சிறுகதை-குடி கெடுத்த குடி
"எவண்டா அவன் என் பொண்டாட்டிய வச்சிருக்கிறது ? அடியேய் இன்னும் அஞ்சு நிமிசத்துல
நீ வெளியே வராட்டி இங்க கொலைதான் விழும்........" இந்த குடிபோதை
குரலுக்கு சொந்தக்காரன் கணேசன் நிசப்தமான அந்த தெருவை அதிரவைத்த
நேரம் இரவு 11.30 மணி ஒவ்வொரு நாளும் கணவனின் அடிக்கும் உதைக்கும், சித்ரவதைக்கும் பலிகடாவாகியிருந்தால் அவனின் மனைவி மரகதம்.
கணவனின்
குரலை கேட்டதும் கதிகலங்கி போனவள் எதிர்த்த வீட்டு விதவை வள்ளியக்காவிடம்
பின்புறமாக போய் தன குழந்தைகளை விட்டு விட்டு மெதுவாக தன் வீட்டுக்குள் வந்தாள் .
மரகதத்தை
அடித்தவன் அப்படியே சரிந்து விழுந்தான் போதை தலைக்கேரியதால. மெல்ல எழுந்து வல்லியக்கா வீட்டிற்கு சென்றால் மரகதம் அவளை
பார்த்து என்னாச்சு? என்று கேட்கும் பாவனையில் அவள் பார்த்ததும் ஓவென்று அவளை கட்டி
பிடித்து அழ ஆரமித்துவிட்டால் மரகதம் .
வள்ளியக்காவிர்க்கு
இது புதிதல்லா ஆனாலும் இன்று மரகதத்தின் அழுகை அதிக அழுத்தமாக
இருந்தது அவளை தேற்ற முயன்று தோற்று போன பின் அலுது தீர்க்கட்டும்
அப்படியாவது அவளின் பாரம் குறையட்டும் என்று விட்டுவிட்டால்
குழந்தைகள் பாதி உறக்கத்தில் இருந்தார்கள் அம்மாவின் அழுகை
கேட்டு எழுந்தவர்களை தட்டி கொடுத்து தூங்க வைத்தால் வள்ளி அக்கா .
மரகதம்
இந்த வீதிக்கு கல்யாணம் ஆகி வந்த புதிதில் வள்ளி அக்கா அறிமுகம் கணேசனை
வீட்டை எதிர்த்து விருப்பட்டுத்தான் மணமுடித்தால் அக்கம் பக்கம் இருப்பவர்கள்
கணேசன் நல்ல பையன்தான் ஆனால் அவனின் சகவாசம் சரியில்ல நீதான்
பக்குவமா அவனை பார்த்துக்கணும் என்று சொல்லும்போது அவள் உணரவில்லை அந்த
கெட்ட சகவாசம் இவளின் குடும்பத்தை இப்படி கெட வைக்கும் என்று .
வள்ளி
அக்கா வலிய வந்து பேசுவா எப்போதும் நேர் வகிடெடுத்து தலைவாரி பூ வைத்து
மங்கள கரமா இருப்பா அவளோட கணவர் லாரி டிரைவர் வாரம் ஒரு முறைதான் வீட்டு
பக்கம் வருவார் வரும்போதெல்லாம் வீட்ல கரி சமைச்சு சோறாக்கி வைப்பா
சாராயம் அடிச்சுட்டு கட்டிலில் சாஞ்சிடுவார் அப்புறம் போதை குறைய
குறைய ஊத்திட்டு மறுபடியும் சாஞ்சிடுவார் .
அப்பெல்லாம்
"ஏக்கா நீ இப்படி இருக்க உங்க வீட்டுகாரருக்கு அறிவுரை
சொல்லி
திருதுக்கா இப்படியே குடிச்சா சீக்கிரம் குடல் வெந்து சாகவேண்டியதுதான்
"அப்படின்னு சொல்லும்போதெல்லாம் தீய மிதிச் மாதிரி பதறுவா
"அப்படி சொல்லாதடி உன் வாய கழுவு அவரு வண்டி ஓட்டுறாரு அலுப்புக்கு
கொஞ்சம் சாப்பிடுராறு என்று மரகதத்தை சமாதனம் செய்வா .
