ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday, 2 December 2013

போட்டிச் சிறுகதை-8

சிறுகதை-ஈமோபீலியா


கொழும்பு ஆஸ்பத்திரியின் ஒரு கட்டிலில் இருந்தவாறே நான் புலம்பிக் கொண்டிருந்தேன். வேறொன்றுமல்ல வழமையான ஈமோபீலியா தான். தமிழில் சொன்னால் குருதியுறையா நோய். எனக்கு ஈமோபீலியா ஏ வகை.உடலில் குருதி உறைவதற்குத் தேவையான ஃபாக்டர் 8 பற்றாக்குறையால் ஏற்படுகின்ற நோய். இதெல்லாம் நான் படித்து அறிந்ததல்ல. பிரைவேட் கம்பனியொன்றில்  கணக்காய்வாளராய்ப் பணிபுரியும் எனக்கு இந்த அறிவு தேவையுமில்லை. இவையெல்லாம் எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் எனக்குச் சொன்னது. உடலிழையங்களில் குறிப்பாக மூட்டுகளில் ஏதாவது சிராய்ப்பு ஏற்படும் போது அதிகமாய் குருதி வெளியேறி நரம்புகளை அழுத்துவதால் தாங்க முடியாத வலி ஏற்படும். அந்த டாக்டர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் காதில் ரீங்காரமிட்டன. டாக்டர் சொன்ன அதே வலி தான் சந்தேகமில்லை. இருபது வருடங்களாய் என் கூடவே இருப்பதைப் பற்றி எனக்குத் தெரியாதா என்னஇருபது வருடங்களானாலும் வலியின் வீரியம் மட்டும் சற்றுக் குறையவில்லை. சுள் சுள்ளென்று ஆயிரம் ஊசிகளால் குத்துவது போன்ற உணர்வு. தாங்க முடியவில்லை.          அம்மாஅம்மாஎன்று கத்திக் கதறிக் கொண்டிருக்கிறேன். யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. டாக்டர்கள், நர்ஸ்கள் அனைவரும் யாரோ ஒரு நோயாளியை சூழ்ந்து நின்று ஏதோ கதைப்பதும் எதையோ அளவிடுவதுமாய் இருக்கின்றார்கள். அந்த நோயாளியின் முகத்தில் பயமும் களைப்பும் தெளிவாய்த்  தெரிந்தது.கண்மணிகள் சற்று அதிகமாக விரிந்திருந்தன. சற்று கஷ்டப்பட்டு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். எல்லோர் கண்களும் அவன் மீது தான் படிந்திருந்தன. என்னை எவரும் திரும்பிக் கூட பாரக்கவில்லை. வலியில் உயிர் போய்விடும் போல் தோன்றியது. அம்மா என்று தன்னிச்சையாக கதறியது என் வாய். ஈமோபீலியா ஒன்றும் என்னைக் கொல்லப்போவதில்லை என்று எனக்கு சர்வநிச்சயமாய்த் தெரியும். டாக்டர்கள் இதைப் பற்றி தெளிவாக எனக்கு விளக்கியிருந்தனர். இந்த வலி தான் பெரிய தொல்லை. வலியிலிருந்து இப்போதைக்கு தப்பிக்க எனக்கு தெரிந்ததெல்லாம் ஒரே வழி தான். அது வேறெதுவுமல்ல என் மனதை அலைபாயச்செய்வது. வலியைப் பற்றி எண்ணாமல் வேறு பல எண்ணங்களிலும் கனவுகளிலும் மிதக்கும் தருணங்களில் வலி இல்லாமல் போய்விட்டது போன்ற உணர்வு ஏற்படும். அதைத்தான் இப்போது செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்.
