சிறுகதை-காற்றுள்ளபோதே....
தலையசைத்தாடி குதித்தோடியபடியே அந்த
மேய்ச்சல் காட்டினை நோக்கி ஓடி வந்தாள் செண்பகம். வழியில் கம்பீரமாய் வீற்றிருந்த ஆலமரத்தின் மடிதனில் அமர்ந்து
கொண்டு, சர்வ அலங்காரத்துடன், கருணை
பொழியும் முகத்துடன், வரங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்
பிள்ளையார். அவரைக் கண்டதும் சடாரென நின்று,
" என்ன புள்ளையாரப்பனே !
இன்னைக்கு பூசையெல்லாம் முடிஞ்சு, சாப்டுட்டு ஜம்முனு உக்காந்துட்டு
இருக்கீங்க போல ! இந்த சந்தோசத்தோட, நாட்ல மக்க பஞ்சத்தை எல்லாம் தீத்து,
நல்லபடியா வாழ வையப்பா சாமீ ! " என்று இறைவனிடம் மனு போட்டுவிட்டு
, தன் அலுவலை கவனிக்கச் சென்றாள் செண்பகம்.
செண்பகம் பள்ளிப் படிப்பை முடித்து ஆறு
மாத காலம் ஆகி இருந்தது. மேற்படிப்பு படிக்க அவளுக்கு ஆசை அதிகம். ஆனால், குடும்ப நிலைமை எண்ணி அவளது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து
விட்டிருந்தனர் அவளது பெற்றோர். செண்பகத்துக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருந்தனர். தனது படிப்பு தான் தடைபட்டுப் போயிற்று.
எக்காரணத்தைக் கொண்டும் தன் தம்பி தங்கையின் படிப்பு நின்று போய் விடக் கூடாது. அவர்களை
பட்டதாரிகளாக்கிப் பார்த்து விட வேண்டும் என்று வைராக்கியத்துடன் இருந்தாள் செண்பகம்.
ஒருநாள் மாலை வேளையில், மேய்ச்சல்
காட்டிலிருந்து கால்நடைகளை பட்டியிலடைத்து விட்டு, சோர்வாக
தூக்குச் சட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த விளம்பர சுவரொட்டி அவளது கண்களில் பட்டது.
"வேலைக்கு ஆட்கள் தேவை ! "
தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களில் துவங்கப்பட இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிய ஆட்கள் தேவை.
பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஆண் - பெண் இருபாலரும்
விண்ணப்பிக்கலாம்" என்றிருந்த விளம்பரப் பலகையைக் கண்டதும் செண்பகத்தின் மனதில் மின்னலடித்தது.
இந்த வேலையில் சேர்ந்து விட்டால்,
எப்படியும் குறைந்தது ஓர் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை சம்பளம்
கிடைக்கும், அதை மாதாமாதம் சேமித்து வைத்தால், தம்பி தங்கைகளின் படிப்புக்கு பேருதவியாக இருக்கும். நாம் நினைத்தபடி அவர்களை நன்முறையில்
படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து விடலாம்" என்று செண்பகத்தின்
மனதில் எண்ண அலைகள் கரைபுரண்டு ஓடின.
வீட்டை அடைந்ததும், தன் பெற்றோரிடம் தனது எண்ணத்தினை வெளியிட்டாள் செண்பகம். முதலில், பெண்பிள்ளையை எப்படி வெளியூருக்கு தனியே வேலைக்கு அனுப்புவது என்று தயங்கினர். ஆனால்,
அங்கு குடும்ப கஷ்டமே ஜெயித்தது. குடும்ப நலனை உத்தேசித்து, செண்பகம் வேலைக்குச் செல்ல சம்மதம் அளித்தனர்.
அடுத்த நாள், தன் தோழி காமாட்சியை சந்தித்த
செண்பகம், தான் வேலைக்குச் செல்லவிருக்கும் விபரங்களை
தெரிவித்தாள். " அந்த வேலை ரொம்ப கஷ்டமா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் செம்பகம்.