ஒரு
நாள் லாரியில போகும் போது நெஞ்ச பிடிச்சுக்கிட்டு உக்கார்ந்தவரு
அப்படியே
போய் சேர்ந்துட்டாராம் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தப்ப ஊரே கூடி நின்னு
ஒப்பாரி பாடிச்சு வள்ளியக்கா அழாம கல்லு மாதிரி உட்கார்ந்திருந்துச்சு
எல்லோரும் சொன்னங்க "அழுதுடு புள்ள மனசுக்குள்ள வச்சுக்கிட்டு
இருக்காத எல்லாத்தையும் அழுது தீர்த்துடு உன் விதி அவ்வளவுதான்னு"
சொன்னாங்க ஆனா அழவே இல்ல வைராக்கியமா இருந்துச்சு.
அப்புறம்
அவர பாடை கட்டி தூக்கிட்டு போறப்ப என்ன நினைச்சதோ தெரியல அப்படி அழுதது
ஓன்னு அவர கட்டி பிடிச்சிட்டு அது அழுதத பார்கையில அதை தாங்க முடியாம
எல்லோரும் அழுதாங்க .
அதுக்கப்புறம்
குழந்த குட்டி ஏதும் இல்லாததால ஒண்டி கட்டையா பூ வித்து வயித்து
கழுவிட்டு இருக்கு இப்ப மரகததிர்க்கு இருக்கிற ஒரே ஆறுதல் வள்ளி அக்கா
தான் எந்த பிரச்சினைனாலும் அதுகிட்டதான் சொல்லி அழுகிறாள்
மரகதம்
அழுது அழுது கலைத்து போன பின் பல வித சிந்தனைகள் மனதில் ஓடுகிறது இவனோடு
வாழ்வதை விட செத்துபோய்டலாம் என்று யோசிக்கிறாள் அப்படியயே செத்துட்டா
ரெண்டு பொட்ட பிள்ளைகளும் நாதியத்து நிக்குமே என்று நினைகையில்
அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு "ஊரும் கூடி நிக்குது உறவும்
கூடி நிக்குது நான் மட்டும் ஒத்தையில நாதியத்து நிக்கிறேனே ..
ஆஅஆ
.......
வந்த இடம் சரியில்ல ......வாய்ச்சவனும் சரியில்ல ..வந்த வழி
போகவும்
வக்கத்து நிக்கிறேனே ...ஆ ஆ ஆ ........ஒப்பாரி பாடும் அவளின்
மனதை
சமாதானம் செய்ய வழியற்று வள்ளி அக்காவும் அவள கட்டி பிடிச்சி அழுகறா கொஞ்ச
நேரத்தில் அந்த இடமே மயான அமைதியை பிரதிபலித்தது அந்த அமைதியை குழைத்து
மரகதத்தின் சிந்தனையை கலைக்கிறாள் வள்ளி அக்கா
"மரகதம் எனக்கு ஒரு யோசனை தோணுது டி நீ கேட்பையோ மாட்டையோ ? போன வாரம் எங்க
சொந்தகார பொண்ணு கோவைல இருந்து வந்திருந்தா அவ வேல செய்யற வீட்டுல வீட்டோட
இருந்து வேலை செய்ய நல்ல பொண்ணு இருந்தா சொல்ல சொன்னா " நீ வேணா
அங்க
கொஞ்ச நாள் போய் இரு அப்பாவாது உன் புருசனுக்கு உன் அருமை தெரியுதான்னு
பார்க்கலாம் "
என்று சொன்னவ
எழுந்து போய் தன்னுடைய பர்சுல இருந்து கசங்கி போன ஒரு காகிதத்தை
எடுத்து அந்த தொலைபேசி என்னை எடுத்து அவகிட்ட கொடுக்கறா .
