ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday 25 December 2013

போட்டிச் சிறுகதை-42


சிறுகதை-அந்திம இருளுக்குள் சில மின்மினிகள்


        இருள் கவியத் தொடங்குவதற்கு முந்தைய மாலை நேரம்; பொழுதும் சூழலும் மிக ரம்மியமாக இருந்தது. எச்சில் வைத்துத் துடைத்த குழந்தையின் சிலேட்டைப் போல வானம் வெறுமையாய் விரிந்து கிடந்தது -  மாரிமுத்துவின் மனதைப் போல. ஒருவேளை நட்சத்திரங்கள் வானத்தினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கலாம்; ஆனால் அவனுக்குள் நம்பிக்கையின் சிறு ஒளிக்கீற்றும் மிச்ச மிருக்கவில்லை.

        முற்றுப் புள்ளியை நோக்கி நகரத் தொடங்கிவிட்ட தன்னுடைய நாட்களின் வெறுமையை அசை போட்டபடி அவன் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தான். சில தவறுகளை நிவர்த்திக்கவே முடியாதபடி காலம் கடந்து விடுகிறது. அழித்து அழித்து எழுத வாழ்க்கை ஒன்றும் கரும் பலகை இல்லையே!

        மாரிமுத்துவுக்கு மரண நாள் குறிக்கப் பட்டு விட்டது. அவன் உதிர அணுக்களில் உறைந்து, பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் நோய்க் கிருமிகள் அவனை உருக்குலைத்து அவனின் உயிரைத் தின்று தீர்க்கப் போகின்றன. வெளிப் பார்வைக்குத் தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் உடல் நைந்து போகத் தொடங்கி விட்டதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. சிறு காய்ச்ச லென்றாலும் பல நாடகள் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாகி விடுகிறது. சிறியதாய் ஏதாவது காயமேற்பட்டாலும் ஆறுவதற்கு அனேக நாட்களாகின்றன.

        இனியும் மருந்து மாத்திரைகளால், அவனது மரணத்தை தள்ளிப் போடுவது சாத்தியமில்லை என்பது அவனுக்கே உறைக்கத் தொடங்கி விட்டது. அவன் மரணத்தை எதிர் கொள்ளத் தயாராக வேண்டியதுதான்... இனி அவன் வாழப் போவது மிகச் சில மாதங்கள் தான். நாற்பத்தைந்து வயதில் நீ மரணிக்கப் போகிறாய் என்றால், யாரால் தான் சந்தோஷப்பட முடியும்? ஆறுதலுக்குக் கூட யாருமில்லாத வாழ்க்கையில் மரணம் ஒரு விடுதலை தான் என்று மனதைத் தேற்றிக் கொள்ள முயன்றான்.

        ஒருவேளை கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் அந்த சக்தியிடமாவது முறையிட்டு அழுது தீர்க்கலாம். இத்தனை நாள் எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்து விட்டு, மரணம் நெருங்குவதை எதிர் கொள்ள முடியாமல் புதிய நம்பிக்கைகளை வரித்துக் கொள்வதற்கும் அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த மாதிரி நெருக்கடிகள் தான் ஆதி மனிதனுக்கு கடவுள் நம்பிக்கைகள் உருவாக காரணமாக இருந்திருக்குமோ?

        ”கைரேகை பார்க்குறீங்களா சாமி; நடந்தது, நடக்கிறது, நடக்கப் போறதுன்னு முக்காலமும் சொல்வேன் ” மிக நெருக்கத்தில் கேட்ட குரல் அவனின் நினைவுகளைக் கலைத்தது. கையில் கருப்புக் கோலொன்றை உருட்டியபடி மாரிமுத்துவிற்கு முன் நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். முதுமையின் நிழல் அவள் முகத்திலும் தலையிலும் தன் சுவடுகளை அழுத்தமாகக் கீறி இருந்தது. ஆனால் கண்களில் ஒரு தீட்சண்யமான ஒளி மின்னியது. நெற்றியில் பெரிதாய் அகலமாய் பொட்டு வைத்திருந்தாள். அந்தக் காலத்து மனுஷி என்பதற்கு அடையாளமாகப் பின் கொசுவம் வைத்து சேலை கட்டியிருந்தாள். சென்னையில் இப்பொழுதெல்லாம் இப்படி யாரும் சேலை கட்டி அவன் பார்த்ததில்லை.

        ”அதெல்லாம் வேண்டாம்மா...” என்று நகர்ந்து போனான். “உங்க மனசுல இருக்குற சஞ்சலம் எல்லாம் சருகு போல பறந்துரும் சாமி....” தொடர்ந்து வந்தாள் அவள். முதல் முறையாக மாரிமுத்துவிற்கும் இவள் என்னதான் சொல்கிறாள் என்று கேட்டுப்பார்க்க இலேசான ஆசை கிளர்ந்தது. கொஞ்ச நேரம் பொழுதாவது கழியுமே! “எவ்வளவு கேட்ப...?” என்றான். தூண்டிலில் மீன் சிக்கி விட்ட சந்தோஷத்தில் “சோசியம் பார்த்துச் சொல்ல, சொத்தையா எழுதிக் கேட்கப் போறேன்; முடிஞ்சதக் குடுங்க சாமி....”என்றபடி கைகளைப் பிடித்துக் கொண்டாள் அவள்.

