ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday, 26 December 2013

போட்டிச் சிறுகதை-43

சிறுகதை- நாடற்றவளின் நாட்குறிப்பு


மலேசியாவிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை நாளிதழ்களிலும் ஜூன்லாவின் நாட்குறிப்புகளின் முக்கியமான பகுதிகள் வந்திருந்தன. அன்றைய தினத்தில் அவள் தான் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்தாள். அவள் சீனமொழியான மாண்ட்ரீனில் எழுதியிருந்த நாட்குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் நாளிதழ்களிலும் வெளியாகியிருந்ததை நானும் வாசித்திருந்தேன்.

           ஒரு பெண்ணின் மிகச் சாதாரணமான நாட்குறிப்புகள் அவளின் அகால மரணத்தின் பொருட்டு, ஒரு வசீகரத்தையும் சோபையையும் பெற்று, அவளே அன்றைக்கு எல்லோரின் பேசுபொருளாகி இருந்தாள்.  அவள் தன்னை நாடற்றவள் என்று குறிப்பிட்டிருந்தாள்.  

           ஜூன்லாவ் இறந்து போன தினத்தில் அவளை நான் சந்தித்திருந்தேன். என்னிடமும் அவள் இதே வார்த்தைகளை – தன்னை நாடற்றவள் என்று – குறிப்பிட்டிருந்தாள். என் கண்ணிற்கு முன்னால் தான் அவள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டாள். எதுவும் செய்ய முடியாதவனாக அதை நான் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தது.
           சென்னை போன்ற பெருநகரங்களில் இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக புழக்கத்திலிருக்கும் ’கராக்கே’ என்ற வார்த்தையை, நான் முதன் முதலில் தொண்ணூறுகளின் மத்தியில் மலேசியாவில் வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த போது தான் கேள்விப்பட்டேன். அந்த வார்த்தையின் அர்த்தத்தை நான் அறிந்து கொண்ட நாள் மிகவும் கிளுகிளுப்பாய் ஆரம்பித்து,  குரூரமான அனுபவமாய் அடி மனசில் தங்கி விட்டது.

           அன்றைக்கு வேலைத்தளத்தில் (Site) தரைக்குக் கீழே மூன்றாவது அடுக்கில் ராஃப்ட் சிலாப் (Raft Slab) கான்கிரீட் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. வேலை தொடங்கி, அதுதான் முதல் கான்கிரீட். ஸ்டீபன் பிளாங்க்  - எங்கள் காண்ட்ராக்டிங் கம்பெனியின் புராஜெக்ட் மேனேஜர் - அதைக் கொண்டாட வேண்டுமென்றான். அவர்களின் மொழியில் கொண்டாடுவது என்றால் கம்பெனி செலவில் மூக்கு முட்டக் குடிப்பது என்று அர்த்தம்.

           அவன் கான்கிரீட் முடிந்ததும் எங்காவது போகலாம் என்றான். எங்கு போகலாம் என்ற விவாதத்தில் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு ஆலோசணை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொதுவாய் இவர்களின் கொண்டாட்டத்திலெல்லாம் எப்போதுமே நான் கலந்து கொள்வதில்லை. அவர்கள் என்னை அழைப்பதுமில்லை. வேலை முடிந்தால் நல்ல பிள்ளையாக என்னுடைய அறையில் போய் அடைந்து கொள்வேன். அன்றைக்கு ஸ்டீபன் பிளாங்க் அதிசயமாக “காதீ – கதிரேசன் என்கிற என் பெயரை அவன் அப்படித்தான் அழைப்பான் – நீயும் எங்களோடு வருகிறாயா?” என்றான்.

            ”எங்கு போகிறீர்கள்?” என்றேன். அவன் ”நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை….” என்றபடி அவனின் சீன நண்பர்களைப் பார்த்தான். லிம் ஸி மின் தான் ’கராக்கே’ போகலாம் என்றான். எல்லோரும் ஒரேகுரலில் உற்சாகமாக ’கராக்கே…. கராக்கே’ என்று ஆமோதித்தார்கள்.  

           அவர்கள்  ’கராக்கே’ என்று சொன்னது சீன உச்சரிப்பில் என் காதில் கராத்தே என்று தான் விழுந்தது. மேலும் அதற்கு முன்பு வரை நான் கராக்கே என்ற வார்த்தையைக் கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. அதனால் “இந்த ராத்திரியில் போய் கராத்தேயை பார்ப்பதற்கோ, அல்லது பழகுவதற்கோ எனக்கு ஆர்வமில்லை…” என்றேன். எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

           ”அது கராத்தே இல்லை மேன்; கராக்கே….” என்று திருத்தினான் லிம் ஸி மின். அவனே அதைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவும் சொல்லத் தொடங்கினான்.” கராக்கே என்பது ஒரு வகையான இசை நிகழ்ச்சி. அதாவது பார்வையாளர்களும் பங்கேற்பவர்களாகும் இசை நிகழ்ச்சி!” என்றான்.

           தொலைக்காட்சியுடன் இணைக்கப்பட்ட பெரிய திரையில், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்னணி இசையுடன் ஒளிபரப்பாகும்; இசைக்கு ஏதுவான பாட்டு வரிகள் (Lyrics) திரையின் கீழ்ப்பகுதியில் எழுத்துக்களாக ஓடும். ஒருவரோ அல்லது சிலரோ அந்த பாட்டு வரிகளை ராகத்துடன் மைக்கில் வாசிக்க அல்லது பாட, அது இசையுடன் கலந்து ஸ்பீக்கரில் ஒலிக்கும்; அதுதான் கராக்கே!