காலைல எட்டு மணில இருந்து இராத்திரி எட்டு மணி வரைக்கும் வேலை இருக்குமாம் புள்ள.
நின்னுக்கிட்டே தான் இருக்கனுமாம்.உடம்புக்கு முடியலன்னா கூட லீவு போட முடியாதாம். லீவு
போட்டா சம்பளத்துல புடிச்சிடுவாங்களாம் . ஊருக்கும் நினைச்சப்ப எல்லாம் வர
முடியாதாம் " என்றெல்லாம் காமாட்சி சொல்லச் சொல்ல, செண்பகத்துக்கு மனதுள் மெல்ல மிரட்சி எட்டிப் பார்த்தாலும், தன் குடும்ப நலன் என்ற
வைராக்கியமே மேலோங்கி இருந்தது. வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டுமென்று தீர்க்கமான
முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் ஆயத்தமானாள்.
செண்பகம் வேலைக்குச் சேர்ந்து ஒருமாத காலம் ஆகி
இருந்தது. புது இடம், புது மனிதர்கள், புது வேலை என்று செண்பகத்திற்கு சற்று கஷ்டமாக இருந்தாலும்,
ஒருவாறு சமாளித்துக் கொண்டாள். அங்கு அவளுக்கு வேணி என்றொரு புதிய
தோழி கிடைத்தாள். செண்பகத்திற்கும் வேணிக்கும் புடவைகள் விற்பனைப்
பிரிவில் வேலை. கண்கவர் வண்ணங்களில் அழகழகாய் ஜொலிக்கும் புடவைகளைக் கண்டதும்
செண்பகத்துக்கு தங்கையின் நினைவு வந்தது. விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போது தங்கைக்கு புடவை
வாங்கிச் செல்ல வேண்டுமென்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டாள்.
வரும் வாடிக்கையாளர்களுக்கு புடவைகளை எடுத்து
விரித்துக் காண்பித்து , அவர்களது முக பாவனைகட்கு ஏற்ப,
அவர்களது விருப்பு வெறுப்பு உணர்ந்து, வியாபாரத்தை கவனிக்கும்
வழிவகைகளை வேணி செண்பகத்துக்கு சொல்லிக் கொடுத்தாள். ஒரு மாத கால பழக்கத்தில், வியாபார உத்திகள் கற்றுக் கொண்டாள் செண்பகம்.
முதல் மாத சம்பளம் வந்தது. அவள்
பணிபுரியும் நிறுவனமே தங்க இடமும், உணவும் அளித்திருந்ததால், சம்பளத்தை அப்படியே தன் பெற்றோருக்கு முழுவதுமாக அனுப்பிவிட எண்ணினாள்.
கூடவே, தங்கைக்கு ஒரு புடவையும், தம்பிக்கு
சட்டை தைக்க புதுத் துணியும் எடுத்து அனுப்பினாள்.
அனாவசியமாய் செலவுகள் எதுவும்
செய்யாமல், கிடைக்கும் சம்பளத்தை வங்கியில் கணக்கு தொடங்கி சேமித்து வந்தாள். உடன்
பணிபுரியும் பெண்கள் விடுமுறை கிடைக்கும் போது சினிமாவிற்கு செல்லலாம் என்றோ,
புதிதாய் ஏதேனும் பொருள் வாங்கலாம் என்றோ சொன்னால், மறுத்து விடுவாள். இதனால், பலரும் இவளை கிண்டல்
செய்வர். சரியான கஞ்சப் பேர்வழி என்றும், வாழ்வை அனுபவிக்கத் தெரியாதவள் என்றும் கிண்டல் செய்வர். அந்த மாதிரியான
பேச்சுகளை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டாள் செண்பகம்.
அந்த வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும்
தொழிலாளர்களின் சுயமுன்னேற்றத்திற்காக கணினி, தட்டச்சு போன்ற பாட வகுப்புகள்
நிறுவனத்தாராலேயே நடத்தப் பட்டன. விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று
அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பைக் கேட்டதும், தானும் கற்றுக் கொள்ள
வேண்டும் என்ற ஆர்வம் செண்பகத்துக்கு ஏற்பட்டது.