“அதெல்லாம் வேண்டாம்... எவ்வளவு தரணும்னு இப்பவே சொல்லீரு; அதுக்கப்புறம் உன் கூட      வாக்குவாதம் பண்ணீட்டு இருக்க முடியாது...” என்றான் பிடிவாதமாய்.
       
         ”நான் அப்படியெல்லாம் அதிகமா கேட்குற பொம்பள இல்ல சாமி.... சரி, பார்த்து முடிச்சுட்டு, ஒரு பத்து ரூபா குடுங்க சாமி... அதுக்கு மேல நீங்க இஷ்டப் பட்டால் குடுக்கலாம்” என்றாள்.
       
         இவளுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்க  ஆசை வந்தது அவனுக்கு. ”சரி இப்படி வச்சுக்கலாம்; நீ சரியாச் சொல்ற ஒவ்வொரு பாயிண்டுக்கும் பத்து ரூபா தருவேன்; தப்பா சொன்னீன்னா எதுவுமே தர மாட்டேன்.... டீலுக்கு சம்மதமா?” என்றான் கைகளை உயர்த்திச் சிரித்துக் கொண்டே!
       
         ”நம்பணும் சாமி; நான் சொல்றது ஜக்கம்மா வாக்கு.... தப்பவே தப்பாது....”
       
        ”அதெல்லாம் இல்ல; நான் சொல்ற கண்டிசனுக்கு ஓ.கே.ன்னா கைரேகை பாரு.... இல்லைன்னா உன் வழியப் பார்த்துட்டு போய்க்கிட்டே இரு.....” என்று அங்கிருந்து நகரத் தொடங்கினான் அவன்.
       
        அவள் பின்னாலேயே ஓடி வந்து, “சரி சாமி; நீங்க சொல்றபடியே, சரியா இருந்தா மட்டும் பணம் குடுங்க....” என்றாள். ”ஆனா, குறி கேட்டுட்டு காசு குடுக்காமாப் போயிடாதீங்க சாமி; அப்புறம் ஜக்கம்மா சபிச்சுடுவா....” என்றபடி மாரிமுத்துவின் கைகளில் சோதிடக் கோலை ஓட்டியபடி கண்களை மூடி ஏதோ முணுமுணுத்தாள். அப்புறம் தெலுங்கில் ராகம் போட்டு பாட்டு மாதிரி படித்தாள்.

        ”சாமியோட மாதரசி இங்கருந்து தெக்கால நானூறு மைல் தொலைவுல இருக்காங்க; முத்து முத்தா மூணு குழந்தைங்க; அவங்களப் பிரிஞ்சிருக்கதால நீங்க ரொம்பவும் சஞ்சலத்தோடவும் கவலையாயும் இருக்கீங்க; சரியா சாமி....” என்று நிறுத்தி அவனின் முகம் பார்த்தாள். மாரிமுத்துவின் மனதுக்குள் காலம் பின்னோக்கி பாய்ந்தது.

                        *****             *****             *****

          அவனுக்கு அருப்புக்கோட்டைக்கு அருகில் பஸ் போக்குவரத்தே இல்லாத மருளங்குடி என்னும் குக்கிரமம் தான் சொந்த ஊர். படிப்பு வாசனை அறியாத ஏழை விவசாயக் குடும்பம்; மத்தியானச் சாப்பாட்டிற்காக பள்ளிக்குப் போய் படிக்க ஆரம்பித்தவனுக்கு, படி படி என்று நச்சரிக்க யாருமில்லாததாலோ என்னவோ விளையாட்டுப் போல, நன்றாகவே படிப்பு வந்தது.

        பந்தல்குடியில் போய் பத்தாம் வகுப்புவரை படித்து, அப்புறம் அய்யாவிடம் கெஞ்சியும் அடம் பண்ணியும் கோவில்பட்டியில் போய் பாலிடெக்னிக்கில் சிவில் என்ஜினிரிங் படித்தான். அதுவே குடும்பத்திற்கே கஞ்சி ஊத்திக் கொண்டிருந்த மூன்று ஏக்கர் கரிசல் நிலத்தை காசாக்கித் தான் சாத்தியமானது.     படித்து முடித்தவனுக்கு வேலை கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக இருந்தது. கல்யாணச் சமையல், பெயிண்டிங், சேலை வியாபாரம் என்று கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தான்.

        “இந்த வேலைகள் செய்றதுக்கு இம்புட்டுப் படிப்பு படிச்சுருக்கனுமாப்பா...! காட்டை விக்காம இருந்திருந்தா கஞ்சிப்பாட்டுக்காவது கஷ்டமில்லாம இருந்துருக்குமில்ல....” என்று அம்மாவும் அய்யாவும் அரற்றிக் கொண்டிருந்தார்கள்.

         தினக்கூலி அடிப்படையில் அழகாபுரி அணைக்கட்டில் போய் டெக்னிக்கல் அசிஸ்டெண்டாக ஆறுமாசம் போல வேலை பார்த்தான். அங்கு அவனுடன் ஒரே இடத்தில் தங்கி வேலை பார்த்துப் பழக்கமான நாகேந்திரனின் மூலம்  ஒரு அரசாங்க வேலைகளை டெண்டரில் எடுத்துச் செய்யும் காண்ட்ராக்டரின் முகவரி கிடைத்து அவரை சென்னையில் போய்ச் சந்தித்து வேலை கிடைக்குமா என்று கேட்டான்.