           ”நிகழ்ச்சி முடிந்ததும் நீங்கள் எல்லோரும் அவரவர் கார்களில் உங்களின் வீடுகளுக்குப் திரும்பிப் போய் விடுவீர்கள்; நானெப்படி என்னுடைய அறைக்குப் போவது?” தட்டிக் கழிப்பதற்காகத் தான் அப்படிக் கேட்டேன். ஏனென்றால் மலேசியாவில் எந்த ராத்திரியிலும் மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிக்கும் டாக்ஸிகள் கிடைக்கும்; பயப்படவும் தேவையில்லை. ஸ்டீபன் பிளாங்க் “உன்னை உன்னுடைய அபார்ட்மெண்ட்டில்  கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு…” என்றான்.

           தவிர்க்க முடியாமல் போனதாலும், கராக்கேவைப் பற்றி அறிந்து கொள்கிற ஆர்வத்தாலும் அவர்களுடன் போனேன். போன பின்பு தான் புரிந்தது. அது வெறும் இசை நிகழ்ச்சி அல்ல; குடியும் கூத்துமாய்க் கும்மாளமடிக்கிற நிகழ்ச்சி என்று. குடி மட்டுமல்லாமல் மிதமான காமமும் வழிகிற  நிகழ்ச்சி!

           எல்லோருக்கும் முதலில் மதுபானம் வரவழைக்கப் பட்டது. “நீ என்ன குடிக்கிறாய்?” என்றான் ஸ்டீபன். “நான் குடிப்பதில்லை; ஆரஞ்சு பானம் ஏதாவது ஆர்டர் பண்ணு…” என்றேன்.

           “நிஜமாகவே, குடிக்க மாட்டாயா?” கொஞ்சமும் நம்பிக்கையில்லாமல் ஏதோ ஐந்து கால் மனிதனைப் பார்ப்பது போல் விசித்திரமாய்ப் பார்த்தார்கள். ”ஒருவேளை இந்தியாவிலிருந்து கிளம்பும் போது, உங்களின் மகாத்மா காந்தி மாதிரி உன்னுடைய அம்மாவிடமோ அல்லது மனைவியிடமோ குடிப்பதில்லை என்று சத்தியம் ஏதும் செய்து கொடுத்து விட்டு வந்திருக்கிறாயோ….!” என்றான் சிரித்துக் கொண்டே.

           “அதெல்லாம் இல்லை; இதுவரை குடித்ததே இல்லை…” என்றேன்.    ஆனால் நான் சொன்னதை அவர்கள் பொருட் படுத்தவே இல்லை. பீர் மட்டுமாவது குடித்தே தீர வேண்டுமென்று பிடிவாதமாகவும் உரிமையுடனும் வற்புறுத்தத் தொடங்கி விட்டார்கள். லிம் ஸி மின் ஒருபடி மேலே போய் எனக்கு மிக நெருக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, சில்லென்று பீர் நுரைக்கும் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த கிளாசை எனது வாய்க்குள் புகட்டுகிற லெவலுக்குப் போய் விட்டான். “சரி, நானே குடித்துத் தொலைக்கிறேன்….” என்று சொல்லி அவனிடமிருந்து கிளாஸைப் பிடுங்கி கொண்டேன்.

           முகப்பில் வெண்நுரையுடன் கூடிய இளம்மஞ்சளான அந்தத் திரவத்தைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை வருஷங்களாக நான் கட்டிக் காத்த விரதம்; இதோ ஒரே நொடியில் உடையப் போகிறது! கொஞ்சம் மெதுவாய் சிப்பிக் குடித்தேன். இலேசாய்க் கசந்தது. அதன் ருசி அப்படி ஒன்றும் ஆர்வமூட்டக் கூடியதாய் இருக்கவில்லை. இதை எப்படி எல்லோரும் இத்தனை ஆர்வமாய் வாங்கி வாங்கிக் குடிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாய் இருந்தது.

           எல்லோரும் பாட்டில் பாட்டிலாய் பீரையும் விஸ்கியையும் பிராந்தியையும் ஜின்னையும் காலி பண்ணிக் கொண்டிருக்க, நான் காரமும் இலேசாய் இனிப்பும் தூவப்பட்ட விதவிதமான நொறுக்குத் தீனிகளை ஏகத்திற்குக் கொறித்தபடி எனக்கு வழங்கப்பட்ட ஒரு கிளாஸ் பீரையே துளித்துளியாய் உறிஞ்சிக் கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் அவரவர்களின் கிளாஸ்களைக் காலி பண்ணுவதில் கவனமாக இருந்ததால் என்னைக் கவனிக்க வில்லை; அல்லது ரொம்பவும் வற்புறுத்தினால் குடித்து விட்டு நான் வாந்திகீந்தி எடுத்து இந்த இரவுநேர சந்தோசத்தைக் குலைத்து விடுவேனோ என்றும் பயந்திருக்கலாம்….

