ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 16 December 2013

போட்டிச் சிறுகதை-22

சிறுகதை-காதல் போயின் காதல்

அந்த காபி டே வின் கண்ணாடி சன்னலூடே தெருவை வெறித்தபடி காப்பியை பருகிக் கொண்டிருந்தான் அவன். அடர்த்தியாக வளர்ந்த தாடி சரியாக வெட்டப்படாமல் "தங்கமீன்கள்" ராமை நினைவு படுத்தியது. அங்குமிங்கும் அலைபாய்ந்த கண்களில் சாலையின் நடுவே கிடந்த பந்தை எடுக்க சாலையை  கடக்க முயன்ற  ஒரு சிறுவன் கண்ணில் பட, அனிச்சையாய் தலை மறுபுறம் பார்க்க அங்கே ஒரு தண்ணி லாரி வேகமாக வருவதை உணர்ந்து காப்பி கோப்பையை மேசையில் போட்டுவிட்டு அந்த சிறுவனைப் பிடிக்க விரைந்தான். "கமல்" என்று வீறிடும் ஒரு பெண்ணின் குரல் கேட்க துரிதமாய் ஓடி சிறுவனை இருகைகளாலும் அள்ளி மறுபுறம் உருண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி கடக்க எதிர்புறத்திலிருந்து சற்று முன் அலறிய அந்தப் பெண் ஓடி வந்து அவன்  கைகளில் இருந்து சிறுவனை விடுவித்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.. பொங்கி வந்த கண்ணீரை தவணை முறையில் உதிர்த்துக் கொண்டே அந்த பாலகனை ஏதேனும் அடிபட்டுள்ளதா என்று பரிதவிப்புடன் கை, கால்களை விரித்தும் மடக்கியும் பார்த்தாள். கொஞ்சம் ஆசுவாசமடைந்தவுடன் சிறுவனின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.

                           எதோ நினைத்தவளாய் சாலையின் ஓரம் தன் முழங்கையில் அப்பியிருந்த மண்ணை தன் கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொண்டிருந்த, தன் பிள்ளையை காப்பாற்றிய அவனைப் பார்த்தாள். "ரொம்ப நன்றிங்க" என்று அவனிடம் கூற பின் அவன் கண்களை பார்த்ததும் அவனை அடையாளம் கண்டு கொண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர "ரிஷ், நீயா.. சாரி நீங்களா?" என்றாள். அவனும் அவளை அப்போதுதான் கவனித்தான். அவன் கண்களிலும் அதே அதிர்ச்சி. பல வருடங்களுக்கு பிறகு அவளைக் காணும் சந்தோசம், காலம் அவனுக்கு கொடுத்திருந்த மீள முடியாத சோகத்தின் நினைவலைகள், விபத்து கொடுத்திருந்த தற்கால அதிர்வு என எல்லாம் ஒரு சேர அவனை நிலைகுலையச் செய்தது. அந்த இடத்தில், அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவளுடனான சந்திப்பை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் மௌனம் பறைசாற்றியது.

                            "ரிஷ், நீங்க எப்படி இருக்கீங்க ?" என்ற அவள் குரல் அவனுள் எதோ செய்தது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பதை அறியாது மனது தவித்தது. "ஷேல் வீ ஹேவ் எ கப் ஆப் காபி" என்றதற்கு சுற்றிவிடப்பட்ட பம்பரமாய் தலையசைத்தான். சாலையை கடந்து காபி டே வில் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்தனர். எதையோ யோசித்தவள் சிறுவனை  எதிர் இருக்கையில் அமர்த்திவிட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள். "நண்பர்கள் தான் எதிரெதிர் இருக்கைகளில் அமர்வார்கள், மனசுக்கு பிடிச்சவங்க பக்கத்துல தான் உட்காருவாங்க" என்று அவன் அவளிடம் எப்போதோ சொன்னது அவன் நினைவுக்குள் எட்டிப் பார்த்தது.  ஆர்டர் எடுக்க வந்த வெயிட்டரிடம் ரெண்டு லேட்டே, ஒண்ணுல சுகர் கொஞ்சம் ஜாஸ்தி" என்றாள்.

