ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday, 12 December 2013

போட்டிச் சிறுகதை-16

சிறுகதை-உயிரில்லா உயிர்

இது ஒரு வித்தியாசமான காதல் கதை. நிஜமாவே வித்தியாசம் தாங்க. நம்புங்க. எப்படி வித்தியாசம்னு சொல்றேன்னு கேக்குறீங்களா? எல்லாரும் யார் மேல அன்பா, பாசமா, காதலோட இருப்பாங்க? அப்பா, அம்மா, கூடப் பிறந்தவங்க, சொந்தக்காரங்க, நண்பர்கள், வீட்டில வளர்க்கிற செல்லப்பிராணிகள் இப்படித்தானே? ஆனால், நம்ம கதாநாயகன் யார காதலிக்கிறான்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்...

பெரிய சர்க்கஸ் கூடாரம்; அதில் ஏராளமான மக்கள்; பெரும்பாலும் குழந்தைகளே நிரம்பியிருந்தனர் அவ்விடத்தில். மகிழ்ச்சிக் குரல்களும் ஆரவாரங்களும் விண்ணை முட்டின. ஒற்றைச் சக்கர சைக்கிளில் சவாரி, நெருப்பு வளையத்திற்குள் குதிப்பது, அந்தரத்தில் ஊஞ்சல் என ஏராளமான சாகசங்கள் நடந்தேறிக்கொண்டிருந்தன. ஒருவர், மூன்று பந்துகளை வைத்து செப்படி வித்தை புரிந்து குதூகலப்படுத்திக்கொண்டிருந்தார்.

ராம், பாத்ரூமில் விடாமல் இருமிக்கொண்டிருப்பது வெளியில் மெதுவே கேட்டது. இருமிய ராமின் வாயிலிருந்து ரத்தம் வழிந்து வாஷ் பேசினில் விழுந்தது. மூச்சு வாங்கியபடியே ரத்தத்தைப் பார்த்தான். அவனது கண்கள் கலங்கிய நிலையில் இருந்தன. பாத்ரூம் கதவைத் தட்டும் ஒலி அவன் காதில் விழுந்தது.

"ராம் ! உன் ஷோ-க்கு நேரமாச்சு. சீக்கிரம் வா!" என்று அவனுடைய நண்பன் வெளியிலிருந்து கத்தினான்.

இதழின் ஓரத்திலிருந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, "ரெண்டு நிமிஷத்தில வரேன்" என்றான் ராம்.

ராம் ஒரு ரத்தப் புற்றுநோயாளி. வாழ்வின் விழும்பில் இருக்கிறான் அவன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் சம்பவித்துவிடும். அதை அவனும் நன்கு அறிவான். இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுக்கு, சொந்த பந்தம் என்று யாராவது இருந்தால் தானே அவர்களை விட்டுப் பிரியவேண்டுமே என்கிற கவலை இருக்கும். அந்த வகையில் அவன் அதிர்ஷ்டசாலி. இத்துணை கஷ்டங்கள் அவனை வாட்டிய போதிலும், அவனது வேலையை அவன் விரும்பிச் செய்தான். என்ன வேலை என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்...

ஆடை மாற்றும் அறைக்குச் சென்று தன்னுடைய ஜோக்கர் ஆடைக்கு மாறினான், ராம். வாய் பிளந்து சிரித்துக்கொண்டிருக்கும் முகமூடியால் தன் நிஜ முகத்தை மறைத்து அங்கிருந்து வெளியேறி ஷோ நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

மேடையில் அவனைக் கண்டதும் குழந்தைகள் ஆரவாரக் கூச்சலை வெளியிட்டார்கள். அக்கூச்சல் அடங்க நெடுநேரமானது. அவன் வேடிக்கை காட்டத் துவங்கினான். சைக்கிளை பல விதமாக ஓட்டினான். சிறு குழந்தை போல அங்கும் இங்கும் ஓடினான். திடீரென்று, மேலே அங்கும் இங்கும் தாவி எல்லோரையும் குஷிப்படுத்தினான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று வள்ளுவர் கூறியதைச் சரியாகப் பின்பற்றினான் ராம். அவன் சிரித்து நடனமாடி செய்த சேஷ்டையில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.