           அது மிகப் பெரிய ஹால் மாதிரி இருந்தது. இடுப்புயர தடுப்புகளால் அறைகளாகப் பிரிக்கப்பட்டு முன்பகுதி முழுவதும் திறந்து கிடந்தது. எல்லா அறைகளுக்கும் பொதுவாய் பெரிய திரையில், உடம்பில் பேருக்கு ஒட்டியிருக்கும் கைக்குட்டை அளவிலான கொஞ்சூண்டு உடைகளும் விலகுவது பற்றிய அக்கறையில்லாமல், பெண்கள் அலட்சியமாய்க் குதித்துக் கொண்டிருந்தார்கள். இளமையைச் சூடேற்றும் சங்கீதம் ஸ்பீக்கரில் அலறிக் கொண்டிருந்தது. பாட வேண்டுமென்று நினைக்கிறவர்கள் திரைக்கு பக்கவாட்டில் வைக்கப் பட்டிருக்கும் வயர்லெஸ் மைக்கை எடுத்து சீனமொழியில் ஸ்கிரீனில் ஓடும் வார்த்தைகளை மைக்கில் பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்ததும் வேறுசிலர் ஓடிப் போய் மைக்கைக் கைப்பற்றி பாடினார்கள்.

          அந்த ராத்திரியிலும் டைகட்டி, பிரஷ்ஷாக இருந்த, கராக்கே மையத்தின் சிப்பந்தி, எங்களை அணுகி, “கம்பெனிக்கு பெண்கள் வேண்டுமா?” என்று கேட்டான் மிகப் பணிவாக. எல்லோரும் எஸ் என்று போதையில் துள்ள, “எந்த மாதிரி பெண்கள் வேண்டும்?” என்றான்.

           ஒவ்வொருவரும் மலாய்ப் பெண், சீனப்பெண், தாய்லாந்து, இந்தோனேஷியப் பெண்…. என்று சொல்ல குறித்துக் கொண்டவன், என்னிடமும் அதே கேள்வியைக் கேட்டான். ”எனக்கெதுவும் வேண்டாம்; நான் வீட்டிற்குக் கிளம்புகிறேன்….” என்றபடி எழப்போனேன். ஸ்டீபன் பாங்க் என்னை அழுத்தி உட்காரவைத்தான்.

           “சும்மா, வெட்கப்படாதே மேன்; ஒரே ஒருமுறை அனுபவித்துத் தான் பாரேன்….. பழக்கமில்லை என்றெல்லாம் சொல்லாதே! நாங்கள் எல்லாம் அம்மா வயிற்றிலிருந்து வரும் போதே பாட்டிலுடனும் பெண்களுடனுமா வந்தோம்…. வாய்ப்புக் கிடைக்கும் போது புது அனுபவங்களுக்குள் புகுந்து பார்த்து விட வேண்டும்; இங்கிருக்கும் பெண்கள் நன்றாக கம்பெனி குடுப்பார்கள்….” என்றான்.

           எனக்கும் சிறு சபலம் எட்டிப் பார்த்தது. “தமிழ்ப் பெண் கிடைப்பாளா?” என்றேன்.

            “ஸாரி, தற்போது தமிழ்ப் பெண்கள் யாருமில்லை…. நாளைக்கு நீங்கள் மறுபடியும்  வருவதாக இருந்தால், ஏற்பாடு செய்ய முடியும்….!” என்றான் கராக்கே  மையத்தின் சிப்பந்தி.

           ”புதிது புதிதாய் பெண்கள் கிடைக்கும் இந்த தேசத்தில் நீ எதற்கு உனக்கு பழக்கமான பெண்ணையே கேட்கிறாய்? அவளுக்கு மட்டுமென்ன, தங்கத்திலயா இருக்கப் போகுது….” என்ற ஸ்டீபன், “சுமாராகவேனும் ஆங்கிலம் புரிந்து கொள்ளக்கூடிய ஏதாவது ஒரு பெண்ணை அனுப்பு..” என்றான் சிப்பந்தியிடம்.  எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. தவிர்க்க முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்றிருந்தது. இவர்களுடன் வந்திருக்கக் கூடாதோ என்றும் தோன்றியது.

           பெண்களை வரவழைத்து என்ன செய்வார்கள் என்று நிச்சயமாய் எதுவும் புரியவில்லை; கண்டிப்பாக செக்ஸுக்கு சாத்தியமில்லை. அதற்கான இட வசதியோ, தனிமையோ இங்கில்லை. வெறுமனே பேசிக் கொண்டிருப்பதற்கா பெண்களை அழைக்கிறார்கள்? அங்கங்கே எரிந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு விளக்குகளும்  அணைக்கப்பட்டு, ஸ்கீரீனில் வீடியோ ஒளிரும் வெளிச்சம் மட்டும் தான் அறையிலிருந்தது.

           கொஞ்ச நேரத்தில் ஐந்து பெண்கள் உற்சாகக் கூவலுடன் எங்களை நோக்கி வர, இவர்களும் சந்தோஷத்தில் குதித்தார்கள். அந்தப் பெண்கள் யாவரும் இடுப்புக்குக் கீழே உள்ளாடையை விட சற்றே பெரிதான ஸ்கர்ட்டும், மேலே வெள்ளை வெளேரென்று மார்பின் பெரும் பகுதி வெளித் தெரிய, இறுக்கமான உடையும் அணிந்திருந்தார்கள்.

           எந்த நாடாய் இருந்தாலென்ன? பெண்களை விடப் போதையான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன? அடுத்த சில நிமிஷங்களீலேயே என்னுடன் வந்த சீன நண்பர்கள் யாவரும் அவர்களுக்காக அனுப்பப்பட்ட பெண்களைச் சீண்டத் தொடங்கி போதையில் உளறிக் கொண்டிருந்தார்கள்.