"என்ன நினைச்சாலோ தெரியல அந்த நம்பர நானும் குறிச்சுகிறேன்னு
சொல்லிட்டு
பேனா தேடி பார்த்து கிடைக்காம பக்கத்துல இருந்த அடுப்புல
இருந்த
கரிய எடுத்து செவுத்துல குறிச்சி வைச்சவ அவள பார்த்து
"பொண்ணா பிறந்தா இந்த பூமியில பாவப்பட்ட ஜென்மம்தான் கட்ட போய் காடு சேரர
வரைக்கும் நிம்மதியத்த பொழப்புதான் விடிஞ்சா நல்ல வழி பிறக்கும் சாமிய
கும்பிட்டு இங்கே செத்த தலைய சாயி நேரமாயிருச்சி இனி உன் வீட்டுக்கு
விடிஞ்சதும் போ " என்று சொல்லி அவள தூங்க சொன்னவளுக்கு தூக்கம்
கரைஞ்சி போச்சி பழைய நினைவுகளை காட்சி படுத்தி பார்க்கிறாள் வள்ளி
அக்கா "மரகதமும் கணேசனும் கல்யாணமான புதிதில் இதே வீட்டுல உக்காந்து
சிரிச்சி பேசியதும் உரிமையோட அவளை அக்கான்னு கூப்பிட்ட அவனின் சிரித்த
முகம் எல்லாமே இன்னைக்கு மாறிபோச்சு
அன்னைக்கு
தலை தீபாவளி கணேசன் முன் தினமே மரகதத்திற்காக
பட்டுப்புடவையும்
தனக்கு ஒரு பேன்ட் சர்ட்டும் கொஞ்சம் பலகாரமும்
வாங்கிட்டு
வந்திருந்தான் பக்கத்துல இருக்கிற ஒரு மில்லில் தான் வேலை செய்தான்
வரும் சம்பளம் அவனுக்கே மாத கடைசியில் விரதம் இருக்க வைக்கும் நிலையில்தான்
இருக்கும் இதில் இந்த பண்டிகைஎல்லாம் வரலன்னு யாரு அழுதா என்று
ஒரு பக்கம் நினைத்தாலும் புது பொண்டாட்டிக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்து
அவளை சந்தோச படுத்த வேண்டிய கட்டாய சூழல் .
கணேசன்
மாநிறம் நல்ல உயரம் விஜய் ரசிகன் தலையை மேல்நோக்கி வாரியிருப்பான் எப்பவும்
உள்ளே ஒரு டீசர்ட் வெளியே ஒரு சர்ட் ஒரு ஜீன்ஸ் போட்டு இருப்பான்
, அவன் குடும்பத்தை
பற்றி சொல்ல பெரிதாய் ஒன்றும் இல்லை சிறுவயதிலே
பெற்றோரை இழந்தவன் அவனின் ஆச்சிதான் அவனை வளர்த்து ஆளாக்கினா அவளும்
சமீபத்தில் தான் இறந்து போனாள் இருக்க ஒரு மண் வீடு இருக்கு இது மட்டும்
தான் அவனுக்கு சொத்து வர வருமானதை தன்னுடைய துணிகளுக்கும் நண்பர்களுடன்
சேர்ந்து ஊர் சுற்றவும் விஜய் படம் ரீலீசான்னா தியேட்டர்ல கட்
அவுட்டுக்கு என்று செலவழித்து கொண்டு காலத்தை கடத்தியவன் .மரகதத்தை ஒரு
நாள் தியேட்டர் வாசலில் சந்தித்தான் தோழிகளுடன் படத்திற்கு வந்தவள் டிக்கெட்
கிடைக்காமல் யாராவது வாங்கி தருவார்களா என்று கேட்டு கிளம்பியவள்
படிக்கட்டில் தடுமாறி விழப்போக அவளை தாங்கி பிடித்தான் கணேசன்
.
அந்த
கூட்ட நெரிசலில் இவர்களின் இந்த சந்திப்பை யாரும் பார்க்கவில்லை என்றாலும்
இவளுக்குள் ஒரு பதட்டமும் ,அச்சமும் கூடவே இணைப்பாக வெட்கமும் வந்து
சற்றென்று அவன் கைகளில் இருந்து விளக்கி கொண்டால் .கணேசனும் எதையோ பரிகொடுதவனை
போல சற்று நேரம் நின்றுவிட்டு பின் இயல்புக்கு வந்தான் .