ஷோ முடிந்ததும், அன்று அவன் செய்த வேலைக்கான கூலியைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ராம். வரும் வழியில் சர்க்கஸில் வேலை செய்யும் நண்பனைச் சந்தித்தான்.

"எதுக்கு பாத்ரூம்ல அப்படி இருமின?" என்று விசாரித்தான் அவனது நண்பன். 

"உடம்பு சரியில்ல, அதான்" என்று மேலோட்டமாக விடையளித்துவிட்டு, மேலும் அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் விடைபெற்றான் ராம்.

சிறு வயதிலிருந்தே அனாதையாக வாழ்ந்தவன் ராம். எல்லோரும் அநாதை என்று அவன் மீது அனுதாபப்படுவது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. இதில், நோய் இருப்பது தெரிந்தால் இன்னும் அனுதாபப்பார்வை அவன் மேல் விழுந்து அவனைச் சுட்டெரிக்கும். அதனால் தான் பிரச்சனையை யாரிடமும் கூறாமல் மௌனம்காத்து வந்தான்.

ராம், ஏடிஎம்-க்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு, ஓரிடத்தை நோக்கி நடந்து சென்றான். அவனைக் கடந்து பல பேர் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் முகத்தில் அவசரத்தின் பிரதிபலிப்பு மின்னிக்கொண்டிருந்ததே தவிர ஆனந்தமில்லை. இதற்கு என் நிலைமையே பன்மடங்கு பரவாயில்லையென எண்ணி சோகப் புன்னகையை இதழில் மேயவிட்டான்.

சிறிது நேரத்தில் ஓர் அநாதை ஆஷ்ரமம் அவனை வரவேற்றது. அதனுள் சென்றான். அங்கிருக்கும் ஒரு கன்னிகாஸ்திரியிடம் தான் வைத்திருந்த பணம் முழுவதையும் அளித்தான்.

"இதைக் காலையிலேயே கொடுத்திருக்கலாமே? இந்த நேரத்தில வந்து கொடுக்குற அளவுக்கு அப்படி என்ன அவசரம்?" என்று அக்கறையுடன் விசாரித்தார் அநாதை ஆஷ்ரமத்தை நிர்வகிக்கும் அந்தக் கன்னிகாஸ்திரி.

"என் நிலைமை அப்படி இருக்கு" என்றான் ராம்.

கன்னிகாஸ்திரிக்கு அவன் கூறிய பதில் புரியவில்லை. அங்கிருந்து விடைபெற்று தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ராம்.

அவன் வாழ்வு போலவே வீடும் இருளாக இருந்தது. பூட்டியிருந்த கதவைத் திறந்தபடி, "என்ன அபர்ணா, அறையெல்லாம் இருட்டா இருக்கு? விளக்கு போடலையா?" என்று கேட்டுக்கொண்டே விளக்கை எரியவைத்தான்.

படுக்கையில் அபர்ணா போர்வையைப் போர்த்தியபடி உறங்கிக்கொண்டிருந்தாள். "என்ன, தூங்கிட்டு இருக்கியா?" என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குச் சென்றான் ராம்.

சமையலறையில் காஃபி தயாரித்துக்கொண்டே படுக்கையிலிருக்கும் அபர்ணாவின் காதுகளில் விழும்படி பேசலானான் ராம்.