        அவர் சென்னையில் தற்போது வேலை எதுவும் இல்லை என்றும் ஆனால் தங்களின் கம்பெனிக்கு விழுப்புரத்தில் ஒரு அரசாங்க அலுவலகக் கட்டிடம் கட்டும் பணி கிடைத்திருப்பதாகவும், அங்கேயே தங்கியிருந்து அந்த வேலைகளை மேற்பார்வை செய்வதானால் உடனேயே சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். சம்மதித்தான்.         

        அடுத்த நாள் அவருடைய காரிலேயே வேலைத்தளத்திற்கு அழைத்துப் போனார். அஸ்திவார வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. சேலம், மதுரை, திருச்சி, சென்னை என்று பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த வேலை ஆட்கள் வேலைத் தளத்திலேயே குடிசைகள் அமைத்துத் தங்கி இருந்தார்கள். அங்கிருந்து நடந்து போகும் தூரத்தில் காண்ட்ராக்டர் வந்து போனால் தங்கிக் கொள்வதற்காக ஒரு சிறு வீடும் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்த வீட்டில் ஓர் அறையில் மாரிமுத்துவும் தங்கிக் கொள்ள ஏற்பாடானது.

        பக்கத்தில் ஒரு ஹோட்டலில் காண்ட்ராக்டரின் சிபாரிசில் அக்கௌண்ட் வைத்துச் சாப்பிட்டுக் கொண்டான். சாப்பாட்டில் இவன் அதிகம் ருசி பார்ப்பதில்லை என்றாலும் ஹோட்டல் உணவு இவனுக்கு ஒத்துக் கொள்ளாமல் அடிக்கடி வயிற்றுக்கு உபத்திரம் கொடுத்தது.வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருந்தான்.

        வேலைத்தளத்தில் அடிக்கடி சிமெண்ட் மூட்டைகள் காணாமல் போவதை அவன் வேலையில் சேர்ந்த மிகச் சில நாட்களிலேயே கண்டுபிடித்தான். அதனால் காண்ட்ராக்டரிடம் பேசி ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியின் மூலம் இரவுக் காவலுக்கு குமரேசன் என்றொருவனை ஏற்பாடு செய்தான்.

        சிமெண்ட் மூட்டைகள் அடுக்கப் பட்டிருக்கும் அறைச்சாவி குமரேசனிடம் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் மாரிமுத்து காலையில் வேலைக்கு வந்தபின்பு அவனிடம் சாவியை ஒப்படைத்து விட்டு இரவுக் காவலன் போக வேண்டுமென்று ஏற்பாடானது. அதற்கப்புறம் வேலைத்தளத்தில் திருட்டு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

        ஒருநாள் இரவு நல்ல தூக்கத்தில் இருந்த போது வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. கழிவறை போய்விட்டு மறுபடியும் வந்து படுத்தவனுக்கு அறவே தூக்கம் பிடிக்க வில்லை. மணி பார்த்தான். மூன்று மணி ஆக பத்து நிமிடங்கள் இருந்தன. இனி எங்கே தூங்குவது என்று, அப்படியே காலாற நடந்து வேலைத் தளத்திற்குப் போனான்.

        பகலில் கூச்சலும் குழப்புமும் பரபரப்புமாய் இயங்கும் வேலைத்தளம் இரவில் வெகு அமைதியாய் உறைந்து போய்க் கிடந்தது. மணலிலும் வெட்ட வெளிகளிலுமாய் அங்கங்கே வேலை ஆட்கள் சிலர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரவுக் காவலாளியைத் தேடினான். அவனும் அலுவலகத்தினுள் இரண்டு மேஜைகளை இணைத்துப் போட்டு அதன் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

        மாரிமுத்துவிற்கு ஆங்காரமாய்க்  கோபம் வந்தது. அவனைத் தட்டி எழுப்பினான். “இதுதான் நீ டூட்டி பார்க்கும் இலட்சணமா.....”  என்று ஆரம்பித்து கண்டபடி திட்டத் தொடங்கி விட்டான். கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த குமரேசன் சட்டென்று அவனிடம் கையை நீட்டி “போதும் சார்; இத்தோட நிறுத்திக்குங்க... “ என்ற கோபமாய் ஆரம்பித்தவன், மனசு உடைந்து திடீரென்று ஆற்ற மாட்டாமல் அழத் தொடங்கி விட்டான்.

        “உங்களுக்கு வாய்ப்பும் வசதியும் இருந்துச்சு; என்ஜீனியராயிட்டீங்க... எனக்கு அது அமையல; இப்படி செக்யூரிட்டியா இராத்தூக்கமில்லாம கஷ்டப் படுறேன்.... அதுக்காக என்ன வேணுமின்னாலும் பேசுவீங்களா.   வேணுமின்னா செக்யூரிட்டி ஏஜென்சியில கம்ப்ளையின் பண்ணி என்னை வேலையில இருந்து நிறுத்திக்குங்க...” என்றான் துக்கம் பொங்கும் குரலில்.