இது
எதேச்சையாய் நடந்தாலும் அடுத்தடுத்து பல முறை சந்திக்க நேர்ந்த போது அவளையும்
அறியாமல் அவளுக்குள் ஒரு வெட்கம் குடிவந்ததை உணர்ந்தால் கணேசனும்
அவளின் மேல் உள்ள காதலை நண்பர்களுடன் சொல்ல அவர்கள் அதை ஊதி பெரிதாக்கி
விட்டார்கள் .
இவர்கள்
அடிகடி சந்தித்து பெசிகொள்வதும் தியேட்டருக்கு படத்திற்கு செல்லுவதுமாக
போய் கொண்டிருந்த காதல் வாழ்வில் புயல் ஓன்று வீசியது. மரகதத்தின்
மாமா வேலுச்சாமி வடிவில் தியேட்டரில் பார்த்த விசயத்தை அப்பாவிடம்
சொல்ல அதை கேட்டதும் கோபத்தில் அவளை அடித்த அடி அவள் வீட்டைவிட்டு
வெளியேற காரணமானது பொறுமையாக கண்டித்திருக்கலாம் இல்லையெனில் புத்திமதி
சொல்லி திருத்தியிருக்கலாம் எடுத்ததும் வன்முறையில் இறங்கினால் பாதிக்கபடுவது
யார்? இவள்தானே
என்ன
செய்ய அன்று வந்தவளை வேறு வழியில்லாமல் நண்பர்களோடு அருகில் இருக்கும்
சித்தி விநாயகர் கோவிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கி கொண்டான்
கணேசன் ஒரு ஆரம்பத்தில் அடக்கமாக அமைதியாக நல்ல கணவனாக மரகதத்தை மகிழ்வித்தான்
இந்த மகிழ்ச்சி குறுகிய காலம் தான் நீடித்தது அவனின் நண்பர்கள்
திருமணதிற்கு பார்ட்டி வை என்று சொன்னார்கள் என்று ஒரு நாள் குடித்துவிட்டு
வந்தான் அப்போதே அவனை கண்டித்து இருந்தால் மனைவி மேல் இருக்கும்
காதலில் ஒரு வேளை திருந்தியிருப்பான் .அப்போது விட்டுவிட்டால் அதன்
பின் மூன்று மாதத்தில் தாயாகிவிட்டாள் அதற்க்கு பார்ட்டி என்று கடன உடன
வாங்கி தண்ணி அடிச்சிட்டு வந்தான் .
ஒரு நாள்
வேட்டி அவிழ்ந்து விழும் அளவிற்கு தடுமாறி வந்தவனை கண்டு பயந்துபோனாள்
மெதுவா வாய திறந்து பேச ஆரமிச்சா மரகதம் "இப்படி தண்ணி அடிச்சிட்டு
படுத்துகிட்டா யார் வந்து கஞ்சி ஊத்துவாங்க நம்ம பிள்ளைய யார்
பார்த்துக்குவாங்க இனிமே நண்பன் கின்பன்னு எவன்கூடாவாது போநீங்கன்னா நல்லா
இருக்காது ஆமா " என்று சத்தம் போட்டவளை முதல் முறையாக எட்டி உதைக்கிறான்
புள்ளதாச்சி புள்ளன்னு கூட பார்க்காம கோவமும் போதையும் அவன் கண்ணை
மறைக்குது வலி தாங்காமல் துவண்டு விழுகிறாள் மரகதம் அன்னைக்கு
சிறிதாக
ஆரமிச்சது இன்று இரண்டு குழந்தைக்கு தாயாகி விட்டால் இன்னும் அவன்
மாறவில்லை நண்பர்களோடு சேர்ந்து மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கும் அளவிற்கு
வந்துவிட்டான்.
இவர்களை
நினைத்துக்கொண்டே எப்போது உறங்கினாளோ தெரியவில்லை கோழி கூவும் சத்தம்
கேட்டு மெல்ல எழுந்து பார்க்கிறாள் மரகதமும் பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்தார்கள்
என்ன பாவம் செய்தாலோ இந்த பாழா போன பெண் ஜென்மம் எடுக்க
என்று நினைத்துகொண்டே அவளை எழுப்புகிறாள்
" மரகதம் எழுந்திருடி உன் புருஷன் மப்பு
தெளிஞ்சு உன்ன காணாம மறுபடியும் தெருவுள
நின்னு சத்தம்போடபோறான் போ போய் அவனுக்கு கஞ்சி தண்ணி கொடு. பிள்ளைகளுக்கு
வவுத்துக்கு கொடுத்துட்டு வா " என்று அனுப்பி வைத்தால் .