           எனக்காக அனுப்பப்பட்ட சீனப்பெண் நளினமாக நடந்து வந்து என்னை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள். “இந்தியாவிலிருந்தா…?” என்றாள். அவளின் ஆங்கிலம் ஓரளவிற்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது.  நான் “ஆம்”என்று சொல்லி முடிப்பதற்குள் என்னை முழுவதுமாய் ஆக்ரமித்திருந்தாள். தன்னுடைய மெல்லிய பிரதேசங்களை தாராளமாய் என்மேல் படரவிட்டு, லிப்ஸ்டிக் சுவையுடன் அவள் என் உதட்டில் பதித்த முத்தத்தில் நான் கிறங்கி…..

           ஸாரி அப்புறம் நடந்தவைகளை விவரிப்பது அத்தனை நாகரிகமாக இருக்காது. நாங்கள் உடை என்கிற எல்லைகளை அதிகம் தாண்டவில்லை; மற்றும் எங்களின் பாலியல் உறுப்புக்கள் பரஸ்பரம் ஸ்பரிசித்துக் கொள்ளவில்லை…. அவ்வளவுதான். மற்றபடி எல்லாமே நடந்தது அங்கு. அந்தரங்கமான ஒரு விஷயத்தை, பட்டவர்த்தனமாய் எல்லோரும் பார்க்க, யாரும் யாருடைய அருகாமையையும் பற்றிய அக்கறை இல்லாமல்…

           பின்னால் யோசிக்கும் போதும் இப்போது இதைச் சொல்லும் போதும் மிகவும் அருவருப்பாகவே உணர்கிறேன்.  ஆனால்  மனைவியை ஊரில் விட்டுவிட்டு வந்து ஆறு மாதங்களைக் கடந்திருந்த நிலையில், அந்த நிமிஷத்தில் எனக்கு அது மிகவும் தேவையாகத் தான் இருந்தது.

           சல்லாபத்தின் ஊடாகவே அவளுடைய பெயரைக் கேட்டேன். ஜூன்லாவ்… என்றாள். ”பூர்வீகமே மலேசியாவா….?” என்ற என் கேள்விக்கு, “இல்லை நாங்கள் நாடற்றவர்கள்….” என்றாள். நான் புரியாமல்  அவளைப் பார்க்க, அவள் தங்களின் மூதாதையர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்து பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு தேசத்தில் ஒண்டிக் கொண்டு அல்லாடுவதாகவும் சொன்னாள்.

            தொடர்ந்து  தான் தாய்லாந்திலிருந்து இங்கே வந்திருப்பதாகவும், அவளின் அம்மா இன்னும் தாய்லாந்திலும், தங்கை இந்தோனேசியாவிலும் என்று ஆளுக்கொரு தேசத்தில் வசிப்பதாகவும் சொன்னாள். தன்னிடம் முறையான பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே இல்லை என்றும் கள்ளத்தனமாகத் தான் இங்கு இருந்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள். நான் மிகச் சாதாரணமாக கேட்ட ஒரு கேள்விக்கு அவள் தன்னைப் பற்றிய அத்தனை உண்மைகளையும் சொன்னது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. 

           நாங்கள் கராக்கே மையத்திலிருந்து கிளம்பத் தயாரான போது, கடிகார முட்கள் புணர்கிற நெருக்கத்திற்கு வந்து விட்டிருந்தன. பூக்களாலும் பட்டாலும் பொன் குழைத்து உருவாக்கப் பட்டிருந்த அவளின் மேனியையும், அதன் இனிய மணத்தையும் மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டு, பிரியவே மனமில்லாமல் தான் அங்கிருந்து எழுந்து வந்தேன்.

           லிம் ஸி மின் வாயில் வாசனைப் பாக்குத் தூளைக் கொட்டி மென்றபடி அல்வான் தாமிடம் வாயை ஊதிக்காட்டி, சாராய வாடை வரவில்லை என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு தன்னுடைய காரைக் கிளப்பிப் புறப்பட்டான். மலேசியாவிலும் மனைவிக்குப் பயப்படுகிற ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

            லிம் ஸி மின்னைத் தொடர்ந்து அல்வான் தாம், ஸாங் ஸி வாய், ஜேம்ஸ் ஸியூ எல்லோரும் அவரவர் காரில் கிளம்பிவிட, ஸ்டீபன் ஏற்கெனவே ஒத்துக் கொண்டபடி என்னை நான் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் இறக்கி விடுவதற்காக, அவனுடைய காரில் ஏற்றிக் கொண்டான்.

           ”வேண்டாம், வேண்டாமென்று பெரிதாய் பிகு பண்ணிவிட்டு, அப்புறம் புகுந்து விளையாடினாய் போலிருக்கிறது….” என்று சீண்டினான். நான் சங்கோஷத்தில் நெளிந்தேன். “இந்தியர்களே அப்படித் தான்; ரொம்பவும் பாசாங்கு நிறைந்தவர்கள்; இல்லையா?” என்றான். நான் பதில் எதுவும்  சொல்லவில்லை.

           ”நீ கோலாலம்பூருக்கு வந்து எவ்வளவு நாட்களாகிறது…..” காரோட்டியபடி விசாரித்தான்.

           ”ஆறு மாதங்களுக்கும் மேலாகி விட்டது….” என்றேன்.

           ”இது மாதிரி அனுபவம் முதல் தடவையா….” என்றான். நான் ஆமென்று தலையசைத்தேன்.