        “உங்களுக்கு வாய்ப்பும் வசதியும் இருந்துச்சு; என்ஜீனியராயிட்டீங்க... எனக்கு அது அமையல...” அவன் சொன்ன வாக்கியமும் அதை அவன் சொன்ன விதமும் மாரிமுத்துவை நெகிழ்த்தி விட்டது. எவ்வளவு பெரிய உண்மை; எத்தனை பேருக்கு இங்கு வாய்ப்புகளும் வசதிகளும் வாய்க்கின்றன......!

        ”கம்ப்ளையின் எதுவும் பண்ணலப்பா .... கொஞ்சம் முழிச்சிருந்து டூட்டி பாரு....” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு தன்னுடைய அறைக்குப் போய் விட்டான்.

        காலையில் இவன் வேலைத் தளத்திற்குப் போன போது, “ஸாரி சார்; நேத்து வீட்டுல கொஞ்சம் பிரச்னை. பகல்ல தூங்க முடியல; அதான் இராத்திரி டூட்டி நேரத்துல அசந்துட்டேன்....” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில். “பரவாயில்லப்பா, இன்னைக்காவது நேரத்தோட போய்த் தூங்கு....” என்று அனுப்பி வைத்தான்.

        அடுத்து வந்த நாட்களில் அவனை அறிந்தவர்களிடமும் அவனிடமேயும் விசாரித்து அறிந்து கொண்ட தகவல்கள்: குமரேசனுக்கு சொந்த ஊர் விழுப்புரத்திற்கு அருகில் ஏதோ கிராமம். அவனுடைய பெற்றோர் விவசாயக் கூலிகள். மாரிமுத்து எஸ்.எஸ்.எல்.சி.யில் நானூற்றுச் சொச்சம் மார்க் எடுத்திருந்தும் குடும்பத்தின் ஏழ்மை காரணமாகத் தொடர்ந்து படிக்க முடியாமல் மொத்த குடும்ப பாரமும் இவன் தலையில் தான்.

        எல்லாக் கிராமங்களைப் போலவே அவனது ஊரிலும் ஜாதிக் கட்டுமானம் மிகவும் வலிமை பொருந்தியதாய் இருக்கிறது. இவர்கள் அடிமட்டத்திலிருக்கும் மிக எளிய ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவனுக்கு மூன்று தங்கைகள். மூத்தவள் சரளாதேவியை ஊரில் வலிமையான ஜாதிவைச் சேர்ந்த ஒருவன் காதலித்திருக்கிறான்; இவளும் தான். இருவரும் ஊரை விட்டு ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டு ஒருவாரம் போல் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். பையனின் வீட்டில் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, கிராமத்திற்கு இழுத்து வந்து சரளாதேவியின் குடும்பத்தை மிரட்டி அவளை வீட்டில் விட்டுவிட்டு அவனுக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இவர்களால் கதவடைத்து கதறி அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

        ஒருநாள் குமரேசன் மாரிமுத்துவிடம் மிகவும் தயங்கித் தயங்கி “எனக்கொரு உதவி பண்ணுவீங்களா சார்...” என்றான். கிராமத்தில் தங்களால் தொடர்ந்து வாழ முடியாத சூழல் நிலவுவதாகவும், மாரிமுத்து அனுமதித்தால் தன்னுடைய குடும்பத்தையே இங்கு அழைத்து வந்து ஒரு குடிசை போட்டுத் தங்கிக் கொண்டு, இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு மெஸ் மாதிரி நடத்திப் பிழைத்துக் கொள்வதாகவும் சொன்னான். காண்ட்ராக்டரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அனுமதித்தான். மாரிமுத்துவும் அவர்கள் தொடங்கிய மெஸ்ஸிலேயே சாப்பிட்டுக் கொண்டான். அன்றிலிருந்து அவனது வயிற்று உபத்திரமும் காணாமல் போய்விட்டது.

        மாரிமுத்து நிறைய புத்தகங்கள் படிப்பான்; எப்போதும் அவனது கையில் ஏதாவது நாவலோ சிறுகதைத் தொகுப்போ அல்லது இலக்கியம் சம்பந்தமான ஏதாவது புத்தகமோ இருக்கும். குமரேசனின் மூத்த தங்கை சரளாதேவிக்கும் கொஞ்சம் வாசிக்கிற கிறுக்கு இருந்தது. அந்தக் கிறுக்கு அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கச் செய்து, நாளாவட்டத்தில் அதுவே அவர்களுக்குள் ஒரு நேசத்தையும் துளிர்விடச் செய்தது. அந்த நேசம் அவர்களை சர்வ சாதாரணமாக உடல் கலப்பு வரை இழுத்துச் சென்றது.

        விழுப்புரத்தில் வேலையெல்லாம் முடிந்து, அவன் விடை பெறுகிற நாளில் ஒரு தனிமையான சந்திப்பில், சரளாதேவி மாரிமுத்துவிடம் “அவ்வளவு தானா நம்ம உறவு; இனிமேல நாம சந்திக்கவே முடியாதா?” என்று கண் கலங்கினாள். மாரிமுத்து அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கவும், அதை அவன் முகத்தில் எறிந்தவள் “என் கூடப் படுத்துக் கிட்டதுக்கு கணக்கு பைசல் பண்றியா? ஏந்தான் எல்லா ஆம்பிளைகளும் இப்படி ஒரே மாதிரி இருக்கிறீங்களோ? எத்தன தடவ சூடுபட்டாலும் எனக்கு இன்னும் கூட புத்தி வரல... நானென்ன தேவிடியாளா? நம்ம நேசத்தை இதை விட மோசமாக் கேவலப் படுத்த முடியாது....” என்று வெடித்து அழுதாள்.