                            தனக்கு சர்க்கரை கூடுதலாய் வேண்டும் என்ற விஷயத்தை எட்டு வருடங்களுக்கு பிறகும் அவள் நினைவில் வைத்திருந்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. "இது கமல், மை ஒன்லி சன். பயங்கர குறும்பு. பார்த்தீங்க இல்லே, இப்படித்தான் அப்பப்போ பயப்படுத்துவான்." என்று எதிரில் மேசை மீது வைத்திருந்த டிஷ்யு பேப்பரில் கப்பல் செய்து கொண்டிருந்த அந்த அழகுப் பெட்டகத்தை காண்பித்து கூறினாள். "உன்னை மாதிரியே அழகா இருக்கான்" என்ற அவனிடம் "ஆனா சேட்டையெல்லாம் அவங்க அப்பா போலவே." என்றதும் அவன் முகம் மாறியதை கண்ட அவள் சட்டென்று சுதாரித்து.. "டெல் மீ அபவுட் யுவர் பேமிலி" என்று ஆர்வத்துடன் அவனை நோக்கினாள். அவள் பார்வையினின்றும் தன் பார்வையை விலக்கிக் கொண்ட அவன் கப்பல் இப்போது முழு வடிவம் பெற்றிருப்பதை கவனித்தான்.

                                 அவளிடம் இருந்த அதே நேர்த்தி, அதே துறுதுறுப்பு அச்சிறுவனிடமும் இருப்பதை கண்டு வியந்தான். வெயிட்டர் அவர்கள் காப்பியை கொண்டு வந்து வைக்க அவனுக்கான கோப்பையில் சர்க்கரையை கலந்தபடியே "என்ன என் மேல இன்னும் கோபமா? என் கூட சரியா பேச மாட்டீங்கறீங்க." என்றாள். "சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே ரேஷ்மா." என்று சிரமப்பட்டு ஒரு புன்னகையை உதிர்த்தான். அவனுடைய கோப்பையை அவனருகே நகர்த்தி "எப்பவும் கிளீன் ஷேவ் பண்ணிக்கறது தானே உங்களுக்கு பிடிக்கும். இப்போ என்ன தாடியெல்லாம்?"  என்றவளிடம் "இப்போ இதுதான் பிடிச்சிருக்கு" என்றான். "ஓ.. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலியே" என்று சற்றே உரிமையுடன் கேட்டாள். அவள் அதீத உரிமை எடுத்துக் கொள்ளும் தருணங்களில் அவள் புருவங்கள் சற்று மேலே செல்வதை ரசித்திருந்த நாட்கள் சற்றென்று வந்து மறைந்தது.

                                 "ம்ம்.. என்ன கேட்டே?" என்றவனிடம் "உங்க பேமிலி பத்தி கேட்டேன்" என்றதும் அவளை பார்ப்பதை தவிர்த்து "எனக்கு.. ஒரே ஒரு பொண்ணு..என் ஏஞ்சல்" "ஓ..வாவ்.. உங்க மனைவி எப்படி இருப்பாங்க?" என்று அடுக்கடுக்காய் அவள் வைக்கும் கேள்விகளுக்கு மூளையின் செல்கள் பதில் எடுத்து வர கொஞ்சம் சோம்பேறித் தனம் காட்டியது.  "உன் அளவுக்கு அழகா இருக்க மாட்டா" என்றவனுக்கு மிக அருகில் வந்து "இத உங்க மனைவி இருக்கும் போது சொல்லிடாதீங்க.. அப்புறம் அவ்வளவுதான்" என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் கைப்பையிலிருந்த செல்பேசி சிணுங்க, மயிலறகு போன்ற அவள் விரல்களால் நீவி உயிர்ப்பித்தாள். பேசி முடித்ததும் "அவர் தான் போன்ல, நான் போகணும். இன்னொரு நாள் பேமிலியோட வீட்டுக்கு வாங்க" என்று கூறிக் கொண்டே எழுந்து தன் மகனை தோளில் போட்டுக்கொண்டே "உங்க பொண்ணுக்கு எத்தனை வயசு?" எனவும் அதே சமயம் கீழிறங்க வேண்டி அந்த சிறுவன் அடம் பிடிக்கவும் அவள் தான் கேட்ட கேள்வியை மறந்து விட்டு தன் காரை நோக்கி விரைந்தாள். அவள் கார் புறப்பட்டதும் அவன் அவள் கேள்விக்கு பதிலுரைத்தான். "என் பொண்ணுக்கு உன் வயசுதான். அவ பேருகூட ரேஷ்மா!"



                                                   ***********************