           ”நிஜமாகவே நீயொரு வீணாய்ப் போனவன்; இங்கு எவ்வளவு சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன; அதையெல்லாம் அனுபவிக்காமல் வெறுமனே வேலை, வீடு என்று ஓடிக் கொண்டிருக்கிறாயே! நீ இப்படியே இருந்தால், உன்னுடையது துருப்பிடித்து போய்விடப் போகிறது; எந்த ஆயுதத்தையுமே அவ்வப்போது தூசுதட்டி உபயோகப் படுத்தி விட வேண்டும்; இல்லையென்றால் அது எதற்காகப் படைக்கப் பட்டதோ அதை மறந்து போய், நீண்ட காலத்திற்கப்புறம் உபயோகிக்க முற்படும் போது முக்கியமான தருணத்தில் மக்கர் பண்ணி நம்மை அவமானப் பட வைத்து விடும்….!” அவன் சொல்வதை அவனே ரசித்தபடி வெடித்து சிரித்தான். நான் பதிலேதும் சொல்லாமல் வெறுமனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

           ”மனைவியை இங்கு அழைத்துக் கொள்ள உத்தேசித்திருக்கிறாயா….?” என்றான்.

           ”அலுவலகத்தில் ஸ்பவுஸ் (Spouse) விசா எடுத்துத் தர விண்ணப்பித்திருக்கிறேன். அது கிடைத்ததும் அழைத்து வந்து விடுவேன்…” என்றேன்.

           ”முட்டாள்! தப்பித் தவறிக் கூட அந்த தப்பை மட்டும் செய்து விடாதே! புள்ளைப் பூச்சியை யாராவது தொப்புளில் கட்டிக் கொண்டு அலைவார்களா….!” சொல்லிவிட்டு மீண்டும் சத்தமாய் சிரித்தான். 

           அவனே தொடர்ந்தான். “நாம் இப்போது அனுபவித்தது வண்ண மயமான சுவையான சாப்பாட்டை சும்மா கண்ணில் பார்த்துவிட்டு எச்சில் ஒழுக எழுந்து வந்தது போலத்தான்…. உமிழ்நீரையே உணவாக்கி உயிர் வாழ முடியுமா என்ன? உன்னை உன்னிடத்தில் இறக்கி விட்டதும் முழுச் சாப்பாடு கிடைக்கிற இடத்திற்குப் போகப் போகிறேன்; மனைவியைப் பிரிந்து இங்கு வந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகி விட்டது என்கிறாய்; அதனால் கண்டிப்பாக உனக்கும் தேவைப்படும் விரும்பினால் நீயும் என்னுடன் வரலாம்…. “ என்றவன் கொஞ்சம் நிறுத்தி  “என்ன போகலாமா?” என்றபடி என்னைப் பார்த்து கண்ணடித்தான்.

           எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மலேசியாவில் வேலை கிடைத்த செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் பயமுறுத்தினார்கள். “நீ வேலைக்குப் போவது ஒரு முஸ்லீம் நாட்டுக்கு… அங்கெல்லாம் திருடினால் கையை வெட்டுவார்கள்; பார்க்கக் கூடாததைப் பார்த்தால் கண்ணை நோண்டி விடுவார்கள்; செய்யக் கூடாததைச் செய்தால் ‘அதை’ வெட்டி விடுவார்கள் …. அதனால் கவனமாக நீ உண்டு, உன் வேலை உண்டு என்று இருந்து விட்டு வந்து விடு….” என்று சொல்லியிருந்தார்கள்.

           நண்பர்கள் சொன்னதை ஸ்டீபனிடம் சொல்லி, “நிஜமாகவே இங்கு அதற்கெல்லாம் பெண்கள் கிடைப்பார்களா…?” என்றேன். “விபச்சாரம் நடக்காத தேசம் என்று உலகத்தில் எங்காவது இருக்கிறதா என்ன? ஏன் கண்டிப்புக்குப் பேர் போன சவூதி அரேபியாவில் கூட ‘அது’ நடக்கத் தான் செய்கிறது… என்ன கொஞ்சம் ரிஸ்க் அதிகம் அவ்வளவு தான்….! “ என்றான்.

           ஆறுமாத தனிமை இரவுகளும் ஜூன் லாவ் என்னுடம்பில் ஏற்றியிருந்த வெதுவெதுப்பும் சேர்ந்து என்னை சரி சொல்ல வைத்தன. அப்புறம் மெதுவாக ”ஜூன் லாவ் கிடைப்பாளா?” என்றேன். யாரவள் என்று புருவத்தை உயர்த்தியவன், ஞாபகம் வந்தவனாய், “கராக்கேயின் போது உனக்கு அனுப்பப் பட்டவள் தானே!” என்றான். நான் ஆமோதித்துத் தலையசைத்தேன்.

            “அவள் மேல் உனக்கு அப்படி ஒரு மோகமா, முயற்சிக்கலாமே…” என்றபடி கார்த் தொலைபேசியை உயிர்ப்பிக்க, ஸ்பீக்கர் அலறியது. மலேசியாவில் அப்போதே கார்த் தொலைபேசி, கைத்தொலைபேசிகளெல்லாம் புழக்கத்திற்கு வந்து விட்டது. இந்தியாவில் அப்போது அவை அத்தனை சரளமான உபயோகத்திற்கு வந்திருக்கவில்லை என்றுதான் ஞாபகம்! யார் யாரிடமோ பேசி, ஜூன் லாவின் கைத்தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து அவளைத் தொடர்பு கொண்டான். நீண்ட நேரம் அவளிடம் சீன மொழியில் பேசிவிட்டு என்னிடம் சொன்னான்.