        மாரிமுத்து சரளாதேவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அவனது கிராமத்திற்குப் போனான். அவனது வீட்டிலும் முதலில் சரளாதேவியை மாரிமுத்து மணமுடிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை; ஆனால் மாரிமுத்து மிகவும் பிடிவாதமாகத் தன் முடிவில் உறுதியாக நிற்கவும், தாங்கள் சம்மதிக்கவில்லை என்றாலும் எப்படியும் அவளை கல்யாணம் பண்ணிக் கொண்டு தங்களிடமிருந்து விலகிப் போய் விடுவான் என்று தோன்றியதால், அவனின் குடும்பத்தினர் அரை மனதோடு இருவருக்கும்  கல்யாணம் செய்து வைத்தர்.

        இல்லற வாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது. திருமணமாகி ஒரு வருஷம் கூட முடிவதற்குள்,  அவனுக்கு சவூதி அரேபியாவில் ஒரு கட்டுமானக் கம்பெனியில் வேலை கிடைத்தது. இவனுக்கு ஒரு பைசா செலவு கிடையாது. டிக்கெட், விசா எல்லாம் கம்பெனி செலவு. ஒரு வருஷத்திற்குப் பிறகு மனைவிக்கும் விசாவும் ஃபேமிலி ஸ்டேட்டஸும் தருவதாக உறுதி அளித்திருந்தார்கள். இரண்டு வருஷக் காண்ட்ராக்ட்; அப்புறமும் தேவைக் கேற்ப புதுப்பிப்பதற்கான வாய்ப்பு; இந்தியாவில் நினைத்து பார்க்க முடியாத சம்பளம்!

        ”சரளாதேவியை மணமுடித்த யோகம் தான்....” என்று அய்யாவே அபிப்ராயம் சொன்னார். ஊரும் அப்படித்தான் என்று ஆமோதித்தது

        சந்தோஷமும் கனவுகளுமாய் கம்பெனியின் விதிகளின்படி, அவர்கள் குறிப்பிட்டிருந்த மருத்துவ மனையில், மருத்துவப் பரிசோதணைகளுக்குப் போன போதுதான், அவனுடைய இரத்தத்தில் எயிட்ஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உலகமே ஒரு நிமிஷம் ஸ்தம்பித்துப் போன உணர்வு தோன்றியது அவனுக்கு.

        அதிர்ச்சியிலும் விரக்தியிலும், ஆண்மகன் அழக்கூடாது என்கிற வைராக்கியத்தையும் மீறி, மனசைக் கட்டுப் படுத்தவே முடியாமல் கதறினான் மாரிமுத்து. ”கண்ட்ரோல் யுவர் செல்ஃப் மேன்.... இனிமே அழுது ஒரு பிரயோசனமும் இல்ல; அழுகைய முழுங்கிட்டு, நான் கேட்குற கேள்விக்கெல்லாம், நல்லா யோசிச்சு, நிதானமா பதில் சொல்லுங்க....” டாக்டர் இலேசாய்க் கடிந்து கொண்டார். கண்களில் பெருகும் கண்ணீரையும் மூக்கில் ஒழுமும் சளியையும் கர்சீப்பால் துடைத்துக் கொண்டு, கேள்விகளுக்கு தயாராகிற பாவணையில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

        ”மனைவி தவிர, விலைமகளிர் அல்லது வேறு பெண்கள் யார் கூடயாவது எப்பவாவது செக்ஸ் வச்சுக்கிட்டதுண்டா?” என்றார் டாக்டர். ”இல்லை....” என்று சத்தியம் செய்தான் மாரிமுத்து.

        ”ஹோமோ செக்ஸ் அதாவது ஆண்கள் கூடவே ஒருபால் உறவு எதுவும் வச்சுக்கிட்டதுண்டா?”

        அருவருப்பாய் முகம் சுளித்து “இல்லை....” என்று தலையாட்டினான். இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் தான் ஆளாகிவிட்டோமே என்று கழிவிரக்கம் மேலிட, உதடு கடித்து அழுகையை முழுங்கிக் கொண்டான்.

        ”உடம்புல, எங்கயாவது எப்பவாவது பச்சை குத்திக்கிட்டு இருக்கீங்களா?” 

        ”அய்யோ, அந்த வலி எல்லாம் என்னால தாங்கிக்க முடியாது டாக்டர்; எனக்கு விபரம் தெரிஞ்சு இதுவரைக்கும் நான் ஊசி கூட குத்திக்கிட்டது கெடையாது டாக்டர். காய்ச்சல் தலைவலின்னு ஏதாவது வந்தாலும் டாக்டர்கள் கிட்ட கெஞ்சி மாத்திரை, டானிக்குன்னு வாங்கித் தான் சாப்ட்டுக் குணமாக்கிக்குவேன்; ஊசின்னா, சின்ன வயசுலருந்து அப்படி ஒரு பயம்.....”