"இன்னைக்கு சர்க்கஸ்ல ரொம்ப கூட்டம். சம்பளமும் அதிகமா கிடச்சுது. எல்லாத்தையும் அநாதை ஆஷ்ரமத்துக்கு குடுத்துட்டேன். அப்புறம் கையில கொஞ்சம் காசு இருந்துச்சு. அதில உனக்கு துணி வாங்கிட்டு வந்திருக்கேன். என்ன டிரஸ்னு கேக்க மாட்டியா? உனக்குப் பிடிச்ச பிங்க் கலர் டிரஸ் தான்"

ராம் தான் தயாரித்த காஃபியைக் குடித்தபடி, "இன்னும் என்ன தூக்கம்?" என்று கூறி போர்வையை விலக்கி அபர்ணாவைத் தூக்கினான். அவள் மிகவும் எடை குறைந்தவளாக இருந்தாள். மற்ற பெண்களின் மென்மையை விட அபர்ணா அதீத மென்மை பொருந்தியவளாக ராமின் கைகளில் தவழ்ந்தாள். 

"இந்த டிரஸ்ஸ போட்டுக்கோ அபர்ணா" என்று கூறி, அவனே அபர்ணாவுக்கு ஆடை மாற்றி விட்டான். (என்னடா இதுஇவன் அநாதை தானே? இந்த பொண்ணு எப்படி வந்தான்னு குழம்பிட்டீங்களா?)

ராமின் கையிலிருந்தது உயிரற்ற தலையணை. அந்தத் தலையணைக்குத்தான் புதிய உறையைப் போட்டு அழகு பார்த்தான் ராம்.

இன்னும் உங்களுக்கு புரியலையா?...

அபர்ணா உயிருள்ள ஜீவனல்ல. இத்துணை நேரம் 'அபர்ணா' என்று அவன் அழைத்து, ஓர் உயிருள்ள ஜீவனிடம் பேசுவதைப்போல் பேசிக்கொண்டிருந்தது இந்தத் தலையணையிடம் தான் . இந்தத் தலையணையைத் தான் ராம் காதல் செய்கிறான்.

என்ன? ஆச்சர்யமா இருக்கா? இவனைப் பைத்தியம் என்று எண்ணுகிறீர்களா? இவன் பைத்தியம் என்றால் நாமும் ஒரு வகையில் பைத்தியக்காரர்களே...

மலை மீதிருந்து ஒரு கல்லை எடுத்து, அதைச் சிலையாய் வடித்து, கோவிலில் கடவுளாக வைத்து, பல கடவுள்களின் பெயர்களை அதற்குச் சூட்டி, அந்தக் கல்லுக்கு ஒரு சக்தி இருக்கிறதென்று நம்பி எங்கெங்கோ தொலைவில் இருந்தெல்லாம் வந்து அக்கல்லைத் தெய்வமென்று தரிசிக்கிறார்களே? அவர்களெல்லாம் அறிவாளி என்றால் இவனும் அறிவாளி தான். பாராங்கல் கடவுள் ஆகலாம்; தலையணை அபர்ணாவாக முடியாதா?

அவனைப் பொருத்தமட்டில் அபர்ணாவிற்கு உயிர் இருக்கிறது. தன் வாழ்வில் நடக்கும் அத்தனை விசயங்களையும் அபர்ணாவிடம் தான் சொல்வான். ஏனென்றால், அபர்ணா தான் அவனைப் பாவமாய்ப் பார்க்கமாட்டாள்; அனுதாபமாய்ப் பேசமாட்டாள். உலகத்திலேயே அவன் பேசுவதை மௌனமாகக் கேட்பது அபர்ணா ஒருத்தி தான். தன் மேல் அனுதாபப்படுபவர்களை வெறுக்கும் ராமின் மனதிற்கு ஆறுதலாக அமைந்தாள் அபர்ணா.

இப்போது அவன் அபர்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான். நீங்க கேக்குறீங்களா? கேளுங்க...

"இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நாம வேற உலகத்துக்குப் போகப்போறோம். ரெடியா இரு. அங்க கண்டிப்பா நாம சந்தோசமா இருப்போம். நமக்குக் கண்டிப்பா சொர்க்கம் தான் கிடைக்கும். ஏன்னா, நாம நிறைய பேர சிரிக்க வச்சிருக்கோம். என்னடா, இன்னும் தூங்காம இருக்கேன்னு பாக்குறியா? இன்னும் கொஞ்ச நாள்ல தான் தூங்கப் போறேன்ல. அது வரைக்கும் முழிச்சிட்டு இருக்கேனே. உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு. என்ன? நீயும் தூங்கலையா?"