மரகதம்
வீட்டை நோக்கி நோக்கி நடக்கிறாள் அந்த வீடு அவளுக்கு அந்நியமா இருக்கு
நேற்று நடந்த சம்பவங்கள் கண்முன் வந்துபோக எல்லாத்தையும் அடக்கி மென்னு
முழுங்கி விட்டு உள்ளே போகிறாள் கணேசன் நேற்று விழுந்த இடத்தில அப்படியே
கிடக்கிறான் ஆடை அலங்கோலமா வாய் திறந்தபடி இன்னும் போதை தெளியாமல்
கிடக்கும் அவனை கண்டு அவளுக்கு கோபம் வந்தாலும் குழந்தைகளை நினைத்து
மனதை சமாதானம் செய்துகொண்டு வீட்டை சுத்தம் செய்து அடுப்பில்
உலை
வைக்கிறாள் குழந்தைகளுக்கு தண்ணி கொடுத்து குடிக்க
வைத்து விட்டு வந்தவள்
கசங்கிய அந்த காகிதத்தில் இருந்த தொலைபேசி என்னை ஒரு முறை பார்த்துகொண்டால்
.வள்ளி அக்கா கொடுத்த அந்த தொலைபேசி எண் அவளுக்குள் ஒரு நம்பிக்கை
கொடுத்தது பத்திரப்படுதிகொண்டு சமைக்க ஆரமிக்கிறாள் தன் வாழ்வையும்
இனி புதிதாய் சமைக்கும் தருணத்தை எதிர்நோக்கி .
கணேசன்
அடுக்களை சத்தம் கேட்டு கண் முழிக்கிறான் தட்டு தடுமாறி வந்து நா குழற
" மரகதம் குடிக்க ஏதாவது குடு தல வலிக்குது ன்னு சொல்லிட்டே பக்கத்துல
உட்கார்ந்தவனை கண்டு குழந்தைகள் மிரண்டு விழிக்கிறது, மரகதம் அவனுக்கு
தண்ணி கொடுக்கிறாள் எதுவும் பேசாத அவளின் மௌனம் அவனை பேச வைக்கிறது
"நேத்து உன்ன ரொம்ப அடிசிட்டேனா மன்னிச்சுக்க மரகதம் நான் குடிக்க
கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனா முடியல பாரு இனிமேல் நான் குடிக்க மாட்டேன்
உன்ன அடிக்கவும் மாட்டேன் இது நம்ம குழந்தைங்க மேல சத்தியம்" என்றான்
இதோடு ஆயிரம் சத்தியம் செய்தாயிற்று குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சி
என்று சலித்து போனால் மரகதம் இப்போது அவள் ஒரு வைராக்கியத்தோடு இருக்கிறாள்.
தன்னை திடப்படுத்திக்கொண்டால் அவன்
வேலைக்கு கிளம்பிவிட்டான் இரவுதான் வருவான்
மறுபடியும் குடித்துவிட்டு கூச்சல் போடுவான்.
குழந்தைகளை
குளிக்க வைத்து அவர்களுக்கு உடை மாத்தி தானும் கிளம்பினால் தேவையான
துணி குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள் சில கைப்பையில் அடைத்து எடுத்துக்கொண்டு
வீட்டை விட்டு வெளியேறுகிறாள் .வள்ளி அக்காவிடம் தன் முடிவை
சொல்லுகிறாள் அவள் மறுப்பேதும் சொல்லவில்லை மரகதம் புறப்பட்டுவிட்டால்
புதிதாய் ஒரு வாழ்க்கையை தன் குழந்தைகளுடன் தனக்காக சுதந்திரமாய்
வாழ துணிந்து நடக்கிறாள் பாரதியின் புதுமை பெண்ணை போல .