ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday, 24 December 2013

போட்டிச் சிறுகதை-40

சிறுகதை-டைரி மில்க்


என்னைச் சுற்றிலும் மெதுவாக பார்த்தேன், டைல்சினால் சதுரமாக அமைக்கப்பட்ட பாத்தியில் பாதாம் மரம், அதனை சுற்றி சதுரமாக சிமெண்ட் பெஞ்ச், ஆங்காங்கே நின்று கொண்டே சாப்பிடும் டேபிள்களில் ப்ரூட்டியையும் பாதாம் மில்க்கையும் உறிஞ்சியபடி இளம்பெண்கள் அவர்கள் எதிரே நாசூக்காக பப்ஸையும் சிப்ஸையும் தின்றபடி இளம் ஆண்கள், அவர்களையும் தாண்டி தார் ரோடு இரண்டாக பிரிந்தது. இரு புறமும் கூட்டமாக சுடிதார்களே பெரும்பான்மையாக பேக் அணிந்து சென்று கொண்டிருந்தன. ஆண்கள் அதிகபட்சமாக கையில் ஒரு நோட். என்னிடமும் ஒரே ஒரு நோட். நான் அமர்ந்திருந்த கேண்டீனின் பின்புறம் தான் பஸ் ஸ்டாண்ட் இருக்கிறது.அங்கிருந்து இறங்கி கேண்டீனை கடந்து பின் காலேஜுக்குள் நுழைய வேண்டும். அங்கே தான் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் பஸ் வரவில்லை.

    அன்று கல்லூரி ஆண்டு விழா. கான்பரன்ஸ் ஹாலில் சேர்மன் தனது பக்கவாதம் வந்து சரி செய்யப்பட்ட வாயால் தான் அமெரிக்காவில் குடியுரிமை இருந்தும் தங்காமல் இங்கு வந்து காலேஜ் நடத்தும் தனது பொன்னான மனதை பற்றி உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அவர் பேசுவதை மிமிக்ரி செய்து கொண்டே சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்டாஃப் பார்த்துவிடவே சட்டெனே தலையை குனிந்து வலப்பக்கம் திருப்பிக்கொண்டேன்.அப்போது தான் அவளை முதல் முறையாக பார்க்கிறேன். தலையை சைடாக சாய்த்துக்கொண்டு தனது ஐடி கார்டை பார்த்துக்கொண்டிருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே சட்டென குளிர்ச்சியாக வியர்த்தது.மூச்சு விடுவது அப்பட்டமாக வலித்தது. மயக்கம் வருவது போல இருந்தது. பார்ப்பதை உணர்ந்துவிட்டாள் போலும்,திரும்பி பார்த்தாள்.தலையை குனிந்து கொண்டேன். இப்போது தான் சற்று சம நிலை அடைந்திருந்தேன். இதுதான் காதலா...? அப்படித்தான் என தோன்றியது.மீண்டும் மெதுவாக அவளை பார்த்தேன், வயிறு சற்று கவ்வியது. அவளை அடுத்து அமர்ந்திருந்த பெண்கள் எல்லோரும் வரிசையாக செல்போனை பார்த்தவாறு உக்கார்ந்திருந்தார்கள். அவள் மட்டும் இன்னுமும் ஐடி கார்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளின் கருப்பு நிற ஷாலின் ஊடே அவள் ஐடி கார்ட் தெரிந்தது.
Name : Gayathri.A அதன் கீழே “IBCA என போட்டிருந்தது. அட்ரசை பார்ப்பதற்குள் திருப்பிவிட்டாள். இதற்கிடையே, நான் இங்கேயே பார்த்துக்கொண்டிருப்பதை என் நண்பர்கள் பார்த்துவிட,

“என்னடா பாத்துட்டு இருக்க..?”

“ஒண்ணும் இல்லையே.”