           ”இன்றைய நாள் உனக்கு நிஜமாகவே அதிர்ஷ்டம் நிறைந்த நாள்; ஜூன்லாவ் இப்போது பெட்டாலிங் ஜெயாவில் இருக்கிறாள். உன்னையும் அங்கு வரச் சொல்கிறாள் ” என்றான் சந்தோஷமாக. எனக்குள் ஜிவ்வென்று மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.

           என் பதிலை எதிர்பார்க்காமல் ஸ்டீபன் காரை ஒடித்துத் திருப்பி, வேறொரு சாலையில் பெட்டாலிங் ஜெயாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான். இரவுப் பனியில் குளித்து, விளக்கு வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்த தார்ச் சாலையில் கார் வழுக்கிக் கொண்டு உற்சாகமாகப் பறந்தது.         

           நடுநிசியைக் கடந்து விட்டிருந்த அந்த அகால வேளையிலும் பெட்டாலிங் ஜெயா மிகப் புதிதான பொலிவுடன் சர்சர்ரென்ற கார்களின் நடமாட்டத்திலும், வெளிச்ச வெள்ளத்தைப் பீய்ச்சி அடிக்கிற விளக்குகளிலும் கொட்டக் கொட்ட விழித்திருந்தது. கொஞ்சங்கூட சிரமப்படாமல் ஜூன்லாவ் குறிப்பிட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து – ஏற்கெனவே இங்கு வந்திருக்கிற அனுபவங்கள் அவனுக்கிருக்கலாம் – வசதியான இடமாய்ப் பார்த்து காரைப் பார்க் பண்ணினான். பகல் நேரமாய் இருந்தால் பரபரப்பான இந்த நகரத்தில் கார் பார்க்கிங்கிற்கு நிறைய அலைய வேண்டியிருந்திருக்கும்.

           அழகுநிலையம் மற்றும் ரிலாக்ஸ் மஜாஸ் என்கிற அர்த்தந் தொனிக்கும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகளை முகப்பில் தாங்கி ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த வெகு நவீன கட்டிடம் நாகரிகமாகவும் நளினமாகவும் கண்ணில் ஒற்றிக் கொள்கிற சுத்தத்துடனும் இருந்தது. இங்கு தப்புத் தண்டா நடக்கிறதென்று யாராவது கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

           ”நான் உங்களுக்கு உதவட்டுமா?” என்று வசீகரமாய் சிரித்த கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்த பெண்ணிடம் ஸ்டீபன் மலாயில் ஏதேதோ பேசி, அவள் காட்டிய வழியில் நீளமாய் உள்ளே போய் லிப்டில் தொற்றி – எத்தணையாவது மாடி என்று புரிவதற்குள் – வெளியேறி, எதிர்ப்பட்ட கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக, அங்கும் இன்னொருத்தி, ’நான் உங்களுக்கு உதவுவதற்காகவே ஜென்மம் எடுத்திருக்கிறேன்….’ என்பது போல சில முத்துக்களை உதிர்த்தாள்.

           அவள் காட்டிய அறைக்குள் நுழைந்தபோது அங்கு வேறொரு உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. அனேகமாக தேவலோகத்திற்குப் போய்த் திரும்பியவர்கள், அதைப் போலவே எழில் பொங்க வடிவமைத்திருக்கிற சாத்தியங்களுடன் மிகப் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் இருந்தது.

           பயமுறுத்தாத இருளும் மங்கலான வெளிச்சமும் , மெல்லிய இசை அதிர்வுகள் அதிகமின்றி ஒலிக்க, விரும்பத்தக்க வாசணையும் அறை முழுவதும் நிரம்பி இருந்தன. ஆறேழு பெண்கள், மெழுகு பொம்மைகள் போல், ரம்பா, ஊர்வசிகளின் அழகு பிரகாசத்தைக் கேலி செய்தபடி, வளவளப்பான வாளிப்பு உடம்பை மிகக் குறைந்த துணியிலான உடையால் மறைத்துக் கொண்டு சிலுசிலுவென சிரித்தபடி அலைந்து கொண்டிருந்தார்கள்.

           எனக்கு இந்த பெண்களுக்குள் அரைகுறை வெளிச்சத்தில் ஜூன்லாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் இங்கே இருக்கிறாளா என்பதே சந்தேகமாக இருந்தது. ஸ்டீபன் தான் ஒரு பெண்ணைச்சுட்டி “ ஜூன்லாவ்…” என்று மெல்லிய குரலில் கூப்பிட்டான்.

           அவள் எங்களுக்கருகில் வந்தபின்புதான் கவனித்தேன்; அவள் ஜூன்லாவே தான். வேறு உடைக்கு மாறி இருந்தாள். இடுப்புக்கும் மார்புக்குமாய் ஒரே உடையை – நிறைய குஞ்சங்களும், வலை பின்னலான சன்னல்களும் நிறைந்த உடை – அணிந்து மேலும் கவர்ச்சியாகத் தெரிந்தாள்.

