குள் வழிந்து. மனம் வெடவெடக்க மெல்ல அங்கிருந்து எழுந்தவன்
“இதோ வந்துடுறேன் அண்ணா..” என்று சொல்லிக்கொண்டே அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறினான்.
தனது அடுத்த நாவலுக்கு கணக்குப்போட்டவனாய், நரி சிரிப்புடன் நீண்ட நேரம் அதே இடத்தில் அமர்ந்திருந்த வரதராஜனுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. கிரிதரன் மீண்டும் அங்கு வரவேயில்லை. அவன் அவ்வூரிலிருந்து என்றென்றைக்குமாக எப்போதே விடைபெற்றிருந்தான்.