        ”கோவிச்சுக்காதீங்க; உங்க மனைவிக்கு உங்களத் தவிர வேறு யார் கூடயாவது.....” டாக்டர் கேள்வியை முடிப்பதற்குள் “இல்லவே இல்ல டாக்டர்....” என்று சொல்லி மறுபடியும் கதறி அழுதான். ”சரி, எப்படியோ உங்க இரத்தத்துல ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருக்குங்குறது கன்பார்ம் ஆயிருச்சு; நீங்க உங்க மனைவியையும் அழைச்சுட்டு வாங்க.... அவங்களையும் டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம்....” மருத்துவர் இறுதியாகச் சொல்லி அனுப்பி வைத்தார். மாரிமுத்து வேறு சில கிளினிக்குகளிலும், அரசாங்க மருத்துவ மனைகளிலும் டெஸ்ட் பண்ணிப் பார்த்தான். அவர்களும் அவனுடைய இரத்ததிதில்  ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருப்பதை உறுதிப் படுத்தினார்கள்.

        டாக்டர்களின் ஆலோசணைப்படி மனைவியையும்  அழைத்துப் போய் சோதித்தபோது அவளுக்கும் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பை நிறைய மாத்திரை மருந்துகளும், மனசு நிறைய வலிகளும் சுமந்தபடி சோர்வுடன் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார்கள். நீண்ட நாட்களுக்கு வேதணையை தங்களுக்குள் மறைத்து வைக்கத் தெரியாமல், ஊருக்குள்ளும் செய்தி மெல்ல பரவியது.

        ”ஒழுங்கா உத்தம்மா இருந்த புள்ளையோட வாழ்க்கை ஒரு கேவலமான பொம்பளையால, எப்படி அழிஞ்சுருச்சுன்னு பார்த்தியா? பெரியவங்க சும்மாவா சொன்னாங்க; மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்னுட்டு......”

        ”முன்னப் பின்ன விசாரிக்காம, சாதி சமயம் பார்க்காம, காதல் கத்தரிக்காய்னு, செவத்த தோலுக்கு ஆசைப்பட்டு எவன் கூடயோ ஏற்கெனவே ஓடிப் போய்வாழ்ந்தவளை இழுத்துக்கிட்டு வந்து குடும்பம் நடத்துனா, இப்படித்தான் லோல் படணும்.... இவனுக்கு முன்னால அவள் எத்தன பேரு கூட படுத்து எந்திரிச்சாளோ....!”

        ”பட்டினத்தார் அன்னைக்கே பாடி வச்சுருக்காருல்ல....எத்தனை பேர் தொட்ட முலை; எத்தனை பேர் நட்ட குழியோன்னு.... அதை இவன் தலையில சுமக்கணும்னு விதி இருந்துருக்கு....!”

        ”எந்தப் புத்துல எந்தப் பாம்போ? இவன் மட்டும் எம்புட்டு யோக்யமுன்னு யாருக்குத் தெரியும்! சும்மா அபாண்டமா அந்தப் புள்ளையவே குத்தம் சொல்லக் கூடாதுல்ல.... இவனும் ஊர் ஊராய்ப் போய் சேலை வியாபாரமெல்லாம் பண்ணுன பயல் தான! எந்தச் சிறுக்கிக்கு சேலையக் குடுத்து விழுந்தானோ?”

        ஊரில் பலரும் பலவிதமாய், அசிங்க அசிங்கமாய் கதை பேசி இருவரின் அந்தரங்கங்களையும் கொச்சைப் படுத்தினார்கள். மாரிமுத்துவிற்கு, ‘தனக்கு எப்படி எயிட்ஸ் வந்திருக்கும்?’ என்ற கேள்வி மூளைக்குள் முள்ளாய்க் குத்திக் கிழிக்கத் தொடங்கியது. டாக்டர் இவனிடம் உங்க மனைவிக்கு உங்களத் தவிர வேறு யார் கூடயாவது... என்று கேட்ட போது அவசரமாக மறுத்தாளும் அவளின் ஒழுக்கத்தின் மீது தான் அவனுக்கும் சந்தேகம் வலுத்தது. நோய் பற்றிய பயமும், அதற்கான உறுதியான காரணமறியா கோபமும் சேர்ந்து இவனுக்குள் வெறியாகக் கிளம்ப, சரளாதேவி கதறக் கதற, அவளின் ஆயிரம் சத்தியங்களையும் உதறிவிட்டு அவளை அவளுடைய ஊரில் போய் விட்டு விட்டு வந்தான்.

        மாரிமுத்துவாலும் ஊருக்குள் இயல்பாய் நடமாட முடியவில்லை. எல்லோருக்கும் இவன் மேல் இலேசான அனுதாபம் இருந்தாலும், எங்கே அவனுடைய நோய் தனக்கும் தொற்றிக் கொள்ளுமோ என்கிற அதீத பயத்தில் அவனை நெருங்கவே பயந்தார்கள். இவன் பொது இடங்களில் நடத்தப் படுகிற விதம் நோயின் கொடுமையை விட மோசமானதாய் இருந்தது. ”பொதுக் கிணத்துல எல்லாம் குளிக்காதீங்க தம்பி; தண்ணி சேந்திட்டுப் போய் வீட்டுல குளிங்க; மத்தவந்க எல்லோரும் குளிக்கணுமில்ல...” என்றார்கள்.