அன்று இரவு முழுவதும் அவனும் அபர்ணாவும் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லப் புறப்பட்டான் ராம்.

"டைம் ஆச்சு அபர்ணா. நான் போயிட்டு வரேன்".

அபர்ணா படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தாள். "நீ இரவு முழுக்க முழிச்சிட்டு இருந்ததால உனக்குத் தூக்கம் வருதுன்னு நினைக்கிறேன். நீ நல்லா தூங்கு" என்று தலையணையின் மேல் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு வெளியே சென்றான் ராம்.

அன்று அவன் ஷோ முடிய நெடுநேரமானது. அவன் வீடு செல்வதற்குப் பேருந்து கூட அன்று வரவில்லை. வேறு வழியில்லாததால் நடந்து சென்றான்.

அப்பொழுது ஒரு நாய்க்குட்டி சாலையின் குறுக்கே சென்றுகொண்டிருந்தது. அவன் நாய்க்குட்டியைப் பிடித்து, "இந்த சின்ன வயசிலேயே ரோடு கிராஸ் பண்ண பாக்குறியா?" என்று கூறி ஒரு ஓரமாக அதை விட்டுவிட்டு நடப்பதைத் தொடர்ந்தான்.

அப்பொழுது ஒரு கார் அவன் அருகில் வந்து நின்றது.

"லிப்ட் வேணுமா?" என்று காரில் இருந்தவர் ராமைப் பார்த்துக் கேட்டார்.

'என்ன அவனே வந்து லிப்ட் வேணுமான்னு கேக்குறான்? திருடனா இருப்பானோ?' என்று எண்ணினான் ராம்.

"வேணாம் சார். பக்கத்துல தான் வீடு இருக்கு. நான் நடந்தே போய்க்கிறேன்".

"அப்படிங்களா? சரி, வழியில ஒரு கம்பி இடிச்சி உங்க காலுல ரத்தம் வராம பாத்துக்கோங்க" என்று கூறிவிட்டுச் சென்றார் காரில் இருந்தவர்.

'இவன் ஏன் பைத்தியம் மாதிரி பேசிட்டுப் போறான்? எங்க கம்பி இருக்கு? எங்க ரத்தம்?' என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டே நடந்து செல்லும்போது வலியில் நீண்டிருந்த ஒரு கம்பியில் இடித்து அவன் காலில் ரத்தம் வழிந்தது. ராம் வலியால் துடித்தான். மீண்டும் அந்த கார் அவனருகில் வந்து நின்றது.

"லிப்ட் வேணுமா?" என்று காரில் இருந்தவர் மீண்டும் கேட்டார்.

ராமின் முகம் பயம் படர்ந்து கலவரமானது. மறுமொழி கூறாமல் நடந்து சென்றான் அவன்.

காரை மெதுவே ஒட்டியபடி, "இங்க இருந்து நாலு கிலோமீட்டர் நொண்டி நொண்டியா போவ?" என்று காரில் இருந்தவர் கேட்டார்.

"என் வீடு உங்களுக்குத் தெரியுமா?" என்று அதிர்ச்சி ரேகையை முகத்தில் படரவிட்டுக் கேட்டான் ராம்.

"உன் வீடும் தெரியும். உனக்கு கேன்சர் இருக்குன்னும் தெரியும். நீ எப்போ சாகப்போறேனும் தெரியும்" என்று அவர் கூறிக்கொண்டே போனார்.

ராம் மயக்கம் போட்டு கீழே விழாத குறை தான். ஏதும் பேசாமல் மலைத்துப்போய் காரில் இருந்தவரையே வெறித்துக்கொண்டிருந்தான்.

"கால் வலிக்கலியா? வண்டில ஏறு" என்று கூறினார் கார் ஓட்டுனர்.