வகுப்புகள் ஆரம்பமாயின. அங்கு
பணிபுரியும் ஒரு பெண்,
" என்ன செண்பகம் , இப்போ நாம இத கத்துக்கிட்டா, உடனே நமக்கு
கம்ப்யூட்டர்ல பாக்குற மாதிரி சுளுவான வேலையாவா குடுத்துறப் போறாங்க ? அன்னன்னைக்கு வேலையைப்
பாத்தோமா, சம்பளத்த வாங்குனோமா, லீவ்
கிடச்சா ஜாலியா எங்கயாவது போயிட்டு வந்தோமான்னு இல்லாம, லீவ்
அன்னைக்கும் கிளாஸ்க்கு போகணும். நமக்கு ஏற்கனவே கஷ்டமான வேலை, இதுல இன்னும் படிச்சு வேற கஷ்டப் படணுமா ? என்றாள்.
"
படிச்சு வெச்சுக்கிட்டா, இன்னைக்கு
இல்லாட்டியும், என்னைக்காவது ஒருநாள் நமக்கு ரொம்ப உபயோகமா
இருக்கும் அக்கா " என்றாள் செண்பகம். ஆரம்பத்தில், சற்று கஷ்டமாக இருந்தாலும், நம்பிக்கை தளராது, முயற்சித்து, நன்றாக படித்துத் தேறினாள்.
ஒரு நாள் , கணினியில் செய்ய வேண்டிய வேலைகள்
நிறைய இருந்தன. ஆனால், கணினி இயக்குபவர் வராததால், கணிப்பொறி பயன்பாடு தெரிந்தவர் எவரேனும் தட்டச்சு செய்து, படி எடுத்துத் தரும்படி கண்காணிப்பாளர் கேட்டார். எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டு நிற்க, செண்பகம் மெல்ல , "சார், நான் செய்யறேன்" என்றாள். "உனக்கு
தெரியுமா? " என்று அவர் கேட்க, "தெரியும் சார்." என்றவள், கணினியின் அருகில்
சென்றாள். அவளுள் ஏனோ ஓர் இனம் புரியா பயம். ஒருவாறு சமாளித்துக் கொண்டு, கண்காணிப்பாளர் கேட்டதை செய்து
கொடுத்தாள்.
"ஓ ! நீ இதெல்லாம் கூட நல்லா
கத்து வெச்சிருக்கியே செண்பகம். பரவாயில்லையே ! நாளைக்கே உனக்கு கம்ப்யூட்டர்
செக்க்ஷன்ல வேலையை மாத்திப் போடச் சொல்றேன் " என்று கூறிவிட்டு அவசரமாக
சென்றுவிட்டார் கண்காணிப்பாளர். அடுத்தநாளே, கண்காணிப்பாளர்
கூறியபடி, அவரது சிபாரிசின் பேரில், செண்பகத்துக்கு
கணிப்பொறி பிரிவில் வேலையை மாற்றித் தந்தனர். அவளது சம்பளமும் உயர்த்தப்பட்டது.
சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு
ஊருக்குப் போய்வர எண்ணினாள் செண்பகம். தனது மேலாளரிடம் விடுப்புக்கு அனுமதி
பெற்றுக் கொண்டு, தனது பெற்றோருக்கு தான் ஊருக்கு வரும் விபரத்தையும் தெரியப் படுத்தினாள்.
அவள் விடுமுறையில் ஊருக்கு வரும் நாளுக்காக, குடும்பத்தினர்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
தெய்வத்திடம் வரம் வேண்டி படையல்கள்
படைத்து, காத்து நிற்கும் பக்தர்கள் மத்தியில், தெய்வத்தின் நலம் விசாரிக்கும் பக்தையான செண்பகத்திற்காக அந்த ஆனைமுகக் கடவுளும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.