        ”ஹோட்டலுக்கெல்லாம் வராதீங்க மாரிமுத்து; எது வேணுமின்னாலும் அம்மா அல்லது அய்யா கிட்ட பணம் குடுத்து அனுப்புங்க; நாங்க குடுத்தனுப்புறோம்....” கரிசனம் காட்டுவது போல் நெஞ்சில் சூடு இழுத்தார்கள்.

        வீட்டில் தனித்தட்டு, தனி டம்ளர் என்று பிரித்து வைத்து, இவனுக்கு உணவு பரிமாறப் பட்ட போது, சுக்கு நூறாக உடைந்து சிதறிப் போனான். இனியும் ஊரிலிருந்தால் நோயினால் சாவதற்கு முன்னால், இவர்கள் தன்னை புறக்கணித்தும் புறம்பேசியுமே சாகடித்து விடுவார்கள் என்ற உண்மை உறைக்க, ஊரைவிட்டே கிளம்பினான் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல்.

        போக்கிடம் இல்லாத சந்நியாசியாய் கால் போன திசைகளில் நடந்து, தன்னைப் பற்றி முன்பின் அறிந்திராத ஊர்களில் தங்கி கிடைத்த வேலைகளைச் செய்தான். கொஞ்ச நாட்களுக்கப்புறம் வேறு ஊர் மாறினான்.  வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல், தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் மரண பயம் துரத்த, விட்டேற்றியாக அலைந்து கொண்டிருந்தான்.எப்பவாவது சரளாதேவி பற்றிய நினைப்பு வந்து, கரிசனம் பிறந்து கண்ணோரம் கசியும்.

        அப்புறம் ‘அந்த சண்டாளியால் தான் தனக்கு இந்த நிலைமை....” என்று கோபப்பட்டு, அவள் நினைப்பை உதறுவான். இருந்தாலும் மனசின் ஓரத்தில் அவள் மோசமானவளாக இருக்க முடியாது என்று ஓர் உள்ளுணர்வு அவனுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

        சிலநாட்கள் இடைவெளியில் இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து அவனுடைய நீண்ட நாள் தேடலுக்கு விடை தேடிக் கொடுத்தன. முதல் சம்பவம், அவன் தினப்பத்திரிக்கை ஒன்றில் வாசித்த பரபரப்பு செய்தி.

           பக்தர்கள் பீதி: திருப்பதியில் மொட்டை போட்டுக் கொண்டால்
எயிட்ஸ் வர வாய்ப்பு ....

        திருப்பதியில் மொட்டை போடும் போது, பெரும்பாலான நாவிதர்கள் கத்தியையே பயன் படுத்துகிறார்கள் என்றும், ஒருவேளை ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் உள்ள ஒருவருக்கு மொட்டை போடும் போது, இலேசான கீறல் விழுந்து வெளியேறும் இரத்தத் துளியிலுள்ள கிருமிகள், கத்தியிலேயே தங்கி இருந்து, அடுத்தடுத்து மொட்டை போடுபவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அதன் மூலம் அவர்களுக்கும் எயிட்ஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிஞர்கள் கருதுவதால் பக்தர்கள் பீதி அடைகிறார்கள் என்றும், இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம், இனிமேல் மொட்டை போடுவதற்கு பிளேடுகளையே பயன்படுத்தும் படியும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி புது பிளேடுகளையே உபயோகிக்கும் படியும் பணித்திருப்பதாகவும் செய்தியில் இருந்தது.

        இரண்டாவது சம்பவம் மாரிமுத்து கொஞ்சமும் எதிர்பாராத இடத்தில் நாகேந்திரனைச் சந்தித்தது. மருந்தே இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக விளம்பரப் படுத்தி நோயாளிகளின் அறியாமையைக் காசாக்கும் போலி மருத்துவர் ஒருவரிடம் மாரிமுத்து சிகிச்சைக்காக போயிருந்த போது, அங்கு நாகேந்திரனும் வந்திருந்தான் அவனும் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக.

        மாரிமுத்து அழகாபுரி அணைக்கட்டில் டெக்னிக்கல் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தபோது, நாகேந்திரனுடன் ஒரு வீட்டின் மாடி அறையைப் பகிர்ந்து கொண்டு தங்கியிருந்தான். அவனுக்கு தேனிக்குப் பக்கத்தில் ஏதோ கிராமம். வசதியான வீட்டுப் பையன்.

         உலகத்து சந்தோஷங்களை எல்லாம் அந்த நிமிஷமே அனுபவித்து விடுகிற வெறியோடு அலைந்து கொண்டிருப்பான். மதுவும் மாதுவுமாய் எப்போதும் ஒரு போதை மிதப்பிலேயே இருப்பான். திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் போய்விட்டு வந்து விலைமாதர்களிடம் கழித்த சந்தோஷங்களைச் சலிக்கச் சலிக்க சொல்லி மாரிமுத்துவின் தூக்கத்தையும் கலைத்திருக்கிறான்.

        நாகேந்திரனைப் பார்த்த மாத்திரத்தில், மாரிமுத்துவிற்கு அவன் சில தினங்களுக்கு முன்பு தினப் பத்திரிக்கையில் வாசித்திருந்த செய்தி பளிச்சென மூளையில் மின்னி, அவனுக்கு எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வந்ததற்கான காரணம் சுரீரென உறைத்தது.