ராம் மறுபதில் கூறாமல் தயங்கிய மனநிலையில் காரில் ஏறினான்.

"உங்களுக்கு என்னைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு, எப்படி?"

"நான் இருட்டுல இருந்து வெளிச்சத்துல இருக்கிற உன்ன பாத்துட்டு  இருக்கேன். நீ வெளிச்சத்தில இருந்து இருட்டைப் பாக்குற. இருட்டு மட்டும் தான் உனக்குத் தெரியும். அதுக்குள்ளே இருக்க என்னை உனக்கு தெரியாது" என்று விளக்கினார் கார் ஓட்டுனர்.

"சார், காமெடி பண்ணாம சொல்லுங்க. யார் நீங்க?"

"கடவுள்"

ராம் சிரிச்சான். "ஏதோ கிண்டல் பண்றிங்கனு தெரியுது. என்னைப் பத்தி விசாரிச்சி தெரிஞ்சிருப்பீங்கனு நினைக்கிறேன்"

"அப்படியா? அபர்ணா எப்படியிருக்கா?"

ராம் ஆச்சர்யத்தில அசந்து போய்ட்டான். "சாகப் போறவன் கண்ணுக்குக் கடவுள் தெரிவாருனு சொல்லுவாங்க"

"அப்போ நான் யாருன்னு சொல்லு"

ராம் விளங்காமல் விழித்தான்.

"இன்னுமா புரியல? நான் தான் கடவுள். அந்த நாலு சுவத்துக்குள்ள நீ அபர்ணா கூட பேசுறது எனக்கு எப்படித் தெரியும்னு பாக்குறியா? இன்னும் சொல்லட்டுமா?" என்று கூறி, காரை மிதமான வேகத்துடன் செலுத்திக்கொண்டே, "உன்னை எதுக்கு நான் பார்க்க வந்திருக்கேன்னு தெரியுமா? உனக்கு நிறைய கஷ்டங்கள் தான் குடுத்திருக்கேன். கடைசில சாகடிக்கப்போறேன். அதுக்கு முன்னாடி நீ சந்தோசமா இருக்கணும். அதுக்குத் தான் நான் வந்திருக்கேன். உனக்கு என்ன வேணும்?"

"தூக்குத்தண்டனைக் கைதியைப் பார்த்து, கடைசி ஆசை என்னவென்று கேப்பாங்களே? அது போல இருக்கு நீங்க பேசுறது" என்றான் ராம் சோகப் புன்னகையுடன்.

"இது விதி. மாத்த முடியாது. இருக்கப்போற இந்த கொஞ்ச நேரத்தில சந்தோசமா இருக்கணும்னு ஆசைப்படுற தானே?"

"எனக்கு எந்த ஆசையும் இல்லை. கடவுளே! என் வீடு வந்திடுச்சு நான் போறேன்" என்று கூறி இறங்கிச் சென்றான் ராம்.

அவன் செல்லும்போது, "நீ என்னைத் தேடி வருவாய்" என்று கூறிவிட்டு கடவுள் அங்கிருந்து சென்றார்.

ராம் வீட்டினுள் சென்றான். வீட்டினுள் சென்ற உடனே அபர்ணாவைக் கட்டிப்பிடித்து அழுதான்.

"அபர்ணா, இன்னைக்கு கடவுள் வந்தாரு தெரியுமா? உன்னால நம்ப முடியுதா? என்கிட்டே என்ன வேணும்னு கேட்டாரு. இதுக்கு மேல நமக்கு என்ன வேணும் சொல்லு. நான் பொறந்ததில இருந்து வேணும்னே கஷ்டப்பட வச்சிட்டு, இப்போ இரக்கப்படுற மாதிரி நடிக்குறாரு. கடவுள் ஒரு நல்ல நாடகக்காரன்" என்று கூறி அழுதான் ராம்.