           மறைக்க வேண்டிய நிறைய விஷயங்கள் அவள் அணிந்திருந்த உடையின் சன்னல்களின் வழியே எட்டிப் பார்த்து பார்ப்பவர்களை பலவீனமாக்கிக் கொண்டிருக்க, கால்களுக்கு முழுதாய் உறை அணிந்து மறைத்திருந்தாள். காதுகளுக்கு அடுக்கடுக்கான டிசைனில் வண்ணக் கற்கள் மின்னும் ஏதோ ஒன்றை அணிந்து, பிரவுன் நிற தலைமுடியை தளர்வாய் புரளவிட்டபடி என்னை நெருங்கி,”கமான் லா…..” என்று சிரித்தாள்.                  நான் பிரமிப்பு விலகாமல் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, ஸ்டீபன் தனக்கும் ஒரு பெண்ணை அழைத்து அருகில் வைத்துக் கொண்டு, மேனேஜர் மாதிரி அலைந்து கொண்டிருந்த ஒருவனை அழைத்து மலாயில் ஏதோ சொன்னான். தன் பர்ஸைத் திறந்து கிரெடிட் கார்டை அவனிடம் கொடுத்தான். அப்புறம் அவனுக்கான பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் போய் புகுந்து கொண்டான்.

           ஜூன்லாவ் என் இடுப்பைக் கைகோர்த்து அணைத்தபடி அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறை நோக்கி என்னை நடத்திக் கொண்டு போனாள். ”இந்த ராத்திரியில் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறாயே, நான் தான் வேண்டுமென்று கேட்டாயாமே, ஸ்டீபன் சொன்னான்; என்மேல் உனக்கு அத்தனை இஷ்டமா?” என்று நம்பாமல் என்னைப் பார்த்தாள்.

           நான் ஆமென்று தலையசைக்கவும், “என்னை உங்களின் ஊருக்கு அழைத்துப் போய் விடுகிறாயா?” என்றாள். திடீரென்று அவளின் குரலில் அழுகையின் பிசிறு கோடிட்டது போல் இருந்தது. அவளின் கண்களிலும் இலேசான ஈரம் பளபளத்தது. நான் என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்க, அறைக் கதவின் குமிழைத் திருகி கதவைத் திறந்தாள்.

           நாங்கள் அறைக்குள் புகுந்து கொள்ள முற்பட்டபோது தான், அவள் பெயரை யாரோ உரக்கச் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. திரும்பியவளின் முகத்தில் அவனைப் பார்த்ததும் இலேசான இருள் பரவியது. மலாயிலோ மண்டேரியனிலோ ஏதோ சொல்லியபடி அவனிடம் வேகமாகப் போனாள்.

           என் பூஜை அறைக் கரடிக்கும் என் வயது தான் இருக்கும். இருவரும் அங்கேயே நின்றபடி காரசாரமாயும் மிகக் கோபமாயும் எனக்கு ஒரு வார்த்தை கூட புரியாத மொழியில் ஏதோ விவாதித்தார்கள். திடீரென்று தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த பையிலிருந்து ஒரு பிஸ்டலை எடுத்தவன் என்ன செய்யப் போகிறான் என்று யோசித்து முடிப்பதற்குள் ஜூன்லாவின் நெற்றிப் பொட்டில் டுமீலென்று சுட்டு விட்டான். அவள் அப்படியே தரையில் சரிந்து விழுந்தாள். குபுகுபுவென்று இரத்தம் பெருகி பளபளப்பான தரையில் இரத்தம் குளம் கட்டத் தொடங்கியது. நான் அப்படியே உறைந்து போனேன்.

           சத்தம் கேட்டதும் எல்லோரும் அவரவர்களின் அறையிலிருந்து அள்ளிப் போர்த்திக் கொண்ட அலங்கோலமான ஆடைகளுடன் அவசரமாய் வெளிப்பட்டார்கள். அந்த இடத்தின் சிப்பந்திகள் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு அந்த அறையே பயமும் பரபரப்புமாய் பதட்டமாக இருந்தது. ஜூன்லாவைச் சுட்டவன் அவன் பாட்டிற்கு சர்வ சாதாரணமாக அங்கிருந்து வெளியேறிப் போய்விட்டான். யாரும் அவனைத் தடுக்கவோ பிடித்துக் கொள்ளவோ முயற்சிக்கவில்லை.

           ஸ்டீபன் ஓடிவந்து என்னை கைபிடித்து நடத்தி அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற்றி, அவனுடைய காருக்கு கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போனான்.  கார் பெட்டாலிங் ஜெயாவைக் கடந்து நெடுநேரமான பின்புதான், அவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெதுவாய்ப் பேசினான்.

           ”நல்லவேளை மிக மோசமான இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பித்து விட்டோம்; இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு போலீஸ் படையே வந்து குவிந்து விடும் தெரியுமா? ‘’ என்றவன், “ஆமாம் ஜூன்லாவுடன் நீதானே இருந்திருக்க வேண்டும்; அவன் எப்படி…” என்றான் என்னிடம்.

           ”எனக்கு எதுவுமே முழுசாய்ப் புரியவில்லை; நாங்கள் அறைகுள் போக இருந்த தருணத்தில் ஒருத்தன் அவளை அழைத்தான்; இருவரும் கடுமையாக ஏதோ பேசிக் கொண்டார்கள். திடீரென்று அவன் துப்பாக்கியை எடுத்து ஜூன்லாவை சுட்டு விட்டான்…” என்றேன். அப்புறம் ”எதற்குக் கொன்றானாம்? ஏதாவது தெரிந்ததா? “ என்றேன்.