   அதன் பின்னர் அன்று மாலையே அவளை மீண்டும் பார்த்தேன். கல்லூரி வாசலில் இளனியுடன் நின்று கொண்டிருக்கையில், 17ம் நம்பர் கல்லூரி பேருந்தில் சென்றாள். 17 நம்ம ஊர் ரூட்டாச்சே., நமக்கு தெரியாம எப்பிடி., என்று யோசித்தவாறே அவசர அவசரமாக இளனிக்கு காசை குடுத்துவிட்டு வண்டியில் பின்தொடர்ந்தேன். ஊருக்கு அரை கிலோமீட்டர் முன்னாடியே இறங்கி எங்கள் ஊரின் புற நகர்ப்பகுதி குடியிருப்புக்குள் நடந்து சென்றாள். இனி பின் தொடர்வது சந்தேகத்துக்கு வழி வகுக்கும் என நினைத்து பஸ் ஸ்டாண்டில் இருக்கும் கடையில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு டீயை வாங்கிக்கொண்டு எங்கே போகிறாள் என்று பார்த்தேன். அந்த சந்தில் மூன்றாம் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள். இதற்குள் இரண்டு முறை என்னை திரும்பி பார்த்துவிட்டாள். பயந்தவாறு பார்த்த மாதிரியே இருந்தது. இருந்தாலும் இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது. அவள் வீட்டிற்குள் நுழைந்த பின்பே கையில் சூட்டை உணர்ந்து டீயை குடித்துவிட்டு கிளம்பினேன்.இன்னிக்கே இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கணும்.

   நேராக ரவியண்ணன் சைக்கிள் கடைக்கு சென்றேன். அதை சைக்கிள் கடை என்று கூறினால் சைக்கிள் கடைக்காரர்கள் சங்கம் சேர்த்துக்கொண்டு என்னை அடிக்க வரும் வாய்ப்புண்டு. ஏனெனில், அது பெயருக்குதான் சைக்கிள் கடை மற்றபடி சைக்கிள் சம்பந்தப்பட்ட வேலையாக அங்கு நடப்பது பஞ்சர் பார்ப்பது மட்டுமே.மற்றபடி சகல வேலைக்கும் ஏன் ஒரு சின்ன ஸ்க்ரூ டைட்டு வைப்பதானாலும்., தா., பாருங்க அந்த முக்குல ஒரு கடை இருக்கும் அங்க போங்க.

ரவியண்ணனுக்கு வருமானம் இருக்கிறது. சீட்டு நடத்துகிறார். பைனான்ஸ் செய்கிறார். சைக்கிள் கடை ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. அதனால் அப்படியே தொடர்கிறார். ரவியண்ணன் முப்பத்தைந்து வருடமாக பேச்சுலர் தானே தவிர பல விஷயங்களில் அனுபவஸ்தர்.

என்னை போன்ற பசங்களுக்கு பல விஷயங்களில் ஆலோசகர். மற்றபடி எங்களுக்கு அது அரட்டை அடிக்க சிறந்த இடம் எங்க ஊரின் அனைத்து விசயங்களும் அங்கு அலசப்படும். எங்க ஊரின் என்சைக்ளோபீடியாவாக ரவியண்ணன்.

“வாடா, வாலிப பட்டதாரி.” என்னைத்தான்.

அண்ணா இன்னும் பட்டதாரி ஆகலன்னா.! இன்னும் ஒரு வருஷம் கழிச்சுதான்.

ஹும்ம்... அண்ணா உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு தான் வந்தேன்...நம்ம ஊருக்கு புதுசா ஏதாவது பொண்ணு குடி வந்துருக்கா..?

புதுசாவா., எனக்கு தெரிஞ்சு இல்லையே.....

இல்லனா.... தனலட்சுமி நகர்க்குள்ள...?

தனலட்... ஆமா.... நீ எதுக்கு கேக்குற.....

சொல்லுங்க.... சொல்றேன்..

தனலட்சுமி நகர்குள்ள உங்க காலேஜ்க்கு ஒரு பொண்ணு வருத்தில்ல.... அதுக்கு பக்கத்து வீட்லதான் புதுசா ஒண்ணு குடிவந்துருக்கு....வந்து 1 மாசம் ஆச்சு..