அவனுக்குப் பயங்கரமாக இருமல் வந்தது. அதன் வெளிப்பாடாக அவன் வாயிலிருந்து வெளிவந்த ரத்தத் துளிகள் படுக்கையை நனைத்தது. கண்கள் இறுகி சிறிது நேரம் மயக்கமாய்க் கிடந்தான் ராம்.
மயக்கம் தெளிந்து கஷ்ட்டப்பட்டு எழும்பினான். அபர்ணாவை நோக்கினான். அவள் படுக்கையின் ஓரம் கிடந்தாள்.

"என்ன அபர்ணா? பேச மாட்டியா?" என்று கேட்டான்.

அபர்ணா ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பாவம்! தலையணை எப்படிப் பேசும்?

அப்பொழுது ஓர் ஆசை அவன் உள்ளத்தில் உதயமானது. அபர்ணா உண்மையிலேயே பேசினால் எப்படியிருக்கும் என்று எண்ணினான். அறையை விட்டு வேகமாய் வெளிவந்து, கடவுள் இருக்கிறாரா? என்று நோக்கினான். கடவுள் அங்கில்லை. எந்தப் பக்கம் சென்றிருப்பார்? என்று எண்ணி ஒரு திசையை நோக்கி ஓடினான். அவனால் ஓட முடியவில்லை. இருந்தும் ஓடினான்.

அப்பொழுது ஒரு குரல் அவன் காதுகளில் நுழைந்தது. அவனது ஓட்டம் தடைபட்டு நின்றது.

"நான் இங்கே இருக்கேன்" என்றார் கடவுள்.

ராம் திரும்பிப் பார்த்தான். கடவுள் காரின் மேல் உட்கார்ந்துகொண்டு சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

"என்ன? வேகமா ஓடி வர? மூச்சு வாங்குமே. இந்தா தண்ணி குடி" என்று ராமிடம் ஒரு வாட்டர் பாட்டிலை நீட்டினார் கடவுள். அதைப் பெற்றுக்கொள்ளாமல் பேசினான் ராம்.

"எனக்கு ஒரு ஆசை வந்திருக்கு. அதுவும் இப்போ தான்"

"அப்படியா?"

"ஆமாம்" என்று ராம் கூற விழையும்போது, "எனக்காக அந்தக் கடைல ஒரு சாக்லேட் வாங்கிட்டு வர முடியுமா?" என்று கேட்டார் கடவுள்.

சாக்லேட் வாங்க கடைக்கு ஓடிச் சென்றான் ராம்.

அவன் சென்றதும், கடவுள் முன்னால் ஒரு தேவதை தோன்றினாள்.

"நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல? ஒரு நாள் அவனோட அபர்ணாவா நீ இருக்கணும். ஒண்ணு புரிஞ்சிக்கோ. பாசம் மட்டும் வச்சிடாத. அது பின்னாடி கஷ்டத்தில கொண்டுபோய் விட்டுவிடும்" என்று தேவதையிடம் எச்சரித்தார் கடவுள்.

"சரி" என்று தேவதையும் மறைந்தது .

சாக்லேட்டோடு திரும்பினான் ராம். அதை வாங்கி அவனிடம் நன்றி கூறிவிட்டு காரில் ஏறினார் கடவுள். ராம் புரியாமல் விழித்தான்.

"வீட்டில அபர்ணா இருக்கா. சீக்கிரம் போ" என்று கூறி காரைக் கிளப்பிச் சென்றார் கடவுள்.

ராம் ஏதும் புரியாமல் தன் வீட்டிற்குச் சென்றான். அவன் வீட்டுக் கதவு திறந்திருந்தது. யார் திறந்திருப்பார்கள்? என்ற அச்சத்தோடு உள்ளே சென்றான்.

"எங்க போயிட்டு வந்திங்க?" என்றது ஒரு பெண் குரல்.

அதிர்ந்து, குரல் வந்த திசையை நோக்கினான் ராம். 

அங்கே அழகு தேவதையாய் அபர்ணா நின்றுகொண்டிருந்தாள். அவளின் அஞ்சன விழிகள் ராமின் முகத்தை ஊடுருவியது. 