           ”தெரியவில்லை; ஒருவேளை நாளைக்கு செய்தி பேப்பரில் வரும் போது தெரியலாம்; சுட்டவன் தப்பித்துப் போய் விட்டதால் காரணம் தெரியாமலே போவதற்கும் வாய்ப்பிருக்கிறது…. ஏனென்றால் மலேசியப் போலீஸ் அத்தனை சூட்டிகையானவர்கள்  இல்லை….” என்றான்.  

           ”நமக்கு போலீஸ் விசாரணை மாதிரி தொந்தரவுகள் ஏதும் இருக்குமா?” அந்நிய தேசத்தில் வந்து போலீசில் மாட்டிக் கொண்டு அசிங்கப் படப் போகிறேனோ…. விலங்கு மாட்டி தெருவில் இழுத்துக் கொண்டு போவார்களோ? எனக்குள் பயமெனும் பந்து உருண்டு நெஞ்சை அடைப்பது போலிருந்தது.

           ”அனேகமாக அவர்கள் கஸ்டமர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்….!” என்றான் ஸ்டீபன். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

           இரண்டாவது நாள் தான் அந்தச் செய்தி தினப் பத்திரிக்கையில் வந்திருந்தது. கூடவே ஜூன் லாவின் நாட்குறிப்புகளும். அவளுக்கு நாட்குறிப்புகள் எழுதுகிற பழக்கம் இருந்திருக்கிறது. அவள் தன் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் ஒவ்வொன்றையும் தெளிவாகப் பதிவு பண்ணி வைத்திருக்கிறாள். போலீஸ் அவளின் வீட்டைச் சோதணையிட்ட போது அவர்கள் அவளின் டைரிகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அவளின் குறிப்புகளிலிருந்து  ஜூன்லாவைக் கொன்றவனைக் கண்டுபிடித்து கைது பண்ணி விட்டார்கள். அவன் பெயர் லீ ஜான் ஹோக்; அவளின் முன்னாள் கணவன்! 

           தாய்லாந்தில் விபச்சாரம் அங்கீகரிக்கப் பட்ட தொழிலாக இருப்பதாலும், விதவிதமான பெண்களும் மிக வித்தியாசமான அனுபவங்களும் அங்கு கிடைக்கு மென்பதாலும், மலேசியாவில் இருப்பவர்கள் சர்வசாதாரணமாக ரிலாக்ஜ் பண்ணிக் கொள்வதற்காக அங்கு போவதுண்டு.

           மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கு பஸ், இரயில், ஃபெர்ரி, விமானம் என்று எல்லாவிதமான போக்குவரத்துகளும் உண்டு. விசா கூட தேவையில்லை; தாய்லாந்தில் இறங்கியதும் அவர்களின் மலேசியப் பாஸ்போர்ட்டில் ஒரு நுழைவு முத்திரையைக் குத்திக் கொண்டால் போதுமானது. அது ஒரு குறுகிய காலத்திற்கு அவர்கள் தாய்லாந்திலிருப்பதற்கு செல்லுபடியாகும்.

           அப்படி ஒருமுறை லீ ஜான் ஹோக் வார விடுமுறையைக் கழிப்பதற்காக தாய்லாந்திற்குப் போயிருந்த போதுதான் ஜூன்லாவைச் சந்தித்திருக்கிறான் – ஒரு டூரிஸ்ட் கைடாக. கண்டதும் காதலாகிக் கசிந்துருகி, அவளைத் தன்னுடன் மலேசியாவிற்கு வந்து விடும்படியும் அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு மலேசியக் குடியுரிமை பெற்றுத் தருவதாகவும் ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறான். 

           இங்கு வந்ததும் ஒரு ஆறு மாதம் போல் அவளுடன் வாழ்க்கை நடத்தியிருக்கிறான். அந்த காலகட்டத்தில் ஜூன்லாவிற்கு அவன் வருமானம் எதுவுமில்லாத வெறும்பயல் என்கிற உண்மை புரிந்து, அக்கணமே அவனிடமிருந்து வெளியேறி விட்டாள்.  ஆனால் அவளால் தாய்லாந்திற்குத் திரும்பிப் போக முடியாத சூழல்; வாழ்வதற்கு வேறு மார்க்க மில்லாமல், ஒரு விலைமகளாக  வாழத் தொடங்கி விட்டாள்.

           ஆனால் லீ ஜான் ஹோக் அவளை அத்தனை சுலபமாக விட்டுவிடத் தயாரில்லை; அவ்வப்போது அவளைச் சந்தித்து போலீஸில் காட்டிக் கொடுத்து விடுவதாக மிரட்டி பணம் பெற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டம் வரை அவனுக்கு பணம் கொடுத்த ஜூன்லாவ், அப்புறம் மறுத்து விட்டாள்….

           சம்பவ தினத்திலும் அவன் ஜூன்லாவிடம் தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகச் சொல்லி பணம் கேட்கவும் அவள் தரமுடியாது என்று பிடிவாதமாக மறுக்க, இருவருக்கும் வாக்குவாதம் வலுத்து…. கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அவளைச் சுட்டு விட்டான்.


           சம்பவத்தின் தொடர்ச்சியாக என் அலுவலகத்தில் நச்சரித்து ஸ்பௌஸ் விசா பெற்று என் மனைவியையும் என்னோடு மலேசியாவிற்கு அழைத்துக் கொண்டேன் என்ற விபரம் இங்கு அத்தனை முக்கியமில்லை.