ஆமா,,, ஆமா எங்க காலேஜ் வருதில்ல அந்த பொண்ணு யாரு..?

டேய்... அது ஆரான் புள்ள.. அது உனக்கு தெரியாதா... அது அங்க வந்து ஆறு மாசம் ஆகுது....

காயத்ரி...?

ஆமா....

ஆறு மாசமா.... அதுக்கு முன்னாடி....?

அதுக்கு முன்னாடி ஆஸ்டல்ல படிச்சுது.. இப்ப வந்து காலேஜ் சேந்துருக்கு.....

ஹும்ம்...சொல்லுங்க.....

என்னத்தடா சொல்றது....?

அந்த பொண்ணப்பத்தி சொல்லுங்க....

அந்தப் புள்ளய பாக்கறயாக்கு....?

அதெல்லாம் அப்புறம் சொல்றன் சொல்லுங்க...

எனக்கு அவ்வளவு தான் தெரியும் என்னை உடு மொதல்ல...நீயி.

    இதன் பின்னர் நான் தினமும் இரவு மெத்தையில் படுத்துக்கொண்டு டைரியில் கவிதை எழுதுவதும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தாடியை ட்ரிம் செய்வதுமாக இருந்தேன். அடுத்த கட்டமாக கல்லூரியில் அவள் வகுப்பை கண்டுபிடித்து அவள் சீனியர்களிடம் பேசி அவள் ஃபோன் நம்பர் வாங்க முயற்சித்த போதுதான் தெரிந்தது அவளிடம் மொபைல் போன் இல்லையென்று. சகல வழிகளிலும் முயற்சித்தும் “இல்லை” என்பதே பதிலாக இருந்தது. மொபைலே இல்லாத பெண்ணிடம் பேசுவது எப்படி என ரவியண்ணனுக்கு கூட தெரியல.  இதன் பிறகு அவள் வகுப்பு பசங்க  மூலமாக அவளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தியதையும்.,”மச்சி என் ஆளுடா,,,,” என்பது போன்ற பிரத்தியேக கவனிப்புகளை கண்டும் காணாமல் இருந்து விடுவாள்.மிக அமைதியான பெண் போலும். இப்படி பின் தொடர்ந்து செல்லும் போதெல்லாம் கூட பேசும் தைரியம் வந்ததில்லை. காலையிலும் மாலையிலும் அதே டீக்கடையில் சென்று அவள் வரும் வரை நின்று டீ குடிப்பதும் அவள் மருண்ட விழிகளுடன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தவாறே கடந்து செல்வதும் தொடர்ந்தது. இப்போது ஒரு புது டெக்னிக் வைத்திருக்கிறாள். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நான் எங்கே என பார்த்துவிடுவாள் பின் என்னை நோக்கி திரும்பாமலே நடந்து சென்றுவிடுவாள். இப்படித்தான் ஒரு நாள் ஊர்த்திருவிழாவிற்கு அம்மாவுடன் வந்திருந்தாள். பின்னாலே வருவதை பார்த்த அவள் அம்மா  என்னிடம் வந்து தம்பி நீ யாரு பையன்..? என்ன வேணும் ஏன் பின்னாடியே வர...? என விசாரிக்க காதலின் சகல சுகங்களும் மறைந்து அது ஒண்ணும் இல்லைங்க என கூறிவிட்டு அவசர அவசரமாக திரும்பி விட்டேன்.இதன் பின்னர் தான் நாளைக்கு எப்பிடியாவது பேசிறனும் என தோன்றியது.

    இதோ அதற்குதான் கையில் ஒரு நோட்டோடும் நோட்டுக்குள் ஒரு டைரி மில்க்கோடும் கேண்டீனில் உக்காந்து பஸ்ஸ்டாண்டை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதோ 17 வந்துருச்சு... வரிசையாக இறங்கினார்கள். இதோ.,

“என்ன இது பச்சை கலர் சுடிதாரில் வருகிறாள்

தேவதைகளுக்கு டிரஸ் கோட் மாற்றி விட்டார்கள் போலும்.”