"அபர்ணா !" என்றான் ராம் மெல்லிய குரலில்.

அவளுடைய விழிகள் ஆமாம் என்பது போன்று அவனை நோக்கின.

பொங்கியெழுந்த அழுகையோடு அவளைக் கட்டிக்கொண்டான் ராம்.

"அதான் நான் வந்துட்டேன்ல? அப்புறம் எதுக்கு அழுகை?" என்று அவனைத் தேற்றினாள் அபர்ணா.

"முதல் முறையா உன் குரலைக் கேக்குறேன் அபர்ணா" என்றான் ராம் அழுகையைக் கட்டுப்படுத்தியபடி. "என்னை விட்டுப் போகாதே. என் கூடவே இரு" என்றான்.

அவளால் அதற்குப் பதில் கூற முடியவில்லை. மௌனம் காத்தாள்.

ராம் அவளை உபசரித்தான். தான் சமைத்த உணவை, அவளுக்கு ஊட்டி விட்டான். அதில் பேரின்பம் கண்டான். அவனது பரிவால், தேவதை அவன் மேல் பாசம் கொண்டாள்.

ராம், அவளை வெளியே அழைத்துச் சென்றான். நெடுதூரம் நடந்தே சென்றார்கள். தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறிக்கொண்டே சென்றான். அவனது நிலையை உணர்ந்து மனதினுள் மிகவும் வருத்தப்பட்டாள் தேவதை. அவனைச் சந்தோசப்படுத்த, அவன் கையைப் பிடித்து வானை நோக்கிப் பறந்து சென்றாள். நடுவானில் நின்றுகொண்டு இருவரும் உலகைப் பார்த்து ஆனந்தப்பட்டனர்.

ராம் சீக்கிரத்திலேயே களைத்துப் போனான். இருவரும் ஒரு பூங்காவிற்குச் சென்றனர். அங்கிருந்த மரத்தடியில் இருவரும் அமர்ந்தார்கள். அபர்ணாவின் கைகளைப் பற்றியபடி அவளது முகத்தையே வெறித்துக்கொண்டிருந்தான் ராம். அவள் சென்றுவிடக்கூடாது என்கிற பயமும் அதற்குக் காரணம்.

"உங்களுக்குத் தூக்கம் வரவில்லையா?" என்று கேட்டாள் அபர்ணா.

"பயமா இருக்கு" என்றான் ராம்.

"எதுக்கு?"

"நீ என்னைத் தனியா விட்டுட்டு போயிடுவியா?"

"உங்க கூடவே தான் இருப்பேன். தூங்குங்க" என்றாள் அபர்ணா.

அரைமனதோடு அவள் மடியில் தலை சாய்த்துநிறைவான தூக்கத்திற்குள் சென்றான் ராம்.

விடியற்காலை நெருங்கியது. தேவதை கண்ணீர் சிந்தினாள். கடவுள் அவள் முன் தோன்றினார்.

"நான் தான் பாசம் வைக்காதேன்னு சொன்னேன்ல" என்று கூறிவிட்டு ராமின் உயிரை எடுக்கக் கீழே குனிந்தார்.

"வலிக்காம எடுங்க" என்று அழுதபடியே கூறினாள் தேவதை.

கடவுள் ராமின் முதுகை மெல்லத் தட்டிவிட்டு, "என்னை மன்னித்துவிடு" என்று கூறி அவன் உடலில் மறைந்திருந்த உயிரின் ஒளியை வெளியே எடுத்தார். ராம் ஒரு முறை வேகமாக மூச்சை உள்ளே இழுத்தான். அது திரும்ப வெளிவரவேயில்லை.

அபர்ணா கதறி அழுதாள்.

விடியற்காலை வந்தது. அபர்ணா தலையணையாக மாறினாள். தான் உயிராய் நினைத்த 'அபர்ணாவின்' மேல் தலைவைத்தபடி ராமின் உயிரற்ற உடல் அனாதையாகக் கிடந்தது.

******