திடீரென்று என் தோளில் கத்தியால் குத்தியது போன்றிருந்தது.வாய் அம்மா என்று அரற்றியது.கண்களின் ஓரமாய் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள்.ஏதோ ஞாபகத்தில் கையை சற்று அதிகமாக அசைத்து விட்டேன். அது தான் இப்படி வலிக்கிறது.அம்மா!!!போருக்கு பலியான என் தாயையும் தந்தையையும் எண்ணி பலமுறை மனதளவில் அழுதிருக்கின்றேன். மனதில் இருக்கும் வேதனைகளை கண்ணீரால் கழுவ ஆசைப்பட்டிருக்கின்றேன்."ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாதுடா" என்று அறிவுரை கூறும் சொந்தங்களும் "பாருடா பெட்டை மாதிரி அழுகிறான்டா" என்று என் வயதொத்த இளைஞர்கள் பரிகசிப்பார்களோ என்ற பயமும் என் கண்ணீர்ச் சுரப்பியை கட்டிப் போட்டிருந்தன. ஒவ்வொருவரது மனங்களின் ஆழத்திலும் காயங்கள் புதைந்து கிடக்கின்றன. அந்தக் காயங்களின் ஆழமும் அவை ஏற்படுத்தும் வலியின் வீரியமும் அதே போன்றொரு காயத்தை அனுபவித்தவருக்குத் தான் தெரியும். மற்றவர்களுக்கு அது வெறும் சம்பவம் / கதை. இந்தக் காயங்களுக்கு கடவுள் தந்த மருந்து தான் கண்ணீர். கண்ணீர் விட்டு அழுத பின்னால் மனம் சுமை தணிந்து லேசானது போல் ஒரு உணர்ச்சி ஏற்படும். தனிமையில் என் பெற்றோரை எண்ணி அழுத நாட்களில் நான் இதை தெளிவாக உணர்ந்திருக்கின்றேன். பலருக்கு தனிமையில் அழுவது பெரிய அசௌகரியமான விடயமாய்த் தெரியும். காரணம் அழும் போது தன்னை அரவணைக்க ஒரு கரத்தை எதிர்பார்ப்பார்கள். சிறுவயதில் அழும் போது என்னை அரவணைக்க என் தாய் இருந்தாள். தாயின் மார்பில் சாய்ந்து அவரது ஸ்பரிசத்திலும் அன்பான ஆறுதல் வார்த்தைகளிலும் துன்பங்களை மறந்து தூங்கிய நாட்கள் மறக்கப்படக் கூடியவையா என்னகடவுளே நீ எவ்வளவு கொடுமைக்காரன்?? உனக்கு பிரிவின் வலி தெரியுமாதனிமையின் கொடுமை தெரியுமா?  ம்ஹும் உனக்கெப்படி என் துயர் புரியும்புரிந்திருந்தால் என்னை இப்படித் தவிக்க விட்டிருப்பாயாநாள்தோறும் நீ நாள்தோறும் கேட்கும் லட்சக்கணக்கான இல்லை இல்லை கோடிக்கணக்கான கதைகளில் இதுவும் ஒன்று தானே. எனக்கு இப்போதெல்லாம் தனிமை பழகிவிட்டது. அது என் போலி முகமூடிகளை கழற்றிவிட்டு என்னை எனக்கே யார் என்று புரியவைக்கின்றது. யாருக்குத் தான் கவலைகள் இல்லைகாயங்கள் இல்லைகண்ணீரால் தம் காயங்களை கழுவ வேண்டும் என்று ஆசையில்லைஇமேஜ் என்ற ஒன்றை பாதுகாத்துக் கொள்வதற்காக முகமூடியணிந்து வேஷமிட்டுக் கொண்டு இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம். உலகத்தை எண்ணி ஒருமுறை வாய்விட்டுச் சிரித்தால் என்னஎன்று தோன்றியது. தன்பாட்டில் சிரித்தால் பைத்தியக்காரப் பட்டம் கிடைத்துவிடும் என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.


இவ்வளவு நேரமாகக் காணாமல் போயிருந்த வலி இப்போது படிப்படியாக அதிகரிப்பதை உணர்கிறேன்.வலியின் வீரியம் என் மனக்கட்டுப்பாட்டை வென்று கொண்டிருப்பது எனக்கு தெளிவாகத் தெரிகின்றது. எனது தோட்பட்டை முன்பை விட அதிகம் வலிப்பதாய்த் தோன்றியது.வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. என் இமேஜ் என்னாவது? வழமை போல முகமூடி அணிந்து கொண்டேன் அதாவது கண்ணீரை அடக்கிக் கொண்டேன். ஆனால் வலியின் வீரியம் என் முகமூடியை உடைத்தது, கதறி அழுதேன். என் அழுகை கேட்டு அருகிலிருந்த மெடிக்கல் ஸ்டுடண்ட்ஸ் இருவர் ஓடி வந்தனர். அவர்களுக்கு என் நிலை புரிந்திருக்க வேண்டும். மெதுவாக என் தோளை அழுத்தி ஆறுதலாக பேசினர். மனதுக்கும் உடலுக்கும் சற்று இதமாக இருந்தது. தலையைத் திருப்பி டாக்டர்களைப் பார்த்தேன்.அவர்கள் இப்போதும் அந்த நோயாளியைச் சூழ்ந்து தான் நின்று கொண்டிருந்தனர். எனக்கும் அந்த நோயாளிக்கும் வெறும் நான்கு கட்டில் இடைவெளி தான். என் அழுகை நிச்சயமாய் அவர்களுக்குக் கேட்டிருக்கும். ஆனால் அங்கே நின்ற நான்கு டாக்டர்களில் ஒருவரும் வந்து பார்க்கவில்லையே. இவர்களின் இதயம் கூட மரத்து விட்டதா? இல்லை என்னை மட்டும் புறக்கணிக்கிறார்களோ? சே! என்ன உலகம் இது? மனம் சலித்துக் கொண்டேன்.