   சட்டென தோன்றியதை நைட்டு டைரியில் எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டு எழுந்து நின்றேன். மெதுவாக என்னை பார்க்காமலேயே என்னை நெருங்கினாள். என்னை கடந்து செல்கிறாள்.... இதோ இதோ..
.
கா...கா..காயத்.. அதற்குள் என்னைத் தாண்டி போய்விட்டாள்.

ச்சே.... பின்னாலேயே சென்றேன்.

கேண்டீனை தாண்டி., இடது புறம் ரோட்டில் திரும்பி ஆர்ட்ஸ் பிளாகினுள் நுழைந்து இரண்டு மாடி ஏறியும்விட்டேன். இன்னொருத்தியுடன் பேசிக்கொண்டே செல்லும் அவளை கூப்பிடவே முடியவில்லை... அவள் கிளாஸ் வரை சென்று விட்டேன். உள்ளே போய் விட்டாள்.

அடடா.....இப்ப என்ன செய்யலாம்.... என யோசித்தவாறே.... நிற்கையில்...                                                                 வெளியே அவள் சீனியர் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் சொல்லி அவளை கூப்பிடச்சொன்னேன். அவனும் சிரித்தவாறே உள்ளே சென்றான்...

இதற்குள் மனசுக்குள் ஒரு சின்ன ஒத்திகை பார்த்துக்கொண்டேன். அவள் இப்பிடி கேட்டால் இப்பிடி சொல்ல வேண்டும் எனக்கு உன்னை பிடித்திருக்குதுனு பட்டுனு சொல்லிருன்னு ரவியண்ணன் சொன்னாரு....
வெளியே வந்தாள்.நான் நேர்எதிரே நின்று கொண்டிருக்க வேண்டுமென்றே இருபுறமும் பார்த்தாள்,

நான்தான்....கூப்ட்ட...

ஹும்ம் சொல்லுங்கண்ணா.....

சட்டென கண் இருண்டது...வயிற்றுக்குள் ஏதோவொன்று சுருங்கியது போல் இருந்தது.. செய்து வைத்த பிரிப்பரேசன் அனைத்தும் மறந்துவிட்டது. சட்டெனே சுதாரித்து...

அ...அ..அண்ணானெல்லாம் கூப்புடாத.....காயத்ரி நான் உன்னை 3 மாசமா ஃபாலோ பண்றான் நானும் உங்க ஊருதான் என்னை தெரியுதா... நான் உன்னை விரும்பறேன்...

மேற்சொன்ன வார்த்தைகளை அவசரமாக பேசி உளறிக்கொட்டி நோட்டிற்குள் இருந்த டைரி மில்க்கை குடுக்கலாம்னு வெளிய எடுத்தேன்...

இவை அனைத்தையும் புன்னகைத்தவாறே கேட்டுக்கொண்டிருந்தவள்...நோட்டிற்குள் கை சென்றதும் லவ் லெட்டர் என நினைத்து விட்டாள் போலும். “ஐயையோ...” எனக்கூறி விட்டு சட்டெனே கிளாஸ்சிற்குள்  ஓடிவிட்டாள்.

நான் பிரமித்து நின்று கொண்டிருந்தேன் சில நிமிடம்.

எனது அமெச்சூர்தனமான முதல் ப்ரோபோசல் சக்ஸசா இல்லையா... என தெரியாமல் குழப்பமாக முடிந்தது.ஆனா எப்பிடியோ சொல்லிட்டேன்.

ஹும்ம்.... நல்லாதா இருக்கு எனக்கூறிவிட்டு ஆனால் ஒரு சின்ன திருத்தம் என்று கூறியவாறே என் பழைய டைரியை மூடினாள் என் மனைவி.

என்ன..?


நீங்க முத முதல்ல என்னை பாத்தப்ப நான் போட்டுட்டு இருந்தது கருப்பு கலர் ஷால் இல்ல பிரவுன் கலர் ஷால்.