        எயிட்ஸ் என்னும் ஒரு நோய் இருப்பதே கவனத்திற்கு வராத அந்த கால கட்டத்தில், தன்னுடன் தங்கியிருந்த நாகேந்திரன் ஷேவ் பண்ண உபயோகித்த பிளேடை, வெறுமனே தண்ணீரில் கழுவி விட்டு பல தடவைகள் மாரிமுத்துவும் உபயோகப் படுத்தியிருக்கிறான். ஷேவ் பண்ணும் போது, அவ்வப்போது இரண்டு பேருக்குமே முகத்தில் கீறல்களாய் வெட்டுப்பட்டு காயங்கள் ஏற்பட்ட நாட்களும் அனேகம்.

        விலைமாதர்களிடம் வெகு சரளமாய் பாலியல் தொடர்பு வைத்திருந்த நாகேந்திரனின் இரத்தத்தில்  அப்போதே ஹெச்.ஐ.வி. கிருமிகள் இருந்திருப்பதற்கான சாத்தியங்களும் அதிகம். ஒரே பிளேடை இருவரும் உபயோகப் படுத்தியதின் மூலம் வெட்டுக் காயத்தின் வழியே ஹெச்.ஐ.வி. கிருமிகள் மாரிமுத்துவின் இரத்தத்திலும் குடியேறி பல்கி, பெருகி.....தேடலின் வேர்கள் கிடைத்த அந்த நிமிஷமே தன் மனைவி சரளாதேவியைத் தேடிக் கிளம்பினான் மாரிமுத்து.

        காவிய காலச் சீதைக்குக் கூடத் தன் கற்பை தீக்குளித்து நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப் பட்டது. ஆனால் அது கூட மறுக்கப்பட்ட சரளாதேவி, மாரிமுத்துவால் புறக்கணிக்கப்பட்டு ஊருக்குப் போன சில வருஷங்களிலேயே தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். அந்தத் தகவல் கூடத் தெரியாமல் இவ்வளவு நாட்கள் இருந்திருக்குறோமே என்று எண்ணமே அவனை குற்ற உணர்ச்சி கொள்ள வைத்தது.
                       
**** *       *****        *****

        மனசுக்குள் நினைவுகள் பீறிட மாரிமுத்து எதுவும் பேசாமல் சோதிடம் சொல்பவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

        ”என்ன சாமி, ஒண்ணுஞ் சொல்லாம அப்படிப் பார்த்துக்கிட்டு இருக்குறீங்க? உங்களோட மாதரசி அதான் சாமி பொண்டாட்டி சொந்த ஊர்ல இருக்காங்க; முத்து முத்தா மூணு பிள்ளைங்க; அவங்களப் பிரிஞ்சிருக்கதால தான் நீங்க ரொம்ப சஞ்சலத்தோடவும் கவலையாயும் முக வாட்டத்தோடயும் இருக்கீங்க; சரியா சாமி....” என்று அவள் முதலில் சொன்னதை மறுபடியும் சொல்லி, நிறுத்தி அவனின் முகம் பார்த்தாள்.

        அவன் சிரித்துக் கொண்டே “அப்புறம்; மேல சொல்லு....” என்றான்.

        ”சாமி வெளிநாட்டுக் கெல்லாம் போயி வேலை பார்த்துட்டு வந்துருக்கணும்....” என்றபடி மறுபடியும் அவன் முகம் பார்த்தாள். இந்தமுறை அவன் சத்தமாகவே சிரித்து விட்டான்.

        ”இதுவரைக்கும் போகலைன்னா இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள கண்டிப்பா போவீங்க; அதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு சாமி....” என்றாள் கொஞ்சமும் நம்பிக்கை குறையாமல்.

        ”ம்.... அப்புறம்.....?” என்றான் அசிரத்தையாய்.

        ”சாமிக்கு ஆயுள் கெட்டி; எண்பதைந்து வயசு வரைக்கும் உயிரோட இருப்பீங்க....” என்றாள்.

        இந்த முறை அவனுக்கு சிரிப்பு வரவில்லை. ஆச்சர்யமாக அவளைப் பார்த்தான். “நெஜமாவா சொல்ற..!” என்றான் ஆர்வம் பொங்க. “நான் சொல்லல சாமி; என் வாக்குலருந்து ஜக்கம்மா சொல்றா; எண்பதைந்து வயசுக்கு ஒரு நாள் முந்திக் கூட எமனோட பாசக் கயிறு உங்க நிழலக் கூட நெருங்க முடியாது....” என்றாள்.

        அவளின் குரலில் இருந்த உறுதி மாரிமுத்துவை ஆச்சர்யம் கொள்ள வைத்தது. பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய்த் தாளொன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் வாங்கிக் கொண்டு அவனின் தலையை விரல்களால் தடவி நெட்டி முறித்து ஆசிர்வதித்தபடி கிளம்பிப் போனாள். அவனும் சந்தோஷமும் நம்பிக்கையுமாய் புதிதாய் ஓர் உற்சாகம் பீறிட தன் நடையைத் தொடர்ந்தான்.