இப்படி நிகழ்வது எனக்கு புதிதல்ல. நான்கு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை நான் இந்த வைத்தியசாலைக்கு வந்த போதும் இதே தான் நடந்தது. அப்போதும் டாக்டர்கள் அனைவரும் ஒரு நோயாளியை சுற்றி நின்றுகொள்ள நான் கவனிப்பாரற்றிருந்தேன். பக்கத்தில் நின்ற மெடிக்கல் ஸ்டுடன்ட் ஒருத்தி தான் எனக்கு ஆறுதல் கூறினாள்.
கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி? மீண்டும் அந்த டாக்டர் கூட்டத்தை நோக்கினேன். ஒரு நிமிடம் தலை சுழன்றது. இது அவள் தானா? பார்வையை கூர்மையாக்கி மீண்டும் அந்த பெண் டாக்டரை பார்த்தேன். சந்தேகமில்லை, அவளே தான்.நான்கு வருடங்களுக்கு முன் அநாதரவாய் இருந்த எனக்கு அன்பொழுக ஆறுதல் கூறிய அந்த முகம் என் மனதில் பசுமரத்தாணியைப் போல் பதிந்திருந்தது. அவள் கூட மாறிவிட்டாளே. மனம் நம்ப மறுத்தது. நிமிர்ந்து அருகில் நின்ற மெடிக்கல் ஸ்டுடண்ட்ஸ் இப்போதும் என் தோட்பட்டையை மெதுவாக அழுத்திக் கொண்டிருந்தனர். இவர்களும் மாறி விடுவார்களா?? என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்போது நர்ஸ் ஒருத்தி வந்து எனக்கு மோர்பின் இன்ஜெக்ஷன் போட்டு விட்டு சென்றாள்.
இனி வலி காணாமற் போய்விடும் என்ற மகிழ்ச்சியில் அந்த நோயாளியை நோக்கினேன். அந்த நோயாளி இப்போது முன்பை விட அதிகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். கண்கள் பாதி மூடிய நிலையில் இருந்தன. டாக்டர் ஒருவர் அந்த நோயாளியின் மார்பை வேகமாக அழுத்திக்கொண்டிருக்க இன்னொருவர் ஆக்ஸிஜன் மாஸ்குடன் இருந்த பையொன்றை வேகமாக அழுத்திக்கொண்டிருந்தார். ஏறத்தாழ ஐந்து நிமிடங்களின் பின் டாக்டர்கள் அனைவரும் கவலையான முகத்துடன் அந் நோயாளியை விட்டு விலகிச் சென்றனர். அடுத்த நிமிடம் ஒரு நர்ஸ் வந்து அந் நோயாளியை வெள்ளைத்துணியால் முழுமையாகப் போர்த்தினாள். என் தலையில் யாரோ  சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. அது வரை அமைதியாயிருந்த என் மனச்சாட்சி என்னைக் கேள்விகேட்கத் தொடங்கியது.உன் துயரங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்கிறாயே மற்றவர்களின் தேவைகளை/கவலைகளை நீ புரிந்து கொள்கிறாயா?
டாக்டர்களைத் திட்டினாயே அந்த நோயாளியைப் பற்றி ஒரு கணமாவது சிந்தித்தாயா? நீ எப்போதும் உன்னைப் பற்றித் தானே சிந்தித்தாய்.ஊருக்கு உபதேசம் உனக்கில்லையோ?”
என்று மனச்சாட்சி பலவாறாக கேள்வி கேட்டது. மோர்பினின் புண்ணியத்தில் தோட்பட்டை வலி காணாமல் போயிருக்க அதற்கும் சேர்த்து மனம் அதிகமாக வலித்தது.